Wednesday, 18 November 2026

புகைப்படம் சார்ந்தது அல்ல…

 

இவரை எனக்குத் தெரியும்

அவரை எனக்குத் தெரியும்

என அடுக்குகிறார்கள்

சில நண்பர்கள்…

 

பட்டிமன்ற நடுவர்

ஒருவரோடு இணைந்து நான்

நிற்கின்றேன்…பாருங்கள் எனத்

திரும்பத் திரும்பச் சொல்லி

புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறார்

உறவினர் ஒருவர்..

 

அதற்கு என்ன இப்போது ?

எனக் கோபப்படத் தோன்றுகிறது

எனினும் சிரித்துக்கொண்டே

கடக்கப் பழகியிருக்கிறேன்…

 

பார்ப்பதும் எவரோடும் பேசுவதும்

எளிதாகி விட்ட காலமிது..

ஆனால்

இவரும் அவரும்

இவர்கள் எதற்கு

வருகிறார்கள் …ஏன்

வருகிறார்கள் என்பதை

மிகத் தெளிவாய்ப்

புரிந்து வைத்திருக்கிறார்கள்…

 

மனதின் தூரத்தில்

வைத்திருப்பவர்களைத் தூரத்திலும்

அருகில் வைத்திருப்பவர்களை

அருகிலும்தான் வைத்திருக்கிறார்கள்..

மனதிற்குள் வைத்திருக்கும்

தூரத்தை அறியாமல்

இவரை நான் அறிவேன்

அவரை நான் அறிவேன்

எனப் புகைப்படங்களின் வழி

நெருக்கத்தை நிரூபிக்க

முயற்சிக்கிறார்கள் சிலர்..

 

நெருக்கம் என்பது

மனம் சார்ந்தது…

நேர்மை சார்ந்தது…

கோப்பெருஞ்சோழன்

பிசிராந்தையார் போல

அகம் சார்ந்தது…

புகைப்படம் சார்ந்தது அல்ல…

என இவர்கள் அறிவது எப்போது?

                                 வா.நேரு, 19.11.2026

No comments:

Post a Comment