எழுத்தாளர் அகிலா அவர்களின் முக நூல் பதிவு .அப்படியே கொடுத்துள்ளேன்.நன்றி எழுத்தாளர் அகிலா அவர்களுக்கு...
#அணிந்துரைகள்
//‘சமூகமும் அரசியலும்’ என்னும் பகுதி வாசிக்கவும், வாசித்தபின் யோசிக்கவும்
வைக்கிறது. “பிரிட்டனில் குடும்பக் கட்டமைப்புகள்
வலுவானவையே. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் பழமைவாதிகளே. ஐம்பது, அறுபது வருடத் தாம்பத்தியத்தை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.
//மேலும் “குடும்பங்களில்
பிள்ளைகள் பெரிதானபின்,தனக்கான வேலையைத் தேடிக்கொண்டு,
பெற்றோருக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் திருமணத்தை முடிப்பதும்,
இல்லையென்றால் அவர்களாகக் காதலித்து மணம் புரிந்து கொள்வதும்,
தனியே வீடு பார்த்து செட்டிலாகி விடுவதும் பிரித்தானியா சமூக
வழக்கம். பிள்ளைகள் வெளியேறியபின், தாயும் தகப்பனும் தனியாக
வீடுகளில் வாழ்வதும் உண்டு. அதற்காக அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சம்பந்தமே
இல்லாத மாதிரி, நம்ம ஊர் கலாச்சாரக் காவலர்கள் கத்துவது
மாதிரியெல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு வாழ்வதும் பெற்ற பிள்ளைகளின் மீது பாசம்
செலுத்தும் அதே மனித பெற்றோர்கள்தான்,” என்றும்
குறிப்பிடுகிறார். சரியான கட்டுடைப்புச் செய்திகள் இவை.
//“பெற்றோரை கட்டாயத்துக்கு ஆட்படுத்தும்
பழக்கம் இங்கில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான்.” என்றும் அறிவுறுத்துகிறார். அந்த நாட்டில் குழந்தைகளுக்கு இருக்கும்
சுதந்திரம் பற்றி நிறைய விவரிக்கிறார். “இந்தச் சமூகத்தில்
சில நயமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன ‘Yes Please’, ‘Thank you’, ‘Sorry’
‘May I help you?’” போன்ற சொற்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது,
அதனால் அந்தச் சமூகம் எப்படிப் பயன்பெறுகிறது என்பதைப் பற்றியும்
விளக்குகிறார்..
இவையெல்லாம் முனைவர் வா. நேரு Valaguru
Nehru அவர்கள் என் பயண நூலான #இங்கிலாந்தின்_நதிக்கரையில் நூலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி.
இந்த புத்தகத்தை வாசித்த #வாசகர் ஒருவர், எனக்கு பேசியிருந்தார். அவர் அதிகம்
சிலாகித்தது, புத்தகத்தை விட, அதை
வாசிக்கத் தூண்டிய முன்னுரையைக் குறித்துதான்.
அவர் சொன்ன சில விடயங்களை இங்கு
சொல்கிறேன்.
1. ஒரு வாசகனாக, தான்
எந்த புத்தகத்தை வாங்குவதற்காக கடைக்கு அல்லது புத்தகக் கண்காட்சிக்குச்
சென்றாலும், புத்தகத்தைப் புரட்டும்போது, யாராவது அதுகுறித்து வெளி அட்டையில் அல்லது உள்ளே உரையில் ஏதேனும்
எழுதியிருக்காங்களா என்று பார்ப்பது வழக்கமாம். அது தன்னை impress செய்தால் நிச்சயமாக வாங்கிவிடுவது உண்டாம். இல்லையென்றாலும் புத்தகத்தின்
ஈர்ப்பு காரணமாக வாங்குவது உண்டாம்.
2. இன்றைக்கு இருக்கும் பல புத்தகங்களில்
அணிந்துரையில் எழுதுபவர்கள், புத்தகத்தைக் குறித்து எழுதுவதை
விட, அதை எழுதிய ஆசிரியரைப் பாராட்டியே அதிகம் எழுதுவதாகக்
குறையும் பட்டுக்கொண்டார். இதையெல்லாம் ஒரு வாசகரின் வழி கேட்கும் போதுதான்,
நமக்கும் உரைக்கிறது.
3. கையில் இருக்கும் பணம் புத்தகம் வாங்க
போதவில்லையென்றால், பார்த்து வைத்துவிட்டு அடுத்த மாதம்
வந்து வாங்குவது உண்டாம். என் பயண நூலை, அவரின் பட்ஜெட்டை
விட கொஞ்சம் அதிகமாக இருந்தபோதிலும் வாங்கிவிட்டதாக சொன்னார். மகிழ்ச்சி.
அணிந்துரை எழுதிய நேரு அவர்களுக்கு என் நன்றி..
நேரு அவர்களின் முழு உரையும் கீழே:
நன்றிங்க தோழர்
********
பயணமும் கட்டுடைப்பும்
................................
.............................
பயணிப்பது எப்போதும் மகிழ்ச்சி
தருவது. அதுவும் வெளி நாட்டுப்பயணம் என்பது புதிய இடங்களை, புதிய தட்பவெப்பநிலையை, புதிய புதிய மனிதர்களைப்
பார்க்கவும்,பழகவும் வாய்ப்புத் தருவது. மகிழவும், புதுப்புது அனுபவங்களைப் பெறவும் பெரும் வாய்ப்பாக அமைவது. இன்றைக்கு வெளி
நாடுகளில் வேலைபார்க்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு வெளி நாட்டுப்பயணம் என்பது
இயல்பாக அமைகிறது. அந்த வகையில் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,
கவிஞர் எனப் பல பரிமாணங்களைப் பெற்றுத் தமிழ் எழுத்து உலகின் இன்றைய
ஆளுமைகளில் ஒருவராக விளங்கும் தோழர் அகிலா அவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு, இங்கிலாந்து
செல்வதற்குக் கிடைக்கிறது.எதையும் கூர்ந்து கவனித்து, அதனை
இலக்கியமாக மாற்றும் வல்லமை படைத்த தோழர் அகிலா அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்து
சென்றதைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தனது இங்கிலாந்துப்
பயணத்தைப் பற்றிய இரண்டாவது நூலாக ‘இங்கிலாந்தின்
நதிக்கரையில் – பயணியின் காலக்குறிப்பு என்னும் இந்த நூல்
அமைந்திருக்கிறது.
இங்கிலாந்தில் மாதக்கணக்கில்
தங்கும் சூழல். புதிய இடங்களைப் பார்க்கிறபோது, மழலையைப் போலப்
பார்த்து மகிழ்ந்திருக்கிறார். புதிய மனிதர்களைப் பார்க்கிறபோது, ஒரு இளம்பெண்ணாக உற்று நோக்கி, அவர்களின் மன
உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். ஒரு முதியவர் போல அந்த நாட்டிற்கும் நம்
நாட்டிற்கும் இருக்கும் வேறுபாடுகளை, ஒற்றுமைகளை உற்று
நோக்கித் தன் அனுபவங்களைப் பதிவு செய்கிறார். தோழர் அகிலா அவர்களின் மகிழ்ச்சியை,
மன உணர்வுகளை, அனுபவங்களை நாமும் கூட நூல்
முழுக்க வாசிக்க வாசிக்கப் பெற்றுக் கொண்டே நகர்கின்றோம்.
இந்த நூலின் பக்கங்கள் மொத்தம் 380. ஆற்றங்கரை நாகரிகங்கள், பிரிட்டனின் நிலவமைப்பு,
ஆறுகள், பருவகாலங்கள், சுற்றுச்சூழல்,
சமூகமும் அரசியலும், பயணங்கள், அங்கு எடுத்த புகைப்படங்கள், பின் இணைப்பாக
வரைபடங்கள் என ஒரு முழுமையான தகவல்களைக் கொண்ட பயண நூலாக இந்த நூல் இருக்கிறது.
இவரது முதல் பயண நூலான ‘இங்கிலாந்தில் 100 நாட்கள் ‘ எனும் நூல் எனக்கு மிகவும் வியப்பைத் தந்த
புத்தகம். இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரை தனியாகப் பயணித்து, இங்கிலாந்திற்குள்ளும் தனியாகப் பயணித்து விரிவாக எழுதிய நூல் அந்த நூல்.
இந்த நூல் அதிலிருந்து மாறுபட்டு, நிறையத் தகவல்களையும்
அதோடு இணைத்து பயண அனுபவங்களையும் சொல்கின்ற நூலாக அமைந்திருப்பது சிறப்பு.
“இங்கிலாந்தில் 100 நாட்கள் வாசித்தவர்கள் பயணக்குறிப்பு எடுக்கும் விதம் குறித்து என்னிடம்
கேட்டிருந்தார்கள்” என்று குறிப்பிட்டு, பயணிக்கும்போது எப்படி குறிப்புகள் எடுப்பது என்பது பற்றி விரிவான
குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். பயணநூல்கள் எழுதவேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்திகள் இவை.’கைபேசியில்
எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகம் உதவும்’ என்று அதில்
குறிப்பிடுகிறார். உண்மைதான்.
விண்டர்மே ஏரியின் முன் அமர்ந்து
பறவைகளைப் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார். “எனக்குச் சற்றுப்
பறவைகள் மீது கிறுக்குத்தனம் உண்டு. அவற்றின் மொழியைப் புரிந்து கொள்ள
முயல்வேன்.கோயம்புத்தூரில் அதிகமான நீர் நிலைகள் இருக்கின்றன. நீர் நிலைகளை,
அங்கு இருக்கும் பறவைகளை எல்லாம் பாதுகாக்க சிறுதுளி, ஓசை போன்ற பல அமைப்புகள் இயங்கி வருவதைக் காண்கிறோம்.அப்பறவைகளைப் பற்றிய
மின்னூல் ஒன்று ‘மழைப்பறவைகள்’ என்னும்
தலைப்பில் புகைப்படங்களுடன் அமேசானில் வெளியிட்டும் உள்ளேன். எனது ‘அறவி’ நாவலிலும் இங்கிலாந்து பறவைகளைப் பற்றிக் கவனப்படுத்தியிருப்பேன்’
என்று தன்னைப்பற்றித் தோழர் அகிலா குறிப்பிடுகிறார். நூல் முழுக்க
பல இடங்களில் பறவைகளின் மொழியும் ஒலியும் கேட்டுக்கொண்டே இருக்கிறது இவரின்
விவரிப்பில்.
மிகவும் இயல்பாக உணவைப் பற்றி
விவரித்துக்கொண்டே செல்கின்றார். ‘கேரளாவில் டீயை உறிஞ்சிக்கொண்டே டிபன்
சாப்பிடுவது போலத்தான் இங்கும்(இங்கிலாந்திலும்)’ என்று
குறிப்பிட்டு உணவோடு குளிர்பானம் சாப்பிடும் பழக்கம் நம் ஊரிலும் வந்துவிட்டதை
எழுதுகிறார். கத்திரிக்காயை எப்படி எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று
குறிப்பிட்டுவிட்டு ‘மற்றபடி கத்திரிக்காய்
கத்திரிக்காய்தான்‘ என்கிறார். ’அட,
இப்போது புரிகிறது, உலகம் முழுமையும் ஆண்கள்
ஒரே மாதிரி என்பது’ என்று ஓரிடத்தில் சொல்கிறார்.
வாசித்தபின்பு வெட்கமாகத்தான் இருக்கிறது ஆண் என்ற வகையில்.
டெர்வெண்ட் நடைபாதையில் கையில்
காப்பியுடன் அடந்த மரங்களுக்கிடையில் தோழர் அகிலா
நடந்து சென்றதை விவரிக்கும்போது ஏதோ நாமும் அவருடன் சேர்ந்து நடப்பதைப் போன்ற ஓர்
உணர்வு நமக்குத் தோன்றுகிறது.’இங்கிருப்பவர்கள் நடப்பதற்குப்
பயப்படுவதே இல்லை. வீல் சேர், வாக்கிங் ஸிட்டிக்ஸ், வாக்கர்ஸ் என்று இருப்பவர்கள் கூடச் செல்கிறார்கள் என்பதுதான் விஷேசமே.
நம் முன்னோர்கள் எங்கும் நடந்து சென்றார்கள், நாம் கூட ஒரு
காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றோம் என்பது நம் வாழ்க்கையில்
பழங்கதையாகிப் போனதுதான் பெரும் வருத்தமே’ என்று நடந்த நாம்,
இப்போது நடக்காமல் விட்டுவிட்டதைப் போகிற போக்கில் நூல் ஆசிரியர்
சொல்லிச்செல்கிறார். இந்த நூலின் சிறப்பே இப்படிப்பட்ட சின்னச்சின்ன ஒப்பீடுகளும்
சுட்டிக்காட்டல்களும்தான்.,
‘மெரினா’ என்று
ஆங்கிலேயர்கள் ஏன் மெரினாவிற்குப் பெயர் வைத்தார்கள் என்பதை விளக்கிவிட்டு,’நாமும் மெரினா கடற்கரை என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம்’ என்கிறார்.’மூர்லேண்ட்’ என்னும்
தரிசுவெளிக்காட்டைப் பேசவந்தவர் ,ஷெர்லாக் கதைகளைப் பற்றிப்
பேசுகிறார்.”சிறு வயதிலிருந்தே ஷெர்லாக் கதைகளைப்
படித்துவந்த எனக்கு, மூர்லேண்ட்டின் மரங்களற்ற புல்வெளிகள்,
என்னை அதனுடன் தொடர்பு படுத்திக்கொண்டது எனலாம். புத்தகங்கள்தான்
எத்தனை எத்தனை உலகங்களை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. புத்தக
வாசிப்பு உன்னதம்தான். அதனால்தானே நானும் இன்று உங்களிடம் என் பயணத்தைப் பகிர
முடிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார். பகிர்வது
மகிழ்ச்சிதான் நமக்கும், அவருக்கும்.
வாசிக்க, வாசிக்க இந்த நூலில் நிறையப் புதிய செய்திகள் கிடைக்கின்றன.’கீழ்த்தளம் மட்டும் அறைகள் அமைந்திருக்கும் பெரிய வீடுகளுக்குப் பெயர்தான் பங்களா என்பது.
இங்கு பிரிட்டனில் வயது முதிர்ந்தோர்களுக்காக இம்மாதிரியான வீடுகள் கட்டப்படுகின்றன’ என்று நூலாசிரியர்
விவரிக்கும்போது நாம் சொல்லும் ‘பங்களா மாதிரி வீடு
கட்டவேண்டும்’ என்று சொல்வது நமது அறியாமை என்று புரிகிறது.
தாமிரபரணி ஆற்றுப்பகுதியிலிருந்து
கோவைக்குக் குடி புகுந்தவர் இந்த நூலாசிரியர். “தாமிரபரணி ஆற்றின்
நினைவு வாசம் இன்னும் என்னுள் மிச்சமுண்டு,” என்று
குறிப்பிட்டு இங்கிலாந்தில் இருக்கும் ஆறுகளைப் பற்றி விவரிக்கிறார். இந்த நூலின் தலைப்பிற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார். “இங்கு
நடைப்பாதைகளில் மட்டும்தான் நடக்கமுடியும். சாலை என்பது வாகனங்களுக்கானதுதான்.
சைக்கிளுக்கான பாதையில் சைக்கிள் பயணம் செய்பவர்கள் செல்ல மட்டுமே – இவை போன்றவை, யாரும் அம்மக்களைக் கவனித்து, கடுமையாக மிரட்டி செய்ய வைக்கவில்லை. இது ஓர் அடிப்படைக்கல்வியாக அங்கே
சொல்லிக் கொடுக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடுகிறார். ஒரு
மொழியைத் திணிப்பதற்காக ஒரு கல்விமுறையைத் திணித்தே தீருவேன் என்று சொல்பவர்கள்
கவனிக்கவேண்டிய பகுதி இது.
புகைப்படம் எடுப்பது பற்றிய ஒரு
குறிப்பை நூலாசிரியர் கொடுத்திருக்கிறார். “கடற்கரை என்றில்லை, சாலைகளாகட்டும் வீடுகளாகட்டும் எங்காகினும் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு
யாராவது இருந்தால், அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டும்.
இல்லையென்றால், எடுக்கக்கூடாது. நம் ஊருக்கு வந்தபிறகும்
இந்தப் பழக்கத்தையே நான் தொடர்கிறேன்.” என்று
குறிப்பிடுகிறார். அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். பொது இடங்களில் நாம்
புகைப்படம் எடுக்க ஒருவரோடு நிற்கும்போது, நமக்குச்
சம்பந்தமே இல்லாதவர் நம் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுப்பது போன்றவை தவிர்க்கப்படவேண்டும்.
அது அநாகரிகம் என்பதை உணரவேண்டும்.
“பிரித்தானிய சமூகம், சகமனிதர்களைக் கண்டால் நட்புடன் சிரிக்கக் கற்றுத்தருகிறது. எதிர்ப்படும்
எவரையும் கண்டு தேவையில்லாத சிந்திப்புக்குள் செல்லாமல், சாதாரணமாய்ச்
சிரித்து வைத்துவிட்டு நகரச்சொல்கிறது. வர்க்கரீதியான, சாதிரீதியான,
மதரீதியான திணிப்புகள் சிந்தனைக்குள் வருவதில்லை…” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆங்கிலேயர்களைப் பற்றிய நம்
பொதுப்புத்திக்கு மாறான ஓவியத்தை இந்தப் பகுதி தருகிறது. பருவ காலங்களைப் பற்றிப்
பேசுகிறபோது உடைகளைப் பற்றியும், உணவுகளைப் பற்றியும்,
வெளி நாட்டிற்கு வரும் பெற்றோர்களுக்கும் இருக்கும் சிரமங்களைப்
பற்றியும் பேசுகிறார். அதற்குத் தகுந்த தீர்வையும் இந்த நூலின் மூலமாகத்
தருகிறார். சுற்றுச்சூழல் பற்றிய பிரித்தானியர்களின் விழிப்புணர்வு நமக்கு
வியப்பைத் தருகிறது.
‘சமூகமும் அரசியலும்’ என்னும் பகுதி வாசிக்கவும், வாசித்தபின் யோசிக்கவும்
வைக்கிறது. “பிரிட்டனில் குடும்பக் கட்டமைப்புகள்
வலுவானவையே. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் பழமைவாதிகளே. ஐம்பது, அறுபது வருடத் தாம்பத்தியத்தை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள்,” என்று குறிப்பிடுகிறார். மேலும் “குடும்பங்களில்
பிள்ளைகள் பெரிதானபின்,தனக்கான வேலையைத் தேடிக்கொண்டு,
பெற்றோருக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் திருமணத்தை முடிப்பதும்,
இல்லையென்றால் அவர்களாகக் காதலித்து மணம் புரிந்து கொள்வதும்,
தனியே வீடு பார்த்து செட்டிலாகி விடுவதும் பிரித்தானியா சமூக
வழக்கம். பிள்ளைகள் வெளியேறியபின், தாயும் தகப்பனும் தனியாக
வீடுகளில் வாழ்வதும் உண்டு. அதற்காக அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சம்பந்தமே
இல்லாத மாதிரி, நம்ம ஊர் கலாச்சாரக் காவலர்கள் கத்துவது
மாதிரியெல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு வாழ்வதும் பெற்ற பிள்ளைகளின் மீது பாசம்
செலுத்தும் அதே மனித பெற்றோர்கள்தான்,” என்றும்
குறிப்பிடுகிறார். சரியான கட்டுடைப்புச் செய்திகள் இவை. “பெற்றோரை
கட்டாயத்துக்கு ஆட்படுத்தும் பழக்கம் இங்கில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும்
இதைத்தான்.” என்றும் அறிவுறுத்துகிறார். அந்த நாட்டில்
குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றி நிறைய விவரிக்கிறார். “இந்தச் சமூகத்தில் சில நயமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன ‘Yes
Please’, ‘Thank you’, ‘Sorry’ ‘May I help you?’” போன்ற சொற்கள்
எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, அதனால் அந்தச் சமூகம்
எப்படிப் பயன்பெறுகிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறார்..
அந்த நாட்டில் 40 சதவீதம் பேர் நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். “வெகு சாதாரணமாக ‘நான் கடவுளை நம்பவில்லை’, ‘மதங்களின் மீது எனக்கு
நம்பிக்கையில்லை’ என்று சொல்வார்கள்” என்று
குறிப்பிடுகிறார். பதட்டமாகக் கடந்த ஒரு நாள் இரவு பற்றியும் குறிப்பிடுகிறார்.
கோடைக்காலப் பயணங்கள், குளிர்காலப்பயணங்கள், இலக்கியப்பயணங்கள் என்று
மூன்று பகுதியாகப் பிரித்துப் பயண அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். கோடைகாலத்தில்
பார்த்த அரண்மனைகள், இடங்களைப் பற்றியும் விக்டோரியா மகாராணி,
அவர் பெயரால் இருக்கும் தெரு என்று விவரித்திருக்கிறார். “இங்கு செம்மறியாடுகள் என்றால் அறிவானவை என்று சொல்கிறார்கள்,” என்று செம்மறியாடுகளைப் பற்றிக் கூறுகின்றார். பார்த்த அருவிகள், மலையேற்றம் என்று பலவிதமான அனுபவங்களைப் பகிர்கின்றார்.
குளிர்காலத்தின் ரயில் பயணங்கள், சர்ச்சிலும் ராஜீவ்காந்தியும் என்னும் தலைப்பில் அமைந்த செய்திகள் போன்றவை
ஈர்ப்பாக அமைந்துள்ளன. கடைசிப்பகுதியான இலக்கியப்பயணம் வாசிக்க மிகவும் ஈர்ப்பாக
இருக்கிறது. புத்தகத் திருவிழா உரையில் பிரியா விஜயராகவன் பற்றி எழுதியிருக்கிறார்.
அவரின் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ என்னை
மிகவும் பாதித்த நாவல். பல நாள் பேசவைத்த நாவல் அது. அதைப்போல ‘கொடைமடம்’ எழுதிய தோழர் சாம்ராஜ் பற்றியும்
எழுதியிருக்கிறார். மற்ற இலக்கிய ஆளுமைகளும். நிறைவாக லண்டன் இலக்கியப் பயணம்
பற்றி எழுதியிருக்கிறார்.
மொத்தத்தில்
சில பக்கங்கள் தோழமை மொழியில் இருக்கிறது. சில பக்கங்கள் ஆசிரியர் மாணவர்களைக்
கண்டிப்பதுபோல் இருக்கிறது. . “‘பேப்பரை வைத்து துடைப்பவர்கள்தானே’
என்ற மோசமான கருத்தையும் வாசித்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டு, அங்கு இருக்கும் சூழலை, தட்பவெப்ப நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கண்டிப்பும்
கனிவும் கலந்து, வாசிப்பவருக்குப் புரிதல் ஏற்படுத்தும்
மொழியாக இந்த நூலின் மொழி இருக்கிறது.
மொத்தத்தில் நாவலைப் போல
விறுவிறுவென்று வாசித்து விட்டு தூக்கிப்போடும் நூல் அல்ல இது. வாசிக்கும்போதே, நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது. ஏன் நம் நாட்டில் இப்படி இருக்கிறது என்று
சிந்திக்க வைக்கிறது. பெண்ணியம் குறித்த தோழர் அகிலாவின் கருத்துகள் செவிட்டில்
அறைவதுபோல் இருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைக் கோபத்தோடு
சுட்டிக்காட்டுகிறார். கலாச்சாரம், பண்பாடு என்று
சொல்லிக்கொண்டு இங்கு நடக்கும் கொடுமைகளை ஒப்பிடும்போது பிரிட்டனில் அப்படி இல்லை
என்பதை ஒப்பிட்டு ஆதாரங்களோடு சொல்கின்றார்.
அடுத்து ஸ்காட்லாந்து பயணத்தைப்
பற்றிய நூலும் வருகிறது என்று சொல்லியிருக்கிறார். எழுத்தாளர் தோழர் அகிலா
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து எழுதுங்கள். இது
ஒரு பெண்ணின் பயண நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது
எழும் உணர்வுகளையும், எண்ணங்களையும் இணைத்துக் கொடுக்கப்பட்ட
நூல். வாங்கிப் படியுங்கள். சிறப்பாக வெளியிடும் எம்ரால்டு பதிப்பகத்திற்கும்
வாழ்த்துகள், பாராட்டுகள்.
****************************

No comments:
Post a Comment