Friday, 16 June 2023

குதுகலிக்கும் மனம்..அமைதியாய்

 


 

நீட் தேர்வில் தமிழ்நாட்டு

மாணவன் முதலிடம்…

எந்தத் தேர்விலும் தமிழ்நாட்டு

மாணவன் முதலிடம் என்றால்

குதுகலிக்கும் மனம்..

இதில் அமைதியாக இருந்தது…

 

அண்ணாவின் ஆரிய மாயை

வரிகள் மனதிற்குள் ஓடியது…

அதிலும்

ஒன்றிய அரசின் ஏவலாளிகள்

தமிழிசையும் இரவியும்

முந்தி வந்து கொடுத்த

பாராட்டுப்பத்திரங்கள்

நிரம்பவே யோசிக்க வைத்தது..

 

அரியலூர் தங்கை

அனிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி

நெஞ்சில் தைத்த முள்ளாய்

தமிழ்நாட்டு மக்கள் மனதில்

நிலைத்து நிற்கிறது…

 

நீட் வேண்டாம்…

வேண்டவே வேண்டாம் என்று

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த

சட்டமன்றம் அனுப்பிய

தீர்மானக் கோப்பைக் காணவில்லை

என்று மத்திய அமைச்சர்

நிர்மலா சிரித்துக்கொண்டே

சொன்ன பதில்

தமிழனின் மூளையில்

அப்படியே பதிந்திருக்கிறது…

 

நீதிமன்றங்கள் விளையாடும்

விளையாட்டுகள் கூட

தமிழ்நாட்டு

வீதிமன்றங்களில் விளக்கப்பட்டிருக்கிறது..

 

ஒடுக்கப்பட்ட பிள்ளைகள்..

வாழ்வின் அடித்தட்டில்

இருப்பவனின் பிள்ளைகள் படித்து

மருத்துவராய் வரும் வாய்ப்பைத்

தட்டிப் பறிக்கும் கொடுமை நீட்

எனும் உண்மை தமிழ்நாட்டின்

ஒவ்வொருவர் மனதிலும்

பசுமரத்தாணியாய் பதிந்து நிற்கிறது…

 

இலட்சம் இலட்சமாய்த்

தனிப்பயிற்சிக்கு கொட்டிக்கொடுத்து

பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை

செல்லாத மதிப்பெண்ணாய்

ஆக்கும் கொடுமை இது

எனனும் உண்மை

மக்கள் மனதில்

உள்ளங்கை நெல்லிக்கனியாய்…

 

இதை மாற்ற முடியுமா

என சனாதனவாதிகள்

பல முயற்சிகள் செய்கிறார்கள்..

 

தேர்வுகள் நிறைய உண்டு…

கலெக்டர் தேர்வில் கூட

1000 காலியிடத்திற்கு

1000 பேர் மட்டும்தான் எடுக்கப்படுவார்கள்

நீட் தேர்வில் மட்டும்

1000 காலியிடத்திற்கு

ஒரு இலட்சம் பேர் எடுக்கப்படுவார்கள்…

 

பணமின்றி 100 வது ரேங்க் ஆள் நிற்க

பணம் கொடுத்தால்

99999தாவது ஆளுக்கு மருத்துவ சீட் கிடைக்கும்…

பணத்தைக் கொட்டு

மருத்துவ சீட் பெற்றுக்கொள்

என்பதுதான் ‘நீட்’

 

நம் பிள்ளைகளின்

மருத்த்துவக் கனவைத் தகர்க்கும்

‘நீட்’ தேர்வைத் தகர்க்க

இன்னும் விழிப்பாய்

வியூகங்கள் வகுப்போம்….

நாக்பூர் தலைமையகத்தின்

நரித்தந்திர வேலைகளை

புரிந்து கொள்வோம்…

புரிய வைப்போம்…

 

                       வா.நேரு

                       16.06.2023

2 comments:

Anonymous said...

உண்மை. நீட் ரிசல்ட் வருமுன் முதல் 10 பேரை அறிவித்ததன் நோக்கம் என்ன ? திட்டமிட்டே நடந்ததாகவே, அந்த தனியார் பள்ளியும் இ(சை)ணைந்தே

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க..