Monday, 13 April 2026

தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கை படைப்புகள்... முனைவர் வா.நேரு

மக்கள் பல்கலைக்கழகமாக விளங்குவது ,தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகம்.அய்யா டாக்டர் கி.வீரமணி அவர்கள் வேந்தராக இருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புகளுக்கும் பெருமைகளுக்கும் உரியது.அதன் மொழித்துறைகள் சார்வாக  ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.பல்வறு ஆளுமைகள் எழுதிய 36 ஆங்கிலக் கட்டுரைகள், 8 தமிழ்மொழிக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் 386 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.திரு டாக்டர் பேரா பி.ஆர். வீரமணி அவர்கள் இதன் முதன்மை ஆசிரியராக இருந்து இந்த நூலை -Burgenoning Voices in Contemporary Literature என்னும் தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.  பெரியார் பன்னாட்டு மய்யம் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன்,PMIST-ந் துணைவேந்தர் டாக்டர் வி.ராமச்சந்திரன்,பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புகளில் உள்ள டாக்டர் ஆர்.மல்லிகா.டாக்டர் பி.கே.ஸ்ரீவித்யா,டாக்டர் எஸ்.புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.  நல்ல தொகுப்பு. மனமார்ந்த வாழ்த்துகள்,பாராட்டுகள்,இந்த இலக்கியப் பணிக்கு...எனது கட்டுரையும் 'தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கைப் படைப்புகள்' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

 






இதில் வந்திருக்கும் எனது கட்டுரை எழுத்து வடிவில்...


தற்கால இலக்கியத்தில் பெரியாரியல் வாழ்க்கை-படைப்புகள்

                   முனைவர் வா.நேரு

தற்கால இலக்கியம் என்பது வளர்ந்தோங்கி வரும் ஆலமரமாய்த் தமிழ் மொழிப்பரப்பில் இலக்கியக் காற்றை அள்ளி வழங்குகிறது.கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட இணைய வளர்ச்சி,சமூக ஊடகங்களின் வளர்ச்சி எல்லோரும் எழுதுவதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு படைப்பை எழுதி, பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு அது வெளிவருமா,வராதா என்று தெரியாது இருந்த காலம் எல்லாம் இன்று மாறியிருக்கிறது.அதைப்போல ஒரு  நூலை அச்சாக்குவதும் வெகு எளிதாக மாறியிருக்கிறது. நிறையப் புதிய புதிய பதிப்பகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய படைப்புகள் பலவும் தமிழ் மொழியில் வந்து கொண்டே இருக்கின்றன. வர்ணாசிரமத்தின் அடிப்படையில் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களும்,பிற்படுத்தப்பட்ட,பட்டியலின சமூகம் சார்ந்தவர்களும் தங்கள் வாழ்க்கையை ஓவியம் போலச் சமூகத்திற்கு தங்கள் எழுத்துகளின் வழியாகக் கடத்துகிறார்கள். அதைப்போலத் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் தங்கள் வாழ்க்கையை இலக்கியப் படைப்புகளாக மாற்றி இந்தச் சமூகத்திற்குத் தரும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன.அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரையாகும்.

பெரியாரியலும் வாழ்க்கையும்:

“ பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. அந்தக் கொள்கையைப் பின்பற்றினால், வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதற்கே இடம் இல்லை. பெரியார் கொள்கைகள் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவைப்படுகின்ற, மனித சமுதாயத்தை வழிநடத்துகின்ற ஒரு கொள்கைவழியாக இருக்கிறது. “(1) என்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஆமாம்,பெரியார் கொள்கை அல்லது பெரியார் இயல் என்பது ஒரு வாழ்க்கை நெறி.வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதைக்  காட்டும் பாதைதான் பெரியார் இயல். பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எதிர்நீச்சல் அடிப்பவர்கள் .சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக இருக்கும்   கடவுள் நம்பிக்கை, ஜாதி முறை ,பெண்ணடிமைத்தனம் என்பதை எல்லாம் எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் அவர்களின் போராட்டம் என்பது பெரும்பாலும் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அமைந்த போராட்டம். 

 

ஆனால் அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாகவும் அமைகிறது.   தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் எதிர்நீச்சல் அடித்து வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்கள்  மற்றவர்களுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார்கள் .அப்படி வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள், தங்கள் வாழ்க்கையைத் தாங்களே எழுதுகிறார்கள் அல்லது அப்படிப்பட்ட பெரியார் தொண்டர்களைப் பற்றி அவர்களின் குழந்தைகள் எழுதுகிறார்கள்.  அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பாக  இப்படிப்பட்ட படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில  ஆண்டுகளில் வெளிவந்த தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பற்றிய படைப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

 

அதற்காக அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் எழுதிய 'அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகள்', மதுரை சே.முனியசாமி அவர்கள் எழுதிய 'விறகு வண்டி முதல் விமானம் வரை ', புதுச்சேரி வி.இளவரசி சங்கர் அவர்கள் எழுதிய 'தணியாது எரியும் காடு' மற்றும் எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் எழுதிய 'பெரியவன் 'என்னும் நாவலும் இந்த ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 

 

1.அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்:( ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்)

 

இந்த நூல் திருத்துறைப்பூண்டியில் இருக்கும் நன்செய் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல்.செப்டம்பர் 2023-ல் வெளிவந்துள்ளது.மொத்தம் 144 பக்கம் உள்ள இந்த நூலின் விலை ரூ 150 ஆகும். இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் ஆவார்.

 

இந்த நூலின் முதல் பக்கத்திலேயே மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களைப் பற்றிய அறிமுகக்குறிப்பு உள்ளது.” திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் பிறந்தவர்.தஞ்சை மருத்துவக்  கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் 1971-இல் குடல் மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.பின்னர் அங்கேயே சிக்காகோவில் பணிபுரியத் தொடங்கினார்.தமிழின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட இவர் சிக்காகோ தமிழ்ச்சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆகியவற்றின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.பெரியாரியலைத் தன் வாழ்வியலாகக் கொண்ட இவர் பெரியார் பன்னாட்டு அமைப்பை  நிறுவி 26 ஆண்டுகளாகப் பல்வேறு முக்கியமான நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.இவ்வமைப்பு ‘வீரமணி சமூக நீதி விருது’ என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சமூக நீதி சார்ந்து இயங்கும் செயல்பாட்டாளர்களுக்கு விருதோடு ஒரு லட்சம் ரூபாய் வழங்கிப் பாராட்டி வருகிறது.தமிழ் ஈழம் சார்ந்தும் பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.மனித நேயமே உலகின் எதிர்காலம் என்று உறுதியாக நம்பும் இவர் கொள்கைப் பணியை முழு வீச்சாகக்கொண்டு தனது வாழ்விணையர் மருத்துவர் சரோஜா,குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.”(2) என்று குறிப்பிடப்பட்டுள்ளது

 

மொத்தம் 50 தலைப்புகளில், வாசிப்பவர்களை ஈர்க்கும்விதமாக ஒவ்வொரு தலைப்பும் குறைந்த பக்கங்களில் ஆனால் நிறைவான செய்திகளைக் கோண்டு எழுதப்பட்டுள்ளது.முதல் தலைப்பான ‘பிரியா விடை ‘,இந்த நூலின் ஆசிரியர்,அமெரிக்கா செல்வதற்கு முன் தந்தை பெரியாரிடம் சென்று வாழ்த்துப் பெற்றதையும்,தந்தை பெரியார் கேட்ட கேள்விகளையும்,அதற்குத் தான் தந்த விடைகளையும் எழுதியுள்ளார்.

 

தன்னுடைய என்னுரையில் “அரை நூற்றாண்டு வாழ்வின் பெரும்பகுதி.நான் ஓர் அய்ந்தாண்டுத் திட்டத்துடன்தான் அமெரிக்கா சென்றேன்.மேல் படிப்புப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம்.ஒரு லட்சம் ரூபாயுடன் தாயகம் திரும்பவேண்டும்.அய்ந்தாண்டுத் திட்டங்கள் சரியாக நிறைவேறுமா? பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் உள்ளேன்.!

தந்தை பெரியாரவர்களிடம் விடை பெற்றுச் சென்றேன்.வாழ்வில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.வெற்றிகள்,தோல்விகள்,இன்பம்,துன்பம் அனைத்துமேதான் வாழ்வு” என்று குறிப்பிட்டு மேலும் “ எனக்கு மானமிகு ஆசிரியர் அவர்களின் தொடர்பும்,அளவுகடந்த அன்பும் ,அவரிடம் கற்றுக்கொண்ட ஏராளங்களும் ஓரளவிற்காவது கட்டுப்பாட்டைக் கொடுத்தன.சிந்தனைத் தெளிவு பெறத் தொடங்கியது.

அடித்த புயல்களை ஆழமான நங்கூரமாக இருந்து அளவிட முடியா அன்பால் நடத்திச்சென்ற பெருமை என் வாழ்விணையர் சரோ அம்மையாரைச் சேரும்.பொறுமையின் சிகரம்,துணிவின் திறமை,உதவும் இதயம் அனைத்தும் பெற்றவர்…”(3) என்று அவரின் என்னுரை தந்தை பெரியாரியலை வாழ்வில் ஏற்றதால் பெற்ற ஏற்றங்களைப் பட்டியலிட்டு,அய்யா ஆசிரியர் அவர்களின் தொடர்பு . எப்படியெல்லாம் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொடுத்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

இந்த நூலுக்கான வாழ்த்துரையை அய்யா சோம.வேலாயுதம் அவர்களும் அவரது இணையர் அம்மா கலைச்செல்வி வேலாயுதம் அவர்களும் கொடுத்துள்ளார்கள்.

 

இந்த நூல் பெரியாரியலை ஏற்றுக்கொண்ட மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் எப்படி மனித நேயமிக்கயத் தொண்டினை ஆற்றக்கூடியவராக இருக்கிறார் என்பதையும்,அவரது மருத்துவப் பணிகளையும்,அமரிக்காவில் அவர் மேற்கொண்ட பல்வேறு தமிழ்ப் பணிகளையும்,ஈழத்துயரங்களை நீக்க அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும்,அமெரிக்காவில் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள் பற்றியும்,பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவான விதம் பற்றியும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக நடைபெற்ற மாநாடுகள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டு ‘மனித நேயமே பெரியார் ‘ என்னும் தலைப்பிட்ட கடைசிக் கட்டுரையோடு இந்த நூல் நிறைவு பெறுகிறது.

 

இந்த நூலை முழுவதுமாகப் படித்துமுடித்தபோது, எத்தனை பணிகள்,எத்தனை இடையூறுகள் ,அவற்றைத் தாண்டி எத்தனை மனித நேயப்பணிகள் என்று ஒட்டுமொத்தமாகப் படிக்கிறபோது மிகப்பெரிய பிரமிப்பும் வியப்பும் உண்டாகிறது.

 

இந்த நூலுக்கு அணிந்துரையை ,’அணிந்துரை அல்ல ; எமது நன்றியுரை’ என்று திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

“… அணிந்துரை எழுதிட பதிப்பாளர் கேட்டார்; நான் எழுதுவது அணிந்துரை அல்ல; அவருக்கு நன்றி உரை.என்னை 32 ஆண்டுகளுக்கு முன் வாழவைத்து ,இன்றும் எனது தொலைதூர ( மிக அருகில் என்றும் உள்ளத்துக்கு மிக அருகில் உள்ள) மருத்துவ மற்றும் மனித நேயக்காவலர்.

பட்ட கடனை அடைக்கவே இந்த நன்றி உரை.நான் மட்டுமல்ல ,என்னைப் போல எத்தனையோ மனிதர்கள் அவரது கருணையால்,உதவியால், நட்பால்,வற்றாத அன்பால் வாழுகிறார்கள் என்பதே அவர் பெறும் ஊதியம்.அவருக்கு உறுதுணையாய் டாக்டர் சரோஜா இளங்கோவன்.

அறிவு ஆசான் தந்தை பெரியாரின் அறிவுரையும்,கொள்கைப்ப்பாதையும் அவரை,அவரது குடும்பத்தைக் குருதிக் குடும்பம்,கொள்கைக் குடும்பம் என இரண்டையும் நாளும் உயர்த்திவைக்கும் பணியைச் செய்து,இப்போது அவரது படைப்பு விருந்து பெரியார் பன்னாட்டு அமைப்பு என்பதற்கே கலங்கரை வெளிச்சமாகியுள்ளது ..’(4) என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

 

தந்தை பெரியாரின் அறிவுரையும் கொள்கைப்பாதையும் நாளும்  அவரை உயர்த்திக்கொண்டே இருக்கும் பணியைச் செய்கிறது என்ற அடிப்படையில் பாராட்டி மகிழ்ந்திருக்க்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள்.

 

இப்படி இந்த நூல் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர்,பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்து வருவது எப்படி அவரது குருதிக் குடும்பத்திற்கும்,கொள்கைக் குடும்பத்திற்கும் பயன்படுகிறது என்பதையும் அதையும் தாண்டி அவர் விரும்பும் மனித நேயம் உலகில் தழைக்க அவர் எப்படியெல்லாம் பணியாற்றுகிறார் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

 

2. விறகு வண்டி முதல் விமானம் வரை:

 

இந்த 'விறகு வண்டி முதல் விமானம் வரை' என்னும் நூல் ஒரு தன் வரலாற்று நூலாகும்.இந்த நூலை ஆக்கித் தந்திருப்பவர் 75 வயதைக் கடந்த மதுரையில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ஆவார். இவர் மதுரை மாநகர் மாவட்டத்தின்  திராவிடர் கழகத்தின்  காப்பாளராகவும் இருக்கிறார். சென்னையைச் சார்ந்த கீழடி வெளியீட்டகம் என்னும் பதிப்பகம்  இந்த நூலை வெளியிட்டுள்ளது.இதன் முதற்பதிப்பு 2024 ஆகும் .200 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை ரூ 200 ஆகும்.

 

இவர் 5-ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஒரு கரடுமுரடான ஊரிலே பிறந்தவர்.இளமைக் காலத்தில் சொல்லண்ணாத் துயரங்களை வாழ்க்கையில் அனுபவித்தவர். ஆனால் எல்லாக் காலத்திலும் தன்னம்பிக்கையோடு முன்னேறியவர்.இவரின் தன் வரலாற்று நூலான ‘விறகு வண்டி முதல் விமானம்வரை ‘ என்னும் நூல் 30 தலைப்புகள் உடைய நூலாகும்.இது முழுவதுமாக அவரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

 

இந்த நூலுக்கான வாழ்த்துரையை மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் பழக்கடை அ.முருகானந்தம்,முனைவர் வா.நேரு,தங்களுடைய கவிதை வாழ்த்துரையை பாவலர் சுப.முருகானந்தம், பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

 

 இந்த நூலுக்கு 'இது அணிந்துரை அல்ல; பாராட்டுரை- கனிந்துரை ' என்று  தலைப்பிட்டு திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கனிந்துரை  அளித்துள்ளார்கள்.அதில் "  மதுரையில் இருந்து ஏறத்தாழ 100 கி.மீ.க்கு அப்பால்  கடற்கரைக்கு அருகில் உள்ள கொம்பூதி என்ற ஒரு குக்கிராமத்தில் பிறந்து- ஏழ்மையிலேயே புரண்டும், சோம்பலின்றி இடையராத உழைப்பின் உருவமாகி, 'பஞ்சம் பிழைக்க' இன்றைய தஞ்சை மாவட்டம் 'பெரியார் நாடு'  என்று கழகத்தவரால் கொள்கை மகிழ்ச்சி பொங்க அழைக்கும் ஊரகப் பகுதியில், பற்பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, விறகு பிளப்பதைப் போல ,ரத்தத்தை வியர்வையாக்கி, தனது உடலாலும், உள்ளத்தாலும், தன்னம்பிக்கையாலும், தன்னிகரற்ற சுய முயற்சி- துணிவு, கனிவு இவற்றுடன் வாழ்ந்து, பிறகு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து, கற்றறிந்த படிக்காத மேதை ,நடிக்காத மாமனிதர் தோழர் மதுரை முனியசாமி அவர்கள் கிராமிய மொழியிலே- தனது வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களைச் சுவைபட எழுதி, வாசகர்களைச் சொக்க வைத்த 'சொக்கத்தங்கம்' ஒளிருவது போல உண்மைகளை ஒளிர வைத்துள்ளார் தோழர் சே. முனியசாமி!. கனிவு கலந்த மகிழ்ச்சி வெள்ளம்!.

 

 ஒளிவு மறைவின்றி, ஒப்பனைகளுக்குச் சிறிதும் இடமின்றி, உண்மைகளைக் களமாட விட்டு, நம் மனதில் மகிழ்ச்சியைப் படமெடுத்து ஆடும்படி செய்ய தனது படைப்பாற்றலை பொதிகை போல் வீசச் செய்து, வியப்பை நமக்கு வாரி வாரித் தருகிறார், உழைப்பில் உவகை கண்ட முனியசாமி என்ற 'பட்டிக்காட்டு தோழர்!'(5) என்று பாராட்டி இன்னும் பல செய்திகளைச் சொல்லி அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தப் பாராட்டுரையை நூலுக்குக் கொடுத்துள்ளார்கள். 

 

இந்தப் பாராட்டுரையைப் படிக்கும்போதே நமக்கும் ஓர் உற்சாகமும் ,மகிழ்ச்சியும் கிடைப்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் பெரியாரியலை அடிப்படையாக வைத்து நாணயத்தால் ,தன்னுடைய உழைப்பால் வெற்றி பெற்றவரின் வாழ்க்கை வரலாறு இது.

 

பத்து ரூபாயை வட்டிக்கு வாங்கிக்கொண்டு தன்னுடைய சொந்தக் கிராமத்திலிருந்து தன்னுடைய தாயோடு மதுரைக்குப் பஞ்சம் பிழைக்க வந்த அய்யா சே.முனியசாமி அவர்கள் “மதுரையில் திராவிடர் கழகக் கட்டிடம் ,பெரியார் மணியம்மையார் மன்றம் அமைப்பதற்காகச் சென்ற ஆண்டு ரூபாய் பத்து இலட்சம் நன்கொடையை அய்யா தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தேன்.

 

தந்தை பெரியார் சிந்தனை எனக்குக் கிடைத்ததால் நானும் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன்.மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ் என்னால் ஆன உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறேன்.செய்து கொண்டே இருப்பேன்….”(6) என்று கூறி இந்த நூலை முடித்திருக்கிறார்.

 

“ தந்தை பெரியாருடைய இயக்கத்திலே சேர்ந்த பின்னாடிதான் அறிவுபூர்வமாக சிந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டது…ஆரம்ப காலத்திலிருந்தே நாணயம் என்பதை மிகக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்துவந்தேன் “ என்றெல்லாம் குறிப்பிட்டுள்ள அய்யா சே.முனியசாமி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்,அதன் பிறகு  உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.ஏறத்தாழ 25 வெளி நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவங்களைப் பற்றியெல்லாம் இந்த நூலில் விவரித்து எழுதியிருக்கிறார். எங்கு சென்றாலும் பெரியாரியல் பார்வையோடு தான் அந்த நாட்டைப் பார்க்கும் பார்வையைப் பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பெனலாம்.

 

        3. தணியாது எரியும் காடு:

‘தணியாது எரியும் காடு’ நூலின் ஆசிரியர் வி.இளவரசி சங்கர் ஆவார்.முதல்பதிப்பு அக்டோபர் 2023. இதனை நூலாக்கம் செய்தவர் புதுவை யுகபாரதி.சாரல் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.204 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை ரூ 180 ஆகும்.

நூலின் 3-ம் பக்கத்தில் நூல் ஆசிரியர் வி.இளவரசி சங்கர் அவர்களைப் பற்றிய அறிமுகம் உள்ளது.”  புதுவை அரசு- இலக்கிய விருதாளர்.எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,பேச்சாளர்,புத்தக விமர்சகர் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த 25 ஆண்டுகளாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுநிலைச் சுருக்கெழுத்தாளாராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள திருவானைக்காவல் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்…’பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ‘ மாநிலத் துணைச்செயலாளர்”(6) என்று குறிப்பிட்டு இவர் எழுதிய புத்தகங்கள்,விருதுகள் பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 25 தலைப்புகளில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.இந்த நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,”தனது தந்தையின் வாழ்க்கைச் சூழலை-வாழ்வியல் சிறப்பை-ஒரு குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதத்தொடங்கி,அதன் வழியாகச் சமுதாயச் சிக்கல்களையும், ஜாதி எனும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளையும் ,கற்போர் அறிந்து கடந்த காலத்தின் கொடுமைகளை எண்ணிப் பெருமூச்சுவிடும் ஒரு நூலை தோழர் வி.இளவரசி சங்கர் அவர்கள் தனது கனத்த உள்ளத்தோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளார் என்பதற்குப் பாராட்டுகள்.

ஜாதி எனும் கட்டுமானத்தில் சிக்கித் தவிக்கும் ஜாதியில் பிறந்திட்ட தனது தந்தையார் –பெரியாரின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு ,தான் மட்டும் மனிதன் ஆக நினையாது மனித குலத்தையே ஜாதிச் சகதியிலிருந்து  காப்பாற்றப்போராடிய மனித நேயப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தனது தந்தைவழி தானும்,தான் வாழும் ஊரும்- நாடும் பெற்றிட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட்டுள்ள பாங்கு வெகு சிறப்பு…. “(7) எனக்குறிப்பிட்டு சிறப்பாக கொடுத்துள்ளார்.

இந்த நூலுக்கான வாழ்த்துரையை மறைந்த திராவிடர் கழகச் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு,முனைவர் வா.நேரு, மகிழ்வுரையைப்  பேரா முனைவர் அரங்க மல்லிகா ஆகியோர் அளித்துள்ளனர். என்னுரையை வி.இளவரசி சங்கர் மிக விரிவாகக் கொடுத்துள்ளார்.அதில் ‘’தணியாது எரியும் காடு’ என்ற தலைப்பிலான என்னுடைய இந்த நூலில் பல ஆண்டுகளாக எனக்குள் நான் அடைப்போட்டுக்கொண்டே இருந்த பல நிகழ்வுக்ளைத் தொகுத்து எழுதியிருக்கிறேன்.

இவற்றில் என்னைப் பண்படுத்திய சில நிகழ்வுகளும் உண்டு; என்னைப் புண்படுத்திய சில நிகழ்வுகளும் உண்டு;கசப்பும் உண்டு;இனிப்பும் உண்டு.அனைத்தும் உண்மை நிகழ்வுகளே.எதையுமே மிகைப்படுத்தி எழுதவில்லை.நான் கண்ட்தை-கேட்டதை அப்படியே எழுதி இருக்கிறேன்.சில இடங்களில் மட்டும் சில கரணியங்களுக்காகச் சில பெயர்களை மாற்றி இருக்கிறேன்.

எல்லாக் குழந்தைகளுக்குமே அவர்களுடைய அப்பாதான் அவர்களின் முதல் கதாநாயகனாக இருக்கிறார்கள். இருக்கவேண்டும்.

எங்கள் அப்பா எங்களுக்கு எடுத்துக்காட்டான அப்பாவாகவும்,ஒரு நல்ல தோழனாகவும் ஒரு  நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.அதுதான் இன்றைய எங்களுடைய செழிப்பான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பெரியாரியத்தைத் தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து எங்களுக்கெல்லாம் எப்படி ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்பதைப் பற்றி இந்நூலில் எழுதி இருக்கிறேன்…”(8) என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

மொத்தம் 25 தலைப்புகளில் இந்த நூலின் கருத்துகள் எழுதப்பட்டுள்ளன. ‘அன்பே உருவான தனது தந்தை விசாகரத்தினம்,தன் குழந்தைகளுக்கு மங்கையர்க்கரசி,அறிவழகன்,இளவரசி,தமிழரசி எனப் பெயர் சூட்டியது மட்டுமல்லாது ,பெயர் சூட்டக் கேட்ட குழந்தைகளுக்கெல்லாம் அருமையான தமிழ்ப் பெயர்களைச் சூட்டிய தமிழ்ப்பெயர் ஆர்வலர் அய்யா விசாகரத்தினம்,8 வயதில் தன் தந்தையால் தந்தை பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டுப் பெரியார் கொள்கையாளராக மாறிய அய்யா விசாகரத்தினம்,வனத்துறையில் ஆனஸ்ட் விசாகரத்தினம் எனப்பெயர் வாங்கிய அய்யா விசாகரத்தினம், தன் பிள்ளைகள் மீன் பிடிக்கச்சென்றபோது கடுமையாகத் தண்டித்த தந்தையாக அய்யா விசாகரத்தினத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சுவைபட, இந்த நூலில் விளக்கியிருக்கிறார் இளவரசி.

காலையில் குழந்தைகளைக் கடவுள் மறுப்பு வாசகங்களைச் சொல்லவைப்பது,சிறு குழந்தைகளைக் கவனிப்பது,குளிக்கவைப்பது,தீபாவளி துக்க நாள் என்பதைக் குழந்தைகளே உணரும் வண்ணம் உணரவைப்பது,சுடுகாட்டிலிருந்து கொண்டுவந்த எலுமிச்சம் பழங்கள்,புடைப்பதற்கு அப்பா கொடுத்த முறம் எனப் பல சுவையான நிகழ்வுகள் அருமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன “(9) என்று வாழ்த்துரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல வாசிக்க,சுவைபட எழுதப்பட்ட ஒரு நூலாக இந்த நூல் விளங்குகிறது.

‘உன் சாத்திரத்தை விட,உன் முன்னோரை விட ,உன் வெங்காயம் விளக்கமாத்தை விட,உன் அறிவு பெரிது,அதைச்சிந்தி’ எனச்சொன்ன பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களையும்.

‘அறிவைத் தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு நிழல் போல் உங்களைத் தேடி ஓடி வரும் ‘ எனச்சொன்ன அறிவுலக மேதை அண்ணன் அம்பேத்கர் அவர்களையும் வணங்குகிறேன்’(10) என்று குறிப்பிட்டுத்தான் இந்த நூலாசிரியர் தன்னுடைய என்னுரையைத் தொடங்குகிறார்.

தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்று, தன் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, தன் குழந்தைகள் பெரிய,பெரிய பதவிகளுக்குப் போட்டித்தேர்வுகள் எழுதி செல்வதற்கான வாய்ப்பினை உருவாக்கி,ஜாதி எதிர்ப்புப் போராளியாக விளங்கிய தந்தை பெரியாரின் தொண்டர் பற்றி அவரின் மகள் எழுதிய ‘தணியாது எரியும் காடு ‘ என்னும் நூலும் சுட்டிக்காட்டப் படவேண்டிய ஒரு நூலாகும்.

        4.‘பெரியவன்’ என்னும் நாவல்:

வாழ்க்கை வரலாறு என்னும் நூலாக மட்டுமல்லாது, புனைவுகளின் வழியாகவும் தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களின் வரலாறு எழுதப்படுகின்றது. அந்த வகையில் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தால் பாராட்டைப் பெற்ற ‘பெரியவன் ‘ என்னும் நாவல் குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஆவார். இது தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்று , திராவிடர் கழகத்தில் தொண்டராகவும்,அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளராகவும்,விவசாயியாகவும் திகழ்ந்த சுந்தரபுத்தன் அவர்களின் தந்தையான ‘ஒளிச்செங்கோ ‘ என்னும் புனை பெயருடைய நடராசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையில் அமைந்த  நாவலாகும்.

இந்த நாவலை சென்னையைச் சார்ந்த தமிழ்வெளி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.207 பக்கங்கள் உள்ள இந்த நாவலின் விலை ரூ 300

பெரியாரின் தொண்டராக இருந்த நடராசன் அவர்களின் தீராத வாசிப்புத் தாகம் இந்த நாவல் முழுவதும் விவரிக்கப்படுகிறது. வாசிப்பதை நேசித்த நடராசன், எப்படி எல்லாம் அன்றாட வாழ்க்கைச் சூழலுக்குள் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டார் என்பதும் விவரிக்கப்படுகிறது.

இந்த நாவலில் தந்தை பெரியார் அவர்கள் ,விடையபுரம் என்னும் இடத்தில் பயிற்சி முகாம் நடத்தியதும்,அதில் முதன் முதலாக ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை ‘ என ஆரம்பிக்கும் கடவுள் மறுப்பு வாசங்கங்களைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியதையும் விளக்கமாக எடுத்து வைக்கிறது. புனைவு கலந்த ஒரு நாவலில், ஒரு மிகப்பெரிய வரலாறாக அமைந்த ஒரு பயிற்சிமுகாமின் முழுமையான விவரிப்பு இடம் பெற்றிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

வாழ்வில் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதனை எப்படி பகுத்தறிவோடு சிந்திந்து சந்தித்து வெளியே வந்தார் என்பதையும், தொடர்ந்து சைக்கிளில் பல கிலோமீட்டர்கள் தினந்தோறும் பயணம் செய்து தனது பத்திரிக்கை செய்தியாளர் என்னும் பொறுப்பினை திறம்படச்செய்தார் என்பதையும் மிக விரிவாக இந்த நாவல் நமக்கு எடுத்துரைக்கிறது.

1980 காலகட்டங்களில் கொராடாச்சேரி,திருவாரூர் பகுதிகளில் நடந்த அரசியல் செயல்பாடுகளையும் இந்தப் புதினம் எடுத்து வைக்கிறது. ஒரு குடும்பத்தில்  நடக்கும் பல்வேறு நிகழ்வுகள்,பாடுகள்,மூட நம்பிக்கையால் நிகழும் சாவுகள்,அதனைத் துப்புக் கண்டுபிடிப்பது போல் தேடிக்கண்டு பிடித்துப் பத்திரிக்கைக்குச் செய்தியாக அனுப்பவது போன்ற பல்வேறு விவரிப்புகள் இந்த  நாவலை உயிர்ப்பாக  நாம் படிப்பதற்கு உதவி செய்கிறது.

1980-காலகட்டங்களில் எப்படிப்பட்ட தகவல் தொடர்பு வசதி இருந்தது என்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது. கணினியும், இண்டர் நெட்டும், வலைத்தளங்களும், வாட்சப்பும் இல்லாத அந்தக் காலங்களில் மனிதர்கள் எப்படி செய்திகளை அனுப்பினார்கள்,அதற்கு எப்படியெல்லாம் முயற்சிகளை எடுத்துக்கொண்டார்கள் என்பது விவரமாக இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. காவிரியின் கடைமடைப் பகுதியான கொரடாச்சேரி பகுதிகளில் விவசாயிகள் எப்படி எல்லாம் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவல் ஓட்டத்திலேயே,கதையின் போக்கிற்குள்ளேயே , சேலத்தில்  நடந்த திராவிடர் கழக மாநில மாநாடு பற்றிய செய்திகள் உள்ளே வருகின்றன.  வரலாற்று நிகழ்வுகளை, நாவலின் வாசிப்பு சுவை குன்றாமல் எப்படி உள்ளே இணைத்து எழுதுவது என்பதற்கு எடுத்துக்காட்டான நாவலாக இந்த நாவல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

வல்லம் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் 26.11.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இரு சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழாவில்,‘‘பெரியவன்’’ என்ற நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.அந்த ஏற்புரையில்

“1971 ஆம் ஆண்டு எங்கள் ஊரிலேயே அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் அப்பாவுக்குத் திருமணம் நடந்தது. தம்பி, தங்கை உள்ளிட்ட எங்கள் மூவருக்கும் நடந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது அய்யா ஆசிரியர் அவர்கள், பக்கத்தில் ஏதோ ஓர் ஊரில் இருப்பதுபோலத் தோன்றும். அந்த அளவுக்கு அவரது வருகை இருக்கும்.

இந்த அழகிய தருணத்தில் அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தையின்மீது பேரன்புகொண்டவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அந்த அன்பின் விளைவுதான் இந்தப் பரிசும்  பாராட்டும்.

ஊருக்கு வந்தால், ‘‘ஒளிச்செங்கோ எங்கே’’ என்று கேட்பார். இன்று அப்பா இருந்திருந்தாலும் அந்தக் குரல் கேட்டிருக்கும். எப்போது அய்யா ஆசிரியர் அவர்களைச் சந்தித்தாலும், ஒரு புத்தகம் தருவதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா.

அன்றாட வாழ்வில் எல்லாக் கணங்களிலும், அய்யா பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று பேசத் தொடங்கிவிடுவார் அப்பா. அக்குவேறாக ஆணிவேறாக என்று கிராமத்தில் சொல்வார்கள். அப்படி நுட்பமாகத் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தவர்.

இதை, எனக்கு வழங்கிய விருதாக நினைக்கவில்லை. என் தந்தையின் எளிமையான பங்களிப்புக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்.”(11) என்று குறிப்பிட்டு இன்னும் விரிவாக உரையாற்றியிருக்கிறார். இந்த  நாவல் அடுத்த பதிப்புக் காணும்போது ,சுந்தரபுத்தன் அவர்களின் ஏற்புரையும் நாவலில் இணைக்கப்படும் அளவிற்கு ,சுந்தரபுத்தன் அவர்களின் ஏற்புரை விரிவாகவும்,உணர்ச்சி மிகுந்ததாகவும் இருக்கிறது.

முடிவுரை: கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விற்பனையாகும் நூல்களாகத் தந்தை பெரியார் எழுதிய நூல்கள் இருக்கின்றன.அவரின் கொள்கைகள் கவிதைகளாக,கட்டுரைகளாக வடிக்கப்படுகின்றன.அவரது கொள்கைகளை ஏற்று வாழ்ந்தவர்களை, வாழ்கிறவர்களை அடிப்படையாகக்கொண்டு புனைவுகளில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.அப்படிப் பார்க்கின்றபோது மேலே குறிப்பிட்ட  தன் வரலாற்று நூல்களும், நாவலும் மிகச்சிறப்பாகப் பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்தவர்கள்,வாழ்கிறவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண முடிகிறது. வரும் காலங்களில் இன்னும் மிக அதிகமான படைப்புகள், பெரியார் தொண்டர்களைப் பற்றி வரும் என்பதற்கான முன்னோட்டமாக ,தற்காலத் தமிழ் இலக்கியத்தில் வெளிவந்த மேற்கண்ட நூல்களை எடுத்துக்கொள்ளலாம்.

 

குறிப்புதவி

1.   பெரியார் ஒரு வாழ்க்கை  நெறி- கவிஞர் கலி பூங்குன்றன்,திராவிடர் கழக வெளியீடு.

2.   அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் (ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்) –மருத்துவர் சோம.இளங்கோவன்,நன்செய் பிரசுரம் வெளியிடு.

3.   மேலது

4.   மேலது

5.   விறகு வண்டி முதல் விமானம் வரை – சே.முனியசாமி,கீழடி வெளியீட்டகம்.

6.   மேலது

7.   தணியாது எரியும் காடு வி.இளவரசி சங்கர்.சாரல் பதிப்பகம்

8.   மேலது

9.   மேலது

10. மேலது

11. விடுதலை நாளிதழ், நவம்பர் 30,2025.








Sunday, 12 April 2026

கேட்பார் இல்லையா?...

 

முடை நாற்றம் வீசும்

மூட நம்பிக்கைகள்தான்

முதலீடு..

ஒன்றிய அரசின்

அமைச்சர்கள் முதல்

எளிய மனிதர்கள்வரை…

 

மூளைக்குள் போடப்பட்ட

மூட நம்பிக்கை விலங்கு…

கழட்ட முடியாத அளவிற்கு

பின்னிப் பிணைந்து கிடக்கிறது

இந்திய ஒன்றியத்தில் !

அரசியல்வாதிகளுக்கும்

சாமியார்களுக்கும்

கள்ள உறவு…

களவாணிகள் உறவு ..

 

செயற்கை நுண்ணறிவு

பாம்பு கடிக்கு விரைவான

மருத்துவம் கொடுக்கலாம்!

மருத்துவமே கொடுக்காமல்

இப்படிக் கங்கை நீரில்

மிதக்க விட்டால்…

அநியாயமாய் ஓருயிர்

போனது ஊடகத்தின்

வாயிலாகத்தான் தெரிகிறது..

 

சாமியார் சொன்னான் எனப்

பாம்பு கடித்த பையனை

கங்கை நீரில் கட்டிலில்

படுக்கவைத்து மிதக்க

விட்ட பெற்றோர்கள்!

அதை வேடிக்கை பார்த்த

அத்தனை மனிதர்கள்!

மருத்துவமனைக்கு

கொண்டுபோங்கடா முட்டாள்களே

எனச் சொல்ல ஒருவனுக்கும்

வாய் வரவில்லையா?

துணிவில்லையா சொல்வதற்கு ?…

 

மூடநம்பிக்கை எனச்சொல்லி

நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது

என உச்ச நீதிமன்றத்தில்

ஒன்றிய அரசு எதிர்

மனுதாக்கல் செய்கிறது…

என்னங்கடா நாடு இது!

கேட்பார் இல்லையா !

சொல்வார் இல்லையா !

 

                              வா.நேரு,13.04.2026



 

(அம்ரோகா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்..

மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அசைவற்றுக் கிடக்கும் சிறுவனை சுற்றி ஏராளமான மக்கள் வேடிக்கை பார்ப்பதும், ஏதேனும் அதிசயம் நடக்கும் என காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த அற்புதமும் நிகழவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

நன்றி: தி இந்து தமிழ்

.

 

 

 

 

Saturday, 11 April 2026

‘காலச்சுவடு’ சிறப்பிதழ் 1991...

 

‘காலச்சுவடு’

சிறப்பிதழ் 1991

என் கைகளில் இருக்கிறது..

இதனை எனக்கு

அளித்தவர் இப்போது

இவ்வுலகில் இல்லை!

இயற்கையோடு

இயற்கையாய் கலந்துவிட்டார்!

 

அவர் கொடுத்துச்சென்ற

புத்தகம் எனது

கைகளில் தவழ்கிறது…

அந்தச் சிறப்பிதழில்

படிக்கும் ஒவ்வொரு

கவிதையும் ஒவ்வொருமாதிரி!

அதில் இருக்கும்

கதைகளும் கூட அப்படியே!

 

ஒவ்வொரு கவிதையையும்

படிக்கும்போதும்

மறைந்துபோன நண்பர்

மனதிற்குள் வருகிறார் !

இணக்கமாக எனது

அருகில் நின்று அந்தக்

கவிதையின் நயம்

பற்றிப் பேசுகின்றார் !

 

‘புளித்த மாவு’ அப்போதே

புராணத்தின் அடிப்படையில்

பல பக்கங்களுக்கு புலம்பித்

தள்ளி இருக்கிறது!

சிறுகதை என்று

சொல்லப்படும் அதனை

இருமுறை படித்தபின்பும்

எதுவும் புரியாத நிலையில்

அருகில் நிற்கும் நண்பர்

சிரிக்கிறார்! ‘இவாள்

அவாளின் பிரதிநிதி’ என்று

அப்போதே சொன்னேன்!

உணர்ந்தாயா? என்கிறார்..

 

 

உன்னைப்போலும்

என்னைப் போலும்

தொலைபேசி நிலையத்தில்

வேலைபார்த்தவர் இன்று

‘ஒரு கோடி பரிசு தருகிறேன்’

என்கிறார்…புரிந்துகொள்..

அவரின் பின்புலத்தை என்கிறார்

 

சிறப்பிதழுக்குள் இருக்கும்

இன்னும் சில சிறுகதைகளை

வாசிக்கும்போது

கதைக்குள்ளிருந்து அவர்

உயிர்த்தெழுகிறார் !

‘காக்கா’ கதை என்ன

சொல்ல வருகிறது

என்பதை உணர்ந்தாயா

என்று என்னிடம் விவாதிக்கிறார்!

 

வாசிக்க, வாசிக்க

மறைந்து போன எனது

அருமை நண்பர் ந.முருகனை

நினைவுபடுத்திய

சிறப்பிதழுக்கு என்

இதயம் நிறை நன்றி !

 

                              வா.நேரு,

                               12.04.2026

  

Thursday, 9 April 2026

ஆற்றில் பாலைக் கொட்டும் அறிவிலிகாள்!...

 

              ஆற்றில் பாலைக் கொட்டும் அறிவிலிகாள்!...

 

பட்டினியால் பசித்து

அழும் குழந்தைகள்

பல கோடி இருக்கும் நாட்டில்

நம்பிக்கை எனும் பெயரில்

இப்படி பல்லாயிரம் லிட்டர்

பாலை ஆற்றுக்குள் ஊற்றி

இருக்கிறீர்களே நியாயமாடா இது/

 

கடவுள் என்று ஒருவர்

இருந்தால் இப்படி

பாழாக்கும் பாலைப் பார்த்து

சும்மா இருப்பாராடா?

நீங்கள் சொல்லும் கதைபோல

சுளீர் எனச் சாட்டையால்

எடுத்து அடிக்க மாட்டாராடா?

 

ஆற்றில் கொட்டிய பாலை

ஒரு பாத்திரத்தில் பிடித்த

குழந்தையைத் திட்டி

அவசரம் அவசரமாய்

ஆற்றுக்குள் ஊற்றிய கொடுமையை

சில நாட்களுக்கு முன்னால்

ஊடகங்களில் பார்த்தோம்…

 

ஏன் இப்படி ஆற்றுக்குள்

ஊற்றுபவர்கள்  நாம்

ஏந்தும் பாத்திரத்தில்

ஊற்ற மறுக்கிறார்கள் எனப்

பசித்திருக்கும் அக்குழந்தைகள்

பரக்க பரக்க முழித்த

நிலையைப் பார்த்தோம்…

 

சடங்குகளால் வாழும்

மூன்று சதவீத்ம் மீண்டும்

மீண்டும் சடங்குகளைப்

புதுப்பிக்க புதுப்புதுக் கதைகளைப்

புனைந்து பரப்புகிறது…

 

கொடுக்கும் கட்டளையை

செயற்கை நுண்ணறிவு

சில நொடிகளில்

முடித்துக்கொடுக்கிறது!

 

ஆற்றில் பாலைக்

கொட்டும் அறிவிலிகளின்

மூளைக்குள் சென்று

ஏதேனும் செய்ய இயலுமோ

செயற்கை நுண்ணறிவால்?

                             வா.நேரு,09.04.2026

(செய்தி : மத்தியப்பிரதேசத்தில் 11000 ஆயிரம் லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றி வழிபாடு)

 

Monday, 6 April 2026

விருது பெற்ற மலையாள மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்.அஞ்சு அவர்களுடன் கலந்துரையாடல்(2)

 










‘ஜாய் ஆப் லிவிங்க் என்பதை வாழ்க்கையை இன்பமாக்க’ என்று மலையாளத்தில்   நீங்கள் மொழி பெயர்த்த அனுபவம் பற்றி’

‘இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஊக்கப்படுத்தும்(Motivational) கட்டுரைகள்.அன்றாட வாழ்வில் நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதையும், நாம் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்பதையும் இந்தக் கட்டுரைகளில் திரு.வீரமணி அவர்கள் குறிப்பிடுகின்றார். ‘திங்கட்கிழமை  நோய்’ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் ஆய்வு செய்து இந்தத் திங்கட்கிழமை நோய் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறது.வாரத்தின் திங்கட்கிழமை எல்லோருக்கும் ஒரு ஸ்டார்ட்டிங் டிரபில் இருக்கும்.சனி, ஞாயிறு விடுமுறையில் இருந்துவிட்டு,திங்கட்கிழமை படிக்கவோ,வேலைக்கோ போகும்போது ஏற்படும் தயக்கம்தான் இந்த நோய். இந்த நோய் எனக்குப் படிக்கும்போது இருந்தது.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வரை இருந்தது. ஆனால் இந்த நூலைப் படித்தபிறகு இது நமக்கு மட்டும் இருக்கும் தயக்கம் இல்லை. திங்கட்கிழமை தயக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பது தெரிந்தபிறகு ,இதைப் படித்தபிறகு எனக்கு அந்த நோய் போய்விட்டது.(சிரிக்கிறார்).

இந்த நூல்  நேர் மறை எண்ணங்களை நம் மனதிற்குள் விதைக்கிறது.அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணத்தை இந்த நூலின் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தி,அந்த நூலின் சிறப்புகளை இந்தக் கட்டுரைகளில் கொடுத்திருக்கிறார்.’ என்றார்.

‘ஆமாம், வாழ்வியல் சிந்தனைகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டிய புத்தகம் ‘தி செவன் கேபிட்ஸ் ஆப் ஹைலி எப்பக்டிவ் பீப்பிள்’ என்னும் புத்தகம்.ஸ்டீபன் ஹவே என்பவர் எழுதியது. வாழ்வியல் சிந்தனைகள் மூலமாக நான் அறிந்துகொண்ட அந்தப் புத்தகம் என் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. அந்தப் புத்தகத்தை நிறையப் பேருக்கு அன்பளிப்பாக்க் கொடுத்திருக்கிறேன்.பல நேரங்களில் அந்தப் புத்தகத்தைப் பற்றிய காணொளிகளைக் காலையில் கேட்கிறேன். இப்படி மாற்றம் ஏற்படுத்தும் பல புத்தகங்களைத் தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் தோடர்ந்து அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்து கொண்டிருக்கிறார்…’

என்று சொன்னவுடன் அஞ்சு ‘நானும் அந்தப் புத்தகத்தைப் படிக்கிறேன்’ என்றார்.

அய்யா வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 19 தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன.2004-ல் ஆரம்பித்து,இன்றைக்கு வரை விட்டுவிட்டுத் தொடர்ந்து விடுதலையில் வாழ்வியல் சிந்தனைகளை எழுதிக்கொண்டுள்ளார். படித்தவர்கள் எல்லாம் வியக்கும் கட்டுரைகளாக இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன.படிக்கின்றவர்கள் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.

அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,இயக்கக் கொள்கைகளைப் பரப்ப உலகம் முழுவதும் பயணம் செய்யக்கூடியவர்.அவர் அப்படிப் போகும் இடங்களில் அவர் விரும்பிப் போகும் இடம் நூலகங்கள். நல்ல நூல்களை உலகம் முழுவதும் அவர் தேர்ந்தெடுத்து,படிக்கின்றார். அவற்றில் மிகச்சிறப்பானவற்றை, வாழ்வியல் சிந்தனைகளில் எழுதுகின்றார்.அதன் மூலம் ஆயிரக்கணக்கான புத்தக விரும்பிகள் பயன் பெறுகின்றார்கள் என்று சொல்லிவிட்டு,

மதுரைக்கு அவர் வந்தால் என்னைப் போன்றவர்கள் நூல்களை அவருக்குக் கொடுத்து வரவேற்போம். மதுரைக்கு அவர் காலையில் 5 மணிக்கு வருகிறார்,அவரை வரவேற்று ஒரு நூலைக் கொடுத்துவிட்டு, மாலையில் அவரைப் பார்க்கச்சென்றால், அந்த நூலைப் படித்து முடித்து இருப்பார். நூலைப் பற்றிய ஒரு விமர்சனம் சொல்வார். எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கும். நான் அறிந்தவரையில் இப்படி  நூலை உயிராக நேசிக்கக்கூடிய வேறு ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை என்றேன்.இவரைப் போல இவ்வளவு விரும்பி நூல்களை வாசிக்கும் வேறு ஒருவரைக் கண்டதில்லை என்றேன்.

ஒரு பக்கம் இடைவிடாத கொள்கைப் பிரச்சாரப்பயணம். இன்னொரு பக்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்.கல்வி நிறுவன்ங்கள் மீது பெரும் கவனம் செலுத்துகிறார். சென்னை பெரியார் திடலில் இருந்து விடுதலை,உண்மை,பெரியார் பிஞ்சு,தி மாடர்ன் ரேசனலிஸ்டு, திராவிடப்பொழில் போன்ற இதழ்கள் வெளிவருகின்றன.அந்த இதழ்களின் ஆசிரியராகவும், புரவலராகவும் இருக்கின்றார். அந்தப் பணிகள் ஒருபக்கம்.இந்த 93 வயதில் அவரின் உழைப்பை நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது என்று ,அவர் மொழி பெயர்த்திருக்கும் நூலின் ஆசிரியர் பற்றி அவரிடம் விளக்கினேன்.பின்பு .

‘நீங்கள் மொழிபெயர்ப்பு எப்படிச் செய்கிறீர்கள்…’ என்று கேட்டபோது .

. ‘நான் முழுக்க முழுக்கச் சுயமுயற்சியால் மொழிபெயர்ப்புச் செய்கிறேன். எந்தவிதமான அறிவியல் தொழில் நுட்பத்தையும்  பயன்படுத்துவதில்லை. முதலில் எந்த விதமான விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலை முழுவதுமாக ஒரு முறை படிப்பேன். பின்பு முதல் அத்தியாயத்தை மீண்டும் படிப்பேன்.அதில் தெரியாத சொற்களுக்கு மலையாளத்தின் அகராதியைப் பார்ப்பேன். பின்பு ஒவ்வொரு வாக்கியமாக மொழி மாற்றம் செய்வேன்.இப்படியே ஒவ்வொரு அத்தியாயமாக மாற்றுவேன். ஒரு நூலை மொழிபெயர்ப்புச் செய்ய எனக்குக் குறைந்தபட்சம் 2 மாதமாகும்.’ என்றார்.

‘ஒருவர் மொழி பெயர்ப்பு துறைக்குப் புதிதாக வர விரும்புகிறார் என்றால் நீங்கள் அவருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்..’ என்று கேட்டபோது

‘முதலில் வருமானம் வரக்கூடிய ஒரு வேலையில் இருக்கவேண்டும். இதனை ஒரு விருப்பத்திற்கான தொழிலாகச் செய்யவேண்டும். கூகுள்,செயற்கை  நுண்ணறிவு போன்றவற்றின் மூலம் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்கும், நாமாகச் சுயமாகச் செய்யக்கூடிய மொழிபெயர்ப்புக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. வேறுபாட்டை எளிதில் கண்டு பிடிக்க முடியும். சுய மொழிபெயர்ப்புத்தான் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.. ‘ என்றார்.

 

 ‘நீங்கள் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தீர்கள் எப்படி வந்தீர்கள் என்பது பற்றிச் சொல்லுங்கள்…’ என்றபோது .

‘நான் மொழிபெயர்ப்பு துறைக்குள் வருவதற்குக் காரணம் பெரியார்தான்.எனக்கு வழிகாட்டி பெரியார்தான்.இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் என்னைப்போன்ற இன்று வாழும் ஒரு பெண்ணுக்கு வெளிச்சமாக இருக்கின்றார். பெரியாரின் கருத்துகள் மிகச்சிறப்பாக இருக்கிறது.அதனை மலையாளத்தில் கொண்டு வரவேண்டும் என்ற தூண்டுதல்தான் இந்தத்துறைக்குள்  நான் வரக்காரணம். அடுத்து மைத்திரி பதிப்பகத்தின் உரிமையாளர் லால் சலாம் மற்றும் அவரது மனைவி மாயா லால்சலாம் ஆகியோரின்  ஆதரவும் தூண்டுதலும் காரணம்.

எனது தந்தை கேரள போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பணியாளர். அம்மா வீட்டு வேலை. நான் ஒரு தனியார் பள்ளியில் நூலகராக இருக்கிறேன்.அந்தப் பள்ளி ஒரு மேல்நிலைப்பள்ளி.எனது தாய் ,தந்தை இருவருமே நிறைய நூல்களை வாசிப்பவர்கள். எனக்குச் சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் உண்டு. வாசிக்காதே,எழுதாதே என்று எனது பெற்றொர்கள் எப்போதும் சொன்னதில்லை.அவர்கள் எனது எழுத்துக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள்’ என்றார்.

‘அய்யா ஆசிரியரின் எழுத்துகளின் மீதும் தந்தை பெரியாரின் எழுத்துகளின் மீதும் இவ்வளவு ஆர்வம் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு எங்கள்  விருந்தினாராக வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தேன். மகிழ்ச்சியோடு வருகின்றேன் என்றார்.

திராவிடப்பொழில் இதழுக்கு, நீங்கள் ஆங்கிலத்தில் கட்டுரை தாருங்கள்,மற்றவர்களுக்கும் சொல்லி இந்த இதழுக்கு கட்டுரை வாங்கித் தாருங்கள் என்ற வேண்டுகோளையும் வைத்து,லால் சலாம் இல்லத்தினர் அளித்த விருந்தோம்பலை ஏற்று எனது மகன் சொ.நே.அன்புமணியும்   நானும் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்..



 நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1-15,2026

சென்ற உண்மை இதழில் வந்த கட்டுரை...
விருது பெற்ற மலையாள மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ்.அஞ்சு அவர்களுடன் கலந்துரையாடல்(1)






Friday, 3 April 2026

அண்மையில் படித்த புத்தகம் : அன்னை வயல் ..சிங்கிஸ் ஐத்மாத்தவ்- பூ.சோமசுந்தரம்

 



அண்மையில் படித்த புத்தகம் அன்னை வயல்( நாவல்)

 நூல் ஆசிரியர்  :  சிங்கிஸ் ஐத்மாத்தவ்(ருஷ்ய மொழியில்)

 தமிழில்                : பூ சோமசுந்தரம்

 பதிப்பகம்              : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்

  நாலாவது பதிப்பு செப்டம்பர் 2023,151 பக்கங்கள் விலை ரூ135

அண்மையில் எழுத்தாளர் சுந்தர புத்தனின் ‘பெரியவன்’ நாவலைப் படித்த போது அவர் தனது தந்தை படித்த புத்தகங்களில் ஒன்றாக, தானும் படித்த புத்தகமாக ‘அன்னை வயல்’ என்பதைக் குறிப்பிட்டு இருந்தார் நானும் எனது மகனும் புத்தகக் கடைக்குச் சென்றபோது இதை வாங்கி வைத்திருந்தேன்.நேற்று அன்பு,அப்பா இதைப்படியுங்கள்,மிக நன்றாக இருக்கிறது என்றான். எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு எப்பேர்ப்பட்ட ஒரு நாவலைப் படிக்காமல் விட்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வுதான் ஏற்பட்டது.

மொத்தம் 151 பக்கங்கள்தான். ஆனால் ஒரு நீள்கவிதையைப் படிப்பது போலச் சொற்கள்.மூன்று  தலைமுறையின் வாழ்க்கையை, அவர்களின் பாட்டை, அவர்களின் காதலை, அவர்களின் அறியாமையை, அவர்களின் தியாகத்தை,அவர்கள் ஏமாந்து போவதை, அவர்கள் இன்பத்தைத் தொலைப்பதை, துன்பத்தில் துவண்டு அழுவதை, எந்த நிலையிலும் உழைப்பதை விடாத அந்த விவசாய மக்களை அற்புதமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் சிங்கிஸ் ஐஸ்மாத்தவ். ஒரு  தாய், அவளின் வாழ்க்கைப் போராட்டம்தான் கதை.முதல் 50 பக்கங்களில் இளம்பெண்ணாக இருக்கும் தல்கோனின் அழகு, அவள் காதல் வயப்பட்டுக் கைபிடிக்கும் அவளது கணவன் ஸீவான்குல்.இருவரும் விளையாட்டும் களிப்புமாக ஈடுபடும் காதல், பின்பு மணவாழ்க்கை. மூன்று குழந்தைகள் காஸிம், மாஸெல்பேக்,ஜைனாக்..அவர்களின் பிறப்பும் ,வளர்ப்பும்.மகன் காஸிம் காதலித்துக் கைபிடித்து வரும் அலிமான். மருமகளை மகளைப் போல எண்ணி அன்பு செலுத்தும் மாமியாராகத் தல்கோன்.தல்கோன் சொல்கிறாள் ஓரிடத்தில், ‘ அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மகள் பிறக்கவேண்டும் என்று நான் உள்ளுக்குள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது.நமக்கு ஒரு பெண் வேண்டும் என்று மிகவும் விரும்பியது ஒரு வேளை இதற்குக் காரணமாயிருக்கலாம்.ஆனால் அது மட்டுமே காரணமல்ல.அவள் விவரம் அறிந்தவளாக,உழைப்பாளியாக,கண்ணாடி போலத் தெளிந்தவளாக இருந்ததே காரணம்.என்னுடைய சொந்த மகள் போலவே அவள் மேல் பற்று வைத்துவிட்டேன்.” என்று சொல்கிறாள்..

தஙல்கோனும் அவளது கணவன் ஸீவான்குல்லும் தங்களுக்கு என்று  ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்கள்  கூட்டுப் பண்ணையில் உழைக்கிறார்கள் டிராக்டர் என்கிற இயந்திரம் முதன் முதலில் அந்தப் பெண்ணின் கணவர் வழியாக ஊருக்குள் வருகிறது. அது எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியது. அந்த இயந்திரத்தை ஓட்டுவதற்காகச் சென்ற கணவன் எப்படிக் கற்றுக் கொண்டான். கற்றுக் கொள்வதற்கு எப்படி எல்லாம் அவன் பாடுபட்டான். படித்துக் கொண்டிருக்க கூடிய தன்னுடைய பிள்ளைகளிடம் இருந்து எழுத்தை கற்றுக் கொள்வதற்காக எப்படி அவன் ஒரு மாணவனாக உட்கார்ந்து கற்றுக் கொண்டான் என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்

அமைதியான நதியாய் உழைப்புடன் கூடிய இன்பத்தோடு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் திடீரென்று போர் அறிவிப்பு வருகிறது. இரண்டாம் உலகப் போர் என்பதை நாம் வெறுமனே கடந்து போகிறோம் ஆனால் ஒரு போர் எப்பேர்பட்ட கொடுமையைச் செய்யும் அதிலும் சர்வாதிகார மனப்பான்மையில் உள்ள ஒரு கேடுகெட்டவனால் ஒரு போர் ஆரம்பிக்கப்பட்டால் எப்படி உழைக்கும் மக்களை அது பாதிக்கும் என்பதற்கு இந்த நாவல் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

முதலில் இளம் மனைவி அலிமானை விட்டுவிட்டு முதல்மகன் காஸிம் போருக்குச் செல்கின்றான்.பின்பு பொதுவுடமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு பொதுவுடமைக் கட்சியில் பொறுப்பில் இருக்கும் இரண்டாவது மகன் மாஸெல்பேக் போருக்குச்செல்கிறான்.பின்பு கூட்டுப்பண்ணைத் தலைவனாக இருக்கும் கணவன் ஸீவான்குல் போருக்கு அழைக்கப்படுகிறான். செல்கிறான். கடைசியில் 18 வயது  நிறைவடைந்தவுடன் கடைசி மகன் ஜைனாக்கும் போருக்குச் செல்கிறான். அனைவரும் சென்றபின்பும் ,கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்பை ஏற்று,கிராமத்தையே கவனிக்கும் தலைவியாகத் தல்கோன் மாறுகிறாள்.அவளோடு அலிமானும் இணைந்து உழைக்கிறாள். இருவருக்கும் தங்கள் கணவன்மார்கள் போர் முடிந்து திரும்ப வந்துவிடுவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது.உழைக்கிறார்கள்,உழைக்கிறார்கள்,கவலை மறந்து உழைக்கிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் செய்தி வருகிறது. மாமியாரும் மருமகளும் விதவையாக மாறிப்போகிறார்கள். கணவனை இழந்த மாமியாரும்,மருமகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாய், அன்பாய் எதையும் பகிர்ந்து கொண்டு துன்பத்தில் துவண்டாலும், அழுகையை அடக்கிக் கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவர்கள் நடத்திய  விதத்தை இதற்கு மேல் எவரேனும் எழுத முடியுமா என்கிற அளவுக்கு இந்த நாவலாசிரியர்  எழுதியிருக்கிறார்.

புறநானூற்றிலே நாம் படித்திருக்கிறோம் தன்னுடைய கணவன் இறந்த பின்பு தன்னுடைய மகனையும் போருக்கு அனுப்பியதாக ஆனால் இந்த நாவலில் தன்னுடைய கணவனை மட்டுமல்ல தன்னுடைய மூன்று குழந்தைகளையும் போருக்கு அனுப்பி விட்டு ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மரணமடைந்த செய்தி அவளுடைய காதுகளுக்கு எட்டுகிறது. .

ஆனாலும் கூட்டுப் பண்ணையில் தலைவியாக அந்தக் கிராமத்திற்கு உழைத்துக் கொண்டே இருக்கிறாள் தன்னுடைய மருமகள் அலிமான் உள்ளத்திலே, உடம்பிலே ஏற்படுகின்ற மாற்றங்களைக் கவனிக்கிறாள். அதனை அவள் ஏற்றுக் கொள்கிறாள் நான் முழுமையாக நாவலின் கதையைச் சொல்ல விரும்பவில்லை உங்களின் வாசிப்பு அனுபவத்தை அது தடுக்கக் கூடும் ஆனால் இந்த நூலை வாசித்தால் ஒரு அற்புதமான நூலை வாசித்து அனுபவம் உங்களுக்குக் கிட்டும். நேற்றைய பொழுது அப்படி ஒரு வாசிப்பு அனுபவப் பொழுதாக அமைவதற்கு இந்த  நாவலை எடுத்துக் கொடுத்துப் படியுங்கள் என்ற எனது மகன் சொ.நே.அன்புமணிக்கு மனமார்ந்த நன்றி. வாசித்துப் பாருங்கள். இந்த  நூலை வாங்கிப் படியுங்கள். வாங்கி உடனே படிக்க முடியவில்லை என்றாலும் கூட வாங்கி வீட்டில் வைத்திருங்கள். எப்போது தோன்றுகிறதோ,நேரம் கிடைக்கிறதோ அப்போது எடுத்துப் படியுங்கள் நமது வீட்டு  நூலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு  நூல்.ஓர் அற்புதமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர். மொழி பெயர்ப்பு நாவல் என்று சொல்ல முடியாத அளவிற்கு, உயிரோட்டமாய் இந்த நாவலை மொழி பெயர்த்திருக்கிறார் பூ.சோமசுந்தரம்.அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.இப்படி ஒரு நூலைக் கொடுத்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.