Tuesday 15 February 2022

படைப்பாளர் என்ற முறையில் நான் அளித்த நேர்காணல் ...வா.நேரு


என்னுடைய நேர்காணல்...வா.நேரு

 https://youtu.be/-M9ATtDX0r4


முதலில் இன்றைய நிகழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த தோழர் அர்ஷா அவர்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.


விருந்தினர் படைப்பாளர் வா‌. நேரு அவர்கள் தனது சிறப்பான சிந்தனைகள்  மூலம் நமது எண்ணங்களை மிளிர வைத்துள்ளார். 


குறிப்பாக "மற்றவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அப்படி நான் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்." என்பது போன்ற கருத்துக்கள் மனதில் பதிந்தன. 


வட்டாரமொழி வழக்குகள், வாசிப்பு  பழக்கம், பெண்ணியம் பற்றிய  கருத்துக்கள் அருமை. வாசிப்பு பழக்கத்திற்காக நூலகத்தில் 9 டோக்கன்களை வைத்திருப்பது, குடும்பத்தில் இருப்பவர்களையும்  வாசிக்கத் தூண்டுவது கற்றுக்கொள்ள வேண்டியது. மேலும் நிறைய நூல்களைப் படிபவர்கள் அனைவரும் படைப்பாளியாகமுடியும் எனத் தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 


"வயலில் விடிந்தது போல" என்ற கவிதை இப்படித் துவங்கி


//கணினி முகத்தில்தான் 

எனது விடியல் 

எனது தாத்தா -பாட்டன் 

வயலில் விடிந்ததுபோல!

...

வயிற்றுப் பசி அடங்கியது 

என் காலத்தில்... 

அறிவுப் பசி தொடர்கிறது 

என் காலத்திலும்

என் பிள்ளைகள் காலத்திலும்!

...

இணையத்திற்குள் 

கருத்துக்களால்

இணையும் 

இளைஞர்களைப் பார்க்கிறபோதும்... 

ஒரு நாள் முழுதாய் விடியும் எனும் நம்பிக்கை வலுக்கிறது மனதில்!// வா.நேரு


இப்படியான சிந்தனைகளுடன் கவிதைகளைப் படைத்து நம்மிடம் உலாவ விட்டிருக்கிறார் தோழர் நேரு அவர்கள்.


பகுத்தறிவு பகலவனின் பாதையில் படைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியும் வரும் தோழர் நேரு அவர்களின் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்,  முனைவர் பட்ட ஆய்வேடுகள், எழுதிக்கொண்டுள்ள புதினம் ஆகியவை நூல்களாக வெளிவரவும், அவர் தம் எண்ணங்கள் எண்ணியபடி நடந்து பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்ளவும், விருதுகள் பல பெறவும் வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் தோழர் சுனிதா , ஒளி, இளங்கோ மற்றும் கேள்விகள் கேட்ட நேச உறவுகள், கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அன்புடன்,

வினிதா மோகன்.


------------------------------------------------------------------------------------------------------------


"தனக்கொரு பாதை;

தன்கொரு பயணம்; 

தனக்கொரு கொள்கை; அதற்கொரு தலைவன்!"

என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப, வள்ளுவர் வழியையும் பெரியார் நெறியையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அவர்களது அறச் சீற்றத்தைத் தன் குருதியோடு கலந்துகொண்ட அறிஞர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், படைப்பாளர் தோழர் நேரு அவர்கள், நமக்குக் கிடைத்த ஒரு போற்றத் தகுந்த ஆளுமை.


இந்தியச் சூழலைப் பொருத்தவரை, கடவுள் கொள்கை மனிதத்திற்கு எதிராக உள்ளது என்பதை அவர் தெளிவு படுத்திய விதம் இங்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை "கடவுளை மற; மனிதனை நினை!" என்பதுதான் என மாறுபாடின்றி வலியுறுத்துவதாக உள்ளது.


தோழி அர்சா, எங்கள் வீட்டுக்கு வந்து, எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடிச் சென்றார். 

ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வாசம் என்பது போல் நம் குழுவில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை! எல்லாமே மனதைக் கொள்ளை கொள்வதாக உள்ளன.


பயனுள்ள பொழுது! நன்றிகள்.

பேராசிரியர் மகாதேவன் அவர்கள் வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில்

----------------------------------------------------------------------------------------------------------


முனைவர் வா.நேருவுடன் கலந்துரையாடல் .  பணிச்சுமை காரணமாக  கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் youtube ல் கண்டு களித்தேன். மிக அருமையான உரையாடல். தேர்ந்தெடுக்கப்பட்ட தெளிவான கேள்விகளை தொடுத்தார் தோழி. அர்சா அதற்கு தன் வாழ்க்கை அனுபவம் மூலமும் கற்றறிந்த அறிவின் வாயிலாகவும் மெச்சத்தகுந்த பதில்களை அளித்தார் முனைவர்.                             12 வயதில் கிளை நூலகத்தில் தன் படிக்கும் பயணத்தை ஆரம்பித்து வளர வளர அனைத்து வகை இலக்கியங்களையும் படைப்புகளையும் தன் கைக்கொண்டு வாசித்து அவரும் வளர்ந்து வாசகனையும் வளர்த்த பாங்கு மிக அருமை. பேச்சில் தெளிவும் சரளமான வார்த்தைகளும் நிகழ்ச்சியை சுவையாக்கியது.  இந்த குழுவில் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் குழந்தையாய் உணர்கிறேன். 

மரு.அன்புச்செல்வன் திருமார்பன். அவர்கள் வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில்

------------------------------------------------------------------------------------------------------------

அர்ஷாவிற்கு  முதல் பாராட்டு. தெளிவான குரலில் தெளிவான கேள்விகள். நேரு அண்ணனை அறிமுகம் செய்த சுனிதாவிற்கு வாழ்த்துகள்.

நேரு அண்ணா...  

அண்ணனின் ஒவ்வொரு நேர்காணலுக்குப் பிறகும் அண்ணனின் உயரம் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தனது படிக்கும் ஆர்வத்தின் மையப்புள்ளியான தனது அன்னையில் தொடங்கி, தோழர் முருகன் மற்றும் திராவிடக்கழகம், நூலகம் முதல் இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் வரை அனைத்தையும் பதிவுசெய்தது, முனைவராக காரணமான வழிகட்டி ஐயா ஞானசம்பந்தனை நினைவூட்டியது இப்படி தன்னை செதுக்கியவர்கள் அனைவரையும் வரிசை படுத்திவிட்டார்.

அதே போல் மற்றவர்கள் எழுத்தை பாராட்டுவதில்  அண்ணனுக்கு நிகர் அவரே....

செயற்கரிய செய்வார் பெரியர்... 

உண்மை அண்ணா... நீங்கள் பெரியர்..

நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நன்றிகள்.


அண்ணன் லோ.குமரன் அவர்கள் வாட்சப் குழுவில்...

-------------------------------------------------------------------------------------------------------------

இவர்களுக்கும் இன்னும் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவில் வாழ்த்திய,நிகழ்ச்சியைப் பாராட்டிய அத்தனை தோழமைகளுக்கும் நன்றி! நன்றி! 

தோழமையுடன் வா.நேரு


No comments: