Wednesday 29 June 2022

'சுயரூபம்' என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை

                            சுயரூபம் என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை பற்றி எனது விமர்சனம்.



தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கு.அழகிரிசாமி. அவரின் மிகச்சிறப்பான கதைகளில் ஒன்று சுயரூபம்." வேப்பங்குளம் கிராமத்தில் இரு நூறு வீடுகள் உண்டு.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம்பெருமை உண்டு." என்றுதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. 'அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் 'உண்டு 'என்று சொல்லுவதற்கு அந்தப் பழம் பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது' என்று விவரிக்கும்போதே நக்கலும் நையாண்டியும் கதையில் ஆரம்பிக்கிறது.'பசி வந்தால் பத்தும் போகும் ' என்பது பழமொழி. பழம்பெருமை படைத்த வீ.க. மாடசாமித்(தேவர்) என்றுதான் இந்தக் கதையின் நாயகன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

மாடசாமிக்குத்  தன் தாத்தாவின் பேரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுவதில் இருக்கும் பெருமை,தன்னுடைய தாத்தாவின் தீரத்தையும் வைராக்கியத்தையும் சந்திக்கும் ஒவ்வொரு இரண்டு கால் பிறவியிடத்திலும்(கவனிக்க இரண்டு கால் பிறவிகள்- மனிதர்கள் அல்ல) சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் தன்மை என்று நையாண்டி தொடர்கிறது.பழம்பெருமை வாய்ந்த மாடசாமியை அவர் பிறந்த சாதியைச்சார்ந்த முத்தையா பார்த்து ,கடனைக் கேட்கும்போது 'நான் என்ன உமக்குப் பயந்து ஒளிஞ்சுக்கிட்டு அலையறேன்னு சொல்லுறீரா..." என்று சொல்லும் போது பழம்பெருமை வாய்ந்த கடன்காரர் மாடசாமி என்பது நிருபிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ல 'மத்தியானம் காசு வந்து சேருது, பாரும் ...' என்று சொல்லும்போது பழம்பெருமை வாய்ந்த வாய்ச்சவுடால் பேர்வழி மாடசாமி என்பதைக் கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கதையின் நடுவில் 'சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரிவரையிலும் செல்லும் ' சாலையும் அந்தச்சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் இருக்கும் ஒரு விலக்கும் அந்த இடத்தில் இருக்கும் முருகேசப்(பிள்ளை) என்பவரின் பலகாரக்கடையும் நையாண்டித்தனமாகத்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.அந்தப் பலகாரக்கடையால் முருகேசன் பெற்ற வளர்ச்சியையும் போகிற போக்கில் கதை ஆசிரியர் சொல்லிச்செல்கிறார்.அந்த முருகேசனின் பலகாரக்கடைக்கு மாடசாமி வந்து சேர்கிறார்.

அந்தக் கடையில் மாடசாமியைக் கவனிக்காதமாதிரி முருகேசன் இருப்பதையும்,கடைக்கு வருகிறவர்களைக் கவனிப்பதையும்,'இடையிடையே ஏதேதோ பேச்சுக்கொடுத்துப் பார்த்தாலும் 'மாடசாமியைக் கண்டு கொள்ளாமல் முருகேசன் நடந்து கொள்வதையும் கதாசிரியர் விவரிக்கும் பகுதி நல்ல உளவியல் உத்திகள் சார்ந்த பகுதி.மீண்டும் மீண்டும் படித்து சிரிக்கலாம்.சிந்திக்கலாம்.

அதைப்போல நாலுவடம் முத்துமாலை பற்றிய உரையாடலில் உதட்டில் வரும் சொல்லுக்கும் ,உள்ளத்திற்குள் ஓடும் எண்ணத்திற்குமான இடைவெளியை மிகச்சிறப்பாக விவரித்து 'கும்பி கூளுக்கு அழுததாம்,கொண்டை பூவுக்கு அழுததாம் ' என்று நினைப்பதாக விவரிக்கும் பகுதியும் கூட மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும் பகுதிதான்.

முருகேசன் சாப்பிடும்போது மாடசாமி  தன்னைப் பற்றி 'முந்தா நாள் சரியாகச்சாப்பிடாமலும் நேற்று அறவே சாப்பிடாமலும்,இன்று வெறும் பசியேப்பம் விட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு மனிதன் ' என்று சொல்லும்போது நமக்கும் மாடசாமி மேல் ஓர் அனுதாபம் ஏற்படுகிறது. காலை முதல் இரவு வரை இட்லிக்காக அந்தப் பழம் பெருமை வாய்ந்த மாடசாமி படும் பாட்டைப் பார்க்கின்றபோது நமக்கு உண்மையிலேயே மாடசாமி மீது பரிதாபம் உண்டாகிறது. 'வயிற்றுக்கொடுமை அவரை இப்படியெல்லாம் ஆட்டி வைத்தது ' என்று நூலாசிரியர் விவரிக்கும்போது பழம்பெருமை பசியைப் போக்காது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது.

இருக்கும் முருகேசன் நான் கீழே கொட்டினாலும் கொட்டுவேன் என்னும் பாணியில் நடப்பதையும்,இல்லாத மாடசாமி எத்தனையோ வகைகளில் முயன்று அந்த இட்லியை வாங்க நினைப்பதையும் விவரித்து முடிவில் இருவரும் சண்டையிட்டு மல்லுக்கட்டுவதையும்,கடைசியில் தானமாக இட்லியை முருகேசன் கொடுத்தாலும் அவமதிப்பால் அதனை மாடசாமி வாங்க மறுப்பதையும்  அதன் தொடர் நிகழ்வுகளையும் கதையாசிரியர் சொல்லிச்செல்கிறார்.

இந்தக் கதையைப் படித்தபோது எனக்கு இலங்கைதான் நினைவுக்கு வந்தது. மொழியால்,மதத்தால்,இனத்தால் மக்களைப் பிரித்து ஆள்பவர்கள் சொகுசாய் வாழ்ந்ததையும் ,முடிவில் அடுத்த வேளைக்குக் குடிக்க கஞ்சிக்கு வழியே இல்லை என்னும் நிலை வந்தபோது மக்கள் தங்களுடைய பழம்பெருமையாக நினைத்தவற்றையெல்லாம் புறந்தள்ளி, மனிதர்கள் மனிதர்களாக இணைந்து ஒன்று திரண்டு அந்த நாட்டின் பிரதமர் ஓடி ஒளியும் நிலைக்கு மக்கள் போராடியதையும் நினைத்துப்பார்க்கத் தூண்டியது. இந்திய நாட்டில் இருக்கும் சாதி,மதப்பெருமை எல்லாம் பசியோடு இருக்கும் மனிதர்களுக்கு இல்லை.அந்தப் பழம்பெருமைகள் பசிப்போருக்குத் தேவையில்லை.எல்லோருடைய பசியைப் போக்கும் வழி ஏதாவது இருந்தால் செய்யுங்கப்பா என்று சொல்வதாகத்தான் நான் இந்தக் கதையைப் பார்க்கிறேன்.


வா.நேரு. 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எல்லோருடைய பசியைப் போக்கும் வழி ஏதாவது இருந்தால் செய்யுங்கப்பா என்று சொல்வதாகத்தான் நான் இந்தக் கதையைப் பார்க்கிறேன்.

அருமை

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா...மகிழ்ச்சி