Thursday, 6 August 2026

நிகழ்வும் நினைப்பும்: சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கேமிராக்கள்...

 

இப்போது சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் பள்ளி முதலில் உயர் நிலைப்பள்ளியாக இருந்தது.இந்தப் பள்ளியில்தான் நானும் எனது உடன் பிறந்தவர்கள் வா.ஜெயராஜ்,வா.தமிழ்ச்செல்வன், வா.சாரதா,வா.சிவக்குமார் என அனைவரும் படித்தோம் .நாங்கள் படித்த பள்ளியில் எங்கள் தந்தை .வாலகுரு ஆசிரியர் & எங்கள் தாயார் சு.முத்துக்கிருஷ்ணம்மாள் தலைமை ஆசிரியர் அவர்களின் நினைவாக ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தோம்.அதன் முதல் நிகழ்வாக இந்த வருடம் ஜூன் 23-ம் தேதி பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசினை நானும், +2-வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசினை எனது தங்கை வா.சாராதா விஜய பார்த்திபன்(-தலைமை ஆசிரியர் பி.சுப்புலாபுரம்) ஆகியோரும் வழங்கினோம். அன்றைய விழாவிற்குப் போனபோது,சாப்டூர் தலைமை ஆசிரியர் திரு சுந்தரராஜ் அவர்கள், பள்ளியில் ஆறு கேமிரா போடவேண்டும், அப்படிப் போட்டால் பள்ளி நிர்வாகத்திற்கு மிக வசதியாக இருக்கும்.பழைய மாணவர்களோடு இணைந்து அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும் என்று கேட்டார்.சரி என்று நாங்கள் சொல்லி வந்தோம்.



படத்தில் தலைமை ஆசிரியர் திரு பாபு பிரேம்குமார் அவர்கள், சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்.

அதற்கான ஒரு மதிப்பீட்டுத்தொகை பட்டியலை(Quotation) தயார் செய்து கொண்டிருக்கும்போதே சாப்டூர் தலைமை ஆசிரியர் திரு சுந்தரராஜ் அவர்கள் மாற்றலில் சென்று விட்டார்.உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் அவர்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் எனச்சொல்லி இருந்தார். புதிய தலைமை ஆசிரியராக  திரு பாபு பிரேம்குமார் அவர்கள் பொறுப்பேற்றார். அவரிடம்  கேட்டபோது, ‘ஆமாம் சார், கேமிராக்கள் மாட்டவேண்டும் என்று சொல்லி,முயற்சிகளும் எடுத்தார். 6 கேமிராவிற்கான மதிப்பீட்டுப் பட்டியலை ஒரு நிறுவனத்தினர் கொடுத்தனர்.அதற்கான தொகை ரூ 53000 என்று இருந்தது.பின்பு இன்னும் 4 கேமிராவும் ஒரு மானிட்டரும் போடுவது என்றும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்து தெரிவித்தனர்.தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து, அவர்களும் ஒரு தொகை தருவது என்று முடிவு செய்தனர்.

எனது பங்காக ரூ 5000, எனது தங்கை பங்காக ரூ 5000 கொடுத்தோம். மற்றும் சில பழைய மாணவர்களிடம் கேட்போம் என்று சொல்லிக் கேட்டவுடன் , உடனே அனுப்பி வைத்த பெரிய உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

பணம் அளித்தவர்கள் விவரம்:

திரு .G.V. மணிமாறன் அவர்கள், ரூ 10000 -சாப்டூரில் 11-ம் வகுப்பு வரை படித்தவர்.கனரா வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். கனரா வங்கியின் தொழிற்சங்கத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளராக இருந்தவர். தொழிற்சங்கத்தின் சார்பாக கனரா வங்கியின்  இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். இப்போது சென்னையில் இருக்கிறார்.

திரு கனகராஜ் மாசாணம் அவர்கள் ரூ 10000 - சாப்டூரில் 10-ம் வகுப்பு வரை படித்தவர்.1991-எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்று முதல் மாணவராக வந்தவர். பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி,இப்போது சென்னையில் பணியாற்றுபவர்.

திரு அழகர்சாமி நரசிம்மன் அவர்கள் ரூ 10000 - சாப்டூரில் எஸ்.எஸ்.எல்.சி. 1973-ஆம் ஆண்டு முடித்தவர். இந்திய நேவியில் பணியாற்றிவர். பின்பு  அறிவியல் அதிகாரியாக( Scientific Officer(E)) அணுசக்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. இப்போது பெங்களூரில் இருக்கிறார்.

திரு ஜோ.மதிவாணன் அவர்கள் ரூ 5000 - எனது மூத்த அண்ணன் ஜெயராஜ் உடன் படித்தவர். 1974 எஸ்.எஸ்.எல்.சி-யில் முதல் மதிப்பெண் பெற்றவர். பொறியியல் பட்டம் முடித்து மும்பை பின்பு குவைத் எனப் பெரும் பதவிகளில் பணியாற்றியவர்.இப்போது மும்பையில் இருக்கிறார்.

திரு எஸ்.பி.இராமநாதன் அவர்கள் ரூ 5000 -என்னோடு படித்த நண்பர். ஆவின் நிறுவனத்தில் பொதுமேலாளராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இப்போது விருதுநகரில் இருக்கிறார்.

திரு .கா.குருசாமி ,பழையூர் அவர்கள் ரூ 5000 -என்னோடு படித்த நண்பர். எல்..சி. நிறுவனத்தில் மேலாளராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பழையூரிலிருந்து வந்து என்னோடு 10ம் வகுப்புவரை படித்தவர். இப்போது மதுரை திருமங்கலத்தில் இருக்கிறார்.

திருமதி வா.சாரதா விஜயபார்த்திபன் அவர்கள் ரூ 5000- எனது தங்கை. இப்போது சுப்புலாபுரம் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

திரு சுரேஷ் மகாலிங்கம் அவர்கள் ரூ 5000 - சென்னையில் ஆப்டிகல் கடை வைத்திருக்கிறார். எனது நண்பர்.இவரது சித்தப்பா திரு டாக்டர் கு.சுந்தரேசன் அவர்கள் தமிழ்நாடு அறிந்த வாலிபால் விளையாட்டு வீர்ராக இருந்தவர்.சென்னையில் மிகப்புகழ் வாய்ந்த மருத்துவர்.

 நான்                              ரூ 5000

 

                       மொத்த நன்கொடை ரூ 60000

மொத்த நன்கொடை ரூ 60000 (அறுபது ஆயிரம்)த்தையும்) வசூல் செய்து  பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தோம்.

சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 கேமிரா மற்றும் மானிட்டர்  நிறுவும் வேலை நடந்து முடிந்திருக்கிறது. ஒரு 12 பேரிடம் கேட்டேன். 8 பேர் அனுப்பி வைத்தார்கள். அனுப்பி வைத்தவர்களுக்கும் அடுத்த முறை அரசுப் பள்ளிக்கு உதவக் காத்திருக்கும் உள்ளங்களுக்கும் நன்றி.

எனது ஆசிரியர்கள் திரு டாக்டர் இரா.கனகசபாபதி(முன்னால் முதல்வர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி) அவர்களும், திரு வீ.வீரி(செட்டி) (முன்னால் தலைமை ஆசிரியர்) அவர்களும் என் நினைவுகளில் வந்தார்கள். கல்விக்காக அரும்பணி செய்த அவர்களின் மாணவனாய், கல்விக்காக செய்த ஒரு சிறிய முயற்சி அவ்வளவு மன நிறைவைத் தருகிறது.

எனது முதல்வர் திரு கனகசபாபதி அவர்கள்  நல்ல செயல்களுக்குப் பணம் கொடுக்க நிறையப் பேர் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணம் ,அவர்கள் கொடுக்கும் செயலுக்குத்தான் பயன்படப்போகிறது என்று உறுதியானால் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பார். திரு வீரி(செட்டி) சார் அவர்கள், முதன் முதலில் நான் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடை என்று கேட்கும்போது தயக்கமாகத்தான் இருந்தது ஆனால் நமக்காக கேட்கவில்லை, படிக்கும் குழந்தைகளுக்காக கேட்கிறோம் என்று கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கேட்டபோது மனதார உதவி புரிந்தார்கள் என்று சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன். எனது புத்தகமானகனவு போலத்தான் நடந்தது.’ என்னும் புத்தகத்திலும் பதிந்திருக்கிறேன்.

சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் மிகப்பெரும் நம்பிக்கையைத் தருகிறார்கள்.பழைய மாணவ மாணவிகள் ரூ 60000 கொடுத்தோம் என்றால் ,தலைமை ஆசிரியர் அவர்களும் மற்ற ஆசிரியர்,ஆசிரியைகளும் இணைந்து ரூ 40000 கொடுத்திருக்கிறார்கள்.

நேற்று 5.8.2026 புதன்கிழமை,காலையில்  சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த காமிரா வசதியினை ,பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து வைத்தோம். 10 கேமிராக்கள், மானிட்டர் என்று அருமையாக அமைந்திருக்கிறது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.கூ.சிவக்குமார் அவர்களும்,எனது மகன் சொ.நே.அன்புமணி  மற்றும் பள்ளியின் நல விரும்பிகளும் உடன் இருந்தனர். ஆசிரியர்,ஆசிரியைகள் மத்தியில் சிறிது நேரம் பேசினேன். பழைய மாணவ மாணவிகள் உதவத் தயாராக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன். இந்தக் காமிராக்கள நிறுவிய திரு.சிரஞ்சீவி அவர்கள் மிக நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள்.  

கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும். கல்வியைப் பெற்று பலன் பெற்றவர்கள், மற்றவர்கள் கல்வியைப் பெறத் துணை புரிவோம்.

 

No comments:

Post a Comment