Sunday, 25 April 2021

இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும்.....

 அன்பு நண்பர் நேரு அவர்களுக்கு,

செல்லாத பணம் பற்றி *உங்கள் பார்வையில்* எழுதப்பட்ட உங்களது மதிப்புரை மிகச் சிறப்பு. குறை ஒன்றும் இல்லை. எனினும் என்னுடைய பார்வையில் அந்தப் புத்தகம் பற்றிய மதிப்பீடு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபட்டது.

2019 லேயே அந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை நமது குழுவில் பதிவு செய்துள்ளேன். அந்தப் பதிவின் பிரதி என்னிடம் இப்போது இல்லாததாலும், புத்தகத்தை வாசித்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும் என் நினைவிலிருந்து எழுதுகிறேன். 

கதையின் நாயகி படித்தவள். ஓரளவு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவள். படித்த இந்தக் காலத்துப் பெண்கள் ஓரளவேனும் தெளிவான முடிவெடுக்கக் கூடியவர்கள் (என்று நம்புகிறேன்). அப்படிப்பட்ட நாயகி ஆட்டோ ஓட்டும் ஒரு ஆணாதிக்க வெறியுள்ள குடிகார, பொறுக்கியைக் காதலனாக வரிப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தமிழ் சினிமாவில் மட்டுமே இது நடக்கும். யதார்த்தம் அப்படியில்லை. அந்தக் குடிகார, பொறுக்கி காதலனுக்காக தனக்குக் கிடைத்த அரிதான வேலை வாய்ப்பை உதறிவிட்டு அவனைக் கரம் பிடிக்கிறாள். யாருடைய அறிவுரையாலும் அவள் முடிவை மாற்ற முடியவில்லை. சரி, கல்யாணம்தான் ஆகிவிட்டது; அதற்குப் பிறகும் அவன் திருந்தவில்லை. நாயகியின் மீது வன்முறை பிரயோகம் அதிகமாகிறது. அப்போதாவது அவனைப் பிரிந்து வந்து விடலாம். செய்யவில்லை. கணவனே கண் கண்ட தெய்வம்? வன்முறையின் உச்சமாக அவள் தீயில் கருகி உயிருக்குப் போராடி மரணம் அடைகிறாள். மரண வாக்குமூலத்தில்கூட அந்தப் பொறுக்கிக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டு இறக்கிறாள். என்னே பதிவிரதா மகிமை! 

நாயகியை ஒரு படிக்காத தற்குறியாய், பத்தாம்பசலியாய் படைத்து அவளின் குடும்பம் வறுமையில் வாடுவதாய்க் காட்டியிருந்தால் ஒருவேளை அவளின் தவறான முடிவிற்கும், திருமணம் ஆகியபின் தொடரும் அதீத வன்முறையைச் சகித்துக் கொண்டு பிறந்தவீடு வராமல் இருப்பதற்கும் ஒரு நியாயம் இருப்பதாகக் கருதலாம். அப்படியும் தீயில் வெந்து சாகும் தருவாயில் கொடுக்கும் மரண வாக்குமூலத்தில் கணவனைக் காப்பாற்ற முயல்வது அபத்தத்தின் உச்சம். ’நாடகக் காதல்’ என்று சில அரசியல் தலைவர்கள் சொல்லுவதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.

காலம் காலமாய், திருவள்ளுவர் முதற் கொண்டு (தெய்வம் தொழாள்…) பெண்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட  அடிமைத்தனத்தை அவர்களுக்குத் தரும் கல்வி விலக்கும் என்று பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வளர்த்த நம்பிக்கையைத் தகர்த்து, என்னதான் படித்தாலும் பெண் அடிமையாக, கையாலாகத்தனம் உள்ளவளாக, புழுவினும் கேவலமாகத் தான் இருக்கிறாள் என்று இந்தக் கதையில் இமையம் நிறுவுகிறாரா? அநீதி கண்டு பொங்கி எழாமல் அதற்கு பணிந்து போவதுடன் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதுபோல் நாயகி நடந்து கொள்வது அயற்சியையும் கோபத்தையும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு உண்டாக்குகிறது. இதை இமையம்தான் எழுதினாரா என்று வியக்க வைக்கிறது. மற்றபடி மருத்துவமனை நிகழ்வுகள் மனம் கலங்கும்படி இருக்கின்றன.

சாகித்ய அகடாமி விருதுக்கு இமையம் 100 சதம் தகுதியானவர் என்பதில் துளியும் ஐயமில்லை. அதற்காகத் தேர்ந்தெடுத்த நாவல்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு விருதும் சமூக நீதி, பெண் விடுதலை, சமூக முன்னேற்றம், சமுதாய முன்னெடுப்பு, மனித நேயம் ஆகியவற்றைப் பிரச்சார நெடியின்றி, யதார்த்தமாக, மக்கள் மனதில் படும்படி எழுதப்பட்ட படைப்புகளுக்கே தரப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த வகையில் இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும் என்பதே என் எண்ணம்.

மேலே சொன்னவை ஒரு வாசகனாய் என் சொந்தக் கருத்து. இதில் பல வாசகர்கள் மாறுபடலாம்.


திரு.எஸ்.எஸ். அவர்கள், 'வாசிப்போர் களம் ' வாட்சப் குழுவில் என்னுடைய 'செல்லாத பணம் ' நூல் விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதியது.

No comments: