Monday 4 July 2022

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு

 வரலாற்றுச் சிறப்புமிக்க, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெற்றது. கொரோனாவால் உரிய காலத்தில் நடத்தமுடியாமல் தள்ளிப்போடப்பட்டு, இப்போது நடத்தப்பட்டது.

தொடக்க விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9:00 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது. முதலில் புதுவை குமாரின் மந்திரமா தந்திரமா நிகழ்வும், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர்களின் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அடுத்து தொடக்க விழாவில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. முனைவர் க.பொன்முடி அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.



பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம்




அடுத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்ற, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன் தொடக்கவுரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து அறிஞர் பெருமக்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உரையாற்றினர்.



உரை வீச்சு

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், “கடவுளை மற – மனிதனை நினை” என்ற தலைப்பில் முனைவர் ப.காளிமுத்து, “வெல்க திராவிடம்!” என்ற தலைப்பில் ஆ.வந்தியத்தேவன், “சமூகநீதி காப்போம்” என்ற தலைப்பில் கோ.கருணாநிதி, “பெண்ணுரிமை காப்போம்” என்ற தலைப்பில் சே.மெ.மதிவதனி, “அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மை” என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு, “அறிவியலும் மூடநம்பிக்கையும்” காட்சிகள் மூலம் விளக்கி டாக்டர் கணேஷ் வேலுசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



சமுதாயத்திற்கு மிகவும் தேவையான – உடனடியாகச் செய்யப்பட வேண்டிய  13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

சரியாக மாலை 4:30 மணிக்கு மாநில மாநாடு நடைபெற்ற வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திலிருந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி புறப்பட்டது.

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் க.மு.தாஸ் இளம்பரிதி பேரணிக்குத் தலைமை வகித்தார். விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தோழர்கள் நால்வர் நால்வராக அணிவகுத்து மூட நம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை முழங்கியவாறு அணிவகுத்துப் புறப்பட்டனர்.

கருஞ்சட்டைப் பேரணி பெருத்ததோ – செஞ்சி சிறுத்ததோ என்கிற அளவுக்குப் பேரணி பெருவெள்ளமாக செஞ்சிக்குள் பாய்ந்தது. கட்டுப்பாட்டுடன் பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை அணிவகுத்தது செஞ்சி வாழ்பெருமக்களைச் சிந்திக்கச்செய்தது.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் – பேரணியும், அதில் இடம்பெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளும் விழிப்பை ஏற்படுத்தின.

பேரணியின் வருகையை ஒலிபெருக்கிமூலம் அறிவித்துக் கொண்டே சென்றார் வழக்குரைஞர் அமர்சிங்.

பெண்கள் தீச்சட்டி ஏந்தி, ‘தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?’ என்று முழக்கமிட்டு வந்த காட்சி பொதுமக்களை – குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈர்த்தது, வியப்பில் ஆழ்த்தியது, சிந்திக்கச்செய்தது.

சென்னை வழக்குரைஞர் வீரமர்த்தினி, ஒசூர் செல்வி செல்வம், திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி, சென்னை பசும்பொன் செந்தில்குமார், சென்னை மரகதமணி, சென்னை க.சுமதி, திருப்பத்தூர் வெண்ணிலா, முகப்பேர் செல்வி, தாம்பரம் உத்ரா, அம்பத்தூர் சரோஜா, மத்தூர் ஜான்சிராணி, ஆவடி பத்மினி, புதுச்சேரி இளவரசி, சென்னை ஆற்றலரசி, திருவள்ளூர் லோகநாயகி, ஷீப்னா முதலிய வீராங்கனைகள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தனர்.


வீர விளையாட்டுகள்

கறம்பக்குடி முத்து தலைமையில் சுருள்வாள் வீச்சு, சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி கடவுள் சக்தியைப் பார்த்தீர்களா என்று கேலியாக அறிவூட்டினர். ஊர்வலப் பாதையெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி, தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி வந்த காட்சி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆத்தூர் சுரேஷ் முக்கியமாக அதை செய்து காட்டினார். சிறுவர்களே சூடம் கொளுத்தி கையில் ஏந்தி, நாக்கில் வைத்துக் காட்டி விளக்கினர். மூடநம்பிக்கையை விளக்கினர்.

அரிவாள் மீது ஏறி நின்று, கடவுள் இல்லை என்று முழங்கி, பேராவூரணி தோழர் நீலகண்டன் மக்கள் கூடிக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் அந்தக் காட்சியைச் செய்துகாட்டி அசத்தினார்.

அலகுகுத்தி கார் இழுத்தல்

கோவில் திருவிழாக்களில் சிறு தேரை முதுகில் அலகு குத்தி இழுத்துக்காட்டி, இதுதான் கடவுள் சக்தி என்று பேசுவதுண்டு. இது கடவுள் சக்தியால் அல்ல, இதோ கடவுள் இல்லையென்று சொல்லியபடி அம்பாசிடர் காரையே இழுத்துக்காட்டுகிறோம்’ என்று செயல்படுத்திக் காட்டினர் கமலம்பாக்கம் தேவராஜ் (திண்டிவனம்), ஜெ.பா.மாரிமுத்து (சின்ன சாட்டிரான்பாக்கம்), திண்டிவனம் சுரேஷ் ஆகியோர்.

கடவுள் மறுப்புப் பாடல்களை பாடி ஆடினர். தோழர்கள் திண்டிவனம் பன்னீர்செல்வம், ஒசூர் சித்தார்த்தன், கிருட்டினகிரி பர்கூர் ஞானசேகரன் ஆகியோர் செடல் காவடி எடுத்து வந்தனர்.

கழகக் கொடிகள் அணிவகுப்பு

பெரியார் பிஞ்சுகள், மகளிர், மாணவர் கழக, இளைஞரணியினர், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தின் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகப் பகுத்தறிவு முழக்கமிட்டனர்.

பகுத்தறிவு ஆசிரியரணியினரும், பகுத்தறிவாளர் களும் பெரியார் பொன்மொழி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர் நடத்திய பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் வெகு சிறப்பாக இருந்தது.

பாடகர் கோடையிடி கோவிந்தன், ந.அன்பரசு (துறையுண்டார் கோட்டை), கு.திலீபன் (சடையார் கோவில்), தவில் இசைக் கலைஞர் முனியாண்டி, பம்பை இசைக் கலைஞர் முத்து காளி மற்றும்

20 மாணவர்கள் (பெரியார் பிஞ்சுகள்) பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் மார்பளவு உருவச்சிலையுடன் ஊர்வலத்தில் தலைவர்களின் பெருமைகளை முழங்கியபடி சென்றனர்,

கடலூர், கிருட்டினகிரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சார்பில் பதாகைகளுடன் இளைஞர்கள், பொறுப்பாளர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி சென்றனர்.

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை சிந்தனை விருந்தான கலைநிகழ்ச்சியுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

கொட்டும் மழையிலும் அலகு குத்தி மூடநம்பிக்கையை முறியடித்து காரை இழுத்த திண்டிவனம் தோழர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

ஒலிபெருக்கியில் முழக்கம்

யாழ் திலீபன், மதிவதனி, பா.மணியம்மை, த.சீ.இளந்திரையன், குடந்தை சங்கர், ஆத்தூர் பழனிவேல், உரத்தநாடு மனோகரன், காரைக்குடி வைகறை, டாக்டர் காஞ்சி கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கி மூலம் விளக்கி வந்தனர்.

தாம்பரம் பெரியார் பிஞ்சு கோவன் சித்தார்த்தன் சிலம்பம் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

செக்கடிகுப்பம் காத்தவராயன் குழுவினர் கழகப் பாடல்களைப் பாடினர்.

தலையில் வாழைக்காயை வைத்து அரிவாளால் வெட்டிக் காட்டும் சாதனையை – விஜயேந்திரன் (பெரம்பலூர்) செய்துகாட்டினர்.

தருமபுரி இயற்கை கலைக் குழுவினர் பறையிசை நிகழ்வை பகுத்தறிவாளர் கழகக் கலைப் பிரிவு செயலாளர் மாரி கருணாநிதி தலைமையில் சிறப்பாகச் செய்தனர்.

பேரணி வழித்தடம்

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தேசூர்பாட்டை சாலை, மாதாகோவில், சிங்கவரம் சாலை, குளத்தங்கரை, காந்தி பஜார், திருவண்ணாமலை சாலை வழியாக மாநாட்டு மேடையில் முடிவடைந்தது.

நிறைவு விழா

மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் மழையின் காரணமா திறந்த வெளியில் நடக்காமல் வள்ளி அண்ணாமலை திருமண அரங்கத்தில் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி சிரிப்பும், விழிப்பும் ஊட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. வரவேற்புரையை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு ஆற்றினார்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.எஸ்.மஸ்தான் வாழ்த்துரை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சே.கோபண்ணா, விழுப்புரம் மாவட்டக் கழக தலைவர் ப.சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

படங்களைத் திறந்துவைத்து

தலைவர்கள் உரை

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் தந்தை பெரியார் படத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிஞர் அண்ணா படத்தையும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் படத்தையும், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் படங்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சாவித்திரி புலே படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

செஞ்சி மஸ்தான் அவர்களின் சிறப்பான பங்களிப்பு

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டை செஞ்சியில் நடத்தினால், அதைச் சிறப்பாக நடத்தித் தருவேன் என்று உறுதியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், சொன்னவாறே சாதித்துக் காட்டினார். மாநாடு இவ்வளவு சிறப்பாகஅமைய அவரது பங்களிப்பு மகத்தானது.

ஆசிரியரின் நிறைவுரை

மாநாட்டு நிறைவுரையை ஆசிரியர் வழங்கினார். மாநாடு சிறக்கப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார். இணைப்புரையை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்க, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றி கூற மாநாடு சரித்திர சாதனை படைத்து நிறைவடைந்தது.


நன்றி: உண்மை ஜீலை 1-15,2022. அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரையில் ஒரு பகுதி

No comments: