Saturday, 3 January 2026

பொலிமக்களு’ம் உலகமும் (முனைவர் வா.நேரு)

 



பொலிமக்களும் உலகமும்

                 (முனைவர் வா.நேரு)

உணமை  வாசகர்கள் அனைவருக்கும் 2026 புத்தாண்டு வாழ்த்துகள்வருடத்திற்கு  வருடம் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது.அண்மையில் பிபிசி தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தியை வாசித்தபோது,தந்தை பெரியார் 80,90 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன செய்தி  நினைவுக்கு வந்த்து.

“ பிள்ளைப் பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம்.நல்ல திரேகத்துடனும்,புத்தி நுட்பமும்,அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக,பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக் ஷன் ‘ மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும்.” (இனி வரும் உலகம்,தந்தை பெரியார்)

தங்களது வீரியத்தை அளிக்கும் ஆண்களுக்குப் பொலிமக்கள் என்னும் பெயரை தந்தை பெரியார் சூட்டியிருக்கிறார்.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் ‘தேர்ந்தெடுத்த மணி ‘ போன்ற பொலிமக்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.ஆண் பெண் குடும்பமாக வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது காலங்காலமாக நடைபெறும் நடைமுறைஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ,இரத்த தானம் அளிப்பதுபோல விந்தணுதானம் அளிப்பது என்பது உலகில் பெருகி வருகிறது.இதைப்பற்றி,” ஒரு பெண்ணின் துணைவர் மலட்டுத்தன்மையுடன் இருக்கும்போது அல்லது தன்பாலின உறவில் இருப்பவர்கள் அல்லது தனியாகக் குழந்தை பெற்று வளர்க்கும்போது விந்தணு தானம் அவர்கள் தாய்மையடைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளதுஐரோப்பாவில் இந்தச்சந்தையின் மதிப்பு 2033 ஆம் ஆண்டுக்குள் 2 பில்லிய்ன் பவுண்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது “ என்று பிபிசி குறிப்பிடுகிறது.

எல்லா ஆண்களுக்கும் இப்படி விந்தணு தானம் செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்னும் கேள்வி இயல்பாக நமக்குள் எழும்.அதற்கு “ இதைப் படிக்கும் நீங்கள் ஓர் ஆணாக இருந்தால் உங்களுக்கு வருத்தம் அளிக்கும் செய்தி இதுதான்.உங்கள் விந்தணுவின் தரம் தானம் செய்யப்போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்தான்னார்வலர்களில் நூற்றில் ஐந்துக்கும் குறைவானவர்களே அந்தத்தகுதியைப் பெறுகிறார்கள் ‘ என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.இரத்ததானம் நான் செய்கிறேன் என்று முன்வந்தால் கூடச் சில காரணங்களால் உங்களது இரத்ததானத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மருத்துவர்கள் சொல்வது உண்டு.ஆனால் நூறு பேர் இரத்ததானம் செய்யப்போனால் ஒன்றிரண்டு பேர் அப்படித் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்ஆனால் விந்தணு தானத்தில் நூறு பேர் சென்றால் அதில் ஐந்துபேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று செய்தி சொல்கிறது.

விந்தணு தானம் செய்பவர்களுக்கு நோய்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறது.மலையாள மொழியில் ஜோஸ் பாழூக்காரன் என்பவர் எழுதிய  ‘அரிவாள் ஜீவிதம் ‘ என்னும் நாவல் தமிழில் யூமா வாசுகியால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.கேராளவில் மலைவாழ் மக்கள் மத்தியில் இருக்கும் சிக்கிள் செல் என்னும் நோய் பற்றிய நாவல் அது.அது எவ்வளவு கொடுமையான நோய் என்பதையும் அது எப்படி அங்கு வசிக்கும் மக்களை இளம்வயதிலேயே துயருற்று மரணமடையச்செய்கிறது என்பதையும் அந்த நாவல் விளக்குகிறது.. அப்படிப்பட்ட  சிக்கிள் செல் மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்முதுகெலும்பு தசை நார் சிதைவு போன்ற மரபணுக்களால் கடத்தப்படும் நோய்களைக் கொண்டவர்கள் விந்தணு தானம் செய்ய யலாதுஹெச்ஐவி போன்ற தொற்று நோய் உள்ளவர்களும் தானம் செய்ய இயலாது.

இரத்த வங்கிகள் போல விந்தணு வங்கிகள் செயல்படுகின்றன.இரத்த வங்கிகளில் போய் இரத்த தானம் செய்தவரின் புகைப்படத்தையோ அல்லது அவரைப் பற்றிய விவரங்களையோ நாம் அறிய இயலாதுஆனால் மேலை நாடுகளில் விந்தணு வங்கிக்குப் போய் அந்த விந்தணுக்கு உரியவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுப்பெறலாம்.விந்தணு பெறுகின்றவர் தனக்கு எப்படிப்பட்டவரின் விந்தணு தேவை என்று கேட்டு,ஆராய்ந்து பெறலாம்.இதைப் பற்றி “ விந்தணு வங்கியைப் பொறுத்து நீங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம்.அவர்களின் குரலைக் கேட்கலாம்.அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்பொறியாளரா அல்லது கலைஞரா –மற்றும் அவர்களின் உயரம்,எடை போன்றவற்றைச் சரிபார்க்கலாம்அவர்கள் ஸ்வென் என்று அழைக்கப்பட்டால்அவர்களுக்குப் பொன்னிற முடி இருந்தால்,அவர்கள் 6 அடி 4 அங்குலம்(1.93 மீட்டர்உயரமாக இருந்தால்,விளையாட்டு வீர்ராக ,ஃபிடில் வாசிப்பவராக,ஏழு மொழிகள் பேசக்கூடியவராக இருந்தால்-அது என்னைப் போன்ற தோற்றம் கொண்ட தானம் செய்பவரைவிட மிகவும் கவர்ச்சிகரமானது என்பது உங்களுக்கே தெரியும் “ என்று விந்தணு வங்கியை நடத்திவந்த  கருவுறுதல் நிபுணர் பேரா ஆலன் பேசி கூறுகிறார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.ஆமாம் விந்தணுத் தானம் பெறுகிறவரின் விருப்பப்படி,அவர் தேர்ந்தெடுத்து விந்தணுவைப்  பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிகிறது.

 நம் நாட்டில் இருந்து மட்டுமல்லவெளி நாட்டிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். “ இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட விந்தணு தானம் குறித்த ஆய்வின் ஒரு அம்சம்ஒருவரின் விந்தணு டென்மார்க்கில் உள்ள ஐரோப்பிய விந்தணு வங்கியில் சேகரிக்கப்பட்டுப் பின்னர் 14 நாடுகளில் உள்ள 67 கருத்தரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப்ப்பட்டது என்பதாகும் “ என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறதுஉலகின் விந்தணு தானத்தில் முன்னணி நாடாக டென்மார்க் உள்ளது.அங்கிருந்து தானம் பெற்று உலகின் பல நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.நாடு விட்டு நாடுகண்டம் விட்டுக் கண்டம் தாண்டி நடைபெறும் வணிகமாக இது வளர்ந்துள்ளது.

உலகின் பல நாடுகளில் பெண்கள் படும் துயரம் என்பது ஆறாத் துயரமாக உள்ளது.கட்டிய கணவன் படுத்தும் கொடுமைகளால்,குடிகாரன் அல்லது மற்ற போதைகள் உபயோகிக்கும் கணவன்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் படித்து,பணம் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருந்தால் அந்தத் திருமண உறவை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்று வெளியே வருகிறார்கள்.அப்படிப்பட்ட பெண்கள் தாங்கள் பெற்று வளர்க்கும் குழந்தையைப் பற்றிக் கூறும்போது ‘சிங்கிள் பேரண்ட் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்.திருமணம் முடிக்காமலேயே குழந்தை பெற்று,வளர்க்க நினைக்கும் பெண்கள் விந்தணு தான வங்கிகளை நாடுகிறார்கள்.அதன் மூலமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வளர்க்கிறார்கள்.அவர்களும் தங்கள் குழந்தைகளை ‘சிங்கிள் பேரண்ட்’ குழந்தைகள் என்று அழைக்கிறார்கள்எதிர்காலத்தில் சிங்கள் பேரண்ட் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் உயரக்கூடும்.

தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிறது.இன்னும் அவர் நமது பரம்பரை எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.அவரது பெயரைக் கேட்டாலே நமது எதிரிகள் நடுங்குகிறார்கள்,உளறுகிறார்கள்,அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் தந்தை பெரியார் இனிவரும் உலகத்தில் என்ன நிகழும் என்பதைத் தனது சிந்தனையின் மூலம் சொல்லியிருக்கும் செய்திகளும்,அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் சொற்களும் உண்மையிலேயே நம்மைப் போன்றவர்களுக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. இன்றைய உலக நடப்புகளோடு அவரது தொலைநோக்கு சிந்தனைகளை ஒப்பிட்டு நோக்குவது,விளக்குவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜனவரி 1-15 ,2026




No comments: