Monday, 27 October 2014

தாத்தாவின் நினைவு நாளில் ....அப்பாவின் கோரிக்கை ..

என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போலவே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பலவீனமாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்களுக்கு வணக்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ....
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !



  • எழுதியவர் : வா.நேரு
  • நாள் : 28-Oct-14, 8:29 am
Nantri: Eluthu.com
எனது தந்தை சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்கள் மறைந்து 43 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரின் நினைவு நாள் இன்று (28.10.2014) . அவர் மறைந்த நாள் 28.10.1971. முதியோர் இல்லம் போய் வந்தவுடன் தோன்றிய நினைவுகளால் எழுந்த கவிதை. .... வா. நேரு 

Friday, 24 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்-பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்
ஆசிரியர்                                        :  பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.
வெளியீடு                                      : செல்லம்மாள் பதிப்பகம் , சென்னை-600 014.
முதல் பதிப்பு                                : ஏப்ரல் -2008, மொத்த பக்கங்கள் 198, விலை ரூ 100.
மதுரை மைய நூலக எண்        :  182120

                                                              புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் 3 ஆண்டுகள் உதவியாளராக உடன் இருந்து , தமிழ் கற்றுக் கொண்டவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த நூலின் ஆசிரியர் பி.எல்.இராசேந்திரன் அவர்கள், சுவை படவும், பல நிகழ்வுகளின் மூலம் புரட்சிக் கவிஞரை முழுமையாக படிப்போர் புரிந்து கொள்ளவும் , அறிந்து கொள்ளவும் இயற்றியுள்ள நூலாக இந்த் நூல் உள்ளது.

                                                          "பாவேந்தர் பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் உடையவர். ஆனால் அவர் ஒரு பலாப்பழம். மேலே முள்ளிருக்கும் , உள்ளே அவ்வளவும் தீங்கனிச்சுளைகள் . அதுபோலவேதான் புரட்சிக் கவிஞர் வாழ்க்கையும் என்று இந்நூலாசிரியர் இந்நூலில் நிறுவியுள்ளார் " என்று அணிந்துரையில் திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           " பாவேந்தர் பாரதிதாசன் மீது அப்படியென்ன அக்கறை உங்களுக்கு ? " என்று யாரேனும் கேட்கக்கூடும். அவர் கறுப்பா? சிவப்பா? குணம் எப்படி ? மனம் எப்படி ? என்றெல்லாம் கூடத் தெரியாத சில அதிமேதாவிகள் ' பாரதிதாசனைப்ப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது ? "...எனக்கேட்டுத் துள்ளிக் குதிப்பதையும், ' அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா ? ' எனக்கேட்டு, பாவேந்தருக்கே தொடர்பில்லாத சில கட்டுக்கதைகளைக்  கற்றறிவாளர் அவைகளிலேயே அவிழ்த்து விடுவதையும் நானே கண்டிருக்கிறேன்; கேள்விப்பட்டும் இருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன்.
                           சம்பந்தமில்லாதவர்களெல்லாம் தனக்குத்தானே சாயம் பூசிக்கொள்ளுகிறபோது , மூன்றாண்டுகளுக்கு மேல் அவர் கோபத்தில் எரிந்து , அன்பில் நனைந்து , பாராட்டுதலில் மகிழ்ந்து குருகுலவாசம் இருந்த நான் , அவரைப் பற்றிய சில உண்மைகளை இந்நூல் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன் " பக்கம் - 6 என்று இந்த நூலின் நோக்கத்தை மிகத்தெளிவாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்திலேயே வரையறைத்து விடுகின்றார். அதற்கேற்ப பட்டுக் கோட்டையில் முதன் முதலாக ,தற்செயலாக புரட்சிக் கவிஞரை சந்தித்தது, திராவிடர் கழகத்துக்காரர்களான விஸ்வநாதன்(செட்டியார்), இளவரியிடம் தெரிவித்தது , வீட்டிலிருந்து புலால் உணவு கொண்டு போய்க் கொடுத்தது என ஆரம்பிக்கும் நிகழ்வுகளை மிகச்சுவையாக படிப்போர் அறிந்து கொள்ளும் விதமாக நூலாசிரியர் விவரித்துள்ளார்.

                                பாவேந்தரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் இந்த நூலில் நூலாசிரியர் விவரித்துள்ளார். அதில் பாவேந்தரின் மாப்பிள்ளையான , வசந்தா அவர்களின் கணவர் மா.தண்டபாணி பற்றியும் , கவிஞரின் மகன் மன்னர்மன்னன் பற்றியும் நிறைய செய்திகளைக் கூறியுள்ளார்.

                                புரட்சிக் கவிஞர் நடத்திய 'குயில் ' இதழ் பற்றியும் அதில் தான் பணியாற்றியது பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். நூலின் க்டைசிப்பகுதியில் 'குயில்' ஏட்டில் வாராவாரம் எழுதியவர்கள் யார் ? யார் என்னும் பட்டியலை கொடுத்துள்ளார். மதுரைக்காரர்கள் நிறையப்பேர் வருகின்றார்கள் அந்தப் பட்டியலில். 'முதல் பத்திரிக்கை ' அனுபவம் 'என்ற தலைப்பின்கீழ் தான் குயிலில் பணியாற்றியதுபற்றியும் , எந்தவித சமரசமும் இல்லாமல் புரட்சிக் கவிஞர் கொள்கைக்காக மட்டுமே அந்த இதழை நடத்தினார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கண்ணதாசன் தன்னைத் தாக்கி எழுதிய பாட்டை , நன்றாக இருக்கிறது என்று ரசித்துவிட்டு, இலக்கணப்பிழையை சுட்டிக்காட்டி, இதனை எழுதிப்போடு என்று  புரட்சிக் கவிஞர் சொன்ன செய்தியைப் பதிந்துள்ளார் நூலாசிரியர் . இதனைப் போல இதழோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் புதுமையாகவும், வியப்பாகவும் உள்ளன.

                           இன்று திருவள்ளுவர் சிலையைக் காண்கின்றோம். எங்கெங்கும் திருவள்ளுவர் படம் காண்கின்றோம். திருவள்ளுவர் படத்தினை ஆக்குவதற்கான புரட்சிக் கவிஞரின் பங்களிப்பையும் , அதனை பெருந்தலைவர் காமராசர் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும் நடைமுறைப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி திருவள்ளுவர் படத்தினை அழுகுற வரைந்த திரு. வேணுகோபல சர்மா அவர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்,' திருவள்ளுவர் படமும் புரட்சிக் கவிஞரும் ' என்னும் தலைப்பில்.

                               புரட்சிக் கவிஞரின் இறுதி நாட்கள் பற்றியும், இறுதி ஊர்வலம் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளார். புரட்சிக் கவிஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபொழுது , கடைசியில் அவரோடு உடன் இருந்தவர் புலவர். ந.இராமநாதன்(கரந்தை) அவர்கள் என்பதையும் , அவர் சொன்ன செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். 1983-84-ஆம் ஆண்டுகளில் பெரியாரியல் பட்டயச்சான்றிதழ் அஞ்சல் வழியில் நான் படித்தபொழுது , அதன் இயக்குநராக அய்யா புலவர் .ந. இராமநாதன் அவ்ர்கள் இருந்தார். தந்தை பெரியார் பற்றியும், புரட்சிக்கவிஞர் பற்றியும் அவர் பாடம் எடுத்த காட்சிகள் இன்றைக்கும் கூட என் மனக்கண் முன்னால் ஆடுகின்றன. அப்படி ஓர் ஈடுபாடு, அப்படி ஒரு பற்றோடு அய்யா புலவர் ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் , புரட்சிக் கவிஞரின் பாடல்கள் பற்றியும் வகுப்புகள் எடுப்பார்.  அய்யா புலவர் ந.இராமநாதனுக்கும்  புரட்சிக்கவிஞருக்கும் இருந்த நெருக்கத்தை, உணர்வை இந்தப் புத்தகத்தின் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார் நூலாசிரியர்.

                                பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் யார் ? யார் என்பதையும், பாரதிதாசனால் தான் கற்றுக்கொண்டதையும் , பொது வாழ்வில் விருதுகள் பல பெற்றுக் கொண்டதையும் நன்றி உணர்ச்சியோடு குறிப்பிடுகின்றார். பாவேந்தர் விருது பெற்றவர்கள், பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள், பாவேந்தர் எழுதிய பல பாடல்கள் எழுவதற்காக எழுந்த சூழல் எனப் பல செய்திகள் புதியதாக உள்ளன .. புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை பற்றி மிகச்சிறப்பாக் எழுதப்பட்டுள்ள நூலாக இந்த நூல் விளங்குகின்றது. 'எனது கவிதைகள்' என்னும் தலைப்பில் இந்த நூலின் ஆசிரியர் பி.எல். இராசேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கவிதைகள் ' அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை ' என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் பாரதியைப் பாடியதுபோல , புரட்சிக் கவிஞரைப் பற்றிப் பி.எல். இராசேந்திரன் பாடியதாக உள்ளன.  புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. 

Wednesday, 22 October 2014

சூரியக் கீற்றுகள்- நூல் அறிமுகம்-சு.கருப்பையா.



முனைவர் வா.நேருவின்   இரண்டாவது கவிதை நூல் இது. வாசிக்கும் பொழுது மனதை வருடும் வார்த்தைகள்ஆனால் எழுதப்பட்டுள்ள இந்த 51 கவிதைகளும்  சமூகத்தில்   நிலவும் மூடநம்பிக்கைகளையும் அவலங்களையும் எதார்த்தமாக இடித்துக் காட்டுகின்றன. கற்பனைகளையும் ,கனவுகளையும் பாலியியல் உணர்வுகளையும் சுமந்து கொண்டு, புரியாத வார்த்தைகளில் வெளிவரும் இக்கால  கவிதைகள் மத்தியில் எளிமையான வார்த்தைகளுடன் சக மனிதனாகப் பேசும் வா.நேருவின் மொழி நம் மனதிற்குள் சட்டென நுழைந்து விடுகின்றன. 

இந்தக் கவிதைகள் அனைத்தும் எழுத்து வலைதளத்தில் வெளிவந்த பொழுது 99 சதவீதமான வாசகர்கள் ( அவரைத் தவிர ) இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற தமது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் தோழர்.பொள்ளாச்சி அபி. ஏனென்றால் நேருவின் கவிதைகளில் மோகத்தைத் தூண்டும் காதல் வார்த்தைகள் இல்லை; வார்த்தை விளையாட்டு இல்லைஅத்தோடு மற்றவர்களால் பாராட்டப்படவேண்டும் என்ற ஏக்கத்திலும் எழுதப் படவில்லை. ஆனால் அனைத்தும் மனதை வலிக்கச் செய்யும் நிதர்சனமான உண்மைகள்.  

இந்தக் கவிதைகள் சமூகநலத்தை நேசிக்கும் மனிதர்களால் மட்டுமே வாசிக்க இயலும் வாசிக்கப்படும் ,விரும்பப்படும் மற்றவர்களால் புறந்தள்ளப்படும் என்று கருதுகிறேன். இப்போது எனக்கு பிடித்த  கவிதைகளின் சில பகுதிகளை மட்டும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை எண் – 1:  “வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட

அய்யா பசியோடிருந்தன
என் குழந்தைகள்
அவர்களின் பசியைப்
பார்த்துக்கொண்டு
வீட்டுக்குள் இருக்க
இயலவில்லை என்னால்
--
எதிர்பார்க்கவில்லை நான்
கத்தியால் வயிற்றில்
குத்துவார்களென
-----
வயிற்றிலிருந்து இரத்தம்
கொட்ட கொட்ட
வாயிலிருந்து அய்யா
பசியோடிருந்தன  என்
குழந்தைகள்---

மதக் கலவரக்காரர்களால் கல்கத்தாவில் கொல்லப்பட்ட காதர் மைதீனின்   வார்த்தைகள் இது. பத்து வயதில் தனது மடியில் உயிரிழந்த  காதர்   மைதீனின்   இந்த வார்த்தைகள் தான் எனக்கு வறுமையின் கொடுமையை  புரிய வைத்து என்னை பொருளாதார மேதையாக்கியது என்று நோபல் பரிசு பெறும்பொழுது மனம் நெகிழ்ந்து கூறினார் அமர்த்தியா சென்.


கவிதை எண் – 4: “ அந்தக்  கிழவி 

அந்த அதிகாலைக்குரல்
தெளிவாகக் கேட்டது
"அம்மாகீரை"
வீட்டின் முன்னே
பார்த்தேன்!
ஊன்றிய தடி
ஒரு புறமும்
கீரைக் கூடையின்மேல்
ஒரு கையுமாய்,
எழுபதைத்  தாண்டிய 
அந்தக்  கிழவி…..

உழைத்து  உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில்  வாழும் அந்த  எழுபது வயதுக் கிழவியைப் போல ,பேனா விற்கும் எண்பது வயது முதியவரையும் கைவினைப் பொருள்கள் விற்கும் பார்வையற்றவர்களும் எனக்குத் தெரியும்.  யாரையும் சார்ந்திராமலும் ,  பிச்சை எடுக்காமலும் வாழும் இவர்களே உண்மையான உழைப்பாளிகள்.

கவிதை எண் – 7: “அன்றொரு நாள் கிடைத்த  

சாதியையும்
மதத்தையும்
நெஞ்சு நிறைய
சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து
வைத்த விருந்தில்
பங்கேற்ற குற்ற உணர்வு
அகல மறுக்கிறது இன்றும்...

சிறிய  வயதில் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவரின் வீட்டில் உணவு அருந்தியதை நினைத்துக் குமுறும் கவிஞரின்  சாதியத்தை சாடும் வரிகள்.

கவிதை எண் – 13: “மார்ச் 8” 

மாதச் சம்பளம்
ஐம்பதினாயிரம்
அவளின் கணக்கில்
ஏ டி எம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்
பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு....!

இந்தக் கவிதையின் மூலம் ,  மார்ச்-8  உலக உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடும்  நாம் பெண்களுக்கு உண்மையான சுதந்திரமும் உரிமையும் இன்னும் கொடுக்கவில்லை என்பதைச் சாடுகிறார் வா.நேரு. 

கவிதை எண் – 16: “பலர் வாழ்வைக் கொள்ளும் நஞ்சாய் 

தொலைக்காட்சி
பெட்டிகளில்
வேறுபட்ட ஆடைகளில்
ஒரே மாதிரி
பொய்களோடு
ஜோதிடர்கள்
.....
ஜோதிடம்
பலர் வாழ்வைக்
கொள்ளும் நஞ்சாய்
சமூக வாழ்வில்
கொசு பரப்பும் நோய்போல
மதம் பரப்பும் நோயாய்..

இன்றைய காலகட்டத்தில் தொலைக் காட்சியில் வரும் தொடர்களும் பரப்பப்படும் ஜோதிடம் ,  அருள் வாக்கு போன்ற மூடநம்பிக்கைகளும் சமூகத்தைப் பிடித்துள்ள நோயாகப் பார்க்கிறார் கவிஞர் . இதை மூளைக்குள் புகுத்தப்பட்ட விலங்குஉடைத்தெறிவது அவ்வளவு எளிதாயில்லை என்று குமைகிறார்.

கவிதை எண் – 21: “நடமாடும் கடவுளாகி விடு 

வாயிலிருந்து லிங்கம் கக்கு!
கையிலிருந்து விபூதி கொட்டு!
முதல்  குடி முதல்
கடைகுடி வரை
காலில் விழ வை
நிறுத்தி நிறுத்தி
இரண்டொரு வார்த்தைகள் பேசு
.......
இந்தியாவில்
எளிதாய் சொத்து சேர்க்க
நீயும் கடவுளாகி விடு
…….
அசைந்து திரிந்த கடவுளின்
அசையா சொத்து
நாற்பதினாயிரம் கோடி.
மதம்ஆன்மிகம் என்ற பெயரில் போலிகள் பணம் பண்ணுவதையும் அவர்களுக்கு அரசு இயந்திரம் பக்க பலமாய் இருப்பதையும்  இந்தக்  கவிதையின் மூலம் நையாண்டி செய்கிறார் கவிஞர் வா.நேரு.கவிஞர் குறிப்பிட்டது போல் புட்டப்பர்த்தி சாயிபாபா காலிலும் காஞ்சி ஆச்சாரியார் கால்களிலும் விழுந்து கிடக்கும் அல்லது கிடந்த அரசியல் வாதிகள் உயர் அதிகாரிகள் எத்தனை பேர்கள்.

கவிதை எண் – 27: “கருகின பயிரைப் பார்த்து 

இக்கவிதையில் கடன் வாங்கி விவசாயம் பார்த்து நொடித்து போகும் ஏழை விவசாயிகளின் ஏமாற்றத்தையும்மனக்குமுறலையும் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக;
செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன்போல
கருகின பயிரைப் பார்த்து
மனதிற்குள் கதறி அழும் வேலை
வட்டிக்கு கடன் கொடுத்த
வட்டிக்காரன் வாரானே!
என்ன செய்ய?”

இந்த ஏழைக் குடியானவனின் அபயக் குரலை மேல்தட்டு வாசகர்கள்  அதிகம் உள்ள  எழுத்து.காம் வலைத்தளத்தில் எழுதிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  முனைவர் நேரு அவர்களை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும். ஆனால் விவசாயம் நொடித்துப் போவதையோ அல்லது  கடனுக்குப்  பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையோ தெரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத மக்கள் வாழும் நாடு இது. கவிதையின் இறுதியில் இப்படி எழுதி இருக்கிறார்;

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற
திட்டம் ஏதுமில்லேஇந்தியாவில்.
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
என்று முடித்திருப்பார். ஆனால் நான் வாசித்த மூலக்கவிதையில் கீழ்காணும் வகையில் இருந்ததாக ஞாபகம்;  
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
                            என்று அழைக்கிறீர்கள்
சாகப் பிறந்தவர்களே
என்று அழையுங்கள்! .....
நூலில் ஏனோ கடைசி வரியை நீக்கி இருக்கிறார் கவிஞர். எனக்கென்னவோ அந்த வரிகளும் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கவிதை எண் – 41: “மாணவனை மறைமுகமாகக் கழுவேற்றி 

இக்கவிதையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும்  படிப்பு என்ற பெயரில் குழந்தைகளை சித்திரவதை செய்யும் கொடுமையை கடுமையாக விமர்சித்துள்ளார். குழந்தைகளை அவர்களின் வழியே சென்று ,அவர்களின் அறிவைத் தூண்டி வளர்ப்பதற்குப் பதிலாக வியாபார நோக்கில் உருவாக்குவது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்;

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை!
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர்கள் எல்லாம் ஜெயித்ததில்லை!
ஜெயித்த பலபேர்
நன்கு படித்ததில்லை!
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல்!

இதே கருத்தில் எனக்கு  முழு உடன்பாடு இருப்பதால்  இந்தக் கவிதை எனக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை தான்.

கவிதை எண் – 42: “சொல் போதும் எனக்கு 

கவிஞர் வா.நேரு ,  இந்தக் கவிதையில் தன்னைப் பற்றிய ஒரு சுயபிம்பத்தை நமக்குத் தந்துள்ளார். அது  ஒரு எளிய மனிதனின் உயர்ந்த எண்ணங்களை நமக்கு உணர்த்துகிறது.

மதிப்புறு முனைவர்
பட்டங்கள்
எனக்கு வேண்டாம்!
---
சாதனையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
"மனிதன் இவன்"
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு!
----
மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவிசும் வேண்டாம் எனக்கு!
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு!

என்ன கவிஞர் இவர்?.  சினிமாவிற்கு பாட்டெழுதி  புகழ் பெற ஆசையில்லாமல் கார்  வாங்க விருப்பமில்லாமல் தலை முழுவதும் தான் உலகப் புகழ் பெற்ற கவிஞன் என்ற தலைக்கனம் இல்லாமல் வாழ ஆசைப்படுகிறார்?


கவிதை எண் – 42: “நிறைந்திருக்கிறாய் அம்மா! 

தனது தாயின் மரணத்தினால் ஏற்ப்பட்ட  சோகத்தை இப்படி பதிவு செய்து தாய்மைக்கு பெருமை சேர்த்துள்ளார்
குடத்திற்குள்
நிறைந்திருக்கும்  நீர்போல
நினைவுகள்  முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!
---
ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையும் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல்
அருகில் இருந்த போதும்
தூரத்தில் இருந்த போதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
செரிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா!

இப்படி தாயன்பை அழகாக கொடுத்துள்ளார்.
இவ்வாறே நூலில் உள்ள மற்ற கவிதைகளிலும் முனைவர்.நேருவின் அனுபவங்களும் பட்டறிவும்   கவிதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் இக்கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டும் மனித வாழ்க்கை சமூகத்திற்கு உரம் போட்டு வளர்க்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் சாதியத்திற்கு எதிரான வலுவான கவிதைகளும் விதவை மறுமணம் காதல்நட்பு பட்டினி வறுமை ஒழிப்பு போன்ற தளங்களைச் சுட்டிக்காட்டும் கவிதைகளையும் முனைவர் வா.நேரு  இன்னும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படைப்புகள் தொடர்ந்து பயணிக்கட்டும்!

-       -சு.கருப்பையா.
Nantri  :http://vasipporkalam.blogspot.in/2014/10/blog-post_22.html
நன்றி : வாசிப்போர் களம் - வலைத்தளம்