Saturday 10 February 2024

நிகழ்வும் நினைப்பும்-2024 -1

 

 நிகழ்வும் நினைப்பும்-2024 -1

நேற்று வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்.மகள் சொ.நே.அறிவுமதி  

திருநெல்வேலி தனித் தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட பேரா.ஆறு.அழகப்பன் அவர்களின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். கட்டுரைப் போட்டி,பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசளிப்பு விழா நேற்று((10.02.2024) பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நானும்,என் இணையர் சொர்ணமும், என மகள் சொ.நே.அறிவுமதியோடு கலந்து கொண்டோம்.பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் இருக்கும் என் இணையரின் தங்கை பிரியா பெருமாள்,அவரது இணையர் தம்பி பெருமாள்,அவர்களது மகள் சுவேதா,தம்பி பெருமாளின் அப்பா தொண்டர் ஜவஹர் என உறவுகளும் கலந்து கொண்ட விழாவாக இந்த விழா அமைந்தது.

1993-ஆம் நடந்த எங்கள் திருமணத்தில் எனது அருகில்  திரு.பாப்பையா சார் அவர்கள்..அவரோடு கோட்டப்பொறியாளர்கள் திரு.அய்யனார்,திரு.வேலப்ப தேசிகர் அவர்கள்.இருவருக்கும் நடுவில் இருக்கும் தோழர் பெயர் மறந்துவிட்டது.


அறிவுமதியின் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரிக்கு வெள்ளிச்சுழற்கோப்பையும்,அறிவுமதிக்கு ஒரு பவுன் தங்கத்தில் பதக்கமும் அளித்துப் பாராட்டினார்கள்.நிகழ்வில் கலந்து கொண்டபோது இனிய அதிர்ச்சியாக எங்களது தொலைத்தொடர்புத்துறையில் மதுரையில் கோட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற திரு.பாப்பையா சார் அவர்கள் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ,அவர் காலத்தில் நான் மனமகிழ் மன்றப் பொறுப்பாளராக இருந்து நடத்திய இலக்கியப்போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டு அதில் இணைந்து பணியாற்றினோம் என்றார். ஆமாம்,1992-1994 காலக் கட்டம்,மதுரை கீழமாசி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட சுவைமிகுந்த அனுபங்கள் நினைவுக்கு வந்தன.அவர்தான் இந்த வருடம் புரவலர் .ஏறத்தாழ ரூ 60000  நன்கொடையாக இந்தத் தங்கப்பதக்கத்திற்கும் ,பரிசுகளுக்கும் அவர் கொடுத்திருக்கிறார் என வரவேற்புரையில்  குறிப்பிட்டார்கள்.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எனக்குத் திருமணம் நடைபெற்றபொழுது,வந்து வாழ்த்தி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் திரு.பாப்பையா சார் அவர்கள்.எனது திருமணப்பத்திரிக்கையை அவரிடம் கொடுத்தபொழுது,என்னிடம் பெற்றுக்கொண்டு அவர் பாராட்டியது எல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.அவரிடம் என் மகள் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்த்து.அவரும் உரையில் பாராட்டி மகிழ்ந்தார்.

எனக்கும் மகளுக்கும் நடுவில் திரு.பாப்பையா சார் அவர்கள்.

எங்களோடு நண்பர் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் லீ.சுரேசு அவர்களும் கலந்து கொண்டார்.அய்யா தமிழ் அறிஞர் பேரா.வளன் அரசு அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள்.அய்யா ஆறு.அழகப்பன் அவர்களைப் பற்றிய பல்வேறு சிறப்புகளைக் குறிப்பிட்டார்கள்.உண்மையிலேயே மனதிற்கு மிக இன்பம் பயத்த நிகழ்வு.தொடர்ச்சியாக 1937-ல் இருந்த இந்தப் போட்டிகளும் தங்கப்பதக்கம் அளிக்கும் பரிசுகளும் தொடர்கின்றன என்று குறிப்பிட்டார்கள்.இதில் வெற்றி பெற்றவர்கள் வலம்புரி ஜான்,இளம்பிறை மணிமாறன் போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் பேரா.யா.மணிகண்டன் போன்ற கட்டுரையாளர்கள் எல்லாம் பல்வேறு ஊர்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்று தனது உரையில் நன்றி உரையாற்றிய முனைவர் திருக்குறள் இரா.முருகன் அவர்கள் குறிப்பிட்டார்.வரவேற்புரையாற்றிய  நல்லாசிரியர் திரு.க.ஞா.சாண்பீற்றர் அவர்கள்         இந்தப்போட்டிகளின் பல்வேறு சிறப்புகளைப் பற்றியும் அய்யா வளன் அரசு அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.ஏற்கனவே கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியில் மகள் அறிவுமதி 2020-ஆம் ஆண்டுக் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கினார்.இது இரண்டாவது முறை என்றாலும் ‘தன் மகனை/ மகளைச் சான்றோர் ‘ எனக் கேட்டு மகிழ்வது இனிது,இனிதிலும் இனிதாய் இனித்த்து.



தமிழில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ,இதைப்போன்ற ஆய்வுக்கட்டுரைப் போட்டிகள்,பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு எங்கள் மகள் அறிவுமதி வெற்றிப் பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் அறிவுமதி படிக்கும் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி.அதன் தமிழ்த்துறைத் தலைவர் அம்மா பேரா.கவிதாராணி அவர்களும் அத்துறைப் பேராசிரியர்களும் மிகச்சரியாக அறிவுமதிக்கு வழி காட்டுகிறார்கள்.பயிற்சி கொடுக்கிறார்கள்.ஊக்கப்படுத்துகிறார்கள்.இன்னொரு பெற்றோராய் அவர்கள் காட்டும் அன்பும் ஊக்குவிப்பும் அறிவுமதிக்கு மிகப்பெரும் உற்சாகப்பானம்.அந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும் தமிழ்த்துறைக்கும்,அதன் தலைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் இந்த நேரத்தில்…

அறிவுமதி,தன்னுடைய அம்மாவைப் பெற்ற பாட்டி,திருமதி கமலவேணி சங்கரலிங்கம் அவர்களிடம்  தான் பெற்ற கோப்பையை,பதக்கத்தைக் காட்டி மகிழ்ந்த நேரம்.

13 comments:

ரமா முத்துக்குமார் said...

Sir
திருநெல்வேலி தமிழ் இலக்கிய கழகத்தின் பரிசு பெற்று வெற்றி வாகை சூடிய நம் பாப்பா அறிவுமதி க்கு எங்கள் பாராட்டுக்கள்.
எதிர்காலத்தில் இன்னும் இன்னும் பல பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டுகளும் பெற்று புகழ் உலகெங்கும் விரிந்து பரவ எங்கள் வாழ்த்துக்கள். 👌👍👏💐

அன்புடன்
ரமா & முத்துக்குமார்

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மேடம். நாமெல்லாம் தொலைதொடர்புத்துறைக் குடும்பத்து உறுப்பினரகள் என்ற முறையில் தங்கள் வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது....

Anonymous said...

வாழ்த்துகள் பாப்பா வுக்கு நன்றி🙏💕

முனைவர். வா.நேரு said...

நன்றி..கருத்துக் கூறுபவர்கள் கீழேயே தங்கள் பெயரையும் இணைத்து கருத்துப்போட்டு விடலாம்.மேலே Anonymous என்றே வருகிறது,மின் அஞ்சலில் வந்தாலும்..

Anonymous said...

நிறைவான பதிவு. வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்.

Anonymous said...

பின்னூட்டம் ஓவியா

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்.இத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் படித்து கருத்து இட்டமைக்கு...

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள் பல அறிவுமதிக்கு!

முனைவர். வா.நேரு said...

நன்றியும் மகிழ்ச்சியும்.

Anonymous said...

உண்மையிலேயே பெருமை மிகு தருணம். மகள் அறிவு மதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்- ரெஜினா சந்திரா.

சு.கருப்பையா said...

எழுத்தாளர் அறிவுமதிக்கு வாழ்த்துகள். அவர் +2 படித்து முடித்ததும் , மேற்படிப்பிற்கு தமிழைத் தேர்ந்தெடுத்தார். நேருவிற்கு அவர் பொறியியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. வருத்தமுடன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, அவரை சமாதனப்படுத்தி , அறிவுமதியை தமிழ் பட்டப்படிப்பில் சேர்க்குமாறும், விரும்பிப் படித்தால் , அதில் சிறப்பாக வருவார் என்று ஆலோசனை கூறியது என் நினைவிற்கு வருகிறது. தம்பி நேருவிற்கு இப்போது மகிழ்ச்சி இருக்கும். நேருவின் இனிய குடும்பத்திற்கு வாழ்த்துகள்.

முனைவர். வா.நேரு said...

உண்மையிலேயே பெருமை மிகு தருணம். மகள் அறிவு மதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்- ரெஜினா சந்திரா.
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மேடம்...

முனைவர். வா.நேரு said...

@சு.கருப்பையா said
இல்லைங்க அண்ணே, நான் அறிவுமதியை பொறியியலில் சேர்க்கவேண்டும் எப்போதும் நினைக்கவில்லை.குடும்பத்தினர் சேர்ந்து ஏற்கனவே பொறியியல் வேண்டாம் என முடிவு செய்திருந்தோம்.அறிவுமதி தமிழ் படிக்கவேண்டும் என்று சொன்னவுடன் மகிழ்ச்சியாக சரி என்றோம்.என்னோடு வேலை பார்த்த சிலர் ,தமிழ் என்றவுடன் வேண்டாம் என்று சொல்லி ,"நீங்கள் ஏன் இப்படிச்செய்கிறீர்கள்,உங்களுக்குத் தமிழ் பிடிக்கும் என்பதற்காக" என்று சொன்னதை உங்களிடம் சொன்னபோது,அதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்,தமிழில் படிப்பது நல்லது,உங்கள் முடிவு நல்ல முடிவு என்று சொன்னீர்கள்.வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே,மகிழ்ச்சி.