Thursday 15 April 2021

தோழர் ஓவியாவின் உரையின் சில துளிகள்


சத்தமிட்டுப் பேசிக்கொள்ளும்

பெண்களே...

உங்களுக்காகத்தான் பேசுகிறோம்

நாங்கள்...

கொஞ்ச நேரம் மட்டும்

உங்கள் செவிகளை

எங்கள் பக்கம் கொடுங்கள்

என வேண்டுகோள் வைக்கின்றார்....


வைதீகத் திருமணம் 

நம்மை நாமே இழிவுபடுத்துவது..

சுயமரியாதைத் திருமணம்

நமக்கு நாமே 

மரியாதை செலுத்துவது...


எங்களது பிள்ளைகளிடம் நாங்கள்

முதலில் திருமணம் வேண்டுமா 

என்பதனை  முடிவு செய்யுங்கள்

என்றுதான் சொல்கின்றோம்..


அப்படி வேண்டும் என்று முடிவெடுத்தால்

இணையரைத் தேர்ந்தெடுத்து

எங்களிடம் சொல்லுங்கள்...

என்றும்தான் சொல்கின்றோம்...

பின்பு  இப்படி

திருமணத்தை முடித்துவைக்கிறோம்

என்றுதான் சொல்கிறோம் 


1946-ல் தந்தை பெரியார் பேசிய

உரை உங்கள் கைகளில்

நூலாய்த் தவழ்கிறது...

இப்படி ஒரு திருமணத்தில் 

அவர் பேசியதுதான் நூலாய் இன்று....


எவ்வளவு மாறுதலை எதிர்பார்த்து

பேசியிருக்கிறார் அவர்...

இன்னும் அப்படியே இருக்கிறோமே நாம்..

இந்தியாவிற்குள் மாட்டிக்கொண்டதால்

இப்படி இருக்கிறோமோ?....

அமெர்த்தியா சென் சொன்னதுபோல

தனித்துப் போய் இருந்தால்

உலகில் தலை நிமிர்ந்து இருப்போமோ?...

அய்யா விரும்பிய மாற்றம்

அனைத்துமே நிகழ்ந்திருக்குமோ?...


இந்தத் திருமணத்தில் 

பெண்கள் நிறைய இருக்கிறீர்கள்

பரவாயில்லை ...குறைவான

நகை அணிந்துதான் அமர்ந்திருக்கிறீர்கள்...


முன்பெல்லாம்

திருமணத்திற்கு மணப்பெண்ணை 

அழைத்துச்சென்று அலங்கரித்தார்கள்

இப்போதோ திருமணத்திற்கு வரும்

அனைவருமே அழகு நிலையம் 

சென்றுதான் வருகிறார்கள்...


நாம் பெண்கள்...

வெறும் அலங்காரப்பொம்மைகளா நாம்?

நகை மாட்டும் ஸ்டாண்டுகள்தானா நாம்?

கைகளில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட

அய்யாவின் நூலை வாசித்துப்பாருங்கள்!


சாதி மறுப்புத் திருமணம்

சடங்கு மறுப்புத் திருமணம்

தாலி மறுப்புத் திருமணம்..

காதல் திருமணம்...

ஏற்றுக்கொண்ட இணையர்களின்

பெற்றோர்களுக்கு  எங்கள் நன்றி...


கேள்விகளால் அரங்கத்தை 

நிமிரச்செய்து

தெளிவான குரலில்

செறிவான கருத்துகளை

மேடையிலே எடுத்து வைத்து...

மதுஸ்ரீ-மணிமாறன் 

இணையேற்பு விழாவை 

இன்றைய நாளில் 

மதுரையில் நடத்திவைத்த

தோழர் ஓவியாவின் உரையின்

சில துளிகள்....


                       வா.நேரு,14.04.2021


3 comments:

anandam said...

அருமை... பதிலாக தொகுப்பிட்டது நன்று

Ramakrishnan said...

சிறப்பான பதிவு தோழர்

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்,வ்லைப்பதிவுக்கு உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்