Showing posts with label வா.நேருவின் சிறுகதைகள். Show all posts
Showing posts with label வா.நேருவின் சிறுகதைகள். Show all posts

Saturday, 8 October 2022

சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை....வா.நேரு

                                        சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை

                                          (வா.நேரு)


திருவனந்தபுரம் வியப்பை ஊட்டும் ஊராக இருந்தது. மேடும் பள்ளமுமாய் இருக்கும் சாலைகள்,எவ்வளவு மழை பெய்தாலும் சாலையில் தேங்கி நிற்காமல் கண நேரத்தில் ஓடி விடும் மழை நீர்.தமிழில் நாம் பேசினாலும் அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு ,கடைகளில் பொருட்களை எடுத்துக்கொடுக்கும் நேர்த்தி என குமணனுக்கு வியப்பாகவே இருந்தது. இன்றோடு திருவனந்தபுரத்திற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் குமணன் பயிற்சி எடுக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் பயிற்சி நிலையம் இருந்தது.குமணனோடு அவனது ஊரைச்சார்ந்த மூன்று அதிகாரிகளும் அந்தப் பயிற்சி நிலையத்திற்கு வந்திருந்தனர்.


பயிற்சி நிலையத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த நால்வரும், காலையில் பயிற்சி,இரவில் மறு நாள் பயிற்சிக்கான சில வேலைகள் என்று தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது.அன்று சனிக்கிழமை மாலை. மறு நாள் விடுமுறை. இன்னும் ஒரு சில நாளில் பயிற்சி முடிவடைய இருந்த நிலையில் இரவு உணவுக்கு முன் அறையில் கூடியிருந்தனர். குமணினின் நண்பன் நடராஜன் மெல்ல ஒரு பையில் இருந்த அந்தப் பாட்டிலை எடுத்து வெளியில் வைத்தான். நாம் இந்த நாளை இனிமையாகக் கொண்டாடப்போகிறோம். இதனைச்சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட்டு , நாலு கண்ணாடிக் குவளைகளில் அந்த மதுவை பாதி,பாதியாய் ஊற்றினான்.

அவன் ஊற்றுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த குமணன் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல நினைத்து எழுந்தான்.

குமணன் கையைப் பிடித்த நடராசன்'உட்காருங்கள்: நண்பரே,இது வெறுமனே ஒரு நட்பின் பரிமாற்றம். கொஞ்சமாகக் கூட குடியுங்கள்.தப்பில்லை.வெளியில் போகவேண்டாம்' என்றான்.

குமணன் ' இல்லை நடராசன்,எனக்கு இது பிடிக்காது,நீங்களும் குடிக்கக் கூடாது என்று விரும்புவன் நான் .இந்தப் பழக்கம் கொடுமையானது " என்ற போது

கடகடவென சிரித்த் நடராசன் ' என்னங்க, சின்னப் பிள்ளைகள் எல்லாம் குடிக்கிறது. நீங்க முக நூலில் எல்லாம் பார்ப்பது இல்லையா ,இவ்வளவு வயதாகிறது,குடிப்பது பிடிக்காது,குடிக்க மாட்டேன்  என்று சொல்கிறீர்கள் " என்றான்.

அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த குரு ,சிறிய புன்னகையோடு ' மாமா,இதுவெல்லாம் ஒரு உணவுப் பழக்கம் மாமா,பழகாத வரைக்கும் ஒரு மாதிரியா இருக்கும்,பழகிவிட்டால் உங்களுக்கே கொஞ்ச நேரம் அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். நாற்பது வயதாகிறது உங்களுக்கு,இந்த ஊரில் ய நமக்குத் தெரிந்தவர்கள்.யாரும் கிடையாது. நம்மைக் கண்காணிப்பவர்கள் யாரும் இல்லை.நாம் தான் இங்கு இராஜா,கொஞ்சமாக கம்பெனி கொடுங்கள் ,வாங்க ' என்றான்.


பேசாமல் இருந்த குமணன் மனதிற்குள் தன்னுடைய இளமைக் கால நண்பன் இராமசாமி நினைவு ஓடியது.


குமணனோடு 1- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் இராமசாமி.எப்போதும் துறு துறுவென இருப்பான். 6-ம் வகுப்பு படிக்கும்போது கபடி விளையாட்டு விளையாட ஆரம்பித்தான்.

அவன் கபடிக் கபடி என்று பாடி வருவதே அழகாக இருக்கும். குமணன் பாடிப்போனால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பாட முடியாது. 'கபடி,கபடி ' எனப் பாடி ஓடு வருவதிலேயே குறியாக இருப்பான். இராமசாமி அப்படி இல்லை. 5பல நிமிடங்கள் நிறுத்தி கபடி,கபடி எனப் பாடிக்கொண்டே இருப்பான். எதிர்தரப்பினர் நிற்கும் மைதானத்திற்குள் நின்று கபடி கபடி எனப்பாடிக்கொண்டே இருப்பான். சுற்றி சுற்றிப் பார்த்து அவன் பாடும் விதமும், ஏறிப் பிடிக்க வருபவர்களை தொட்டு விட்டு அவன் நடுக் கோட்டை வந்து தொடுவதும் மிக வியப்பூட்டவதாக இருக்கும்.

அப்படித்தான் ஒருமுறை குமணன் இராமசாமிக்கு எதிர் தரப்பில் இருந்தான். இராமசாமி பாடி வரும்போது எப்படியும் பிடித்து அமுக்கி விடவேண்டும் என்னும் ஆசை இருந்தது குமணனுக்கு.பககத்த்ல் இருப்பவர்களிடம் சொல்லி இருந்தான் குமணன். கபடி,கபடி எனப் பாடி வந்த இராமசாமியை வளைத்துப் பிடிக்க நெருங்கி வரும்போது, கபடி கபடி எனப் பாடிக்கொண்டே ஒரு காலை தரையில் நன்றாக அழுத்தி வைத்துக்கொண்ட இராமசாமி,இன்னொரு காலால் குமணினின் நெஞ்சுக்கு மேலே கழுத்தை ஒட்டி காலால் எத்தினான். பிடிக்க வந்த குமணனன், கழுதை உதைத்தது போல இராமசாமி உதைத்த உதையால் கீழே விழுந்து விட்டான். கபடி,கபடி எனப் பாடிப்போய் ,கோட்டைத் தொட்ட இராமசாமி,மறுபடியும் குமணன் விழுந்த இடத்திற்கு ஓடி வந்தான். அதற்குள் எழுந்து விட்ட குமணன், பக்கத்தில் வந்த இராமசாமியை அடிக்க கபடி விளையாட்டு கொஞ்சம் களவரமாகி விட்டது.


இப்படித்தான் இராமசாமி அபாரமான விளையாட்டுத் திறமை உள்ளவனாக இருந்தான். கபடி விளையாட்டில் மண்டல அளவில் நடந்த போட்டியில் குமணன் படித்த அரசுப்பள்ளிக்கே முதல் பரிசு கிடைத்தது.அதற்கு முழுமுதற்காரணம் இராமசாமிதான். குமணன் மற்றும் பலர் அந்த அணியில் இருந்தாலும் அனைவரும் இராமசாமியால் தான் போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து குமணன் வெற்றி பெற்றிருந்தான். இராமசாமி குறைவாக  மதிப்பெண் எடுத்திருந்தான். இரண்டு பேரும் பக்கத்து ஊரில் இருக்கும் மேல் நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்ந்தனர். அங்கு சேர்ந்த இராமசாமியை அந்தப் பள்ளி மிக நன்றாகப் பயன்படுத்தியது. மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டிகளில் எல்லாம் அந்தப் பள்ளி வெற்றி பெற்று கோப்பைகளை வாங்கி வந்தது.அதற்கு முக்கியமான காரணமாக இராமசாமி இருந்தான்.குமணன் படித்த பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல அந்த வட்டார அளவில் படித்தவர்கள் அனைவருக்கும் இராமசாமியைத் தெரிந்திருந்தது கபடி விளையாட்டால்.


அன்றைக்கு குமணனும் ,இராமசாமியும் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த மதியச்சாப்பாட்டை சாப்பிட போகும் நேரத்தில்தான் அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் பாரி இராமசாமியை அழைத்தார். குமணனும் உடன் சென்றான். இராமசாமியிடம் ஆசிரியர் பாரி ' இராமசாமி,உன்னை மாதிரி கபடி விளையாடுகிற ஒரு கபடி ஆட்டக்காரனை என்னுடைய 30 வருட ஆசிரியர் அனுபவத்தில் பார்த்ததில்லை.அவ்வளவு அருமையாக விளையாடுகிறாய்.இந்த 12-ஆம் வகுப்பில் மட்டும் தேர்ச்சி ஆகிவிடு. தேர்ச்சி ஆகிவிட்டால்,விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கல்லூரியில் சேர். கல்லூரியில் நீ விளையாடி பல்கலைக்கழக விளையாட்டு வீரராகி விடுவாய். தமிழ் நாடு, அகில இந்திய அளவில் கூட கபடி விளையாட்டில் தேர்வு ஆகுவதற்கான வாய்ப்பு உண்டு " என்று பாரட்டி சில கல்லூரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டார்.


மேல் நிலைப்பள்ளி வந்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது.பாடங்கள் மிகவும் கடினமாக இருந்தன குமணனுக்கே.இராமசாமிக்கு ஆங்கிலப்பாடம்தான் மிகக் கடினமாக இருந்தது. 10-ஆம் வகுப்பில் நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தான். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்னும் கவலை குமணனுக்கு இருந்தது. தான் செல்லும் கல்லூரிக்கே இராமசாமியையும் அழைத்துச்செல்லவேண்டும் என்று குமணன் நினைத்திருந்தான். விளையாட்டுக்கும்,படிப்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் சில கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை எல்லாம் குமணன் சேர்த்து வைத்திருந்தான்.


12-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தபோது, குமணன் வெற்றி பெற்றிருந்தான். ஆனால் அவன் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இராமசாமி ஆங்கிலப்பாடத்தில் 3 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து தோல்வி அடைந்திருந்தான். இராமசாமியின் வீட்டிற்குச்சென்ற குமணன் அவனுக்கு ஆறுதல் கூறினான். 'வெற்றி,தோல்வி எல்லாம் விளையாட்டு வீரனுக்கு மிக இயல்பானதுதானே ' என்றெல்லாம் இராமசாமியிடம் சொல்லிப்பார்த்தான் குமணன். ஆனால் இராமசாமி மிக இறுக்கமாக இருந்தான். தொடர்ந்து பல கல்லூரிகளுக்கு விண்ணப்பம் போட்டிருந்த நிலையில் ஒரு கல்லூரியில்,தூரம் அதிகம் இருந்தாலும் குமணன் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது. குமணன் போய்ச்சேர்ந்து பாடம்,படிப்பு என்று போய் விட்டான்.


முதலாம் ஆண்டு முடித்து,விடுமுறையில் இருந்தபோது, இராமசாமி மீண்டும் 12-ம் வகுப்பு ஆங்கிலப்பாடம் மட்டும் மறுபடியும் எழுதியிருந்தேன். குமணன் ஊரில் இருந்தபொழுதுதான் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. மாலை முரசில் பார்த்தபொழுது இந்தமுறையும் இராமசாமியின் எண்ணைக் காணோம். மறுபடியும் தோல்வி.குமணன் மறுபடியும் இராமசாமியிடம் தேர்வு எழுதச்சொன்னபோது ,பார்ப்போம், நான் விவசாயத்தை முழுமையாகப் பார்க்கப்போகிறேன் என்றான்.


7,8 ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் இராமசாமியைச்சந்தித்தான் குமணன். திருமணத்திற்கு முந்தைய இரவு. நண்பர்களுக்கு விருந்து என்று திருமணம் முடிக்கப்போகும் மணமகன் அழைத்திருந்தான். பள்ளித்தோழன் என்ற முறையில் குமணன் போயிருந்தான். இராமசாமியும் வந்திருந்தான். அன்றுதான் இராமசாமி குடிப்பதைக் குமணன் பார்த்தான்.'என்ன இராமசாமி,இதை எப்பப் பழகின...விளையாட்டு வீரனடா நீ ' என்ற போது 'பழசய,பேசிக்கிட்டிக்கிட்டு இருக்காதே 'என்றான் குமணன்


பல ஆண்டுகள் கழித்து தனது சொந்த ஊருக்குச்சென்ற குமணன், தன்னுடைய செவக்காட்டிற்குப் போவதற்காக அதிகாலையில் கிளம்பினான். காலையில் செவக்காட்டிற்குப் போவது என்பது குமணனுக்கு மிகவும் பிடித்தது.புளிய மரங்கள் அடர்த்தியாக இருக்கும் அந்தச்சாலையில் காலையில் 6 மணி அளவில் சென்றபோது , ஒரு மரத்திற்குக் கீழ் இராமசாமியைப் பார்த்த குமணன் திடிக்கிட்டான். கண்கள் எல்லாம் சிவந்து, கையில் மதுக்குப்பியோடு அதிகாலையில்; பார்த்த குமணன் அரண்டு போனான்.

'என்னடா, இராமசாமி இந்த நேரத்தில் கையில் மதுக்குப்பியோடு ' என்றபோது

அமைதியாக குமணனை உற்றுப்பார்த்த இராமசாமி' குமணனா,நீ எப்படா வந்த...' என்று மெல்லியதாக விசும்பதுபோலக் கேட்டபோது குமணனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

'குமணா,போட்டது சரியா விளையல,கடன் இருக்கு, எனக்கு சாராயம் இல்லாமல் இருக்க முடியலடா, இராத்திரி,பகல் எப்ப என்றாலும் திரும்பத் திரும்ப குடிக்கணும் போல இருக்கு ' என்ற போது,

அவனையும் அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனான் குமணன்.

குமணினிடம் இராமசாமியின் மனைவி ஒரு பாட்டம் பாடி முடித்தாள் ' நல்லாத்தானே இருந்தாரு, எப்ப இந்தச்சாராயத்தைக் குடிச்சு பழகுனாரா,இப்படி ஆயிட்டாரு...' என்று அழுது அழுது தன்னுடைய வேதனைகளை எல்லாம் குமணனிடம் கொட்டித்தீர்த்தாள்.

இராமசாமியின் 5 வயது மகள் குமணனின் பக்கத்தில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் "குடுச்சுப்போட்டு வந்து அம்மாவை அப்பா அடிக்கிறாரு " என்றாள் அந்த சின்னப்பெண் குமணனிடம்...


குடிப்பழக்கத்தை விடுவதற்கு மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று சொல்லி ஒரு மருத்துவமனையில் சேர்த்து விடுவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் தான் வேலை பார்க்கும் ஊருக்குத் திரும்பிவிட்டான் குமணன்.

சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போனபோது இராமசாமியின் வீட்டிற்குப் போனான் குமணன். 'அந்த மருத்துவ மனைக்கு போய் விட்டு வந்து ஒரு மாதம் குடிக்காமல் இருந்ததாகவும், இப்போது மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டார் ' என்றும் சொல்லி 'காலையில் வீட்டை விட்டுப்போனார்,இன்னும் காணவில்லை ' என்று சொன்னபோது நேரத்தைப் பார்த்தான் குமணன். காலை 11 மணி.இதுவரை வீட்டில் சாப்பிடாமல் எங்கு குடித்து விட்டு படுத்துக்கிடக்கிறாரோ என்று சொன்னபோது இராமசாமியைத் தேடிப்போனான் குமணன்.


ஊரின் தெற்குப் புறத்தில் இருந்த அந்தக் கோயிலுக்கருகில் படுத்துக்கிடந்த இராமசாமியைப் பார்த்தபொழுது, நல்ல குடிபோதையில் இருந்தாலும் குமணனைக் கண்டு கொண்டான் இராமசாமி. 'மாப்ள,எல்லாம் முடிஞ்சு போச்சு. சாராயம்தான் இப்போ சாப்பாடு. இன்னும் கொஞ்ச நாளில் நான் செத்துப்போவேன். சொல்லி விடுவாங்க...முடிஞ்சா வந்து விட்டுப் போ ' என்றதும் தூக்கி வாரிப்போட்டது குமணனுக்கு.எப்படி இவனை பழைய நிலைமைக்கு கொண்டுவருவது என்று விழித்தான் குமணன்.


ஆறு மாதத்தில் அதே மாதிரி இராமசாமி செத்துப்போனான் என்று செய்தி வந்த போது ,சொல்லண்ணாத்துயரம் நெஞ்சை அடைத்தது. அவனது இறுதி ஊர்வலத்தில் நடந்தபோது ,அவனது கபடி விளையாட்டும் திறனும் மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து கொண்டே இருந்தது.


சிந்தனையில் இருந்த குமணனை நடராசனின் குரல் கலைத்தது. " நாங்கள் இரண்டு குவளை குடித்து முடித்து விட்டோம்.நீங்களும் வாருங்கள் என்றால் ஏதோ பித்துப்பிடித்தது போல அமர்ந்திருக்கிறீர்களே ' என்று நடராசன் சொன்ன போது மவுனமாக அவர்களைப் பார்த்த குமணன்,

'நீங்கள் கண்ணாடிக் குவளைக்குள் ஊற்றி வைத்திருக்கிற அந்த சிவப்பு நிறத் திரவம், எனது நண்பன் இராமசாமியின் இரத்தமாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் எங்கே இருந்தாலும் என்னால் குடிக்க இயலாது ' என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் குமணன்

Monday, 21 March 2022

500 ரூபாய் நோட்டு ...சிறுகதை ..வா.நேரு

                                                                                                             

அந்தப் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் திறந்து கிடந்தது. உள்ளே ஒரு நாய் சுகமாகப் படுத்துக்கிடந்தது. பணம் எடுக்க வந்த வீரன் அந்த நாயை விரட்டினார். ஆனால் அது எழுந்து போகாமல் முறைத்துப்பார்த்தது. அதனை ஒரு வழியாக விரட்டிவிட்டு பணம் எடுக்க ஏ.டி.எம் மெசினைப் பயன்படுத்தினார்.


பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஏ..டி.எம். மெசினிலிருந்து ரூபாய் நோட்டுகள் மொத்தமாய் கீழே விழுந்தன.எப்போதும் நாம் எடுக்காமல் விட்டுவிட்டால் மறுபடியும் உள்ளே போய்விடுமோ என்று அஞ்சுகின்ற அளவிற்கு அந்தப் பெட்டிக்குள்ளே இருந்து எட்டிப்பார்க்கும் ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக, மொத்தமாய் கீழே விழுந்தவுடன்  வீரன் ஒரு நிமிடம் பதறிப் பொனார்.  கீழே குனிந்து ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்கினார். ஒரு 500 ரூபாய் நோட்டு இரண்டு மூன்றாய் கிழிந்து விழுந்திருந்தது. மீதம் 9 நோட்டுகள் நன்றாக இருந்தன. அந்தக் கிழிந்து விழுந்த நோட்டைக் கையில் எடுத்தார் வீரன். தொட்டவுடன் அப்படியே நோட்டு பொடிப்பொடியாக உதிர்வது போல உதிர்ந்தது. இது என்ன அதிசயமாக இருக்கிறது, ரூபாய் நோட்டு இப்படி உதிர்கிறதே என்று பார்த்த வீரன் என்ன செய்வது என்று முழித்தார்.


வீரன் சென்ற மாதம்தான் தனது 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார். வெளியூரில் இருக்கும் மகனும்,மருமகளும்.மகளும்,மருமகனும் தங்கள் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள். இரண்டு பேருமே சொற்ப வருமானத்துக்காரர்கள். தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.மிக எளிமையாகத் தன் மனைவி மரகதத்தோடும் ,உறவுகளோடும் 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார் வீரன். இந்த ஏ.டி.எம்.இல் பணம் எடுப்பது முதலில் தெரியாமல்தான் இருந்தது.சென்ற ஆண்டு வீட்டிற்கு வந்திருந்த பேரனோடு ஏ.டி.எம். மெசினுக்குப் போய் கற்றுக்கொண்டுவிட்ட வீரன்,நன்றாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஏ.டி.எம். மெசினுக்குச் சென்று தனக்கு வரும் ஓய்வூதியப்பணத்தில் ஆயிரம்,இரண்டாயிரம் என்று எடுத்துக்கொண்டு வந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார்.


காலையில் மரகதம்தான் ஆரம்பித்தாள்.


"என்னங்க இந்த மாசம் டாக்டர் செக் அப்பிற்கு போகணும். தைப்பொங்கல் வருது கொண்டாடனும்.கொஞ்சம் பேங்க்ல போய் பணம் எடுத்துட்டு வாங்களேன்... " 


"பேங்குக்கு எதுக்குப் போகணும். நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே ஏ.டி.எம் மெசின் இருக்குது ,அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர்.


மாதம் மாதம் சுகர்,பிரசர் என்று இருவருக்கும் பக்கத்து தெரு மருத்துவரிடம் பரிசோதனைக்கும்,மாத்திரை வாங்கவும் போகவேண்டியிருந்தது. மருத்துவரிடம் ,அளவாகவே எனக்கு மாத்திரை கொடுங்கள்,என் வருமானத்திற்கு என்னால் அதிகமாக எல்லாம் மாத்திரை வாங்க முடியாது என்று சொல்லியிருந்தார். அந்த மருத்துவரும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்.எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் என்றெல்லாம் நிர்ணயிக்கவில்லை.ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு,அவரின் மருந்துச்சீட்டிலேயே எழுதிவிடுவார்.அதனைப் பார்த்து முன்னால் இருக்கும் ஆட்கள் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று சொல்வார்கள்.


எந்தப் பண்டிகை கொண்டாடவில்லையென்றாலும் தைப்பொங்கலை வீரன் கொண்டாடி விடுவார். அது அவரின் 50 ஆண்டுகாலப் பழக்கம். தைப்பொங்கலுக்கு மட்டும் தனக்கும் தன் மனைவிக்கும் புதுத்துணிகள் எடுப்பார்.அதுவும் குறைந்த விலையில்தான்...


அப்படித்தான் மாத்திரைக்கும்,புதுத்துணிக்கும் என்று பணத்தை எடுத்தார். கொரனாவின் இரண்டாவது அலை என்று தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். போனில் கூப்பிட்டு மகன் "அப்பா,அனாவசியமாக வெளியில் எல்லாம் அலையாதீர்கள்.வயதானவர்களைத்தான் மிக அதிகமாகக் கொரனா தாக்குகிறது.வீட்டிற்குள்ளேயே இருங்கள் " என்று சொல்லியிருந்தான். ஆனால் அத்தியாவசியமான வேலைகளுக்கு வெளியில் வரத்தானே வேண்டியிருக்கிறது என்று வெளியில் வந்திருந்தார் வீரன். 


அந்த நல்ல ஒன்பது 500 ரூபாய் நோட்டுகளைத் தனியாகப் பையில் வைத்தார். கிழிந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டைத் தனியே வைத்தார். போய் வங்கியில் சொன்னால் புது 500 ரூபாய் கொடுத்துவிடுவார்கள்.இப்போது வெயில் கடுமையாக அடிக்கிறது.மணி 10தான் ஆகிறது. கொஞ்சம் நேரம் கழித்துப்போவோம் என்று நினைத்துக்கொண்டு ,ஏ.டி.எம் மிசினை விட்டு வெளியே வந்து குடையை விரித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானார்.


வீட்டிற்கு வந்தவுடன் மனைவியிடம் பணத்தைக் கொடுத்த வீரன்,கிழிந்த ரூபாய் நோட்டையும் மரகதம் கையில் கொடுத்தார். மரகதம் பயந்து போனாள்."ஏங்க ,நமக்கு இருக்கிற பண நெருக்கடியில,இப்படி கிழிஞ்ச 500 ரூபாயோடு வந்து நிக்கிறீங்க.போங்க,போங்க போய் உடனே பேங்க்ல போய்க் கொடுத்து வாங்கிட்டு வாங்க" என்றாள்.


புத்தாண்டில் இரண்டாவது வாரத்திலேயே இப்படியா என்று எண்ணிக்கொண்டே, குடையை விரித்து ,தான் எடுத்த ஏ.டி.எம்.யைத் தாண்டி பேருந்து நிலையத்திற்கு நடக்க ஆரம்பித்தார். ஏ,டி.எம் எப்போதும் போல ,காவலாளி எல்லாம் இல்லாமல் திறந்து கிடந்தது. இப்போது வீரன் பார்க்கும்போதும் அந்த  நாய் மீண்டும் உள்ளே படுத்துக்கிடந்தது. அடுத்து வரும் ஆள், நாயை விரட்டி விட்டுத்தான் பணத்தை எடுக்கவேண்டும். நாய் போக மாட்டேன் என்று அடம்பிடித்தால் வம்புதான் என்று நினைத்தபோது வீரனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் கடந்து, பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.


பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, எதிரில் இருந்த சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தது. வாடை தாங்க முடியவில்லை. புகை எழுந்து அந்தப் பகுதியையே சாம்பல் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தது. சீக்கிரம் பஸ் வந்தால் பரவாயில்லை என்று நினைத்தார். அரசுப்பேருந்து வந்தால் பரவாயில்லை. சிற்றுந்து வந்தால் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கவேண்டுமே என்று நினைத்தார். கொரனா காலத்தில் பேருந்துகள் இப்போதுதான் இயங்க ஆரம்பித்திருந்தன.ஆனால் அரசுப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்த பின்பு சேர் ஆட்டோ, சிற்றுந்துகள்தான். சேர் ஆட்டோவில் ஏறி இறங்குவது கடினமாக இருந்தது. மினி பஸ் வந்தவுடன் ஏறி,தந்தி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.


தந்தி ஆபிஸ் பக்கம் இருந்து தமுக்கம் பக்கம் போகவேண்டும்.இடைவிடாது வண்டிகளும்,ஆட்டோகளும்,பேருந்துகளும் போய்க்கொண்டிருந்தன. சிலரோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தார் வீரன். இளவயது பையன் டக்கென்று ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் போய்விட்டான்.வீரனுக்குத் தயக்கமாக இருந்தது.சில நேரம் காவலர்கள் நின்று நடைபாதையாக வருபவர்களை அந்தப் பக்கம் பயம் இல்லாமல் செல்ல வழி வகுத்தார்கள்.பல நேரம் காவலர்கள் இருப்பதில்லை.வீரனோடு வேலைபார்த்த ஈஸ்வரி இப்படித்தான் ரோட்டைக் கடக்கும்போது விழுந்து,விபத்தில் காயம்பட்டு மூன்று நான்கு மாதம் சிகிச்சை எடுத்தது இந்த நேரத்தில் வீரனுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.


கூட்டம் கொஞ்சம் அதிகமானவுடன், மெல்ல கூட்டமாக ரோட்டைக் கடக்க முற்பட்டார்கள்..வீரனும் அவர்களோடு இணைந்து நடந்து  வந்து சேர்ந்தார்.உசிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பதைப் போலத்தான் ஒவ்வொருவரும் அந்த இடத்தைக் கடந்தார்கள். மெல்ல நடந்து கருப்பசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் அந்த வங்கிக்குள் நுழைந்தார்.


உள்ளே செல்வதற்கே ஒரு கூட்டம் இருந்தது. வங்கியின் முன்னால் இருந்த காவலாளி இருவர் உள்ளே இருந்து வந்தபின்பு ,வெளியிலிருந்து இரண்டு பேரை கைகளில் கைகழுவும் திரவத்தைக் கொடுத்துத் ,தேய்த்துக்கொண்டு உள்ளே போக விட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் நின்ற பிறகு உள்ளே போக முடிந்தது. உள்ளே சென்று ,முன்னால் இருந்தவரிடம் இந்த மாதிரி 500 ரூபாய் நோட்டுக் கிழிந்து விழுந்தது. அதை மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் 'இங்கு மாற்ற மாட்டார்கள் சார். இருந்தாலும் அந்த 3வது கவுண்டரில் போய்க் கேளுங்கள் சார் " என்று மரியாதையாகச்சொன்னார்.


அந்த 3-வது கவுண்டருக்கு முன்னாலும் ஒரு கியூ இருந்தது. பெரும்பாலும் கையில் செக் வைத்துக்கொண்டு பணம் எடுக்க நிற்பவர்கள்.தான் ஒரு விவரம்தானே கேட்கவேண்டும்.முன்னால் போகலாமா என்று நினைத்தார். இவர் முன்னால் நகர்வதைப் பார்த்தவுடன் ஒரு பெண்மணி வந்து " சார் எதுவென்றாலும் வரிசைதான் ,வரிசையில் நின்று போய்க்கேளுங்கள் " என்றார். சரி என்று வரிசையில் நின்றார்.

 

கண்ணாடியால் தடுப்புப் போட்டிருந்தார்கள்.எல்லோரும் முகக் கவசம் போட்டிருந்தார்கள். வீரனும் போட்டிருந்தார். தன் முறை வந்தவுடன் கிழிந்த 500 ரூபாயை அந்தக் கிளார்க்கிடம் காட்டினார். வாங்கிப் பார்த்த அவர் " என்ன சார், இப்படிப் பொடிப்பொடியா உதிருது? ஏ.டி.எம்.ல பணம் போடுவதெல்லாம் தனியார் கம்பெனிகளிடம் கொடுத்து விட்டார்கள் சார். அவங்க என்ன நோட்டு வைக்கிறாங்கன்னு தெரியலைங்க சார். இந்த வாரத்திலேயே உங்களை மாதிரி நாலஞ்சு பேர்,இப்படி நோட்டுக் கிழிஞ்சு வருதுன்னு சொல்லிட்டாங்க...நாங்க என்ன பண்றது ? " கிட்டத்தட்ட புலம்பினார்.


" சார் நான் ஒரு தப்பும் பண்ணலையே சார்.எப்போதும் போல ஏ.டி.எம்-ல பணம் எடுக்கப்போனேன். இப்படி 500 ரூபாய் கிழிஞ்சு வருது...வர்ற வருமானமே ரொம்ப கொஞ்சம்.இதிலே " என்று வீரன் பேசும்போதே வழிமறித்தார்.


"இப்படிக் கிழிஞ்ச நோட்டை மாத்திறதுக்கு, நீங்க ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைக்குப் போகணும்.போய்ச்சொல்லுங்க சார்,உங்களுக்கு  வேற புது நோட்டு கொடுத்தாலும் கொடுப்பார்கள் " என்றார்.


மதியம் 2 மணியானது. வீரனுக்கு .பசித்தது.,வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு நாளைக்குப் போய் ,ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளையில் போய்ப் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு மறுபடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடந்து வந்தார். மினிபஸ்ஸில் ஏறி தன்னுடைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ,குடையை விரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.


"ஏங்க,மணி 2க்கு மேல  ஆச்சு.சாப்பிடாமா இவ்வளவு நேரமா " என்று சொல்லிக்கொண்டே மரகதம் சாப்பாட்டை வைக்க,முகக் கவசத்தை வெளியில் குப்பைக் கூடையில் கழற்றிப்போட்டு விட்டு ,கைகளை திரவத்தை வைத்துக்கழுவி விட்டு ,உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தார்.


"ஏனுங்க வங்கியில புது நோட்டு கொடுத்துட்டாங்களா " என்ற மரகதத்திடம் "இல்லைப்பா,ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைல போய்க் கேட்கணுமாம் " என்று சொன்ன வீரனிடம் 

"இது என்ன கொடுமையா இருக்கு...இந்த 75 வயசில எங்கெங்க அலையுறது..அவங்க கிழிஞ்ச நோட்டை உள்ளே வச்சுட்டு இப்படி நம்மல அலைய விடுறானுங்களே ' என்ற மரகதத்தை சமாதானப்படுத்தினார் வீரன்.

மறு நாள் காலை ,ரெயிலேவே ஸ்டேசனுக்கு முன்னால் உள்ள வங்கிக் கிளைக்குப் போய்ச்சேர்ந்தார் வீரன்.மேலே முதல் மாடிக்குப் போய்க் கேளுங்கள் என்றார்கள். படிக்கட்டுகளில் மெதுவாக... மெதுவாக ஏறிச்சென்ற வீரன்,அந்த செக்சனைக் கேட்டு உள்ளே போனார்.


அந்தப் பெண்மணி மிகுந்த பரபரப்பாக இருந்தார். ஆனால் உள்ளே போனவுடன் அவருக்கு முன்னால் இருந்த இருக்கையைக் காட்டி,சைகையிலேயே உட்காரச்சொன்னார். "நன்றிங்க அம்மா" என்று சொல்லிக்கொண்டே வீரன் அமர்ந்தார்.செல்பேசியில் அவர் பேசுகிற வழக்கை வைத்து, நெல்லைப் பகுதியைச்சார்ந்தவராக அவர் இருக்கக்கூடும் என்று வீரன் யூகித்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து' என்ன வேணும் உங்களுக்கு ?" என்று அவர் கேட்க ,இவர் கிழிந்த நோட்டைக் காட்டினார். " என்ன இப்படி நோட்டு உதிருது, கவர்மெண்ட் அடிக்கிற நோட்டு இப்படியெல்லாம் உதிராதே இப்ப பொங்கல் சமயம்.நிறைய வேலை இருக்கு. இப்ப  நோட்டை மாத்த முடியாது. ஒரு வெள்ளை பேப்பருல இந்த நோட்டை அப்படியே ஒட்டி,பொங்கல் முடிஞ்ச பிறவு ஒரு வாரம் கழிச்சு வாங்கய்யா" என்றார்.


"இங்க வந்தா உடனே மாத்திக் கொடுத்துருவாங்கன்னு சொன்னாங்களே..."


"இல்லைங்கய்யா, இப்ப  ஒண்ணும் மாத்தித்தர முடியாது" 


"அம்மா உங்கள் தொலைபேசி எண் கொடுக்க முடியுமா? கேட்டுட்டு வர்றனே..." 


'அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுங்கய்யா, ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பேங்குக்கு வருவாங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியுமா? அப்படியெல்லாம் கொடுக்க முடியாது ".  சொன்ன வேகத்தில் அவர் அடுத்த அவரது வேலையைப் பார்க்கத்தொடங்கி விட்டார்.


இனி இங்கிருப்பது ஒன்றுக்கும் ஆகாது என்று நினைத்த வீரன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மரகதம் இப்போதும் ,"விடக்கூடாதுங்க.உங்காமத் திங்காம 500 ரூபாயை எப்படி விடுறது.பொங்கல் முடிஞ்சவுடனே போய்க்கேளுங்க.கேட்டு 500 ரூபாயை வாங்கிகிட்டு வாங்க" என்றாள்.


பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்ததும் ,மீண்டும் பத்திரமாக வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளைக்குச்சென்றார்.அவர் சென்ற முறை பார்த்த அந்தப் பெண் அதிகாரி இல்லை. அவரிடம்தான் மாற்ற முடியும்,அடுத்த வாரம் வாருங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொல்ல வீட்டிற்கு வந்து சேர்ந்தார் வீரன்.


மறுபடியும் அடுத்த வாரம் சென்ற போது அந்தப் பெண் அதிகாரி இருந்தார். 


"ஐயா, உங்களுக்கு உதவணும்தான் நினைக்கேன். ஆனா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. கீழ மேலதிகாரி இருப்பாங்க.. அவர்கிட்ட போய்க் கேட்டுட்டு வாங்க. அவர் சரின்னு சொன்னா மாத்தித்தரேன்." 


மீண்டும் கீழ்த்தளத்திற்கு வந்து அந்த மேலதிகாரி அறைக்குச்சென்றார். விஷயத்தைச் சொல்லி தான் ஏ.டி.எம்.மில் எடுத்ததற்கான ரசீதைக் காண்பித்தார்.இந்தத் தேதியில் ,இந்த ஏ.டி.எம் கிளையில் இவ்வளவு பணம் எடுத்தது என்ற விவரம் எல்லாம் இருந்தது. 


"நீங்க பணம் எடுத்தப்ப யாராவது இருந்தாங்ககளா?" 


"நாய் மட்டும்தான் இருந்தது " என்று சொல்ல வாய் நினைத்தது. அதை அடக்கி  'ஒருத்தரும் இல்லை சார் "  என்றார்.


"எந்த விதமான ஆதாரமும் இல்லாம எப்படி சார் நாங்க பணம் தர்றது? எங்க ஏ.டி.எம்.மில் எடுத்த பணம்தான்ங்கறதுக்கு  என்ன ஆதாரம் இருக்கு? என்னால ஒண்ணும் செய்ய முடியாது.மறுபடியும் அந்த அம்மாகிட்டயே போய்க் கேட்டுப்பாருங்க. அவங்க  கொடுக்கறதை வாங்கிக்கோங்க" என்றார்.

மீண்டும் மேல் தளத்திற்கு வந்து அந்த அம்மாவிடம் வந்தார். அவரின் மேல் அதிகாரி சொன்னதைச்சொன்னார். 'அந்தக் கிழிந்த நோட்டை வாங்கி  "ஒரு பக்கம்தான் நம்பர் இருக்கிறது.மற்ற பகுதியெல்லாம் காணவில்லை." என்று சொல்லிக்கொண்டே ஒரு ஸ்கேலைக் கொண்டு வந்து அளந்து பார்த்தார்.


"ஐயா, உங்க நோட்டுக்கு 100 ரூவாதான் கொடுக்கமுடியும். மற்ற பகுதியெல்லாம் இல்லை. இதுவுமே நான் ரிஸ்க் எடுத்துத்தான் கொடுக்கமுடியும்" நிதானமாக வார்த்தை வார்த்தையாக அழுத்திச் சொன்னார். 


"இல்லைங்கம்மா, எனக்கு 100 ரூபா வேணாம். எனது 500 ரூபாயும் கொடுக்க முடிஞ்சா கொடுங்க.. இல்லைன்னா  எதுவும் வேணாம்" 


மவுனமாக அந்த அம்மா கிழிந்த ரூபாய் நோட்டை வீரனிடம் கொடுத்தார். இவ்வளவு நாள் கசங்கக்கூடாது எனப் பாதுகாத்த அதை அள்ளிப் பைக்குள் திணித்தார். வெயிலோடு அலைச்சலும் மன உளைச்சலும் மனதை வாட்டியது. இதில் மூன்று நான்குமுறை ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் அலைந்ததில் போக்குவரத்துச் செலவே 200 ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது.  வெளியே வந்த வீரனுக்கு அந்தப் பெரிய விளம்பரப்பலகையில் வெயில் பட்டுக் கண் கூசியது. நிமிர்ந்து பார்த்தார்.


"இந்திய வங்கிகள் எல்லாம் நவீன மயமாக்கப்பட்டு விட்டன..வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துப்பழகுங்கள்!" எழுத்துகள் மின்னிக் கொண்டிருந்தன.


                                                                                                                   வா.நேரு, 21.03.2022








Sunday, 20 February 2022

இணைப்பு... சிறுகதை... வா.நேரு

 இணைப்பு...   சிறுகதை... வா.நேரு



அலுவலுகம் 10 மணிக்கு. 9.45 க்கு  தன் சீட்டிற்குப் போன கதிர், தான் உட்காரப்போகும் நாற்காலியையும்,தனக்கு முன்னால் இருந்த மேசையையும்,மேசையின் மேல் இருந்த தொலைபேசியையும் அதற்கு அருகில்  இருந்த கணினினையும் துணியால் துடைத்தான். துடைத்து முடித்து விட்டு அமர்ந்து கணினியை இயக்க மின் சுவிட்களைப் போட்டான். அமர்ந்தவுடன் தன் பையில் இருந்த செல்பேசியையும் எடுத்து தொலைபேசி அருகில் வைத்தான்.

செல்பேசி அடித்தது. எதிர்முனையில் சூரியன் மில்லின் மேலாளர் பேசினார்.

"வணக்கம் சார் " என்றான் கதிர். "வணக்கம் சார் " என்ற மேலாளர் " சார் நாளை காலை 7 மணிக்கு எங்கள் மில்லின் சேர்மன் அவர்களுக்கு ஒரு வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் இருக்கிறது.பல மாநிலங்களிலிருந்து எங்கள் மில்லின் பங்குதாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கியமான கூட்டம் .இணைய வழியாக நடைபெறும் கூட்டம்.இப்போது இண்டர் நெட் இணைப்பு  நன்றாகக் கிடைக்கிறது. நாளை காலையும் இப்படிக் கிடைப்பது மாதிரி செய்துவிடுங்கள் சார். மிக முக்கியமான கூட்டம் என்பதால் முன் கூட்டியே உங்களுக்கு சொல்கிறேன் சார் " என்றார்.

" சரிங்க சார் " என்ற கதிர் அப்போது தனது அலுவலகத்தில் இருக்கும் பழுது பார்க்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் செக்சனின் அதிகாரி,கமாலைக்  கூப்பிட்டுப் பேசினான்

"சார், இந்த மாதிரி சூரியன் மில்லில் அந்தச்சேர்மன் ஒரு முக்கியமான மீட்டிங் வைத்திருக்கிறார். இணையம் கிடைப்பதை சரி பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொன்னவுடன் உற்சாகமாக ,'அந்தப் பக்கம் நம் கேபிள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை சார், நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன் சார் " என்றார் கமால்.. சரி என்று போனை வைத்தான் கதிர்.


இந்த முப்பது ஆண்டுகளில் தான் வேலை பார்க்கும் தொலைதொடர்புத்துறையில் எத்தனை மாற்றங்கள்...இத்தனை மாற்றங்களைக் கண்ட வேறு துறை ஏதும் இருக்கிறதா எனக் கதிருக்குத் தெரியவில்லை.அதுவும் இப்போது புதிதாக வந்திருக்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் மிகப்பெரிய புரட்சியாகத் தெரிந்தது கதிருக்கு,சின்னதாக முடியைப் போன்ற வடிவில் இருக்கும் நீண்ட தூர இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்களை முதன்முதலில்  பார்த்தபொழுது கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது.அறிவியலால் எப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்கின்றன.இப்படிச்சிறிய வடிவத்தில் இருக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வழியாகத்தான் நாம் கணினி வழியாக இணையத்தின் வழியாக அனுப்பும் கோப்புகள்,படங்கள்,சினிமாக்கள் என அத்தனையும் கடத்தப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய முன்னேற்றம். 

பெரிய பெரிய கம்பங்களை ஊண்டி,காப்பர் வயர்களை இழுத்துக் கட்டி அதன் மூலமாக தொலைபேசி இணைப்புகள் கொடுத்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது எல்லாம் தரைக்கு கீழே செல்லும் கேபிள்கள்தான்.அதுவும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வந்தபிறகு தொலைபேசிகள் இல்லாமல் கூட கணினிகளுக்கு கண்ணாடி இழை கேபிள்களின் வழியாக இணைய இணைப்புக் கொடுக்கும் காலம் வந்து விட்டது.அதுவும் இந்த லீசுடு லைன் என்னும் இணைப்பு மூலம் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு,கல்லூரிகளுக்கு அதிவேக இணைய இணைப்புக் கொடுக்க முடிந்தது.அதன் மூலம் கதிர் வேலை பார்க்கும் அரசு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வருமானம் வந்து கொண்டிருந்தது.


மணி 10 அடித்தது. அலுவலகத்திற்குள் கதிரின் மேல் அதிகாரி சண்முகம் உள்ளே நுழைந்தார். கதிர் வணக்கம் வைத்தான்.சண்முகமும் உற்சாகமாக திரும்ப வணக்கம் வைத்தார். சண்முகம் ,கதிர் தனக்கு கீழே உள்ள அதிகாரி என்றாலும்  ஒரு நண்பரிடம் பழகுவதுபோலவே பழகினார்.நடந்து கொண்டார்.கதிர்,சண்முகம்,கதிருக்கு கீழே வேலைபார்க்கும் குமார்,நாதன் என ஒரு அருமையான குழுவாக அவர்களின் அலுவலகம் இருந்தது.

கதிரும் சண்முகமும் பல நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.அந்தக் காலங்களில் தங்கள் இளமைக் காலத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். சிறுவயதில் தான் கடலைக் காட்டில் அலைந்ததைப் பற்றியும் அதன் அனுபங்களைப் பற்றியும் கதிர் பகிர்ந்து கொண்டபோது,சண்முகம் தானும் சிறுவயதில் வயக்காட்டில் கடலை பயிரிட்டு அதனைச்சாகுபடி செய்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டார். " சார் எங்கள் பகுதிகளில் கடலைச்செடிகளைப் பிடிங்கிப்போட்டு,செடிகளில் இருக்கும் கடலையை ஆட்கள் ஆய்ந்து ஆய்ந்து போட்டு மொத்தமாகக் குமிப்பார்கள் " என்றான் கதிர். சண்முகமோ "சார் எங்கள் பக்கம் கடலைச்செடியை மொத்தமாகப் பிடிங்கிப்போட்டு, நெல்லை அடிப்பது போல அடித்துப் பிரிப்போம் " என்றார். "இப்படிப்பட்ட அரசு நிறுவனம் எல்லாம் இல்லை என்றால் நீங்களும் நானும் இப்படி பெரிய அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியுமோ சார் " என்பார் சண்முகம் கதிரிடம். ஆம் உண்மைதான், காட்டில் மேட்டில் வளர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் படிப்பால்,சமூக நீதித் தத்துவத்தால் பெரிய பெரிய அலுவலகத்தில் ,நல்ல பதவிகளில் அமர்ந்திருக்கிறோம் என்னும் உணர்வு கதிருக்கும் சண்முகத்திற்கும் இருந்தது. 

அவர் உட்கார்ந்தவுடன் கதிர் ,சண்முகத்திடம் சூரியன் மில்லில் மேலாளர் போன் பேசியதையும் தான் கமாலிடம் பேசியதையும் கூறினான். "சார் அந்தப் பக்கம் போடப்பட்டுள்ள பைபர் கேபிள் எல்லாம் புதுக்கேபிள்கள் சார். நல்ல ஆழமாகவும் தோண்டி போட்டிருக்கிறோம் .ஒன்றும் பிரச்சனை இல்லை சார்,பார்த்துக்கொள்வோம் " என்றார்.

திடீர் என யோசனை வந்தவராக "சார்,சூரியன் மில் சேர்மன் நமக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர். அவரது கல்லூரிகள்,மில்  என வருடத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நமது நிறுவனத்திற்கு வருமானம் வருகிறது.அவருக்கு கோபம் வருவது மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது.நமது பொது மேலாளரிடம் போய்க் கொஞ்சம் சொல்லி வைத்து விடுவோம் "என்றார்.

கதிரும் சண்முகமும் இருவரும் இணைந்து போய் பொதுமேலாளரிடம் சொல்லி விட்டு வந்தார்கள்.தொடர்ந்து தொலை பேசிகள் வந்து கொண்டிருந்தன.மதிய உணவு இடைவெளியில் அலுவலகத்தின் கீழே சென்றபோது, அலுவலகத்தின் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஊழியர்கள், கடந்த 6 மாதமாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். கதிரும் அந்தக் கூட்டத்தில் ,அவர்களின் போராட்டம் வெற்றி பெற, வாழ்த்திப் பேசினான்.

மீண்டும் மேலே வந்த கதிர், சண்முகத்திடம் " என்ன சார், நாம் ஓர் அரசு நிறுவனம். நமக்கு போன இரண்டு  மாதச்சம்பளம் இன்னும் வரவில்லை. நாமாவது எப்படியோ சமாளிக்கிறோம். பாவம்,கூட்டுகிறவர்கள்,கழிப்பறையை சுத்தம் செய்பவர்கள் என்ன சார் செய்வாங்க ? இப்படி அவங்க வயித்துலே அடிக்கிறாங்களே ? ": என்றான்.

"அரசாங்கம் அதையும் காண்டிராக்ட் விட்டு விட்டார்கள். காண்டார்க்ட்காரர்களுக்கு பணம் டெல்லியில் இருந்து வரவேண்டும்.வரவில்லை...அவர்கள் சம்பளம் கொடுக்கவில்லை " என்றவர் தொடர்ந்தார்..

" நாம் அரசு நிறுவனமாக இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகளெல்லாம் இல்லை. எப்போது பொதுத்துறையை முழுவதும் விற்கவேண்டும் என்று தீர்மானித்தார்களோ அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.முதலில் நாம் நமது மாவட்டத்தில் செலவு செய்தது போக மீதியை சென்னைக்கு அனுப்புவோம்.அவர்கள் அதனை டெல்லிக்கு அனுப்புவார்கள். இப்போது ஒரு ரூபாய் என்றாலும் உடனே டெல்லிக்கு போவது போல கணினியில் செய்து விட்டார்கள்.போன பணம் வரமாட்டிங்குது...நம்ம ஜி.எஸ்.டி., மாதிரி " என்றார்.

தொடர்ந்து வேலை ஓடிக்கொண்டிருந்தது. மாலை 4 மணியைப் போல சூரியன் மில் மேலாளரிடம் இருந்து போன் சண்முகத்திற்கு வந்தது. அவர் பேசி முடித்தவுடன் துள்ளி எழுந்தவர் கதிரிடம் "சார்,சூரியன் மில்லுக்கு இண்டர் நெட் இணைப்புக் கிடைக்கவில்லையாம், கடந்த 10 நிமிசமா " என்றார். "அய்யோ ,என்னவாயிற்று " என்று மற்றொரு அலுவலுகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "ஆமாம் சார், ஆப்டிகல் பைபர் கேபிள் கட் என்பது போல கணினியில் காட்டுகிறது. ஓ.எப்.சி.பிரேக் சார் " என்றார்.

அப்படியே கணினிகளை நிறுத்திய சண்முகமும் கதிரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள். நிறுவனத்தில் கார்கள் அனைத்தும் வெளியில் போயிருந்தன. மழை வேறு லேசாக தூறிக்கொண்டிருந்தது. கதிரை அழைத்த சண்முகம் "சார் நாம் வெயிட் பண்ணினால் நேரம் ஓடி விடும்.வாருங்கள் என் வண்டியில் போவோம் " என்று அவர் மோட்டார் பைக்கை எடுத்தார். தன் மோட்டார் பைக்கில் இருந்த ஹெல்மேட்டை எடுத்து ,சண்முகம் வண்டியில் பின்னால் உட்கார்ந்தான் கதிர்.பேசிக்கொண்டே,வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புக்கு எல்லாம், இரண்டு செல்பேசியிலும் கதிர் பின்னால் இருந்து பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

அந்தச் சூரியன் மில்லிற்கும் ,அவனது அலுவலகத்திற்கும் சுமார் 20 கி.மீ.இருக்கும். போகும் வழியிலேயே ஓஎப்சி அதிகாரி கமாலிடம் பேசினான் கதிர். அவரும் பதறினார். " சார் நானும்,எங்களது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருகிறோம். நீங்கள் முன்னால் போங்கள் சார் " என்றார்.

"சார்,ஏதேனும் புயல் காற்று என்றால் நமது கேபிள்களுக்கு சேதம் வரும். வெறும் தூறல்தான் சார் தூறிக்கொண்டிருக்கிறது" என்று கதிரும் சண்முகமும் பேசிக்கொண்டே சூரிய மில்லுக்கு போய்ச்சேர்ந்தனர்.

அந்த மில்லின் நெடிய கதவுகள் பயமுறுத்தும் மலைப்பாம்பு போலத்தெரிந்தது கதிருக்கு. அந்தப் பிரமாண்டமான  மில்லின் முன்னால் நின்றிருந்த காவலாளியிடம் அடையாள அட்டைகளைக் காண்பித்து, யாரைப் பார்க்கப்போகவேண்டும் என்று சொன்னவுடன் அவர் அந்த மில்லின் மேலாளரிடம் போனில் பேசினார்.

பேசிவிட்டு " நீங்கள் போகலாம் சார்.நேரே போய் வலது பக்கமாக திரும்பி,வண்டியை நிறுத்தி விட்டு மேலாளர் அறைக்குச்செல்லுங்கள் " என்றார்.

"சரி" என்று சொல்லி விட்டு,வண்டியை நிறுத்திவிட்டு ,மேலாளர் அறைக்குச்சென்றனர்.

சண்முகம் மிகவும் கவலைப்பட்ட நிலையில் கதிரிடம் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்.

எப்போதும் புன்னகையோடு வரவேற்கும் சூரியன் மில்லில் மேலாளர் கடுகடுவென இருந்தார். இருவரையும் பார்த்தவுடன் உட்காரக் கூடச்சொல்லவில்லை..."சார், நாளைக் காலையில் இண்டர் நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான்,அத்தனை இணைப்புகளையும் புதிதாக வந்திருக்கும் தனியார் கம்பெனிக்கு மாற்றிவிட முதலாளி சொல்லி விடுவார்.அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது.மொத்தமாக உங்கள் இணைப்புகள் அனைத்தும் வேண்டாம் என்று சொல்லி விடுவோம். ஏன் சார் இப்படி பண்றீங்க..." என்று தொடர்ந்து பேசினார்.

சண்முகம் அழுவது போல ஆகிவிட்டார். " சார்,நமது மில்லுக்காக தனியாக கேபிள் எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கோம் சார்.வரும் வழியில் பார்த்துக்கொண்டு வந்தோம்.எங்கள் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.எங்களது ஆட்களை வரச்சொல்லியிருக்கிறேன்.இரவுக்குள் பார்த்து சரி பண்ணி விடுகின்றோம்.சார்...  " என்று கெஞ்சும் குரலில் சொன்னார்.

"காலையில் கிடைக்கவில்லையெனில் அவ்வளவுதான் " என்று சொல்லிக்கொண்டே மேலாளர் உள்ளே போய்விட்டார்.

கதிரைப் பார்த்த சண்முகம்,"வாருங்கள் நாம் ,எங்கே கேபிள் கட்டாகி இருக்கிறது என்று  தேடுவோம் " என்று சொல்ல,சண்முகமும் கதிரும் அங்கிருந்து வண்டியில் கிளம்பினர்.எந்த இடத்தில் இந்தக் கேபிள் கட்டாயிருக்கிறது என்று கண்டுபிடிக்க கருவி உண்டு. ஆனால் அந்தக் கருவி இப்போது கைவசம் இல்லை. அதற்கென இருப்பவர்களை வரச்சொல்லவேண்டும்." சார்,அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை ,வாருங்கள் நாமே தேடுவோம் " என்ற சண்முகமும் கதிரும்  ரோட்டின் ஓரம் முழுக்க தேடிக்கொண்டே வந்தனர்.

"சார் லைனில் எங்கோ கட் ஆகியிருக்கிறது, எந்த இடம் என்பது தெரியவில்லையே. 50 கி.மீ தூர தொலைதூர இணைப்பு இது. லீசுடு லைன் .வாடிக்கையாளருக்கு என்று தனியாக ஒரு அதிவேக பாதையை அமைத்துக்கொடுக்கும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால் பழுதானால் நம் கண்ணு முழி பிதுங்கி விடுகிறது " என்றார் சண்முகம். "கட் ஆன இடத்தைக் கண்டுபிடித்து ஜாயிண்ட் அடித்தால் இணைப்பு  கிடைக்கும் " என்று சொன்னார் சண்முகம்.சண்முகமும்  கதிரும்  ஒவ்வொரு இடமாக மணல் குவித்திருக்கும் இடம் அல்லது எங்காவது ரோட்டு ஓரத்தில் தோண்டிக்கொண்டிருக்கிறார்களா என்று பார்த்த வண்ணம் போய்க்கொண்டிருந்தார்கள். கண்டு பிடிக்க இயலவில்லை. 

மாலை 7  மணியாகி இருந்தது. தூறல் வேறு அதிகமாக விழ ஆரம்பித்திருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. பை பாஸை தாண்டி ஊருக்குள் நுழையும் இடத்தில் அந்த வண்டி நின்றிருந்தது. அந்த வண்டியின் முன்னாலும் பின்னாலும் தோண்டிப் போடப்பட்ட மணல் கிடந்தது. மோட்டார் சைக்கிளை  நிறுத்தி,கதிரை இறங்கச்சொல்லிவிட்டு, விறுவிறுவென அந்த இடத்திற்கு ஓடினார் சண்முகம். கதிரும் பின்னாலேயே ஓடினான். 'சார், இங்கேதான் கேபிள் கட்டாயிருக்கு , கட்டாயிருக்கு " என்று கத்தினார் சண்முகம். கதிரும் பார்த்தான். கண்ணாடி இழை கேபிள் மேல் பெரிய எந்திரக்கரங்கள் முறுக்கி கிழித்த அடையாளங்கள் தெரிந்தன.அந்த ஜேசிபியின் வண்டிக்காரனைத் தேடி ஓடினார் சண்முகம்.  எக்ஸ்-ஒய் நிறுவனத்திற்கு கண்ணாடி இழை கேபிள் பதிப்பதற்காக தோண்டியவர்கள் சண்முகம் வேலை பார்க்கும்  அரசு நிறுவனத்தின் கண்ணாடி இழைக் கேபிள்களை சின்னாபின்னாப்படுத்திப் போட்டிருந்தார்கள்.


 அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் தோன்றி 2,3 ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. 'கட்டின புருசனுக்கு சோறு போடாமல் , மாற்றானுக்கு  சோறும் கறியும் சமைச்சுப்போடுபவள் 'போன்ற' அரசின் பாகுபாட்டால் விறு விறுவென அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் வளர்ந்துகொண்டிருந்தது. அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்ற இறுமாப்பில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்படுபவர்களாக  அவர்கள் இருந்தார்கள்.எக்ஸ்-ஒய் நிறுவனத்தின் ஜேசிபி வண்டிக்காரன் ஒன்றுமே தப்பே செய்யாதது போலப் பேசினான்.யார் அதிகாரி என்று கேட்டபோது ,எண்ணைக் கொடுக்க மறுத்தான். குழியை நாங்கள் வேறுபக்கமாகத் தோண்டிக்கொண்டிருந்தோம். உங்கள் கேபிள் வந்துவிட்டது என்றான். அவனோடு சண்டை போடும் நிலைமை இப்போது இல்லை. அறுந்து கிடக்கும் கேபிளை இணைத்து ஜாயிண்ட் அடித்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்னும் உந்துதலில் அங்குமிங்குமாக சண்முகம் ஓடினார். அதற்குள் கேபிள் சரி செய்யும் அதிகாரி கமால்   பணியாளர்கள் 3 பேரோடு  ஒரு காரில்  வந்து இறங்கினர்.

இருட்டி விட்டது. கமால் குழுவினர்  வந்த காரின்  முன் பக்க விளக்கு இல்லை.மதுரைக்குள் எப்படி முன் லைட் இல்லாமல் வந்தீர்கள் என்று சண்முகம் வினவ,"ஒரு உத்தேசமாக ஹாரன் அடிச்சுக்கிட்டு கவனமா வந்தேன் சார்.ஹெட்லைட் போயிருச்சு,அதனை மாற்றுவதற்கு பில் போட்டு மாற்றனும்.எங்க பொறுப்பு அதிகாரியும் எவ்வளவு நாளைக்குத்தான் கையில் இருந்த பணத்தைப் போடுவார்.இரண்டு மாதமா அவருக்கும் சம்பளம் வரவில்லை.இருந்தாலும் இது முக்கியமான வேலை என்பதால்,அனுசரிச்சு ஓட்டிட்டு வந்தேன் சார் " என்றார் டிரைவர். "அதெல்லாம் சரி,ஏதாவது விபத்து ஏற்பட்டால் நம்ம பிள்ளை குட்டிக தான பாதிக்கப்படும் "என்றான் கதிர்.

பேட்டரியால் இயங்கும் பெரிய விளக்கை எரிய விட்டு, கமால்  கண்காணித்துக்கொள்ள அவரோடு வந்த மூவரும் அந்தப் பள்ளத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். மூவரும் தற்காலிக ஊழியர்கள்.அவர்களுக்கு கடந்த 6 மாதமாகச் சம்பளம் வரவில்லை. அவர்களுக்கு வரக்கூடிய குறைந்த பட்ச சம்பளமும் அவர்களுக்கு வராமல் இருந்தது. கமால் தனது கைப்பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பளம் போல மாதா,மாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்.. ஜேசிபி வண்டிக்காரன் தோண்டி,கேபிளை அறுத்து அதற்கு மேல் மொத்தமாக மண்ணைக் கொட்டி வைத்திருந்தான். சண்முகம்,கதிர்,கமால் கூட வந்த 3 பேர் என அனைவரும் அந்த மண்ணை அள்ளி ஒரு பக்கமாகப் போட்டனர்.பின்பு குளிக்குள் உட்கார்ந்து கமால் கேபிள் ஜாயிண்டை அடிக்க ஆரம்பித்தார். தமிழில் அதற்கு கண்ணாடி இழைகள் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பிசகினால் உடைந்த கண்ணாடி குத்துவது போலக் குத்திவிடும். அதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதனைச்சரி செய்ய இயலும். கமால் அந்தக் குழிக்குள் உட்கார்ந்து ஜாயிண்ட் அடிக்க ஆரம்பித்திருந்தார்.

நேரம் இரவு 9 மணி ஆகி இருந்தது.வயிறு கப,கப என பசிக்க ஆரம்பித்திருந்தது. வேலை நேரம் என்னவோ மாலை 6 மணி வரைதான். ஆனால் அதிகாரி என்று வந்துவிட்டால்,பொறுப்புகள் தலைக்கு மேலே வந்து குவிந்துகொள்கிறது. சண்முகம் சொன்னதன் அடிப்படையில் இரவு என்று பாராமல் அந்த கேபிள் டீம் வந்திருந்தார்கள்.அவர்களுக்குத் துணையாகப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சண்முகம் கதிரும் நின்று கொண்டு,கேபிள்களை ஜாயிண்ட் அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இரவு பத்து மணிக்கு ஜாயிண்டை அடித்து முடித்திருந்தார் கமால். "சார்,அந்த மில் மேலாளரைக் கூப்பிட்டு ,இணைய இணைப்புக் கிடைக்கிறதா என்று செக் பண்ணச்சொல்லுங்கள்" என்றார் கமால் "இல்லை, நீங்கள் இங்கு இருங்கள்.அந்த மில்லின் மேலாளர் ஏற்கனவே மிகக் கோபமாக இருந்தார்.அவரை டெஸ்ட் பண்ணச்சொல்லி,கிடைக்கவில்லை என்றால் இன்னும் கோபப்படுவார். நானும் கதிரும் நேரே போகிறோம்"  என்று சொல்லி விட்டு மில்லுக்கு வண்டியில் விரைந்தார்கள்.

மேலாளர் முன் அறையில் இருக்க,மில் முதலாளி உள்ளே இருந்தார்.மேலாளிரிடம் சொல்லி,இணையம் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சொன்னபோது,"வாருங்கள் பார்ப்போம்" என்று உள்ளே அழைத்துச்சென்றார். இணைய இணைப்பு கிடைத்தது.உடனே கமாலைக் கூப்பிட்டு "இணைய இணைப்புக் கிடைக்கிறது.குழியை மூடிக்கொண்டிருங்கள். நாங்கள் வந்து விடுகிறோம்" என்று சொன்னபோது ,

"முதலாளி உங்களை அழைக்கிறார் "என்று அந்த மில்லின் மேலாளர் சொல்ல,என்ன சொல்லப்போகிறாரோ,ஒரு 6,7 மணி நேரம் இணைய இணைப்புக் கிடைக்காமல் போய்விட்டதே என்று                      தயங்கியவாறு கதிரும்,சண்முகமும் உள்ளே சென்றனர்.

"உட்காருங்கள் " என்று முதலாளி சொல்ல, "பராவ இல்ல " என்றனர் சண்முகமும் கதிரும். "முதலில் உட்காருங்கள் சார்." என்று முதலாளி மீண்டும் சொல்ல இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். 

"வாங்க சார்.மாலையில் இருந்து நெட் கிடைக்கவில்லை என எங்கள் மேனேஜர் சொன்னார். தனியார் நிறுவனத்திற்கு மாறி விட எங்கள் முதலாளி யோசிப்பார் என்று சொன்னதாகவும் சொன்னார்.கால்கள் கட்டப்பட்ட நீங்கள்,சுதந்திரமாக ஓடுகிற நிறுவனத்தோடு போட்டியிட்டு ஓடுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அரசு நிறுவன அதிகாரிகள் இந்த நேரம்வரை இருந்து பழுது பார்த்து ,இணைப்புக் கொடுப்பது என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு " என்று சொன்னபோது கதிருக்கும் சண்முகத்திற்கும் மாலை முதல் பட்ட துன்பம் எல்லாம் ஓடிப்போனது போல இருந்தது.

Saturday, 5 February 2022

துக்கம்.... ....சிறுகதை....வா.நேரு

 துக்கம்....


....சிறுகதை....வா.நேரு



அலைபேசியில் பேசும்போதே அழுதுகொண்டேதான் சொன்னாள் தங்கம்.  


"மீராவா? நம்ம காந்தி  மகள் மீராவா??" செல்வம் திரும்பத் திரும்ப கேட்டான்.


 "ஆமாங்க..."


அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சியாக இருந்தது செல்வத்திற்கு. 


'சாகும் வயதா மீராவுக்கு? வயது 22,23 க்குள்தான் இருக்கும். அவளது திருமணத்திற்கு இப்போதுதான் போய் வந்தது போல் இருக்கிறது.ஒரு வருடம் இருக்கும். அதற்குள் இறந்து போனாளா?'  அதிர்ச்சியில் உறைந்த செல்வம் எப்படி இறந்தாள் என்று தன் மனைவி தங்கத்திடம் கேட்டான்.


"அந்தப் பிள்ளை மாசமா இருந்துச்சாம், இப்போத்தான் அவங்க வீடு நம்ம பக்கத்துல இல்லையே,இருந்தாலும் அடிக்கடி பார்த்திருக்கலாம்.மாசமா இருந்த பிள்ளைக்கு மஞ்சக்காமாலை உள்ளுக்குள்ளுயே இருந்திருக்கு,கவனிக்கல போல இருக்கு. சோர்வா இருக்கிறது மாசமா இருக்கறதுன்னாலே என்று நினைச்சுட்டு இருந்துருக்காங்க…

பின்னாடி  கண்டுபிடிச்சு மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்தும் காப்பாத்த முடியலையாம்…

இப்போதுதான் நம்ம ஆபிஸ் பிச்சை எனக்கு போன் பண்ணி சொன்னார்"


"சரி…"போனை வைத்தான் செல்வம். சென்னைக்கு வந்திருந்த செல்வத்திற்கு இன்னும் ஒரு மாதம் சென்னையில் வேலையிருந்தது. மதுரைக்குப் போனவுடன் காந்தியின் வீட்டிற்கு போக வேண்டும், மீரா இறந்த துக்கத்தை விசாரிக்க வேண்டும். காந்தியோடு சேர்ந்து தானும் கொஞ்ச நேரமாவது கதறி அழ வேண்டும் என்று செல்வத்திற்கு தோன்றியது.


மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வசித்தபோது அறிமுகமானவர் காந்தி.கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் தெருவில் இருந்த ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகமானவர்.சின்னக்கண்மாய்த் தெருவில் பல வீடுகளை வாடகைக்கு விடும் நோக்கில் கட்டப்பட்ட சில காம்பவுண்டுகள் இருந்தன. பக்கத்திலேயே தபால் அலுவலகம்,தொலைபேசி நிலையம்,மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,இராஜாஜி மருத்துவமனை  எனப் பல துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அந்தத் தெருவில் குடியிருந்தனர்.பக்கத்திலேயே மார்க்கெட்,மருந்துக்கடை,உணவு விடுதி என அந்தத் தெருவில் அருகிலேயே அனைத்தும் கிடைக்கும் தெரு அது.ஆதலால் சின்னச்சின்ன வீடுகளாக இருந்தாலும் பலரும் விரும்பி அந்த வீடுகளில் வாடகைக்கு குடியேறினர்.அப்படி ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகம் ஆனவர் காந்தி.

ஒரே அலுவலத்தில் வேலை,ஒரே காம்பவுண்டில் குடியிருப்பு என்பதால் குடும்பத்தோடு  நெருக்கமானவராக மாறினார் காந்தி. மிக வெளிப்படையான மனிதர். மனதில் எதையும் வைத்துக்கொள்ளத்தெரியாது.எல்லாவற்றையும் பேசிவிடுவார்.பக்கத்து வீடு,ஒரே அலுவலகத்தில் வேலை என்ற  நிலையில்  குடும்ப நண்பராக மாறிப்போனார் காந்தி. 


காந்தியின் மனைவி அரசியும் செல்வத்தின் மனைவி தங்கமும் நெருக்கமானார்கள்.அப்படித்தான் குழந்தைகளும் நெருக்கமானார்கள். செல்வத்தின் மகன் அரசன் தாய்த்தமிழ்ப் பள்ளியில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. படித்தான். அவன் படித்த பள்ளியில் அந்த வகுப்புகளுக்கு மொட்டு,மலர் என்று பெயர் வைத்திருந்தார்கள்.எல்லாவற்றையும் தனித்தமிழில் பேசும் அரசனை,பேச வைத்துக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்த்து.


அதில் மிக முக்கியமானவள் மீரா.செல்வத்தின் மகன் அரசனைவிட 6,7 வயது மூத்தவள்.அரசன் மொட்டு வகுப்பு படிக்கும்போது ,மீரா 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.மதுரையின் வடக்கு பகுதியில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற பள்ளியில் படித்த மீரா ,வீட்டில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் செல்வத்தின் வீட்டில் இருப்பாள்.4 வயதாக இருக்கும் அரசனோடு பேசுவது மீராவுக்கு மிகவும் பிடிக்கும்.


அரசனக்கு ,க,கா,கி,கீ என்னும் உயிர்மெய் எழுத்துகளை வரிசையாகச்சொல்வதற்கு அவன் படித்த தாய்த்தமிழ் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். க என்று ஆரம்பிக்கும் அரசன் வரிசையாக அந்த 216 எழுத்துகளையும் வரிசையாக சொல்லித்தான் முடிப்பான். அரசன் அப்படிக் க,கா,கி,கீ,கு,கூ என்று 216 தமிழ் எழுத்துகளையும் சொல்லி முடிப்பதை கண்களை அகல விரித்து வைத்து  அவ்வளவு ஆர்வமாக மீரா கேட்டுக்கொண்டிருப்பாள். நிறையக் கேள்விகளை மீராவிடம் அரசன் கேட்பான். 


ஒரு நாள் ‘நாம் இருக்கும் தெருவுக்குப் பெயர் சின்னக்கண்மாய் தெரு, அப்படியென்றால் பெரிய கண்மாய்த் தெரு எங்கே இருக்கிறது? ‘ என்று மீராவிடம் கேட்டான்.

அதற்கு  அவள் முழித்த முழி இன்றைக்கும் கூட செல்வத்திற்கு நினைவில் இருக்கிறது. செல்வத்திடம் வந்து ,"மாமா,உங்க மகன் அரசன் ,கேள்வியாக் கேட்கிறான் "என்றாள். செல்வம் சிரித்துக்கொண்டே 'கேள்வி கேட்டால்,பதில் சொல்லு " என்றான்.  


அப்படித்தான் ஒரு நாள் மீராவிடம் சென்ற அரசன், ‘அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும் ‘ என்றான். மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. 


"என்னடா வேண்டும்?" 


 "அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும்" அரசன் மீண்டும் சொன்னான்.


அவள் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

அதைப்பார்த்து விட்டு அரசன் அவளது பள்ளிக்கூடப் பையைக் கேட்டான். 

மீரா கொடுத்தவுடன் அதில் இருந்த பென்சில் பாக்கெட்டில் இருந்து ரப்பரை எடுத்தான்.


"அக்கா,இதுதான் அழிப்பான்,இது தெரியாதா உங்களுக்கு?" 


"டேய் இதுக்கு பேரு ரப்பர்டா" கலகலவென்ற  சிரிப்புடன் சொன்னாள் மீரா.


 "இல்லை,இல்லை இதுக்குப் பெயர் அழிப்பான்"  அரசன்  மீண்டும் மீண்டும் சொல்ல,அன்று முதல் அரசன் அவளுக்கு  அழிப்பானாகிப்  போனான். வீட்டிற்குள் வரும்போது ‘அரசன்  இருக்கிறானா? ‘என்று கேட்க மாட்டாள்.

’அழிப்பான் ‘ இருக்கிறானா என்று கேட்டுவிட்டுத்தான் வருவாள்.

மீராவுக்கு ஒரு தங்கை இருந்தாள்.தம்பி இல்லை.அரசனைத் தன் தம்பியாகவே நினைத்து அவ்வளவு அன்பு அரசன் மேல் செலுத்தினாள் மீரா.பெரும்பாலும் அரசன் வீட்டில் இருக்கும் நேரங்களில் மீராவும் உடன் இருப்பாள். காந்தியின் வீட்டிற்கும் அரசன் சென்று விளையாடி விட்டு வருவான். 


மீரா பின்பு 10வது படிக்கும் போது காந்திக்கு வெளியூருக்கு மாற்றல் வந்தது. மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றலாகி காந்தி போனபோது,தொடர்பு கொஞ்சம் குறைந்தது. 


எப்போதாவது,மதுரைக்கு வரும் காந்தி,வரும்போது போனில் பேசுவார். செல்வம் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு வருவார்.அரசனிடம் பேசுவார். 


‘அப்பா,அழிப்பானை பார்த்து விட்டு வாருங்கள் ‘ என்று மீரா சொல்லி விட்டிருக்கிறாள் என்று அரசனிடம் வம்பு இழுத்துக்கொண்டு இருப்பார் காந்தி.


கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு குறைந்தாலும்,இரண்டு குடும்பத்திற்கும் இடையே இருந்த அன்பு தொடர்ந்து கொண்டு இருந்த்து. தொலைபேசியின் வாயிலாகப் பேசிக் கொள்வது தொடர்ந்தது. 


சில வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார் காந்தி.மதுரையின் வடக்குப் பகுதியில் தபால் தந்தி நகரைத் தாண்டி புது வீடு கட்டினார். வளர்ந்து வரும் பகுதி அது.தனித்தனியாக வீடுகள். அங்கேயே குடி போனார்.காந்தி  செல்வம் எப்போதும் போல சின்னக்கண்மாய் தெருவிலேயே குடியிருந்து கொண்டு இருந்தான்.


பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்த  மீராவுக்கு சென்ற வருடம்தான் திருமணம் நடைபெற்றது. மீரா காதலித்த பையனுக்கே தன் பெண்ணை மணம் முடித்துக்கொடுத்தார் காந்தி. மதுரையில் நடைபெற்ற திருமணத்திற்கு தான்,தன் மனைவி,தன் பிள்ளைகள் என நால்வரும் சென்றிருந்தனர்.


மணமேடையில் அமர்ந்திருந்த மீரா,சிரித்துக்கொண்டே செல்வத்தின் பக்கத்தில் இருந்த அரசனைப் பார்த்து 

"வாடா,அழிப்பான் வாடா" என்றாள். 


தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மணமகனிடமும் அரசனைப் பற்றி ஏதோ கூற.. அவர் சிரிக்க,இப்போது வளர்ந்து 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அரசன் வெட்கப்பட்டுக்கொண்டு ,செல்வத்தின் பின்னால் வந்து ஒட்டி மறைந்து நின்றது எல்லாம் நினைவுக்குள் ஓடியது செல்வத்திற்கு.


மீராவைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்த்து செல்வத்திற்கு. குழந்தையை இழப்பது என்பது எவ்வளவு பெரிய துன்பம்? அய்யோ,இந்தத் துன்பத்தை காந்தியால் எப்படி தாங்க முடியும்?மீராவின் மேல் உயிரையே வைத்திருந்தாரே மனுசன்…எங்கே போனாலும்,சின்னப்பிள்ளையாக இருக்கும்போது மீராவைக் கூப்பிட்டுக்கொண்டே அலைவாரே,அவளின் படிப்பிற்காக தனிப்பயிற்சிக்காக எங்கெல்லாம் மனிதன் அழைத்துச்செல்வார் என்று மீராவைப் பற்றியும் அவரது தந்தை காந்தியைப் பற்றியுமே நினைவு ஓடிக்கொண்டிருந்தது செல்வத்திற்கு.


மதுரைக்குச்  சென்றவுடன்... காந்தி வீட்டிற்குச்செல்ல வேண்டும். இந்த இறப்பைக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான் செல்வம்.அதே போல ஒரு மாதம் கழித்து  ரயிலில் வந்து இறங்கியவுடன்,வீட்டிற்கு வந்தவன் உடனே காந்தியின் வீட்டிற்கு கிளம்பினான்.தங்கத்தையும் அழைத்துக்கொண்டு,மதுரை தபால் தந்தி நகரில் இருக்கும் காந்தியின் வீட்டிற்குச்சென்றவன்,வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்து திகைத்தான்.


காந்தி ஒரு வருடத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றிருந்தார்.அவர் ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாத்த்தில்தான் மீராவுக்கு திருமணம் நடந்த்து. ஒரு மகளின் திருமணத்தையாவது,தன்னுடைய சர்வீஸ் காலத்திலேயே நட்த்தி விட்டோம் என்னும் திருப்தி காந்திக்கு இருந்தது.காந்தியின் பக்கத்து வீட்டில் விசாரித்தபோது,காந்தி தன் மகள் மீரா இறந்த 10 நாளிலேயே வீட்டைப் பூட்டி விட்டுச்சென்று விட்ட்தாகவும்,இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.


'சே,என்ன இப்படி ஆகிவிட்டது,ஒரு இறப்பைக் கூட உடனே வந்து நம்மால் கேட்க முடியவில்லையே' என்று நொந்துபோனான் செல்வம்.


'நீயாவது உடனே போய் கேட்டிருக்கலாம் அல்லவா?' என்று தன் மனைவி தங்கத்திடம் பாய்ந்தான். 


‘ஏங்க ,அந்த  நேரத்தில் எனக்கே மிகுந்த மனவேதனையாகத்தான் இருந்தது.அந்தக் கொடுமையை என்னத்த போய்க் கேட்க ? என்று நான் போகவில்லை’ தங்கத்திடமிருந்து வந்த பதில் இதுவாக இருந்தது.


காந்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை செல்வத்தால். அவரது அலைபேசி தொடர்பில் இல்லை என்று பதில் வந்தது. 


‘வேறு எண் மாற்றி விட்டாரோ,என்னவோ ? ‘என்றாள் தங்கம்.


மீரா இறந்த துக்கத்தைப் போலவே காந்தியைப் பார்க்க முடியாததும் மிகப்பெரிய துயரமாக இருந்தது செல்வத்திற்கு.


போன முறை ,தான் பிறந்த கிராமத்திற்குப் போனபோது,செல்வத்தின் தாய் மாமன்,’டேய் ,அந்த வீட்டு இறப்பைக் கேட்டு விட்டாயா?’ என்றார்.

’இல்லை மாமா, நாளாகிப் போச்சு,இப்போ போய் கேட்டா ஒரு மாதிரி இருக்காதா?’ என்று கேட்டான் இவன்.

’அவர் இறந்தபிறகு இப்போதுதானே ஊருக்கு வர்ற,போய்க் கேட்டு வந்திரு, நல்லதுக்கு வரலைன்னாலும் பரவாயில்லை,கெட்ட்துக்கு வந்திரணும்.வர முடியலைன்னா,வர்ற சமயத்திலே கேட்டுறனும் ‘என்று சொன்னார்.அதனைப் போலவே அந்த இறப்பு வீட்டில் போய் இழவைக் கேட்டு வந்தான் செல்வம்.


எப்போதோ ஒரு புகழ்பெற்ற பேச்சாளர்,தனது ஒரே மகனைப் பறிகொடுத்த அந்தப் பணக்காரரை தான் ஆறுதல்  படுத்திய விசயத்தை செல்வத்திடம் பகிர்ந்து இருந்தார். 


பெரிய பணக்காரர்.வீடு,வாசல்,நில புலன் என்று மிகச்செல்வாக்கு உள்ள மனிதர்.அவரது ஒரே மகன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி ,உயிரிழந்த போது அப்படியே கவலைப் படுக்கையில் படுத்து விட்டார். 

நான் இலக்கிய எடுத்துக்காட்டுகளைச்சொல்லி அவரைத் தேற்றினேன் என்று அந்தப் பேச்சாளர் சொல்லியதெல்லாம்  நினைவுகளில் ஓடியது செல்வத்திற்கு. 


காந்தியைப் பார்த்தவுடன் அவரிடம் என்னவெல்லாம் சொல்லி அவரை எப்படியெல்லாம் தேற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தான் செல்வம்...


ஒருநாள் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் உள்ள வங்கியின் முன்னால் காந்தி நிற்பது  தெரிந்தது செல்வத்திற்கு. 


மதுரை கீழமாசி வீதிக்குப் போகவேண்டும் என்று போய்க்கொண்டிருந்த செல்வம், டக்கென்று மோட்டார் சைக்கிளை ஓர் ஓரமாக நிப்பாட்டி விட்டு ,காந்தி நின்ற இடத்தில் பார்த்தான்.காந்தியைக் காணவில்லை.


'இப்போதுதானே பார்த்தோம்? அதற்குள் காணவில்லையே…'  என்று சுற்றி முற்றி,சுற்றி சுற்றிப் பார்த்தான். பின்பு தான் பார்த்தது வேறு ஆளாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.


அன்றைக்கு திருமங்கலம் டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து,மதுரை தல்லாகுளத்திலிருந்து  திருமங்கலத்திற்கு போய்க்கொண்டிருந்தான்.மதுரை பெரியார் பேருந்து  நிலையத்தில் பேருந்து நின்றது. அடுத்த பிளாட்பார்மில் காந்தி நிற்பது  தெரிந்தது செல்வத்திற்கு. 


திருமங்கலம் போவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு,அரக்க பரக்க இறங்கி,அடுத்த பிளாட்பாரத்திற்கு ஓடினான் செல்வம். கண நேரத்தில் காந்தியைக் காணவில்லை.சுற்றி சுற்றிப் பார்த்தான்.காணோம்.செல்வம் இறங்கிய திருமங்கலம் வண்டி ஏற்கனவே போயிருந்தது.அடுத்த பேருந்தைப் பிடித்து திருமங்கலத்திற்குப் போனான்.


இன்றைக்கு மதுரை காந்தி மியீசியத்திற்குப் போயிருந்தான். அங்கு இருக்கும் நூலகம் செல்வத்திற்கு எப்போதும் பிடிக்கும்.மாதம் ஒரு முறை நூல் அறிமுகம் செய்வார்கள்.காந்தியாரின் நினைவுச்சொல்லும் பெரும் பரப்பிடம் அது. தூரத்தில் காந்தி  நிற்பது போலத் தெரிந்தது செல்வத்திற்கு.


பின்னால் இருந்து பார்த்த செல்வத்திற்கு,அவர் காந்தி மியூசித்தைப் பார்த்தவண்ணம் ,முன்னால் பார்த்தவாறு இருப்பதுபோலத் தெரிந்தது.எதுவும் சொல்லாமல் காந்தியின் அருகில் சென்ற செல்வம் ‘காந்தி ‘ என்று சொல்லி மெல்லக் காந்தியைத் தொட்டான்.


பின்னால் திரும்பிப் பார்த்த காந்தி செல்வத்தைப் பார்த்தவுடன் ஓவென்று அழுதுவிட்டார்.


 "ஏய்யா,என்னை இப்படித் துரத்தித் துரத்திக் கொல்ற,என் மகள் இறந்த துக்கத்திலிருந்து என்னாலே விடுபடவே முடியலை.வேறு வீடு மாறி,2,3 மாதம் வீட்டுக்குள்ளேயே கிடந்தேன்.இப்போத்தான் வெளியில வர்றேன்… உன்னையைப் பாத்தா என் மகள் ஞாபகம்தான் வருது.ஒவ்வொரு இடத்திலயும் உன்னையைப் பார்த்துப் பார்த்து ஒளியறனே,என்னையை விடாம துரத்திரயே இப்படி" அழுதுகொண்டே, நிறுத்தியிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் காந்தி. திகைத்து நின்றான் செல்வம்.

Thursday, 7 May 2020

மிஸ்டர் இரக்கசாமி.......(சிறுகதை)... வா.நேரு

                                                   மிஸ்டர் இரக்கசாமி....(சிறுகதை)... வா.நேரு

” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ,இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகவும் தாராள குணம். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று மனதிற்குள் ஒரு பெரிய வைராக்கியம். ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாகப்பிறந்து ,பெற்றோர்கள் நிறையச்சம்பாரித்து வைத்து அதனை செலவழிக்கும் ஒரு தாராள மனம் படைத்த பிள்ளையாய் மிஸ்டர் இரக்கசாமி இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை….

ஆனால் மிஸ்டர் இரக்கசாமி பிறந்ததிலிருந்தே அட்ட தரித்திரம். கன்னங்கரேர்ன்னு பிறந்திருக்கான்னு உறவுகள் எல்லாம் பிறந்தவுடனேயே பார்த்து முகத்தைச்சுழிக்க, சுத்தியிருந்த உறவுகள் எல்லாம் பழிக்க படாரென்னு மண்ணில் வந்து விழுந்தவுடனேயே வாங்கிக் கட்டிக்கொண்டவர் மிஸ்டர் இரக்கசாமி. சின்ன வயசிலியே அப்பனை முழுங்கிவிட்டான்… அதற்கு இந்த இரக்கசாமியின் முதுகில் இருக்கும் மொக்கப்பய மச்சமே காரணம்ன்னு ஒரு சோம்பேறி சோசியக்காரப் பயல் சொல்லிவைக்க ,அப்பா இல்லாமல் ஆளாகி வருவதற்குள் படாத பாடு பட்டு வளர்ந்து வந்தவர்தான் மிஸ்டர் இரக்கசாமி.

எவராவது பிரச்சனை என்று சொல்லி கடனாக பணம் கேட்டு வந்து விட்டால் அப்படியே உருகிவிடுவார் மிஸ்டர் இரக்கசாமி.சின்ன வயதில் பணத்திற்காக தான் துன்பப்பட்டது,துயரப்பட்டது, அல்லல்பட்டது,அசிங்கப்பட்டது என அத்தனையும் இரக்கசாமியின் மனதிற்குள் ஓடும்.எவராவது தன்னிடம் பணம் கேட்டு வந்து விட்டால் உடனே தன்னை அந்தப் பணம் கேட்டு வந்தவன் இடத்தில் நிறுத்திப்பார்ப்பார். அய்யோ, இவனுக்கு இந்த நேரத்தில் நாம் உதவவில்லையெனில் மனிதனாகத் தான் பிறந்து, வாழ்ந்து,வளர்ந்து என்ன பயன் என்று எண்ணிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்.

சில நேரங்களில் சிலருக்கு பணத்தைக் கொடுப்பதற்கு முன்பே இப்ப கொடுக்கும் பணம் திரும்ப வராது என்று தெரியும் மிஸ்டர் இரக்கசாமிக்கு.எழுத்தாளர் பிரபஞ்சன் தனது ‘நேற்றைய மனிதர்கள் ‘சிறுகதைத்தொகுப்பில் எழுதிய ஒரு சிறுகதையின் கதாபாத்திரம் போல, திரும்ப வராது என்று தெரிந்தே கடன் கொடுப்பார் மிஸ்டர் இரக்கசாமி.

இப்படி பவுன் 1000 ரூபாய் விற்கும் காலத்திலேயே 1000,2000 என்று மிஸ்டர் இரக்கசாமியிடம் கடன் வாங்கியவர்கள் பலவகையில் அறிமுகமானவர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள், உறவுக்காரர்கள் ,இலக்கியவாதிகள் எனப் பெரிய பட்டியலே மிஸ்டர் இரக்கசாமியிடம் உண்டு. பலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியும்.சிலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியாது.ஆனால் கொடுத்த எவரிடமும் அழுத்தி,அழுத்திப் பணத்தைக் கேட்டு திரும்பி வாங்கும் பழக்கம் இரக்கசாமியிடம் இல்லை.கொடுத்தவரிடம் ஒரு முறை இவர் கேட்கும் தோரணையிலேயே கடன் வாங்கிய ஆளுக்குத்தெரிந்துவிடும் இந்த ஆளுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று.


மிஸ்டர் இரக்கசாமி சில நேரங்களில் தனது தாராள குணத்தால் சிக்கலிலும் மாட்டத்தெரிந்தார் என்றாலும் தனது தயாள குணத்தை அவரால் மாற்ற இயலவில்லை.அப்படித்தான் ஒரு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிகழ்ந்தது.

மிகுந்த உயர்பதவிக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனம் அது. மிஸ்டர் இரக்கசாமி பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார்.அரசு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் இரக்கசாமி,பகுதி நேரமாக அந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரம் என்றால் பகுதி நேரம்தான். பத்துபைசா வருமானம் வராத பகுதி நேர வேலை,இருந்தாலும் தான் எப்போதோ படித்ததை,பகிர்ந்து கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி ,மிஸ்டர் இரக்கசாமி அந்த நிறுவனத்தில் போய் பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமி போலவே அந்த நிறுவனத்தில் ‘வரலாறு ‘ பாடம் எடுக்க திரு.காந்தி வந்து கொண்டிருந்தார்.’காந்தி ‘என்று சொன்னால் அவர் காந்திதான் என்று மிஸ்டர் இரக்கசாமிக்குத் தோன்றியது. எப்போதும் மிக எளிமையான உடையில் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.உணவு விடுதியில் வேண்டியதைச்சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, காந்தி மட்டும் 4 இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். மிஸ்டர் இரக்கசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஸ்பெஷல் தோசை,சோளாப்பூரி என்று வித விதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , காந்தி மட்டும் 4 இட்லி போதும் என்று சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் மிஸ்டர் இரக்கசாமி. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தியைப் பற்றிய மதிப்பீட்டில் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் போட்டுக்கொண்டார் மிஸ்டர் இரக்கசாமி.

திரு. காந்திக்கு வயது 50க்கு மேல் இருக்கும் . இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு அருகில் சொந்த ஊர் என்றாலும் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையின் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியர் வேலை.அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் வரும் சம்பளத்தில் எண்பது சதவீதம் ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு விடுவதாக அன்றொரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார்.தன்னைப் போலவே மாணவர்களின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவழித்து மிஸ்டர் காந்தி வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என மிஸ்டர் இரக்கசாமி நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்திவிட்டு வெளியில் வந்த போது , திடீரென மிஸ்டர் இரக்கசாமிக்கு முன்னால் வந்து நின்றார் காந்தி. அவசரமாக ஒரு 20,000 ரூபாய் கடன் வேண்டும் என்றார் மிஸ்டர் இரக்கசாமியிடம் .உடனே இரக்கசாமி ‘ எதற்காக உங்களுக்குப் பணம் கடனாக வேண்டும் ? ‘ என்று கேட்டார்.

‘கிறிஸ்துமஸ் பண்டிகை சீக்கிரம் வரப்போவதையும், தனக்கு குடும்பம் இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எப்போதும் தூத்துக்குடியில் இருக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ்ஸிற்கு போவதாகவும், போகும்போது எப்போதும் தங்கையின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு வாங்கிச்செல்வது வழக்கம் என்றும், இந்த வருடம் பணத்திற்காகப் பள்ளியின் மூலம் ஜி.பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் கொடுத்ததாகவும், அது வர தாமதமாகிறது, ஆனால் கிறிஸ்துமஸ் வரப்போவதால் பணம் தேவைப்படுகிறது என்றும்,ஜி.பி.எப். பணம் வந்தவுடன் ஓரிரு வாரத்தில் கொடுத்துவிடுவதாகவும் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு மிஸ்டர் இரக்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் காந்தி.

மிஸ்டர் இரக்கசாமி உடனே தன்னைக் காந்தியின் இடத்தில் வைத்துப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் மிஸ்டர் இரக்கசாமியிடம் பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்றும், உடனடியாக ரூ 20,000 தருவது தன்னால் இயலாத காரியம் என்பதையும் காந்திக்கு மிஸ்டர் இரக்கசாமி எடுத்துச்சொன்னார்.ரூ 10,000 மாவது தரும்படி காந்தி மறுபடியும் கேட்க, தன்னிடம் ரூ 500 கூட இப்போது இல்லை என்றும் ,ரூ 10,000 என்பது பெரிய தொகை, தன்னால் இயலாது, தன்னை மன்னிக்கும்படியும், உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போன காரணத்தையும் மிஸ்டர் இரக்கசாமி காந்தியிடம் விளக்க முற்பட்டார்.

காந்தி உடனே மிஸ்டர் இரக்கசாமியின் பேச்சினை இடைமறித்தார். யாரிடமாவது வட்டிக்குக்கூட ரூபாய் 10,000 வாங்கித்தரும்படியும் ,ஓரிரு வாரத்தில் வட்டிப்பணத்தைத்தருவதோடு அசலையும் தானே கட்டிவிடுவதாகவும் தனக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டுமென்றும் , சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள தன்னால் கீழே இறங்கிச்சென்று கடன் வாங்க இயலவில்லையென்றும் , தான் கடந்த 20,25 வருடங்களாக தனது தங்கைக்கும் அவளது வீட்டிற்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்குச்செய்யும் உதவியைத் தொடர உதவி செய்யும் படியும் மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் காந்தி. சரி,நான் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார் இரக்கசாமி.

மிஸ்டர் இரக்கசாமி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. காந்திக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அலுவலகத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. சரி, வட்டிக்கு கொடுப்பவரிடம் கேட்டுப்பார்த்தாவது காந்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கசாமிக்கு தோன்றியது.

மிஸ்டர் இரக்கசாமி வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் சந்திரனிடம் சென்று, இப்படித்தனக்கு தெரிந்தவர் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் ,ஜி.பி.எப். பணம் வரவேண்டியது பாதித் தூரத்தில் நிற்பதாகவும்,வந்த உடன் அவர் கொடுத்து விடுவார் என்றும் அவருக்கு ரூபாய் 10,000 கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். சந்திரன் மிகத்தெளிவாக, காந்தியைத் தனக்குத் தெரியாது என்றும், உங்களை நம்பி வேண்டுமென்றால் நான் தருகின்றேன், நீங்கள்தான் எனக்கு வட்டி கட்டவேண்டும், அசல் கட்டவேண்டும், நோட்டும் நீங்கள்தான் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் சொன்னபோது, மிஸ்டர் இரக்கசாமி மற்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு, நோட்டு மட்டும் காந்தியையே எழுதித்தரச்சொல்கிறேன் என்றார்.சந்திரன் மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் காந்தியிடம் உங்கள் பெயருக்கு ஒரு நோட் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணம் கொடுப்பது உங்களிடம்தான். எனக்கு நீங்கள்தான் நோட்டு எழுதிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

மறு நாளே, அலுவலகத்திற்கு வந்த காந்தியை சந்திரனிடம் மிஸ்டர் இரக்கசாமி அறிமுகப்படுத்தினார். சந்திரன் கண்டுகொள்ளவில்லை.அவருக்கு முன்னாடியே சந்திரனின் மனைவி பெயருக்கு மிஸ்டர் இரக்கசாமி ரூ 10,000 க்கு நோட் எழுதிக்கொடுத்தார். மிஸ்டர் இரக்கசாமி பெயருக்கு,அலுவலக முகவரிக்கு ரூ 10,000 க்கு நோட்டை காந்தி எழுதிக்கொடுத்தார். சந்திரன் ரூ 10,000த்தில் முதல் மாத வட்டி 300 ரூபாயை எடுத்துக்கொண்டு ,மீதம் 9,700 ரூபாயை மிஸ்டர் இரக்கசாமியிடம் கொடுத்தார். இரக்கசாமி அந்தப்பணத்தை அப்படியே காந்தியிடம் கொடுத்தார்.மிக்க நன்றி,மிக்க நன்றி,வாழ்க்கையில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே காந்தி மிஸ்டர் இரக்கசாமியிடம் விடை பெற்றுக்கொண்டார்.மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகப்பெரும் நிறைவு காந்திக்கு உதவி செய்தது குறித்து

இரண்டு மாதம் சரியாக 2-ந்தேதி வட்டிப்பணத்தைக் கொடுத்தார் காந்தி.அப்படியே அந்தப்பணத்தை வாங்கி அலுவலகத்தில் சந்திரனிடம் கொடுத்து வந்தார் மிஸ்டர் இரக்கசாமி. ஜி.பி.எப். பணம் வந்துவிட்டதா என்று ஒரு வார்த்தை மிஸ்டர் இரக்கசாமி கேட்பதற்கு முன்பே ஜி.பி.எப். இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்று காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.. மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி காந்தி வரவில்லை. 10-ந்தேதி வரை அவர் வரவில்லை. சந்திரனுக்கு வட்டிப்பணத்தை மிஸ்டர் இரக்கசாமியே கொடுத்துவிட்டார்.அந்த மாதம் முழுவதும் காந்தியைப் பார்க்கமுடியவில்லை.போட்டித் தேர்வுக்கு பாடம் நடத்தும் நிறுவனத்திற்கே காந்தி வரவில்லை.தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போதே மூன்று மாதங்கள் வட்டிப்பணத்தை சந்திரனுக்கு மிஸ்டர் இரக்கசாமி கட்டியிருந்தார்.

காந்தி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்திற்கு மூன்று மாதங்களாக வரவில்லை என்றதும் ஏதோ தப்பாகப்போவது போல தெரிந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. அங்கிருந்த காந்தி வேலை பார்த்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு காந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு மிஸ்டர் இரக்கசாமி போனார். அங்கிருந்தவர்களிடம் காந்தியைப் பற்றிக் கேட்டவுடனேயே , நீங்கள் ஏதும் கடன் கொடுத்து இருக்கிறீர்களா? எனக்கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனார் மிஸ்டர் இரக்கசாமி. அவர்கள் காந்தியைப் பற்றி சொல்லச்சொல்ல கிறுகிறுப்பு வந்தது போல ஆகிவிட்டது மிஸ்டர் இரக்கசாமிக்கு...

காந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 20-க்கு மேற்பட்டவர்களிடம் இப்படி 10,000ம் 20,0000ம் என்று கடன் வாங்கியிருக்கிறார். ஒருவரிடம் வாங்கியது அடுத்தவருக்குத் தெரியாமலேயே கைமாத்து,அவசரம், மருத்துவம் எனப் பல பொய்களைச்சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். வேறு கெட்ட பழக்கம் இல்லாதவரே என்று ஆசிரியர்கள் தீர விசாரித்தபோது, மதுரையில் பெரிய பணக்காரர்கள் பலர் விளையாடும் சீட்டாட்டக்கிளப்பில் மெம்பராக இருப்பதும்,சீட்டு விளையாட்டில் பயங்கர மோகம் கொண்டு பணம் கட்டி இழப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் மாற்றி மாற்றி கடனைக் கேட்டபோது, ஒன்றுமே சொல்லாமல் பள்ளிக்கும் வராமல் இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கும் வராமல் இருப்பது தெரியவந்தது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வராததை,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தற்காலிக பணி நீப்பில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை மிஸ்டர் இரக்கசாமிக்கு. ரூபாய் 300 மாதாமாதாம் வட்டி கட்டுவதை வீட்டில் மனைவியிடம் சொல்லவில்லை. அவராகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு நாள் பணம் கட்டுவது? சந்திரனுக்கு அசலும் வட்டியும் கட்டினால்தான் புரோ நோட்டைத் தருவார் …என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார். வட்டிப்பணத்தை மட்டும் சந்திரனுக்கு கட்டி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது மிஸ்டர் இரக்கசாமிக்கு தூத்துக்குடியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘மிஸ்டர் இரக்கசாமியா?’ என்று வினவியவரிடம் ‘ஆமாம் ‘என்றார். தான் காந்தியின் வக்கில் என்றும் அவர் நிறையக் கடன் பட்டு வாழ்க்கையில் நொந்து விட்டார் என்றும்,விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சொத்துக்கள் ஏதும் இல்லாததால் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டார் என்றும் ,உங்கள் வீட்டு முகவரி வேண்டும் சில தகவல்கள் அனுப்ப என்றும் கேட்டபோது வீட்டு முகவரியை மிஸ்டர் இரக்கசாமி தொலைபேசியிலேயே கொடுத்தார்.

மறு நாள் வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கலா அந்தக்கடிதத்தைக் கொடுத்தவுடன் படித்துப்பார்த்து அரண்டு விட்டார் மிஸ்டர் இரக்கசாமி. “மிஸ்டர் இரக்கசாமி, நீங்கள் அரசு வேலை பார்க்கிறீர்கள் ? எப்படி வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள்?” என்று விளக்கம் கேட்டு காந்தியின் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். மனைவி கலாவிடமும்,மகன் கென்னடியிடமும் முழுக் கதையையும் சொன்னார் மிஸ்டர் இரக்கசாமி. முதலில் கோபப்பட்ட கலா பின்பு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

” இளிச்சவாயென்னு ” …” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

நன்றி : எனது சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம்(sirukathaigal.com) இணையதளத்திற்கு



Saturday, 14 January 2017

அழுவதா....சிரிப்பதா.........

               அழுவதா....சிரிப்பதா......... 
                                       (சிறுகதை) ...... வா.நேரு


கலைக்கல்லூரியில் 'இடம்' வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை . 'கல்வி' ஒன்றுதான் தன் பிள்ளைகளை வாழ்க்கையில் கரை சேர்க்கும் என ஒவ்வொரு ஆத்தா, அப்பன் மனதிலும்  ஆழமாகப் பதிந்த பிறகு, எப்படியாவது-காட்டை,வீட்டை விற்றாவது பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்ட பிறகு கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் இடம் வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை .பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பம உண்மையிலேயே நல்ல செய்திதான் நாட்டிற்கு.                                                                                                                                   

ஊரிலிருந்து தொலைபேசியில் அவனது அண்ணன் சொல்லும்போதே குணசேகரனுக்கு ஜோயலின் அப்பா-சுப்பையாவின்  நினைவு மனதிற்குள் ஓடியது.குணசேகரன் பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் சுப்பையா அந்தத் தெரிவிலிருக்கும் மாடுகள் அனைத்தையும் ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு விடுவதற்காக போய்க்கொண்டிருப்பான். இருவருக்கும் ஒரே வயதுதான் என்றாலும் சுப்பையா பள்ளிக்கூடத்திற்கு வந்ததாக நினைவு இல்லை குணசேகரனுக்கு. குணசேகரன் அண்ணன் ஜோயலின் குடும்பத்தைப் பற்றியும் அந்த வீட்டின் வறுமையைப் பற்றியும் விவரித்தபோது இவனுக்கும் அந்த வீட்டின் நினைவுகள் மனதிற்குள் ஓடியது.  குணசேகரனுக்கும் தெரிந்த குடும்பம்தான் என்றாலும் ஊரிலிருந்து  வெளியேறி சில ஆண்டுகள் ஆகியிருந்ததால் சட்டென்று அண்ணன் சொன்னவுடன் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் விவரித்து சொல்லச்சொல்ல , ஜோயல் குடும்பத்தின் வறுமையை, வசதியின்மையை எல்லாம் எடுத்துக்கூறியபோது . குணசேகரனுக்கும் டக்கென்று நினைவில் வந்தது. டேய், ஜோயல்  +2 பாஸ் பண்ணியிருக்கிறான். மிகக் குறைந்த மார்க்குதான். அவனுக்கு மேல்படிப்புக்கு மதுரையில ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் வாங்கணும். அப்ளிகேசன் வாங்குவதிலிருந்து எல்லாம் நீ செய்யணும். அந்தப் பையனும் அவனது அம்மாவும் கையெழுத்து மட்டும் போடுவாங்க.அவனுக்கு ஒரு சீட் வாங்கிக்கொடு ' என்றார். 'என்னை வந்து பார்க்கச்சொல், நான் அவனுக்கு கல்லூரியில் இடம் வாங்கித்தந்து விடுகின்றேன்' என மந்திரி பதவியில் இருப்பது போல அவனது அண்ணனிடம் சொல்லிவிட்டான் குணசேகரன்.

காலையில்  ஜோயலும் அவனது அம்மாவும் அலுவலுகத்திற்கே நேரிடையாக வந்துவிட்டார்கள். ஜோயலின் அம்மா அப்படியே செவக்காட்டில் களை எடுத்துவிட்டு நேரிடையாக வந்த தோற்றத்தில் இருந்தார். குணசேகரனைப் பார்த்து 'என்னப்பா, நல்லா இருக்கியா? ஊர்ப்பக்கமே வருவது இல்லையா- உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே ' என்றபோது 'ஆமாம், அம்மா ஊரிலிருந்தால் அடிக்கடி வருவேன். அவர்கள் இப்போது என்னோடயே இருப்பதால் ஊருக்கு ஏதேனும் நல்லது ,கெட்டது என்றால் மட்டும்தான் வருவது ' என்றான். . தன்னையும் தன் மகன் ஜோயலையும் விட்டுவிட்டு ஜோயலின் அப்பா சுப்பையா வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு ஊரை விட்டே போய்விட்டதைச்சொன்னார். உழைத்து உழைத்து காய்ந்துபோன கைகளும், எண்ணெய் காணாத தலையுமாய் ஜோயலின்  அம்மாவின் பரிதாபத் தோற்றத்தைப் பார்த்தவுடனே இந்தப்பையன் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். அம்மாவை ஒட்டி வளர்த்தியாய் நெட்டைப்பனைமரம் போல அந்தப்பையன் ஜோயல் நின்றான்.மிகச்சிறிய வயதில் அவனைப் பார்த்தது. நெடு நெடுவென அவன் நின்றபோது இளம்வயதில் சுப்பையாவைப் பார்த்ததுபோலவே இருந்தது குணசேகரனுக்கு.

       ஜோயலின்  அம்மாவிடம் மதுரையில் உங்கள் மகனுக்கு ஏதேனும் ஒரு கல்லூரியில் படிக்க இடம் வாங்கிகொடுப்பது எனது பொறுப்பு என்று வாக்குறுதி கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மதுரையில் இருந்த பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒருவரோ ,இருவரோ குணசேகரனுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள், அது வசதியாக இருந்தது குணசேகரனுக்கு. ஒவ்வொரு கல்லூரியாக அவனை அழைத்துப்போய் விண்ணப்பத்தை வாங்கி, முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பின்பு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி, அந்த வாரம் முழுவதும் 'கல்லூரி சேர்க்க முயலும் வாரமாக, குணசேகரனுக்கு அமைந்தது. ஆனால் விளக்கெண்ணெய் செலவழிந்ததுதான் மிச்சம், பிள்ளை பிழைக்க வழியில்லை என்பதைப்போல ஒரு கல்லூரியிலிருந்தும் ஜோயலுக்கு அழைப்பு வரவில்லை.

கடைசியாய் நன்றாக அறிமுகமான கல்லூரிப் பேராசிரியரின் வீட்டில்போய் ஒரு பாதி நாள் உட்கார்ந்தான். மிகவும் இரசனையும், நகைச்சுவை உணர்வும் உள்ள பேராசிரியர் அவர். தமிழ்த்துறை தலைவர் என்றாலும் ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடுவார்.  அவரிடம் பழியோ பழி என்று உட்கார்ந்தான் . 'இந்தப் பையனுக்கு எப்படியும் உங்கள் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்கவேண்டும் ' என்றான். 'எப்பொழுதும் இப்படி முரண்டு பிடிக்கமாட்டேயே, ஏன் இப்படி ' என்றார். குணசேகரன், ஜோயலின் குடும்ப நிலைமையை , வறுமை பிடுங்கித்தின்னும் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தன்மையை எடுத்துச்சொன்னான்.  'நீ கவலையை விடு தம்பி, இன்னும் சற்று அதிக நேரம் நான் முதல்வரோடு பேசவேண்டும், பேசி வாங்கிவிடுகின்றேன் ' என்ற பேராசிரியர் அடுத்த வாரம் ஜோயலுக்கு கல்லூரியில் படிக்க இடமும் வாங்கிக்கொடுத்துவிட்டார்.

கல்லூரியில் சேரும் நாளன்று அம்மாவோடும் , ஊரிலிருந்து கொண்டு வந்த தகரப்பெட்டியோடும் வந்த ஜோயலைப் பார்க்க பரிதாபமாக இருந்தது குணசேகரனுக்கு. அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு பி.ஏ.சரித்திரப் பாடம் கிடைத்தது.வெகு நேரம் அவனோடு உட்கார்ந்து கல்லூரி வளாகத்தினுள் பேசிக்கொண்டிருந்தான். படித்ததனால் மட்டுமே தான் உயர்வு பெற்றதையும் இன்னும் ஊர்க்காரர்கள் சிலர் உயர்ந்த நிலை பெற்றதற்கெல்லாம் படிப்பே காரணம் என்பதனையும்  சொன்னான். இன்னும் பல செய்திகளைச்சொல்லி  குணசேகரன் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினான். படிக்கும்போதே போட்டித்தேர்வுகளுக்கும் சேர்த்து கல்லூரியில் படிக்கவேண்டும். ஆத்துத் தண்ணி ,திடீர்ன்னு நம்மளை அடிச்சுக்கிட்டு போகும்போது ,கையில கிடைக்கிற கட்டையைப் பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடிச்சு கரையில ஏறுவதுமாதிரி, படிப்பு ஒண்ணுதான் உன் சூழலிலிருந்து உன்னைக் காப்பாத்தும், கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கும் அம்மாவுக்கு நீ செய்யிற உதவி நல்லா படிச்சு அவங்களுக்கு கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்துறதுதான் என்பது போன்ற பல படிப்பினைகளை அவனுக்குச்சொன்னான் குணசேகரன். மிக ஆர்வமாக கேட்பதுபோல ஜோயல் கேட்டுக்கொண்டிருந்தான்.கல்லூரி விடுதியில் இடம் கிடைப்பது வேறு குதிரைக் கொம்பாக இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே தங்கவைத்துவிட்டு, மீண்டும் தனக்கு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி , விடுதியில் இடமும் வாங்கி கொடுத்தபின்புதான் நிம்மதி கிடைத்தது குணசேகரனுக்கு. படிப்பு உதவித்தொகை வந்த பின்பு விடுதிக்குப் பணம் கட்டினால்போதும் என்ற சலுகையை தெரிந்த பேராசிரியரோடு போய் அந்தக் கல்லூரியின் முதல்வரைப் பார்த்து பேசி வாங்கினான். உண்மையிலேயே மிகவும் துயரப்படும் ஒரு குடும்பத்தைச்சார்ந்த பையனுக்கு கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தது மிகவும் மன நிறைவு அளிப்பதாக இருந்தது குணசேகரனுக்கு.

 கல்லூரியில் சேர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வந்தபின்பு ஜோயலை முழுமையாக மறந்து போனான் குணசேகரன். மிகவும் பின் தங்கிய பகுதியில் இருந்து , மிகக் கடுமையான வறுமைச்சூழலிருந்து வந்திருக்கும் பையன் , தனது ஆற்றல், நேரம் முழுவதையும் படிப்பின்பக்கம் திருப்பி படித்துக்கொண்டிருப்பான் என குணசேகரன் நினைத்துக்கொண்டிருந்தான். குடும்பம், அலுவலகம், இயக்கம், இலக்கியம் எனப் பல வேலைகளை இழுத்து வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த குணசேகரன் சிறிது காலம் ஜோயலை மறந்தே போனான்.

       சில மாதங்கள் கழித்து இயக்கக்கூட்டத்தில் குணசேகரனைப் பார்த்த ஜோயல் படிக்கும் கல்லூரிப்பேராசிரியர்  ' என்ன தம்பி , நம்ம கல்லூரியில் நீ சேர்த்துவிட்ட பையன் நன்றாகப் படிக்கிறானா ? ' என்றார். அந்தப் பேராசிரியர் தமிழ்த்துறை. ஜோயல் படிப்பதோ வரலாற்றுத்துறை. சில வகுப்புகள் பொதுவாக இருக்கலாம். அந்த வகுப்புகளுக்கு இவர் போகின்றாரா அல்லது சீனியர் என்பதால் முதுகலை வகுப்புகளுக்கு மட்டும் போகிறாரா என்பது குணசேகரனுக்குத் தெரியவில்லை. ஜோயல் எப்படி படித்துக்கொண்டிருக்கிறான் என்ற முழு விவரம் குணசேகரனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் பேராசிரியரிடம் சமாளித்தான். ' அய்யா, நன்றாகப் படிக்கிறான் . கிராமப்புறத்திலிருந்து வரும் பசங்களுக்கு எப்போதுமே மனதிற்குள் ஒரு வெறி இருந்துகொண்டேயிருக்கும்.எப்படியாவது முன்னேறனும், வாழ்க்கையில் வெற்றி பெறனும் என்ற நோக்கம் இருக்க்கும் ' என்றான். அவரோ 'அப்படி இருந்தால், மகிழ்ச்சி, மகிழ்ச்சிதான் ' என்றார். அவரிடம் ' அய்யா, வருடம்,வருடம் நான் உங்களிடம் இப்படி கல்லூரியில் இடம் ஒன்றிரண்டு வேண்டும் என்று வருவேன். கிராமப்புறத்திலிருக்கும் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைத்து உழைத்து சாவது தவிர அவர்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை. அவர்களுக்கு பணமோ, பொருளோ நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து, நன்றாக படித்து ஒரு வேலைக்கு போய்விட்டால் அந்தக் குடும்பமே முன்னேறி விடுகிறது. எனக்குத் தெரிந்தவர்களைப் பயன்படுத்தி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ கெஞ்சி இந்த அட்மிசன் போன்ற உதவிகளைச்செய்ய இயலும், அதனைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் ' என்ற போது

        'செய் தம்பி, செய், என்னிடமெல்லாம் கெஞ்சவேண்டாம். நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.வா, வா, வருடந்தோறும் வா.'  அடுத்தவனுக்கு உதவி செய்பவன் தான் பெரியாரிஸ்ட். இல்லறம்,துறவறம் என்பதையெல்லாம் விட  தொண்டறம் முக்கியம் ' எனச் சிரித்த படியே சொல்லிவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து சென்று விட்டார்.முதல் வருடத்தின்  கடைசிக்கட்டத்தில் ஜோயல் படிக்கும் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜோயலை மெனக்கட்டுப்போய் பார்த்தபோது முகம் மலர வரவேற்றான். ஆள் முழுக்க மாறிப்போயிருந்தான். நவ நாகரீக உடையோடு கம்பீரமாக இருந்த ஜோயலைப் பார்க்க பெருமையாக இருந்தது குணசேகரனுக்கு. 'எப்படிப் படிக்கிற தம்பி' என்ற போது மிக வேகமாக ' மிக நன்றாகப் படிக்கிறேன் ' என்றான். அவனின் பக்கத்திலிருந்த அவனது நண்பன் சிரித்துக்கொண்டிருந்தான் நக்கலாக. நன்றாகப் படிக்கிறேன் என்று ஜோயல் சொன்னதைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது குணசேகரனுக்கு.

        இரண்டாம் ஆண்டு படிப்பு முடியப்போகும் நேரத்தில் திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு முன்னால் வந்து நின்றான் ஜோயல்.  என்னவென்று கேட்டபோது ஓவென்று அழுதான். கல்லூரியில் தன்னை கல்லூரியை விட்டு நீக்க முடிவு செய்திருப்பதாகவும் , அதனைத் தடுக்க வேண்டுமென்றால் குடும்பத்தினரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றான். தனது அம்மா படிக்காதவர், அவருக்கு இது எதுவும் தெரியாதென்றும், ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னை விளக்குமாற்றை வைத்து அடித்தே கொண்டு விடுவார்கள் என்றும் என்னை எப்படியாவது கல்லூரிக்கு வந்து காப்பாற்றுங்கள் என்றும் சொன்னபோது 'இரத்தம் சம்பந்தம் உள்ள குடும்பத்தினர் யாரையாவது அழைத்துவரச்சொல்லியிருக்கிறார்கள் என்றால் அப்படி அழைத்துச்செல்வதுதானே சரியாக இருக்கும். அப்படி உனது குடும்பத்தினர் யாரையாவது அழைத்துச்செல்' என்று சொன்ன குணசேகரனிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சி ஜோயல் அழுதபோது 'சரி, போ, நாளை நான் வருகிறேன் 'என்று சொல்லி அனுப்பிவிட்டு மறு நாள் அந்தக் கல்லூரிக்குச்சென்றான் குணசேகரன்.

     இந்த ஒரு வருடத்தில் மிகப்பிரமாண்டமாய் இரண்டு கட்டிடங்கள் கல்லூரியில் புதிதாக முளைத்திருந்தன. எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள். விடுதிகள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் ஒரு சில கலை அறிவியல் கல்லூரிகள் இருந்ததையும் இன்று எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன, எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள். படிப்பினால் எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டே கல்லூரிக்குள் நுழைந்த குணசேகரன் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும் எண்ணிய எண்ணங்கள் இன்றைக்கு காயாய், கனியாய் கல்லூரிகளாய்ப் பூத்துக்குலுங்குகின்றன என நினைத்துக்கொண்டான்.

     ஜோயலோடு கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்தான் குணசேகரன். விசாரணைக்குழு போல முதல்வர் மற்றும் நான்கு பேராசிரியர்கள் என மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். சென்றவுடன் குணசேகரனை முதல்வர் உட்காரச்சொல்ல அமர்ந்தான். 'ஜோயல்' உங்களுக்கு என்ன உறவு என்று முதல்வர் கேட்க, குணசேகரன் பதில் சொல்வதற்குள் ' எங்க  அண்ணன் சார்' என்றான் ஜோயல்.மறுக்க இயலாத நிலையில் ஆமாம் எனத் தலையாட்டினான் குணசேகரன்.

       'சார், உங்களை எதற்காக அழைத்திருக்கிறோம் என்று தெரியுமா உங்களுக்கு ? ' என்றார் ஒரு பேராசிரியர். தெரியாது எனத்தலையாட்டினான் குணசேகரன். 'உங்கள் தம்பி ஜோயலை, விடுதியை விட்டும் , கல்லூரியை விட்டும் நீக்குவது என்று எங்கள் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவெடுத்திருக்கிறது. அதை உங்களுக்குத் தெரிவித்துவிட்டு, டி.சி. வாங்கிக்கொண்டு இவனை அழைத்துக்கொண்டு வீட்டுற்குப் போங்கள் என்று சொல்வதற்குத்தான் உங்களை அழைத்திருக்கிறோம் ' என்றார் இன்னொரு பேராசிரியர்.

' சார், கல்லூரியை விட்டும் , விடுதியை விட்டும் நீக்குமளவிற்கு ஜோயல் என்ன குற்றம் செய்தான் ' என்ற குணசேகரனிடம் 'ஒண்ணா,இரண்டா -எத்தனையைச்சொல்ல, தாங்க முடியலை சார் இவன் தொந்தரவு, 3 செமஸ்டர் தேர்வு இது வரைக்கும் முடிந்சிருக்கு, மொத்தம் 18 பாடம், இவன் 3 பாடம்தான் பாஸ் பண்ணியிருக்கான். ' என்றார் ஒரு பேராசிரியர்.

; படிக்க வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் ஜோயல் இருக்கான் சார். கல்லூரிக்கு முன்னால் இருக்கிற பஸ் ஸ்டாப்பிலும் பக்கத்தில் இருக்கிற மகளிர் கல்லூரி பஸ் ஸ்டாப்பிலும் ஒரு கோஷ்டியாய் எப்பவும் நிக்கிறான் சார். பக்கத்து மகளிர் கல்லூரி பிரின்ஸ்பால் பலமுறை இவனை புகார் பண்ணிட்டாங்க சார் , சொன்னா கேட்கிற மாதிரி இல்ல' என்றார் இன்னொருவர்.
'கல்லூரியில் எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து இவனுகளைப் படிக்கச்சொல்கிறோம். படிக்க மாட்டாறாங்கே சார். களை எடுக்காம, பயிரை வளர்க்க முடியாது சார். உங்க தம்பி களை மாதிரி இந்தக் கல்லூரியில் இருக்கான் .தயவுசெய்து இவன் டி.சி.யைத் தருகிறோம் , வாங்கிக் கொண்டு போங்கள் ' என்றார் கல்லூரி முதல்வர்.

         ஒன்றுமே புரியவில்லை குணசேகரனுக்கு. ஒவ்வொரு பேராசிரியரும் ஜோயலைப் பற்றிச்சொல்லச்சொல்ல கோபம் கோபமாக வந்தது குணசேகரனுக்கு. அவனுக்கு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக அழைந்த அலைச்சல் ஞாபகம் வந்தது. களை எடுத்து, விறகு சுமந்து அவனைப் படிக்கவைத்துக்கொண்டிருக்கும் ஜோயலின் அம்மாவின் ஞாபகம் வந்தது ஜோயலுக்கு. கிடைத்ததற்கு அரிய இந்த வாய்ப்பை இப்படி அநியாயமாக பாழ்படுத்தியிருக்கிறானே என்று கோபம் வந்தது வந்தது குணசேகரனுக்கு.

           ஒருகட்டத்தில் பேராசிரியர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன்  ஜோயலிடம் ' என்ன ஜோயல், பேராசிரியர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான? ' என்றான் . எதுவும் சொல்லாமல் நின்ற ஜோயலைப் பார்க்க ஆத்திரமாக வந்தது குணசேகரனுக்கு.எவ்வளவு பெரிய வாய்ப்பு ஜோயலுக்கு . அனைத்தையும் பாழ்படுத்தி நமக்கும் சேர்த்து கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறானே என்று எண்ணினான் குணசேகரன்.

           கல்லூரி முதல்வர்' சார், இப்படிப் பையனை எல்லாம் வைத்துக்கொண்டு நாங்க கல்லூரி நடத்தமுடியாது சார். தயவுசெய்து வேறு கல்லூரியில் சேர்த்துவிடுங்கள்.அல்லது டி,சி. வாங்கிக்கொண்டு போய் அஞ்சல் வழியில் படிக்கச்சொல்லுங்கள். இந்தக் கல்லூரியில் இவன் இனிப்படிக்க முடியாது ' என்று தீர்மானமாகச்சொன்னதும், ஆத்திரம் கொப்பளிக்க தன்னிலை மறந்து நாற்காலியில் இருந்து எழுந்தான் குணசேகரன்.

'ஏண்டா, உன்னை படிடான்னு அனுப்பிவைச்சா, இப்படி வேண்டாத வேலையெல்லாம் பாத்துக்கிட்டு , படிக்காமத் திரியிறியா? ' என்று சொல்லிக்கொண்டே ஜோயலின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான் குணசேகரன். அப்படி அடித்திருக்ககூடாதுதான். தனது பிள்ளைகளையே அடிப்பதற்கு உரிமை இல்லாத உலகில் ஊரா வீட்டுப்பிள்ளையை அப்படி அடித்திருக்கக்கூடாதுதான். குணசேகரனின் கை ஏற்கனவே கிராமத்தில் இளம்வயதில் உழைப்பாளியாக இருந்த கை.உரமான கை. கூடப்பழகும் நண்பர்கள் சாதாரணமாக அடித்தாலே,'டேய், தீப்பிடிச்சதுபோல வலிக்கிறது ' எனக் கோபிப்பது உண்டு. உண்மையிலேயே பயங்கர கோபத்தோடு ஜோயலை குணசேகரன் அறைந்தபோது மிகப்பலமாகவே விழுந்துவிட்டது. குணசேகரன் அறைந்த அறையில்,ஒரே அடியில் அப்படியே மூர்ச்சையாகி ஜோயல் கீழே விழுந்துவிட்டான். மீண்டும் மிதிக்கப்பாய்ந்த குணசேகரனை அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் தடுத்தார்கள். சோடாவைக் கொண்டுவரச்சொல்லி, முகத்தில் ஜோயலின் முகத்தில் அடித்தார்கள். கல்லூரிப்பேராசிரியர்கள் உண்மையிலேயே பயந்து போனார்கள். 'சார், இதுக்கு மேலே இவனை அடிக்க வேணாம் சார்.நாங்க பார்த்துக்கிறோம். தனியாக ஒரு கல்லூரிப்பேராசிரியரை இவனுக்கு மட்டும் அட்வைசராகப் போட்டு பார்த்துக்கொள்கிறோம். கல்லூரியில் படிக்கட்டும். நீங்கள் மட்டும் மாதம் மாதம் வந்து பார்த்துக்கொள்ளுங்கள். ' என்றார்கள். கீழே விழுந்து கிடந்த ஜோயல் இப்போது கொஞ்சம் மூர்ச்சை தெளிந்து உட்கார்ந்திருந்தான்.

'ஒழுங்கா கல்லூரியில் படி. இல்லையென்றால் உங்கள் அண்ணன் உன்னை இங்கேயே அடிச்சுக் கொண்ணு போட்டிருவார் போலிருக்கு , போ, போய் ஒழுங்காப் படி ' என்று சொன்ன கல்லூரி முதல்வரிடம் சரி எனத் தலையாட்டிவிட்டு வந்த ஜோயலோடு கல்லூரியை விட்டு வெளியே வந்தான் குணசேகரன்..

வெளியே வந்த குணசேகரனுக்கு மனது குறுகுறுத்தது. ஒரு நிமிடம் அப்படி உணர்ச்சி வசப்பட்டு 'ஜோயலை ' அடித்துவிட்டோமே, எத்தனை என்றாலும் கூடப்பிறந்த தம்பியையோ அல்லது பிள்ளைகளையோ கூட இப்படி அடிக்கமுடிவதில்லை, ஒரு நிமிடம் இப்படி காட்டுமிராண்டியாக மாறி இவனை அடித்துவிட்டோமே எனும் உறுத்தலோடு ஜோயலிடம்'சாரி,ஜோயல். ஓங்கி அடிச்சிட்டேன். நீ நல்லாப்படிச்சுக்கிட்டு இருப்ப என்னும் நம்பிக்கையில் நான் இருந்தேன். நீ சரியாப் படிக்கலைன்னு விவரமாக் கேட்டதும் தாங்க முடியலே, அப்படி அடிச்சிட்டேன் ,சாரி ' என்ற குணசேகரனிடம்

'போங்கண்ணே , நீங்க இப்படி அடிக்கலைன்னா, நான் கீழே மூர்ச்சையாகி விழுகலைன்னா, இந்த ஜென்மத்திற்கும் என்னைக் கல்லூரியிலே சேர்த்திருக்க மாட்டாங்க. அவ்வளவு தீவிரமா இருந்தாங்க. படிக்க மறுபடியும் அனுமதி கிடைச்சதக்கு நீங்க அடிச்சதுதான் காரணம் ' என்று கன்னத்தைத் தடவிக்கொண்டே ஜோயல் சொன்னபோது அழுவதா, சிரிப்பதா எனத்தெரியாமல் கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான் குணசேகரன். 

  • எழுதியவர் : வா.நேரு
  • Nantri: Eluthu.com.

Monday, 16 May 2016

வயிறு இருக்குல...வயிறு (சிறுகதை)--வா. நேரு

                                           


வண்டியை நிறுத்துவது அந்த இடத்தில் கடினமாக இருந்தது. அப்படி ஒன்றும் மதுரையின் மையத்தில் உள்ள பகுதி இல்லை. ஒரு இருபது வருடத்துக்கு முன்னால் வயலாக இருந்த மதுரை கிருஷ்ணாபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதிதான். வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் , கொஞ்சமாக இருந்த இடத்தில் வண்டியை நுழைத்து, வண்டியை இழுத்து நிறுத்திவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு அந்த டிபன் செண்டருக்குள்  நுழைந்தான் மணி. ஏதோ மியூசிக் பார்ட்டியில் டிரம் அடிப்பதுபோல டம, டம, டம, டம, டம்,டம் டம், டங்க் என கொத்து புரோட்டாவை கொத்திக்கொண்டிருந்த மாஸ்டர் வெற்றி, மணியைப் பார்த்தவுடன் ஒரு கணம் தனது கொத்து புரோட்டா இசையை நிறுத்திவிட்டு ' வாங்க சார் வாங்க,வணக்கம் ' என்றார். மணியும் பதிலுக்கு வணக்கம் வைத்தான். தொடர்ந்து தனது கொத்து புரோட்டா இசையை ஆரம்பித்த புரோட்டா மாஸ்டர், சப்ளையரிடம் ' சாருக்கு 25 புரோட்டா, பத்து தோசை பார்சல் ' என்றார் .

                    'ஏங்க , வீட்டுக்கு நேற்று விருந்தாளிகள் எல்லாம் வந்திருந்தாங்க, அதனாலே நிறைய வாங்கிட்டுப்போனேன், இன்னைக்குமா ,  வாங்குற சம்பளத்துக்கு முழுவதும் புரோட்டாவா ? இன்னைக்கு 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும் ' என்று ஆர்டர் பண்ணி விட்டு நின்றுகொண்டான் மணி.

அந்த டிபன் கடைப்பெயர் என்னவோ'ராயல் டிபன் சென்டர் ' என  பெத்த பேரா இருந்தாலும், க்டை இருந்தது என்னவோ ஒரு எட்டுக்கு எட்டு அறை. அந்த அறையில் வலது பக்கம் போடப்பட்டிருக்கும் இரண்டு மேசைகள். ஒரு மேசைக்கு அந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள், இந்தப்பக்கம் இரண்டு நாற்காலிகள் என 4 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். இரண்டு மேசைக்கும் சேர்த்து மொத்தமாக 8 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். மேசைகளுக்கு கிழக்கே ஒரு சின்ன மேசை , அதன் மேலே இலைக்கட்டுகள், பரிமாறப்பயன்படும் பாத்திரங்கள் அப்புறம் கடைசியில் மொத்தமாக புரோட்டாக்களை போட்டுவைக்க ஒரு வட்டகை . அறையின் இந்த  மூலையில் ஒரு சின்ன மேசை, மேசைக்கு முன்னால் கடையின் ஏக போக முதலாளி, அந்த மேசைதான் கல்லாப்பெட்டி. அந்தக் கல்லாப்பட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் சப்ளையர் ,' அண்ணனுக்கு இன்னைக்கு பார்சல் 5 புரோட்டா, இரண்டு தோசை மட்டும்." என்று சொல்ல , புரோட்டா மாஸ்டர் ' நாளைக்கு பார்சல் 10 புரோட்டா, 10 ஸ்பெசல் தோசை ' என்று சொல்ல மணி , சப்ளையர் , முதலாளி என்று அனைவரும் சிரிக்க வேலை மிகவும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

                       டிபன் கடைக்கு முன்னால் புரோட்டா மாஸ்டர் வெற்றி  நின்று வேலை செய்துகொண்டிருந்தார். மேற்கே பார்த்து அவர் நின்றுகொண்டிருக்க , அவருக்கு முன்னால் புரோட்டா மாவைப் பிசையும் பித்தளைத் தகரம் இருந்தது. அதில் ஒரு பக்கம் புரோட்டா மாவும் , இன்னொரு பக்கம் அவர் உருட்டிப் போட்ட புரோட்டா மாவு உருண்டைகளும் கிடந்தது. அவர் இடது கைப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. நல்ல விறகு அடுப்பு. நமது வீட்டு தோசைச்சட்டி 4, 5 சட்டியை ஒன்றாய் சேர்த்து போட்டதுபோல பெரிய அடுப்பு தக தகவென எரிந்து கொண்டிருந்தது. அதில் புரோட்டாவை ஏற்கனவே தட்டிப்போட்டிருந்தார். இந்தப் பக்கம் பேசிக்கொண்டே ஒரு பக்கம் வெந்த புரோட்டாக்களை அடுத்த பக்கத்துக்கு திருப்பி போட்டுக்கொண்டிருந்தார். அந்தப் புரோட்டாக்கள் வேகும் நேரத்திற்குள் ஏற்கனவே உருட்டிப்போட்டிருந்த புரோட்டா மாவு உருண்டைகளை சுழற்ற ஆரம்பித்தார். அப்படியே ஏதோ ராட்டினம் சுற்றுவதுபோல புரோட்டா மாவை வீசி, வீசி இலேசாக்கி  மறுபடியும் அதனை ஒன்று சேர்த்து புரோட்டா வடிவத்தில் ஆக்கினார். அப்படியே ஒவ்வொரு புரோட்டா மாவு உருணடைகளும் புரோட்டா வடிவங்களாகிக் கொண்டிருந்தன. அதற்குள் அடுப்பில் இரண்டு பக்கமும் வெந்திருந்த புரோட்டாக்களை திருப்பித் திருப்பி போட்டு விட்டு மொத்தமாக எடுத்து  பித்தளைத் தட்டில் போட்டு , சூட்டோடு இருக்கும் புரோட்டாக்களை இரண்டு கைகளாலும் சேர்த்து தட்டினார் . தட்டிப்போட்டு பக்கத்தில் இருக்கும் சட்டியில் தூக்கிப்போட்டார். அதற்குள் சப்ளையர் ' மாஸ்டர், லைனுக்கு இரண்டு ஆம்லேட் ,ஒண்ணு நிறைய வெங்காயம் போட்டு, ஒண்ணு வெங்காயம் போடாமல் ' என்றார். அப்படியே வலது கைப்பக்கம் திரும்பி , வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இரண்டை எடுத்தார். ஒன்றை அப்படியே சூடாக இருக்கும் அடுப்பில் ஊத்திவிட்டு, இன்னொரு முட்டையை ஒரு செம்பு மாதிரி இருந்த பாத்திரத்தில் ஊற்றி , வெங்காயம் நிறைய அள்ளிப்போட்டார். கொஞ்சம் உப்பைப் போட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு அப்படியே அடுப்பில் ஊற்றினார். அடுப்பில் இருந்த இன்னொரு ஆம்லேட்டிற்கு கொஞ்சம் உப்பைத் தூவினார்.

                                  ஆம்லேட்டை தூக்கிக் கொடுப்பதற்குள், உள்ளிருந்து மூன்று தோசை ஆர்டர் வந்தது. கையில் கீழே இருந்த எண்ணெய்சட்டியை எடுத்தார். சள், சள் என்று கல்லில் எண்ணெயை விட்டு விட்டு, முட்டைக் கூடைக்கு அருகில் இருந்த தோசை மாவு வாளியில் இருந்து ஒரு கரண்டியில் மாவை அள்ளி தோசைக்கல்லில் ஊற்றினார். அப்படியே பரப்பி வேக வைத்துவிட்டு, அடுத்த தோசைக்கு மாவை ஊற்றினார் ,இப்படியே ஒரு நேரத்தில் மூன்று தோசைகளை வேகவைத்துக் கொண்டிருந்தார்  கல்லில் . வெந்து கொண்டிருக்கும் தோசைகளுக்கு மேலே எண்ணெயைத்தூவினார். அப்படியே முறுகலாக வெந்த தோசைகளை திருப்பியெல்லாம் போடாமல் மடக்கி வட்டகைக்குள் போட்டார். ரெண்டு தட்டு, வட்டகையை தோசைக்கரண்டியால் தட்ட சப்ளையர் ' வாரமெல , அதுக்குள்ளே தட்டா, ஒன்னோட துய்ரமய்யா ' என்று சொல்லிக்கொண்டே தோசையை எடுத்துக்கொண்டு போனார்.

                                மணி வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறான். இந்த புரோட்டா மாஸ்டருக்கும் , சப்ளையருக்கும் இருக்கும் புரிதலை, நகைச்சுவையை.ஏதோ இசைக்கருவிகள் இரண்டு இணைந்து எழுப்பும் இசை நாதம் போல , இருவரும் இணைந்து செய்யும் வேலை வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போது எப்போதும் கடைக்கு வந்தால் ' நாலு இட்லி ' மட்டுமே சாப்பிடும் அய்யாவு உள்ளே வந்து சாப்பிடக் கை கழுவிக் கொண்டிருந்தார். அவரைக் கவனித்த மாஸ்டர்  ' அய்யாவுக்கு என்ன ஸ்பெஷல் நெய் தோசையான்னு கேளுங்க, சட்டென்று போட்டு விடலாம் ' என்றார். அவர் அய்யாவுகிட்ட ' என்னங்க வெறும் ஸ்பெஷல் தோசையா, நெய் ஸ்பெஷல் தோசையா ' என்று கேட்க ' ஏய் , கேலி பண்ணாதிங்கப்பா, 4 இட்லி மட்டும் கொடுங்க ' என்றார். இட்லியை வைத்து நிறைய சாம்பார் , சட்னி ஊத்தி வகையாக அவர் சாப்பிட சப்ளையர் வழி செய்து கொண்டிருந்தார். வருகிறவர்களிடம் கொஞ்சம் உரிமை, கொஞ்சம் கேலி, கிண்டல் அதிகமான உபசரிப்பு என இருவரும் இணைந்து செயலாற்றுவதால் , முதலாளிக்கு அதிகம் வேலை இல்லாமல் வருமானம் வந்து கொண்டிருந்தது.

                             கூட வேலை பார்க்கும், மாதம் அதிகச்சம்பளம் வாங்கும் தனது அதிகாரியை இந்தக் கடைக்கு அழைத்து வரவேண்டும் என்று நினைத்தான் மணி. வருமானம் கூடவோ, கொஞ்சவோ எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறார்கள் இந்த இருவரும். அதுவும் மாஸ்டர் வெற்றி அடுப்பிற்கு முன்னால் எவ்வளவு நேரம் நிற்கிறார்.காற்றாடி எல்லாம் தலைக்கு மேலே சுற்றவில்லை. ஒரே வெப்பம்தான் அடுப்பினால். சட்டை இல்லாமல் வெறும் பனியனோடு நின்று கொண்டுதான் மாஸ்டர் வேலை பார்க்கின்றார். இவனுக்கு தெரிந்து மாலை 6 மணிக்கு நிற்க ஆரம்பித்தால் இரவு 10, 11 மணி ஆகிவிடும் எல்லாம் விற்றுத்தீர்வதற்கு. இடையில் , இயற்கை அழைப்புகளுக்குத் தவிர வேறு எங்கும் போவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் மணி கேட்டான். "6 மணிக்குத் தான் கடைக்கு வருவீர்களா" என்று. "அண்ணே, நீங்க வேற , நான் 3 மணிக்கே வந்துடுவேன். வந்து புரோட்டா மாவை பிசைந்து வைக்கணும், புரோட்டா குரூமா தயாரிக்கணும் ... "என்று சொன்னார். அப்ப மாலை 3 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரைக்கும் வேலை, எவ்வளவு சம்பளம் என்றான். ஒரு நாளைக்கு 500 ரூபா என்றார் புரோட்டா மாஸ்டர்.

                                           உடனிருந்த சப்ளையர் "அண்ணே, மாஸ்டர் இங்கு மட்டும் வேலை பாக்கிறார்ன்னு நினைக்காதிங்க, காலையில் ஒரு புரோட்டாக் கடையில் வேலை பார்க்கிறார்" என்றவுடன் , மணிக்கு தூக்கி வாரிப்போட்டது." காலையில் ஒரு கடையா ? "என்றான். "ஆமாம் , கீழ மாசி வீதியில் அந்த எண்ணெய்க்கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வேலை பார்க்கிறார் "என்றவுடன் , ஆமான்னே, பூராம் சுமை தூக்குற, எறக்கிற ஆளுக இருக்கிற ஏரியா, அங்க காலையிலேயே வந்து புரோட்டா சாப்பிடுவாங்க, இதே மாதிரிதான் அங்க காலையில் 6 மணிக்கு போயிட்டு மத்தியானம் இரண்டு மணிக்கு வருவேன் "என்றார். அடப்பாவிகளா, ஒரே நாளில் இரண்டு இடத்தில்,15-16 ணி நேரம் இந்த அனலில் வேகுற வேலையா ? என்று மனதிற்குள் ஓடியது. "எப்படி இப்படி முடிகிறது" என்றான் மணி

                                              அப்படியே தோசைக்கரண்டியாலேயே வயிற்றைக் காட்டியவர், வயிறு இருக்குல, என்னை நம்பி வீட்டில 5 வயிறு இருக்கல என்றவர், வயதான எங்க அப்பா, அம்மா எங்கூட இருக்காங்க, பிள்ளைகள் இரண்டு பேரும் படிக்கிறாங்க, வீட்டிக்கார அம்மாவும் ஏதாவது கூலி வேலைக்குப்போகும், இல்லைன்னா வீட்டில இருக்கும், நான் அங்க ,இங்கேன்னு வேலை பாக்குற இடத்திலே சாப்பிட்டுக்கிறேன்.என்னையைத் தவிர 5 வயிறு மூணு நேரம் சாப்பிடனும்ல, நம்ம என்ன டாட்டா, பிர்லா பரம்பரையா -உட்கார்ந்து சாப்பிடறதுக்கு, உழைக்கணும்னே , உழைக்கணும் -இந்த ஒருச்சாண் வயித்துக்கு உழைக்கணும்ல என்று சொல்லிக்கொண்டே புரோட்டாவை வீசிக்கொண்டிருந்தார். பார்சலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்ட மணி ஒரு நாலைந்து நாட்கள் டிபன் கடைக்குப் பக்கம் போகவில்லை.

                                அடுத்த வாரம் போன போது மாஸ்டரைக் காணவில்லை. வேறு ஒரு மாஸ்டர் புரோட்டா வீசிக்கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் சப்ளையர் சோர்வாக இருந்தார்.பார்சலுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, சப்ளையரிடம் எங்கே புரோட்டா மாஸ்டர் வெற்றியைக் காணோம், ஊருக்குப் போயிட்டாரா ? என்றதும் "  ஊருக்கு டிக்கெட் வாங்கத் தெரிஞ்சாரு " என்று சொல்லி நிப்பாட்டிய சப்ளையர் அருகில் வந்து 'திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் , ஆஸ்பத்திரியில் இருந்து , இன்னைக்குத்தான் வீட்டிற்கு வந்திருக்கிறாரு " என்று சொன்னவுடன் ஒரு மாதிரியாக இருந்தது , அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்ட மணி காலையில் அவரைத் தேடி வீட்டிற்கு போனான்.

                           மதுரை, பந்தல் குடியைத் தாண்டி செல்லூருக்குள் அவர் வீடு இருந்தது. மொத்தமாய் சாக்கடைகள்  வந்து இணையும் அந்த சாக்கடையைத் தாண்டித்தான் மணி போனான். சாக்கடை ஓடைக்கு மேலேயே வீடுகளும் , குடிசைகளும் இருந்தன. துர் நாற்றம் அடித்தது. கொஞ்ச நேரம் கடந்து போவதற்கே நாம் சலித்துக்கொள்கிறோமே, இங்கேயே வாழ்பவர்கள், இந்தக் குடிசைக்குள் இருந்து படிப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டே மாஸ்டர் வெற்றியின் வீட்டை அடைந்தான் மணி.

                      சின்ன சந்துக்குள் வரிசையாக இருக்கும் காம்பவுண்டு வீட்டிற்குள் அவரது வீடும் இருந்தது. அவரின் மனைவிக்கு மணியைத்  தெரியவில்லை. அறிமுகம் இல்லைதானே , அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அழைத்துச்சென்றார். வீடு ஒரு இரண்டு பத்துக்கு பத்து அறைகளாக இருந்தது. ஒன்றில் இவர் படுத்துக்கிடந்தார். மணியைப் பார்த்தவுடன் புன்னகைக்க முயற்சித்தார். முடியவில்லை. உடம்பில் இருந்த வலியெல்லாம் திரண்டு முகத்தில் வழிந்தது. அவரது மனைவி அவரின் மெடிக்கல் ரிப்போர்டை எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார். ஆஞ்சியோ எடுத்து , அடைப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடைப்பு எடுக்க இன்னும் இரண்டொரு நாளில் வரச்சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள். கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தபோது அவரது மனைவி வாங்க மறுத்தார். புரோட்டா மாஸ்டர் சைகை காட்டியவுடன் வாங்கிக் கொண்டார். அவரின் பெற்றோர்கள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இருந்தவர்கள்' எம்பிள்ளை நல்லாகணும்  ' என்று கைகூப்பினார்கள். மருத்துவ செலவுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது முன்னாள் முதலமைச்சரின் பெயரைச்சொல்லி, அவர் பெயரில் இருக்கும் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாகவே செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆஞ்சியோ எடுத்ததற்கான செலவை அப்படித்தான் கொடுத்தார்கள். அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஒரு மூன்று மாதம் ஓய்வு எடுத்தால் இயல்பாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள், நான் இப்போது தொடர்ச்சியாக கூலி வேலைக்கு செல்கிறேன் என்று அந்த சகோதரி  சொல்லிக்கொண்டிருந்தார். கேட்டுவிட்டு அமைதியாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மணி. ரோட்டில் நின்றிருந்த காரில் உட்கார்ந்திருந்த ஒருவர் சத்தமாக 'இலவசமா எதையுமே இந்த நாட்டிலே செய்யக்கூடாது ,அதனால்தான் இந்த நாடு கெட்டுப்போயிரிச்சு' என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.