மதுரை தொலைத்தொடர்புத் துறையில் துணைப்பொதுமேலாளராகப் பணியாற்றி
ஓய்வுபெற்ற திருமதி அருண்மொழி அவர்கள் மதுரையில் இயற்கை எய்தினார்.அவரின் இறுதி நிகழ்வுகள்
நேற்று(05.12.2023) காலை மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கும் கொடிக்கால்
தெருவிலும் பின்னர் தத்தனேரி சுடுகாட்டிலும் நடந்தது.
சோதனைகள் நிகழும்போது தனது வாழ்க்கையை எப்படி அழகாக்கிக் கொள்வது,அர்த்தமாக்கிக்
கொள்வது என்பதற்கு மிகப்பெரிய படிப்பினையாகத் திகழ்ந்தவர் அருண்மொழி அவர்கள். பணியில்
மிக நேர்மையானவர், மிகக் கண்டிப்பான அதிகாரி அவர்.அவருடைய பணிக்காலத்தில், நான் தொழிற்சங்கவாதி
என்ற நிலையில் சில நேரங்களில் அவரோடு வாக்குவாதம் எல்லாம் ஏற்பட்டதுண்டு.ஆனால் பணி
செம்மையாக நடக்கவேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் உள்ளவர்.அலுவலகத்திற்கு வெளியே ஒரு சகதோழர் போல நடந்து கொள்பவர்.
நேற்று அவரின் இறுதி
நிகழ்வில் கலந்து கொண்ட தொலைத்தொடர்பு துணைக்கோட்ட அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற திருமதி
சுப்புலெட்சுமி அவர்கள் அவரின் நீண்டகாலத் தோழி.1973-லிருந்து இருவரும் நண்பர்கள்
என்றார்."பழகிய ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ,அவர்களின் வாழ்க்கையின்
மேம்பாட்டுக்கு ஏதோ ஒருவகையில் அருண்மொழி உதவி இருக்கிறார்" என்றார் அவர். அருண்மொழி மேடம்
அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் தொலைபேசி ஆப்ரேட்டாராக இலக்காகவில் நுழைந்தவர்.
பின்பு ஜெ.இ.ஏ.இ. எனத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று துறைக்காக உழைத்தவர்.
1995-2000 கால கட்டங்களில் ஏ.இ. கணிப்பொறியாக இருந்தார்.கணினி வந்த
புதிது. நிறையப் பேருக்கு கணினி பற்றித்தெரியாது. திண்டுக்கல்,தேனி ,மதுரை மாவட்டம்
சேர்ந்த பகுதி மதுரை தொலைத் தொடர்பு மாவட்டம்.அதில் ஒவ்வொரு ஊரிலும் கணினி இன்ஸ்டால்,பராமரிப்பு
எனப் பலவேலைகளை ,ஒரு குழுவை அமைத்துக்கொண்டு செய்தவர் திருமதி அருண்மொழி அவர்கள்.சாப்பாடு
பற்றியெல்லாம் கவலைப்படாமல் மணிக்கணக்காக வேலை செய்தவர்.கணினி பற்றிக் கற்றுக்கொண்டே இருந்தார்.மற்றவர்கள் கற்றுக்கொள்ளவும் வழிகாட்டினார். .உண்மையிலேயே மதுரைத்
தொலைதொடர்பு மாவட்டத்தின் மேம்பாட்டில் அவர் பணி அளப்பரியது.
அவருடைய கல்விப்பணி பற்றி ,அண்மையில் நான் வெளியிட்ட ‘கனவு
போலத்தான் நடந்தது' நூலில் உள்ள பகுதி கீழே உள்ளது.அப்படியே அதனை இணைத்துள்ளேன்.
“கல்விக்காக நாம் கொடுக்கும் நன்கொடை நம் உள்ளத்தை மகிழ்ச்செய்வது மட்டுமல்ல,எத்தனையோ பேருக்கு வாழ்வளிப்பது.இந்த நேரத்தில் மதுரை தொலைபேசி நிலையத்தில் கோட்டப்பொறியாளராக வேலைபார்த்த திருமதி அருண்மொழி அவர்கள் நினைவுக்கு வருகிறார்.இன்றும் மதுரையில் வாழும் (
நினவில் வாழும்) அவர் எனது வாழ்க்கையில் பெரும் மதிப்பிற்குரியவர்.
வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு அவருடைய நடுத்தர வயதில் ஏற்பட்டது.அவரது ஒரே மகள் சியாமளா ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விபத்தில் மறைந்துவிட்டார்.கணவர் இல்லாத நிலையில் மகளே தன் வாழ்க்கை என்று இருந்தவரின் வாழ்க்கையில் அடித்த புயல் மிகப்பெரிய துயரம்.
.மதுரையில் காந்தி நினைவு நிதியால் நடத்தப்படும் சேவாலயம் என்னும் விடுதி மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ளது.அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்.மேலூர் போன்ற கிராமங்களில் இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.தான் வாங்கும் சம்பளப்பணத்தை எல்லம் செலவழித்து,அந்த சேவாலயம் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி(tuition)கொடுக்க ஆரம்பித்தார்.படித்த,கற்பிப்பதில் ஆர்வம் இருக்கும் இருபால் பட்டதாரிகளை அழைத்து பாடம் எடுக்கச்செய்தார்.அவரும் பாடம் எடுத்தார்.உடன் வேலை பார்க்கும் மற்றவர்களையும் வந்து இலவசமாக பாடம் எடுக்கத்தூண்டினார்.
அவருடைய தூண்டுதலின் பேரில் மதுரை தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும் பலர் அங்கு போய் டியூசன் எடுத்தனர். நானும் கூட சில மாதங்கள் எடுத்தேன்.வெள்ளேந்தியான மாணவர்கள்.கல்வியினால் என்ன கிடைக்கும் என்னும் தொலை நோக்கு இல்லாத மாணவர்கள்.ஆனால் அவர்களுக்கு கண்டிப்புடன் கூடிய கல்வி கிடைப்பதற்கு தன்னுடைய பணத்தை,நேரத்தை எல்லாம் செலவழித்தார்.
என்னுடன் வேலை பார்த்த எழுத்தாளர் பி.எஸ்.என்.எல். அதிகாரி பாலகுமார் விஜயராகவன்,செந்தில் போன்றவர்களை எல்லாம் இணைத்து தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு 2014-ல் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார்.அவருடைய மகள் சியாமளா அறக்கட்டளை என்னும் பெயரில் மதுரையில் இருக்கும் அந்த அறக்கட்டளை பொறியியல்,மருத்துவம் படிக்கும் பல மாணவ,மாணவிகளுக்கு 2014-ஆம் ஆண்டு முதல் உதவித்தொகையை வழங்கி வருகின்றது.
நான் மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தபோது,2010-ல் சேவாலயம் விடுதியில் இருந்து சில மாணவர்கள் அருண்மொழி மேடத்தைப் பார்க்க வந்தார்கள். என்னோடு லிப்டில் வந்த அந்த மாணவக் குழந்தைகள் அம்மாவைப் பார்க்க வேண்டும்,அம்மா எங்கு இருப்பார்கள் என்றெல்லாம் கேட்டபோது,எனது கண்களில் நீர் வந்தது. ஒரு குழந்தையை அவர்கள் பறிகொடுத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அம்மா,அம்மா என்று அன்பொழுக அழைக்கும் வாய்ப்பை,தான் ஏற்படுத்திக்கொடுத்த கல்வி வாய்ப்பால் பெற்றார்கள்.கல்வி கொடுப்பவர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள்,போற்றப்படுகிறார்கள் என்பதை நாம் கண் கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களிடம் லிப்டில் நான் அந்த மாணவர்களைச்சந்தித்தையும் ,எங்கள் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் வேலைபார்த்த மேடம் அருண்மொழி அவர்களைப் பற்றியும் அவரின் கல்விப்பணிகளைப் பற்றிச்சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்”
திருமதி அருண்மொழி அவர்களின் கல்விப்பணிக்கும் ,தொலைத்தொடர்புப்
பணிக்கும் நன்றியும் வணக்கமும். அவரது புகழ் ஓங்கட்டும்.
வா.நேரு,
(06.12.2023)
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு,எங்களோடு மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் வேலை பார்த்த திருமதி.ரமா முத்துக்குமார் அவர்கள் ஒரு பதிவினை எனக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பதிவையும் இத்தோடு இணைத்துள்ளேன்.



.jpg)






