Sunday, 12 April 2026

கேட்பார் இல்லையா?...

 

முடை நாற்றம் வீசும்

மூட நம்பிக்கைகள்தான்

முதலீடு..

ஒன்றிய அரசின்

அமைச்சர்கள் முதல்

எளிய மனிதர்கள்வரை…

 

மூளைக்குள் போடப்பட்ட

மூட நம்பிக்கை விலங்கு…

கழட்ட முடியாத அளவிற்கு

பின்னிப் பிணைந்து கிடக்கிறது

இந்திய ஒன்றியத்தில் !

அரசியல்வாதிகளுக்கும்

சாமியார்களுக்கும்

கள்ள உறவு…

களவாணிகள் உறவு ..

 

செயற்கை நுண்ணறிவு

பாம்பு கடிக்கு விரைவான

மருத்துவம் கொடுக்கலாம்!

மருத்துவமே கொடுக்காமல்

இப்படிக் கங்கை நீரில்

மிதக்க விட்டால்…

அநியாயமாய் ஓருயிர்

போனது ஊடகத்தின்

வாயிலாகத்தான் தெரிகிறது..

 

சாமியார் சொன்னான் எனப்

பாம்பு கடித்த பையனை

கங்கை நீரில் கட்டிலில்

படுக்கவைத்து மிதக்க

விட்ட பெற்றோர்கள்!

அதை வேடிக்கை பார்த்த

அத்தனை மனிதர்கள்!

மருத்துவமனைக்கு

கொண்டுபோங்கடா முட்டாள்களே

எனச் சொல்ல ஒருவனுக்கும்

வாய் வரவில்லையா?

துணிவில்லையா சொல்வதற்கு ?…

 

மூடநம்பிக்கை எனச்சொல்லி

நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது

என உச்ச நீதிமன்றத்தில்

ஒன்றிய அரசு எதிர்

மனுதாக்கல் செய்கிறது…

என்னங்கடா நாடு இது!

கேட்பார் இல்லையா !

சொல்வார் இல்லையா !

 

                              வா.நேரு,13.04.2026



 

(அம்ரோகா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்..

மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அசைவற்றுக் கிடக்கும் சிறுவனை சுற்றி ஏராளமான மக்கள் வேடிக்கை பார்ப்பதும், ஏதேனும் அதிசயம் நடக்கும் என காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த அற்புதமும் நிகழவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

நன்றி: தி இந்து தமிழ்

.

 

 

 

 

2 comments:

சுசிலா said...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூடவா அறிவில்லை. யாரேனும் ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்திருக்கலாமே

முனைவர். வா.நேரு said...

நம் தமிழ்நாடு மாதிரி இல்லை தங்கையே ,வட நாட்டில்..அங்கு மந்திரவாதிகளை,சாமியார்களை அவ்வளவு எளிதாக எதிர்த்து ஏதும் சொல்ல இயலாது..நன்றி .