Wednesday, 22 October 2014

சூரியக் கீற்றுகள்- நூல் அறிமுகம்-சு.கருப்பையா.



முனைவர் வா.நேருவின்   இரண்டாவது கவிதை நூல் இது. வாசிக்கும் பொழுது மனதை வருடும் வார்த்தைகள்ஆனால் எழுதப்பட்டுள்ள இந்த 51 கவிதைகளும்  சமூகத்தில்   நிலவும் மூடநம்பிக்கைகளையும் அவலங்களையும் எதார்த்தமாக இடித்துக் காட்டுகின்றன. கற்பனைகளையும் ,கனவுகளையும் பாலியியல் உணர்வுகளையும் சுமந்து கொண்டு, புரியாத வார்த்தைகளில் வெளிவரும் இக்கால  கவிதைகள் மத்தியில் எளிமையான வார்த்தைகளுடன் சக மனிதனாகப் பேசும் வா.நேருவின் மொழி நம் மனதிற்குள் சட்டென நுழைந்து விடுகின்றன. 

இந்தக் கவிதைகள் அனைத்தும் எழுத்து வலைதளத்தில் வெளிவந்த பொழுது 99 சதவீதமான வாசகர்கள் ( அவரைத் தவிர ) இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற தமது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் தோழர்.பொள்ளாச்சி அபி. ஏனென்றால் நேருவின் கவிதைகளில் மோகத்தைத் தூண்டும் காதல் வார்த்தைகள் இல்லை; வார்த்தை விளையாட்டு இல்லைஅத்தோடு மற்றவர்களால் பாராட்டப்படவேண்டும் என்ற ஏக்கத்திலும் எழுதப் படவில்லை. ஆனால் அனைத்தும் மனதை வலிக்கச் செய்யும் நிதர்சனமான உண்மைகள்.  

இந்தக் கவிதைகள் சமூகநலத்தை நேசிக்கும் மனிதர்களால் மட்டுமே வாசிக்க இயலும் வாசிக்கப்படும் ,விரும்பப்படும் மற்றவர்களால் புறந்தள்ளப்படும் என்று கருதுகிறேன். இப்போது எனக்கு பிடித்த  கவிதைகளின் சில பகுதிகளை மட்டும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை எண் – 1:  “வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட

அய்யா பசியோடிருந்தன
என் குழந்தைகள்
அவர்களின் பசியைப்
பார்த்துக்கொண்டு
வீட்டுக்குள் இருக்க
இயலவில்லை என்னால்
--
எதிர்பார்க்கவில்லை நான்
கத்தியால் வயிற்றில்
குத்துவார்களென
-----
வயிற்றிலிருந்து இரத்தம்
கொட்ட கொட்ட
வாயிலிருந்து அய்யா
பசியோடிருந்தன  என்
குழந்தைகள்---

மதக் கலவரக்காரர்களால் கல்கத்தாவில் கொல்லப்பட்ட காதர் மைதீனின்   வார்த்தைகள் இது. பத்து வயதில் தனது மடியில் உயிரிழந்த  காதர்   மைதீனின்   இந்த வார்த்தைகள் தான் எனக்கு வறுமையின் கொடுமையை  புரிய வைத்து என்னை பொருளாதார மேதையாக்கியது என்று நோபல் பரிசு பெறும்பொழுது மனம் நெகிழ்ந்து கூறினார் அமர்த்தியா சென்.


கவிதை எண் – 4: “ அந்தக்  கிழவி 

அந்த அதிகாலைக்குரல்
தெளிவாகக் கேட்டது
"அம்மாகீரை"
வீட்டின் முன்னே
பார்த்தேன்!
ஊன்றிய தடி
ஒரு புறமும்
கீரைக் கூடையின்மேல்
ஒரு கையுமாய்,
எழுபதைத்  தாண்டிய 
அந்தக்  கிழவி…..

உழைத்து  உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில்  வாழும் அந்த  எழுபது வயதுக் கிழவியைப் போல ,பேனா விற்கும் எண்பது வயது முதியவரையும் கைவினைப் பொருள்கள் விற்கும் பார்வையற்றவர்களும் எனக்குத் தெரியும்.  யாரையும் சார்ந்திராமலும் ,  பிச்சை எடுக்காமலும் வாழும் இவர்களே உண்மையான உழைப்பாளிகள்.

கவிதை எண் – 7: “அன்றொரு நாள் கிடைத்த  

சாதியையும்
மதத்தையும்
நெஞ்சு நிறைய
சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து
வைத்த விருந்தில்
பங்கேற்ற குற்ற உணர்வு
அகல மறுக்கிறது இன்றும்...

சிறிய  வயதில் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவரின் வீட்டில் உணவு அருந்தியதை நினைத்துக் குமுறும் கவிஞரின்  சாதியத்தை சாடும் வரிகள்.

கவிதை எண் – 13: “மார்ச் 8” 

மாதச் சம்பளம்
ஐம்பதினாயிரம்
அவளின் கணக்கில்
ஏ டி எம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்
பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு....!

இந்தக் கவிதையின் மூலம் ,  மார்ச்-8  உலக உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடும்  நாம் பெண்களுக்கு உண்மையான சுதந்திரமும் உரிமையும் இன்னும் கொடுக்கவில்லை என்பதைச் சாடுகிறார் வா.நேரு. 

கவிதை எண் – 16: “பலர் வாழ்வைக் கொள்ளும் நஞ்சாய் 

தொலைக்காட்சி
பெட்டிகளில்
வேறுபட்ட ஆடைகளில்
ஒரே மாதிரி
பொய்களோடு
ஜோதிடர்கள்
.....
ஜோதிடம்
பலர் வாழ்வைக்
கொள்ளும் நஞ்சாய்
சமூக வாழ்வில்
கொசு பரப்பும் நோய்போல
மதம் பரப்பும் நோயாய்..

இன்றைய காலகட்டத்தில் தொலைக் காட்சியில் வரும் தொடர்களும் பரப்பப்படும் ஜோதிடம் ,  அருள் வாக்கு போன்ற மூடநம்பிக்கைகளும் சமூகத்தைப் பிடித்துள்ள நோயாகப் பார்க்கிறார் கவிஞர் . இதை மூளைக்குள் புகுத்தப்பட்ட விலங்குஉடைத்தெறிவது அவ்வளவு எளிதாயில்லை என்று குமைகிறார்.

கவிதை எண் – 21: “நடமாடும் கடவுளாகி விடு 

வாயிலிருந்து லிங்கம் கக்கு!
கையிலிருந்து விபூதி கொட்டு!
முதல்  குடி முதல்
கடைகுடி வரை
காலில் விழ வை
நிறுத்தி நிறுத்தி
இரண்டொரு வார்த்தைகள் பேசு
.......
இந்தியாவில்
எளிதாய் சொத்து சேர்க்க
நீயும் கடவுளாகி விடு
…….
அசைந்து திரிந்த கடவுளின்
அசையா சொத்து
நாற்பதினாயிரம் கோடி.
மதம்ஆன்மிகம் என்ற பெயரில் போலிகள் பணம் பண்ணுவதையும் அவர்களுக்கு அரசு இயந்திரம் பக்க பலமாய் இருப்பதையும்  இந்தக்  கவிதையின் மூலம் நையாண்டி செய்கிறார் கவிஞர் வா.நேரு.கவிஞர் குறிப்பிட்டது போல் புட்டப்பர்த்தி சாயிபாபா காலிலும் காஞ்சி ஆச்சாரியார் கால்களிலும் விழுந்து கிடக்கும் அல்லது கிடந்த அரசியல் வாதிகள் உயர் அதிகாரிகள் எத்தனை பேர்கள்.

கவிதை எண் – 27: “கருகின பயிரைப் பார்த்து 

இக்கவிதையில் கடன் வாங்கி விவசாயம் பார்த்து நொடித்து போகும் ஏழை விவசாயிகளின் ஏமாற்றத்தையும்மனக்குமுறலையும் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக;
செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன்போல
கருகின பயிரைப் பார்த்து
மனதிற்குள் கதறி அழும் வேலை
வட்டிக்கு கடன் கொடுத்த
வட்டிக்காரன் வாரானே!
என்ன செய்ய?”

இந்த ஏழைக் குடியானவனின் அபயக் குரலை மேல்தட்டு வாசகர்கள்  அதிகம் உள்ள  எழுத்து.காம் வலைத்தளத்தில் எழுதிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  முனைவர் நேரு அவர்களை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும். ஆனால் விவசாயம் நொடித்துப் போவதையோ அல்லது  கடனுக்குப்  பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையோ தெரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத மக்கள் வாழும் நாடு இது. கவிதையின் இறுதியில் இப்படி எழுதி இருக்கிறார்;

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற
திட்டம் ஏதுமில்லேஇந்தியாவில்.
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
என்று முடித்திருப்பார். ஆனால் நான் வாசித்த மூலக்கவிதையில் கீழ்காணும் வகையில் இருந்ததாக ஞாபகம்;  
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
                            என்று அழைக்கிறீர்கள்
சாகப் பிறந்தவர்களே
என்று அழையுங்கள்! .....
நூலில் ஏனோ கடைசி வரியை நீக்கி இருக்கிறார் கவிஞர். எனக்கென்னவோ அந்த வரிகளும் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கவிதை எண் – 41: “மாணவனை மறைமுகமாகக் கழுவேற்றி 

இக்கவிதையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும்  படிப்பு என்ற பெயரில் குழந்தைகளை சித்திரவதை செய்யும் கொடுமையை கடுமையாக விமர்சித்துள்ளார். குழந்தைகளை அவர்களின் வழியே சென்று ,அவர்களின் அறிவைத் தூண்டி வளர்ப்பதற்குப் பதிலாக வியாபார நோக்கில் உருவாக்குவது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்;

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை!
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர்கள் எல்லாம் ஜெயித்ததில்லை!
ஜெயித்த பலபேர்
நன்கு படித்ததில்லை!
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல்!

இதே கருத்தில் எனக்கு  முழு உடன்பாடு இருப்பதால்  இந்தக் கவிதை எனக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை தான்.

கவிதை எண் – 42: “சொல் போதும் எனக்கு 

கவிஞர் வா.நேரு ,  இந்தக் கவிதையில் தன்னைப் பற்றிய ஒரு சுயபிம்பத்தை நமக்குத் தந்துள்ளார். அது  ஒரு எளிய மனிதனின் உயர்ந்த எண்ணங்களை நமக்கு உணர்த்துகிறது.

மதிப்புறு முனைவர்
பட்டங்கள்
எனக்கு வேண்டாம்!
---
சாதனையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
"மனிதன் இவன்"
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு!
----
மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவிசும் வேண்டாம் எனக்கு!
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு!

என்ன கவிஞர் இவர்?.  சினிமாவிற்கு பாட்டெழுதி  புகழ் பெற ஆசையில்லாமல் கார்  வாங்க விருப்பமில்லாமல் தலை முழுவதும் தான் உலகப் புகழ் பெற்ற கவிஞன் என்ற தலைக்கனம் இல்லாமல் வாழ ஆசைப்படுகிறார்?


கவிதை எண் – 42: “நிறைந்திருக்கிறாய் அம்மா! 

தனது தாயின் மரணத்தினால் ஏற்ப்பட்ட  சோகத்தை இப்படி பதிவு செய்து தாய்மைக்கு பெருமை சேர்த்துள்ளார்
குடத்திற்குள்
நிறைந்திருக்கும்  நீர்போல
நினைவுகள்  முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!
---
ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையும் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல்
அருகில் இருந்த போதும்
தூரத்தில் இருந்த போதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
செரிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா!

இப்படி தாயன்பை அழகாக கொடுத்துள்ளார்.
இவ்வாறே நூலில் உள்ள மற்ற கவிதைகளிலும் முனைவர்.நேருவின் அனுபவங்களும் பட்டறிவும்   கவிதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் இக்கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டும் மனித வாழ்க்கை சமூகத்திற்கு உரம் போட்டு வளர்க்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் சாதியத்திற்கு எதிரான வலுவான கவிதைகளும் விதவை மறுமணம் காதல்நட்பு பட்டினி வறுமை ஒழிப்பு போன்ற தளங்களைச் சுட்டிக்காட்டும் கவிதைகளையும் முனைவர் வா.நேரு  இன்னும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படைப்புகள் தொடர்ந்து பயணிக்கட்டும்!

-       -சு.கருப்பையா.
Nantri  :http://vasipporkalam.blogspot.in/2014/10/blog-post_22.html
நன்றி : வாசிப்போர் களம் - வலைத்தளம் 





Sunday, 19 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை-பா.செயப்பிரகாசம்

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை
நூலின் ஆசிரியர்                         :  பா.செயப்பிரகாசம்  (தேர்ந்தெடுக்கப்பெற்ற கதைக் களஞ்சியம்)
வெளியீடு                                       : தோழமை வெளியீடு , சென்னை-78 கைபேசி : 9444302967
முத்ற்பதிப்பு                                   : ஜீலை 2008, 184 பக்கங்கள், விலை ரூ 100 /= பதிப்பாளர் :கு.பூபதி
மதுரை மத்திய நூலக எண்       :   184486

                                                       பா.செயப்பிரகாசம் அவர்களின் சிறுகதைகள் இவை. கட்டுரை, கவிதை எழுதுவதை விட சிறுகதை, நாவல் எழுதுவது என்பது கடினமானது. கவிதையைப் போல சிறுகதையின் மொழியும் மிக முக்கியமானது. நடந்த ஏதோ ஒரு நிகழ்வையோ அல்லது நிகழ்வுகளையோ வைத்துக்கொண்டு, தான் சமூகத்திற்கு சொல்லவேண்டும் என்று நினைக்கும் கருத்தை கதை விரிப்பாக சொல்லுவது என்பது எல்லோராலும் இயலக்கூடிய காரியமாக இல்லை. சில்பேரின் கதைகள் வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக நின்று போய்விடுகின்றது. சிலரின் கதைகளோ என்ன சொல்லவருகிறார்கள் என்பதை விட அவர்கள் சொல்லிச்செல்லும் மொழியே ஆக்கிரமித்துக்கொள்கிறது , திரைப்படப்பாடல்களில் பாடலை விட இசை ஓங்கி ஒலிப்பது  போல. ஆனால் நிகழ்வும், மொழியும் , சமூகத்திற்கு சொல்ல்வேண்டும் என்னும் மனத்தூண்டுதலின் கருத்து விளைவும் இணைந்த கதைகளாக ஆக்குவதற்கு சிலரால்தான் இயல்கிறது. அப்படிப்பட்ட ஒருவராக இந்தக் கதைத்தொகுப்பின் ஆசிரியர் பா.செயப்பிரகாசம் திகழ்கின்றார்.

             1972-ல் எழுதியது முதல் 2002-வரை எழுதியதுவரையிலான , தேர்ந்தெடுக்கப்பட்ட 14  சிறுகதைகளின் தொகுப்பாக ,ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதி காலத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. 1972-ல் வெளியான 'ஒரு ஜெருசலேம்' கதை அம்மாவை இழந்த ஒரு சிறுவனின் கதை. அம்மா இறக்க காரணமாக இருக்கும் அப்பா, தன் மூத்த மகளை சில நாட்களுக்கு முன் இழந்து விட்டு இரண்டாவது மகளையும் மரணப்படுக்கையில் பார்க்கும் அம்மா வழிப்பாட்டி எனச் சூழல் விவரிப்பும் பாத்திரங்களும் மிகக் கனமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு பையை எடுத்துக்கொண்டு போ என டீச்சரால் அனுப்பப்பட்டு அம்மாவின் மரணத்திற்கு வீட்டுக்கு போகும் குமாரசாமி, தாயின் இறுதிச்சடங்குகளில் குமாரசாமி, பின் பஞ்சத்திற்கு கோரப்புல்லைப்பிடிங்கி அதன் அடியில் உள்ள கிழங்கைப் பறித்து தின்னும் சிறுவர்களில் ஒருவனாக குமாரசாமி , தன் தாயின் சமாதியில் முளைத்த கோரப்புல்லைப் புடுங்கும் மந்தி ராமசாமியை அடித்து நொறுக்கும் குமாரசாமி என அம்மாவின் சாவினை வைத்தே நகரும் கதையாக இந்தக் கதை உள்ளது.

                                   முப்பது , நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிறுகதைகள், அன்றைய எதார்த்த வாழ்வின் எச்ச சொச்சங்களை தொடர்ந்து வரும் தலைமுறை உணர்ந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. பேராய்ப் பிழைத்த அம்பலகாரர் வீட்டிற்கு உடுக்கையோடு வரும் சாமியாடி , வீட்டின் நிலமையைப் பார்த்து தான் சேகரித்த தானியத்தையும் , ரூபாயையும் தனது காணிக்கையென தேவியின் கையில் கொடுத்துச்செல்லும் 'அம்பலகாரர் வீடு ' , அரசாங்க சம்பளத்திற்காக ஆறு நாட்களும் மேலதிகாரியின் கொடுமையில் வாழும் நிலை சொல்லும் அரசாங்க வேலைக்காரன்- நாண்ம்மாவின் கணவன் பற்றிச்சொல்லும் 'ஆறு நரகங்கள் '  ரிக்கார்டு டான்ஸ் ஆடும் விஜயா, சாரு என அவர்களின் உணர்வுகளையும் ,சமரசங்களையும் சொல்லும் 'வேரில்லா உயிர்க்ள் ' போன்ற கதைகள் எல்லாம் 1972-முதல் 1974 வரை படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. வீரியமிக்க கதைகளாக இருக்கின்றன.

                                  தன் வீட்டுப்பெண்கள் அந்த ஊரின் பெரிய ஜாதிக்காரர்களால் சீரழிக்கப்பட்டபோது , நியாயம் கேட்டு வீடு வீடாகப் போய் " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வாங்க முதலாளி " என்று சொல்லி, ஒருவனும் வரவில்லை என்றவுடன், " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வரலையா முதலாளி " என்று கேட்டு கேட்டு பின்பு இரவில் மறைந்து போகும் மொட்டையாசானாரி பற்றிச்சொல்லும் 'காடு ' சிறுகதையின் முடிவு தனக்கே உறுத்தலாக இருந்திருக்குமோ அதனாலேயே வேறு ஒரு முடிவைக் காட்டும் ' அக்னி மூலை' சிறுகதையின் சாமியாடி , அக்னி மூலைக்கு காவு கொடுக்கப்போகும் சென்னையனை காவு கொடுப்பதாக முடித்தாரோ என எண்ண வைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையானராக வாழும் ஜாதியினர் வீட்டுப்பெண்களிடம்  நாய்க்கர்,ரெட்டியார் ஜாதியின் ஆண்களின் பார்வையும் அத்துமீறலும் ,வசப்படுத்தலும் பல கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

                                        1977-ல் 'இருளுக்கு அழைப்பவர்கள் ' என்னும் சிறுகதையை எழுதியிருக்கின்றார். கற்பழிக்கப்பட்ட பழங்குடியினர் பெண்களிடம் எப்படிக் கற்பழித்தார்கள் என்று வக்கீல்கள் வினவுவதை , நீதிமன்றத்தின் போக்கை எழுதிச்செல்வது சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வாச்சாத்தி போன்ற சம்பவங்களை மனக்கண் முன் நிறுத்துகிறது. முடிவில் " எதிரே நின்றவர்களைப் பார்த்தபடி அக்கா 'தூ' என்று காரித்துப்பினாள்:. அது அந்த நீதிமன்றத்தின் மேலும் பட்டது " பக்கம் 117 . நேரடிச்சாட்சியங்கள் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காததை மிக அப்பட்டமாகக் காட்டும் கதை.

                                     இந்தத் தொகுதியின் முதல்கதையான 'வளரும் நிறங்கள் 'கதை ,பம்பையத் தாத்தா என்னும் கதாபாத்திரத்தின் மூலம் " சாகிறது சாகப்போறம். எதையாவது செய்திட்டு சாகவேண்டியதுதானே " என்னும் கருத்தை மிக அழுத்தமாக படிப்பவர் மனதில் விதைக்கிறது. ஒரு ஆலையின் 25 ஆண்டுகால வரலாறு, நடப்பு வரலாற்றைச்சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டு சாதிகளின் சண்டை எப்படி கிராமத்தில் உருவாக்கப்படுகிறது, வளர்கிறது, சாதாரண மக்களின் உயிரை மாய்க்கிறது என்பதனைச்சொல்லும் 'சாதி ' போன்ற கதைகள் மிக எளிமையான வார்த்தைகளால் மிக அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

                    " சில்லு சில்லாய் ஓடிய சிதறு தேங்காயைப் போல் தாயம்மா வெடித்துக்கொண்டிருந்தாள். குவித்து வைத்த மண் குமிகள் போல் குழந்தைகள் மூலைக்கொன்றாய் பயத்தில் முடங்கிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச்சத்தமும் , இந்தக் காட்சியும் இல்லாமல்; பொழுது புரண்டதில்லை. வீட்டிற்குள் தினமும் நடக்கிற இந்த பாரதத்துக்கு வெளியே ஒரு சின்னக்கூட்டம் கூட கூடியதில்லை. அது அவர்கள் மேல் திரும்பிப்பாயும் என்பது அவர்களுக்குத் தெரியும் " பக்கம் 132. 'கோபுரங்கள்' என்னும் சிறுகதையில் தாயம்மா என்னும் பாத்திரத்தைப்பற்றி விவரிக்கும் வரிகள் மேலே சுட்டிக்காட்டியவை. வார்த்தைகளால் ,நிகழும் சம்பவங்களை அப்படியே கண்முன்னால் காட்டும் வித்தை அறிந்தவராக பா.செயப்பிரகாசத்தை இந்தத் தொகுதியில் அறிய முடிகின்றது. முடிவாக் இருக்கும் 'எதையும் செய்வீர்' என்னும் கதை 2001-ல் வெளியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 70-க்ளில் வந்த பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைக்கும் , 2001-ல் வந்தத்துக்குமான வேறுபாட்டை வாசகனே புரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட கதை போல உள்ளது. கதையின் உயிர்ப்பு, துடிப்பு, மொழி அனைத்துமே குறைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல 'எதையும் செய்வீர்' என்னும் கதை உள்ளது. வாசித்துப் பார்த்தால் , யோசிக்க வைக்கும் கதைத் தொகுப்பாக பா.செயப்பிரகாசம் அவர்களின் 'அக்னி மூலை ' கதைத் தொகுப்பு உள்ளது. வாசித்துப்பாருங்கள்.


Wednesday, 15 October 2014

அவரவர் வழியில்.......வா. நேரு

                                    
அவரவர் வழியில் 
அவரவர் 
எவரெவரோ எதிரில் 
வருவாரெனினும் 
அவரவர் வழியில் 
அவரவ்ர் 

முகம் சுருக்கி 
கூரிந்து நோக்கி 
முன் பகையை 
மனதில் நிறுத்தி 
முகத்தில் மட்டும் 
புன்னகையோடு 
வணக்கம் வைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

உனக்கும் அவனுக்குமான 
என்றோ முடிந்த 
பகையை இன்றைக்கும் 
கிளறி விட்டுத் 
திகுதிகுவெனத் 
தீயாய் இனி எரிய 
பழைய நெருப்பின் 
புகை ஏதும் இருக்கிறதா 
என்று வாயைக் 
கிண்டிப்பார்ப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

அதிகாரப் பதவியில் 
அச்சடித்த பொம்மையாய் 
ஆமாம் சாமி போட்டுவிட்டு 
வீட்டுக்கு போனபின்பு 
அது செய்ய வேண்டும் 
இது செய்ய வேண்டும் 
என அடுக்கி 
துணைக்கு வா நீயென 
அழைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

நெய் ஊற்றிச் 
சோறிட்டாலும் 
எவ்வளவு வெண்ணெயில் 
உருக்கியது இது 
எனக் கேள்வி கேட்டு 
இன்னும் கொஞ்சம் 
அதிகமாக நெய் உருக்க 
கற்றுக் கொடுத்திருப்பேன் 
விபரம் பத்தவில்லை 
உனக்கு இன்னும் 
எனக் குறை தேடிச்சுட்டுபவர் 
வரக்கூடும் எதிரில் 

எவனையும் என் 
வலைக்குள் எளிதில் 
வீழ்த்திட இயலும் 
என இறுமாப்பாய் 
வண்ணத் தோலும் 
வர்ணப்பூச்சும் 
மயக்கும் மொழியும் 
பேசுவோர் எவரேனும் 
வரக்கூடும் எதிரில் 

எவரெவர் எதிரில் 
வரினும் 
எதற்காக அவர் உன் 
அருகில் வருகின்றார் 
எனும் தன்மை 
அறியும் தகுதி 
உனக்கு இருப்பின் 
அவரவர் வழியில் 
அவரவர் !


  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 12-Sep-14, 8:58 pm
  • Nantri: Eluthu.com

Tuesday, 14 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-ம. காமுத்துரை

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-சிறுகதைத் தொகுதி
ஆசிரியர்                                         : ம. காமுத்துரை
பதிப்பகம்                                        :  சந்தியா பதிப்பகம், சென்னை
முதல்பதிப்பு                                  :  2006                    பக்கம் :128                  விலை:ரூ 60
மதுரை மைய நூலக எண்                                                    : 168518

                                                    ம.காமுத்துரை அவர்கள் எழுதிய 14 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல் . முன்னுரையை 'ஒரு கடிதம் ' என்னும் தலைப்பில்  10 பக்கங்களுக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கொடுத்திருக்கின்றார். முன் நடத்தும் தடங்கள் என இக்கதைகளை நோக்கும் பா.செயப்பிரகாசம் " எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்ட காமுத்துரை" என்று குறிப்பிடுகின்றார்.

                            புதுச்சேரிக்கு போன அனுபவத்தையும் எல்லோரையும் போல பாட்டிலுக்கு பெயர் போன புதுச்சேரியை நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் புத்தகத்திற்கும், படைப்பாளிகளுக்கும் பெயர் போனதும் புதுச்சேரி என்பதனை ஞாபகப்படுத்தும் விதமாக- முடிவைக் கொண்டு ' கப்பலில் வந்த நகரம் ' சிறுகதை அமைந்திருக்கிறது. மாட்டுத்தரகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆட்டோக்காரரான சுப்புராசு படும் பாட்டை நையாண்டி கலந்த கதைச்சொல்லலில் சொல்லும் 'கிடரி', பழைய துணி தைத்தற்காக கொடுத்த ஒத்த ரூபாயை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வீட்டின் நிலமையில் அந்த ஒத்த ரூபாயைக் கேட்பதற்கு போகும் வழியில் மனதில் ஏற்படும் எண்ணங்களை வடித்துக்கொட்டியிருக்கும் 'ஒரு ரூபாய் ' எனப் பல கதைகள் நெஞ்சைத் தொடுகின்றன.

                           சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு டிமிக்கி கொடுக்கும் பெயிண்டரைப் பற்றிய கதையான 'வருகை'  ஒரு காலத்தில் வேலை நிறுத்தம் செய்ததற்காக தன்னை வேலையை விட்டு நீக்கிய முதலாளியே இன்று அவரது மில்லிலேயே காண்டிராக்ட்காரராக மாறிப்போன கதை சொல்லும் 'சேர்மானம்' லாட்டரிச்சீட்டு பைத்தியமான பண்ணையார் எப்படி ஏழைக்கு பரிசு கிடைக்கக்கூடாது என்னும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும், கிழித்துப்போட்டு மறுபடியும் குப்பையிலிருந்து எடுத்துப்போய் பரிசுப்பணத்தை வாங்க எண்ணும் பணக்காரக் குப்பைத்தனத்தை சொல்லும் 'பண்ணை வீடு ' , சாண்டக்ஸ் செருப்பு வாங்க தேனியில் கடைக்கு நடந்துசென்று மாசமாயிருக்கும் தன் மகளுக்கு கறிக்கஞ்சி ஊத்தவேண்டும், மாடு மேய்க்கப்போகும் மகனுக்கு ஒரு செருப்பு வாங்கித்த்ரவேண்டும் என நினைப்பு வர 'பிறகு வந்து எடுத்துக்கிறேன் ' என்று சொல்லி செருப்புக்கடையை விட்டு வெளியே வரும் அவனைப் பற்றிச்சொல்லும் 'சாண்டக்ஸ் ' என்னும் கதைகள் வாழ்க்கையின் சாதாரணமானவர்கள் ப்டும் அவலங்களை கண் முன் நிறுத்துகின்றன.

                           ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதை ஒன்று படித்து முடித்தவுடன் கண்களில் கண்ணீர் வரவைத்தது. படித்து முடித்த பின்பு கொஞ்ச நேரம் மவுனமாய் இழவு வீட்டில் உட்கார்ந்திருப்பதைப் போல உட்காரவைத்தது. தெருக்கள் தோறும் சின்னச்சின்ன கடைகளாய் வாழ்வாதார தூண்களாய் பல பேர் வாழ்ந்த நிலை போய் , பகுதிக்கு ஒன்றாய் வந்து உட்கார்ந்திருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்தக் கதை காற்றில் நிறைந்த கவிதை.

                        கடன் தொல்லை தாங்காமல் கணவன் ஓடிப்போக, மூன்று பெண்  பிள்ளைகளை வைத்துக்கொண்டு , கடின் உழைப்பு இருந்தாலும் அவதிப்படும் தமிழ்ச்செல்வி. விகடனில் வந்த கதையைப் படித்து ' கதையிலே மொழி அற்புதமாச்செஞ்சிருக்கீங்க ' என்று பாராட்டிய தமிழ்ச்செல்வி, டெலிபோன் பூத்தில் வேலை செய்து அப்பளம் மோதிர அப்பளம் செய்து கடன் இல்லாமல்; பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படும் தமிழ்ச்செல்வி, வாடகை குறைவு என்று ஊருக்குத் தள்ளி குடியிருக்கும் தமிழ்ச்செல்வி , க்டைசியில் கடனை அடைக்க வழியில்லாமல் தனது பிள்ளைகளான முத்துச்செல்வி, அன்புச்செல்வி,அறிவுச்செல்வியோடு  குடிசைக்கு தீ வைத்து மொத்தமாய் குடும்பத்தோடு கருகிக் போகும் தமிழ்ச்செல்வி என அந்தப் பாத்திரம் நினைவுகளில் வாழும் வண்ணம்  உலவவிட்டிருக்கின்றார், க்டைசியில்
" கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லையாம் !
  இணைத்துக்கொள்ளுங்கள்...
கடனை அடைக்கும் சக்தியுமில்லை " என்று தமிழ்ச்செல்வியின் கவிதையோடு கூடிய கடிதம் கையில் கிடைத்திருப்பதாக முடித்திருக்கின்றார்.

                                 ஒரு பக்கம் குடிகாரனாக,கடன்காரனாக  கணவன். வாழ்வுக்கான போராட்டங்களை , வயிற்றுப்பிழைப்புக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டு நித்தம் நித்தம் செத்து செத்துப் பிழைக்கும் தமிழ்ச்செல்விகள் எத்தனை ? பன்னாட்டு மூலதனம் - இருகை கூப்பி வரவேற்பு. உள் நாட்டு , வெளி நாட்டு முதாலாளிகளின் பகாசுரக் கம்பெனிகள் அழித்தொழிக்கும் சிறு கடைகள் எத்தனை ? எத்தனை ? அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒழித்து என்ன வசந்த காலத்தை கொண்டு வந்து விடப்போகின்றார்கள் இந்த வெங்காயங்கள் ஏழைகள் வாழ்வில் ? குமுறல்களை கொட்ட தூண்டுகோலாய்  அமையும்  கதையாய் இந்த 'காற்றில் நிறைந்த கவிதை ' என்னும்  கதை .

                         இந்தத் தொகுப்பில் ஒட்டாத கதையாக ' களவாடிய இரவு ' என்னும் கதை இருக்கிறது. மற்ற கதைகளில் இருக்கும் தெளிவும் , புரிதலும் இக்கதையில் இல்லை. பின் நவீனத்துக கதை எழுத முயற்சி செய்தது போல் இருக்கிறது. நமக்கு அது தேவையில்லை.

                            தேனியைச்சார்ந்தவர் இந்த எழுத்தாளர் ம.காமுத்துரை என்று தெரிகின்றது. இவரின் கதைகளை இத்தனை நாட்களும் வாசிக்காமல் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.  " அறியப்படாதவர்களின் வரிசையில்தானே நாம் இன்னும் நிற்கிறோம். " என்று பா.செயப்பிரகாசம் முன்னுரையில் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் ம.காமுத்துரை போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் கட்டாயம் அறியப்படவேண்டும். அறியப்படுத்தப்படவேண்டும்.                                                   

Monday, 13 October 2014

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்
                                                   "பெண் குழ்ந்தைகளைக் கொண்டாடுவோம்" என்னும் கட்டுரை  தமிழ் இந்துவில் வ்ந்தது. கட்டுரை நன்றாக இருந்தது.  தமிழ் இந்துவில் ஒரு பின்னோட்டம் இட்டேன், அதனை எழுதிய எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால் அவர்கள் நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பதிலுக்கு  செல்பேசி எண்ணும் , என் வலைத்தள முகவரியும் அனுப்பியிருந்தேன்.   எனது வலைத்தளத்தில் உள்ளே சென்று பார்த்துவிட்டு, அலைபேசியில் அழைத்து மிக நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல பல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். டாக்டர் எஸ்.மணிவாசகம் அவர்கள் எழுதிய 'தூங்காமல் தூங்கி ' என்னும் நூலின் விமர்சனத்தைப் படித்தேன் என்றார். டாக்டர் மணிவாசகம் இப்போது உயிரோடு இல்லை, அறிவீர்களா என்றார். இல்லை என்றேன். அவர் புத்தகத்தின் இரண்டாம்ப்திப்பு வரும் போதே இறந்துவிட்டார் என்பதனைக் கூறினார். வருத்தமாக இருந்தது. எனது  வலைத்தளத்தின்  அண்மையில் படித்த புத்தகங்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டுத் தனது  கருத்தினை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனதில் உற்சாகம் ஊட்டக் கூடிய வார்த்தைகள். தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் எனது கவிதைகளைப் படித்துவிட்டு , நான் யாரென்று தெரியாத நிலையில்  கவிதைகளுக்காகப் பாராட்டியதுபோல , திரு எஸ்.வி.வேணுகோபாலின் பாராட்டு அமைந்துள்ளது. நிறைவுதான் மனதிற்கு. தொடர்ந்து செய்யும் ஒரு பணிக்கு , எங்கிருந்தோ- தெரியாத இடத்திலிருந்து அதுவும்   நாளிதழில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளரிடமிருந்து வந்த பாராட்டு மனதிற்கு நிறைவுதான். இதோ அவரின் மின்னஞ்சல் தங்களின் பார்வைக்கு.

அன்பின் முனைவர் வா நேரு அவர்களுக்கு


வணக்கம்....இன்று மிக தற்செயலாக தமிழ் இந்து ஆன் லைனில் பார்த்த உங்கள் கருத்தும், பாராட்டும் என்னை மிகவும் நெகிழ வைத்தது....அதிலிருந்து உங்கள் பெயரை கூகிள் சர்ச்சில் தேடி எடுத்ததும், உங்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு நீங்கள் விரைவாய் அனுப்பி வைத்த பதிலில் கிடைத்த உங்கள் வலைப்பூ முகவரி......

http://vaanehru.blogspot.in

ஆஹா...எப்பேர்பட்ட புத்தகக் காதலரை நான் இன்று அடையாளம் கண்டு கொண்டேன்...
வாழ்க உங்கள் வாசிப்பு அனுபவங்கள்....

பின் தேதியிட்டுப் போய் ஒரு வேகமான புரட்டலில் உங்களது இந்த மூன்றாண்டு பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டே வந்தேன், பத்து பதினைந்து நிமிட நேரத்தில்....
ஒரே மலைப்பு...
எத்தனை எத்தனை விதமான மனிதர்களின் வண்ணமய நூல்கள் குறித்த உங்கள் கருத்துக்கள், காய்தல் உவத்தல் இன்றி முன் வைக்கும் உங்கள் விமர்சனப் போக்கு, உச்சி முகந்து கொண்டாடும் பண்பாக்கம், சமரசமற்ற கொள்கையின் குரல்.....

இரா நடராசனின் ஆயிஷா
டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களது தூங்காமல் தூங்கி
பாலாஜியின் மதமும் அறிவியலும்
திருச்சி பள்ளி முதல்வர் துளசிதாசன் அவர்கள் தொகுத்த கனவு ஆசிரியர்

ஆஹா...அஹா...எத்தனை அருமையான நூல்கள்....

மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்பு எது கையில் வாசிக்கக் கிடைத்தாலும் அவை குறித்த நேரடியான பார்வை...வேகமாக பலவற்றை வாசித்தேன்...நெகிழ்ந்தேன்.

ஊடே ஊடே உங்களது கவிதைகள்
உங்களது சூரியக் கீற்றுகள் குறித்து பொள்ளாச்சி அபி விமர்சனம்
வானொலியில் விமர்சனமாக வாசித்த உங்கள் கட்டுரைகள்...

அடடா..அடடா...அற்புத வேலைகளைக் குவித்துக் கொண்டே இருக்கின்றீர்கள்....

உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும் இன்றைய இறுக்கம் மிகுந்த உலகைத் தளர்த்திக் கொடுத்து, கொஞ்சம் சிந்தனையைத் தூண்டி, வாழு-வாழவிடு என்று பேசும் திறன் மிக்கவை....

கொள்கைகள் எப்போதும் விவாதித்துக் கொள்ளக் கூடியவை...ஆனால், அவற்றின் அடிநாதமாக தோழமை நேயம் கேழுமினால் நிச்சயம் மானுடம் வெல்லும்...

வாழ்த்துக்கள்....

எஸ் வி வேணுகோபாலன் 

Thursday, 9 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும் -கே.ஆர்.பாலாஜி

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும்
ஆசிரியர்                                          :  கே.ஆர்.பாலாஜி
வெளியீடு                                         : ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதல்பதிப்பு                                    : 2014, மொத்த பக்கங்கள் : 104, விலை ரூ 65

                                                                      ' மதமும் அறிவியலும்' என்னும்  இந்தப்புத்தகத்தை மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள் கொடுத்து    படிக்கச்சொன்னார். படித்து முடித்து விட்டு , எனக்கு இந்த நூலில் சில விமர்சனங்கள் இருக்கின்றன, நான் அதனை பதியப் போகிறேன் என்றேன். தாராளமாகப் பதியுங்கள் என்றார்
.
                        மதம் என்றால் என்ன , அறிவியல் என்றால் என்ன என்பதனை தன் மகனுக்கும் தனக்குமான உரையாடலில் இருந்து ஆரம்பித்து, மிக எளிமையாகக் கதை கூறும் பாணியில் நூலினைக் கொண்டு செல்கின்றார் பாலாஜி. மதம் என்றால் என்ன, மத வழி அணுகுமுறைகள் எவையெவை என்பதனையும், அறிவியல்-அறிவியல் வழி அணுகுமுறை என்றால் என்ன என்பதனையும் சொல்லிச்செல்கின்றார்.
" கடவுள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திதான்  பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கி வருகிறது என்ற நம்பிக்கை, அந்தக் கடவுளை வழிபடுவதற்கான சடங்குகள், இவற்றோடு இணைத்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் ஆகியவற்றின் தொகுப்பே மதம் என்ற பொருளில் விக்கிபீடியா என்னும் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது " பக்கம் 15 எனக்குறிப்பிட்டு மதத்திற்கு ஏங்கெல்ஸ் தரும் விளக்கமும் தருகின்றார். மதங்கள் எப்படி உருவாகின, எப்படி இன்றைய நிலைமைக்கு வந்தன என்பதனைச்சுட்டுகின்றார். இந்துமதம், கிறித்துவமதம், இஸ்லாமிய மதம் போன்ற மதங்களின் தோற்ற வரலாறுகளைக் கூறுகின்றார்.

                             " ஒழுங்காகவும் முறையாகவும் தொகுக்கப்பட்ட அறிவே அறிவியல் " பக்கம் 28 எனக்கூறும் நூலாசிரியர்  அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் பல விளக்கங்களைக் கூறுவதையும், மதம் தோன்றிய காலத்திலிருந்து மாறாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதையும் , அதற்கு எதிராக அறிவியல் அடிப்படையில்  ஆராய்ந்தவர்களைத் துன்பறுத்தியதையும் கூறுகின்றார்.

                           அடுத்தடுத்த பகுதிகளில் பிரபஞ்சத்தின் தோற்றம்-இயக்கம் பற்றியும் உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும் அறிவியல் கூறுவதை மிக எளிமையாகப் புரியும்படி எடுத்துக்காட்டுக்களோடு விளக்குகின்றார். பர்ணாமக் கொள்கைக்கு எதிராக மத நூல்கள் இருப்பதை பக்கம் 50,51 களில் எடுத்துக்காட்டுகின்றார். அடுத்து சமுதாய வளர்ச்சி பற்றியும் , அடிமைகளாக இருந்த மனித இனம் பற்றியும், முதலாளித்துவ, சோசலிச முறைகள் பற்றியும்  இந்த்  நூல் பேசுகின்றது.

                          சமுதாயப் பிரச்சனைகள் என்னும் தலைப்பில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அலசப்படுகின்றன. மதம் எப்படி எல்லாம் மனிதர்களை மதம் பிடித்தவர்களாக ஆக்குகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் விளக்கப்படுகின்றது. அடுத்து அறிவியலின் மறுபக்கம் என்னும் பகுதியில் அறிவியல் கருவிகளை கைகளில் வைத்துக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் உலக அழிவிற்கான சூழல் கேடுகளை விளைவிப்பதை விளக்குகின்றது.

                      இந்த அத்தியாயம்வரை எளிமையாக விளக்கி வந்த நூலாசிரியர் தீர்வு என்ன என்னும் பகுதியில் சோவியத் நூல்களை மொழி பெயர்ப்பவர் போல மாறிவிடுகின்றார். " மனிதர்கள் ஏற்படுத்திய சமுதாய் சக்திகள், அதாவது உற்பத்திச்சாதனங்களின் தனியார் உரிமை, சந்தைப் பொருளாதாரம், அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகள், பிறகு சாதி மற்றும் மதத்தினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மனித வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன.
                          உற்பத்திச்சாதனங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்து சம்த்துவத்துக்கான பாதையை நோக்கிச்சமுதாயம் திரும்பும். மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சமூக சக்திகள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் . அப்படி வந்து விட்டால் , புரியாத சக்திகளைப் பற்றிய மனதின் பிரதிபலிப்பு தேவையற்றதாகி விடும். அதாவது ,புரியாத சமூக சக்திகள் எதுவும் இருக்காது.

                            இதயமற்ற ஏறறத்தாழ்வுகளைக் கொண்ட சமுதாயம் , இதயம் உள்ள சமுத்துவம் கொண்ட சமுத்துவமாக மாறும் பொழுது , மதத்திற்கான தேவை  குறைந்து படிப்படியாகச் சாதி மதங்களற்ற சமுதாயமாக மாறிவிடும்  " பக்கம் 102 . மேலே சொன்னவை உடோப்பியா கருத்துக்களாக இருக்கின்றனவே தவிர எதார்த்ததை எதிரொலிக்கும் விதமாக இல்லை. ஒரு அன்னியத்தன்மை வந்து நாம் வாசிக்கும்பொழுதே ஒட்டிக்கொள்கின்றது.  மேலும் பக்கம் 99-ல் " பொதுவாக நாத்திகவாதம் பேசுபவர்கள் மதத்துடன் முட்டி மோதி ஜெயித்து விடலாம் என்றே போராடுகின்றனர். ..."  என்று குறிப்பிடுகின்றார். 21-ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் மதத்தைக் குறித்த மதிப்பீடுகள் வெகுவாக மாறியுள்ளன. மதத்தை விட்டுப் பெரும்பாலானவர்கள் வெளியே வந்து தங்களை மதமற்றவர்கள், கடவுளை நம்பாதவர்கள் என அறிவிக்கின்றனர். ஆனால் நாத்திகவாதம் பேசுபவர்கள் , கொச்சை நாத்திகவாதிகள் என்று 60-களில் பேசிய இடதுசாரிகள் போலவே இந்த நூலின் ஆசிரியரும் பேசுகின்றார்.

                          அண்ணல் அம்பேதகர் 1930-களில் எழுதியபோதே , இந்த நாட்டில் புரட்சி வராது , ஏனெனில் இங்கு  இருக்கும் சாதி அமைப்பு முறை புரட்சி வரவிடாது என்றார்.  ,சாதி  தொழிலாளர்களைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஒன்று சேரவிடாத ஏணிப்படி சாதித்தட்டுகளில் அமர்ந்திருக்கும் சாதி உணர்வு தொழிலாளர்கள் தங்கள் சாதி மதப்பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்,  80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாட்டில் உள்ள பொதுவுடமை இயக்கங்கள் ஏன் தேய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதனை இந்த நூலின் கடைசி அத்தியாயம் உணர்த்துகின்றது. ஏதோ இரவல் மொழியில் பேசுவது போலவே 'தீர்வு என்ன' என்னும் கடைசி அத்தியாயம் இருக்கின்றது.

                       இந்த நூலை வாசித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வைப் பதிந்திருக்கின்றேன். நான் பதிந்ததை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப்பாருங்கள்.   உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாய் பதிவிடுங்கள்.