Sunday 13 March 2022

ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது....

 ஒரு நூலை எழுதியவனுக்கு மிகச்சிறந்த பரிசு ,அந்த நூலைப் படித்துக் கருத்து கூறுவது. குறை நிறைகளைச்சுட்டிக்காட்டுவது.அதுதான் எழுதுபவனுக்கு கிடைக்கும் சத்து டானிக். அப்படி ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது. அவர் வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.அர்ஷா மனோகரன் அவர்கள்.அவர் .சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதில் அப்படி ஓர் ஆற்றலும் விருப்பமும் உள்ளவர். எனது சிறுகதைத் தொகுப்பு நூலைப் படித்து,ஒரு விரிவான விமர்சனத்தை வாட்சப்பில் பகிர்ந்திருந்தார்.அன்பும் நன்றியும் தோழர் அர்ஷா மனோகரன் அவர்களுக்கு...


நெருப்பினுள் துஞ்சல்

முனைவர் வா.நேரு

எழிலினி பதிப்பகம்

120/-


"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது" 

அட்டைப் படமும் நூலின் தலைப்பும் மேற்கண்ட குறளை நினைவூட்ட நூலுக்குள் நுழைந்தேன். தெருக்கோடி மனிதர்களுக்கிடையே ஊடுருவி அவர் துன்பத்தின் வலி கண்ட  ஓர் உள்ளத்தின் குமுறல்களின் வெளிப்பாடே இச்சிறுகதைத் தொகுப்பு.

முதலாவது சிறுகதை

1.அடி உதவுற மாதிரி......

கிராமத்து வாழ்க்கை முறைகளையும் அங்குள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,  கல்வியைத் தொடர தடை நிற்கும் அகப் புறக் காரணிகள்,  அவற்றைத் தகர்த்து  வெற்றி காணும் சிலர்,  சிக்கி சின்னாபின்னமாகும் சிலர்,  பள்ளி தலைமை ஆசிரியர்களின் மனப்போக்கு அவர்கள் ஏற்படுத்தும்  மிகப்பெரிய மாற்றங்கள்.  கல்வி கற்பதும் கல்விசார் பதவிகளும் அவர்களின் எட்டாக்கனி என்ற எண்ணம்

ஒரு  புறம். அப்போக்கை மாற்றுவதற்குக் கையாளப் படுகின்ற இரு வேறு வகையான யுத்திகள் எது வெற்றி பெறுகிறது என்று மிகச் சிறப்பாக இக்கதை நகர்கிறது. சீரான ஓட்டத்தில் சிறந்த தமிழ் பெயர்களோடு கிராமத்துப் பின்னணியில் உருவான இச்சிறுகதை  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும்  கல்வியைத் தவிர வேறென்ன இருக்க முடியும் என்ற சீர்மிகு கருத்தையும் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்ற உளமார்ந்த ஆசையையும் வெளிப்படுத்துகின்றது.

கிணற்றில் விழுந்து சாகப் போனவனுக்குப் பிடிக்க ஒரு மரக்கிளை கிடைத்தது போல...

கைநிறைய வேப்பம் கொழுந்தை வாயில் விட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவரைப் போல என்ற உவமைகள் கதைமாந்தர்களின் உணர்வுகளை வாசகனுக்குள் மேலும் சிறந்த முறையில் தெளிவாகக் கடத்த உதவுகிறது.

அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கின்ற பழமொழி பொய்த்துப்போனது முத்துவின்

அன்பான அறிவுரைகளால். 

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.  


திருவள்ளுவரின் குறள் மெய்த்துப்  போனதை இக்கதை சொல்கிறது.


2.) சீர் சுமந்து அழிகிற சாதி சனமே....

மிகவும் அருமையான சமூக விழிப்புணர்வோடு கூடிய அற்புதமான படைப்பு. 

மனிதனின் மனநிலையை ஒரு கட்டத்துக்குள் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல எத்தனை மனிதர்கள் இவ்வுலகில் அத்தனை மனங்களால் தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது. 

எதனால் இத்தகைய மனோநிலை என்றெல்லாம் ஒவ்வொருவரையும் யாராலும் கணிக்கவும் அல்லது வரையறுக்கவும் முடியாது ஒவ்வொருவரின் திட்டமிடலும் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப அனுபவத்திற்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு மொய் பணமும் பெரும்பங்கு கிராமங்களில் வகிக்கிறது என்பது நகர்ப்புற வாசிகளுக்கு புதிய செய்தியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் ஒரு பொது பழக்கத்தின் கீழ் நலன் பெறுவதும் அது சரியாகப் பயன்படுத்துவதும் அவரவர் சாமர்த்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக குடும்ப விழாக்கள் அதீத பொருள் விரயத்தோடு நடத்தப்படுவதை நான் விரும்புவதில்லை. ஆடம்பரத்தையும் தாண்டி பொறுப்புணர்ச்சி இல்லாத தனம் என்பதுதான் எனது பார்வை. 

மொய் பணம் உயிர் பறிக்கும் விஷம் நிறைந்தது என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதாக அமைந்திருக்கிறது.


நூலாசிரியரின் சமூகத்தின் மீதான அதீத அக்கறையும் இச்சமூகம் உழன்று கொண்டிருக்கும் சில தவறான பழக்கவழக்கங்களையும் மனக் குமுறலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


3 தீவிர சிகிச்சைப் பிரிவு

"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்

 எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"

என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.

 எழுத்தாளர் வாசகனின் மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும்  நம்பிக்கைகளுக்கும்  அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி  வாசகனின்  சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து   அனுப்பி வைக்கிறார். 


கதையின் நாயகன் முத்து...கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான். 


தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும்,  முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது  ஒரு குடும்பத்தின் கண்ணீர்

 குறிப்பிட்ட நபரின்  குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும்  தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.

 எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க  சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது. 

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.

எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.

மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.

ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச்  சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை? 

வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில்  குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை. கடைசியில் கைவிட்ட கடவுள்கள் என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது.  பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும்  உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால்  நிர்ணயம் செய்யப் படக்கூடாது. 

வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும்  செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.

மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு? 

இப்படி  மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத்  திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி  தவிக்கிறது. 

ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை. 

 ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது.    கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே. அருமையான வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை. 

4.முட்டுச்சுவர்.

பல நேரங்களில் செய்தி தலைப்புகள் நம்மை நாள் முழுவதும் வலி நிறைந்த மனநிலையிலிருந்து நகர விடுவதில்லை. பிரேக்கிங் செய்தி என்ற தலைப்பு செய்தியும் அதோடு சேர்ந்து ஒலிக்கின்ற பின்னணி இசையும் அப்பப்பா ஒரு கணம் இதயத்துடிப்பை நின்றுவிடச் செய்யவோ அதிகரிக்கவும் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

அப்படித் திணறவைக்கும் செய்திகளில் முதன்மையானது பள்ளி மாணவர்களின் தற்கொலை செய்திகள். பல காரணங்கள் இருக்கலாம் அவற்றைத் தனித்தனியாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.  ஆனால் மாணவர்களின் மன உளைச்சல் பிரதான காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று மன உளைச்சலுக்கு யார் காரணம்?  என்ற கேள்விக்கு இருவரைச் சுட்டிக்காட்ட முடிகிறது ஒன்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். 

உலகம் முழுவதும் தற்கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் தான் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது என்பது கசப்பான உண்மை. 

தன்னால் நிறைவு செய்ய முடியாத ஆசைகளை தன் குழந்தைகள் மூலம் நிறைவு செய்து கொள்ளத் துடிக்கும் பெற்றோர்கள் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதும் பள்ளியின் நற்பெயரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு நூறு சதவிகித தேர்ச்சியும் புள்ளிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களும் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் ஆகின்றார்கள். 

மாணவர்கள் தமது குடும்பச் சூழல் எதிர்காலம் குறித்த சரியான புரிதல் தனக்கான சரியான கல்வி எது என்ற விழிப்புணர்வோடு  தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியது தலையாய கடமை. 

இவற்றையெல்லாம் உணர வைக்கின்ற இக்கதை தளம் கதைமாந்தர்கள் அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அரசு போன்றோரின் காத்திரமான பாத்திரப் படைப்பும் கதைக்கு மெருகூட்டுகிறது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கதை. 

சாதாரணமாக உங்கள் கதை வாசிப்பு அரசு மட்டுமல்ல வாசிப்பவர்களை உறங்க விடாமல் கொள்ளும்.

5. இட்லி மாவு....

கதையின் தலைப்பு நம்மைக் கதைக்குள்  வேகமாக இழுத்துச் செல்ல ,  அன்றாடம் நமைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கோர்வையாகத் தொடுத்து அவற்றை சமூக நலனோடு சொல்வதைத் தவிர்த்து எழுத்தாளருக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை என்பது புலனாகிறது. 

மிகச்சிறிய கதைக்குள் குறைந்தளவு கதாபாத்திரங்களைக் கொண்டு பாட்டாளிகளின் அன்றாடம் பிழைப்பு அதனுள் இருக்கக்கூடிய  வெற்றிக்கான ரகசிய வழிகளையும் அவர்களது  வலிகளையும்  உரக்கப் பேசுகிறது இட்லி மாவு.

இதுவரை சாதாரண இட்லி மாவு கடை என்று கடந்து சென்ற நாம் இக் கதையைப் படித்த பின் கண்டிப்பாக ஒரு நிமிடம் நின்று கடையைபார்த்துவிட்டுத்தான் செல்வோம்.  என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

போட்டியில்லாத வியாபாரத்தில் தரம் கிடைக்காது அதேபோல்

நல்ல வாடிக்கையாளரே சிறந்த  விளம்பரதாரர் என்ற அடிப்படை புரிந்துவிட்டால் அத்தனை தொழிலும் வெற்றித் தொழிலே. கதைக்கு மெருகூட்டும் கருத்துக்கள்.


6.உடையார் முன் இல்லார் போல்.....

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்."

என்ற குறள் சொல்லும் பொருளே இக்கதை. 

இந்த சமூகத்தில் குணசேகரன் போன்றவர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாகவும் கோயெல்  போன்ற குழந்தைகள் தான் பொறுப்புணர்ச்சியோடு மாணவப் பருவத்தை முறையாகக் கற்கையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி  கசடற கற்று இச்சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் கதையாசிரியர் வாசகன் மனதில் கடத்தி விடுவதன் மூலம் இச்சிறுகதை பள்ளி மாணவர்களுக்குச் சொல்லவேண்டிய முக்கிய செய்தி நிறைந்த கதை என்று உணர முடிகிறது..


7. எங்களுக்குத் தேவை என்றால்.....

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே படித்து முடித்த சிறுகதை. 

மாசறுபொன் அழகிய தமிழ்ப் பெயர். இப் பெயரை இரண்டாவது கதையில் பாரக்கிறேன்.  குழந்தைகளிடம் திணிக்கப்படும் பல்வேறு இனிப்புகளில் ஜாதியும் மதமும் பிரதானமானது. மதத்தையாவது மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது,  சாதிக்கு அதுவுமில்லை. அந்த அளவிற்கு மதத்தை விடச் சாதி பெரியது என்று நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 

தனக்குச் சுமையாக இருந்த சுமையிலிருந்து விடுபட்டு, தனது குழந்தைக்கு அச்சுமையைத் தராமல் இருந்திருப்பாள் என்று பார்த்தால்,  அவளது மகள் மேடையில் பேசுவதை வைத்து மாசறு பொன் தன் குழந்தைக்குள்  எந்த மதத்தைத் திணித்தாளோ   தெரியவில்லை எதுவாக இருந்தாலும் தெரிவு அவள் மகள் உடையதாக இருக்கும் பட்சத்தில் புதிய தலைமுறை புதிய பாதையில் செல்கிறது என்று திருப்தி கொள்ளலாம்.

8.தீதும் நன்றும்.. 

மிக அழகான சித்தரிப்புகள் ஓரளவிற்கு மதுரையை செலவின்றி சுற்றி பார்க்க முடிந்தது.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற அர்த்தத்தில் முடிகிறது கதை. 

 அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறது கதை. நாசுக்காய் பட்டும்படாமலும் சில இடங்களில் மட்டும் சில ஆழமான நுட்பமாக பேசப்பட வேண்டிய கருத்துக்களை எழுத்தாளர் கையாள்வதில் சற்று குறை இந்த கதையில். சமூக அக்கறையில் அறிவுரைகள் அவசியமானவைதான் ஆனால் மிதமிஞ்சி போகும்போது அவை சலிப்படைய கூடியவை என்பது எழுத்தாளர் கவனத்திற்கு..


9.யார் யார் வாய்க் கேட்பினும்

இந்த கதை எனக்கு மிகவும் மனதை நெருடிய வலிக்கச் செய்த கதை என்பேன். 

இந்தியச் சமுதாயத்தில் இவையெல்லாம் அத்தனை சீக்கிரம் மாறக்கூடியவை அல்ல புதிது புதிதாக சில இணை பழக்கவழக்கங்களும் தொலைக்காட்சி தொடரும் திரைப்படமும் பட்டிதொட்டி வரை பரப்பிக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் ஆரம்பித்த எத்தனையோ புதிய புதிய கொண்டாட்ட நாட்களை நாம் பார்க்க முடிகிறது.

அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பும் நம்பிக்கை என்ற பெயரில் எவ்விதமான ஆதாரமற்ற இதுபோன்ற நம்பிக்கைகளில் மனிதன் இன்னும் உழன்று கொண்டிருப்பது உதவாக்கரையான போக்கை மட்டுமே உணர்த்துகிறது.

செல்வியின் தற்கொலையை ஒத்த தோழி ஒருவரின் தற்கொலையை கண்முன்னே பார்த்தவள் நான். அந்த நிஜக் கதைக்கும் இந்த சிறுகதைக்கும் எந்த வேறுபாடும் இருக்க வில்லை, பெயரைத் தவிர.  எனக்குள் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. 

 யார் யார் வாய்க் கேட்பினும்..

சமூகத்தின் அத்தனை இழி நிலைகளையும் எழுத்துக்குள் கொண்டுவந்த எழுத்தாளருக்கு எனது சல்யூட்.


நெருப்பினுள் துஞ்சல்

தலைப்பு ஓரளவிற்கு நமக்கு கதையின் வலியை உணர்த்தி விடுகிறது. முதலில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதனால் மட்டுமே நான் கதை என்ற வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்.  நூலுக்குள் எந்த கதையும் இல்லை எல்லாமே நிகழ்வுகளின் சித்தரிப்புகளே.  நூலாசிரியர் தன்னைச்சுற்றி கண்ட பேருண்மைகளை தன்னால் இயன்றவரை பொருத்தமான உரையாடல்கள் காட்சி அமைப்புகளோடு கதைகளாக நம்மிடம் திருப்பி தந்திருக்கிறார்.

 இவை அனைத்தும் இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது இவை அனைத்தும் நம்மை பற்றியது  நம் சக நண்பர்களை நம் உறவுகளை பற்றியது ஏதோ ஒரு தவறை நாம் எல்லோரும் செய்து கொண்டே இருக்கிறோம் அது ஒருவேளை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்டும் காணாமல் இருக்கின்ற தவறாக கூட இருக்கலாம். 

இந்த வாழ்க்கையில் ஒருவரின் ஆடம்பரம் இன்னொருவனின் அத்தியாவசியம்.  ஒருவனின் பொழுதுபோக்கு இன்னொருவனின் தொழில். ஒருவனின் தேவை முடிவடையும் போது மற்றவனுக்கு தேவை ஆரம்பிக்கிறது எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இத்தனை வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து  சமநிலை பெற வேண்டும் என்பது அத்தனை சீக்கிரம் நடந்து விடக்கூடிய ஒன்றா என்ன இருப்பினும் அரசு தம்மால் இயன்ற அளவு தம் மக்களை காப்பாற்றுவதற்காக அமுல்படுத்தும் சில பயனளிக்கும் திட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு. 

 இந்நூல் வாசித்துவிட்டு பின்னர் நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள் அதற்கு ஏதேனும் ஒரு சிறு துளி பங்களிப்பை செய்து சமுதாயத்தின்  வளர்ச்சியில் நூல் அளவு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது . இன்னும் பலநூறு கேள்விகளை உள்ளுக்குள் கேட்ககறது. 

பல்வேறு பொருத்தமான  திருக்குறள்களையே கதைக்குத் தலைப்பாகவும் சிறந்த நூல்களையும் கதைகளுக்கு இடையில் சுட்டிக்காட்டி அவையும் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருப்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். 


மீண்டும் மீண்டும் கதைகள் முழுவதும் வலியுறுத்தப்படுவது விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வி அறிவு என்பது இன்றியமையாதொன்று என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கான வாழ்க்கைப் படிகளில் அரசும் தன் பார்வையை செலுத்த வேண்டும்.  இந்தப் படைப்பு பலரையும் சென்றடைய வேண்டும், எழுத்தாளரின் எண்ணம் நிறைவடையும் வரை. 


அன்பும் பாராட்டுகளும்.

No comments: