Showing posts with label நிகழ்வும் நினைப்பும். Show all posts
Showing posts with label நிகழ்வும் நினைப்பும். Show all posts

Thursday, 12 March 2026

திரு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுச்சொற்பொழிவு

 எங்கள் கல்லூரியின்(திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி) மேனாள் முதல்வர் திரு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுச்சொற்பொழிவு நாளை (14.03.2026) காலை 10.30 மணிக்கு மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறுகிறது.


அவரைப் பற்றிய நினைவுகளை, நிகழ்வுகளை எல்லாம் பல பதிவுகளாக எனது வலைப்பதிவுகளில் எழுதியது கீழே உள்ளது.

https://vaanehru.blogspot.com/2020/03/blog-post.html






வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம். மகத்தான மனிதர்கள் எப்போதும் நம் நினைவுகளில் இருந்து மறைவதில்லை. என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள்.வாய்ப்பு இருப்பவர்கள் வாருங்கள்.

Saturday, 3 January 2026

பெரியவன் சுந்தரபுத்தன் நாவல்.... நிகழ்வும் நினைப்பும் 2026(2)




2026-ஆம் ஆண்டில் வாருங்கள் படிப்போம் குழுவின் சார்பாக நடைபெற்ற முதல் திறனாய்வுக்கூட்டம்,வாருங்கள் படிப்போம் குழுவின் 333-வது கூட்டம் இன்று சனிக்கிழமை(03.01.2026),இணைய வழிக்கூட்டமாக மாலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெற்றது. நிகழ்வில் அறிமுகங்களுக்கு அடுத்து ஒரு 45 நிமிடம் இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த நாவலின் சிறப்பு, பெரியவன் என்னும் பெயர், நடராசன், வடிவு மற்றும் துணைக் கதாபாத்திரங்கள். விவசாயி, பகுதி நேர மாலை முரசு பத்திரிக்கை  நிருபர்,குடும்பத்தில் மூத்த அண்ணன்,திராவிடர் கழகத் தொண்டர் என்று இந்த நாவல் சுட்டிக்காட்டும் பன்முகத்தன்மைகளை சுட்டிக்காட்டி, திருவாரூர் அருகில் இருக்கும் கண்கொடுத்த வனிதம் என்னும் ஊரும் அதனைச் சுற்றி இருக்கும் ஊருகளும் ஆறுகளும், ஆற்று  விவசாயமும் என்று இந்த நாவல் சுட்டிக்காட்டும் பலவற்றை இணைத்துப்பேசினேன். இன்றைய உரை எனக்கே ஒரு நிறைவாக இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து நாவல் ஆசிரியர், பல நூல்களின் ஆசிரியர் எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூல் எழுதியது பற்றியும், தன்னுடைய தந்தைதான் இந்த நாவலில் வரும் நடராசன் என்பதையும் குறிப்பிட்டு ஒரு 10 நிமிடங்கள் ஏற்புரை நிகழ்த்தினார். அத்ற்கு அடுத்து கேள்வி பதில்களும் கருத்துகளும் என நிகழ்வு 9 மணிவரை நடந்தது.மகிழ்ச்சி. நிகழ்வில் தொடக்கம் முதல் கடைசிவரை நாவல் ஆசிரியர் சுந்தரபுத்தன் அவர்கள் இருந்ததும், கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் கூடுதல் சிறப்பு.

நானும் எழுத்தாளர் சுந்தரபுத்தனும் பேசிய காணொளி... வாய்ப்பு இருக்கும்போது கேளுங்கள்.

நிகழ்வினை அருமையாக ஒருங்கிணைத்த தோழமைகள் கலையரசி அவர்களுக்கும்,வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா உமா மஹேஸ்வரி அவர்களுக்கும் மற்ற தோழமைகளுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.



 

Friday, 26 December 2025

ஒரு பின்னோட்டமும் நினைவுகளும்

 ஒரு பின்னோட்டமும் நினைவுகளும்

"நண்பர் நேரு அவர்களின் புதல்வியின் ஆழினி கதை படித்தேன்.முதலில் நேர்த்தியாக அச்சடித்தவர்களுக்கு நன்றி.சில புத்தகங்களைப் படிக்கத் தெளிவாக இல்லாமல் H,2H பென்சிலில் எழுதியது போல இருக்கும். எல்லாம் கணினி எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி அச்சாகியிருக்கும்.ஆனால் இந்தப் புத்தகம் B,2B. பென்சிலால் எழுதியது போலத் தெளிவாக எவ்வளவு வயதானவர்களும் படிக்க முடியும். கதை சொல்லும் நேர்த்தி ஆசிரியரின் பெயருக்குப் பொருத்தமாக உள்ளது.சொ.நே.அறிவுமதிக்கு வாழ்த்துக்கள்.சிறு வயதில் படித்த முத்து காமிக்ஸ், கன்னித்தீவுவிட்டலாச்சாரியின் மாயக்கதைகளை நவீனப்படுத்தியதைப்போல உள்ளது.கதையின் ஆரம்பத்திலேயே BSNL ன் தடைபடும் நெட் ஒர்க்கையும் நகைச்சுவையாக சொல்கின்றார். இந்தக் கதையை ஐயா ஞானசம்பந்தம், பார்த்திபன்,வடிவேல்,ஊர்வசி,கோவைசரளா ஆகியோரை வைத்து சினிமாவாக எடுக்கலாம்.மேலும் மேலும் நல்ல கதைகளை எழுத வாழ்த்துகிறேன்."

முக நூலில் திரு முனியாண்டி சுந்தரம் அவர்கள்...

திரு சுந்தரம் சார் அவர்கள் என்னோடு BSNL நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். நிறையப் புத்தகங்களை அப்போதே வாசிப்பார். இப்போது ஓய்வு பெற்றபின்பு இன்னும் நிறைய வாசிக்கிறார் என்று நினைக்கிறேன்.முதலில் இந்தப் புத்தகத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்ததை ,முக நூலில் பதிவிட்டிருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும் சார்.என் மகள் எழுதிய புத்தகத்தை வாசித்துப் பாராட்டி எழுதியது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.ஆழினி ஒரு மிகை புனைவு நாவல்.நகைச்சுவை நாவல்.சிங்கப்பூரைச் சார்ந்த பேரா லெட்சுமி அவர்கள் நீண்ட வருடங்களுக்குப் பின்பு ஒரு நாவலைப் படித்து அவ்வளவு சிரிப்பு சிரித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.அவரும் அணிந்துரை கொடுத்திருக்கிறார். 

அய்யா கலைமாமணி பேரா முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எனது முனைவர் பட்டத்திற்கான நெறியாளர். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பாராட்டி மகிழ்ந்து,அணிந்துரை அளித்தார்.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் இந்தப்புத்தகத்தை ஒரு தயக்கத்துடன் கொடுத்தேன்.மிகப் புனைவு நாவல். இதற்கு என்ன சொல்வாரோ என்று..ஆனால் அய்யா ஆசிரியர் அவர்கள் படித்துவிட்டு , அறிவுமதியையும் அழைத்து மனமாரப் பாராட்டியதோடு,எழுதுவது அற்புதமாக வருகிறது,விட்டுவிடாதே,தொடர்ந்து எழுது என்றார் என் மகளிடம்.

வடிவமைப்பை அழகாக அமைத்து, சிறப்பாக எல்லோரும் பாராட்டும்வண்ணம் அச்சடித்துக்கொடுத்த எழிலினி பதிப்பகத்திற்கு(எமரால்டு பதிப்பகம்) பாராட்டும் நன்றியும்.












Sunday, 30 November 2025

சாப்டூரில் நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

 

எனது சொந்த ஊர் சாப்டூர்.அங்கிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் 6ம் வகுப்பு பின்பு எட்டாம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன்.இடையில் ஏழாவது மட்டும் எம்.கல்லுப்பட்டியில்.கடந்த 26.11.2025 அன்று சாப்டூரில்  உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, நிகில் பவுண்டேசன் பயிற்சியாளர்கள் மூலமாக நிகழ்த்துவதற்கு அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் திரு .சுந்தரராஜ் உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்து நடத்தலாம்,மிகவும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்



.நிகில் பவுண்டேசன்,பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.  26.11.2025,புதன்கிழமை இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு  நிகில் பவுண்டேசன் நிறுவனர் திரு.சோம. நாகலிங்கம் IRS(Rtd) அவர்கள் ஒத்துக்கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது.கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று இந்த நிகழ்வு காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது...

மிகவும் நமக்கு பிடித்த ஒருவரின் திடீர் இழப்பை எப்படி சரி செயவது என்பதற்கு திரு சோம.நாகலிங்கம் அவர்களின் செயல்பாடு மிகப்பெரிய உதாரணமாகும். கல்லூரிக்குச்சென்ற தனது மகன் நிகில் திடீரென விபத்தில் இறந்துவிட, சில  நாட்கள்(21 நாட்கள்) துக்கத்திலேயே இருந்துவிட்டு,இனியும் இப்படி இருப்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு உகந்தது அல்ல எனத் தீர்மானித்து,துயரத்தில் இருந்த தனது இணையரிடமும் பேசி ,இறந்த தனது மகன் அடிக்கடி குறிப்பிடும் அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நட்த்துங்கள்எனும் கோரிக்கையை ஏற்று ,இந்த நிகழ்வினை நடத்த ஆரம்பித்தவர் திரு.சோம. நாகலிங்கம் அவர்கள்

திரு சோம நாகலிங்கம் சார் அவர்கள் உரையாற்றுகிறார்.அருகில் தலைமை ஆசிரியர்,நான்,சொ.நே.அன்புமணி மற்றும் பயிற்சியாளர்கள்.


அப்போது அவர் மத்திய அரசுப்பணியில் உயர்பொறுப்பில் இருந்தார்.அவரது இணையரும் அப்படியே.இருவரும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடத்த ஆரம்பித்தனர்.இன்றைக்கு அவரது இணையரும் இல்லாத நிலையில்.தனது பணி ஓய்வுக்குப் பின் தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை திரு சோம. நாகலிங்கம் சார் அவர்கள் செய்துவருகின்றார்.என்னைப் பொறுத்த அளவில் ”கல்விக்காகப் பணி செய்பவர்களே மிகப்பெரும் மனிதர்கள் “இந்த அறக்கட்டளை பற்றி அறிந்துகொள்ள https://www.nikhilfoundation.co.in/index.php

இந்த அறக்கட்டளை பற்றி மேலே குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று பார்த்தால் முழுமையாக அந்த அறக்கட்டளை பற்றிப் புரிந்துகொள்ளமுடியும்.மிகப்பெரும் பணி,போற்றவேண்டிய பணி.

26.11.2025 புதன்கிழமை சாப்டூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் ,மாலையில் மிக மகிழ்ச்சியாக பின்னோட்டம் அளித்தனர்.அவர்களின் உற்சாகம் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.

முழு நாளும் சாப்டூர் அரசுப்பள்ளியில் இருந்தது மிக மகிழ்வான நாளாக இந்த நாள் எனக்கு அமைந்தது.என்னோடு எனது மகன்  சிறப்பு பி.எட். முடித்திருக்கும் சொ.நே.அன்புமணியும் வந்து கலந்து கொண்ட்து மேலும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது.

சிறப்பு பயிற்சியாளராக  திரு இராமூர்த்தி அவர்கள் நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்தார்.,மற்றும் பயிற்சி கொடுப்பவர்களாக திரு எஸ்.பி.குமரகுருபரன், திரு வேல்முருகன்,திரு மாரீஸ்வரன், திரு ப்ரீத்தா,திரு சுகுமாறன்,திரு நந்தினி மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்தார்கள்.


உற்சாகமாக பின்னோட்டம் கொடுத்த ஒரு மாணவிக்கு நூல் பரிசு 

...


சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு க.சுந்தரராஜ் M.Sc,M.Phill.,B.Ed அவர்களும் உதவித் தலைமையாசிரியர் திரு சு.தமிழிரசன் M.Sc.,B.Ed அவர்களும் மற்றும் அத்தனை ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியினை திரு சோம்.நாகலிங்கம் அவர்கள் நகைச்சுவையோடும் வாழ்வியல் எதார்த்த நிகழ்வுகளோடும் இணைத்து அருமையாக நட்த்தினார். இன்னும் இந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுக்க நான் முயற்சிகள் எடுக்கவேண்டும்.தலைமை ஆசிரியரும்,தமிழாசிரியரும் நூலகத்தைக் காண்பித்தனர்.அருமையான புத்தகங்களை தமிழ்நாடு அரசு அளித்திருக்கிறது.அதைப் பள்ளிக் குழந்தைகள் நன்றாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மகிழ்ச்சி அளித்தது.

 

Sunday, 23 November 2025

திரு வீ.வீரி(செட்டி) சார் அவர்களுக்குப் புகழ் வணக்கம் !

 இன்று எனக்கு சாப்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியராக இருந்த பெரும் மதிப்பிற்குரிய திரு வீ.வீரி(செட்டி) சார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். நவம்பர் 24,2022 அன்று இயற்கை எய்திய அவருக்குப் புகழ் வணக்கம்! அவரது பணிகளைப் பற்றிய 'கனவு போலத்தான் நடந்தது' என்னும்  புத்தகம்  தீர்ந்துவிட்டது. மறுபடியும் அச்சடிக்கவேண்டும்.மாணவர்களின் மனதில் இடம் பிடித்த ஆசிரியர்கள் மறைவதில்லை.தங்கள் உழைப்பால்,தங்கள் தொண்டால் மாணவர்களின்,அவர்களின் வாரிசுகளின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்கள். 


அவர் மறைந்த சில நாட்களில் பதிவு செய்த பதிவு 

இன்றைய எனது தலைமை ஆசிரியர் நினைவு நாளில் எனது மகன் சொ.நே.அன்புமணியின் பங்களிப்பு அவரது நினைவிற்கு





Tuesday, 11 February 2025

நாலு தெருக் கத ...

 நாலு தெருக் கத ...

வா.நேரு


நாலு தெருக் கத என்பது ஒரு புதினம். மயிலாடுதுறையைச் சார்ந்த கி தளபதிராசு அவர்கள் இதை எழுதியிருக்கிறார். திராவிடன் குரல் வெளியீடாக இந்தப் புதினம் திசம்பர் 2024 ஆண்டு வெளிவந்திருக்கிறது 196 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை உருவாய் 200.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டுவிழா நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் கேரளநாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர் வைக்கம் போராட்டம் என்பது உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்புமுனையைக் கொடுத்த ஒரு போராட்டம்.
வைக்கம் போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்வது? சிலர் வைக்கம் போராட்டத்தைப் பாடல்களாக பாடி இருக்கிறார்கள். அய்யா பழ அதியமான் வைக்கம் போராட்டத்தைப் பற்றி மிக அருமையான ஓர் ஆய்வு நூலை வைக்கம் போராட்டம் என்னும் தலைப்பிலேயே எழுதியிருக்கிறார்.
அவர் ஒன்றிய அரசுப் பணியிலே பணியாற்றியக் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வைக்கத்திற்குச் சென்று கேரள அரசின் பல்வேறு துறைகளுக்கு சென்று அங்கு பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை அவரது சிறைவாழ்வை முழுமையான தரவுகளோடு சான்றுகளோடு கொடுத்திருக்கக் கூடிய ஒரு நூலாக அந்த நூல் விளங்குகிறது.
நாலு தெருக் கத என்ற இந்த நூலைப் பொறுத்தவரை புனைவுகளின் வழியாக நடந்த வரலாற்று நிகழ்வை உரையாடல் வழியே, படிப்பவர் மனத்தில் பதிய வைக்க எழுத்தாளர் கி தளபதிராசு அவர்கள் முயன்று அதிலே வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தைப் படிக்கும் போழ்து நமக்குத் தெளிவாய் தெரிகிறது. அதன்படி இந்த நாலு தெருக் கதயின் நாயகன் இனியவன் பத்து ஆண்டிற்கு முன் சென்னையில் ஒரு நாளிதழில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தாலும் செய்தியை அனுப்புவதோடு தன் வேலை முடிந்தது என்று நினைக்காமல் கட்டுரைகள் எழுதி அதை அந்த நாளிதழ்க்கு அனுப்பிய செய்திகளை படித்த அந்த நாளிதழை நடத்துபவற்குப் பிடித்துப் போனதால் தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதன் விளைவாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனை நல்ல எழுத்தாளனாக அடையாளப் படுத்தியது.
சில ஆண்டுகள் அந்த இதழில் வேலை செய்துவிட்டு அதன்பின் அனைவரும் அறிந்த ஆங்கில நாளிதழுக்குச் சென்று அதற்குப் பின் தொலைக் காட்சிக்கு மாறிவிட்டான் என்று உழைப்பால் உயர்ந்த ஒருவரை இன்றைய இளைஞர்களுக்கு முன் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒருவரை கதை மாந்தனாய் படைத்திருக்கிறார் இந்த புதினம் எழுதியவர்.
நாலு தெருக்கத என்னும் இந்தப் புதினம் நடப்பு நிகழ்வுகள் அடிப்படையில் இன்றைய வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவு குடும்பம் எப்படி நடைபெறுகிறது என்பதை இயல்பான உரையாடல்கள் மூலமாக படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது இதிலே அறிவுக்கரசு என்ற ஒரு கதை மாந்தனை படிக்கும் போது திராவிடர் கழகத்தின் செயலவை தலைவராக இருந்த அய்யா சு.அறிவுக்கரசு அவர்களை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர் அப்படியே உயிரோடு எழுந்து வந்து இந்தக் கதைக்குள்ளும் உரையாடல்களுக்குள்ளும் நடமாடுவது போல் தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த உண்மையான மாந்தர் அறிவுக்கரசுவை இந்தப் புதினத்தின் வாயிலாக உயிர்ப்பித்திருக்கிறார் எழுத்தாளர் தளபதிராசு. மேலும் வைக்கம் வரலாற்றை மட்டுமல்ல நிறைவாழ்வு வாழ்ந்து கொள்கையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரின் தொண்டர்களை இப்படியும் நினைவில் நாம் வைத்துக் கொள்ளலாம் வருங்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டிச்செல்லலாம் என்பதற்கு இந்தப் புதினத்தைப் படைத்தவர் வழிகாட்டி இருக்கிறார். அதைப்போல வாழ்ந்து மறைந்த சில பெரியாரிய உணர்வாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சில பெரியாரிய உணர்வாளர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை விவரிப்பதாக இந்தக் கதை அமைந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பெரியார் வழி வாழும் ஒரு குடும்பத்தில் ஓர் இளைஞன் பகுத்தறிவு அடிப்படையில் திருமணம் செய்து கொள்கிறான். அத்தோடு தம்மை சார்ந்தோருக்கும் பகுத்தறிவு வழியில் சாதி மறுப்பு காதல் மணத்தைத் செய்வித்துக் குமுகப் பொறுப்புடன் வாழ்கிறான். என்பதைச் சுவையாகச் சொல்லும் கதைதான் இந்தப் புதினத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சமதளத்தில் பாய்ந்து ஓடுகிற கதை நீர்.
சென்ற நூற்றாண்டில் குமுக உரிமைக்கான முதன்மை முன்னெடுப்பு வைக்கம் போராட்டம் அதன் அனைத்து நிகழ்வுகளும் அதில் பெரியாரின் பங்கும் எப்படி என்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு போராட்டத்தை சான்றுகளின் வழி ஆவணப்படுத்தி வரலாறாகப் பதிவு செய்வது செய்தி பரவலில் ஒரு வகை இன்னொரு வகை ஆய்வாளர்கள் மாணவர்கள் குமுக ஆய்வில் ஆர்வம் உள்ள படிப்பவர்கள் ஆகியோருக்கு அவ்வரலாறு பயன்படுவது மட்டுமல்லாமல் அப்போராட்ட உணர்வைப் புனைவாக எழுதி பொது மக்கள் படிக்க இது போன்ற புதினம் உதவும் என்று அணிந்துரையில் பழ.அதியமான் குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த இடத்தில் சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து இந்தக் கதையின் நாயகன் இனியவன் மகிழுந்தை நிறுத்துவதற்குக் கூட ஒரு காரணத்தை சொல்லுவதாகப் புதினத்தில் வருகிறது. இதேக் கருத்தை ஒட்டி சில நாளைக்கு முன்பு அடையாறு ஆனந்த பவன் உணவக உரிமையாளர் ஒரு நேர்காணலில் ஒருகாலத்தில் எல்லோரும் உணவகம் நட்த்த முடியாது என்றும் அது ஒரு குறிப்பட்ட பிரிவினர் மட்டுமே நடத்த முடியும் ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை யார் வேண்டுமானாலும் காசு இருந்தா நடத்தலாம் என்றும் யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலையை உருவாகிக் கொடுத்தவர் பெரியார்தான் என்று வெளிப்படையாகச் சொன்னது மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது மக்கள் நடுவில். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் அவர் பகுத்தறிவாளர் இல்லை நாளும் சிலையை வழிபடும் போக்கு உடையவர்தான் என்றாலும் அவர் பெரியாரைப் பற்றிக் கொடுத்த நேர்காணலை பார்த்தப்பிறகு அவர் மேல ஒரு மதிப்பு வந்தது என்று என்று போகிறபோக்கில் இனவுணர்வு அடிப்படையில் நாம் ஒத்திசைவு கொடுக்கவேண்டும் என்ற கருத்தை இந்தப் புதினத்தில் எழுத்தாளர் விதைக்கின்றார் அது மட்டுமின்றி பற்றா இனவுணர்வா எது முதன்மை என்றால் இனவுணர்வு என்னும் விடைக்கான உரையாடலாக மேற்கண்ட உரையாடலை இணையர்களுக்கு இடையே நடக்கின்ற உரையாடலாகப் புதினத்தைக் காட்டியிருக்கிறார்.
இப்படி உள்ளும் புறமும் பெரியாரியல் அடிப்படையில் இந்தப் புதினத்தைப் அமைத்திருந்தாலும் எந்த இடத்திலும் பெரிய அளவிற்கான பரப்புரை நெடியில்லை என்றாலும் பெரியாரியல் குறித்த புரிதலைக் கொடுக்கும் வண்ணம் உரையாடல்கள் இருக்கின்றன.
கதை சொல்லுதல் என்பது காலம் காலமாக நம் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கலை. அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்யுள் வடிவில் நிகழ்வுகளைக் கதைகளாக்கி கற்பனைகளோடு கலந்து கொடுத்த பெருமைக்குரிய இனம் நம் இனம். அப்படிச் சொல்லுகிற கதை யாருடைய கதை என்பது மிக முதன்மையானது கழக இலக்கியத்தில் குமுகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மாந்தர்கள் பாடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் இருந்தவர்களும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கல்லைப் பற்றிப் பாடுவதும் கல்லுக்குத் தொண்டு செய்யும் மன்னனை பற்றிப் பாடுவது மட்டுமே இலக்கியம் என்று ஆகிப் போனது. எனவேதான் 20 ஆம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டில் கதை சொல்லுதல் கதை எழுதல் என்பது எதற்காக யாருக்காக யாரால் என்ற வினாக்களோடு தொடர்கிறது.
இந்த நாலு தெருக்கத என்னும் புதினம் ஒரு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த குமுகத்தில் வாழும் அனைவரும் ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் தன் வாழ்வியலைப் பகுத்தறிவு அடிப்படையில் அமைத்துக் கொண்டாலும் தனக்கு மாறுபட்ட வாழ்வியலைக் கொண்டிருக்கும் மனிதர்களோடும் எப்படி ஒத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து வாழமுடியும் என்பதும் இந்தப் புதினத்தின் வழியாக காட்டியது வெகு சிறப்பு.
இந்தப் புதினத்தின் வெற்றி எந்த இடத்திலும் கதை தொய்வில்லாமல் செல்வது. சில கிளைக்கதைகள் நீண்டும் சில கிளைக்கதைகள் ஓரிரு பக்கங்களிலும் முடிந்திருக்கின்றன என்பதும் ஒருவகை புரட்சிதான். காரணம் ஒரு கிளைக்கதை என்றால் 10 பக்கம் என்றக் கணக்கில் 25 கிளைக்கதைகளை கொண்டு 250 பக்கம் எழுதவேண்டும் என்று பல எழுத்தளர்கள் பக்கங்களைத் தீர்மானித்துவிட்டு எழுத அமருவர். இந்தப் புதின எழுத்தளர் தளபதிராசு அவர்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட வரைமுறை எல்லாம் வகுத்துக்கொள்ளாமல் இயல்பான கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு கதைகளைப் படைத்துள்ளார் என்பது சிறப்புதான் என்றாலும் ஆங்கிலச் சொற்கள் வடமொழிச் சொற்கள் எனப் பழமொழிச் சொற்கள் இந்தப் புதினத்திற்குள் வருகின்றன என்பதை படிக்கும் போது நமக்கு வருத்தமாக உள்ளது என்றாலும் நாம் இவர் மீது மட்டும் பழியைச் சுமத்த முடியாது. காரணம் நம்மைச் சுற்றி உலவும் ஊடகம் எல்லாம் திட்டம் போட்டே தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் கடந்து செல்ல முடியாது. மேலும் ஆசிரியர், பேராசியர் என்று சொல்லிக் கொள்வோர் பேசுவதை எழுதுவதை எல்லாம் படித்தால் கேட்டால் தமிழ் விரைந்து சாகுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல படையெடுப்புகளை எல்லாம் தாண்டி நிலைத்து நிற்கும் செம்மொழி என்ற அடிப்படையில் இனி வரும் நூல்கள் எல்லாம் தூயத் தமிழில் படைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்தப் புதினம் படைத்த எழுத்தாளர்க்கு வைக்கிறேன்.
நடக்காத நிகழ்வுகளான இராமாயண மகாபாரதக் கதைகளை வரலாறு என்று சொல்லி மக்கள் நடுவில் புகுத்துவதற்கு ஒரு பெருங்கூட்டம் தமிழர் நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் கேடுகளுக்கு சாவு மணியை அடிக்க உண்மையான நிகழ்வுகளை கதைகளாக்கி அதை மக்களிடம் கொண்டு சென்று புதியதொரு வழியை நாம் சமைக்க வேண்டும் அதற்கு தளபதிராசு போன்றோர் தொடர்ந்து எழுதி புதிய எழுத்தாளர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதே என் அவா!



Wednesday, 13 November 2024

Women @ Law Book Review ...

 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1981-1984 ஆம் ஆண்டுகளில் நான் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்தபோது ,எனக்கு ஆங்கிலப் பாடத்தின் ஆசிரியராக இருந்தவர் திரு.கி.ஆழ்வார் எம்..,எம்.பில்.,சார். அவர்கள்.பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர். தன் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கவைத்தவர்.நான் பெரியாரியலை வாழ்வியலாக அமைத்துக்கொண்டதற்கு வழிகாட்டியவர். நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது பெரியார் சிந்தனைகள் பட்டயப்படிப்பு,அஞ்சல் வழியில் படிக்கிறீர்களா எனக் கேட்டு நான் ,அந்தப் பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்கக்காரணமாக இருந்தவர்.நான் பெரியார் சிந்தனைகள் படிக்கும் காலத்திலேயே திரு.ஆழ்வார் சார் அவர்களும்,அருப்புக்கோட்டை கல்லூரியில் முதல்வராக இருந்த திரு.ராசதுரை அவர்களும் அதே பட்டயப் படிப்பு படித்தனர்.அவர்களோடு இணைந்து அந்தப் பட்டயப் படிப்பு நேர்முக வகுப்புகளில் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் கலந்து கொண்டபோதுதான் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் நேரடியாகப் பார்க்கும்,கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.1993-ஆம் ஆண்டு ,அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற எனது திருமணத்தில்  நேரடியாக கலந்து கொண்டு திரு.ஆழ்வார் சார் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.மறைந்த எங்கள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் மதுரையில் ஸ்பார்க் சென்டர் பார் ஐ..எஸ்..ஸ்டிஸ்  நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திய காலங்களில் திரு.ஆழ்வார் சார் அவர்களோடு பல நேரங்களில் சந்திக்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது

 நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு சீனியராகப் படித்துக்கொண்டிருந்தவர்  நெல்லை கவிநேசன் என்னும் டாக்டர்  திரு. நாராயணராஜன் அவர்கள். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து முடித்து உயர் கல்வி கற்று பின்பு அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி,முதல்வராக ஆனவர்.இப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகளின் செயலராக இருக்கிறார்.திருச்செந்தூர் கல்லூரியில் படிக்கும்போது அவர் நடுவராக இருக்க, நான் பட்டிமன்றத்தில் ஒரு அணியில் இருந்து ,உவரியில் பேசியது நினைவுக்கு வருகிறது.70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.

திரு. நெல்லை கவிநேசன் அவர்கள் தமிழில் எழுதிய ‘சட்டம் சந்தித்த பெண்கள்’ என்னும் நூலினை எனது ஆங்கிலப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.எனக்கு மட்டுமல்ல, மூல நூலின் ஆசிரியர் திரு. நெல்லை கவிநேசன் அவர்களுக்கும் திரு.ஆழ்வார் சார் அவர்கள்தான் ஆங்கிலப் பேராசிரியர்.அந்த ஆங்கில நூல் மதிப்புரை வருகின்ற 16.11.2024 திருச்செந்தூர் அருகில் உள்ள தண்டுபத்து பள்ளியில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு,எனது பேராசிரியர் பற்றியும் அவரது மொழிபெயர்ப்பு நூலைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்மையிலேயே பெரும் வாய்ப்பு.மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் வாய்ப்பு எனக்கு. வாய்ப்பு உள்ள நண்பர்கள் நிகழ்வுக்கு வரலாம்.நிகழ்ச்சி விவரம் கீழே.. 



Thursday, 31 October 2024

தீபாவளியும் நண்பர்களின் வாழ்த்துகளும்...


 தோழர் ஓவியாவின் பதிவு.. 


 ஏன் தீபாவளிப் பணிடிகையை எதிர்க்க வேண்டும்?

‘தீபாவளி பண்டிகை எதிர்ப்பு’ என்பது திராவிடர் கழகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  ஆண்டுதோறும் தீபாவளி வரும்போதெல்லாம் தீபாவளியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்ற உந்துதல் ஒவ்வொரு பெரியார் தொண்டர் மனதிலும் எழுந்து விடும்.  
கிறிஸ்மஸ்,  ரம்ஜான் என்று தொடங்குகிறவர்கள் கவனிக்கவும்……
தீபாவளி எதிர்ப்பு என்பது எங்களுக்கு வெறும் கடவுள் மறுப்புக்கானது மட்டுமல்ல.  உண்மைக் கதையா, வெறும் கட்டுக் கதை புராணமா என்பது வேறு விசயம்.

  ஆனால் தீபாவளி வெளிப்படையாக  ஓர் இனக் கோட்பாட்டுக் கதையை முன்வைக்கிறது. இந்தக் கதையில் வரும் தேவர்கள் ஆரிய இனம் என்கின்ற கற்பிதம்.  அவர்கள் நிறத்தைக் குறிப்பதன்  மூலம் முன்னிறுத்தப் படுகிறது.  தேவர்கள் ஆரியர்கள் என்று புரிய வைக்கப் பட்டிருக்கிறது.  இது இரண்டாயிரம் ஆண்டு கால வேலையாகும்.  எது உண்மையான வரலாறு என்பதெல்லாம் தேவையில்லை.  அதேபோல் திராவிட இனத்தைச் சேர்ந்த கறுப்பான மனிதர்கள் அசுரர்கள்.  கறுப்பான மனிதர்கள் அசுரர்கள் தீயவர்கள்.  மிக எளிமையாக இந்த மண்ணின் மக்கள் யார் அவர்கள் நிறம் என்ன என்கின்ற கேள்வியை ஒருவர் எழுப்பி சிந்தித்தாலே இக்கதை இந்த மண்ணின் மக்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தேவர்களை அசுர மன்னர்கள் கொடுமைப்படுத்தினார்கள்.  எனவே தேவர்கள் அசுர மன்னர்களை அழித்தார்கள்.  அவ்வாறு அழித்து விட்டு அந்த இன மக்களையே அதாவது திராவிட இன மக்களையே தங்களது தோல்வியை தங்களது நாட்டின் முக்கிய பண்டிகையாக கொண்டாட வைத்ததன்  மூலம்  இம்மண்ணிலிருந்து தங்களுக்கு வெளிப்பட்டிருக்க வேண்டிய வெறுப்பு எதிர்ப்பு இவற்றை உள்ளடக்கிய தொடர் போர்களை தந்திரமாக தவிர்த்து விட்டார்கள்.  முருகனின் சூரசம்ஹாரம்  இராமாயணம்  தீபாவளிக் கதைகள்  சாதித்தது இதனைத்தான்.


இப்படிப்பட்ட மயக்க மருந்துகளின் மூலம்தான் தன்னுணர்வற்றவர்களாக இம்மக்கள் மாறினார்கள்.  தேவர்களின் அம்சமாக அறிவின் அம்சமாக உயர்வின் அம்சமாக பார்ப்பனர்களை பார்க்க பழகினார்கள்.  கல்வி கோவில் சடங்குகள்  ஏன் தங்கள் வீட்டுத் திருமணங்கள் உட்பட அனைத்துத் தலைமையையும் பார்ப்பனர்கள் காலடியில் வைத்தார்கள்.  இந்தப் பண்டிகைகள் வழியாகக் காற்று மாசுபடுவதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும்.  எத்தனையோ வழிகளில் அதெல்லாம் மாசுபட்டுக் கொண்டுதானிருக்கிறது.  இந்த பட்டாசுகளால் குடிமுழுகிப் போச்சு என்பதல்ல விசயம்.  இங்கு ஓர் இனத்தின் வரலாறு மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.  அது தொடர்ந்து காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.


இந்த வரலாறுதான் தீபாவளி இம்மண்ணின் மக்கள் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல அதனை தங்கள் இனத்தின் அழிவு நாளாக துக்க நாளாக திராவிடர்கள்/ தமிழர்கள் உணர வேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தியதன் பின்னணியாகும்.  எனவே இந்த அளவுக்கான எதிர்ப்பை கிறிஸ்துமஸ்க்கோ அல்லது ரம்ஜானுக்கோ காட்ட வேண்டிய தேவை இல்லை.  ஆனால் அதற்காக அவற்றை ஆதரிக்கவோ ஏற்கவோ இல்லை நாம்.


ஆனால் தீபாவளியை எதிர்ப்பது வெறும் மத நம்பிக்கையை எதிர்ப்பது மட்டுமல்ல. இந்த மக்களின் மானம் மற்றும் அறிவின் மீட்சிக்காக பணி செய்யும் எவருக்கும் தீபாவளியை எதிர்ப்பது முதற்கடமையாகும்.  அது வெறும் நாத்திகப் பிரச்சாரமோ சுற்றுச் சூழல் காப்புப் பிரச்சினையோ அல்ல.  
தீபாவளிக் கொண்டாட்டத்தை எதிர்ப்போம்.  தீபாவளிக்கு மறுபெயர் சூட்டும் வேலையையும் சேர்த்தே எதிர்ப்போம்.  வேதத் தத்துவங்களை எதிர்த்து உலகின் முதல் சமத்துவக் குரலாக உருவான புத்தமதம் இன்று இந்து மதத்தின் ஒரு பகுதி.  எனவேதான் தீபாவளியை வேறு பெயரில் தொடர்ந்து மக்கள் கொண்டாடிட அவர்கள் மறுபெயர் சூட்டி அதனைக் காப்பாற்ற நினைக்கிறார்கள்.  
இதையெல்லாம் தாண்டி மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள்.  மார்க்சு இதனை போலி மயக்கம் இதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதானே சொன்னார் என்றால் இல்லை மதம் இதயமற்றவர்களின் இதயம் என்பார்கள்.

  சரி இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தில் எது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது…. புதுச் சட்டை,,, தீபாவளிக்கு தீபாவளி புதுச்சட்டை எடுத்த காலம் இப்போதில்லை.  சாப்பாடு….இனிப்பு கூட ஸ்வீட் ஸ்டால் இனிப்புதான் நண்பர்களுக்கே கொடுக்கப் படுகிறது.  அதுவும் அரிதாய்க் கிடைக்கும் பொருளாக இல்லை.  வேறு என்னதான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்… விடுமுறை..தொலைக்காட்சி பெட்டி அது கூட இப்போது ஈர்ப்பாயில்லை ஒவ்வொருவர் கையிலும் அலைபேசி.  முந்திக் கொண்டு தீபாவளி வாழ்த்து சொல்லுகின்ற, ,’எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லைதான்…. ஆனால்’ என்று ஆனால் போடுகிற நண்பர்களிடம் கேட்கிறேன்…. அது என்ன மகிழ்ச்சி…தீபாவளியன்று கூரையைப் பிய்த்துக் கொண்டு குதிக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?
பி,கு  தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியின் மகத்துவம் புரியும்.  இதற்குதான் வாழ்த்துகிறீர்கள் போலும்.
#தீபாவளி #இந்துமதம்  #மதப்பண்டிகைகள்  #பெரியார்....
தோழர் ஓவியா...


எனது பெரும் மதிப்பிற்குரிய சில பெரியவர்கள்,உடன் வேலை பார்த்த அதிகாரிகள்,எனக்கு அதிகாரிகளாக இருந்தவர்கள்,உயர் பொறுப்பில் இருப்பவர்கள், என் மீது பெரும் அன்பு கொண்டிருக்கக்கூடிய சில தோழர்கள்(இருபால்) தீபாவளி வாழ்த்துகள் என்று நேற்று முதல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பலருக்கும் (தங்கள் அன்பிற்கு நன்றி( ஆனால் நாங்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கமில்லை ) )என்று பதில் அனுப்பினேன்.நன்றி தோழர் முத்து நிலவனுக்கு.அவர்தான் முதலில் இப்படி ஒரு குழுவில் பதிவிட்டிருந்தார்.சிலர் வருத்தப்படுகிறேன் அனுப்பியதற்கு என்று பதில் அனுப்பி இருந்தார்கள்.பலருக்கும் தங்கள் அன்பிற்கு நன்றி என்பதோடு இந்த வலைத்தளத்தில் இதற்கு முந்தைய பதிவான எனது தீபாவளி பற்றிய கவிதையையும் மேலே  இருக்கும் தோழர் ஓவியாவின் இன்றைக்குத் தேவையான  பதிவையையும் அனுப்பி இருந்தேன். என்னோடு படித்த நண்பன்,இன்றைக்கு காவல் துறை அதிகாரியாக இருக்கும் அந்த நண்பன்'டேய், நீ எப்படி டென்சன் ஆகிற..என்று பார்க்கத்தான் உனக்கு நான் வாழ்த்து அனுப்பி வச்சேன். " என்று பதில் அனுப்பி இருக்கிறான். வாழ்த்து  இப்படியும் அனுப்பி வைப்பீங்களா?...

Tuesday, 20 August 2024

நினைவுகளில் நிறைந்து நிற்கிறான் என் நண்பன்

 எனது அருமை நண்பன் திருப்பூரில் வசித்து வந்த கா.சுப்பிரமணியன் நிரந்தரமாக விடை பெற்றுக் கொண்டான் ,கடந்த பதினெட்டாம் தேதி அன்று (18.08.2024).எனக்கும் அவனுக்கும் இப்போது 60 வயதாகிறது ஒன்றாம் வகுப்பு முதல் அவனது இறுதிக்காலம்வரை தொடர்ந்த  நட்பு. இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வந்த நண்பன் அவன் .


இருவரும் சாப்டூரில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்து பின்பு  பிளஸ் ஒன் பிளஸ் டூ தே.கல்லுப்பட்டியில ,காந்தி நிகேதன் ஆசிரமத்தில் படித்தோம். பீறகு  நான் திருச்செந்தூர் ஆதித்தனார்      கல்லூரியில்  பி.எஸ்.எஸி வேதியியல் படிக்க, அவன் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்தான். ஆதித்தனார் கல்லூரியில்  படித்த பல சமயங்களில் திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் இருக்கும விருதுநகர் கல்லூரியில் இறங்கி ,அங்குப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊரைச் சார்ந்த சுப்பிரமணி ,சுந்தரசேகர்                      பேரையூரைச் சார்ந்த கண்ணன் போன்றவர்களைப் பார்த்து பேசி விட்டு மறுபடியும் பேருந்து ஏறி ஊருக்கு வருவது வழக்கம்.மிக வறுமை மிகுந்த குடும்பச் சூழலில் பி.எஸ்.எஸ்ஸி. விலங்கியலைக் கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றான்.படித்து முடித்து விட்டு ஊரில் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.




 கொஞ்ச நாட்கள் ஊரில் அவன் சும்மா இருந்த காலத்தில், நான் தொலைபேசித்துறையில்  உசிலம்பட்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் நானும் நண்பர்கள் சுப்பிரமணி ,சுந்தரசேகர்,கணேசபூபதி மூவரும் இணைந்து எங்கள் வீட்டில்  ஒரு டியூஷன் சென்டர் வைத்தோம் நிறையக் குழந்தைகள் அப்போது படித்தார்கள். பின்பு அவன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றான். கடினமான வேலையை மிகப் பொறுமையாக,லோகு  பேப்பர் ஸ்டோர் ன்னும் கடையில் வேலை பார்த்தான்.திருப்பூரில் முதல் ரெயில்வே கேட் ரோட்டில் இருந்த ஒரு விடுதியில் தங்கி இருந்தான். மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் திருப்பூரில்(1986-87) இருந்த காலம். ஓரிரு நாள் அந்தச் சூழலில் தாக்குப் பிடிப்பதே கடினம். ஆனால் அங்குத் தாக்குப் பிடித்து வாழ்ந்தான்.

 அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குப் பிறந்தது. கடை கடையாக  பேக்கிங் மெட்டீரியல்ஸ் பொருட்களைச் சிலவற்றை வாங்கிக் கம்பெனிகளுக்குக் கொடுக்க  ஆரம்பித்தான்  அந்தச் சமயத்தில்தான் கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்றான். அப்போது நான் திண்டுக்கல் தொலைபேசி  நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  திண்டுக்கல்லில் என்னிடம் இருந்த சைக்கிளை லாரியில் போட்டு அனுப்பி வைத்தேன் நீ பயன்படுத்திக்கொள், எனக்கு இங்கே சைக்கிள் தேவை இல்லாமல் தான் இருக்கிறது என்று சொன்னேன். சரி என்றான். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து  தனியாக ஒரு கடையை எஸ்.எம்.பேக்கிங் மெட்டிரியல்ஸ் என்னும் பெயரில்  ஆரம்பித்தான்.முறையாக அனுமதி வாங்கி ஆரம்பிக்கப்பட்ட கடை. கடினமான முதலாளியாக இருந்த லோகு பேப்பர் ஸ்டோர் முதலாளி திரு.லோகு அவர்கள் ,புதிய கடைக்கு வந்து இவனை வாழ்த்தி கையில் 10000 ரூபாய் கொடுத்து விட்டுப்போனார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.தன் கடையில் வேலை பார்த்த பையன் ,தன் கடையைப் போன்ற இன்னொரு கடையை வைத்த பொழுது,வந்து மனதார வாழ்த்தி,பணமும் கொடுத்துவிட்டுச்சென்றது. இவனது அணுகுமுறை அப்படி இருந்திருக்கிறது வேலை பார்த்த இடத்தில்,

கோயம்புத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய இன்னொரு நண்பன் எங்கள் ஊர் ஜோ.ராஜேந்திரன் வனோடு பார்ட்னர் ஆக 
சேர்ந்தான். அதற்குப் பிறகு  வாழ்க்கையில் இருவருக்கும் வெற்றிதான். அவர்கள் இருவரும் இணைந்து ஏறத்தாழ ஒரு 40 ஆண்டுகள் அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி, நல்ல லாபம் பெற்று  மேலும் கடைகள், இடங்கள், வீடுகள் என்று ஒரு நல்ல பொருளாதார வசதியைப் பெற்றனர். எனது திருமணத்திற்குப் பின்பு ஒரு 20 நாட்களில் அவனுக்கும் பிரபாவிற்கும் திருமணம் நடைபெற்றது,1993-இல் அவனுடன்  இணைந்து பெண் பார்க்கப் போனது முதல் அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கு என்னுடையது. அதனால என்னவோ அவனது மாமனார் அவனது மாமியார் இருவரும்                  அவர்களின் இறுதி மூச்சு வரை என்மேல் மிக பாசமாக இருந்தார்கள் .

பின்பு அவனுக்கு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.விக்னேஷ்,சுகந்தன்.. இருவரும் நன்றாகப் படித்து பொறியியல் பட்டதாரிகளாகி வேலைக்குச் சென்றனர் முதல் மகனுக்குத் திருமணத்தை முடித்து வைத்தான்.  இனிமேல் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் மதுரையில் செட்டில் ஆவதா அல்லது பேரையூரில் செட்டில் ஆவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான் ஒரு இரண்டு வருடங்களுக்கு 
முன்பு.அவன் முன்னேறியது மட்டுமல்லாது தன்னுடைய அண்ணன்கள் குடும்பம,அக்கா,தங்கை குடும்பம் என அனைவருக்கும் உதவியாக இருந்தான். 

18 மாதங்களுக்கு முன்பு  பெருங்கொடுமையாய் அவனுக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்தது.  அதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டான்.  நன்றாக இருந்தான். இரண்டாவது மகனுக்குத் திருமணத்தை முடித்தான். முதல் மகனின் மனைவிக்கு வளைகாப்பு 2 மாதங்களுக்கு முன்னால் திருப்பூரில் நடந்தது.அன்று கொஞ்சம் சோர்வாக இருந்தான்.எப்போதும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது , எனது மகன்களும், மனைவியும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள் ,அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றான்.அன்றுதான் அவனைக் கடைசியாகப் பார்த்துப்,பேசியது.
 
நன்றாக இருக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான், 15 நாட்களுக்கு முன்னால் பேசிய பொழுது கூட அப்பப்ப கோயம்புத்தூருக்கு செக்கப்  போக வேண்டியிருக்கிறது, மற்றபடி நன்றாகச் சாப்பிட முடிகிறது நன்றாக இருக்கிறேன் என்றான். 18ம் தேதி அவன் இறந்து விட்டான் என்ற செய்திதான் வந்தது. ஆடிப்போய் விட்டேன்.  இடையில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவனது எண்ணில் பதில் இல்லை..

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இதய  ஆபரேஷன் சென்னையில் நடைபெற்றது ஆபரேஷன் நடப்பதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் கட்டாயமாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு சரி செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். கையில் உடனடியாகப் பணம் இல்லை.  பணத்தைத் திரட்டி நாலு லட்ச ரூபாய் சேர்த்த பிறகு சென்னையில் சென்று ஆப்ரேஷன் செய்து விடுவோம் என்று இருந்தேன். தற்செயலாகக் கூப்பிட்ட சுப்பிரமணி, சென்னைக்குப் போனாயே என்ன சொன்னார்கள் டாக்டர் என்று கேட்டான். இப்படிக்குக் கட்டாயம் ஆப்ரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள், 4 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் அதற்காக நான் பணம் திரட்டிக்  கொண்டிருக்கிறேன்,எங்கள் சொசைட்டியில் கடன் கேட்டிருக்கிறேன் என்று சொன்னேன் 

அப்படியா என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  மறுநாள் காலை நாலு லட்ச ரூபாய் பணத்தோடு வீட்டில் வந்து நின்றான். இதை வைத்து முதலில் ஆபரேஷன் செய், உடனே சென்னைக்குக் கிளம்பு, மற்றவற்றையெல்லாம்   பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தான். மிகப்பெரிய ஆபரேஷன் இதய ஆபரேஷன். சில நேரம்  உயிருக்குக்கூட ஆபத்தாக முடியும் ஆப்ரேசன். அப்படிப்பட்ட நிலையில் 4 லட்ச ரூபாயை  மிதத்துச்சமாக மதித்து நண்பனின் உயிர் பெரிது என்று வீட்டிற்கு வந்த பணத்தைக் கொடுத்த நண்பன். 2 வருடங்கள் கழித்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொண்டான்..வங்கி வட்டியாவது தருகிறேன் என்றபோது ,'அடி வாங்காத,சும்மா  இருடா' என்று சொல்லி விட்டான்.

உரிமையாகத் திட்டுவான்.அறிவுரை சொல்வான்.அதுபோல நான் திட்டுவதை,சொல்வதைக் கேட்டுக்கொள்வான்.திருத்திக் கொள்வான்.இறப்பு வீட்டில் அவனது மைத்துனர் சுந்தரபாரதி ." மாமா.ஒவ்வொருவருக்கும் பல நண்பர்கள் உண்டு. ஆனால் ஆத்மார்த்தமான நண்பன் என்று ஒருவர்தான் இருப்பார்கள்.அந்த நண்பனிடம் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். எனது மாமா சுப்பிரமணி அப்படித்தான் உங்களை வைத்திருந்தார். உங்களைப் பற்றிப் பேசாத நாளே இருக்காது " என்றார்.அழுகைதான் வந்தது.அவனது மூத்த அண்ணன் இறப்பு வீட்டில் " ஆலமரம் சாய்ஞ்சிருச்சுடா நேரு,எல்லோருக்கும் உதவி பண்ணியவன் சாஞ்சிட்டாண்டா " என்று அழுது புலம்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது வீட்டில் , 'எனது இறப்பிற்குப் பின்னால் சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது,எனது உடலை மருத்துவமனைக்குக் கொடுக்கவேண்டும் ' என்று நான் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, 'டேய், நம்ம ஊர்க்காரர்கள் ,சொந்தக்காரர்கள் இதைச்செய்வதில் பிரச்சனை செய்தால் ,நீதான் முன்னின்று எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' என்றேன். அவன் பக்தன்தான் என்றாலும் என்னை நன்றாகப் புரிந்தவன். 'அதெல்லாம் அப்ப பார்ப்போம். சும்மா இருடா' என்றான். அவனுக்கு முன்னால் நாம் இறந்து விடுவோம்  என்பது எனது எண்ணமாக  இருந்தது.அதனால் அவனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் கொடுமை.  நினைவுகளில் நிறைந்து நிற்கிறான்  என் நண்பன். 

வா.நேரு
20.08.2024