Showing posts with label அணிந்துரை/வாழ்த்துரை..வா.நேரு அளித்தது... Show all posts
Showing posts with label அணிந்துரை/வாழ்த்துரை..வா.நேரு அளித்தது... Show all posts

Thursday, 30 October 2025

எழுத்தாளர் அகிலா அவர்களின் நூலுக்கான அணிந்துரையும் பாராட்டும....

 

எழுத்தாளர் அகிலா அவர்களின் முக நூல் பதிவு .அப்படியே கொடுத்துள்ளேன்.நன்றி எழுத்தாளர் அகிலா அவர்களுக்கு...

#அணிந்துரைகள் 

 

//‘சமூகமும் அரசியலும்என்னும் பகுதி வாசிக்கவும், வாசித்தபின் யோசிக்கவும் வைக்கிறது. பிரிட்டனில் குடும்பக் கட்டமைப்புகள் வலுவானவையே. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் பழமைவாதிகளே. ஐம்பது, அறுபது வருடத் தாம்பத்தியத்தை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள்,” என்று குறிப்பிடுகிறார். 

 

//மேலும் குடும்பங்களில் பிள்ளைகள் பெரிதானபின்,தனக்கான வேலையைத் தேடிக்கொண்டு, பெற்றோருக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் திருமணத்தை முடிப்பதும், இல்லையென்றால் அவர்களாகக் காதலித்து மணம் புரிந்து கொள்வதும், தனியே வீடு பார்த்து செட்டிலாகி விடுவதும் பிரித்தானியா சமூக வழக்கம். பிள்ளைகள் வெளியேறியபின், தாயும் தகப்பனும் தனியாக வீடுகளில் வாழ்வதும் உண்டு. அதற்காக அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, நம்ம ஊர் கலாச்சாரக் காவலர்கள் கத்துவது மாதிரியெல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு வாழ்வதும் பெற்ற பிள்ளைகளின் மீது பாசம் செலுத்தும் அதே மனித பெற்றோர்கள்தான்,” என்றும் குறிப்பிடுகிறார். சரியான கட்டுடைப்புச் செய்திகள் இவை. 

 

//“பெற்றோரை கட்டாயத்துக்கு ஆட்படுத்தும் பழக்கம் இங்கில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான்.என்றும் அறிவுறுத்துகிறார். அந்த நாட்டில் குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றி நிறைய விவரிக்கிறார். இந்தச் சமூகத்தில் சில நயமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன ‘Yes Please’, ‘Thank you’, ‘Sorry’ ‘May I help you?’” போன்ற சொற்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, அதனால் அந்தச் சமூகம் எப்படிப் பயன்பெறுகிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறார்..

 

இவையெல்லாம் முனைவர் வா. நேரு Valaguru Nehru அவர்கள் என் பயண நூலான #இங்கிலாந்தின்_நதிக்கரையில் நூலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. 

 

இந்த புத்தகத்தை வாசித்த #வாசகர் ஒருவர், எனக்கு பேசியிருந்தார். அவர் அதிகம் சிலாகித்தது, புத்தகத்தை விட, அதை வாசிக்கத் தூண்டிய முன்னுரையைக் குறித்துதான். 

அவர் சொன்ன சில விடயங்களை இங்கு சொல்கிறேன். 

 

1. ஒரு வாசகனாக, தான் எந்த புத்தகத்தை வாங்குவதற்காக கடைக்கு அல்லது புத்தகக் கண்காட்சிக்குச் சென்றாலும், புத்தகத்தைப் புரட்டும்போது, யாராவது அதுகுறித்து வெளி அட்டையில் அல்லது உள்ளே உரையில் ஏதேனும் எழுதியிருக்காங்களா என்று பார்ப்பது வழக்கமாம். அது தன்னை impress செய்தால் நிச்சயமாக வாங்கிவிடுவது உண்டாம். இல்லையென்றாலும் புத்தகத்தின் ஈர்ப்பு காரணமாக வாங்குவது உண்டாம். 

 

2. இன்றைக்கு இருக்கும் பல புத்தகங்களில் அணிந்துரையில் எழுதுபவர்கள், புத்தகத்தைக் குறித்து எழுதுவதை விட, அதை எழுதிய ஆசிரியரைப் பாராட்டியே அதிகம் எழுதுவதாகக் குறையும் பட்டுக்கொண்டார். இதையெல்லாம் ஒரு வாசகரின் வழி கேட்கும் போதுதான், நமக்கும் உரைக்கிறது. 

 

3. கையில் இருக்கும் பணம் புத்தகம் வாங்க போதவில்லையென்றால், பார்த்து வைத்துவிட்டு அடுத்த மாதம் வந்து வாங்குவது உண்டாம். என் பயண நூலை, அவரின் பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாக இருந்தபோதிலும் வாங்கிவிட்டதாக சொன்னார். மகிழ்ச்சி. அணிந்துரை எழுதிய நேரு அவர்களுக்கு என் நன்றி.. 



 

நேரு அவர்களின் முழு உரையும் கீழே: நன்றிங்க தோழர்   

 

******** 

 

பயணமும் கட்டுடைப்பும்

................................  .............................

 

பயணிப்பது எப்போதும் மகிழ்ச்சி தருவது. அதுவும் வெளி நாட்டுப்பயணம் என்பது புதிய இடங்களை, புதிய தட்பவெப்பநிலையை, புதிய புதிய மனிதர்களைப் பார்க்கவும்,பழகவும் வாய்ப்புத் தருவது. மகிழவும், புதுப்புது அனுபவங்களைப் பெறவும் பெரும் வாய்ப்பாக அமைவது. இன்றைக்கு வெளி நாடுகளில் வேலைபார்க்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு வெளி நாட்டுப்பயணம் என்பது இயல்பாக அமைகிறது. அந்த வகையில் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் எனப் பல பரிமாணங்களைப் பெற்றுத் தமிழ் எழுத்து உலகின் இன்றைய ஆளுமைகளில் ஒருவராக விளங்கும் தோழர் அகிலா  அவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு, இங்கிலாந்து செல்வதற்குக் கிடைக்கிறது.எதையும் கூர்ந்து கவனித்து, அதனை இலக்கியமாக மாற்றும் வல்லமை படைத்த தோழர் அகிலா அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்து சென்றதைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தனது இங்கிலாந்துப் பயணத்தைப் பற்றிய இரண்டாவது நூலாக இங்கிலாந்தின் நதிக்கரையில் பயணியின் காலக்குறிப்பு என்னும் இந்த நூல் அமைந்திருக்கிறது.

 

இங்கிலாந்தில் மாதக்கணக்கில் தங்கும் சூழல். புதிய இடங்களைப் பார்க்கிறபோது, மழலையைப் போலப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். புதிய மனிதர்களைப் பார்க்கிறபோது, ஒரு இளம்பெண்ணாக உற்று நோக்கி, அவர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார். ஒரு முதியவர் போல அந்த நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் இருக்கும் வேறுபாடுகளை, ஒற்றுமைகளை உற்று நோக்கித் தன் அனுபவங்களைப் பதிவு செய்கிறார். தோழர் அகிலா அவர்களின் மகிழ்ச்சியை, மன உணர்வுகளை, அனுபவங்களை நாமும் கூட நூல் முழுக்க வாசிக்க வாசிக்கப் பெற்றுக் கொண்டே நகர்கின்றோம்.

 

இந்த நூலின் பக்கங்கள் மொத்தம் 380. ஆற்றங்கரை நாகரிகங்கள், பிரிட்டனின் நிலவமைப்பு, ஆறுகள், பருவகாலங்கள், சுற்றுச்சூழல், சமூகமும் அரசியலும், பயணங்கள், அங்கு எடுத்த புகைப்படங்கள், பின் இணைப்பாக வரைபடங்கள் என ஒரு முழுமையான தகவல்களைக் கொண்ட பயண நூலாக இந்த நூல் இருக்கிறது. இவரது முதல் பயண நூலான இங்கிலாந்தில் 100 நாட்கள் எனும் நூல் எனக்கு மிகவும் வியப்பைத் தந்த புத்தகம். இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரை தனியாகப் பயணித்து, இங்கிலாந்திற்குள்ளும் தனியாகப் பயணித்து விரிவாக எழுதிய நூல் அந்த நூல். இந்த நூல் அதிலிருந்து மாறுபட்டு, நிறையத் தகவல்களையும் அதோடு இணைத்து பயண அனுபவங்களையும் சொல்கின்ற நூலாக அமைந்திருப்பது சிறப்பு.

 

இங்கிலாந்தில் 100 நாட்கள் வாசித்தவர்கள் பயணக்குறிப்பு எடுக்கும் விதம் குறித்து என்னிடம் கேட்டிருந்தார்கள்என்று குறிப்பிட்டு, பயணிக்கும்போது எப்படி குறிப்புகள் எடுப்பது என்பது பற்றி விரிவான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார். பயணநூல்கள் எழுதவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்திகள் இவை.கைபேசியில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகம் உதவும்என்று அதில் குறிப்பிடுகிறார். உண்மைதான்.

 

விண்டர்மே ஏரியின் முன் அமர்ந்து பறவைகளைப் பற்றி எழுதித் தீர்த்திருக்கிறார். எனக்குச் சற்றுப் பறவைகள் மீது கிறுக்குத்தனம் உண்டு. அவற்றின் மொழியைப் புரிந்து கொள்ள முயல்வேன்.கோயம்புத்தூரில் அதிகமான நீர் நிலைகள் இருக்கின்றன. நீர் நிலைகளை, அங்கு இருக்கும் பறவைகளை எல்லாம் பாதுகாக்க சிறுதுளி, ஓசை போன்ற பல அமைப்புகள் இயங்கி வருவதைக் காண்கிறோம்.அப்பறவைகளைப் பற்றிய மின்னூல் ஒன்று மழைப்பறவைகள்என்னும் தலைப்பில் புகைப்படங்களுடன் அமேசானில் வெளியிட்டும் உள்ளேன். எனது அறவிநாவலிலும் இங்கிலாந்து பறவைகளைப் பற்றிக் கவனப்படுத்தியிருப்பேன்என்று தன்னைப்பற்றித் தோழர் அகிலா குறிப்பிடுகிறார். நூல் முழுக்க பல இடங்களில் பறவைகளின் மொழியும் ஒலியும் கேட்டுக்கொண்டே இருக்கிறது இவரின் விவரிப்பில்.

 

மிகவும் இயல்பாக உணவைப் பற்றி விவரித்துக்கொண்டே செல்கின்றார். கேரளாவில் டீயை உறிஞ்சிக்கொண்டே டிபன் சாப்பிடுவது போலத்தான் இங்கும்(இங்கிலாந்திலும்)என்று குறிப்பிட்டு உணவோடு குளிர்பானம் சாப்பிடும் பழக்கம் நம் ஊரிலும் வந்துவிட்டதை எழுதுகிறார். கத்திரிக்காயை எப்படி எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு மற்றபடி கத்திரிக்காய் கத்திரிக்காய்தான்என்கிறார். அட, இப்போது புரிகிறது, உலகம் முழுமையும் ஆண்கள் ஒரே மாதிரி என்பதுஎன்று ஓரிடத்தில் சொல்கிறார். வாசித்தபின்பு வெட்கமாகத்தான் இருக்கிறது ஆண் என்ற வகையில். 

டெர்வெண்ட் நடைபாதையில் கையில் காப்பியுடன்  அடந்த மரங்களுக்கிடையில் தோழர் அகிலா நடந்து சென்றதை விவரிக்கும்போது ஏதோ நாமும் அவருடன் சேர்ந்து நடப்பதைப் போன்ற ஓர் உணர்வு நமக்குத் தோன்றுகிறது.இங்கிருப்பவர்கள் நடப்பதற்குப் பயப்படுவதே இல்லை. வீல் சேர், வாக்கிங் ஸிட்டிக்ஸ், வாக்கர்ஸ் என்று இருப்பவர்கள் கூடச் செல்கிறார்கள் என்பதுதான் விஷேசமே. நம் முன்னோர்கள் எங்கும் நடந்து சென்றார்கள், நாம் கூட ஒரு காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றோம் என்பது நம் வாழ்க்கையில் பழங்கதையாகிப் போனதுதான் பெரும் வருத்தமேஎன்று நடந்த நாம், இப்போது நடக்காமல் விட்டுவிட்டதைப் போகிற போக்கில் நூல் ஆசிரியர் சொல்லிச்செல்கிறார். இந்த நூலின் சிறப்பே இப்படிப்பட்ட சின்னச்சின்ன ஒப்பீடுகளும் சுட்டிக்காட்டல்களும்தான்.,

 

மெரினாஎன்று ஆங்கிலேயர்கள் ஏன் மெரினாவிற்குப் பெயர் வைத்தார்கள் என்பதை விளக்கிவிட்டு,’நாமும் மெரினா கடற்கரை என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம்என்கிறார்.மூர்லேண்ட்என்னும் தரிசுவெளிக்காட்டைப் பேசவந்தவர் ,ஷெர்லாக் கதைகளைப் பற்றிப் பேசுகிறார்.சிறு வயதிலிருந்தே ஷெர்லாக் கதைகளைப் படித்துவந்த எனக்கு, மூர்லேண்ட்டின் மரங்களற்ற புல்வெளிகள், என்னை அதனுடன் தொடர்பு படுத்திக்கொண்டது எனலாம். புத்தகங்கள்தான் எத்தனை எத்தனை உலகங்களை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. புத்தக வாசிப்பு உன்னதம்தான். அதனால்தானே நானும் இன்று உங்களிடம் என் பயணத்தைப் பகிர முடிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார். பகிர்வது மகிழ்ச்சிதான் நமக்கும், அவருக்கும்.

 

வாசிக்க, வாசிக்க இந்த நூலில் நிறையப் புதிய செய்திகள் கிடைக்கின்றன.கீழ்த்தளம் மட்டும்  அறைகள் அமைந்திருக்கும் பெரிய வீடுகளுக்குப் பெயர்தான் பங்களா என்பது. இங்கு பிரிட்டனில் வயது முதிர்ந்தோர்களுக்காக இம்மாதிரியான  வீடுகள் கட்டப்படுகின்றனஎன்று நூலாசிரியர் விவரிக்கும்போது நாம் சொல்லும் பங்களா மாதிரி வீடு கட்டவேண்டும்என்று சொல்வது  நமது அறியாமை என்று புரிகிறது. 

 

தாமிரபரணி ஆற்றுப்பகுதியிலிருந்து கோவைக்குக் குடி புகுந்தவர் இந்த நூலாசிரியர். தாமிரபரணி ஆற்றின் நினைவு வாசம் இன்னும் என்னுள் மிச்சமுண்டு,” என்று குறிப்பிட்டு இங்கிலாந்தில் இருக்கும் ஆறுகளைப் பற்றி விவரிக்கிறார். இந்த நூலின்  தலைப்பிற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார். இங்கு நடைப்பாதைகளில் மட்டும்தான் நடக்கமுடியும். சாலை என்பது வாகனங்களுக்கானதுதான். சைக்கிளுக்கான பாதையில் சைக்கிள் பயணம் செய்பவர்கள் செல்ல மட்டுமே இவை போன்றவை, யாரும் அம்மக்களைக் கவனித்து, கடுமையாக மிரட்டி செய்ய வைக்கவில்லை. இது ஓர் அடிப்படைக்கல்வியாக அங்கே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.எனக் குறிப்பிடுகிறார். ஒரு மொழியைத் திணிப்பதற்காக ஒரு கல்விமுறையைத் திணித்தே தீருவேன் என்று சொல்பவர்கள் கவனிக்கவேண்டிய பகுதி இது. 

 

புகைப்படம் எடுப்பது பற்றிய ஒரு குறிப்பை நூலாசிரியர் கொடுத்திருக்கிறார். கடற்கரை என்றில்லை, சாலைகளாகட்டும் வீடுகளாகட்டும் எங்காகினும் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு யாராவது இருந்தால், அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டும். இல்லையென்றால், எடுக்கக்கூடாது. நம் ஊருக்கு வந்தபிறகும் இந்தப் பழக்கத்தையே நான் தொடர்கிறேன்.என்று குறிப்பிடுகிறார். அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். பொது இடங்களில் நாம் புகைப்படம் எடுக்க ஒருவரோடு நிற்கும்போது, நமக்குச் சம்பந்தமே இல்லாதவர்  நம் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுப்பது போன்றவை தவிர்க்கப்படவேண்டும். அது அநாகரிகம் என்பதை உணரவேண்டும்.

 

பிரித்தானிய சமூகம், சகமனிதர்களைக் கண்டால் நட்புடன் சிரிக்கக் கற்றுத்தருகிறது. எதிர்ப்படும் எவரையும் கண்டு தேவையில்லாத சிந்திப்புக்குள் செல்லாமல், சாதாரணமாய்ச் சிரித்து வைத்துவிட்டு நகரச்சொல்கிறது. வர்க்கரீதியான, சாதிரீதியான, மதரீதியான திணிப்புகள் சிந்தனைக்குள் வருவதில்லை…” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார். ஆங்கிலேயர்களைப் பற்றிய நம் பொதுப்புத்திக்கு மாறான ஓவியத்தை இந்தப் பகுதி தருகிறது. பருவ காலங்களைப் பற்றிப் பேசுகிறபோது உடைகளைப் பற்றியும், உணவுகளைப் பற்றியும், வெளி நாட்டிற்கு வரும் பெற்றோர்களுக்கும் இருக்கும் சிரமங்களைப் பற்றியும் பேசுகிறார். அதற்குத் தகுந்த தீர்வையும் இந்த நூலின் மூலமாகத் தருகிறார். சுற்றுச்சூழல் பற்றிய பிரித்தானியர்களின் விழிப்புணர்வு நமக்கு வியப்பைத் தருகிறது.

 

சமூகமும் அரசியலும்என்னும் பகுதி வாசிக்கவும், வாசித்தபின் யோசிக்கவும் வைக்கிறது. பிரிட்டனில் குடும்பக் கட்டமைப்புகள் வலுவானவையே. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் பழமைவாதிகளே. ஐம்பது, அறுபது வருடத் தாம்பத்தியத்தை மகிழ்வாகக் கொண்டாடுவார்கள்,” என்று குறிப்பிடுகிறார். மேலும் குடும்பங்களில் பிள்ளைகள் பெரிதானபின்,தனக்கான வேலையைத் தேடிக்கொண்டு, பெற்றோருக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் திருமணத்தை முடிப்பதும், இல்லையென்றால் அவர்களாகக் காதலித்து மணம் புரிந்து கொள்வதும், தனியே வீடு பார்த்து செட்டிலாகி விடுவதும் பிரித்தானியா சமூக வழக்கம். பிள்ளைகள் வெளியேறியபின், தாயும் தகப்பனும் தனியாக வீடுகளில் வாழ்வதும் உண்டு. அதற்காக அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, நம்ம ஊர் கலாச்சாரக் காவலர்கள் கத்துவது மாதிரியெல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு வாழ்வதும் பெற்ற பிள்ளைகளின் மீது பாசம் செலுத்தும் அதே மனித பெற்றோர்கள்தான்,” என்றும் குறிப்பிடுகிறார். சரியான கட்டுடைப்புச் செய்திகள் இவை. பெற்றோரை கட்டாயத்துக்கு ஆட்படுத்தும் பழக்கம் இங்கில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான்.என்றும் அறிவுறுத்துகிறார். அந்த நாட்டில் குழந்தைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றி நிறைய விவரிக்கிறார். இந்தச் சமூகத்தில் சில நயமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன ‘Yes Please’, ‘Thank you’, ‘Sorry’ ‘May I help you?’” போன்ற சொற்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, அதனால் அந்தச் சமூகம் எப்படிப் பயன்பெறுகிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறார்..

 

அந்த நாட்டில் 40 சதவீதம் பேர் நாத்திகர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். வெகு சாதாரணமாக நான் கடவுளை நம்பவில்லை’, ‘மதங்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லைஎன்று சொல்வார்கள்என்று குறிப்பிடுகிறார். பதட்டமாகக் கடந்த ஒரு நாள் இரவு பற்றியும் குறிப்பிடுகிறார்.

கோடைக்காலப் பயணங்கள், குளிர்காலப்பயணங்கள், இலக்கியப்பயணங்கள் என்று மூன்று பகுதியாகப் பிரித்துப் பயண அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். கோடைகாலத்தில் பார்த்த அரண்மனைகள், இடங்களைப் பற்றியும் விக்டோரியா மகாராணி, அவர் பெயரால் இருக்கும் தெரு என்று விவரித்திருக்கிறார். இங்கு செம்மறியாடுகள் என்றால் அறிவானவை என்று சொல்கிறார்கள்,” என்று செம்மறியாடுகளைப் பற்றிக் கூறுகின்றார். பார்த்த அருவிகள், மலையேற்றம் என்று பலவிதமான அனுபவங்களைப் பகிர்கின்றார். 

 

குளிர்காலத்தின் ரயில் பயணங்கள், சர்ச்சிலும் ராஜீவ்காந்தியும் என்னும் தலைப்பில் அமைந்த செய்திகள் போன்றவை ஈர்ப்பாக அமைந்துள்ளன. கடைசிப்பகுதியான இலக்கியப்பயணம் வாசிக்க மிகவும் ஈர்ப்பாக இருக்கிறது. புத்தகத் திருவிழா உரையில் பிரியா விஜயராகவன் பற்றி எழுதியிருக்கிறார். அவரின் அற்றவைகளால் நிரம்பியவள்என்னை மிகவும் பாதித்த நாவல். பல நாள் பேசவைத்த நாவல் அது. அதைப்போல கொடைமடம்எழுதிய தோழர் சாம்ராஜ் பற்றியும் எழுதியிருக்கிறார். மற்ற இலக்கிய ஆளுமைகளும். நிறைவாக லண்டன் இலக்கியப் பயணம் பற்றி எழுதியிருக்கிறார்.

 மொத்தத்தில் சில பக்கங்கள் தோழமை மொழியில் இருக்கிறது. சில பக்கங்கள் ஆசிரியர் மாணவர்களைக் கண்டிப்பதுபோல் இருக்கிறது. . “‘பேப்பரை வைத்து துடைப்பவர்கள்தானேஎன்ற மோசமான கருத்தையும் வாசித்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டு, அங்கு இருக்கும் சூழலை, தட்பவெப்ப நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கண்டிப்பும் கனிவும் கலந்து, வாசிப்பவருக்குப் புரிதல் ஏற்படுத்தும் மொழியாக இந்த நூலின் மொழி இருக்கிறது.

மொத்தத்தில் நாவலைப் போல விறுவிறுவென்று வாசித்து விட்டு தூக்கிப்போடும் நூல் அல்ல இது. வாசிக்கும்போதே, நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது. ஏன் நம் நாட்டில் இப்படி இருக்கிறது என்று சிந்திக்க வைக்கிறது. பெண்ணியம் குறித்த தோழர் அகிலாவின் கருத்துகள் செவிட்டில் அறைவதுபோல் இருக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைக் கோபத்தோடு சுட்டிக்காட்டுகிறார். கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இங்கு நடக்கும் கொடுமைகளை ஒப்பிடும்போது பிரிட்டனில் அப்படி இல்லை என்பதை ஒப்பிட்டு ஆதாரங்களோடு சொல்கின்றார்.

 

அடுத்து ஸ்காட்லாந்து பயணத்தைப் பற்றிய நூலும் வருகிறது என்று சொல்லியிருக்கிறார். எழுத்தாளர் தோழர் அகிலா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து எழுதுங்கள். இது ஒரு பெண்ணின் பயண நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது எழும் உணர்வுகளையும், எண்ணங்களையும் இணைத்துக் கொடுக்கப்பட்ட நூல். வாங்கிப் படியுங்கள். சிறப்பாக வெளியிடும் எம்ரால்டு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

 

**************************** 

 

Thursday, 6 March 2025

நெருப்புச்சிலிர்ப்புகள்...கவிஞர் ம.வீ.கனிமொழி

 அழகிய வடிவமைப்புடன் ,அமெரிக்காவில் இருக்கும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் 'நெருப்புச்சிலிர்ப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் தாயார் ,திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா வீரமர்த்தினி அவர்கள் இந்த நூலினை எனக்குத் தபாலில் அனுப்பிவைத்தார்.  நன்றிகள் அவருக்கு.இனி 'நெருப்புச் சிலிர்ப்புகள் ' நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை தங்களின் வாசிப்பிற்கு...










                                  அணிந்துரை

 

தோழர் ம.வீ. கனிமொழி அவர்களின் 60 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நூல் இந்த ‘நெருப்புச் சிலிர்ப்புகள் ‘. அவ்வப்போது தோழர் ம.வீ. கனிமொழியின் கவிதைகளை இணையத்தின் வழியாக வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது அப்போதே நான் இவரை வியந்து பார்த்திருக்கிறேன் உவமையை,படிமத்தை வெகு இயல்பாகத் தன் கவிதையில் நடமாட விடுவது மட்டுமல்ல, எவரும் சிந்திக்காத கோணத்தில் கருத்துக்களைக் கவிதைகளாக தரும் இவரின் ஆற்றல் எனக்கு வியப்பைத் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கவிஞரின் 60 கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கின்ற வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.முதலில் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

 தனக்குப் பிடித்ததை,தன் வாழ்வைத் தான் விரும்பியவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பெருவிருப்பம் உடையவர் இவர்..எதையும் நேரிடையாக எதிர்கொள்ளக் கூடியவர். பேசக்கூடியவர். அந்தத் தன்மை,தனித்தன்மை அவரின் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.

 
“காடோடிப்/பாடும் என்/ குரல் இறவா/புகழ் பெற்றது “ என்னும் இக்கவிஞர் நாடோடி வாழும் நிலையில் கவிதை பாடுகின்றார்.” எத்தனையோ /கவிதைகளில் /உலா வருகிறேன்” என்று காலம் கடந்தும் வாழப்போகும் தன் கவிதைகளின் வழியாக இறவாத் தன்மையை அடைவேன் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.படைப்புத்தானே ஒருவரின் பெயரை நிரந்தரமாக இந்த உலகில் நிறுவும் வழி.

 
தேடல் என்னும் கவிதை அத்தனை கவித்துவமாய் இருக்கிறது. ‘என் கவிதைக்கான/

ஒற்றைச் சொல்லை’ என்று முடியும் அந்தக் கவிதை ஒரு சிறுகதையின் முடிவைப் போல இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் “ அந்தி மாலை /வானத்தில் /தேடுகிறேன் / காலை நேரத்துக்/கதிர்களைத்/துழாவுகிறேன்…” என்று தொடரும் கவிதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்து நிறைவடைகிறது.

 
தனது கவிதை எப்போது கனமாகிறது என்பதைத் தனது கவிதையின் வழியாகவே தோழர் சொல்கின்றார்.” கட்டுக்கடங்காதச் /சினத்தின் போதும் “ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை “ ஒரு காகிதமும் /ஓர்  எழுதுகோலும் /போதுமாய் இருக்கிறது” என்று நின்று பின்பு தொடர்ந்து முடிவில் “லேசாகிறது /மனம்!/கனமாகிறது/கவிதை !” என்று முடிக்கின்றார்.நல்ல கவிதை.நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த அற்புதமான படிமங்களை இந்தக் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கிறார்.

 
புத்தாண்டு வாழ்த்துகளைக் கவிதை வழியாகத் தெரிவிக்கும் இவரின் கேள்விகள் நியாயமானவை.ஆராய்ச்சிக்கும் தீர்வுக்கும் உரியவை. “ஒரு பக்கம் / வாணவேடிக்கைகள் / மறுபுறம் அதிர்வேட்டுகள் /சத்தங்கள் /பால் சுரக்கும்/ காம்புகளை/ அறுத்துப் போடுகிறது” என இருவேறு உலகங்களாக இருக்கும் இந்தப் பூமியில் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் குரல் யாருக்கானது என்னும் கேள்வியை இந்தக் கவிதையின் வாயிலாக எழுப்புகிறார்.

 
“மரணத் தேதியை அறிந்தும்/எதிர்கொள்ளும்/அம்மனத்தின் போராட்டத்தை/நாளை எச்சொற்கள்/அடுத்த தலைமுறைக்குக்/கடத்தும்?”  எனக் ‘கல்லறைக் கனவுகள் ‘  என்னும் கவிதையில் கேள்வியை எழுப்புகிறார். அருகில் இருந்து பார்த்தவர்கள் அறிவார்கள்,அந்த உறவுகளின் மனப்போராட்டத்தை.மரணத் தேதியை அறிந்த பின்பும் அமைதியாக அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்க இந்த மாதிரியான கவிதைகள் பயன்படட்டும்.

 சங்க இலக்கியங்கள் பற்றிய கவிஞர் ம.வீ.கனிமொழியின் உரைகள் ,கேட்பவர்க்கு எப்போதும் வியப்பைத் தரும்.பொறியாளர் எப்படி சங்க இலக்கியங்களுக்குள்  இவ்வளவு ஆழ்ந்து ,தோய்ந்து உரை தருகிறார் என்று.’முத்தக் கொத்தல் ‘ என்னும் கவிதையில் காதலும் இருக்கிறது,ஊடலும் இருக்கிறது,சங்க இலக்கியமும் இருக்கிறது.இரசித்துப் படிக்கலாம்.ஆழமான அன்பை அளப்பதற்கான ஒரு வழியையும் தனது கவிதையின் வாயிலாகத் தோழர் ம.வீ.கனிமொழி கூறுகின்றார். இளையவர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் ‘ஆழம் ‘ என்னும் கவிதையினை வாசிப்பதன் மூலமாக.

இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘நெருப்பின் சிலிர்ப்புகள் ‘ என்னும் கவிதையில் “அத்தி மர நிழலைத்/தேடி அலைந்த காலம்/உண்டு/செர்ரி மரத்தின் நிழலில் /இன்று இளைப்பாறுகிறேன் “ என்று தனது இரண்டு வாழ்நிலை இடங்களைச் சுட்டிக் காட்டி “மரங்கள் /சமத்துவ விரும்பிகள் /அவை எப்படி/அஃறிணையாகும்?” என்னும் கேள்வியை எழுப்புகிறார்.சமத்துவம் விரும்பா மனிதர்கள்தானே அஃறிணைகள் என்பதைச்சுட்டும் இக்கவிதை மரங்கள் ஏன் நெருப்புச் சிலிர்ப்புகளை வீசுகின்றன என்பதனை கவித்துமாய்க் காட்டுகிறது.

 
ஏன் “ஒருபோதும் தனிமையை /என் உணர்வின்/படிமங்கள் கூட/உணர்வதில்லை” என்பதை ‘உணர்வின் படிமங்கள் ‘ என்னும் கவிதையில் முடிப்பதற்கு முன் குறிப்பிடுகின்றார்., “ஒற்றைக் குயில் /கூவிக் கொண்டிருக்கும்/வரை/மெல்லியத் தென்றல் /தீண்டும் வரை.. “ என்று வரிசையாக படிமங்களை நம் கண் முன்னே அக்கவிதையில் வரிசைப்படுத்துகிறார். வகைப்படுத்துகிறார்.அவர் சுட்டும் ஒவ்வொரு உவமையும் நம் கண் முன்னே காட்சியாக விரிந்து தன்னைப் படிமம் என்று சுட்டிக் காட்டுகிறது.அழகியலும் கருத்தும் ஒன்றை ஒன்று விஞ்ச போட்டியிடும் கவிதை இது.

 
கவிஞர் ம.வீ.கனிமொழி “ஓணான்-காகம்-தவளை- காதல்” கவிதை வழியாக்க் காதலை நன்றாகவே பகடி செய்கிறார்..’விந்தை மாதவள் ‘ என்னும் கவிதையில் தாய்மை –புனிதம் என்பதைக் கவிதையின் வழியே கட்டுடைப்பு செய்கின்றார்.” கடந்து பாருங்கள்/தெரியும்/கண்டங்கள் தாண்டும்/இன்பம்” என்று ‘’நிம்மதியின் சாயல் ‘கவிதையில்  நம் நாட்டில் பெண்களுக்கு நிகழும் துன்பங்களை கவிதையின் வழியே பட்டியலிடுகின்றார்.’பல்லி’ என்னும் தலைப்பில் கவிதையைப் படித்தபொழுது உவமைக் கவிஞர் ‘சுரதா’ எழுதிய ‘போலி உடும்பு ‘ என்னும் கவிதை நினைவுக்கு வந்தது.இரண்டு கவிதைகளுமே குறி சொல்லும் பல்லியைக் கேலி செய்யும் கவிதைகள்.இரண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு,நிறைய வேற்றுமைகளும் உண்டு.

 
இப்படி இக்கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிறப்பித்துச்சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன.தமிழ்க் கவிதை உலகில் தனக்கான பாணி,தனித்துவமான பாணி என்பதை நிருபிக்கும் வண்ணம் கவிஞர் ம.வீ.கனிமொழியின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கட்டாயம் ஆங்கிலத்தில் இதனைத் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் மொழிபெயர்க்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரின் வங்க மொழியில் தன் கவிதைகளை, நாவலை எழுதிப் பின் ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்ப்பதுபோல தோழர் ம.வீ.கனிமொழி அவர்களும் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும் என்பது  நம் விருப்பம்.ஆங்கிலத்திலும் அற்புதமாக பேசக்கூடிய,எழுதக்கூடிய தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள்.இரண்டு மொழிகளிலும் ஒன்று போல இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாகும்.

இத்தொகுப்பை நம் தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும். முழுமையாகப் படித்து தங்கள் கருத்துகளை இந்த நூல் ஆசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.தன் மனதில் உள்ள கருத்துகளை கவித்துவத்தோடும் துணிச்சலோடும் வெளிப்படுத்தும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தோடு ,அவருக்கு இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மென்மேலும் வளர்க! படைப்புகளால் இந்த உலகில் ம.வீ.கனிமொழியாக தாங்கள் என்றும் வாழ்க!

                       

 

மதுரை                                         தோழமையுடன்

 

05.10.2024                                             முனைவர் வா.நேரு,

                                                     தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு,

                                                       பெரியார் திடல்,சென்னை-600 007.




Monday, 17 February 2025

Thursday, 17 October 2024

‘திராவிடம் வென்றது ‘ ... இராம.வைரமுத்து

அன்பு இளவல் வழக்கறிஞர் இராம.வைரமுத்து அவர்கள் தனது முதல் கவிதை நூலினை எனக்கு அளித்தார்.மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டேன்.அருகில் பகுத்தறிவு ஊடகப்பிரிவின் மாநிலத்தலைவர் அய்யா மா.அழகிரிசாமி மற்றும் திராவிடர் கழகத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் அண்ணன் மதுரை வே.செல்வம் அவர்கள். 





அந்த நூலுக்கு நான் அளித்த வாழ்த்துரை கீழே..


முனைவர் வா.நேரு,

மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

பெரியார் திடல்சென்னை-7.

                     வாழ்த்துரை

திராவிடம் வென்றது ‘ என்னும் தலைப்பில் கவிதைத் திரட்டு நூலினை மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் அருமை உடன்பிறப்பு வழக்கறிஞர் இராம.வைரமுத்து i அவர்கள் ஆக்கி நமக்குத் தந்துள்ளார்கள்.இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள்விடுதலை,விடுதலை ஞாயிறுமலர்,உண்மை,திராவிட வாசிப்பு,கருஞ்சட்டைத் தமிழர் போன்ற இதழ்களில் வெளிவந்தவைமுதலில் பல இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒன்றிணைத்து ஒரு நூலாக ஆக்கித் தந்தமைக்குக் கவிஞர் இராம.வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நினைவுக் கொடை என்னும் தலைப்பிட்டு கன்னித்தமிழையும் கவிதைத் திறனையும் எனக்கு அளித்த அறிவுப் பேராசான் அன்புத் தலைவர் கலைஞருக்கு”  என்று தான் இந்தக் கவிதை நூல் தொடங்குகிறது மண்டபத்திற்குள்ளே சில புலவர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்டிருந்த கவியரங்கங்களைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்குள்ளே கவியரங்கங்களைத் தலைமையேற்று நடத்திய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.எள்ளலும் துள்ளலுமாய்,எதிரிகளைச் சுட்டிக்காட்டும் சிலேடைகளுமாய் இலக்கியச்சுவையைக் கற்பிக்கும் பாடசாலைகளாய் கவியரங்கங்களை மாற்றிய பெருமை கலைஞர் அவர்களுக்கு உண்டுஎனவே அவரின் நினைவுக்கொடையாக இந்த நூல் அமைந்திருப்பது மிக்கப் பொருத்தமானது.

இந்த நூலில் மொத்தம் 28 கவிதைகள் இருக்கின்றன திராவிட இயக்கம்  எழுத்தால், பேச்சால் அதன் விளைவாக எழுந்த எழுச்சியால்  வளர்ந்த இயக்கம். வாள் முனையை விடப் பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்த இயக்கம்.அதனை இந்தியத் துணைக்கண்டத்திற்கே உணர்த்திய இயக்கம் அந்த வகையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், அன்பு உடன்பிறப்பு  ராம. வைரமுத்து அவர்கள் எழுதுவதில் ,பேசுவதில் தனித்தன்மையோடு விளங்கக் கூடியவர். படிப்பவர்,கேட்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்,பேசுபவர். அந்த வகையில் இவருடைய இந்த்த் ‘திராவிடம் வென்றது’ என்னும் கவிதைத் திரட்டும் எளிமையாகவும் எவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் “ அன்று நீங்கள் ஏந்திய /  அந்தச் சுயமரியாதைத் தீப்பந்தம்/

எங்கள் கைகளில் ன்று- அது / என்றும் ஒளிரும் வென்று!”

என்று தந்தை பெரியாருக்கு இளைஞர் பட்டாளத்தின் சார்பாகக் கவிதை வழியாக உறுதி மொழியை அளிக்கின்றார் சுயமரியாதை  இயக்கத்தின் நூற்றாண்டு மட்டும் அல்ல, கலைஞர் அவர்களின் நூற்றாண்றைக்  கூட  இப்போதுதான் கொண்டாடி முடித்திருக்கிறோம்.

 தாழ்த்தப்பட்டோருக்கு அஞ்சல் வந்தால்/ தர மாட்டார் அவர் வீட்டில்/

ஊர் ஓர் மரக்கிளையில் கட்டி வைப்பார் அன்று /

அந்தச் சமுதாயத்தின் தகத்தகாயச் சூரியனை /

அஞ்சல் துறைக்கு அமைச்சராக்கினார் கலைஞர் வென்று “

என்று மிகச் சிறப்பாகப் பழைய வரலாற்றையும் இன்றைய ஆளுமையையும் இணைத்துக் கவிதையாக்கி கைகளில் கொடுத்திருக்கிறார்  இந்த நூல் ஆசிரியர்.

சிங்காரச் சென்னையின் சிற்பிநீ / ஆரியத்திற்குத் தோல்வியை கற்பிஎன்று  மார்ச் 2022-ல் எழுதி இருக்கிறார்மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் 40க்கும் 40ம் தோற்று ஆரியம் அழுது கொண்டிருக்கும் இந்த வேளையில் மிகப்பொருத்தமான கவிதையாக இந்தக்கவிதை அமைந்திருக்கிறது.

 தாத்தா பேரை எடுக்கணும் தம்பி என /

தமிழ்நாடு வாழ்த்துது உன்னை நம்பி

என்று இன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் அன்புத்தம்பி மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பற்றிய  கவிதையை அளித்திருக்கிறார். பெரியார் வழி செல்வதனால் / பெருமை என்ன கிடைக்குமென/

கேட்டுக் கேலி  செய்த கூட்டத்திற்கு/ லகிலேயே சிறந்த மனிதநேயர்”/ விருது கிடைக்கும் என்று காட்டினார்/ தந்தை பெரியார் கொள்கைகளை/ரணி எங்கும்  நிலை நாட்டினார்”  என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் போற்றிப் பாராட்டி ஒரு கவிதையை இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்.

 இயன்றவை அனைத்தும்/ இடைவிடாது செய்து/

 இயங்குதலே வாழ்க்கை என நிலைநாட்டி /

கழகத்திற்கு வழிகாட்டி/ தமிழ்நாட்டிற்கு ஒளிகூட்டி/

நாங்கள் திராவிடக் கூட்டம் என மார் தட்டி/

கலங்கரை விளக்கமாய்/ அறிவாசன் அய்யா சுப.வீ”  என்று அய்யா சுப.வீ . அவர்களைக் கவிமாலையால் பாராட்டி மகிழ்கின்றார். அதைப்போலவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,பேரறிஞர் அண்ணா, வி.பி.சிங்,அலைக்கற்றை நாயகன் என மானமிகு அய்யா ஆ.இராசா என்று பல தலைவர்களைப் பற்றிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட கவிதைகள் இருக்கின்றன 2001 தேர்தல் 2004 தேர்தல் என்று பல தேர்தலில் பற்றிய கவிதைகள் இருக்கின்றன.

மொத்தத்தில் வரலாற்றைச்சொல்லும் கவிதைகளாகவும்,வரலாறு படைத்த திராவிட இயக்கத்துத் தலைவர்களைப் பற்றியும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் சொல்லும் கவிதைகளாக அனைத்துக் கவிதைகளும் இருப்பது சிறப்பு.

திராவிடம் வென்றது ‘ என்னும் கவிதைத் திரட்டு  நூலினைக் கொடுத்திருக்கும் அன்பு உடன்பிறப்பு இராம.வைரமுத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்நமது தோழர்கள் இந்தக் கவிதை நூலினை வாங்கிப் படிக்கவேண்டும்பரப்ப வேண்டும்ஏனெனில் இது முழுக்க முழுக்கத் திராவிடத்தின் வெற்றியைச்சொல்லும் கவிதைத் தொகுப்பு,

தன்னுடைய முதல் கவிதை நூலினை வெளியிடும் கவிஞர் இராம.வைரமுத்து அவர்கள் இன்னும் இதனைப் போலப் பல கவிதை நூல்களை வெளியிடவேண்டும்.அதனைத் தமிழ் உலகம் வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும்.வாழ்த்துகளுடன்.

மதுரை                               தோழமையுடன்

25.08.2024 …                               வா.நேரு