Sunday 6 February 2022

சூரிய கீற்றுகள் - வா.நேரு......வாசுகி தேவராஜ்

 சூரிய கீற்றுகள் - வா.நேரு

*********************************
கவித்துவமான தலைப்புகளைக் கொண்ட 51 சூரிய கீற்றுகளை உள்ளடக்கிய நூல் இது!!
முதல் கீற்றே வயிற்றிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட காதர் மைதீனை தேடவைத்தது.
"ஓடும் வாழ்க்கை" வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் கீற்று. Do or die என்று சொல்லாமல் சொல்லும் கவிதை!!
சராசரி தேவையை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்ற உண்மை நிலையை உணர்த்தும் கவிதை "மறியலின் மாண்பு"
எத்தனை பெரிய எழுத்துகளை விடவும் "வாழ்ந்து காட்டுதல்" தான் சரியான வழிகாட்டுதல் என சொல்லும் கவிதை "அந்தக் கிழவி"
"ஒழுங்குபடுத்தலும் உழைப்பதுமே வாழ்க்கை" - ஒரு நச் வரி.
"தேவை அல்ல. மனத்தெளிவே" இலஞ்சத்தை ஒழிக்கும் ஆயுதம் என்று அழுத்தமாய் சொல்லும் கவிதை!!
"கெஞ்சியும் குழைந்தும்" பதவிக்கு வருவதற்கான காரணம்... சுளீர் சூடு! சொரனையுள்ளவர்கள் உணரட்டும்!!
"அன்றொரு நாள் கிடைத்த" செறிக்க மறுக்கும் உணவு சாதிய கெளரவ பேய் பிடித்த பெரிய மனிதர்களின் செயல்பாடுகளை உணர வைப்பது!!
"பள்ளிக்கு போகிறேன் நான்
என ஆசைப்படல் வேண்டும்!"
இன்றைய கல்விமுறையில் சாத்யப்படும் காரியமா இது என்று எண்ணுகையில்...
"சர்க்கஸ் கூடாரங்களாய்
கல்வி நிலையங்கள்
வேண்டாம்! வேண்டாம்!!"
உண்மை உமிழும் வரிகள்!!
எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் சமூகத்தின் ஏளன தூற்றலுக்கு பலமிழந்து தான் போகிறாள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மூடநம்பிக்கைகளுக்கும் உடன்படுவது கொடுமைதான்!!
"அவளா இவள்"
"ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த நாள்
மற்ற நாட்கள் அனைத்தையும் ஆணமையற்ற நாட்களாக்கி விட்டதோ?"
எள்ளல் தொனி கேள்விக்கு பதில் தான் இல்லை!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் நபர்களிடம் கூட நேரம் ஒதுக்க முடியாத விசேச நாட்கள் சலிப்புத்தான்!
"சே! விசேச நாட்கள்!"
"படிப்படியாய் முன்னேறினால்
சிப்பாய் கூட
சிம்மாசானம் அடையலாம்"
என்று சொல்லித்தரும் செஸ் விளையாட்டு "யானை கூட வெட்டப்படலாம்" என்று எச்சரிக்கையும் செய்வது அபாரம்!!




"வலிமையாக ஓடி கொல்ல முடியாமல்
வஞ்சகமாய் வீழ்த்திவிட்டாயடா மனிதா"
எலியின் நிலையிலிருந்து மனிதனிடம் கேட்கும் கேள்வி.
நாட்டில் இருக்கும் பெருச்சாளிகளை பிடிக்க "பெருச்சாளி பேடு" செய்ய இயலுமா எனவும் கேட்பது அரசியல் நையாண்டி!
வார்த்தைகள் கொல்லும் என சொல்லும் "ஏன் திட்டினாய் தம்பி?"
பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வீடியோ காலில் பேசி மகிழ்ந்தாலும் பிள்ளைகள் அருகில் இல்லாத வெறுமையை வேதனையோடு படம் பிடித்து காட்டும் கவிதை "கருவி ஏதும் வருமா?"
வெளிநாட்டிலிருந்தே எரியூட்டவும் கருவி ஏதும் வருமா? என ஏங்குவது வேதனையின் உச்சகட்ட வெளிப்பாடு!!
கடவுளை அழைத்து, "நான் இருக்கும் இடம் இதுவென சொல்லித்தொலையேன். என் மனிதர்கள் கொஞ்சம் நிம்மதி கொள்ளட்டும்" என கடவுளை பகடி செய்யும் கவிதை "எங்கே கடவுள்"
விழா நாட்களில் கூட எல்லா மனிதர்களுக்கும் மகிழ்வை அளிப்பதில்லை என்று சொல்லும் யதார்த்த கவிதை "ஒலிக்கும் வெடிச்சத்தங்கள்"
White collar வேலையில் இருக்கும் மனிதர்களின் குணத்தை பொருட்படுத்தாமல் கொண்டாடும் சமூகம் கீழ்நிலை மனிதர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று வேதனையில் வெளிபட்ட "என்று மாறும் இந்நிலை" படித்துவிட்டு தலைகுனியத்தான் வேண்டியிருக்கு!!
"திணிக்காதீர் உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் மேல்!"
இன்றைய கல்வி முறையை சாடும் கனமான கவிதை "மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி..."
வெளிப்பகட்டு வேண்டாம் என்று சொல்வதற்கும் துணிவு வேண்டும். அப்படி துணிந்து சொல்வது தான் "சொல் போதும் எனக்கு"
அம்மாவுக்காக இதயம் தொடும் கவிதை "நிறைந்திருக்கிறாய் அம்மா"
"நிரம்பி வழிகின்றன" நாட்டின் ஏற்றத்தாழ்வு அவலங்களை சொல்லும் கவிதை.
"உலகில் பசிக்கும் குழந்தைகளெல்லாம் என் குழந்தைகள் என மதம் தாண்டி
நாடு தாண்டி
பாலூட்டும் சோறூட்டும் நாள்!"
பசியால் உலர்ந்து - சிலிர்ப்புடன்
தான் அடிமைப்பட்டு கிடக்கிறோம் தம் உணர்வுகள் நசுக்கப்படுகின்றன் என்ற அளவில் கூட புரிதல் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கான கவிதை "பெண் ஏன் அடிமையானாள்?"
"பொய்மை ஆடைகள்" கலைத்து நிர்வாணத்தை நேசிக்கும் நிதர்சனம் இவர் கவிதைகள்!!
"Fuse wire போட்டால் சரியாகும் மின்சாரமா உங்கள் கடவுள்?" என பகடியாக பகுத்தறிவை வித்தைக்கும் கவிஞர், ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் மூடநம்பிக்கையை ஒழிக்க என்ன விரதம் என்று கேட்கிறார்.
பாம்பு அழகாய் படமெடுத்தாலும் கொட்டப்போவதென்னவோ நஞ்சுதான்!!
"உள் மனதின் குரலே பல நேரங்களில் என் கவிதை என்று சொல்லும் இவரின் ஒவ்வொரு கவிதையும் சூரிய கீற்று தான்!!
வாழ்த்துகள் நேரு சார்!!
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

2 comments:

anandam said...

உண்மையை விதைத்தால் உண்மைதான் விளையும்... உண்மை விமர்சனம்... வாழ்த்துகள்...‌ இருவருக்கும்!!

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அண்ணே