Monday, 13 October 2025

உங்கள் வரிசை எண் 311…

                                                      

உங்கள் வரிசை எண் 311…

                                                 முனைவர் வா.நேரு

 

மிக அரிதான புத்தகங்களை நாம் கண்டெடுக்கும் இடமாக, வேறு எங்கும் கிடைக்காத புத்தகங்கள் நமக்குக் கிடைக்கும் இடங்களாக நூலகங்கள்தாம் இருக்கின்றன.

அண்மையில் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தன்னுடைய நூலக அனுபவத்தை ஒரு கட்டுரையில் விவரித்திருந்தார்.

அந்தக் கட்டுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் நகைச்சுவையாகத் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கிறார். “தவறான நேரத்தில் தவறான இடத்தில் எடுத்த தவறான முடிவு. இந்த முடிவு எடுத்த அன்றே ஒரு புதுப் புத்தகம் வெளியானது. அதைப் பற்றிச் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் வார இதழ்களும் வானளவாகப் புகழ்ந்தன. கலிபோர்னியாவிலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் கூட அனுப்பினார்.

நான் என்னுடைய நூலகத்துக்குச் சென்று இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்தேன். இங்கே எல்லாம் நூலகங்களில் போய் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை உருவி எடுத்துக் கொண்டு உடனே புறப்பட முடியாது அநேகமாக நீங்கள் கேட்கும் புத்தகம் வெளியிலே போயிருக்கும். உங்கள் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து உங்களுக்கு முன்பு அந்தப் புத்தகம் கேட்டவர்கள் எல்லாம் வாசித்து முடித்த பிறகு அந்தப் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.”

இப்படிப்பட்ட வசதி நம் ஊர் நூலகங்களில் இல்லை. நூலகத்தில் சென்று இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வார்கள். கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற நூலகத்தில் இணையத்தின் வழியாக இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், ஒருவர் எடுத்துச்சென்று இருக்கிறார் என்ற நிலையில், அடுத்து ஒருவர் இந்தப் புத்தகத்திற்காகக் காத்திருக்கிறார் என்பதை நாம் பதிவு செய்யும் வசதி இல்லை. கனடாவில் இருக்கும்  நூலகத்தில் அந்த வசதி இருப்பதாக அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்.

இதற்கு அடுத்து அ.முத்துலிங்கம் அவர்கள் பதிவு செய்த செய்தி மிக ஆச்சரியமாக இருக்கிறது.”
நான் புத்தகத்தைப்  பதியச் சென்றபோது நூலக அலுவலர் கம்ப்யூட்டரில் விவரத்தைப் பதிந்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார் ‘மிக அதிசயமாய் இருக்கிறது நீங்கள் இந்தப் புத்தகத்துக்குப் பதிந்த 311ஆவது நபர். இந்த 310
பேரும் படித்த பிறகு இது உங்கள் கைக்கு வந்து சேரும்’ என்றார். நான் வாயை மூடும்முன் அவர் அடுத்து அடுத்த ஆளை கவனிக்கப் போய்விட்டார். இப்பொழுது எனக்கு ஆவல் அதிகமானது. இவ்வளவு பேர் ஆசைப்பட்டு வரிசையில் நிற்பதென்றால் அந்தப் புத்தகத்துக்கென்று ஏதோ ஒரு சிறப்பு இருக்கத்தானே செய்யும்!

310 பேர் வாசிக்கும் வரைக்கும் காத்திருப்பது நடக்கிற காரியமா? எப்படியும் இந்தப் புத்தகத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆகப்பெரிய நூலகரைச் சந்தித்து ஒரு புத்தகத்திற்காக 5 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டிய என்னுடைய நிலையைப் பற்றிக் கூறினேன். அவர் பெயர் பேட்ரிசியா (Patricia). புத்தகங்களை நேசித்த அளவுக்கு அவர் மனிதர்களையும் நேசித்தார்.

வாசிப்புச் சுற்றுக்கு அல்லாமல் ஆராய்ச்சிக்கு மட்டும் ஒதுக்கி வைத்த ஒரு புத்தகத்தை ஒரு வாரத்திற்கு மட்டும் எனக்கு இரவல் தர வேண்டும் என்ற தனிப்பட்ட முடிவு ஒன்றை எடுத்தார். அப்படிப்பட்டது தான் அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தில் இருந்து என் கண்களை ஒரு வாரமாக எடுக்க முடியவில்லை.” என்று எழுதியிருக்கிறார்.

இந்தக் காலத்திலும் ஒரு நாட்டில் 310 பேர் ஒரு நூலினைப் படிப்பதற்காக நூலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்திதான். தன் வரலாற்று நூல்களைப் படிக்கிறபோது புத்தகங்களைப் படிப்பதற்காக எழுத்தாளர்களும், தலைவர்களும் எவ்வளவு தூரம் முயற்சி எடுத்திருக்கிறார்கள், துன்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதை வாசிக்கின்றோம்.

குறிப்பாக ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி, அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்றோர் நூல்களைப் பெறுவதற்கும் வாசிப்பதற்கும் எவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பதை வாசிப்பின் மூலமாக நாம் அறிவோம். இந்த 21ஆம் நூற்றாண்டில் நூலகத்தில் 310 பேர் பதிவு செய்து ஒரு புத்தகம் வாசிப்பதற்காகக் காத்திருந்தார்கள் என்பது பெரிய செய்திதான்.

310 பேர் காத்திருந்து படிக்கவிரும்பிய புத்தகத்தை எழுதியவர் பெயர் பில் ப்ரைசன் (‘Bill Bryson’). அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘கிட்டத்தட்ட சகல விசயங்களையும் சொல்லும் சிறிய வரலாறு (A short History of Nearly Everything). அந்தப் புத்தகத்தைப் பற்றியும் அந்த நூல் ஆசிரியர் பில் ப்ரைசன் பற்றியும் மிகச் சிறப்பாக அ.முத்துலிங்கம் அவர்கள் அந்தக் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.விரும்புகிறவர்கள் படிக்கலாம் (அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – தொகுதி 1 பக்கம் 183).

இன்றைக்கும் மிகக் குறைந்த மாத வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டக் கூடியவர்கள் அதிகமான சதவிகிதத்தில், மக்கள் தொகையில் இருக்கின்றனர். அவர்கள் புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும் அதனை வாங்கிப் படிக்கும் அளவிற்கு அவர்களுக்கு வசதியில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நூலகம்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது.

அதுவும் விலை அதிகமாக இருக்கக்கூடிய, எளிதில் கிடைக்காத  புத்தகங்கள் நூலகங்களில் பார்வைப் புத்தகங்கள் (Reference Books) பகுதியில் வைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று அந்தப் புத்தகங்களை எடுத்து நாம் பல மணி நேரம் அமர்ந்து வாசிக்கலாம். குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்தப் புத்தகங்களை இரவலாகப் பெற்று நமது வீட்டுக்குக் கொண்டு வர இயலாது. இந்தப் பார்வைப் பகுதி புத்தகங்கள் பகுதி என்பது மிக முக்கியமானது. மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கும் மதுரை மய்ய நூலகத்தில் மேல்தளம் முழுவதும் பார்வைப் புத்தகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மிக அரிதான, பழைய பதிப்புப் புத்தகங்களை எல்லாம் இங்கு எடுத்து நாம் வாசிக்க இயலும். அதனைப்போலவே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கப்பட்டு ஒன்று இரவல் கொடுக்கும் பகுதியிலும் இன்னொரு புத்தகம் பார்வைப் புத்தகங்கள் பகுதியிலும் வைக்கப்படுகின்றன.இரவல் பகுதியில் இருக்கும் புத்தகத்தை எவரேனும் எடுத்துச்சென்று இருந்தாலும், பார்வைப் பகுதியில் இருக்கும் புத்தகத்தை நாம் எடுத்து வாசிக்க இயலும், குறிப்புகளை எடுக்க இயலும். எந்தப் புத்தகமும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகம் வாசகருக்கு உடனடியாக வாசிக்க இல்லை, குறிப்பு எடுக்க இல்லை என்பதைத் தவிர்க்க பார்வைப் பகுதியிலுள்ள புத்தகங்கள் பயன்படுகின்றன.


கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் மாநில மத்திய  நூலகத்திற்குச் சென்ற போது அங்கு தமிழ் நூல் பிரிவு என்னும் தனிப்பிரிவு வைத்திருந்தார்கள். அங்கு பெரும்பாலும் தமிழ் நூல்கள் பார்வை நூல்களாகவே இருந்தன. சில நூல்கள் இரவல் தரும் நூல்களாகவும் இருந்தன. அங்கு இருந்த நூலகரிடம், நான் கொண்டு சென்ற, எனது மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய ‘ஆழினி’ நாவல் மற்றும் நான் எழுதிய சில புத்தகங்களையும் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்கள். சில நாள்கள் கழித்து, திருவனந்தபுரம் மாநில மத்திய நூலகத்திலிருந்து எனது வீட்டுக்கு ‘நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்’ என்ற கடிதத்தை அனுப்பி இருந்தார்கள். 


வெளி மாநிலங்களில் இருக்கும் நூலகங்களுக்கு நமது இயக்க நூல்களை, நமது தலைவர்கள் எழுதிய நூல்களை நாம் அனுப்பலாம்.அவர்கள் பெற்றுக் கொண்டு, அதை அந்த நூலகங்களில் வைக்கிறார்கள். அது அங்கு இருக்கும் தமிழர்களுக்கு, அல்லது தமிழ் தெரிந்த வெளி மாநிலத்தவர்களுக்குப் பயன்படும். நமது திராவிட இயக்க நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கக்கூடிய நூல்கள் நம் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் நூலகங்களில் இடம் பெறுவதற்கு நமது திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இருக்கும் அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாகும். |

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 1-15

No comments: