அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்
ஆசிரியர் : சரத்சந்திரர் தமிழில் ஆர்.சி.சம்பத்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)
லிட்,
சென்னை-98,
044-26241288
முதல் பதிப்பு : செப்டம்பர் 2014,மொத்தப் பக்கம்
62
விலை ரூ 55
மதுரை மாவட்ட மைய நூலக எண் 215637
மொத்தம் 5 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். : சரத்சந்திரர்
ஒரு நூறாண்டுக்கு முன்னால் எழுதி மறைந்தவர்.அழியாத கதைகளை அளித்ததால் வாசிப்பவர்களின்
மனதில் என்றும் நிற்பவர்.’தேவதாஸ் ‘போன்ற
அழியாப் புகழ் நாவல்களை அளித்தவர். பின்னர் திரைப்படமாகவும் வந்து எல்லோரையும் ‘ஓ தேவதாஸ்’
என்னும் பாட்டை முணுமுணுக்க வைத்த கதைக்கு சொந்தக்காரர். இந்தத் தொகுப்பில் உள்ள 5
கதைகளும்(காளிதேவிக்கு பலி,வந்தார் குருதேவர்,ஐயாவை யாருன்னு நினைச்சே?, பிள்ளை பிடிக்கிறவன்,அது
ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னே) இப்போது வாசிப்பதற்கும் மிகவும் ஈர்ப்பாகவும் விறுவிறுப்பாகவும்
இருப்பது சிறப்பாக உள்ளது.
காளிதேவிக்கு பலி என்னும் சிறுகதை
‘லல்லு’ என்பவரைப் பற்றி பேசுகிறது. நமக்கு பீகாரின் லல்லு பிரசாத் அவர்களைத் தெரியும்.நகைச்சுவையாக
பாராளுமன்றத்தில் பேசி பிஜேபிக்காரர்களை ஓடவிட்டவர்.’லால் ‘என்றால் செல்லமானவன்,பிரியமானவன்
என்னும் பொருளாம்.தேவி பூஜைக்கு ஆடு வெட்டுகிறவர் வரவில்லை. லல்லுவைக் கூப்பிடுகிறார்கள்.இளைஞனான
லல்லு வர மறுக்கிறான்.அவனது அப்பா வற்புறுத்த ,சென்று விருப்பம் இல்லாமல் பூஜைக்கு
ஆட்டை வெட்டுகிறான்.ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு ,அடுத்த பலி எங்கே என்று சாமி
வந்தவன் போல கேட்க ,இல்லை என்று சொல்ல புரோகிதரைப் பலி கொடுக்க வா என்று சொல்கிறான்.புரோகிதர் பயந்து ஓடுகின்றார். இன்னும் சிலரும் பயந்து ஓடுகின்றார்கள்.இந்தக் கதையைப் படித்துவிட்டு
நன்றாக வாய்விட்டுச்சிரிக்கலாம்.இதில் உள்ள எல்லாக் கதைகளுமே நமக்கு சிரிப்பை வரவழைக்கும் கதைகளாகவே இருக்கின்றன்.வீட்டிற்கு
வந்த குருதேவரை, லல்லு கவனிக்கும் கவனிப்பு அடுத்த கதை. நல்ல நகைச்சுவை.
இந்த 5 கதைகளின் வழியாக அன்றைய
வங்காளத்தையும், அன்று மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும் கண்டு கொள்ளமுடிகிறது.நயன்
என்னும் கதாபாத்திரம் அது ஒரு ஐம்பது வருஷத்திற்கு முன்பு என்னும் கதையில் வருகின்றது.அதில்
வரும் ஒரு உரையாடலை அப்படியே தருகிறேன்
“ அன்றிலிருந்து அவன் முழுமையான
வைஷ்ணவனாகி விட்டான்.
நயன் தரையில் சிரம் வைத்து என்
பாட்டிக்கு நமஸ்காரம் செய்வான்.
அவள் பிராமண விதவை.அதனால் நயனைத்
தீண்டக்கூடாது.எனவே,அவன் ஏதாவது தழைக் கொத்துகளைப் பறித்துக்கொண்டு வந்து அவள் பாதத்தருகே
வைப்பான்.பாட்டி அதைத் தன் பாதங்களால் தீண்டுவாள்.
அவன் அந்தத் தழைகளைத் தலைமீது
வைத்துக்கொண்டு “அம்மா ! என்னை ஆசிர்வதியுங்கள்.இந்தத் தடவை நான் இறந்தால் மீண்டும்
உயர்ந்த குலத்தில் பிறக்கவேண்டும் என்று ஆசியளியுங்கள்.அதனால் நான் என் கைகளினாலேயே
உங்கள் பாத துளியை எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கட்டும் “ என்பான்.
பாட்டியும் அன்புடன் சிரித்துக்கொண்டே
“ நயன்,என் ஆசிர்வாதத்தால் அடுத்த ஜென்மத்தில் நீ பிராமணனாகவே பிறப்பாய்,போ!” என்பாள்.
நயன் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும்.”
அந்தக் கால நிலைமை.ஆசிர்வாதம் பண்ணக் கூடக் கால்களில் விழுந்துவிடக்கூடாது.தீட்டுப்பட்டு
விடும். சாதி என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் புகுத்தப்பட்டது என்று உளறிக்கொட்டும்
சனாதன ஆளுநர் ‘இரவிக்கு ‘ இந்தக் கதையை யாராவது படித்துக்காட்ட வேண்டும்.
ஒரு கதை என்பது நகைச்சுவையும்
எதார்த்தமும் கலந்து எழுதப்படும்போது எந்தக்
காலத்திலும் வாசிக்க ஈர்ப்பாக இருக்கும் என்பதற்கு இந்தச்சிறுகதைத் தொகுதி எடுத்துக்காட்டு.அந்தக்
காலகட்டத்தில் நடந்த காலரா இறப்புகள்,மூட நம்பிக்கை குருதேவர்கள் நடமாட்டம்,சடங்குகள்
மூலம் வழிப்பறி செய்பவர்கள் போலவே இருட்டில் சாலையில் செல்பவர்களைக் கொன்று கொள்ளையடிக்கும்
கும்பல் என்று பல செய்திகளைச்சொல்லும் சிறுகதைகளாக இந்தக் கதைகள் இருக்கின்றன.வாசித்துப்பார்க்கலாம்.
வாய்விட்டுச்சிரிக்கலாம்.அக்கால நிலைமைக்கும் இக்கால நிலைமைக்குமான வேறுபாட்டை சிந்தித்துப்பார்க்கலாம்.
2 comments:
நமக்கு முந்தைய காலகட்டங்களை வரலாற்றுக் கட்டுரைகளாக எழுதுவதைக் காட்டிலும் நகைச்சுவையில் குழைத்துக் கொடுக்கும் கதைகள் வழியாக இளைஞர்களுக்கு எளிதில் எடுத்துச் சொல்லி விட முடியும் என்றும் அதற்கான புத்தகமாகவும் இதை எடுத்துக் காட்டியமை சிறப்பு!
ஆமாங்க அம்மா..நன்றி.
Post a Comment