Sunday, 15 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்... பாலகுமார் விஜயராமன்

 

அண்மையில் படித்த புத்தகம் : கறுப்பு ஜோக்கர்

( ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2025- குறும்பட்டியல்)

ஆசிரியர் : பாலகுமார் விஜயராமன்

வெளியீடு : எழுத்து பிரசுரம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

மொத்தம் 222 பக்கங்கள் விலை ரூ 270

இந்த நாவலைப் படித்து முடித்தபொழுது, ஒரு சினிமாப்படத்தைப் பார்த்து முடித்ததுபோல் இருந்தது.அவ்வளவு கச்சிதமாகச் சொற்களால் விவரிக்கப்பட்ட ,காட்சியாகக் காட்டப்படுகிற நாவலாக இந்த நாவல் இருக்கிறது.தனஞ்சயன் என்னும் தனா,கணக்குக்கு அஞ்சி நடுங்கிப் பின்பு கணக்குப் புலியாகும் சுயோதன்,கோவையிலிருந்து போடி கல்லூரிக்கு சமூகப்பணிக்காக வரும் கல்லூரி மாணவி நித்யா என்று அறிமுகமாகும் கதாபாத்திரங்கள்,கதை ஓட்டத்தில் கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறார்கள்.




தொலைபேசித்துறையில் பொறியாளராகப் பணியாற்றும் பாலகுமார் விஜயராமன் அவர்கள் தன்னுடைய பொறியியல் அனுபவம், மென்பொருள் அனுபவம், மாணவ மாணவியர்களுக்கான புராஜக்ட் அனுபவம் என்று அனைத்தையும் இணைத்து உயிரோட்டமாக இந்த நாவலைப் படைத்துள்ளார்.எல்லாமே எதார்த்தமாக ,இயல்பாக இருக்கிறது.

 நான் தொலைபேசித்துறையில் 1995-2000ம் களில் வேலைபார்த்தபொழுது, மதுரையில் திரு. மாதீரன் அவர்கள் தொலைபேசி மேற்பார்வையாளராக இருந்தார்.படித்தது அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. என்றாலும் அவருக்குக் கணினியின் மேல் இருந்த ஆர்வம் மிகப்பெரியது, அவர் ஃபாக்ஸ்பேசில்  எழுதிய புரோகிராம்தான் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்த தொலைபேசி நிலையங்களில் சில ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது அதுபோலத் தானாக ஆர்வத்தால் உருவாகும் கணினி புரோகிராமர் தனா கதாபாத்திரம் அருமை..


இந்த நாவல் ஆசிரியர் எழுத்தில் பிரமாண்டமாய் வளர்ந்தோங்கி நிற்கிறார்.அவர் எடுத்திருக்கும் கதைக்களம் நாம் அக்கம்பக்கம் பார்க்கும்,கேட்கும் ஆன்லைன் சூதாட்டம்,அதனால் பாதிக்கப்படுபவர்கள், அந்தச் சூதாட்டம் எப்படி வடிவமைக்கப்படுகிறது,அந்தச் சூதாட்டம் நடத்துபவர்களின் வலிமை என்ன?,எப்படி பிரமாண்டமான கட்டிடங்கள் வழியாக நடைபெறுகிறது,அதற்கு அரசியல்வாதிகள் எப்படிப் பணம் வாங்கிக்கொண்டு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள்  என்பதை எல்லாம் அற்புதமான கதை ஓட்டத்தோடு வடிவமைத்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை என்னும் பெயரில் தனாவுக்கு ஏற்படும் அனுபவம் ,வாசிக்கும் அனைவருக்கும் படிப்பினையாகவும் இருக்கும். தனா , நான் தான் தப்புச்செய்யவில்லையே, நான் ஏன் பயப்படவேண்டும் என இருக்கும் நிலையில் அவருக்கு ஏற்படும் துயரம் ,அதில் இருந்து அவர் தப்பிக்கும் இடமும் கதையின் மிக விறுவிறுப்பான பகுதி.

சில அத்தியாயங்கள் மட்டும் வந்தாலும் மரியா கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.மரியாவின் தற்கொலையே இந்த நாவலின் திருப்புமுனையாகவும்  அமைகிறது.அதுபோலச் சுயோதன் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்றி, பொறுக்கமுடியாமல் தனது வேலையை விடும் மாயந்தி…சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் மிகக் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுயோதன் ,தனது வாழ்க்கைக்கு அத்தனை வசதி கிடைத்தாலும் நாம் செல்லும் வழி தவறு,சமூகத்திற்கு எதிரானது  என்பதை உணர்ந்து மாறுவதும் அதன் தொடர்ச்சியாக அவனது செயல்பாடுகளும் மிக நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்.

வெறுமனே ஒரு நாவலாக இல்லாமல், இன்றைக்குச் சமூகத்தின் புற்று நோயாக மனிதர்களை அழித்துக்கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டம் பற்றி விரிவாக எழுதி இருப்பதற்குப் பாலகுமார் விஜயராமன் அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும். இன்றைக்குக் கல்லூரிகளில் இருக்கும் மாணவ,மாணவிகளிடம் மற்றும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள எல்லோரிடமும் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். மலையாளத்தில் ஜோஸ் பாலுக்காரன் எழுதிய ‘அரிவாள் ஜீவிதம் ‘ நாவல் பலரின் வாழ்க்கை அரிவாள் ஜீவிதம் நோயிலிருந்து மீள்வதற்கு  வழி வகுத்தது போல ஆன்லைன் சூதாட்ட நோயில்  இருப்பவர்கள் மீள்வதற்கான நாவல் இந்த நாவல். இந்த நாவல் நிறையப் பேரிடம் போய்ச்சேரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு,பணமிழந்து தற்கொலை செய்து கொண்ட உறவினர் வீட்டிற்கு, திருநெல்வேலியில் நானும் எனது மனைவியும் போனோம். அவ்வளவு அமைதியானவர்,பண்பானவர்,எப்படி இந்தச் சூதில் ஈடுபட்டார் ,இழந்தார்,இறந்தார் என்பது புதிராக இருக்கிறது என்று இறந்தவரின் மனைவி புலம்பியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.இந்த நாவலைப் படித்தபொழுது எப்படிச் சிக்கி இருப்பார் என்பது புரிந்தது. இன்னும் நம்மைச்சுற்றி பலர் இந்தச் சுழலுக்குள் சிக்கி இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் இந்த நாவல் போய்ச்சேரவேண்டும். சினிமாவாக எடுப்பதற்கு அத்தனை கூறுகளும் உள்ள இந்த நாவல் சினிமாவாக எடுக்கப்பட்டால், இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவிற்கு மக்களுக்குப் போய்ச்சேரும். சீட்டு என்று மட்டும்அல்ல ஆன்லைன் தாயம் என்றால் அலர்ட்டாக இருக்கவேண்டும் என்னும் படிப்பினையைக் கொடுப்பதாக நாவல் முடிகிறது.

விருது ,பரிசு என்பதையெல்லாம் தாண்டி, இந்தச் சமூகத்தில் நடைபெறும் ,ஓர் அவலத்தை,அந்தத் துறையைப் பற்றிப் புரிந்தவர் என்கிற முறையில் அற்புதமாகப் படிக்கும் எவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலைக் கொடுத்திருக்கிறார். அதுவே மிகப்பெரிய பரிசுதான். இந்த நாவலைப் படித்தேன், ஆன்லைன் சூதிலிருந்து விடுபட்டேன் என்று சிலர் சொன்னாலே ,அது பாலகுமார் விஜயராமன் அவர்களுக்குச் சாகித்ய அகாதமி விருது  கிடைத்தது போலத்தான்.

“ராசி,தூசி எல்லாம் ஒண்ணும் இல்ல. நீ செய்ற விஷயம் சரிதான்னு உன் மனசுக்குத் தோணுதுல.அதுலயே தொடர்ந்து முயற்சி பண்ணு.ரிசல்ட் எங்கே போகப்போகுது. கண்டிப்பா ஒரு நாள் வந்தே தீரும்” இந்த நாவலில் பக்கம் 92-இல்




மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு…தொடர்ந்து  எழுதுங்கள் .

தோழமையுடன்

வா.நேரு,15.02.2026

 

 

No comments: