Thursday 10 February 2022

அனைத்து ஜாதியினரும் நீதிபதிகளாய்.....வா.நேரு

 சிந்தனைக் களம் : அனைத்து ஜாதியினரும் நீதிபதிகளாய்


தந்தை பெரியாரின் 48-ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2021 ஆகும். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் ஆனபோதிலும், தந்தை பெரியார் காண விரும்பிய புதிய உலகம் இன்னும் அமையவில்லை.



கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, நாடாளு-மன்றத்திலே உரையாற்றிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள் நீதித்துறை பற்றி தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்களை எழுப்பி உள்ளன. அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 5 பேர்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துள்ளனர் என்று கூறிய தயாநிதிமாறன் மேலும் உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இதுவரை கிடைக்க-வில்லை எனவும் கூறினார்."


இந்தியா சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்-பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்கூட இருந்ததில்லை. பெண்களும், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் இல்லாத நீதிமன்றமாகத்தான் உச்ச நீதிமன்றம் செயல்-படுகிறது. 2021-லும் இதுதான் நிலைமை. தந்தை பெரியார் அவர்கள், சென்னை அய்க்கோர்ட்டில், 23.4.1957இ-ல் தாக்கல் செய்த 'ஸ்டேட்மெண்ட்' புத்தகம், அவரின் அளவற்ற துணிச்சலையும், நீதிமன்றங்கள் பற்றிய அவரின் கருத்துகளையும் தெளிவாகச் சொல்கிறது. புகழ்பெற்ற கலெக்டர் மலையப்பன் குறித்து தந்தை பெரியார் அவர்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லப்பட்ட நிலையில் அதனை மறுத்து தந்தை பெரியார் கொடுத்த ஸ்டேட்மெண்ட் இது.


"பார்ப்பனர் என்பது இந்து மதத்தின்படி வேத சாஸ்திர, புராணங்களின் தன்மையைப் பொறுத்தது. சம்பந்தப்பட்ட கனம் நீதிபதிகள் இருவரும் அந்த வேத சாஸ்திர இதிகாச புராணங்களின் தன்மைப்படி பார்ப்பனர்களாக இருப்பதோடு அவர்களது வாழ்விலும், தொழிலிலும் நடத்தையிலும் மத, வேத, சாஸ்திர, இதிகாச, புராண தத்துவங்களுக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது என்ற உறுதியுடையவர்கள். இவர்கள் மாத்திரம் அல்ல, இந்த நாட்டிலே தங்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்கிற எவரும் இந்தத் தன்மைக்கு மாறாக நடந்து கொள்வதாகக் கூறினால் அது இயற்கைக்கும், உண்மைக்கும் மாறானதாகும். அதே வேத சாஸ்திர புராணங்களின்படி, பார்ப்பனர் உயர்ந்த ஜாதி; மற்றவர்கள் குறிப்பாக இந்தப் புகார் சம்பந்தப்பட்ட தீர்ப்பினால் பாதிக்கப்-பட்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியார் ஆவார்கள். உயர்ந்த ஜாதிக்கும் தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்து சாஸ்திர -புராண -இதிகாசங்களில் பெரிய, கீழ், -மேல் பேதமும், பெருத்த இழிவும், பெருமையும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதை விட்டு-விடுவது என்பது எந்தப் பார்ப்பானானாலும் முடியாததும் விரும்பப்படாததுமான காரியமாகும். மற்றும் மேல் ஜாதிக்காரன் என்கின்ற பார்ப்பானுக்கு இந்த ஜாதி உணர்ச்சியை விடாமல் எந்தத் துறையிலும் காட்டிக்கொள்வதால் மேன்மையும் நல்வாழ்வும் இலாபமும் இருந்து வருகின்றன. அதை இழக்க எந்தப் பார்ப்பானும் சம்மதிப்பான் என்று நம்புவது இயற்கைக்கு விரோதமானதாகும். ஆகையால் இந்தப் பிரச்சனையில் நான் பேசியிருப்பது சம்பந்தப்பட்ட இந்த இரண்டு கனம் நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் குறித்து அல்ல என்பதையும், பார்ப்பனர்கள் எல்லோரையுமே கருத்தில் வைத்து அவர்களுடைய சுபாவத்தை நினைத்து, இதற்குப் பரிகாரம் தேட வேண்டுமென்கிற கருத்திலேயே பேசியிருக்கிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.


அய்யா தந்தை பெரியார் அவர்கள், நீதிமன்றங்களைப் பற்றியும், பார்ப்பன நீதிபதிகள் பற்றியும் பேசியிருக்கும் கருத்துகள் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க வியப்பைத் தருகிறது. அந்த ஸ்டேட்மெண்ட் முழுவதும் எதார்த்தத்தை அப்படியே இன்றைக்கும் இருக்கும் நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. "நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அவசியத் தேவை" என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், (ஜூலை 24, 2021)." "மக்களாட்சி - _ ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகள் 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவத்தின் செயல்பாடாகவே அமைதல் வேண்டும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பலமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, 'அதிகாரம் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.'


அவ்வகையில் மிக முக்கியமான அமைப்பாக ஆட்சியின் மூன்று அங்கங்களில் ஒன்றாக நீதிமன்றங்களும் உள்ளன. சமூக நீதி கடைப்பிடிக்கப்-படுவது மிகவும் இன்றியமை-யாதது. அவற்றில் நாட்டின் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற அமைப்புகளில் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சமூக நீதிக்கே அரசமைப்புச் சட்டம் முதலிடமும், முன்னுரிமையும் தந்துள்ளது.


நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்-பட்டுள்ள சட்டங்கள் பற்றிய வழக்குகளில் சரியான பார்வையோடு தீர்ப்பு வழங்கிட வேண்டிய மிக முக்கியப் பொறுப்பான அமைப்புகளாக உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உள்ளன. அதோடு, தேவைப்படின் முக்கிய ஆலோசனைகளை அரசுக்குத் தரும் உயர்ந்த இடத்திலும் உச்ச நீதிமன்றம் உள்ளது. இந்நிலையில், சமூகநீதி உணர்வுக்கு உண்மையான செயல்வடிவம் நீதித்துறையிலும் கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமே உண்மையான அதிகாரப் பரவல் நிறைந்த ஜனநாயகக் குடியரசாக ஓர் ஆட்சி அமைய முடியும். பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை.


நாட்டின் உயர் நீதிமன்றங்கள் பலவற்றிலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களைச் சார்ந்த நீதிபதிகளை பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் காண்பது மிகவும் அரிதினும் அரிதாகவே இன்று இருக்கிற கொடுமைக்குப் பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை." என்று குறிப்பிட்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் "முன்னாள் தலைமை நீதிபதியான கஜேந்திர கட்கர் ஒருமுறை கூறினார்: 'நீதிபதிகளும், வகுப்பு உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூக அமைப்பின் காரணமாக அப்படிப்பட்ட நிலை இருக்கவே செய்கிறது' என்றார்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் இன்றைக்கும் இல்லை. இதற்குப் பரிகாரம் தேடவேண்டியதும், அதற்கான போராட்டங்-களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் தந்தை பெரியாரின் நினைவு நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகளில் ஒன்றாக அமையவேண்டும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் திசம்பர் 16-31,2021

1 comment:

Mohan said...

ஒரு நல்ல சிந்தனை தோழர் வா நேரு அய்யா.அனைத்து ஜாதியார் அர்ச்சரையாச்சு அடுத்து அனைத்து ஜாதியினரும் நீதிபதியாக  வேண்டும் இல்லையேல் சனாதன தீர்வு மட்டும் தான் கிடைக்கும்