Thursday 21 July 2022

தந்தை பெரியாரும் இங்கர்சாலும்...

 


தந்தை பெரியாரும் இங்கர்சாலும்...
     (முனைவர் வா.நேரு)

தந்தை பெரியார் கரடு முரடாயிருந்த சமூகக் காட்டை சீரமைப்பதற்காக தன்னையே நம்பி புறப்பட்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக புறப்பட்ட அவர்,தன் கருத்தினை ஒத்திருக்கும் வேற்று நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் மக்கள் மத்தியில் பரப்பினார்.அத்தைகைய அறிஞர்களில் ஒருவர்  கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆவார்.

பகுத்தறிவுக் கருத்துகளை 19-ஆம்  நூற்றாண்டில் அமெரிக்காவில் விதைத்தவர் இங்கர்சால் அவர்கள் ஆவார் .அவர்  1833-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் பிறந்தவர். தந்தை பெரியாரைப் போலவே சிறு வயதிலேயே சிந்தனைத் திறன் மிக்கவராக இருந்திருக்கிறார்.அமெரிக்க இராணவத்தில் கர்னலாகப் பணியாற்றியதால் பெயருக்கு முன்னால்  கர்னல் எனப் பட்டத்தோடு அழைக்கப்பட்டவர்.அமெரிக்காவின் அரசியல் தலைவராகவும் ,மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பின்பு சட்டம் பயின்று,புகழ் பெற்ற வழக்கறிஞராகி நிறைய பொருள் ஈட்டியவர்.ஈட்டிய பொருளைத் தாராளமாக தேவைப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கியவர்.

எவருக்கும் பயப்படாமல் தனது மனதிற்கு பட்ட கருத்துகளை குறிப்பாக மதங்களைப் பற்றியும்,கடவுள் பற்றியும்,பேய்,பிசாசு போன்ற நம்பிக்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் உரையாற்றி உண்மையை மக்கள் மத்தியில் அறியச்செய்தவர். சொர்க்கம்,நரகம் என்று எல்லாம் ஒன்றும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச்சொல்லியவர்.பெண்ணுரிமைக் கருத்துகளைச்சொன்னவர். இங்கர்சால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ,அவரது உரையைக் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல  நூறு மைல்கள் பயணம் செய்து டெக்சாஸ் முதல் நியூயார்க் வரை ,அவர் பேசும் இடங்களில் கூடியதாக்க் குறிப்பிடுகிறார்கள்.அதுமட்டுமல்ல,,டிக்கெட் வாங்கி ,பணம் கட்டி பல ஆயிரம் பேர் கேட்கக் கூடிய உரையாக,மதங்களை மறுத்து அவர் பேசக்கூடிய உரை இருந்திருக்கிறது.அப்படிப்பட்ட இங்கர்சாலின் கருத்துகளை நூலாகத் தந்தை பெரியார் அவர்கள் 1930களில் ஆக்கி தமிழ் மக்களுக்கு தந்திருக்கிறார்கள்.

“தனது பகுத்தறிவு –சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கத்திற்கு வலு சேர்க்கவும் –மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் அரிய கருத்துக்கருவூலங்களையும் 1930 முதலே தந்தை பெரியார் அவர்கள் தனித்தனித் தலைப்புகளில் ,தக்காரைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்தும் ,சிறு சிறு வெளியீடுகளாகவும்(Pamphlets) மலிவு விலைக்கு பல்லாயிரக்கணக்கில் வெளியிட்டார்கள்.

இங்கர்சால் பேச்சுகளையும் ,தமிழாக்கம் செய்து 1933 முதலே பல தலைப்புகளில் வெளியிட்டார்கள்.வியப்பாக இருக்கிறது அல்லவா?” என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் கேட்கிறார்.வியப்பாகத்தான் இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் கணினி,இணையம்,வாட்சப்,முக நூல் என்று ஒன்றும் இல்லாத அந்தக் கால கட்டத்தில்,தந்தை பெரியார் அவர்கள் இங்கர்சாலின் எழுத்துகளை,அச்சிட்டு நூல்களாக வெளியிட்டு இருக்கிறார் என்பது பெரும் வியப்பாகத்தான்  இருக்கிறது.

1933-ல் மதம் என்றால் என்ன?(What is Religion ) என்னும் நூலை பகுத்தறிவு  நூற்பதிப்புக் கழகம் சார்பாக தந்தை பெரியார்  வெளியிட்டுள்ளார். நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மகன் அட்வகேட் சோ.லட்சுமிரதன் பாரதி இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.பாஸ்டன்  நகரில் இங்கர்சால் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இது.

அதைப் போலவே   கடவுள்கள்(The Gods ) என்னும்  நூலும், நான் கடவுள் கவலையற்றவன் ஆனதேன்?(Why I am an Agnostic) என்னும்  நூலும் 1934-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வால்டையரின் ஆண்டுவிழாவின் போது இங்கர்சால் அவர்கள் ஆற்றிய உரை ‘வால்டையரின் வாழ்க்கை சரிதம் “ என்ற பெயரில் 1935-ஆம் ஆண்டு அட்வகேட் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழி பெயர்க்க,அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் முன்னுரையை என்னுரை என்று  எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

அதைப்போலவே 1936-ஆம் ஆண்டு பண்டித எஸ்.முத்துசாமிபிள்ளை அவர்கள் மொழிபெயர்த்த இங்கர்சால் பொன்மொழிகள் என்னும் நூல்,1936-ஆம் ஆண்டு சா.குருசாமி அவர்கள் மொழிபெயர்த்த பேய்,பூதம்,பிசாசு அல்லது ஆவி (The Ghostrs) என்ற நூலும் வெளிவந்திருக்கிறது.

1899-ஆம் ஆண்டு ஜீலை 21-ஆம் நாள் இங்கர்சால் அவர்கள் மறைந்திருக்கிறார்.அவர் தனது கருத்துகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு ஓர் இயக்கம் அமைக்கவில்லை.அதனால் மிகப்புகழ் பெற்று விளங்கிய அவரின் பேச்சுகளும்,எழுத்துகளும் அவர் பிறந்த அமெரிக்கா போன்ற நாட்டிலேயே தொடர்ந்து முன் கொண்டு செல்லப்படாத நிலையில்,அவரின் கருத்துகளை அறிந்த தந்தை பெரியார் அவர்கள்,  அனுமதி பெற்று ,அவரது  நூல்களைத் தமிழில் கொண்டு வந்து தந்திருக்கிறார்.வியப்பாகத்தான் இருக்கிறது.

1930,40 களில் தந்தை பெரியாரின் முயற்சியால் மொழியாக்கம் செய்யப்பட்ட இங்கர்சால் அவர்களின் சிறு சிறு நூல்களை எல்லாம் தொகுத்து,அய்யா ஆசிரியர் அவர்களின் முன்னுரையோடு ‘அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் ‘ என்னும் தலைப்பில் திராவிடர் கழக(இயக்க) வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்

“உண்மை ஆராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.ஒளிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் தூணாகவும் இருப்பது உண்மையே.

உண்மை ஆனந்தத்தின் தாய்; உண்மை மக்களை நாகரிகப்படுத்துகிறது.உண்மை மக்களை நாகரிகப்படுத்துகிறது.உண்மை மக்களை உள்ளத்திலே உன்னதக் குறிக்கோளைத் தோற்றுவிக்கிறது.மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.

உண்மையை அறிவதைவிட ,உயர்வான குறிக்கோள் மக்களுக்கு வேறு ஏதும் இல்லவே இல்லை.” (பக்கம் 206) என்று உண்மையைப் பற்றி இங்கர்சால் அவர்கள் சொல்லிச்செல்லும் செய்திகளைப் பார்க்கிறபோது,உண்மைக்கு எவ்வளவு உயர்வான இடத்தை இங்கர்சால் அவர்கள் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது.

தந்தை பெரியார் அவர்கள் தான் ஆரம்பித்த பத்திரிக்கைக்கு ‘உண்மை ‘எனப் பெயரிட்டார்கள்.’ உண்மை ‘ இதழைப் படிப்பதனால் நம் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.உண்மை புரியவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இந்தப் பத்திரிக்கையை தந்தை பெரியார் ஆரம்பித்தார்.தன் வாழ்க்கையில் உண்மையைச்சொல்வதற்கே நேரம் இல்லை,இதில் நான் எங்கே பொய் சொல்ல என்று கேட்டவர் பெரியார்.இங்கர்சால் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் மக்களுக்கு உண்மையைச்சொல்லவேண்டும் என்பதில் நேர்கோட்டில் நிற்கின்றார்கள்.

“இங்கர்சால் ஒரு சிறந்த மனிதன்.பிறப்பினால் மனிதன்.மனிதனாக வளர்ந்தார்.மனிதனுக்காக உழைத்தார் .மனிதனாகவே உயிர் துறந்தார்.இவருடைய மனித சுபாவமே தனக்கென வாழா பிறர்க்கென வாழும் செயற்கரிய செய்யும் பெரியாராக்கியது “ என்று இங்கர்சால் பற்றி அட்வகேட் எஸ்.லட்சுமிரதன் பாரதி அவர்கள் எழுதியிருப்பது அப்படியே தந்தை பெரியாருக்கும் பொருந்தும்.

இங்கர்சால் அவர்கள் 21.7.1899 –ல் இறந்திருக்கிறார்.வரும் ஜீலை 21,2022 அவருக்கு 123-வது நினைவு நாள் .” இனி நமது தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுத்தறிவு சங்கமும் அவர் இயற்கையோடியைந்த (இறந்த) நாளை இங்கர்சாலின் தினம்(INGERSOLL DAY) என்று ஆங்காங்கே கூட்டங்கூடி அவரது வாழ்க்கைச் சரித்திரத்தையும் ,அவரது அரிய போதனையையும் தெளிவாய் மக்களுக்குக் கூற வேண்டும்.அவர்தம் நூற்கள் குறைந்த விலைக்கு அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெகு தீவிரமாய் பரவுதல் வேண்டும்.அவர்தம் நூற்கள் ஏழை,பாமரர்கள்,பெண்கள் முதலியவர்களின் கண்களை எளிதில் திறக்கச்செய்யும்.” என்று இங்கர்சாலின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எழுதிய அட்வகேட் எஸ்.லட்சுமிரதன் பாரதி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இங்கர்சால் பற்றி அருமையான தொகுப்பு நூலை ,தொகுப்பாசிரியராக இருந்து அருமையாக கொடுத்திருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,” இங்கர்சாலின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாளான ஆகஸ்ட் 11ஆம் தேதியை ஒட்டி தமிழ் நாடெங்கும் பகுத்தறிவுப்பிரச்சாரம் ஒரு மாதம் பற்பல இடங்களில் நடைபெற்று அவர்தம் பகுத்தறிவுச் சிந்தனைக் கருத்துகளைப் பரப்பும் பணி மேலோங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு(அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்) அதற்கு ஒரு மூலப்பொருள் –சான்றாவணம் ஆகும்.

ஒவ்வொரு வீட்டு நூலகம் தொடங்கி,நாட்டு நூல்கள்வரை எங்கும் இங்கர்சால் –“Everywhere Ingersoll “ எண்ற ஒரு தனி இயக்கம் இதன் மூலம் வீறு நடை போடுகிறது “ என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 03.08.2015 அன்று சிறப்பாக அந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 11,2022 இங்கர்சால் அவர்களுடைய 190-வது பிறந்த நாளாகும்.அவருடைய நினைவு நாளான ஜீலை 21 முதல் அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 11 வரை ,இங்கர்சால் அவர்களைப் பற்றியும்,அவரது நூல்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான காலமாக எடுத்துக்கொண்டு,நாம் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கத்தூண்டுவோம்.

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ..16-31,ஜீலை 2022.






2 comments:

Anonymous said...

நல்ல தகவல்கள். நன்றி

ஓவியா said...

நல்ல தகவல்கள். நன்றி