Sunday 20 February 2022

இணைப்பு... சிறுகதை... வா.நேரு

 இணைப்பு...   சிறுகதை... வா.நேரு



அலுவலுகம் 10 மணிக்கு. 9.45 க்கு  தன் சீட்டிற்குப் போன கதிர், தான் உட்காரப்போகும் நாற்காலியையும்,தனக்கு முன்னால் இருந்த மேசையையும்,மேசையின் மேல் இருந்த தொலைபேசியையும் அதற்கு அருகில்  இருந்த கணினினையும் துணியால் துடைத்தான். துடைத்து முடித்து விட்டு அமர்ந்து கணினியை இயக்க மின் சுவிட்களைப் போட்டான். அமர்ந்தவுடன் தன் பையில் இருந்த செல்பேசியையும் எடுத்து தொலைபேசி அருகில் வைத்தான்.

செல்பேசி அடித்தது. எதிர்முனையில் சூரியன் மில்லின் மேலாளர் பேசினார்.

"வணக்கம் சார் " என்றான் கதிர். "வணக்கம் சார் " என்ற மேலாளர் " சார் நாளை காலை 7 மணிக்கு எங்கள் மில்லின் சேர்மன் அவர்களுக்கு ஒரு வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் இருக்கிறது.பல மாநிலங்களிலிருந்து எங்கள் மில்லின் பங்குதாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கியமான கூட்டம் .இணைய வழியாக நடைபெறும் கூட்டம்.இப்போது இண்டர் நெட் இணைப்பு  நன்றாகக் கிடைக்கிறது. நாளை காலையும் இப்படிக் கிடைப்பது மாதிரி செய்துவிடுங்கள் சார். மிக முக்கியமான கூட்டம் என்பதால் முன் கூட்டியே உங்களுக்கு சொல்கிறேன் சார் " என்றார்.

" சரிங்க சார் " என்ற கதிர் அப்போது தனது அலுவலகத்தில் இருக்கும் பழுது பார்க்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் செக்சனின் அதிகாரி,கமாலைக்  கூப்பிட்டுப் பேசினான்

"சார், இந்த மாதிரி சூரியன் மில்லில் அந்தச்சேர்மன் ஒரு முக்கியமான மீட்டிங் வைத்திருக்கிறார். இணையம் கிடைப்பதை சரி பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொன்னவுடன் உற்சாகமாக ,'அந்தப் பக்கம் நம் கேபிள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை சார், நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன் சார் " என்றார் கமால்.. சரி என்று போனை வைத்தான் கதிர்.


இந்த முப்பது ஆண்டுகளில் தான் வேலை பார்க்கும் தொலைதொடர்புத்துறையில் எத்தனை மாற்றங்கள்...இத்தனை மாற்றங்களைக் கண்ட வேறு துறை ஏதும் இருக்கிறதா எனக் கதிருக்குத் தெரியவில்லை.அதுவும் இப்போது புதிதாக வந்திருக்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் மிகப்பெரிய புரட்சியாகத் தெரிந்தது கதிருக்கு,சின்னதாக முடியைப் போன்ற வடிவில் இருக்கும் நீண்ட தூர இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்களை முதன்முதலில்  பார்த்தபொழுது கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது.அறிவியலால் எப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்கின்றன.இப்படிச்சிறிய வடிவத்தில் இருக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வழியாகத்தான் நாம் கணினி வழியாக இணையத்தின் வழியாக அனுப்பும் கோப்புகள்,படங்கள்,சினிமாக்கள் என அத்தனையும் கடத்தப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய முன்னேற்றம். 

பெரிய பெரிய கம்பங்களை ஊண்டி,காப்பர் வயர்களை இழுத்துக் கட்டி அதன் மூலமாக தொலைபேசி இணைப்புகள் கொடுத்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது எல்லாம் தரைக்கு கீழே செல்லும் கேபிள்கள்தான்.அதுவும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வந்தபிறகு தொலைபேசிகள் இல்லாமல் கூட கணினிகளுக்கு கண்ணாடி இழை கேபிள்களின் வழியாக இணைய இணைப்புக் கொடுக்கும் காலம் வந்து விட்டது.அதுவும் இந்த லீசுடு லைன் என்னும் இணைப்பு மூலம் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு,கல்லூரிகளுக்கு அதிவேக இணைய இணைப்புக் கொடுக்க முடிந்தது.அதன் மூலம் கதிர் வேலை பார்க்கும் அரசு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வருமானம் வந்து கொண்டிருந்தது.


மணி 10 அடித்தது. அலுவலகத்திற்குள் கதிரின் மேல் அதிகாரி சண்முகம் உள்ளே நுழைந்தார். கதிர் வணக்கம் வைத்தான்.சண்முகமும் உற்சாகமாக திரும்ப வணக்கம் வைத்தார். சண்முகம் ,கதிர் தனக்கு கீழே உள்ள அதிகாரி என்றாலும்  ஒரு நண்பரிடம் பழகுவதுபோலவே பழகினார்.நடந்து கொண்டார்.கதிர்,சண்முகம்,கதிருக்கு கீழே வேலைபார்க்கும் குமார்,நாதன் என ஒரு அருமையான குழுவாக அவர்களின் அலுவலகம் இருந்தது.

கதிரும் சண்முகமும் பல நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.அந்தக் காலங்களில் தங்கள் இளமைக் காலத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். சிறுவயதில் தான் கடலைக் காட்டில் அலைந்ததைப் பற்றியும் அதன் அனுபங்களைப் பற்றியும் கதிர் பகிர்ந்து கொண்டபோது,சண்முகம் தானும் சிறுவயதில் வயக்காட்டில் கடலை பயிரிட்டு அதனைச்சாகுபடி செய்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டார். " சார் எங்கள் பகுதிகளில் கடலைச்செடிகளைப் பிடிங்கிப்போட்டு,செடிகளில் இருக்கும் கடலையை ஆட்கள் ஆய்ந்து ஆய்ந்து போட்டு மொத்தமாகக் குமிப்பார்கள் " என்றான் கதிர். சண்முகமோ "சார் எங்கள் பக்கம் கடலைச்செடியை மொத்தமாகப் பிடிங்கிப்போட்டு, நெல்லை அடிப்பது போல அடித்துப் பிரிப்போம் " என்றார். "இப்படிப்பட்ட அரசு நிறுவனம் எல்லாம் இல்லை என்றால் நீங்களும் நானும் இப்படி பெரிய அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியுமோ சார் " என்பார் சண்முகம் கதிரிடம். ஆம் உண்மைதான், காட்டில் மேட்டில் வளர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் படிப்பால்,சமூக நீதித் தத்துவத்தால் பெரிய பெரிய அலுவலகத்தில் ,நல்ல பதவிகளில் அமர்ந்திருக்கிறோம் என்னும் உணர்வு கதிருக்கும் சண்முகத்திற்கும் இருந்தது. 

அவர் உட்கார்ந்தவுடன் கதிர் ,சண்முகத்திடம் சூரியன் மில்லில் மேலாளர் போன் பேசியதையும் தான் கமாலிடம் பேசியதையும் கூறினான். "சார் அந்தப் பக்கம் போடப்பட்டுள்ள பைபர் கேபிள் எல்லாம் புதுக்கேபிள்கள் சார். நல்ல ஆழமாகவும் தோண்டி போட்டிருக்கிறோம் .ஒன்றும் பிரச்சனை இல்லை சார்,பார்த்துக்கொள்வோம் " என்றார்.

திடீர் என யோசனை வந்தவராக "சார்,சூரியன் மில் சேர்மன் நமக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர். அவரது கல்லூரிகள்,மில்  என வருடத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நமது நிறுவனத்திற்கு வருமானம் வருகிறது.அவருக்கு கோபம் வருவது மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது.நமது பொது மேலாளரிடம் போய்க் கொஞ்சம் சொல்லி வைத்து விடுவோம் "என்றார்.

கதிரும் சண்முகமும் இருவரும் இணைந்து போய் பொதுமேலாளரிடம் சொல்லி விட்டு வந்தார்கள்.தொடர்ந்து தொலை பேசிகள் வந்து கொண்டிருந்தன.மதிய உணவு இடைவெளியில் அலுவலகத்தின் கீழே சென்றபோது, அலுவலகத்தின் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஊழியர்கள், கடந்த 6 மாதமாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். கதிரும் அந்தக் கூட்டத்தில் ,அவர்களின் போராட்டம் வெற்றி பெற, வாழ்த்திப் பேசினான்.

மீண்டும் மேலே வந்த கதிர், சண்முகத்திடம் " என்ன சார், நாம் ஓர் அரசு நிறுவனம். நமக்கு போன இரண்டு  மாதச்சம்பளம் இன்னும் வரவில்லை. நாமாவது எப்படியோ சமாளிக்கிறோம். பாவம்,கூட்டுகிறவர்கள்,கழிப்பறையை சுத்தம் செய்பவர்கள் என்ன சார் செய்வாங்க ? இப்படி அவங்க வயித்துலே அடிக்கிறாங்களே ? ": என்றான்.

"அரசாங்கம் அதையும் காண்டிராக்ட் விட்டு விட்டார்கள். காண்டார்க்ட்காரர்களுக்கு பணம் டெல்லியில் இருந்து வரவேண்டும்.வரவில்லை...அவர்கள் சம்பளம் கொடுக்கவில்லை " என்றவர் தொடர்ந்தார்..

" நாம் அரசு நிறுவனமாக இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகளெல்லாம் இல்லை. எப்போது பொதுத்துறையை முழுவதும் விற்கவேண்டும் என்று தீர்மானித்தார்களோ அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.முதலில் நாம் நமது மாவட்டத்தில் செலவு செய்தது போக மீதியை சென்னைக்கு அனுப்புவோம்.அவர்கள் அதனை டெல்லிக்கு அனுப்புவார்கள். இப்போது ஒரு ரூபாய் என்றாலும் உடனே டெல்லிக்கு போவது போல கணினியில் செய்து விட்டார்கள்.போன பணம் வரமாட்டிங்குது...நம்ம ஜி.எஸ்.டி., மாதிரி " என்றார்.

தொடர்ந்து வேலை ஓடிக்கொண்டிருந்தது. மாலை 4 மணியைப் போல சூரியன் மில் மேலாளரிடம் இருந்து போன் சண்முகத்திற்கு வந்தது. அவர் பேசி முடித்தவுடன் துள்ளி எழுந்தவர் கதிரிடம் "சார்,சூரியன் மில்லுக்கு இண்டர் நெட் இணைப்புக் கிடைக்கவில்லையாம், கடந்த 10 நிமிசமா " என்றார். "அய்யோ ,என்னவாயிற்று " என்று மற்றொரு அலுவலுகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "ஆமாம் சார், ஆப்டிகல் பைபர் கேபிள் கட் என்பது போல கணினியில் காட்டுகிறது. ஓ.எப்.சி.பிரேக் சார் " என்றார்.

அப்படியே கணினிகளை நிறுத்திய சண்முகமும் கதிரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள். நிறுவனத்தில் கார்கள் அனைத்தும் வெளியில் போயிருந்தன. மழை வேறு லேசாக தூறிக்கொண்டிருந்தது. கதிரை அழைத்த சண்முகம் "சார் நாம் வெயிட் பண்ணினால் நேரம் ஓடி விடும்.வாருங்கள் என் வண்டியில் போவோம் " என்று அவர் மோட்டார் பைக்கை எடுத்தார். தன் மோட்டார் பைக்கில் இருந்த ஹெல்மேட்டை எடுத்து ,சண்முகம் வண்டியில் பின்னால் உட்கார்ந்தான் கதிர்.பேசிக்கொண்டே,வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புக்கு எல்லாம், இரண்டு செல்பேசியிலும் கதிர் பின்னால் இருந்து பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

அந்தச் சூரியன் மில்லிற்கும் ,அவனது அலுவலகத்திற்கும் சுமார் 20 கி.மீ.இருக்கும். போகும் வழியிலேயே ஓஎப்சி அதிகாரி கமாலிடம் பேசினான் கதிர். அவரும் பதறினார். " சார் நானும்,எங்களது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருகிறோம். நீங்கள் முன்னால் போங்கள் சார் " என்றார்.

"சார்,ஏதேனும் புயல் காற்று என்றால் நமது கேபிள்களுக்கு சேதம் வரும். வெறும் தூறல்தான் சார் தூறிக்கொண்டிருக்கிறது" என்று கதிரும் சண்முகமும் பேசிக்கொண்டே சூரிய மில்லுக்கு போய்ச்சேர்ந்தனர்.

அந்த மில்லின் நெடிய கதவுகள் பயமுறுத்தும் மலைப்பாம்பு போலத்தெரிந்தது கதிருக்கு. அந்தப் பிரமாண்டமான  மில்லின் முன்னால் நின்றிருந்த காவலாளியிடம் அடையாள அட்டைகளைக் காண்பித்து, யாரைப் பார்க்கப்போகவேண்டும் என்று சொன்னவுடன் அவர் அந்த மில்லின் மேலாளரிடம் போனில் பேசினார்.

பேசிவிட்டு " நீங்கள் போகலாம் சார்.நேரே போய் வலது பக்கமாக திரும்பி,வண்டியை நிறுத்தி விட்டு மேலாளர் அறைக்குச்செல்லுங்கள் " என்றார்.

"சரி" என்று சொல்லி விட்டு,வண்டியை நிறுத்திவிட்டு ,மேலாளர் அறைக்குச்சென்றனர்.

சண்முகம் மிகவும் கவலைப்பட்ட நிலையில் கதிரிடம் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்.

எப்போதும் புன்னகையோடு வரவேற்கும் சூரியன் மில்லில் மேலாளர் கடுகடுவென இருந்தார். இருவரையும் பார்த்தவுடன் உட்காரக் கூடச்சொல்லவில்லை..."சார், நாளைக் காலையில் இண்டர் நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான்,அத்தனை இணைப்புகளையும் புதிதாக வந்திருக்கும் தனியார் கம்பெனிக்கு மாற்றிவிட முதலாளி சொல்லி விடுவார்.அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது.மொத்தமாக உங்கள் இணைப்புகள் அனைத்தும் வேண்டாம் என்று சொல்லி விடுவோம். ஏன் சார் இப்படி பண்றீங்க..." என்று தொடர்ந்து பேசினார்.

சண்முகம் அழுவது போல ஆகிவிட்டார். " சார்,நமது மில்லுக்காக தனியாக கேபிள் எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கோம் சார்.வரும் வழியில் பார்த்துக்கொண்டு வந்தோம்.எங்கள் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.எங்களது ஆட்களை வரச்சொல்லியிருக்கிறேன்.இரவுக்குள் பார்த்து சரி பண்ணி விடுகின்றோம்.சார்...  " என்று கெஞ்சும் குரலில் சொன்னார்.

"காலையில் கிடைக்கவில்லையெனில் அவ்வளவுதான் " என்று சொல்லிக்கொண்டே மேலாளர் உள்ளே போய்விட்டார்.

கதிரைப் பார்த்த சண்முகம்,"வாருங்கள் நாம் ,எங்கே கேபிள் கட்டாகி இருக்கிறது என்று  தேடுவோம் " என்று சொல்ல,சண்முகமும் கதிரும் அங்கிருந்து வண்டியில் கிளம்பினர்.எந்த இடத்தில் இந்தக் கேபிள் கட்டாயிருக்கிறது என்று கண்டுபிடிக்க கருவி உண்டு. ஆனால் அந்தக் கருவி இப்போது கைவசம் இல்லை. அதற்கென இருப்பவர்களை வரச்சொல்லவேண்டும்." சார்,அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை ,வாருங்கள் நாமே தேடுவோம் " என்ற சண்முகமும் கதிரும்  ரோட்டின் ஓரம் முழுக்க தேடிக்கொண்டே வந்தனர்.

"சார் லைனில் எங்கோ கட் ஆகியிருக்கிறது, எந்த இடம் என்பது தெரியவில்லையே. 50 கி.மீ தூர தொலைதூர இணைப்பு இது. லீசுடு லைன் .வாடிக்கையாளருக்கு என்று தனியாக ஒரு அதிவேக பாதையை அமைத்துக்கொடுக்கும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால் பழுதானால் நம் கண்ணு முழி பிதுங்கி விடுகிறது " என்றார் சண்முகம். "கட் ஆன இடத்தைக் கண்டுபிடித்து ஜாயிண்ட் அடித்தால் இணைப்பு  கிடைக்கும் " என்று சொன்னார் சண்முகம்.சண்முகமும்  கதிரும்  ஒவ்வொரு இடமாக மணல் குவித்திருக்கும் இடம் அல்லது எங்காவது ரோட்டு ஓரத்தில் தோண்டிக்கொண்டிருக்கிறார்களா என்று பார்த்த வண்ணம் போய்க்கொண்டிருந்தார்கள். கண்டு பிடிக்க இயலவில்லை. 

மாலை 7  மணியாகி இருந்தது. தூறல் வேறு அதிகமாக விழ ஆரம்பித்திருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. பை பாஸை தாண்டி ஊருக்குள் நுழையும் இடத்தில் அந்த வண்டி நின்றிருந்தது. அந்த வண்டியின் முன்னாலும் பின்னாலும் தோண்டிப் போடப்பட்ட மணல் கிடந்தது. மோட்டார் சைக்கிளை  நிறுத்தி,கதிரை இறங்கச்சொல்லிவிட்டு, விறுவிறுவென அந்த இடத்திற்கு ஓடினார் சண்முகம். கதிரும் பின்னாலேயே ஓடினான். 'சார், இங்கேதான் கேபிள் கட்டாயிருக்கு , கட்டாயிருக்கு " என்று கத்தினார் சண்முகம். கதிரும் பார்த்தான். கண்ணாடி இழை கேபிள் மேல் பெரிய எந்திரக்கரங்கள் முறுக்கி கிழித்த அடையாளங்கள் தெரிந்தன.அந்த ஜேசிபியின் வண்டிக்காரனைத் தேடி ஓடினார் சண்முகம்.  எக்ஸ்-ஒய் நிறுவனத்திற்கு கண்ணாடி இழை கேபிள் பதிப்பதற்காக தோண்டியவர்கள் சண்முகம் வேலை பார்க்கும்  அரசு நிறுவனத்தின் கண்ணாடி இழைக் கேபிள்களை சின்னாபின்னாப்படுத்திப் போட்டிருந்தார்கள்.


 அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் தோன்றி 2,3 ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. 'கட்டின புருசனுக்கு சோறு போடாமல் , மாற்றானுக்கு  சோறும் கறியும் சமைச்சுப்போடுபவள் 'போன்ற' அரசின் பாகுபாட்டால் விறு விறுவென அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் வளர்ந்துகொண்டிருந்தது. அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்ற இறுமாப்பில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்படுபவர்களாக  அவர்கள் இருந்தார்கள்.எக்ஸ்-ஒய் நிறுவனத்தின் ஜேசிபி வண்டிக்காரன் ஒன்றுமே தப்பே செய்யாதது போலப் பேசினான்.யார் அதிகாரி என்று கேட்டபோது ,எண்ணைக் கொடுக்க மறுத்தான். குழியை நாங்கள் வேறுபக்கமாகத் தோண்டிக்கொண்டிருந்தோம். உங்கள் கேபிள் வந்துவிட்டது என்றான். அவனோடு சண்டை போடும் நிலைமை இப்போது இல்லை. அறுந்து கிடக்கும் கேபிளை இணைத்து ஜாயிண்ட் அடித்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்னும் உந்துதலில் அங்குமிங்குமாக சண்முகம் ஓடினார். அதற்குள் கேபிள் சரி செய்யும் அதிகாரி கமால்   பணியாளர்கள் 3 பேரோடு  ஒரு காரில்  வந்து இறங்கினர்.

இருட்டி விட்டது. கமால் குழுவினர்  வந்த காரின்  முன் பக்க விளக்கு இல்லை.மதுரைக்குள் எப்படி முன் லைட் இல்லாமல் வந்தீர்கள் என்று சண்முகம் வினவ,"ஒரு உத்தேசமாக ஹாரன் அடிச்சுக்கிட்டு கவனமா வந்தேன் சார்.ஹெட்லைட் போயிருச்சு,அதனை மாற்றுவதற்கு பில் போட்டு மாற்றனும்.எங்க பொறுப்பு அதிகாரியும் எவ்வளவு நாளைக்குத்தான் கையில் இருந்த பணத்தைப் போடுவார்.இரண்டு மாதமா அவருக்கும் சம்பளம் வரவில்லை.இருந்தாலும் இது முக்கியமான வேலை என்பதால்,அனுசரிச்சு ஓட்டிட்டு வந்தேன் சார் " என்றார் டிரைவர். "அதெல்லாம் சரி,ஏதாவது விபத்து ஏற்பட்டால் நம்ம பிள்ளை குட்டிக தான பாதிக்கப்படும் "என்றான் கதிர்.

பேட்டரியால் இயங்கும் பெரிய விளக்கை எரிய விட்டு, கமால்  கண்காணித்துக்கொள்ள அவரோடு வந்த மூவரும் அந்தப் பள்ளத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். மூவரும் தற்காலிக ஊழியர்கள்.அவர்களுக்கு கடந்த 6 மாதமாகச் சம்பளம் வரவில்லை. அவர்களுக்கு வரக்கூடிய குறைந்த பட்ச சம்பளமும் அவர்களுக்கு வராமல் இருந்தது. கமால் தனது கைப்பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பளம் போல மாதா,மாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்.. ஜேசிபி வண்டிக்காரன் தோண்டி,கேபிளை அறுத்து அதற்கு மேல் மொத்தமாக மண்ணைக் கொட்டி வைத்திருந்தான். சண்முகம்,கதிர்,கமால் கூட வந்த 3 பேர் என அனைவரும் அந்த மண்ணை அள்ளி ஒரு பக்கமாகப் போட்டனர்.பின்பு குளிக்குள் உட்கார்ந்து கமால் கேபிள் ஜாயிண்டை அடிக்க ஆரம்பித்தார். தமிழில் அதற்கு கண்ணாடி இழைகள் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பிசகினால் உடைந்த கண்ணாடி குத்துவது போலக் குத்திவிடும். அதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதனைச்சரி செய்ய இயலும். கமால் அந்தக் குழிக்குள் உட்கார்ந்து ஜாயிண்ட் அடிக்க ஆரம்பித்திருந்தார்.

நேரம் இரவு 9 மணி ஆகி இருந்தது.வயிறு கப,கப என பசிக்க ஆரம்பித்திருந்தது. வேலை நேரம் என்னவோ மாலை 6 மணி வரைதான். ஆனால் அதிகாரி என்று வந்துவிட்டால்,பொறுப்புகள் தலைக்கு மேலே வந்து குவிந்துகொள்கிறது. சண்முகம் சொன்னதன் அடிப்படையில் இரவு என்று பாராமல் அந்த கேபிள் டீம் வந்திருந்தார்கள்.அவர்களுக்குத் துணையாகப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சண்முகம் கதிரும் நின்று கொண்டு,கேபிள்களை ஜாயிண்ட் அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இரவு பத்து மணிக்கு ஜாயிண்டை அடித்து முடித்திருந்தார் கமால். "சார்,அந்த மில் மேலாளரைக் கூப்பிட்டு ,இணைய இணைப்புக் கிடைக்கிறதா என்று செக் பண்ணச்சொல்லுங்கள்" என்றார் கமால் "இல்லை, நீங்கள் இங்கு இருங்கள்.அந்த மில்லின் மேலாளர் ஏற்கனவே மிகக் கோபமாக இருந்தார்.அவரை டெஸ்ட் பண்ணச்சொல்லி,கிடைக்கவில்லை என்றால் இன்னும் கோபப்படுவார். நானும் கதிரும் நேரே போகிறோம்"  என்று சொல்லி விட்டு மில்லுக்கு வண்டியில் விரைந்தார்கள்.

மேலாளர் முன் அறையில் இருக்க,மில் முதலாளி உள்ளே இருந்தார்.மேலாளிரிடம் சொல்லி,இணையம் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சொன்னபோது,"வாருங்கள் பார்ப்போம்" என்று உள்ளே அழைத்துச்சென்றார். இணைய இணைப்பு கிடைத்தது.உடனே கமாலைக் கூப்பிட்டு "இணைய இணைப்புக் கிடைக்கிறது.குழியை மூடிக்கொண்டிருங்கள். நாங்கள் வந்து விடுகிறோம்" என்று சொன்னபோது ,

"முதலாளி உங்களை அழைக்கிறார் "என்று அந்த மில்லின் மேலாளர் சொல்ல,என்ன சொல்லப்போகிறாரோ,ஒரு 6,7 மணி நேரம் இணைய இணைப்புக் கிடைக்காமல் போய்விட்டதே என்று                      தயங்கியவாறு கதிரும்,சண்முகமும் உள்ளே சென்றனர்.

"உட்காருங்கள் " என்று முதலாளி சொல்ல, "பராவ இல்ல " என்றனர் சண்முகமும் கதிரும். "முதலில் உட்காருங்கள் சார்." என்று முதலாளி மீண்டும் சொல்ல இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். 

"வாங்க சார்.மாலையில் இருந்து நெட் கிடைக்கவில்லை என எங்கள் மேனேஜர் சொன்னார். தனியார் நிறுவனத்திற்கு மாறி விட எங்கள் முதலாளி யோசிப்பார் என்று சொன்னதாகவும் சொன்னார்.கால்கள் கட்டப்பட்ட நீங்கள்,சுதந்திரமாக ஓடுகிற நிறுவனத்தோடு போட்டியிட்டு ஓடுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அரசு நிறுவன அதிகாரிகள் இந்த நேரம்வரை இருந்து பழுது பார்த்து ,இணைப்புக் கொடுப்பது என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு " என்று சொன்னபோது கதிருக்கும் சண்முகத்திற்கும் மாலை முதல் பட்ட துன்பம் எல்லாம் ஓடிப்போனது போல இருந்தது.

5 comments:

advchitradevi said...

பைபர் கேபிள்,இணைய வளர்ச்சி,ஊழியர்கள் சம்பளத்திற்கு அப்பாற்பட்டு ஏற்ற வேலையை நேரம் கடந்தும் கச்சிதமாக முடிப்பது என,அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கதையாக நகர்த்தியிருப்பது அருமை.பாராட்டுகள்

முனைவர். வா.நேரு said...

நன்றி தங்கையே,வருகைக்கும் தங்கள் கருத்திற்கும்

முனைவர். வா.நேரு said...

அருமையான வடிவமைப்பு.இலாக்கா அனுபவம் கதையாக.நன்று.
திரு நடராசன்,பி.எஸ்.என்.எல்.(ஓய்வு),வாட்சப்பில்

V. Elavarasi Sankar said...

தனியார்மயமாக்கல், உழைப்புச் சுரண்டல் மற்றும் அடித்தட்டு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் போன்றவற்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு சவுக்கடி கொடுக்கும் மிக அருமையான சிறுகதை அய்யா இது. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
- வி. இளவரசி சங்கர்

முனைவர். வா.நேரு said...

நன்றி...தங்களின் வாசிப்பிற்கும் மேலான கருத்திற்கும்...