Monday, 30 October 2023

பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி ' சிறுகதை- நன்செய் வெளியீடு

மதுரையில் இந்த வருடம்(2023) அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை  நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் அதிக நேரம்,அதிக நாட்கள் செலவழிக்க முடிந்தது. முதல் நாளே எனது மகள் சொ.நே.அறிவுமதி,அவரின் லேடி டோக் கல்லூரியின் சார்பாக 'இலக்கியங்களில் மதுரை ' என்னும் தலைப்பில் பேசினார். மதுரை மாவட்டத்தலைவர் அவர்கள் நேரில்,அறிவுமதியைப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.

நிறைய கடைகளில் நிறையப் புத்தகம் வாங்கினாலும், நன்செய் பதிப்பகத்தில் தோழர் தம்பியை நேரில் சந்தித்து வாங்கிய புத்தகம் குறிப்பிடத்தக்கது.அவரைச்சந்தித்தவுடன், 'தோழர் புத்தகங்கள் குறித்து நிறையப் பேசியிருக்கிறோம்.ஆனால் நேரில் சந்திப்பது இப்போதுதான்.சந்திப்பதில் மகிழ்ச்சி"  என்றார். ஆமாம்,'பெண் ஏன் அடிமையானாள் ' புத்தகத்தை திராவிடர் கழகத்தின்  அனுமதியைப் பெற்று, மலிவுப்பதிப்பாக அச்சிட்டு,இலட்சக்கணக்கான புத்தகங்களை விற்றவர். தொடர்ந்து பல புத்தகங்களை அவ்வாறு மலிவுப்பதிப்பில் கொண்டு வருகின்றார்.

அவரது வெளியீடுகாளில்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய 'மரி என்னும் ஆட்டுக்குட்டி ' சிறுகதை மட்டும் தனிப் புத்தகமாக இருந்தது. ஏற்கனவே படித்த கதை.தொகுப்பில் உள்ள கதையை மட்டும் ஏன் தனியாக வெளியிட்டு இருக்கிறார் என்று திருப்பி திருப்பிப் பார்த்தேன். எத்தனை புத்தகம் வேண்டும் தோழர் என்றார்?. விலையைப் பார்த்தேன்.வெறும் 5 ரூபாய். தோழர் இரண்டு புத்தகங்கள் கொடுங்கள் என்று சொல்லி இரண்டு புத்தகம் வாங்கி வந்தேன்.

வீட்டில் வந்து தனியாக மீண்டும் அந்தக் கதையைப் படித்தபொழுது, மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி,அவ்வளவு மகிழ்ச்சி. அங்குலம் அங்குலமாக இரசிப்பது எனச்சொல்வார்களே அப்படி பிரபஞ்சனை இரசித்து இரசித்துப் படிக்கவேண்டும்.அதற்கு இப்படிப்பட்ட ஒரு தனிக் கதை வெளியீடு பயன்படும் எனத்தோன்றியது.

ஒரு இடத்தில் அந்தக் கதையில் பிரபஞ்சன்," அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி,மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி,ஓடைக்கூழாங்கல் மாதிரி'வெளிப்பட்டால் மரி " என்று எழுதியிருந்தார்.சாலை ஓரத்து மரம் நிரம்ப நேரம் யோசிக்க வைத்தது.அதைப்போல ' நீயும் கெட்டவள் இல்லை,உங்க அம்மாவும் ,அப்பாவும் கெட்டவள் இல்லை" எனும் உரையாடலும் அதற்கு முந்தைய பிந்தைய சில வரிகளும் மிகவும் யோசிக்க வைத்தது.

"கற்கிற வயதில் வழி தவறுகிற ஒரு மாணவியோடு ஓர் ஆசிரியர் நடத்தும் கனிவு மிகுந்த உரையாடலையும் அது அம்மாணவிக்குள் நிகழ்த்தும் மாற்றத்தையும் பேசும் இக்கதை ,இன்று பள்ளிகளில் மாணவர்களின் நடத்தைகள் காணொலிகளாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகும் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்த்ததாகிறது.

உரையாடல்கள் வற்றிப்போய் மனங்கள் பாலையாகிவிட்ட சமூகச்சூழலில் பிரபஞ்சன் நீட்டும் நேசத்தின் பிடி பூங்கொத்தே இச்சிறுகதை " என்று நன்செய் பதிப்பகத்தார் பின் அட்டையில் அச்சிட்டு இருக்கிறார்கள்.

ஆகச்சிறந்த கதை.ரூ 5 க்கு இக்காலத்தில். இந்தக் கதையைப் படிக்காதவர்கள் கட்டாயம் வாங்கிப் படித்துப்பாருங்கள். கதையின் ஆரம்பித்தில் தலைமை ஆசிரியரோடு நடத்தும் உரையாடலாக இருக்கட்டும், கதையின் ஓட்டமாக இருக்கட்டும்,எழுத விரும்பும் எவருக்கும் பாடமாக இருக்கும் கதை. வாசிப்பவரின் வாழ்க்கைக்கும் பாடமாக அமையக்கூடும்.

1 comment:

Anonymous said...

சிறப்பு தோழர்...உங்கள் கருத்தீடு வாசிக்க தூண்டுகிறது