Friday, 13 October 2023

வெளியேறினார் அண்ணல் இன்றுதான்...

 

அயல்நாடெல்லாம்

சென்று படித்துவந்த

அண்ணலுக்கு இந்த நாட்டின்

ஜாதிய அடுக்குமுறை

அதிர்ச்சியைத் தந்தது…..

 

எளிய உழைக்கும் மனிதர்களின்

மனங்களில் கூட

அப்பிக்கிடக்கும் ஜாதி 

உணர்வைக் களைவது எப்படி?...

என்னும் கவலை அவரின்

இரவுத் தூக்கத்தை எல்லாம் கெடுத்தது…

 

உலகத் தத்துவத்தை எல்லாம்

கரைத்துக் குடித்த அவருக்கு

‘ஸனாதன தர்ம ‘ நஞ்சு

தெளிவாகப் புரிந்தது…

அண்ணல் அம்பேத்கர்

சிந்தித்தார்,சிந்தித்தார்…

‘ஜாதியை ஒழிக்கும் வழி’ குறித்து

இரவு பகலாய்ச் சிந்தித்தார்.


நச்சு மரத்தின் இலைகளை

அகற்றலாமா என எண்ணினார்..

கோவில் நுழைவுப் போராட்டங்களை

நடத்திப்பார்த்தார்….

நச்சு மரம் புதிது புதிதாய்

இலைகளைப் புதிப்பித்துக்கொண்டே இருந்தது..

 

ஊற்றும் தண்ணீரை

மாற்றிப்பார்ப்போமா என எண்ணினார்…

அனைவரும் பிறப்பால் ஒன்று

என்னும் அறிவுரையை சொல்லிப்பார்த்தார்..

நச்சுமரம் புதிய தண்ணீரிலும்

செழித்து வளர்ந்தது…

 

இலைகளைப் பறித்தோ…

தண்ணீரை மாற்றியோ மாற்ற இயலாது

இந்த நச்சுமரத்தின் வேரே

ஜாதிய நச்சுக்காற்று  வீசிடக்

காரணம் என்று கண்டறிந்தார்…

 

வேரோடு மரத்தை

வீழ்த்தினால் ஒழிய

விடிவில்லை எனக்கண்டார்…

 

ஆம் தோழர்களே…

இந்துவாகப் பிறந்தேன் நான்…

இந்துவாகச் சாகமாட்டேன்

எனச்சூளுரைத்து

இலட்சக்கணக்கான தோழர்களோடு

இந்து மதத்திலிருந்து

வெளியேறினார் அண்ணல்

இன்றுதான் 1956-ல்…

 

                முனைவர் வா.நேரு

                 14.10.2023

 

 

2 comments:

Anonymous said...

ஆகுவன வெல்லாமுஞ் செய்து பார்த்தேன்!
ஆனாலுஞ் சாதியந்தான் வெல்லத் தோற்றேன்!
சாகுங்கால் இந்துவாகச் சாக மாட்டேன்
சனாதனச் சாக்கடையில் மூழ்க மாட்டேன்!
நோகுமொரு நிலைமாற்ற வேதி யத்தின்
நிழல்வீழாத் தடஞ்செல்லும் வாழ்வை யேற்கப்
போகும்முன் பொழுதோடு முழுக்குப் போட்டுப்
பொதுமைசொல்லும் புத்தநெறி தழுவி யேற்பேன்!

அண்ணலின் புகழ்நினைவைப் போற்றுவோம்❤️🌹

முனைவர். வா.நேரு said...

அருமை..மகிழ்ச்சி.நன்றி.(பெயர் இல்லை).