Saturday, 30 November 2024

கடந்து செல்லுதல்...


Friday, 29 November 2024

அமாவாசை...

 இறந்து போன கணவன்

இன்னமும் தன்மீது

சந்தேகப்பட்டு...

காக்காய் வடிவில் 

கண்காணிப்பதாக எண்ணி...

அடித்து நொறுக்க

கட்டையோடு அலைகிறாள் அவள்...

பாவம் காக்காய் என

எப்படி அவளுக்குப் புரியவைப்பது?.


                                                          வா.நேரு,30.11.2024

                                                         குறுங்கவிதை(20)


Thursday, 28 November 2024

கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்...

 

பெண்கள் உண்மையை

உடைத்துப் பேசுவதும்...

பெருங்குரலில்

பாடுவதும்...

அச்சத்தைத் தருகிறது

ஆதிக்கவாதிகளுக்கு…

‘கிழியட்டும் பழம்பஞ்சாங்கம்!’

                            வா.நேரு,29.11.2024

                             குறுங்கவிதை(19)

Wednesday, 27 November 2024

இரத்த உறவுகள்…

 

இருக்கும்வரை

தங்களால் ஏற்றமுடியாத

மதக்குறியீட்டை...

இறந்து கிடக்கும்

தோழனின் உடலுக்குள்

ஏற்றத் துடிக்கிறார்கள்

அவரின் இரத்த உறவுகள்…

                       வா.நேரு,28.11.2024

                        குறுங்கவிதை(18)

Tuesday, 26 November 2024

அதுதான் சுயமரியாதை..

 

எவ்வளவு பெரிய

சூப்பர் கம்ப்யூட்டர்

என்றாலும்

காரித்துப்பினால்

எதிர்வினையாற்றுமா?

மனிதன் மீது துப்பினால்

சும்மா விடுவானா?

அதுதான் சுயமரியாதை..

என்றவர் வி.பி.சிங்..

நினைவைப் போற்றுவோம்..

                           வா.நேரு,27.11.2024

                           குறுங்கவிதை(17)

Monday, 25 November 2024

வினையூக்கி நஞ்சு

 

வினையூக்கி நஞ்சு

 

பல வகையில்

நான் உயர அவரும்...

அவர் உயர நானும்

உதவிக் கொண்டிருந்தோம்…

அவரை விட நான்

உயரும் வாய்ப்பு வந்தபோது

பேசுவதை நிறுத்திக் கொண்டார்..


                            வா.நேரு,26.11.2024

                              குறுங்கவிதை(16)

Sunday, 24 November 2024

வினையூக்கி...

 

தினந்தோறும் கவிதை

எழுதுபவர்களை

ஏகத்திற்கும் பகடி செய்து

எழுதியிருந்தார் அக் கவிஞர்..

எப்போதாவது கவிதை எழுதும்

எனக்கு அதைப் படித்தபின்பு

தின்ந்தோறும் எழுதத் தோன்றுகிறது

                                  வா.நேரு,25.11.2024

                                   குறுங்கவிதை(15)

Saturday, 23 November 2024

என்ன செய்வது?

 

கல்விக் கூடமாக

மாறிய

சிறைச்சாலை...

தினத்தந்தி செய்தி..

சிறைச்சாலைகளாக

மாறி நிற்கும்

கல்விக்கூடங்களை

என்ன செய்வது?...

                                               வா.நேரு, 24.11.2024

                                               குறுங்கவிதை(14)

Friday, 22 November 2024

காயங்கள்…

 

நட்பிலும்

கூடக் காயங்கள்…

ஆனால் இவை

பகிரப்படுவதற்காக அல்ல..

பத்திரப்படுத்தி

பெருமூச்சு விட்டுக்கொள்வதற்கு…


                               வா.நேரு,22.11.2024

                                குறுங்கவிதை(13)

Wednesday, 20 November 2024

காத்துக்கிடக்கும் பிணம்போல

 

அதிகாலையில்

மின் சுடுகாட்டில்

எரிக்கப்படுவதற்காகக்

காத்துக்கிடக்கும் பிணம்போலக்

காத்துக்கிடக்கிறார்கள்

மனிதர்கள்

டாஸ்மார்க் கடைகளில்

                                                         வா.நேரு,21.11.2024

                                                      குறுங்கவிதை(12)

Tuesday, 19 November 2024

பிண வாடை இல்லையெனில்...

 

எரியும் பிணத்தின் வாடை

சகிக்க முடியாததாய்

இருந்தது வந்த புதிதில்

என்றான்

சுடுகாட்டுக்கு

அருகில் குடியிருப்பவன்

இப்போது ? என்றேன் நான்..

பிண வாடை இல்லையெனில்

தூக்கம் வர மறுக்கிறது என்றான்..

பழகிப்போகிறது எல்லாமும்…


                                 வா.நேரு, 19.11.2024

                                   துளிப்பா(11)


Monday, 18 November 2024

ஊமைச் சிறுவன்.....

 

பாம்பு கடித்துச் சாவதாய்

கனாக் கண்ட

ஊமைச் சிறுவன்

யாரிடமும் சொல்ல

இயலாமல் இருத்தல்போல

நாடு கிடந்து தவிக்கிறது…

வாய்ப்பூட்டுச் சட்டங்களால்…

வன்முறைக் கும்பல்களால்…


                         வா.நேரு,18.11.2024

                         துளிப்பா(10)

Sunday, 17 November 2024

மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த தினம் !.

 




நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் நவம்பர் 16-30



ஆகச்சிறந்த விமர்சனம்...

 

பேச்சாளர்

சிரித்துக்கொண்டும் பேசலாம்

சிரிக்கவைத்தும் பேசலாம்..

எப்போதும் கொதிநிலையில்

இருப்பது போலத்தான்

பேச வேண்டுமா அய்யா  ?

சிரித்துக்கொண்டே கேட்ட

அக்கவிஞரின் கேள்வி

ஆகச்சிறந்த விமர்சனம்

 வாழ்வில்

                                          வா.நேரு, 17.11.2024

                                துளிப்பா(9)

Friday, 15 November 2024

கும்பிட மறுப்பார்களா என்ன?

 

'பொன்னியின் செல்வன்

குந்தவைப் பிராட்டியும்

நாளை கடவுளாகலாம்

இராமாயணக் கதை

சீதையைக்

கும்பிடுகிறவர்கள்

நாளை

குந்தவைப் பிராட்டியை

கும்பிட மறுப்பார்களா என்ன?

                              வா.நேரு,15.11.2024

                            துளிப்பா (8)


Thursday, 14 November 2024

சட சட-வெனச் சரிகிறதே

 எத்தனை வேலை செய்து 

 என்ன பயன்?

பட பட- வெனக் கொட்டிய

சொற்களால்

சட சட-வெனச் சரிகிறதே

இத்தனை ஆண்டு கால

மதிப்பீடு !

                                    வா.நேரு ,14.11.2024

                                      துளிப்பா(7)

Wednesday, 13 November 2024

Women @ Law Book Review ...

 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1981-1984 ஆம் ஆண்டுகளில் நான் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்தபோது ,எனக்கு ஆங்கிலப் பாடத்தின் ஆசிரியராக இருந்தவர் திரு.கி.ஆழ்வார் எம்..,எம்.பில்.,சார். அவர்கள்.பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர். தன் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கவைத்தவர்.நான் பெரியாரியலை வாழ்வியலாக அமைத்துக்கொண்டதற்கு வழிகாட்டியவர். நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது பெரியார் சிந்தனைகள் பட்டயப்படிப்பு,அஞ்சல் வழியில் படிக்கிறீர்களா எனக் கேட்டு நான் ,அந்தப் பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்கக்காரணமாக இருந்தவர்.நான் பெரியார் சிந்தனைகள் படிக்கும் காலத்திலேயே திரு.ஆழ்வார் சார் அவர்களும்,அருப்புக்கோட்டை கல்லூரியில் முதல்வராக இருந்த திரு.ராசதுரை அவர்களும் அதே பட்டயப் படிப்பு படித்தனர்.அவர்களோடு இணைந்து அந்தப் பட்டயப் படிப்பு நேர்முக வகுப்புகளில் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் கலந்து கொண்டபோதுதான் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் நேரடியாகப் பார்க்கும்,கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.1993-ஆம் ஆண்டு ,அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற எனது திருமணத்தில்  நேரடியாக கலந்து கொண்டு திரு.ஆழ்வார் சார் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.மறைந்த எங்கள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் மதுரையில் ஸ்பார்க் சென்டர் பார் ஐ..எஸ்..ஸ்டிஸ்  நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திய காலங்களில் திரு.ஆழ்வார் சார் அவர்களோடு பல நேரங்களில் சந்திக்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது

 நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு சீனியராகப் படித்துக்கொண்டிருந்தவர்  நெல்லை கவிநேசன் என்னும் டாக்டர்  திரு. நாராயணராஜன் அவர்கள். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து முடித்து உயர் கல்வி கற்று பின்பு அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி,முதல்வராக ஆனவர்.இப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிகளின் செயலராக இருக்கிறார்.திருச்செந்தூர் கல்லூரியில் படிக்கும்போது அவர் நடுவராக இருக்க, நான் பட்டிமன்றத்தில் ஒரு அணியில் இருந்து ,உவரியில் பேசியது நினைவுக்கு வருகிறது.70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.

திரு. நெல்லை கவிநேசன் அவர்கள் தமிழில் எழுதிய ‘சட்டம் சந்தித்த பெண்கள்’ என்னும் நூலினை எனது ஆங்கிலப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.எனக்கு மட்டுமல்ல, மூல நூலின் ஆசிரியர் திரு. நெல்லை கவிநேசன் அவர்களுக்கும் திரு.ஆழ்வார் சார் அவர்கள்தான் ஆங்கிலப் பேராசிரியர்.அந்த ஆங்கில நூல் மதிப்புரை வருகின்ற 16.11.2024 திருச்செந்தூர் அருகில் உள்ள தண்டுபத்து பள்ளியில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு,எனது பேராசிரியர் பற்றியும் அவரது மொழிபெயர்ப்பு நூலைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்மையிலேயே பெரும் வாய்ப்பு.மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் வாய்ப்பு எனக்கு. வாய்ப்பு உள்ள நண்பர்கள் நிகழ்வுக்கு வரலாம்.நிகழ்ச்சி விவரம் கீழே.. 



அடைக்கலம் கொடுங்கள்....

 

அப்பாவும் அண்ணனும்

என்னைக் கொல்லத்

துரத்துகிறார்கள்…

 அடைக்கலம் கொடுங்கள் என

 அந்த செளதி அரேபியப் பெண்

 கெஞ்சுகிறாள் உலக நாடுகளிடம்!

 என்ன செய்தாய் அப்படி? எனக் கேட்டால்

 "கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?

 எனும் சந்தேகத்தைத்தான் கேட்டேன்..

 என் வீட்டில் "என்கிறாள் அவள்..

                          வா. நேரு, 13.11.2024

                                                                துளிப்பா,(6)

                            

Monday, 11 November 2024

ஈராக்கில் சட்டம்...

 ஒன்பது வயதுச் 

சிறுமிக்குத் திருமணம்...

ஈராக்கில் சட்டம்.
..
எல்லாம் ...

எல்லாம் வல்லவனின் பெயரால்!.

எதைக் கழட்டி  அடிப்பது?...

                                         வா.நேரு,12.11.2024
                                          (துளிப்பா 5)

Sunday, 10 November 2024

மை லார்டு ..ஒரு சந்தேகம்...

 

கடவுளிடம் பேசிய

மை லார்டு ...ஒரு சந்தேகம்..

கடவுளிடம் எந்த

மொழியில்  பேசினீர்கள்?..

அவர் எந்த மொழியில்

இடித்தது சரியென்று

பதில் சொன்னார் ?

                   வா.நேரு , 11-11-2024

                      (துளிப்பா 4)

                    



Saturday, 9 November 2024

யாமிருக்கப் பயமேன்?

 

எதையும் இடி

கடவுளிடம் கேட்டுத்

தீர்ப்புச்சொல்லும்

நீதிபதிகள் இருக்க

கவலை ஏன்?

                   துளிப்பா(3)

வா.நேரு,10.11.2024

Friday, 8 November 2024

ஊடகம்...

 

விளக்கமாறு ஒன்று

பாடம் எடுக்கிறது !...

ஒழுக்கத்தை எப்படிக்

கூட்டுவது என்று..


                      துளிப்பா(2)

          வா.நேரு,09.11.2024


Thursday, 7 November 2024

துளிப்பா....

 

 

அறிவாளிகளுக்குக் கூட

கூகரைகள்தான் தேவை…

பாராட்டுதலுக்கு

அவ்வளவு பஞ்சம் !

 

              வா.நேரு,08.11.2024

பொதுப் போக்குவரத்து – முனைவர் வா.நேரு

 உலகப் பொதுப் போக்குவரத்து நாள் நவம்பர் 10. இந்த நாள் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைக் கொண்டாட அழைப்புக் கொடுத்தவர்கள் சர்வதேச பொதுப் போக்குவரத்து சங்கப் (UITP-Union Internationale Transport Public) பொறுப்பாளர்கள்.இந்த அமைப்பு என்பது உலகம் முழுவதும் இருக்கின்ற போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுநர்கள், போக்குவரத்துத் தொழிலை வழங்குபவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைவரையும் உள்ளடக்கியது. இதன் கிளை அமைப்புகளாக 1900 அமைப்புகள் இருப்பதாக இந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதன் அமைப்புகள் இருப்பதாகவும் இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. இதன் வலைத்தள முகவரி (https://www.uitp.org/topics/).



உலகமெங்கும் போக்குவரத்து அடையாளங்கள் இன்றைக்கு ஒன்றுபோல் இருக்கின்றன. சிவப்பு என்றால் நில் என்பதும் பச்சை என்றால் செல் என்பதும் உலகம் முழுவதும் இன்றைக்கு ஒன்றுதான். இப்படி உலகம் முழுவதும் ஒரே மாதிரியான போக்குவரத்து அடையாளங்கள் இருப்பதற்கான சர்வதேச மாநாடு நடைபெற்று உலக நாடுகள் கையொப்பம் இட்டு பொது அடையாளங்களை ஒப்புக்கொண்ட நாள்தான் நவம்பர் 10,1968. இந்தப் பொது அடையாளம் உலகம் முழுவதும் போக்குவரத்தை எளிமையாக்கி இருக்கிறது. 1968ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுப்போக்குவரத்து மாநாடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. எனவேதான் நவம்பர் 10 உலகப் பொதுப் போக்குவரத்து நாள்.

பொதுப் போக்குவரத்து என்று நினைக்கும்போது நம்மைச் சுற்றி இருக்கும் பேருந்துகள், இரயில்கள், மெட்ரோ இரயில்கள், வாடகைக்கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பல வாகனங்கள் நமது நினைவில் வருகின்றன. இன்றைக்குப் பலர் தங்களுடைய செல்வத்தின் அடையாளமாக தங்களுக்கென தனியாகக் கார் வைத்திருப்பதை விரும்புகிறார்கள். தங்களுக்கென பெட்ரோல் அல்லது மின்சாரத்தால் இயங்கும் இரு சக்கர வாகனம் வைத்திருப்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் இருபால் இளைஞர்களின் கனவு கார் வாங்குதல். ஆனால் பொதுப் போக்குவரத்து நாள் காரின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் தனித்தனிக் கார் வைத்திருப்பதும், அதனை அவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து. அதிக அளவில் பொதுப் போக்குவரத்தை நாம் பயன்படுத்தும்போது. போக்குவரத்து நெரிசல் குறையும். காற்று மாசுபடுவது குறையும். எனவே, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இந்த நாள் அமைகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இன்று பெரும்பாலோர் தவணை போன்ற வழிமுறைகளில் கடனில்தான் கார் வாங்குகிறார்கள். அதனை ஒரு பெருமையாகப் பலர் கருதுகின்றனர். பொதுப்பேருந்தில் செல்வது தங்களுக்கு கவுரவக்குறைவு என எண்ணுகின்றனர். இந்த மனப்பான்மை மாற வேண்டும்.

அண்ணா அவர்களுக்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், 1972இல் கிராமங்களில், குறு நகரங்களில், நகரங்களில் ஓடிய தனியார் பேருந்துகளை எல்லாம் நாட்டுடைமையாக்கி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை அமைத்தார். டி.வி.எஸ். போன்ற நிறுவனங்களால் நடத்தப்பட்ட பேருந்துகளும், வழித்தடங்களும் அரசுடைமையாகின.

பொதுப்போக்குவரத்தில் மிகப்பெரிய பாய்ச்சல் 1970களில் நடந்தது. அதுவரை லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிய பேருந்துகள், மக்கள் நலன் கருதி இயங்க ஆரம்பித்தன. பழங்குடி இனத்தவர், பட்டியல் இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களை நோக்கி – அங்கே மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் – பேருந்துகள் இயக்கப்பட்டன. சமூக நலன் நோக்கில் பேருந்து வழித்தடங்கள் செயல்பட ஆரம்பித்தன.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண வசதி திராவிட இயக்க அரசுகளால் கொடுக்கப்பட்டன. இன்றைக்கு இந்தியாவே பின்பற்றத்தக்க திட்டமான – தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளில் ஒன்றான ‘அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’ போன்றவை பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குப் பெரும்பயனை அளித்துள்ளன. உழைக்கும் மகளிர் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் பெரும் வாய்ப்பாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. எனவே, பொருளாதார வகையிலான மேம்பாட்டிற்கும் பொதுப் போக்குவரத்து மிகப்பெரிய வாய்ப்பாகும்.

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கொடுமையான ஜாதி மனப்பான்மையைத் தகர்த்ததில் பொதுப் போக்குவரத்திற்குப் பெரும் பங்கு உண்டு. ‘பஞ்சமர்களை’ ஏற்ற மறுத்தால், பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி(லைசென்ஸ்) இல்லை என்று நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்த வரலாறு உண்டு. இரயில் பெட்டிகளில் ஒன்றாக எல்லா ஜாதியினரும் பயணம் செய்தபோது, தங்களுக்கென தனிப்பெட்டி வேண்டும் எனப் பார்ப்பனர்கள் மனுக்கொடுத்த வரலாறு இந்த நாட்டில் உண்டு. ஆனால், அனைத்தையும் தகர்த்து எல்லா ஜாதி,மத மக்களுக்குமான வாகனங்களாக பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இன்றைக்கு இருக்கின்றன. அந்த வகையில் சமத்துவத்தைப் போதிக்கும் – சாதிக்கும் வாகனங்களாக பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இருக்கின்றன.



இந்தியாவில் பொதுப் போக்குவரத்தான இரயில் பயணம் அண்மைக் காலங்களில் ஆபத்தான பயணமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் திறமையற்ற நிருவாகத்தால் தொடர்ச்சியான பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கும் தொலைதூரப் பயணம் செய்ய விரும்பும் ஏழை மக்களுக்கு இரயில் பயணம்தான் குறைந்த கட்டணத்தில் அமைகிறது. அப்படி எல்லோரும் பயணம் செய்யும் இரயில் வண்டிகளை அதிகப்படுத்தவும், நிருவாகத்தை ஒழுங்குபடுத்தவும் இந்திய ஒன்றிய அரசு மறுக்கிறது.சாதாரண ரெயில்களுக்குப் பதிலாகமிக அதிக கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் போன்ற ரெயில்களை இயக்குவதில்தான் குறியாக ஒன்றிய அரசு இருக்கிறது.

அவர்களின் மனப்பான்மை அப்படி. இன்றைக்கும் கூட வடநாட்டின் பல மாநிலங்களில் கிராமங்களுக்குப் பேருந்து வசதி என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. இருக்கும் பேருந்துகளும் சரியான வசதிகளும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கின்றன.

பொதுப் போக்குவரத்தை தனியார் நடத்துவதைவிட அரசுதான் நடத்தவேண்டும் அரசுப் போக்குவரத்தில் கணினி, இணையம் போன்றவற்றைப் பயன்படுத்தி பயணிகளுக்கு வசதிகள் செய்து தரவேண்டும்.

மேலை நாடுகளில் மின்சக்தியால் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.விரைவில் சென்னையில் மின்சக்தியால் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன என்று தமிழ்நாட்டின் ஆற்றல்மிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் அவர்கள் அறிவித்திருக்கிறார். மனதார வரவேற்கின்றோம்.. பொது வாகன ஓட்டுநர்களாக பெண்கள் பெருமளவில் நியமிக்கப்படவேண்டும். தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் கொள்கை அடிப்படையில் பெருமளவில் பெண் ஓட்டுநர்களை, 50 சதவிகிதம் நியமிக்க வேண்டும். காவல் துறையில் பெண்கள் இப்போது எல்லா இடங்களிலும் இருப்பதுபோல அரசுப் பெண் பேருந்து ஓட்டுநர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டும்.

சென்னையில், பெண்கள் பாதுகாப்பினை மேம்படுத்துகின்ற வகையில் ஜி.பி.எஸ் சுடன் இணைந்த இளஞ்சிவப்பு வண்ண ஆட்டோக்களை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.அந்த ஆட்டோக்களை ஓட்டுவதற்கு 25 முதல் 45 வயது வரையிலான பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கின்றோம், வரவேற்கின்றோம்.



உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான மக்களுக்கு பொதுப் போக்குவரத்துதான் அவர்களது வாழ்க்கைக்கான வழி. பொருளாதார முன்னேற்றத்திற்கான திறவுகோல். கல்வி பெறுவதற்கான பாதை. எனவே, இதனை வலியுறுத்துவோம். நவம்பர் 10, பொதுப் போக்குவரத்து நாளில் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் மேற்கொள்வோம். முடிந்தவரை சொந்த வாகனங்களைத் தவிர்ப்போம். பொதுப் போக்குவரத்தைச் சீர்படுத்தவும் மேம்படுத்தவும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்போம். அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து நாள் வாழ்த்துகள்!

 நன்றி: உண்மை மாதம் இருமுறை இதம் நவம்பர் 1-15,2024.


Saturday, 2 November 2024

கண்களால் நன்றி சொல்கிறதோ?....

 

      

 

பெரும் இரைச்சலோடு

கொட்டித்தீர்த்த மழை

இப்போது விட்டு விட்டு

தூறலாய் தூறிக்கொண்டிருக்கிறது…

வீட்டிற்கு முன்னால்

பெருகியிருந்த மழைத்தண்ணீர்

வற்றிக் கொண்டிருக்கிறது..

 

வீட்டின் முன் கேட்டை

யாரோ ஏதோ செய்வது போல ஓசை

எட்டிப்பார்த்தால் நனைந்த

உடலோடு எப்போதாவது வரும் மாடு..

தலையைத் தலையை ஆட்டி

ஏதோ சொல்ல முயற்சிக்கிறது

ஏதாவது கொடுங்கள் என்று

கேட்பது போல உணர்வு எனக்கு..

 

விறுவிறுவென வீட்டிற்குள் ஓடி

வடிதண்ணீர்.. எஞ்சிய சோறு

எடுத்துக்கொண்டு வரும்போது...

‘மாடா?’ அந்த மிஞ்சிய இட்லியையும்

கொண்டு போங்கள் என்னும்

இணையரின் சொல்லினால்

இட்லியையும் இணைத்து

எடுத்துக்கொண்டு ஓடுகிறேன்…

பொறுமையாய்ப் பார்த்துக்கொண்டு

நிற்கிறது மாடு…

 

கொண்டு வந்த சட்டியில் இருந்து

மாட்டிற்கு ஊற்றும் சட்டிக்கு

மாற்றி ஊற்றி ..

தூறுவதால்

காம்பவுண்டுக்குள்ளேயே வைக்கிறேன்..

இரண்டு கால்களைப் படிகளில் வைத்து

தலையை மட்டும் உள்ளே  நீட்டி

உறிஞ்சிக் குடிக்கிறது..

 

குடித்து முடித்தவுடன் அதன் கண்களில்

ஏதோ ஒரு உணர்வு தெரிவதுபோல்

தோன்றுகிறது எனக்கு…

கண்களால் நன்றி சொல்லி

விடைபெறுகிறதோ…

அமைதியாக

வைத்த காலை பின்னாலே

எடுத்துவைத்து  நடக்கிறது..

மனம் ஏனோ குதுகலிக்கிறது..

                           வா.நேரு, 03.11.2024