Friday 22 December 2023

மதத்திலிருந்து விடுதலை.... முனைவர் வா.நேரு

 

தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள் 2023, டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வையை எண்ணிப் பார்க்கிறபோது நாம் வியப்படைகிறோம்.மற்றவர்களெல்லாம் நாட்டின் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தபோது, ஜாதியிலிருந்து விடுதலை, மதத்திலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை என்று சிந்தித்து அருந்தொண்டாற்றி யவர் தந்தை பெரியார் அவர்கள்.

மனித சமுதாயத்தின் பாதியளவு உள்ள பெண்களின் வாழ்வைப் பெரும் துன்பமாக்கும் வேலையை இன்றைக்கும் மதங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் அவர்கள் பேசிய காணொலி ஒன்றைப் பார்த்தேன். ஏன் ஒரு போப்பாக ஒரு பெண் வரமுடியவில்லை? ஏன் சங்கராச்சாரியாராக ஒரு பெண் வரமுடியவில்லை-? ஏன் முகமதிய மதத்தின் தலைமைக் குரு பீடத்திற்கு ஒரு பெண் வரமுடியவில்லை என்று கேள்வியைக் கேட்டவர், “எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவைஎன்று குறிப்பிட்டார்.



மதத்தின் பிடியிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கு உடைமாற்றத்தை, ஆண்களைப் போலவே உடை உடுத்துவதை தந்தை பெரியார் அவர்கள் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருக்கிறார்.அண்மையில் பி.பி.சி.செய்தியைப் படித்தபோது, ஆப்கானிஸ்தானில் ஒரு தந்தை, தன் மகளை மதவாதிகள் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு இந்த வழிமுறையைப் பின்பற்றியிருக்கிறார் என்பதை வாசித்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரின் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நிலோஃபர் அய்யூபி, பலமாக அறையப்பட்டவுடன் தரையில் விழுந்தார். அவரது முகம் நீண்ட நேரம் சிவந்திருந்தது.அப்போது நீண்ட தாடியுடன் ஓர் உயரமான நபர் அச்சுறுத்தக்கூடிய வகையில் அவளை நெருங்கி, அவளது மார்பில் கை வைத்த போது நிலோஃபருக்கு வயது வெறும் நான்கு தான்.

அந்த நபருக்கு அவள் பெண்ணா என அடையாளம் காண வேண்டும். அவளைக் கன்னத்தில் அறைந்த பிறகு, அந்த நபர் நிலோஃபரைப் பார்த்து இனி வருங்காலங்களில் அவளைப் பர்தா இல்லாமல் பார்த்தால், அவளுடைய தந்தை சிறையில் அடைக்கப்படுவார் என்று மிரட்டினார்.

இந்தச் சம்பவம் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, பி.பி.சி. வானொலி நிகழ்ச்சியான அவுட்லுக்குக்கு அளித்த பேட்டியில் நிலோஃபர், “நான் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தேன். அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்தது. அவர் கோபத்தில் சீறத் தொடங்கினார்,” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய நிலோஃபர், “இதற்கு பிறகு எனது தந்தை ஒரு பெரிய முடிவை எடுத்தார். எனது அம்மாவிடம் கத்தரிக்கோலைக் கொண்டு எனது முடியை வெட்டுமாறு கூறினார்,” என்றார்.

ஆண் பிள்ளைகளுக்கான உடைகளை அவளுக்கு உடுத்தி விடுஎன அம்மாவிடம் கூறினார்,” என்றார். ஷரியா சட்டத்திலிருந்து தப்பிக்க போட்ட வேடம் .தாலிபான் ஆட்சியின் முதல் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தார் நிலோஃபர்.

நிலோஃபர் இப்போது போலந்தில் வசிக்கிறார். தனது குழந்தைப் பருவத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், “அந்த நாள்களில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தது, ஏதோ உலகின் மிகவும் பழமைவாத பிராந்தியத்தில் வளர்ந்தது போல் இருந்தது,” என்கிறார்.

மேலும்அங்கு உங்களுக்கான உரிமைகள் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்பதை வைத்துத் தீர்மானிக்கப்பட்டது,” எனச் சொல்கிறார். முடி வெட்டிக் கொண்டு, தனது சகோதரனின் உடைகளை அணியத் தொடங்கிய பிறகு, தனது வாழ்க்கை எவ்வாறு மாறப் போகிறது என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை.

நான் என் சகோதரர்களைப் போலவே நடத்தப்பட்டேன். சிறுவர்களின் ஆடையை அணிந்து கொண்டு, எனது தந்தையுடன் சந்தைக்குச் செல்வேன். என்னால் பேருந்தில் செல்ல முடிந்தது. விளையாட முடிந்தது. எனது பகுதியில் இருந்த சிறுவர்கள் எனது நண்பர்களானார்கள். நான் எப்போதும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தேன்,” என நிலோஃபர் கூறுகிறார்.

ஆனால் நிலோஃபரின் பிற சகோதரிகளின் வாழ்க்கை, ஆப்கானிஸ்தானின் மற்ற பெண்களது போலவே இருந்தது. அவர்கள் தலையை மூடிக்கொண்டு நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. உடலின் எந்தப் பாகமும் தெரியாத வகையில் அவர்கள் ஆடைகளை அணிய வேண்டும். தனது தந்தை அதை வெறுத்ததாக நிலோஃபர் கூறுகிறார். (நன்றி பி.பி.சி.தமிழ், டிசம்பர் 7,2023)
பெண்கள் விடுதலைக்கு, சம உரிமைக்கு மதத்திலிருந்து விடுதலை அடையவேண்டியது அவசியம் என்று கருதிய தந்தை பெரியார், பெண்கள் மதத்தில் கட்டுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் கடவுளும், மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டிருக்கிற சடங்குகளும் எனக் கண்டார். சடங்குகளைப் பெண்களே செய்யாதீர்கள் என அறைகூவல் விடுத்தார்.

ஒவ்வொரு மதமும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்கு சக மனிதர்களைப் பலியிட மனிதர்களைத் தூண்டுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும், சூரியனை ஆராய்வதற்கு செயற்கைக்கோள் அனுப்பும் இந்தக் காலத்திலும் மதம் தன் பிடியை இறுக்கிக்கொள்ள சக மனிதர்கள் மேல் வெறுப்புக் கொள்ளச்செய்கிறது. பொய்ப் பரப்புரைகளைப் பரப்புகிறது. உலகத்திலேயே தன் மதம்தான் உயர்ந்த மதம் என்று ஒவ்வொரு மதத்துக்காரரையும் எண்ண வைப்பதற்கு ஒவ்வொரு மதத்தினரும் பெரும் முயற்சி எடுக்கின்றனர்; பணம் செலவழிக்கின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கையைப் பேசும் நமது கடமை என்ன?

தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் பல்வகைப்பட்ட நூல்களைப் படிப்பார்- பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல்வகைப் புராண நூல்கள்,- வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள்- பாகவதம், பெரியபுராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள்- இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு, அடிக்கோடிட்டு அதனைப் பற்றிய ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும், சீரிய விமர்சனங்களாகவும் கூட எழுதியுள்ளார்என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்(புத்தகங்களால் புத்தாக்கம், பக்கம் 26) குறிப்பிடுவார். தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய 90களிலும் படித்தார், எழுதினார். அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அயராது படிக்கின்றார், எழுதுகின்றார்_ இந்த 91 வயதிலும்.
இன்றைக்குப் பகுத்தறிவு சார்ந்து பல புத்தகங்கள் வருகின்றன. தமிழில், ஆங்கிலத்தில், பிறமொழிகளில் வருகின்றன.

உலகம் முழுவதும் மதத்தை விட்டு வெளியேறி, மதமற்றவர்களாக வாழ்பவர்களின் எண்ணிக்கை என்பது நாளும் வளர்கிறது என்பதைப் புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.மதத்தை விட்டு வெளியேறுபவர்கள் தங்கள் எண்ணங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். அதைப் பரப்பலாம். மொழி பெயர்க்கலாம்.
உலக மானுடம் மதத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இன்னும் அதிகமாக உழைப்போம் என்னும் உறுதிமொழியை ஏற்கும் நாளாக தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் அமையட்டும். ♦

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்,திசம்பர் 15-31,2023

 

No comments: