Tuesday 5 December 2023

பி.எஸ்.என்.எல்.துணைப்பொதுமேலாளர் திருமதி அருண்மொழி அவர்கள்...

 

மதுரை தொலைத்தொடர்புத் துறையில் துணைப்பொதுமேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமதி அருண்மொழி அவர்கள் மதுரையில் இயற்கை எய்தினார்.அவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று(05.12.2023) காலை மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கும் கொடிக்கால் தெருவிலும் பின்னர் தத்தனேரி சுடுகாட்டிலும் நடந்தது.அவருக்கு தத்துமகன் போல பல உதவிகள் செய்த ,பி.எஸ்.என்.எல். செந்தில்குமார்ராஜூ அவர்கள் இறுதிச்சடங்குகள் செய்தார்.பெங்களூரிலிருந்து திரு.பாலகுமார் JTO, துணைப்பொதுமேலாளர்(ஓய்வு) திருமதி இன்பஜோதி இந்திரகுமாரி,தொழிற்சங்கவாதி அண்ணன் செளந்தர்,திருமதி ரமா முத்துக்குமார், அவரின் கணவர்,திரு முருகேசன் AO(Rtd),திருமதி சாரதா ரமேஷ்,கஸ்டமர் சர்வீஸ் திரு.சரவணன்,திருமதி சுப்புலெட்சுமி மேடம் SDE Rtd,அவரின் கணவர்,அவரின் மகள்,மேடம் அருண்மொழியிடம்  பணியாற்றிவிட்டு பெங்களூர் மாற்றலாகிச்சென்ற வித்யா மேடம்  என்று  பலர்,தொலைத்தொடர்பு துறையைச்சார்ந்தவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.



சோதனைகள் நிகழும்போது தனது வாழ்க்கையை எப்படி அழகாக்கிக் கொள்வது,அர்த்தமாக்கிக் கொள்வது என்பதற்கு மிகப்பெரிய படிப்பினையாகத் திகழ்ந்தவர் அருண்மொழி அவர்கள். பணியில் மிக நேர்மையானவர், மிகக் கண்டிப்பான அதிகாரி அவர்.அவருடைய பணிக்காலத்தில், நான் தொழிற்சங்கவாதி என்ற நிலையில் சில நேரங்களில் அவரோடு வாக்குவாதம் எல்லாம் ஏற்பட்டதுண்டு.ஆனால் பணி செம்மையாக நடக்கவேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் உள்ளவர்.அலுவலகத்திற்கு வெளியே ஒரு சகதோழர் போல நடந்து கொள்பவர்.

 நேற்று அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட தொலைத்தொடர்பு துணைக்கோட்ட அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலெட்சுமி அவர்கள் அவரின் நீண்டகாலத் தோழி.1973-லிருந்து இருவரும் நண்பர்கள் என்றார்."பழகிய ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ,அவர்களின் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு ஏதோ ஒருவகையில் அருண்மொழி  உதவி இருக்கிறார்"  என்றார் அவர். அருண்மொழி மேடம் அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் தொலைபேசி ஆப்ரேட்டாராக இலக்காகவில் நுழைந்தவர். பின்பு ஜெ.இ.ஏ.இ. எனத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று துறைக்காக உழைத்தவர்.

1995-2000 கால கட்டங்களில் ஏ.இ. கணிப்பொறியாக இருந்தார்.கணினி வந்த புதிது. நிறையப் பேருக்கு கணினி பற்றித்தெரியாது. திண்டுக்கல்,தேனி ,மதுரை மாவட்டம் சேர்ந்த பகுதி மதுரை தொலைத் தொடர்பு மாவட்டம்.அதில் ஒவ்வொரு ஊரிலும் கணினி இன்ஸ்டால்,பராமரிப்பு எனப் பலவேலைகளை ,ஒரு குழுவை அமைத்துக்கொண்டு செய்தவர் திருமதி அருண்மொழி அவர்கள்.சாப்பாடு பற்றியெல்லாம் கவலைப்படாமல் மணிக்கணக்காக வேலை செய்தவர்.கணினி பற்றிக் கற்றுக்கொண்டே இருந்தார்.மற்றவர்கள் கற்றுக்கொள்ளவும் வழிகாட்டினார். .உண்மையிலேயே மதுரைத் தொலைதொடர்பு மாவட்டத்தின் மேம்பாட்டில் அவர் பணி அளப்பரியது.

அவருடைய கல்விப்பணி பற்றி ,அண்மையில் நான் வெளியிட்ட ‘கனவு போலத்தான் நடந்தது' நூலில் உள்ள பகுதி கீழே உள்ளது.அப்படியே அதனை இணைத்துள்ளேன்.

“கல்விக்காக நாம் கொடுக்கும் நன்கொடை நம் உள்ளத்தை மகிழ்ச்செய்வது மட்டுமல்ல,எத்தனையோ பேருக்கு வாழ்வளிப்பது.இந்த நேரத்தில் மதுரை தொலைபேசி நிலையத்தில் கோட்டப்பொறியாளராக வேலைபார்த்த திருமதி அருண்மொழி அவர்கள் நினைவுக்கு வருகிறார்.இன்றும் மதுரையில் வாழும் ( நினவில் வாழும்) அவர் எனது வாழ்க்கையில் பெரும் மதிப்பிற்குரியவர்.

வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு அவருடைய நடுத்தர வயதில் ஏற்பட்டது.அவரது  ஒரே மகள் சியாமளா ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விபத்தில் மறைந்துவிட்டார்.கணவர் இல்லாத நிலையில் மகளே தன் வாழ்க்கை என்று இருந்தவரின் வாழ்க்கையில் அடித்த புயல் மிகப்பெரிய துயரம்.

.மதுரையில் காந்தி நினைவு நிதியால் நடத்தப்படும் சேவாலயம் என்னும் விடுதி மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ளது.அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்.மேலூர் போன்ற கிராமங்களில் இருந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.தான் வாங்கும் சம்பளப்பணத்தை எல்லம் செலவழித்து,அந்த சேவாலயம் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு தனிப்பயிற்சி(tuition)கொடுக்க ஆரம்பித்தார்.படித்த,கற்பிப்பதில் ஆர்வம் இருக்கும் இருபால் பட்டதாரிகளை அழைத்து பாடம் எடுக்கச்செய்தார்.அவரும் பாடம் எடுத்தார்.உடன் வேலை பார்க்கும் மற்றவர்களையும் வந்து இலவசமாக பாடம் எடுக்கத்தூண்டினார்.

 

அவருடைய தூண்டுதலின் பேரில் மதுரை தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும் பலர் அங்கு போய் டியூசன் எடுத்தனர். நானும் கூட சில மாதங்கள் எடுத்தேன்.வெள்ளேந்தியான மாணவர்கள்.கல்வியினால் என்ன கிடைக்கும் என்னும் தொலை நோக்கு இல்லாத மாணவர்கள்.ஆனால் அவர்களுக்கு கண்டிப்புடன் கூடிய கல்வி கிடைப்பதற்கு தன்னுடைய பணத்தை,நேரத்தை எல்லாம் செலவழித்தார்.

 

என்னுடன் வேலை பார்த்த எழுத்தாளர் பி.எஸ்.என்.எல். அதிகாரி பாலகுமார் விஜயராகவன்,செந்தில் போன்றவர்களை எல்லாம் இணைத்து தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு 2014-ல் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார்.அவருடைய மகள் சியாமளா அறக்கட்டளை என்னும் பெயரில் மதுரையில் இருக்கும் அந்த அறக்கட்டளை பொறியியல்,மருத்துவம் படிக்கும் பல மாணவ,மாணவிகளுக்கு 2014-ஆம் ஆண்டு முதல் உதவித்தொகையை வழங்கி வருகின்றது.

நான் மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தபோது,2010-ல் சேவாலயம் விடுதியில் இருந்து சில மாணவர்கள் அருண்மொழி மேடத்தைப் பார்க்க வந்தார்கள். என்னோடு லிப்டில் வந்த அந்த மாணவக் குழந்தைகள் அம்மாவைப் பார்க்க வேண்டும்,அம்மா எங்கு இருப்பார்கள் என்றெல்லாம் கேட்டபோது,எனது கண்களில் நீர் வந்தது. ஒரு குழந்தையை அவர்கள் பறிகொடுத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அம்மா,அம்மா என்று அன்பொழுக அழைக்கும் வாய்ப்பை,தான் ஏற்படுத்திக்கொடுத்த கல்வி வாய்ப்பால் பெற்றார்கள்.கல்வி கொடுப்பவர்கள் எவ்வளவு மதிக்கப்படுகிறார்கள்,போற்றப்படுகிறார்கள் என்பதை நாம் கண் கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களிடம் லிப்டில் நான் அந்த மாணவர்களைச்சந்தித்தையும் ,எங்கள் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் வேலைபார்த்த மேடம் அருண்மொழி அவர்களைப் பற்றியும் அவரின் கல்விப்பணிகளைப் பற்றிச்சொன்னதும் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்”

திருமதி அருண்மொழி அவர்களின் கல்விப்பணிக்கும் ,தொலைத்தொடர்புப் பணிக்கும் நன்றியும் வணக்கமும். அவரது புகழ் ஓங்கட்டும்.

                                                   வா.நேரு,

                                                    (06.12.2023)

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு,எங்களோடு மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில் வேலை பார்த்த திருமதி.ரமா முத்துக்குமார் அவர்கள் ஒரு பதிவினை எனக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பதிவையும் இத்தோடு இணைத்துள்ளேன்.

Sir, நான் ரமா முத்துக்குமார். 
நான் BSNL BASHEER GROUP இல் நீங்கள் போட்டிருந்தது படித்தேன். 
மேடத்தை பற்றிய எல்லா விஷயங்களும் எழுதியிருந்தீர்கள். ரொம்ப சந்தோசமாக இருந்தது. ஆனால் படிக்க படிக்க கண்ணீர் நிற்காமல் வந்தது. 

நான் சென்னையிலிருந்து 1991 இல் நம் GM ஆபீஸுக்கு  operator cadre இல் இருந்து clerk ஆக  planning section இல் join பண்ணினேன். அப்போது அருண்மொழி மேடம் urban planning இல் JTO வாக இருந்தார்கள். அப்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இன்று வரை நிலத்து நிற்கிறது. இனிமேலும்  நினைவுகளில் அது தொடர்ந்து நிலத்து நீடிக்கும்.

Officer  , clerk என்ற பேதம்  எல்லாம் அவர்களுக்கு கிடையாது. எல்லோரிடமும் இனிமையாக பழகுவார்கள்.  முழுக்க முழுக்க computer இல் வேலை செய்ய அவர்கள் தான் கற்றுக் கொடுத்தார்கள்.  எந்த நேரத்தில் சந்தேகம் கேட்டாலும் சொல்லி கொடுப்பார்கள்.  அவர்கள் பின்பு SDE computer ஆன பின் நான் work பண்ணிய ஒவ்வொரு  section ம் computer மயமாக மேடம் தான் எல்லாம் செய்து  கொடுத்தார்கள்.

Urban planning : project estimate, tech.spec, work spec. 
TRA:  disconnection and reconection of telephone numbers. 
O& M: computer sation of MIS.
கடைசியாக பென்ஷன் section. :

Pension section ல்  pension calculation computer  ஆக ஆக்க 2010 இல் நாங்கள் அருண்மொழி மேடத்தின் உதவியை கேட்டோம். மேடம் அப்போது DE computer ஆக தல்லாகுளம் அலுவலகத்தில்  இருந்தார்கள். இரண்டு MCA students அனுப்பி 3 மாதங்கள் அவர்களை வைத்து பென்ஷன் calculation package முடித்தோம். அப்புறம் 2011 இல் பென்ஷன் revision வந்தபோது சரண்யா என்ற TTA வை அனுப்பி revision package போட்டுக் கொடுத்தார்கள். அந்த வருடம் 1500 pensioner க்கு மிகக்குறுகிய காலத்தில் revision work முடித்து GM medam and Pensioner association அவர்களிடமிருந்து appreciation letter  நாங்கள் வாங்கினோம்.. இந்த எல்லா விஷயங்களுக்கும் அருண்மொழி மேடம் தான் அடிப்படை காரணம். பென்ஷன் section il இன்று வரை work சுமுகமாக போய் கொண்டு இருக்கிறது


அப்போது GM office இல் நாங்கள் Lunch club ஒன்று form பண்ணினோம். அதில் DGM சந்திரிகா மேடம், அருண்மொழி மேடம்,  பத்மா DE medam, கோமதி, சுசிலா, ரத்தினம், கீதா வைத்தியநாதன், சாரதா ரமேஷ், வட்சலா ,  லக்ஷ்மி AO mam,  சிவகாமி, ஶ்ரீவித்யா, ஞான லக்ஷ்மி, வைகுனலக்ஷ்மி JTO, பானுமதி AO மேடம் என்று cadre difference பார்க்காமல் மதியம் லஞ்ச் சேர்ந்து சாப்பிடுவோம். Arunmozhi mam கடைசியில் AGM ஆக staff section ல் இருந்த போதும் எங்களுடன் லஞ்ச்ககு சேர்ந்து கொள்வார்கள். 
மேடத்தின் பெருமை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

மேடத்தின் இறுதி யாத்திரையில் நானும் கடைவரை கலந்து கொண்டேன் Sir.

Sir, நான் எங்கள் group il potta oru கவிதை ஒன்றை உங்களுக்கும் அனுப்புகிறேன் . 




மேடத்தை பற்றிய உங்கள் posting kku மிகவும் நன்றி sir. மிகவும் அருமையாக இருந்தது.

Thank you so much Sir.🙏🏻🙏🏻

 

23 comments:

Anonymous said...

ஆம். தோழி அருண்மொழி ஒரு சமூக மனுஷி.

அவரது இறுதி நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.

வருந்துகிறேன்.

முனைவர் நேருவின் கட்டுரை அவரை சிறப்பிக்கிறது. பாராட்டுகள் நேரு.💐

Anonymous said...

நன்றிங்க அண்ணே( திரு.சு.கருப்பையா,DGM BSNL (Rtd)...)

பாலகுமார் said...

மேடம் என்றும் நம் நினைவுகளில் வாழ்வார். சிறந்த அஞ்சலிக் கட்டுரை சார்.

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க சார்.அவரிடம் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும் இருந்தவர் நீங்கள்...ஆம்..நம் நினைவுகளில் என்றும் மேடம் வாழ்வார்.

Anonymous said...

Very good narration sir.real words about her..Her blessings are always with us...

SIMLA SARAVANAN FROM JAIHINDPURAM said...

மண்ணாய் இருந்த என்னை மண் பாண்டமாக மாற்றியவர்.
இன்று நான் நானாக இருப்பதற்கு விதை அவர்களே.
செய்வன திருந்த செய்
என்று அவர் காட்டிய வழி
என்னை இறுமாப்புடன் இன்றும்
வழி நடத்திச் செல்கிறது.

Anonymous said...

அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

முனைவர். வா.நேரு said...

"செய்வன திருந்த செய்
என்று அவர் காட்டிய வழி
என்னை இறுமாப்புடன் இன்றும்
வழி நடத்திச் செல்கிறது." அருமை.சரவணன் சார்.

Anonymous said...

எனது ஆங்கில அறிவு மற்றும் அலுவலக நடைமுறைகள் பற்றிய தெளிவு இரண்டும் அருண்மொழி மேடம் மூலம் கற்றவை. அவரது ஆங்கிலப்புலமை அசாத்தியமானது. அன்னாரது மறைவு மிகப்பெரிய இழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.நண்பர் திரு. நேரு அவர்களது பதிவு சரியான நினைவஞ்சலி

Anonymous said...

K. குட்டி வெங்கடாசலம்.

முனைவர். வா.நேரு said...

@K. குட்டி வெங்கடாசலம்....நன்றிங்க சார். அடிக்கடி இதனை நீங்கள் அலுவலகத்திலும் கூறியிருக்கிறீர்கள். தி இந்து பத்திரிக்கையில் வரும் Letter to the Editor..முதலில் மேடம் படிக்கச்சொன்னார்கள் என்று..மேடத்தின் ஆங்கிலப் புலமையும் அசாத்தியமானது என்பது உண்மைதான்..

Anonymous said...

உண்மையான பதிவு. நன்றி

Anonymous said...

ஆழ்ந்த இரங்கல்

Anonymous said...

Thank you Nehru sir. U have shared many information about madam, which I am unaware of even though she was friendly with me. Salutes to her service in the department as well as for the society

முனைவர். வா.நேரு said...

"நன்றி நேரு. அருண்மொழி மேடம் பற்றிய பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு. அவரின் மறைவு செய்தியை நேற்றுக் காலையில்தான் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் பெங்களூரில் இருப்பதால், அப்படியே உடனடியாகக் கிளம்பினாலும் அவரது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாது. நேற்றும் இன்றும் எனது குடும்ப உறுப்பினர் தவறிவிட்டதைப் போல் தவிப்பும், வருத்தமுமாய்தான் இருக்கிறேன். 1980 களில் நான் சென்னை CTTC யில் பணி புரிந்ததிலிருந்து எனக்கு நண்பர். விபாசனாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர். உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு அவரை இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு சென்று பார்த்தேன். அப்போது நன்றாகப் பேசினார். இவ்வளவு சீக்கிரம் முடிவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை." திரு எஸ்.எஸ்.( எஸ்.சுப்பிரமணியம்) அவர்கள், துணைப்பொதுமேலாளர் (ஓய்வு)..வாட்சப் வழியாக...

Anonymous said...

Thanks Mr.Nehru and Mrs. Rama Muthikumsran and others who paid anlali with grief. I, as Commercial Officer,
remember her ssrvices to BSNL and the society as she is the Operator batchmate of my spouse Mrs Lakshmi Raghavan.I condone and pray the Almighty for her soul rest in peace
Raghavan and LR.

முனைவர். வா.நேரு said...

"remember her services to BSNL and the society as she is the Operator batchmate of my spouse Mrs Lakshmi Raghavan".Thanks Sir,

Anonymous said...

அமைதியும் எளிமையுமாய் அலுவலகம் வந்து
ஆக்கத்துடன் அறிவுஜீவியாய் ஆற்றல்கள் பல புரிந்து
இங்கிலீஷ் மொழியில் இமாலய சாதனை செய்து
ஈகையிடன் சக ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டி
உற்சாகமாய் ஏற்ற பணிகளை முழுமையாய் முடித்து
ஊக்கமுடனே கணினித் துறையில் திறமை காட்டி
எங்கள் அனைவர்க்கும் வேலையில் 'முன்மாதிரியாய்'
ஏற்றமுடனே பீடு நடை போட்டு
ஐம்புலன்களையும் அலுவலில் அடக்கி
ஒருவர்க்கும் இங்கு நிகர் இல்லை என்று
ஓவியமாய் ஓய்வு பெற்ற பின்னரும்

அன்பாய் ஆத்ரவாய் இனிமையாய் ஈகையாய்
உவகையாய் ஊக்கமாய் உபகாரமாய் பலர்க்கும்
உதவிக்கரம் அனைத்து விதமாய் நீட்டி
எல்லோர் மனதிலும் ஏகாந்தமாய்
அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
அழியாப் புகழ் கொண்ட அருண்மொழியே-நீவீர்

கர்மயோகியாய் கடமை முடித்து
கடைசி யாத்திரையில் களங்கமில்லா முகங்கொண்டு
கனிவுடனே கண் மூடி நீங்கள் சென்ற
காட்சி என் மனதிற்கும் அழுகின்ற என்
கண்களுக்கும் உணர்த்திவிட்டது- உங்கள்
ஆத்மா சாந்தி அடைந்துவிட்டது என்றும்
அடுத்த பிறவி உங்களுக்கு இல்லை என்பதையும்!
ரமா முத்துக்குமார்

Anonymous said...

அலுவல் வேலை அனைத்திலும் ஆசானாய் இருந்து
அக்காவாய் அதீத பாசம் காட்டினீர்
ஆக்கமுடன் வேலைசெய்ய ஊக்கம் கொடுத்தீர்
அந்த ஊக்கத்தால் என்னைப் பல
ஆற்றல்கள் புரியச்செய்தீர்- நம்
அற்புதமான துறையின் மேலான
அவார்டை வாங்கச்செய்தீர்- உங்கள்
அன்புத்தோழி என்று என்னை மதிக்கச்செய்தீர்
அல்லல் கண்டு நான் கலங்கியபோது
அத்தனை விதமாயும் ஆறுதல் படுத்திய
அருமைத் தோழி அருண்மொழியே
அமரராகிய உம்முடல் மண்ணுக்குள் இன்று
அமரத்துவமான உமது நினைவுகள் மனசுக்குள் என்றும்.!

ரமா முத்துக்குமார்

Anonymous said...

எங்கள் சேவாலயம் மாணவர் இல்லத்தின் தாயை இழந்து தவிக்குறோம்

முனைவர். வா.நேரு said...

ஆமாம்..தன்னை சேவாலயம் மாணவர்களின் தாயாக எண்ணித்தான் தன் பணத்தை, நேரத்தை எல்லாம் செலவழித்தார்.

Anonymous said...

S am vathsala i worked sith her in computer cell and she guided me a lot and i got opportunity to learn computer wotks x cel pp etc. We worked in tmx buildjng as TO together. Athellam golden period sir. And we worked fr sevalayam students also. Humours all she enjoyd with us. Velaiku velai jollyku jolly ena irundom. V missed hr very much. She l b seeing us fm sorgam i belive. Tks sir fr your messages in nehru.blogspot.

முனைவர். வா.நேரு said...

வத்லசா மேடம், நினைவுப் பகிர்வுக்கு நன்றி. ஆமாம் அருண்மொழி மேடம் சில நேரங்களில் நல்லாவே கலாய்ப்பாங்க...நகைச்சுவை உணர்வு இயல்பாகவே உண்டு அவர்களிடம்...