அண்மையில் படித்த புத்தகம்: யாதுமாகினாய்(சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் : லோ.குமரன்
வெளியீடு : எழிலினி பதிப்பகம்,சென்னை-600 008.
முதல்பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 70, விலை ரூ 150
இசைக்கருவியை கையாளுபவர்கள் இனிமையைக் கையாளுபவர்கள். புல்லாங்குழலை வாசிப்பவர்கள் பொறுமையாய் எதையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள். மனதிற்குள் தோன்றும் மகிழ்ச்சியை குழலின் வழியாக எளிதாகக் கடத்தத் தெரிந்தவர் 'வாருங்கள் படிப்போம்' குழுவின் மூலம் அறிமுகமான அண்ணன் லோ.குமரன் அவர்கள்.. அண்ணன் லோ.குமரன் அவர்களின் 'யாதுமாகினாய்' என்னும் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்த போது எனக்கு இன்னொரு பிரபஞ்சனைக் கண்டுபிடித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியும் துள்ளலும் மனதிற்குள் எழுந்தது. அப்படி ஒரு விவரிப்பு. தவறு செய்யும் நிலையில் கூட அந்தத் தவறை செய்கிற நிலைமைக்கு ஒரு பெண் எப்படி ஆக்கப்படுகிறாள் என்பதை அற்புதமாய் விவரிக்கும் சொல்லாடல். ஒவ்வொரு கதைக்கும் நிறுத்தி நிதானமாய்ச் சொற்களைப் வடித்திருக்கும் விதம் அருமை. உண்மையிலேயே இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்த பொழுது அவ்வளவு மன நிறைவாக இருந்தது. இது இவருடைய முதல் தொகுப்பு. யார் படித்தாலும் இது முதல் தொகுப்பாகத் தெரியாது அப்படி ஓர் எழுத்து ஓட்டம் ,அப்படி ஓர் உளவியல், அப்படி ஓர் உரையாடல், அப்படி ஓர் உள் மனது செய்திகளைக் கடத்தும் நுட்பம் வியந்துதான் போனேன். நான் மகிழ்ந்துதான் போனேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குமரன் அண்ணே.எழுதுங்கள்,எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் தனித்துவமாக இருக்கின்றன
இந்தத் தொகுப்பில் 4 சிறுகதைகள் இருக்கின்றன. நிறையப் பக்கங்கள் உள்ள சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிகழ்பவை. 'யாதுமாகினாய்' என்னும் கதை ஒரு கணவன் மீது மனைவிக்கு இருக்கும் அன்பைச் சொல்கிறது அந்த அன்பு எதனால் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதைப் படித்துப்பாருங்கள். அதைப்போல அப்பா மீது வெறுப்பு ஏன் ஏற்பட்டது என்பதை 'ஏய்' என்னும் ஒற்றைச் சொல் மூலம் விவரித்திருக்கிறார் ஆணும் பெண்ணும் வாழும் வாழ்க்கை நன்றாக அமைவதற்கு என்ன என்ன வேண்டும் என்பதை மிக எளிமையாக்கி ஒரு வாய்ப்பாடு(ஃபார்முலா) போலக் கொடுத்திருக்கிறார்.
இலஞ்சம் வாங்கி, மாட்டும் ஒருவரைப் பற்றிய கதை 'யாதெனக் கேட்டேன்'. பிணவறையைப் பற்றியும் பிணவறைக்குள் இருக்கும் நிலையில் எண்ணிப்பார்ப்பதாகவும் எழுதப்பட்ட கதை. நடப்பில் இருக்கும் நடிகர்கள் மோகம் பற்றியும் போகிற போக்கில் சொல்லிச்செல்லும் கதை. பொருத்தமாகப் பொருந்துகிறது.
இந்தத் தொகுப்பில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் கதை என்று 'யாரிவளோ 'என்னும் கதையைச்சொல்லலாம். சென்னை பாஷையையும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.அலமேலு நம் மனதில் நிற்கிறார். ஆணாதிக்கவாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் கதை. கதை ஓட்டத்தில் அற்புதமான கருத்துக்களைப் பொன்மொழி போல எழுதிக்கொண்டு செல்கிறார்.
எடுத்துக்காட்டாக
" மனதளவில் துவண்டு இருக்கும் நேரத்தில் 'என்னவாயிற்று' எனக் கேட்டு நம் முதுகை அன்பாக தட்டிக் கொடுத்து அரவணைக்கும் அந்த தொடுதலுக்காக, அணைப்பிற்காக ஏங்காத மனித உயிர் இங்கு யாரும் இல்லை. அந்த ஒரு தொடுதலால் வலி என்னும் நச்சுமுள்ளை வேரோடு பிடுங்கி தூக்கி எறிந்து விட முடியும் அலமேலுவின் அந்த அன்பான தொடுதல் சௌந்தர்யாவிற்கு இப்போது தேவைப்பட்டது
"ஏன் அலமேலு இந்த ஆம்பளைங்களோட புத்தி இப்படி இருக்கு?.. ஆம்பள கையை எதிர்பார்க்காமல் சுயமா தன்னோட கால்ல நிக்கணும், தன்னோடு தொழில்ல ஜெயிச்சு காட்டணும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கள சட்டுனு 'தேவிடியா' என்று கூச்சமே இல்லாம எப்படி பச்சையாத் திட்ட தோணுது? வீட்டுக்காரனை ஏமாத்தணும்னு ஒரு பொண்ணு முடிவு பண்ணிட்டா, அவன் என்னதான் கட்டுப்பாடு போட்டாலும் அத உடைச்சிட்டு, மனசுக்கு பிடிச்சவன் எதிரே மொத்தமா அவுத்து போட்டுட்டு, இந்தா எடுத்துக்கோன்னு அவனோட படுத்து வாழ்க்கைய அனுபவிக்கிறது ஒன்னும் கஷ்டமே இல்லைன்னு ஏன் இவனுங்களுக்கு புரியல அலமேலு. பொம்பளைங்கறவங்க வெறும் உடம்பு மட்டும் தான் அவளுக்கும் உணர்வு இருக்கு, ஆசாபாசம் இருக்குன்னு ஏன் இவனுங்க நினைக்க மாட்றாங்க..."
"மனுசனுக்கு நாம செய்யற பெரிய செயலை அவங்க கஷ்டத்துல இருக்குறப்போ கொடுக்கிற ஆறுதல்தான்".
" கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கவும், நிகழ்காலத்தின் துயரங்களை பகிர்ந்து கொள்ளவும் வயதோ, படிப்போ, வசதியான வாழ்க்கையோ எதுவும் இங்கு தடை கிடையாது. உண்மையாய் செவிமடுக்கும் நல்ல இதயம் இருந்தால் போதும். தன் மனச் சுமைகளை இறக்கி வைத்து இளைப்பாற ஒரு துணை கொடுத்தால் அந்த இடத்தில் ஓய்வெடுத்து பிறகு வரும் நாட்களை சற்று நகர்த்த முடியும். அந்த நல்ல இதயமாய் அலுமேலுவைப் பார்த்தாள் செளந்தர்யா'...
அதைப்போல ஒரு முயலை வைத்து ,கதை சொல்லும் இடம் அருமையாக இருக்கிறது.
"எல்லா நேரங்களிலும் தன்னை வேட்டையாடத் தயாராகும் விலங்கை முயல்கள் கவனிப்பதில்லை. தொடர்ந்து சலசலப்புகளும், வழக்கத்துக்கு மாறான ஓசைகளும் முயல்களுக்கு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும். எச்சரிக்கையாய் இருக்கும் முயல்கள் இரையாகாமல் தப்பிக்கும். தன் இரை தேடலில் அதிக ஆசை வைக்கும் முயல் வேட்டையாடப்படும். இது ஆசை இல்லாத முயல் தன் காதுகளை உயர்த்தி ஓசைகளை உள்வாங்கி எச்சரிக்கையானது."
'தொடர்பு எல்லைக்கு வெளியே' இன்றைய ஐ.டி.உலகில் வேலை பார்க்கும் நந்தினி மற்றும் கவி என்னும் இரண்டு கதை பாத்திரங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. கதைக்குள் பேசப்படும் கருத்துகள் கதையோடு ஒட்டியும் ,உணர்வுபூர்வமாகவும் பேசப்படுவது இந்தக் கதைக்கே ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது.
நான் கதைகளை விரிவாக விவரிக்கவில்லை.இதை வாசிக்கும் தாங்கள் இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசித்துப்பார்க்கவேண்டும்.அதில் இருக்கும் லயத்தை ,இனிமையை வாசித்து உணரவேண்டும் என்பதால் விரிவாக விவரிக்கவில்லை.
குமரன் அண்ணே, உங்களிடம் நிறைய சிறுகதைகளை எழுதுங்கள் என்று நான் சொல்லப்போவதில்லை.அதற்குப் பதிலாக வருடத்திற்கு 4 கதைகளை இதைப்போல எழுதுங்கள்.ஒரு 20 வருடத்தில் 80 கதைகள் மட்டும்தான் என்றாலும் பேசப்படும் கதைகளாக,வாசிப்பவர்களின் மனதில் நிற்கும் கதைகளாக அவைகள் இருக்கும்.என்றென்றும் பேசப்படும் கதைகளாகவும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பல மொழிகளில் பேசப்படும் கதைகளாகவும் அவைகள் இருக்கும்.
இந்த நூலுக்குச் சிறப்பான அணிந்துரையை தோழர் அ.குமரேசன் அவர்களும்,அருமையான வாழ்த்துரையை அண்ணன் முனைவர் கோ.ஒளிவண்ணன் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள்.புத்தகத்தின் அட்டை வடிவமைப்பை செ.ஜீவானந்தகுமார் அருமையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள்
கட்டாயம் வாசிக்க வேண்டிய ,அதுவும் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கவேண்டிய சிறுகதைத் தொகுப்பு. வாங்கி வாசித்துப்பாருங்கள். நீங்களும் இசைக்குத் தலையாட்டுவதுபோல இந்த நூலின் கதைகளுக்குத் தலையாட்டுவீர்கள்.பாராட்டுவீர்கள்.
வாழ்த்துகளும் ,மகிழ்ச்சியும்,பாராட்டுகளும் அண்ணன் லோ.குமரன் அவர்களுக்கு....
அன்புடன்
\ வா.நேரு,12.01.2026
.jpg)
.jpg)
6 comments:
இந்த நாளை இனிமையான நாளாக தொடங்கி வைத்திருக்கிறீர்கள் அண்ணே. என் புத்தகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன் அண்ணா. மீண்டும் சொல்கிறேன், என்னை எழுதத்தூண்டியதே நம் குழுவினர்கள் தான். இவ்வளவு விரைவாகவும் ஆழமாகவும் படித்து மதிப்புரையாய் கொடுத்தமைக்கு மீண்டும் நன்றிகள் அண்ணே. தொடர்ந்து எழுதுகிறேன். நன்றிண்ணே.
(வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில் அண்ணன் லோ.குமரன் அவர்கள்)
மகிழ்ச்சி அண்ணே
நண்பர் லோ. குமரனை ஹ. குமரன் ஆக்கிவிட்ட அண்ணன் வா.நேரு அவர்ளுக்கு எனது வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணே.
நன்றிகள். ❤
நன்றிங்க அண்ணே...
Post a Comment