Sunday 26 June 2022

எங்கிருந்து தொடங்குவது அ.வெண்ணிலா நூல் மதிப்புரை

 






முழுமையாக வல்லினச்சிறகுகள் இதழைப் படிக்க











சங்கப் பலகை
நூல் மதிப்புரை
நூலின் தலைப்பு: எங்கிருந்து தொடங்குவது
நூல் ஆசிரியர்  அ.வெண்ணிலா
வெளியீடு   அகநீ,வந்தவாசி
வெளியிடப்பட்ட ஆண்டு : 2017 மொத்த பக்கங்கள் 142 விலை ரூ 100

குடும்பம் என்றாலே புனிதம். குடும்பத்தில்  இருக்கும் குறைகளைப் பேசக்கூடாது என்ற மனப்பான்மை புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தில் நான் பேசுகிறேன் என்று முன்வந்து அ.வெண்ணிலா பேசியிருக்கும் நூல் 'எங்கிருந்து தொடங்குவது'. இந்த நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.ரெளத்திரம் மாத இதழில் 25 மாதங்களாக தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.ஒரு ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும் குடும்பத்தின் சிக்கல்கள் பற்றி மிக விரிவாகப் பேசும் நூலாக இந்த நூல் இருக்கிறது.தமிழ் நாடு அரசின் விருதினைச்,சென்ற ஆட்சிக்காலத்தில் இந்த நூல் பெற்றிருக்கிறது.

குடும்பம் என்ற அமைப்பு, எப்படி உருவானது,எப்படி கட்டமைக்கப்பட்டது என்ற சமூகவியல் வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.ஒரு ஆசிரியராகப் பணியாற்றும் வெண்ணிலா,தன்னைச்சுற்றி நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் ஊடாகக் குடும்பம் என்ற அமைப்பின் போலித்தனத்தை மிக உண்மையாக எடுத்து வைத்து,தீர்வு என்ன என்று சிந்திக்க வைக்கிறார்..

வெளியில் எல்லோரோடும் சிரித்துப் பேசி நல்லவனாக இருக்கும் மனிதன் ஒருவன் வீட்டில் கெட்ட வார்த்தை பேசி மனைவியோடு சண்டையிடும் மனிதனாக இருப்பதை,அவனது மகன் மூலம் அறிந்து கொண்ட நிகழ்வை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.ஏன் மனிதர்களுக்கு வீட்டிற்குள் ஒரு முகமாகவும் வெளியில் ஒரு முகமாகவும் இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.

குடும்ப வாழ்க்கை ஏன் ‘வாழ் நாள் யுத்தமா’க இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.’பிராய்லர் கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுவதைப் போலவே பெண்கள் திருமணத்திற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள் ‘என்று குறிப்பிடும் வெண்ணிலா அதனைப் போலவே ஆணும் திருமணத்திற்கு தயாரிக்கப்படுவதை நமக்கு சுருக்கெனத் தைக்கும் வண்ணமே குறிப்பிடுகிறார்.’ஆணும் பெண்ணும் இவ்வளவு பெரிய முன் தயாரிப்புகளுடன் வளர்க்கப்பட்டும்,இருவர் இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கை ஏன் இவ்வளவு முரண்பாடுகளோடு இருக்கிறது என்னும் கேள்வியைக் கேட்கிறார்.

குடும்பம் என்ற அமைப்பு  நமது தமிழ்ச்சமூகத்தில் எப்படி இருக்கிறது  என்பதனை விளக்கமாக எடுத்துச்சொல்லும் நூல் ஆசிரியர் “மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற நிறுவனம் கூடுதல் சுதந்திரத்துடன் இருக்கின்றது.அங்கு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியோடு வாழ்வதே முதன்மை.பிடிக்கும் காலம்வரை ஒன்றாக இருப்போம் என்ற புரிதலுடன்தான் அவர்கள் இணைகிறார்கள்.என்ன நடந்தாலும் பிரியக்கூடாது என்ற கட்டாயத்துடன்தான் நாம் ஒன்றிணைகிறோம்.அவர்களுக்கு குடும்பம் என்ற நிறுவனம் முக்கியமில்லை.நமக்கு நிறுவனம் மிக முக்கியம்” மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு எப்படி இருக்கிறது என்பதனைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வெளி நாட்டில் வாழும் நம் நாட்டுப்பெண்களுக்கு(வல்லினச்சிறகுகள் வாசகர்களுக்கு) இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுக் கூட இந்தக் கட்டுரைக்கு பின்னோட்டம் இடலாம்.குடும்பம் என்னும் அமைப்பின் நிறை,குறைகளை வெளி நாட்டோடு ஒப்பிட்டுப் பேசலாம்.

இருவர் குடும்பமாக சேர்ந்து வாழும் வாழ்க்கை,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக அமையாமல் தடுப்பது எது என்பது பற்றி நம்மை யோசிக்க வைக்கிறார்.“ இங்கு ஒரு தம்பதியின் வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல.  அவர்களின் வாழ்க்கையோடு மதம்,சாதி,பரம்பரை பெருமை ,வட்டாரத்தின் பழக்கவழக்கங்கள் என அசைக்கமுடியாத கனத்த பல சங்கிலிகள் பிணைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். நம் நாட்டைப் பொறுத்த அளவில் குடும்பம் என்ற நிறுவனம் குலைந்து விடக்கூடாது என்பதில் காட்டப்படும் அக்கறை ,குடும்பமாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதில் காட்டப்படுவதில்லைதானே?.
“குடும்பம் நம்மை கட்டுப்படுத்துகிறதா ? நம்மை சுதந்திரமாக்குகிறதா?” என்னும் கேள்வியைக் கேட்டு அதைப் பற்றி விரிவாகப் பேசுகின்றார்.அதுவும் பெண்களைப் பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்,அவளின் விருப்பங்களைத் தவிடு பொடியாக்கும் ஒரு நிறுவனமாக குடும்பம் இருப்பதைச்சுட்டிக் காட்டுகிறார்.'கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருசன் ' என்றும்,குடும்பம் என்றால் அப்படி இப்படியாகத்தான் இருக்கும்,அனுசரித்து அல்லது அடங்கிப்போ என்பதுதானே பெரியவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது.

“குடும்பம் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு.மேலடுக்கு எல்லோரும் பார்க்கும் பூச்சுகள் நிரம்பிய அடுக்கு.கீழடுக்கு கணவன் மனைவி என்ற இரண்டு பேருக்கு மட்டுமே தொடர்புடைய அகவுலகம் தொடர்பானது “ என்று கூறும் நூல் ஆசிரியர் மேலடுக்கு செயற்கையான நடவடிக்கைகளால்,சொற்களால் எப்போதும் நன்றாக இருப்பது போலக் காட்டப்படுகிறது. ஆனால் கீழடுக்கில் உள்ள கீறல்களைக் கவனிக்கவேண்டாமா? என்று கேட்கின்றார். கீழடுக்கில் உள்ள கீறல்கள் ,கணவன்,மனைவி இருவருக்கு மட்டுமே தெரியும்.ஊடலாக இல்லாமல்,பெரும் மன இடைவெளியோடு கீழடுக்கில் இருப்பவர்கள் பெரும் சதவீதத்தினர்.அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும் இல்லை,நிம்மதியும் இல்லை. வெறும் நிர்ப்பந்தத்தால் இணைந்து ஒரு வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்பதனை நமக்கு உணர்த்துகின்றார்.

“ ஆணும் பெண்ணும் அன்பாய் இருக்கப்பழக்கப்படுத்துவதற்குப் பதில் ,ஒருவரை ஒருவர் இழை அளவு கூட தனித்திருக்க விடமால்,தனித்தன்மையை மதிக்கத்தெரிந்து கொள்ளாமல் குடும்பங்களை அமைத்துவிடுகிறோம்.அதனால்தான் மனைவியை கண்காணிப்பது கணவன் வேலையாகவும்,கணவனை கண்காணிப்பது மனைவி வேலையாகவும் இருக்கிறது “ என்று குறிப்பிட்டு,தனது அனுபவ நிகழ்வுகளைக் குறிப்பிட்டு குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனங்கள் பற்றியும் கண்காணிப்புப் பற்றியும் பேசுகிறார். விலங்குகளுக்கு குடும்பம் என்ற நிர்ப்பந்தம் இல்லை.அவைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதா,நீ எந்தவகையில் குடும்ப அமைப்பினால் உயர்ந்தவன் என்று கேட்பதுபோல கேட்கின்றார்.

“ஆழமாக யோசித்தால் குடும்பத்தைப் போல் வன்முறைகள் நிரம்பிய சமூக அமைப்பு வேறொன்றும் இல்லை”,” என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்,சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் குடும்பத்திற்குள்ளேயே நிகழும் வன்முறைகளைக் குறிப்பிடுகிறார்."Men Are from Mars, Women Are from Venus" என்ற ஆங்கிலப்புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஜான் கிரே(John Gray) குறிப்பிடுவதைப் போல குடும்பத்தில் இருக்கும் ஆணுக்கான எதிர்பார்ப்புகளும்,பெண்களுக்கான எதிர்பார்ப்புகளும் வெவ்வேறாக இருப்பதை குறிப்பிடும் நூல் ஆசிரியர் பெண்ணிற்கான  வேலையாக சமூகம் கட்டமைத்திருக்கும்  வீட்டிற்கு வெளியே வாசலைக் கூட்டுதல் போன்ற வேலைகளை ஆண்கள் செய்யக்கூடாது என்பதை சமூகம் மறைமுகமாக வலியுறுத்துகிறது என்று சுட்டுகின்றார்.பெண்ணிற்கான வேலைகள்,ஆணிற்கான வேலைகள் எனும் பாகுபாடு சிறுபிள்ளையாக இருக்கும்போது ஆரம்பித்து கடைசிவரை அப்படித்தானே தொடர்கிறது...

"இங்கு குடும்பங்கள்  விளையாடும் பகடைக்காயில் குழந்தைகளே வெட்டுவாங்க முன்னிறுத்தப்படும் பிஞ்சுக் காய்கள் " எனக் குறிப்பிட்டு குழந்தைகள் படும் பாட்டை ,எதார்த்த நிலையை சுட்டுகின்றார். கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ போட்டியில்,பிள்ளைகளைத் தங்கள் பக்கம் இழுக்க பெற்றோர்கள் செய்யும் பலவிதமான முயற்சிகளை தனது அனுபவத்தின் அடிப்படையில் விவரிக்கின்றார்.'குடும்பம் தன் உறுப்பினர்களின் இயல்பை திருடிக்கொள்கிறது " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் முற்போக்கு பேசி,காதலித்து,திருமணத்தில்  இணையும் இணையர்கள் கூட மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.இது அவர்களின் குற்றமல்ல. குடும்பம் என்னும் நிறுவனத்தின் குற்றம் என்று சொல்கின்றார்.

 உலகமும் வாழ்க்கையும் எவ்வளவு நவீனமாகிப் போனாலும் ,கொஞ்சமும் நவீனமாகாமல் புராதன நொடியில் திணறிக் கொண்டிருப்பவை குடும்பங்களே”, “ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி நடவடிக்கைகளைத் தள்ளி நின்று தீவிரமாக்க் கண்காணித்தால்,நம் உறவுகள் எவ்வளவு மோசமாக,அன்பற்ற அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வரும்.ஓர் ஒப்பந்த்த்தில் சேர்ந்து வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச புரிதல் கூட குடும்பங்களில் இல்லை.” என்று சுட்டிக் காட்டி ,குடும்பத்தைப் பற்றி இந்திய சமூகம் கட்டிவைத்திருக்கும் பிம்பத்தை டொம்மென்று போட்டு உடைக்கின்றார். ஏய்,எல்லோரும் வேசம் கட்டி நல்லா நடிக்கிறீங்கப்பா என்று சொல்வது போல இருக்கிறது அவரின் கூற்று.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த  திரைப்படம் ‘மனசு ரெண்டும் புதுசு ‘என்னும் திரைப்படம்,மனமொத்த கணவன்,மனைவிக்கிடையே  உறவுகள் எப்படி பிரிவினை உண்டாக்குகிறார்கள் என்பதனை உறவுகளின் உரையாடல்,நிகழ்வுகள் மூலம் காட்டுவார்கள்.அதைப்போல உறவுகள் கூட நிகழும் உரையாடல்களை நூல் ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார்.“வீடுகளில் நடைபெறும் உரையாடல்கள் எப்பொழுதுமே எல்லைகளுக்கு உட்பட்டவை.வரையறுக்கப்பட்டவை.சுவராசியம் அற்றவை.ஆபத்தானவை.பக்கவிளைவை உண்டாக்கக் கூடியவை.கணவன்,மனைவி,மாமியார்,மாமனார் உறவுகளுக்கிடையே கத்தி மேல் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் போலவே கவனமுடன் பேசவேண்டும்.” கவனத்துடன் பேசவேண்டும்,கவனத்துடன் பேசவேண்டும் என்று சிந்தித்து சிந்தித்தே,பெண்கள் சில நேரங்களில் ஊமைகளாகிப் போய் விடுகிறார்கள்.ஆண்கள் அடங்கி ஆமைகளாகி விடுகிறார்கள்.ஏன் உறவுகளோடு இயல்பாக நம்மால் நண்பர்களோடு பேசுவது போல பேச முடியவில்லை?. உண்மைதான், நாம் உறவுகளோடு பேசும்போது மிகவும் யோசித்து யோசித்துத்தான் பேசுகின்றோம்.அதுவும் நாள் முழுவதும் நமது வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியில் ஓடும் சீரியல்களைப் பார்த்தால்,பயமாக இருக்கிறது.ஒரு சொல்லை வைத்து உறவுகள் எப்படி ஒருவரை பந்தாடுகிறார்கள் என்பதைத்தானே நமது தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள்..

“சாதி ஒழிய நாம் வேலை செய்கிறோம்.ஆனால் சாதியைப் பாதுகாக்கிற வேலையை ஒரு நிறுவனமாக குடும்பம் மிகச்சரியாகச்செய்கிறது என்று சொல்கிறார்."பெற்ற மகளையே ,நெருப்பு வைத்துக் கொல்லும் அளவிற்கு,ஒரு தாயால்,ஒரு பெண்ணால் எப்படி முடியும் ?...சாதியைப் போன்ற ஒரு கொடூர மிருகத்தைப் பார்க்க முடியுமா? சாதியின் விஷப்பற்களால் கடிபட்ட குடும்ப உறுப்பினர்களும் விஷத்தையே கக்குகிறார்கள்.மனிதன் தோன்றிய காலம் முதல் நாமெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறோம்.உரு மாறியிருக்கிறோம்.நாகரிகமாகியிருக்கிறோம்.அறிவில் மேம்பட்டிருக்கிறோம்.கல்வியில் பண்பட்டிருக்கிறோம்.தொழில் நுட்பத்தில் முன்னேறியிருக்கிறோம்.வசதிகளைப் பெருக்கியிருக்கிறோம்.ஆனால் சாதியின் பிடிக்குள்,சாதியின் அடிமைபோல் நாம் இருக்கும்வரை,நாம் பண்பாடுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது .சாதி,பண்பாடற்றவர்களையே உருவாக்குகிறது"என்று தெளிவாக சாதியின் தீமையைப் பற்றிச்சொல்லும் வெண்ணிலா,குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால்,இந்தச்சாதி என்னும் தீமை எப்போதோ நம் சமூகத்தை விட்டு மறைந்திருக்கும் என்று சொல்கின்றார்.

குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு அடிப்படையிலான பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பவை…உறவில் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் இல்லாமல் போவதுதான்.”,”குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனம் சமூகத்தின் பல சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது….சமூகத்தில் மேலோங்கி இருக்கும் பல குற்றங்களுக்கான ஊற்றுக்கண் குடும்பங்களில் இருக்கிறது.இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதும்,செரிப்பதும் நமக்குக் கடினமாக இருந்தாலும் ,முதலில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவாவது   நாம் தயாராக வேண்டும்.அப்பொழுதுதான் குடும்பங்களின் புனரமைப்புப் பற்றி நாம் யோசிக்க முடியும்" என்று குறிப்பிடுகிறார்."குடும்பங்கள் முன்னிறுத்தும் கடவுள் சாதி அடிப்படையிலான கடவுள்..." என்று குறிப்பிட்டு குலசாமி வழிபாடு,சிறுதெய்வ வழிபாடு பற்றிய விமர்சனங்கள் மிகவும் காத்திரமானவை.

"குடும்பம் அடிப்படையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது.பழமைவாதத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.சாதிய உணர்வை ஊட்டுகிறது. மத நம்பிக்கையை வளர்க்கிறது.தான்,தன் குடும்பம் என்ற சுய நலத்தை வலியுறுத்துகிறது." என்று வரிசையாகக் கூறும் நூல்; ஆசிரியர் "எத்தனைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் குடும்பம் தரும் சுகத்திற்கு ஈடான ஒன்றை கூற முடியுமா ?ஆணும் பெண்ணும் இணைந்து வாழ குடும்பம் போன்ற பாதுகாப்பான இடம் வேறுண்டா? குடும்பம் தரும் இனிமை எல்லோருக்கும் வேண்டியுள்ளது " என்று குறிப்பிடும் நூலாசிரியர் ,குடும்பம் என்ற அமைப்பு முற்றிலுமாக அழிந்து போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இப்போதைய குடும்ப அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்."இன்பம் தரும் குடும்ப அமைப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்,குடும்பம் என்பதற்கான வரையறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.ஒட்டுமொத்தமாக குடும்பம் என்ற அமைப்பைச்சிதைப்பதை விட்டு,குடும்பத்திற்கு புதிய பொருள் தரவேண்டும்.திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒன்றிணையும் ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமே குடும்பம் அல்ல,குடும்பத்திற்கான அங்கீகாரம் எளிதாகும்போது,அங்கு உண்மைத் த்னமை வரும்." என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு வேறுபட்ட புத்தகம்.ஒரு வேறுபட்ட கோணத்தில் குடும்பத்தைப் பார்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு.படித்துப்பாருங்கள்.அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விழாவில் தான் எழுதிய புதினத்திற்காக 'கலைஞர் பொற்கிழி' விருது பெற்றிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்  அ.வெண்ணிலா அவர்கள். விருது பெற்ற அவருக்கு வல்லினச்சிறகுகள் மின்னிதழ் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார்.தனது மனதிற்கு சரியெனப்பட்டதை நம் முன்னால் வைக்கிறார். நமக்கு சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளலாம்.வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் எழுகின்ற கேள்விகள் உண்மையை நோக்கி நம்மை உறுதியாகப் பயணிக்க வைக்கும்


நன்றி : வல்லினிச்சிறகுகள் மின் இதழ் ஏப்ரல்-மே 2022








No comments: