Wednesday, 7 November 2018

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்......சுப்ரமணியன்.

            'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்.

முனைவர் வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் ' வாசித்தேன்.நேருவின் முதல் சிறுகதைத் தொகுதி என்று பார்த்தால் இன்னும் அநேக தொகுதிகள் வெளியிடுமளவு தேறிவிட்டார் என்றே தோன்றுகிறது.நேரு தன்னைச்சுற்றி நடப்பவைகளையும் ,மனிதர்களையுன் நன்கு கவனிக்கிறார் என்று அவர் கதைகளைப் படிக்கும்போது தெரிகிறது.ஒரே துறை என்று மட்டுமல்ல,பொதுவாகவும் அவரின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் சந்தித்த,பழகிய மனிதர்களாய் இருப்பது கதைகளைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாக இருக்கின்றன.கதாசிரியர் கவிஞரூம் கூட என்பதால் இப்படித் தலைப்புக்கள் அமைந்துள்ளன என்று நினைக்கிறேன்.


'சீரு சுமந்த சாதி சனம் ': மொய் செய்யும் பழக்கத்தை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார்.நமக்குச்செய்ததைத் திரும்பச் செய்யாவிட்டால் கேவலம்.அவமானம்.அதையும் நமக்கு வந்ததைக் காட்டிலும் கூடுதலாகச் செய்வதே கெளரவம் என்பது எழுதப்படாத விதி.அது எப்படி உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப்பிழிகிறது என்று உணர்வு பூரணமாகப் படைக்கிறார்.

'உயிர் ஈறும் வாளது ': ஒரு கனவுத் தொழிற்சங்கத் தலைவனை மாவட்டச்செயலாளர் மூலம் படைத்துள்ளார்.

'யார் யார் வாய் கேட்பினும்': விழிப்புணர்வு படைப்பு.படிக்கும்போதே முடிவை ஊகிக்க முடிந்தது.

'முட்டுச்சுவரு ': பெற்றோர்கள் தம் கனவுகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பதும் ,பிள்ளைகள் அதன் பாரம் தாங்காமல் தடம் புரளுவதுமான கதை.

'நெருப்பினுள் துஞ்சல்': புரோட்டாக் கடை நிகழ்வுகளை ஆசிரியர் விவரிப்பது அவரின் கூர்ந்து கவனித்து உள் வாங்கும் திறனை வெளிப்படுத்துகிறது.வாசிக்கும்போது நான் புரோட்டாக் கடையில் நிற்பதுபோலவே உணர்ந்தேன்.'இலவசம்,இலவசம்னு நாட்டைக் கெடுத்தாட்டங்க சார்,எதுவாக இருந்தாலும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது சார் " என்று மனோகரன் சொல்லும்போது மணியின் மனதிற்குள் "நீ பணக்காரனாகப் பிறந்திட்ட,உங்க அப்பா உனக்குக் கொடுப்பதெல்லாம் இலவசம் மாதிரிதானே.என்னைக்கு நீ உழச்சு ஒரு வாய் சோறு சாப்பிட்ட ' என்று பொறுமுவது முத்தாய்ப்பு.இலவசத்திற்கு இப்படி ஒரு முகம் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

உண்மையில் இலவசத்தை எதிர்ப்பவர்கள் அது தேவையில்லாதவர்கள்தாம் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.எனினும் ஆசிரியர் இலவசங்களை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.கல்வி,மருத்துவம்,வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு தானியங்களில் மானியம் என்பதைத் தவிர்த்து பிற அனைத்து இலவசங்களும் மக்களைச் சோம்பேறியாக்குகின்றன என்பதில் ஆசிரியர் உடன்பட வில்லையா ?

இந்தத் தொகுப்பிலேயே சிறுகதைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு மிகச்சிறப்பாக வந்திருப்பது 'அடி உதவுறது மாதிரி(?) ' என்ற கதைதான்.படிப்பு வராது என்ற மன நிலையில் இருந்த மதியை அவனின் அண்ணன் பேரின்பம் அடித்து நொறுக்க,அதைத் தடுத்த முத்து,மதிக்குப் புரியும்படியான மொழியில் நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை சொல்லி நேர்படுத்துகிறான்.ஆனால் பேரின்பமோ கதையில் முடிவில், தான் கொடுத்த அடியினால்தான் மதியின் படிப்பில் முன்னேற்றம் என முத்துவிடமே பெருமைப் பட்டுக்கொள்கிறான். இந்த இடத்தில் ஆங்கில சிறுகதை மன்னன் ஓ ஹென்றி நினைவுக்கு வருகிறார். அந்த அளவு மிகத் தரமான கதை.

வா.நேருவின் கதைகளில் பொதுவான அம்சம்,எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய சரளமான நடை.எழுத்தில் ஆடம்பரமோ தன் திறமையைப் பறை சாற்றும் பகட்டோ இல்லை.மற்றொரு அம்சம் சமூக அக்கறை.கதை மாந்தர்கள் அனைவரும் எளியவர்கள்,தேவைகள் அதிகமில்லாதவர்கள்.அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுபவர்கள்.

இப்புத்தகத்தை எடுத்தவுடன் நேரடியாகக் கதைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அணிந்துரை,விமர்சனங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டேன். காரணம் அவற்றின் தாக்கம் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இருக்கக்கூடாது என்பதால். இந்த நிமிடம் வரை அவற்றைப் படிக்கவில்லை.

புத்தக ஆக்கம்,வடிவமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.அச்சு இன்னும் தெளிவாக,வாசிக்க இலகுவாக இருந்திருக்கலாம்.

வா.நேரு தம் படைப்புகள் வழியாக சமூக நீதி,பகுத்தறிவு,முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றை கடத்துகிறார். அதனால் சில கதைகளில் பிரச்சார நெடி சற்று தூக்கலாக இருக்கின்றது.நேரு இன்னும் பரந்துபட்டு சிறகுகளை நன்கு விரித்து புதிய எல்லைகளைத் தொடவேண்டும்.

வாழ்த்துகள் !
சுப்ரமணியன்.

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம் -என்னும் இந்த விமர்சனத்தை எழுதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.எஸ்.சுப்ரமணியன் அவர்கள். அலுவலக நண்பர்களால் எஸ்.எஸ். என்று அழைக்கப்படுபவர். வாசிப்பினை வாழ்க்கையின் இன்னொரு மூச்சுவிடுதலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். நிறைய வாசித்தாலும் படைப்பில் ஆர்வம் காட்டாமல் வாசிப்பனுவத்திற்காகவே வாசிப்பவர். "சமீபத்தில் படித்தவை : சிவகாமியின் 'உயிர் ' நாவல்,எம்.வி.வெங்கட்ராமனின் 'பனிமுடி மீது ஒரு கண்ணகி' சிறுகதைத் தொகுதி,வண்ண நிலவனின் 'எம்.எல்.'நாவல்,அர்ஷியாவின் 'சொட்டாங்கல் 'நாவல்,வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல்' சிறுகதைத் தொகுதி ஆகியவற்றுடன் இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்  Markus Zusak எழுதிய ' The Book Thief ' நாவல். இது 2013-ல் திரைப்படமாகவும் வந்துள்ளது.அந்த படத்தையும் நான் பார்த்துள்ளேன். இவற்றுள் சிவகாமியின் 'உயிர்', அர்ஷியாவின் 'சொட்டாங்கல்',நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் 'ஆகியவை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் பகிர்ந்து கொள்கின்றேன் " என்று வாட்சப்பில் கொடுத்திருந்தார். அனுபவத்தை பகிர்ந்திருக்கும் அவருக்கு எனது உளப்பூர்வமான நன்றியும் மகிழ்ச்சியும்.......

Sunday, 4 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : கரும் பலகைக்கு அப்பால் ....கலகல வகுப்பறை சிவா

அண்மையில் படித்த புத்தகம் : கரும் பலகைக்கு அப்பால் ....
ஆசிரியர்                   : கலகல வகுப்பறை சிவா
வெளியீடு                  : நீலவால் குருவி ,சென்னை -24 பேச: 9442890626
முதல் பதிப்பு               : ஜனவரி 2018, 80 பக்கங்கள், விலை ரூ 70

                            இந்த வருடம் மதுரை புத்தகச்சந்தையில் வாங்கிய புத்தகம். இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா தனது முன்னோட்டத்தில் ' ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.உலகமெங்கும் ஆசிரியர்கள்,குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இப்படங்கள் வாயிலாக அறிய முடியும்.அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் நல்ல பலன்களைத்தரும் " எனக்குறிப்பிடுகின்றார். ஆமாம், தான் பார்த்த ,ரசித்த ஆசிரியர்கள்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 12 திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்தான் இந்தப் புத்தகம்.



                            கரும்பலகைக்கு அப்பால், தி இந்து தமிழ் பத்திரிக்கையில் வரும் தொடர் கட்டுரைத் தலைப்பு. 2011-ல் வெளியான "Beyond the Blackboard " என்னும் படத்தைப் பற்றியதுதான் முதல் கட்டுரை. இதுதான் புத்தகத்தின் தலைப்புக்கும் கூட.சில ஆசிரியர்கள், நானே கூட எனது கல்லூரிக் காலத்தில் சந்தித்ததுண்டு. கைகளில் நோட்ஸ்களோடு  வருவார்கள், வருகைப் பதிவேட்டை எடுப்பார்கள். பின்பு எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு 40,45 நிமிடம் கரும்பலகையில் எழுதி மட்டும் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். சில விளக்கங்கள் சொல்வார்கள், ஆனால் அது உருப்படியாக இருக்காது. இன்றைக்கும் பல ஆசிரியர்கள் அப்படி இருக்கக்கூடும்.பாடங்களைப் புரிவது, மாணவர்களைப் புரிவது, மாணவர்களின் வீட்டுச்சூழலைப் புரிவது எனப் பல புரிதல்களோடு வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரால் மட்டுமே , காலம் கடந்து நிற்கும் ஆசிரியராக நிற்கமுடியும். "டேசி பெஸ் என்ற ஆசிரியை தனது பள்ளி அனுபவங்கள் குறித்து எழுதிய 'Nobody Don't Love Nobody " என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மைச்சம்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " Beyond the Blackboard " என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கனவுகளோடு ஆசிரியராகப்போகும் டேசி பெஸ், எதார்த்தங்களால் உடைந்து போவதும், மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவதும் பின்பு சூழலை உள்வாங்கிக்கொண்டு மிகச்சிறந்த ஆசிரியராக, பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும், மாணவிகளும் நேசிக்கும் ஆசிரியராக எப்படி மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை என்பதனை நூலாசிரியர் குறிப்பிட்டு விவரிக்கின்றார்." இயல்பான கலந்துரையாடலே கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது " " வகுப்பறை மாற்றங்களை சந்திக்கும்போது சுற்றுப்புறமும் மாறுகிறது " (பக்கம் 12), "ஆசிரியர் என்ற பெருமிதத்தை பார்ப்பவர்க்கும் வழங்குவதே, Beyond the Blackboard "  திரைப்படம் எனக்குறிப்பிடுகின்றார்.

                      குறைபாடு உள்ள பிராட் என்னும் குழந்தை , பின்பு அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் விளக்கி, அந்தக் குறைபாட்டை வைத்துக்கொண்டே படித்து பின்பு  மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி மாறுகின்றார் என்பதனை விளக்கும் ஆங்கில மொழியில் வந்த " Front of the Class " என்னும் திரைப்படத்தை அடுத்த கட்டுரை விவரிக்கின்றது. "குழந்தைகளிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்த தெளிவான அறிதல்கள் ஆசிரியருக்கு மிகவும் அவசியம்" பக்கம் 17 ...இதனை ஆசிரியர்களின் ஓய்வறையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் எழுதி வைக்கலாம்.

                    நமது அண்டை மாநிலமான கேராளாவில் சமூக அக்கறையோடு கூடிய பல படங்கள் பல காலமாக எடுக்கப்படுகின்றன. (தமிழில் அப்படியான போக்கு இப்போதுதான் காணப்படுகின்றது. அது மகிழ்ச்சியே ).மலையாள மொழியில் 2012 எடுக்கப்பட்ட " Last Bench " என்னும் படம் பற்றியது அடுத்த கட்டுரை. " ஆசிரியர்களும்,பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமல்லாமல் முன் மாதிரியாக இருக்கவேண்டும் .(பக்கம் 28 ).என்பதனை கடைசி பெஞ்சின் படிக்காத மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றியது. 

               சீன மொழியில் 1999-ல் எடுக்கப்பட்ட " Not One Less "   என்னும் திரைப்படம், 2016-ல் இந்தியில் வந்த " Chalk n duster " என்னும் திரைப்படம்,1984-ல் ஆங்கில மொழியில் வந்த "Teachers " என்னும் திரைப்படம்,'அறிவுக்கு நிறம் இல்லை என்பதனை அழுத்தமாகச்சொல்லும்- 2007-ல் வெளிவந்த " The Great Debaters " என்னும் திரைப்படம், 2004-ல் கொரிய மொழியில் வெளிவந்த " Lovely Rivals " என்னும் திரைப்படம், 1981-ல் அமெரிக்காவில் வெளிவந்த " The Marva Collins Story " ,2005-ல் ஆங்கில மொழியில் வெளியான "School of Life " ,1989-ல் ஆங்கிலத்தில் அமெரிக்காவில்  வெளியான "Lean on Me " ,றைவாக அமெரிக்கக் கல்வி பற்றிய 2010-ஆம் ஆண்டு ஆவணப்படமான  " Waiting for Superman " என்னும் படத்தைப் பற்றிய கட்டுரையோடு புத்தகம் முடிகின்றது.

             ஒவ்வொரு திரைப்படத்தினையும் தன்னுடைய ஆசிரியர் அனுபவத்தோடு இணைத்து, இன்றைய சூழலில் இருக்கும் சமூகச்சூழலையும் சுட்டிக்காட்டி இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கின்றார்.பாராட்டுக்குரிய பணி. பின்லாந்து நாடு முன்னேறியதற்குக் காரணம் அதனுடைய கல்வி முறைதான் என்று மாற்றி மாற்றி கட்செவியில் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. கடவுளைப் பற்றிக் கவலைப்படாத பின்லாந்து நாடு, மிகத்தீவிரமாக கல்வி பற்றிக்கவலைப்படுகின்றது. நமது நாடு அதற்கு நேர் எதிராக கடவுள்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு, கல்வியை பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றது. ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. சாதிகளால், மதங்களால்,சுய நலமிக்க அரசியல்வாதிகளால் பிளவுண்டு கிடக்கும் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி கல்வியே. கல்விக்கூடங்களையும்,கல்வியையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப்புத்தகத்தைப் படித்தவுடன் கல்லூரியில் படிக்கும் எனது மகன் ,இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டான். " அப்பா, கணினியில் எடுத்துவைத்திருக்கிறேன், நீங்களும் பாருங்கள் " என்று சொல்லியிருக்கிறான்.பார்க்க வேண்டும்.

           எனது முன்னாள் தலைமை ஆசிரியர் ,திரு.வீ.வீரி(செட்டி) அவர்கள் இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டு ," எல்லா வாத்தியார்களும் இதனைக் கட்டாயம் படிக்கவேண்டும்.படிக்கவேண்டும் " என்றார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக,தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அவர் சொன்னதை நானும் வழிமொழிகின்றேன் " ஆசிரியர்களாக இருப்பவர்கள், இருக்க விருப்பபடுபவர்கள்,பெற்றோர்கள் " கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். 

Wednesday, 31 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று ...க.வி.இலக்கியா

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று
ஆசிரியர்                   : க.வி.இலக்கியா
பதிப்பகம்                  : விடியல் பதிப்பகம்
முதல் பதிப்பு              : 2016, 60 பக்கங்கள்,விலை ரூ 60

                              சென்ற சனிக்கிழமை 27.10.2018 மாலை,தூத்துக்குடி ஏ.பி.சி. கல்லூரிக்கு முன்னால் உள்ள பெரியார் மையத்தில் உண்மை வாசகர் வட்டம் சிறப்புக்கூட்டம். தூத்துக்குடி மண்டலச்செயலாளர் மானமிகு அய்யா பால்.இராசேந்திரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'திராவிட இயக்க சிந்தனைகள் ' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். சனிக்கிழமை இரவு அங்கு முடித்து விட்டு தூத்துக்குடி-கோவை துரித வண்டியில் பயணம் செய்து ,மறு நாள் (28.10.2018) காலை பொள்ளாச்சியில் த.மு.க.எ.சங்கத்தின் சார்பாக தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். வரவேற்புரையில் ஆரம்பித்து நன்றியுரைவரை ஒவ்வொருவரும் முத்திரை பதித்த நிகழ்வு(விரிவாக எழுத நினைத்திருக்கின்றேன்). வாசகன் வைரமுத்து அவர்கள் 'பரியேறும் பெருமாள் ' திரைப்படம் பற்றியும், தோழர் கலைக்கோவன் அவர்கள் எனது முதல் சிறுகதைத்தொகுப்பான 'நெருப்பினுள் துஞ்சல் 'பற்றியும் ,அடுத்து மெளனம் ரமேசு அவர்கள் 'நானும் ஆட்டத்தில் இருக்கேன்' என்னும் கவிதைத் தொகுப்பு பற்றியும் விமர்சனம் செய்தார்கள். தோழர் கலைக்கோவனின் விமர்சனம் மிக சிறப்பாக, சிறுகதைகளையும் அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளையும் இணைத்து அருமையாக அமைந்தது.



                          நிகழ்வு முடியும் நேரத்தில் நான் பேசலாமா எனக் கேட்டு ஒரு பெண் பேச ஆரம்பித்தார். உள்ளத்தில் இருந்தும், கோபமாகவும் அவரது உரை இருந்தது,தெளிவாகப் பேசினார், ஆனால் சமூக நீதி பற்றியோ,உண்மையான பெண் விடுதலை பற்றியோ,சாதிக்கொடுமைகள் பற்றியோ முழு புரிதல் இல்லாமல் இருப்பதாக இருந்தது. அவரது கேள்விகளுக்கு தோழர் கலைக்கோவன் நன்றாக விளக்கம் அளித்தார். நான் தந்தை பெரியாரை, அம்பேத்கரைப் படியுங்கள் என்றேன். நான் அதனைச்சொன்னவுடன் அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. பெரியாரை நான் படித்திருக்கின்றேன்.அம்பேத்கரை படிக்கின்றேன். கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல், பெரியாரைப் படியுங்கள், அம்பேத்கரைப் படியுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டார். பின்பு கூட்டம் முடிந்து கீழே இறங்கும்போது,தூத்துக்குடி கூட்டத்திற்கு போகும்போது படிப்பதற்க்காக நான் கொண்டு சென்ற 'பெண் விடுதலை இன்று 'என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்து ,இதனைப் படியுங்கள், நன்றாக இருக்கிறது, உங்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்று சொல்லி எனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு வந்தேன்.

                            இன்று 31.10.2018 தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த தோழியர் ,தோழர் மிக்க நன்றி. அந்தப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டேன். இந்தப்புத்தகத்தைப் படித்தபின்பு எனது பார்வை முழுவதுமாக மாறியிருக்கிறது. ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. நீங்கள் கொடுத்த புத்தகம் பற்றி பேஸ்புக்கிலும் எழுதியிருக்கின்றேன் என்றார். அவரது அனுமதியோடு அவரது புத்தக விமர்சனத்தை அப்படியே கீழே கொடுத்திருக்கின்றேன்.பேஸ்புக்கில் "முகில் நிலா தமிழ் " என்னும் பெயரில் அவர் எழுதியிருப்பது

"இன்று வாசித்த நூல். இந்நூலின் ஆசிரியர் க.வி. இலக்கியா.. பெண் விடுதலை இன்று என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை நூல் இது.

இந்நூல் பொருளாக்கம், பண்டமாக்குதல், என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்கிறது..

பொருளாக்கத்தில்
கலாச்சாரப்பொருளாக்கம், சுயபொருளாக்கம், பாலியல் பொருளாக்கம் என்னும் மூன்று கூறுகளை உள்ளடக்கி அலசி ஆய்கிறது...!

கலாச்சாரப்பொருளாக்கம்

இத்தலைப்பினை அடியொட்டி குறிப்பிடப்படுபவற்றில் மிக முக்கியமாய் நான் கருதுவது " மதங்களும்.,சாதிகளுமே பெண்ணை அடிமையாக்கிய முதல் காரணி என்பதே"

இந்ததலைப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மனுதர்மம் பெண்ணை மனுசியாககூட கருதவில்லை என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுக்காட்டுகிறார்...

பார்ப்பானிய கோட்பாடுகளான பிரதிலோமா, அனுலோமா, பித்ர சவர்ணயா,மத்ர சவரணயா முறைகளின் மூலம் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை விவரிக்கும் ஆசிரியர்

பெரியார் கோரிய பெண் உரிமைகளனெ மணவிலக்கு, கல்யாண விடுதலை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுப்பு, சுயமரியாதைத் திருமணம், சொத்துரிமை ஆகியவை பெண்களை விடுதலை செய்வது மட்டுமல்லாது, சாதியக்கட்டமைப்பையும் அசைத்துப்பார்க்கும் என்ற நம்பிக்கை பற்றியும் அது இன்று நடவாமல் போனதற்கான காரணிகள் குறித்தும் விவரிக்கிறார்...

அதில் தாழ்ந்த சாதியை சார்ந்த வாரிசுகள் உயர்சாதியில் ஊடுருவாமல் தடுக்கவே கெளவரவக்கொலைகள் நிகழ்த்தப்படுகிறதென்ற நிதர்சனத்தையும் முன் வைக்கிறார்..

சுயபொருளாக்கம்
என்னும் தலைப்பின் கீழ். பெண்களின் ஆடை,அணிகலன், சொத்துசேர்த்தல் ஆகிய காரணிகளால் பெண் படித்தும் இன்றும் வீட்டைவிட்டுமட்டுமே வெளிவந்திருக்கிறாள் என்பதையும். பொருளாதார சுரண்டலுக்கு அப்பெண்ணே அதீத காரணியாகிறாள் என்பதையும் விளக்கிக்கூறுகிறார்

ஆணாதிக்கத்திலிருந்து மீண்டும் தனக்குதானே விலங்குகளைப் பொறுத்திக்கொண்டு பெரும் சுமைதாங்கியாய் அவள் வாழ்கிறாள் என்ற நிதர்சனத்தை முகத்தில் அறையும்படி விளக்குகிறார்

சமூக வேறுபாடுகளை உருவாக்குவதில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிமுக்கிய காரணியாவதை வருத்தத்தோடு தெரிவிக்கிறார்...
தனிவுடமைக்கு எப்படி பொதுநலனை பாதிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குறார்..

பாலியல் பொருளாக்கம்

என்னும் தலைப்பின் கீழ்

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதில்லை என்பதையும்., அதன் பின்னனியில் இருக்கும் சமூக வன்முறைகளான வறுமை, வேலையின்மை, பொருளாதார நிலையின்மை, பெரும் அளவிலான மக்களின் இடப்பெயர்வு, சமூக விழுமியச் சீரழிவு, அந்நியமாதல், அதிகரிக்கும் குடிப்பழக்கம், இயற்கை பேரழிவுகள், பாலியல் வன்முறைகள், அதிகரிக்கும் உடல்-உளம் சார்ந்த நோய்கள், கையறுந்த நிலையில் வாழ்க்கை, செயலற்றுக் கிடக்கும் அரசு இயந்திரம் என மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் சமூகக்கட்டமைப்பின் உருக்குலைவே காரணியென்கிறார்..

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில் இருந்து விலகி அது ஒரு சமூக நோய் என்ற கண்ணோட்டத்தில் பார்வியடச் சொல்கிறார்...

அடுத்ததாக
பண்டமாக்குதல்

அடிப்படைத்தேவைகளான உணவு, உடை ,இருப்பிடம் ஆகியவை பண்டமாக்குதலில் நுகர்வியமாகவும், தனிச்சொத்தாகவும் மாறியதால் இந்த பண்டமாக்குதலை சுற்றயே கல்வி,வேலைவாய்ப்பு, திருமணம், குடும்பம், உடல்நலம், அரசியல், மொழி, தேசியம், கலாச்சாரம், மதம், விழுமியம்,அறிவியல் என அனைத்தும் பின்னப்பட்டுள்ளதை விவரிக்கிறார்.

காரல்மார்க்ஸ், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களை மூலமாக்கி இக்கட்டுரையை எல்லோருக்கும் புரியும்வண்ணம் எழுதியுள்ள ஆசிரியர் க.வி.இலக்கியா அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

இந்நூல் வாசிப்பின் மூலம் சமூகத்தோடான எனது அணுகுமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

இந்நூல் என் கரங்களுக்கு வரக்காரணியான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டமும், அதில் நான் பேசிய தத்துபித்து உளர்களும், அதற்கு வாய்ப்பளித்த பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்...

இதை வாசியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடைகிடைக்குமென எனக்குக் கொடுத்த வா.நேரு அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்

பெண் விடுதலை என்பது சமூகவிடுதலையும் சேர்ந்ததுதான் என்பதையும்.. சமூக நோய்களுக்கு தீர்வு காணாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதையும். இன்பமும்,திருப்தியுமாய் வாழ்வதற்கான வழிகளை உண்டாக்க வேண்டியது பெண்களுக்கும் கடமை என்பதையும் அறிந்துகொண்டேன்."

         நான் இந்த வாரம் இந்தப் புத்தகத்தைப் பற்றித்தான் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் முகில் நிலா தமிழ் புத்தகத்தை முழுமையாக வாசித்து ,உள்வாங்கி எழுதியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் க.வி.இலக்கியா அவர்களுக்குப் பாராட்டுகள். 'பெண் விடுதலை இன்று' என்னும் தலைப்பில் உள்ள இந்தப்புத்தகம் இன்றைய சூழலை, பெண் விடுதலையை தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர்,காரல்மார்க்ஸ் கருத்துக்களின் மேற்கோள்களோடு கொடுக்கப்பட்டுள்ள புத்தகம். படித்துப்பாருங்கள். படிக்கச்சொல்லுங்கள்.  

Sunday, 21 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை...பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)....

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை
நூல் ஆசிரியர்              : பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)
தமிழில் மொழி பெயர்ப்பாளர் : தேசிகப்பிள்ளை
வெளியீடு                  : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல்,சென்னை-7
                            தொலைபேசி எண்: 044-26618163
முதல் பதிப்பு               : 1967 (சிந்தனை பதிப்பகம்) ,இரண்டாம் பதிப்பு 2014
மொத்த பக்கங்கள்           :68 விலை ரூ 35



                            இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்தியக் குடிசை என்னும் தலைப்பிற்கு கீழ் (224 ஆண்டுகளுக்கு முன்பு ரூசோவின் மாணவர் 1790-ல் எழுதிய இந்திய சமூகம் பற்றிய புதினம்) என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.அடுத்து சிந்தனைப் பதிப்பகம் வெளியிட்ட அட்டைப்படம். அதற்குப் பின்னால் பெர்னார்தன் தெ சென்பியர் பற்றிய அறிமுகம்.பெர்னர்தன் தே சேன்பியர்(Bernardin de Saint -Pierre) பிரெஞ்சு நாட்டின் புகழ் மிக்க எழுத்தாளர்.பொறியியல் வல்லுநர்.இயற்கை விஞ்ஞானி;பகுத்தறிவாளர், நூலாசிரியர்....கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

பதிப்புரையினை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்திருக்கின்றார்.அவர் தனது பதிப்புரையில் "இந்தியத் துணைக்கண்டத்தின் சமுதாயச்சீரழிவிற்கு மூல முதற்காரணம் பார்ப்பனியம் என்பதை புத்தரில் தொடங்கி இராமலிங்கர் வரை பலர் நீண்ட காலந்தொட்டு வெளிப்படுத்தி வந்துள்ளனர்.....இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் நமக்குப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு நாட்டுக்காரர் எழுதிய இந்த புதினம்(நாவல்) ஏராளமான செய்திகளைத் தருகிறது.....இந்நூலை இந்த தலைமுறைக்கு வெளிச்சமூட்டும் வகையில் பெரியார் ஆவணக்காப்பகம் வெளியிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்தப்புத்தகம். 

                              இந்தப் புத்தகத்தினை நான் இரண்டு மூன்று முறை வாசித்திருந்தாலும் கூட ,மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அ.முருகானந்தம் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி மிகச்சிறப்பாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.பத்தாம் வகுப்புத்தான் படித்தவர் என்றாலும் கூட உலக அனுபவத்தோடு இணைத்து அவர் சொன்ன விதம் எனக்கு மிக ஈர்ப்பாக இருந்தது. அவரது மொழியிலேயே இனி இந்தப் புத்தகத்தின் கதை  பற்றி....                                      

"ஆங்கில நாட்டில் ஆங்கில எழுத்தாளர்கள் சங்கம் என்று ஒன்று இருக்கிறது. நமது நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருப்பதுபோல. அதில் இருக்கும்  20 மெம்பர்கள் உலகம் முழுவதும் போகின்றார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்கு பண உதவி செய்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் போய் ஆய்வு செய்வதுதான் நோக்கம்.ஒவ்வொருவர் கையிலும் 3500 கேள்விகள். அதற்கு அவர்கள் பதில் பெற வேண்டும். அதன் மூலம் உண்மை அறிய வேண்டும். அதில் ஒருவர், ஒரு பண்டிதர்  இந்தியாவிற்கு வருகின்றார். அவர் எடுத்தவுடன் இந்தியாவிற்கு வரவில்லை .முதலில் ஆலந்து நாடு, பின்பு பிரான்ஸ் நாடு, துருக்கி,எகிப்து அரபு நாட்டிற்கெல்லாம் சென்றுவிட்டு கடைசியில் இந்தியாவில் இருக்கும் .காசி நகரத்திற்கு வருகின்றார். அங்கு ஒரு இடத்தில் தங்குகின்றார்.அங்கு இருக்கும் அந்தணர்களோடு கலந்து உரையாடுகின்றார். அவர் இதுவரை சேமித்த ஆவணங்கள் மலைப்பை உண்டாக்குகின்றன.  90 சாக்குகளில் எடுத்து வந்த ஆவணங்கள் ஏறத்தாழ  9550 பவுண்டுகள் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு கொண்டுவந்தும் இதில் உண்மை இருக்கிறதா,இல்லையே என்பது அவருக்கு சோர்வைத் தருகின்றது. 

ஆவணங்களில் நிறைய தகவல்கள் இருக்கு.வரலாறுகள்,சிற்பங்கள்,ஆறுகள், தத்துவங்கள் என எல்லாவற்றைப்பற்றியும் தகவல்கள் எல்லாம் இருக்கு ஆனா எல்லாமே  முரண்படுது. உலகத்தில் எதுவுமே உண்மை இல்லையோ என்று நினைக்கின்றார். முரண்பாடுகளின் குப்பையாக தகவல்கள் இருக்கின்றதே எனப் பார்க்கின்றார். ஒரு நாட்டில் ஒரு மதம் என்று சொல்கிறான்.ஆனால் உண்மை இல்லை.இரண்டு மனிதர்கள் இருக்கிறாங்கே..அவர்களிடம் ஒற்றுமை இல்லை..எல்லாமே தவறா? ...எல்லோமே குப்பையா எனும் கேள்வி குடைகின்றது ...3500 கேள்விகள் கொண்டுவந்தால் கிட்டத்தட்ட 17500 பதில்கள். ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. ஒரு கேள்விக்கு 5 பதில்கள்...இதைக்  கொண்டுபோய் இலண்டனில் கொடுத்தால், எத்தனை பேர் வேலையை கெடுப்பது அவர்கள் வேலையைக் கெடுத்து .இந்தப் பண்டிதரைப் போல இன்னும் 19 பேர் இருக்காங்களே..அப்ப எவ்வளவு தீர்வுகள்... 3.5 இலட்சம் பிரச்சனைகள். இந்தப்பிரச்சனைகளுக்கு யாரிடம் தீர்வு கேட்பது ....என்று காசியில் உட்கார்ந்து அந்தப் பண்டிதர் புலம்புகின்றார். அப்போ அந்தக் காசியில் இருக்கும் இரண்டு அந்தணர்கள்,  அவர்கள் சொல்கிறார்கள். எங்க நாட்டிலே, ஒரிசா கோவிலில் இருக்கும் தலைமை.அந்தணர் பெரிய அறிவாளி-அவருகிட்டே கேள்விகேட்டா உங்கள் சந்தேகமெல்லாம்  தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள்...

உடனே அந்தப் பண்டிதர் இந்திய நாட்டில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கான சங்கத்தை அணுகுகின்றார். அவர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்து தருகின்றனர். அப்ப எல்லாமே நடைதான்.கார்,பஸ் எல்லாம் கிடையாது. நடக்க முடியவில்லையென்றால் பல்லக்கில் தூக்கிப்போவார்கள். அந்தப் பண்டிதர் போகும்  பல்லாக்கைத் தூக்கிட்டு போக 4 பேர். மாத்து கைக்கு 4 பேர். காசியிலிருந்து கல்கத்தா போய், கல்கத்தாவிலிருந்து ஒரிசாவில் இருக்கும் அந்தப் பூரி ஜெகனாதர் கோவிலுக்குப் பல்லாக்கிலே போகின்றார். 11-வது நாள்தான் போய்ச்சேருகின்றார். பல்லக்குத் தூக்க ஆள்,சமைக்க ஆள், ஒட்டகம், 25 பேருக்கு மேல் ஆட்கள் எனப் படையோடு போவது போல போகின்றார். அங்கே போனா அவ்வளவு எளிதாக அந்த தலைமை அந்தணரைப் பார்க்க முடியவில்லை.நீ பேண்ட் சர்ட்.போட்டு வந்திருக்க..சூ போட்டிருக்க .பரங்கி இனத்தை சேர்ந்தவன். உன்னை நாங்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கின்றார்கள்.எப்படியாவது நான் அவரைப் பாக்கணும்ன்னு பண்டிதர் கெஞ்சுகின்றார்.அப்ப எல்லாத்தையும் கழட்டு..நாங்க சொல்ற மாதிரி உடையை உடித்திக்கிட்டு உள்ளே வா என்று சொல்ல ஆடையை மாத்திக்கிட்டு ,காவி வேட்டியைக் கட்டிக்கிட்டு உள்ளே போகின்றார். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னாலேயே அவரை உட்காரவைத்து விடுகின்றார்கள். எங்க நாட்ல் அந்தணர்க்கு முன்னால் எவ்வளவு எவ்வளவு தூரத்தல ஒவ்வொருத்தரும் உட்காரணும்ன்னு நடைமுறை இருக்கு, அதனாலே நீ அப்பாலே உட்காரு என்று சொன்னவுடன் அந்தப் பண்டிதர் .குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உட்கார்கின்றார்.

தலைமை அந்தணர்க்கு இருக்கும் வசதி நம்ம நாட்ல மன்னருக்குக் கூடக்கிடையாதே என்று பண்டிதர் நினைக்கும் அளவிற்கு அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள்.தலைமை அந்தணருக்கும் இந்தப் பண்டிதருக்கும் இடையில் திரைகள் இருக்கு. ஆனாலும் பண்டிதருக்கு எப்படியாவது உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலைமை அந்தணரிடம் கேள்விகளைக் கேட்கின்றார். முதல் கேள்வி உலகில் எல்லாமே பொய்யாத் தெரியது. அப்ப, உண்மையை எந்த வழியாக அறிந்து கொள்வது ? பதில்: அந்தணர்கள் வழியாகத்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.அடுத்த கேள்வி : .உண்மையை எங்கே போய்த்தேட முடியும் ? பதில் : வேதங்களில்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் அது அந்தணர்களுக்குத்தான் தெரியும்.சரி, கேட்ட பதிலை  யார் கிட்ட சொல்றது? பதில் : யார் கிட்டேயும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உண்மையை தெரிவிக்காத கடவுள் குற்றவாளிதானே ? என்று பண்டிதர் கேள்வி கேட்கின்றார் பதில் இல்லை,பேசாம இருக்கின்றார்கள்.யார் கிட்டேயும் சொல்லாமல் மறைத்து வைத்துத்திருக்கிற அந்தணர்கள் குற்றவாளிகள்தானே என்று கேட்க பண்டிதரை அடிக்க அந்தணர்கள் பாய்கின்றார்கள். தாக்கப்பாய்கின்றார்கள்.குழப்பம் ஏற்படுகின்றது.உடனே தலைமை அந்தணர் பண்டிதரை வெளியேறச்சொல்கின்றார்.

இரவு ஆகிவிட்டது. இப்போது இந்த இருட்டில் எங்கே போவது. இரவில் தங்கி பகலில் போகிறேன் என்று சொல்கின்றார். இல்லை நீ மிலேச்சன். கோயிலுக்கு அருகில் நீ தங்கக்கூடாது என்று சொல்கின்றார்கள். விதிப்படி தங்கக்கூடாது என்று சொன்னதால் பண்டிதர் கிளம்பி விடுகின்றார். அப்போது மின்சாரம் கிடையாது. இரவோடு இரவா மறுபடியும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல்லக்கில் அவரை உட்காரவைத்து தூக்கிச்செல்கின்றார்கள். போகும் வழியில் பயங்கர மழை...இடி மின்னல்...சூறாவளிக்காற்று .... ஒதுங்க எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று பார்க்கின்றார்கள். பாதுகாப்பான ஒரு இடம் போலத்தெரிய அடர்ந்த செடி,கொடிகளை அகற்றி விட்டு..ஒரு பாறைக்குக் கீழே போறாங்க .அதற்கு கீழே ஒரு சமவெளி இருக்கு . விளக்கு தெரியுது ...ஆள் நடமாட்டம் இருக்கிற.மாதிரி இருக்கு தூரத்திலே..சரி அங்கே போனா இந்த மழைக்குத் தப்பிக்கலாம் என்று எண்ணி நிற்கின்றார்கள். தூரத்தில் இருக்கும் நிலைமையைப் பார்த்துவர பல்லாக்கு தூக்கி ஒருத்தன் போறான்.

போனவன் திடுத்திடுவென அலறி அடிச்சுடிக்கிட்டு வர்றான். ஏதோ மிருகம்தான் இருக்கு போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு பண்டிதர் துப்பாக்கியை தயார் செய்கின்றார். ஓடி வந்தவன் 'அய்யோ, அங்கே பறையன் இருக்கான், பறையன் இருக்கான், குடும்பத்தோடு இருக்கிறான் " என்று அலறுகின்றான். பண்டிதன் கேட்கிறான் ' பறையன் என்றால் யார்? அவனும் மனுசன் தானே,அவனும் இந்தியன்தானே ' என்று கேட்கின்றான். ஆமாம், அவனும் இந்தியன்தான், ஆனால் அவன் பார்க்கக்கூடாதவன், தீண்டப்படதகாதவன் என்று சொல்கின்றான். அவனைத் தொட்டால் ஒன்பது  பிறவி அளவிற்கு எந்தக்கோவிலுக்குள்ளும் போகக்கூடாது . அவனைத்தொட்டால் அந்தப்பாவத்தை போக்க ஒன்பது தடவை கங்கையில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அந்தணர் கொடுக்க ,தலையில் இருந்து கால்வரைக்கும் மாட்டு மூத்திரத்தை வைத்து கழுவிக் குளிக்க வேண்டும்" என்று பலவிதமாகச்சொல்கின்றான். நாம் அங்கு போகக்கூடாது என்று அனைவரும் சொல்கின்றார்கள். ஆனால் பண்டிதர் நான் போகின்றேன் என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் தன்னந்தனியாக அந்த குடிசை இருக்கும் இடத்தை நோக்கிப்போகின்றார். 

அங்கே குடிசையில் இருக்கும் மனிதரைப் பார்க்கின்றார். பண்டிதரைப் பார்த்து பயப்படுகின்றான். நான் விருந்தினரை உபசரிக்கும் தகுதியில்லாதவன் என்று சொல்கின்றார். பண்டிதர் மறுத்து அவனோடு இணக்கமாகப் பேசுகின்றார்.அந்த குடிசை மனிதன் மிகச்சிறப்பாக .பழங்கள்,சாப்பாடு எல்லாவற்றையும் அளித்து அவனது மனைவி பரிமாற சாப்பிடச்செய்கின்றான். இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இரவு கட்டிலைக் கொடுத்து பண்டிதரைப் படுக்கச்சொல்ல நன்றாக உறங்கி விடுகின்றார். காலையில் பார்த்தால் குடிசை மனிதனும் அவனது மனைவியும் இடம் இல்லாமல் ஓரமாக உட்கார்ந்திருக்கின்றார்கள். அவர்களின் பெருந்தன்மையையும்விருந்து உபசரிப்பையும் பார்த்து வியக்கின்றார். பின்பு குடிசை மனிதனோடு பண்டிதர் பேச ஆரம்பிக்கின்றார். 

.உண்மையை எங்கே தேடுவது என்ற கேள்வியை பண்டிதர் கேட்க , குடிசைவாசி  நான் படிக்காதவன். உண்மையை அறிவைக் கொண்டு தேடாதே .நல்ல உள்ளத்தோடு தேடு. அறிவு உணர்ச்சி வசப்படும். ஆனால் நல்ல உள்ளம் அப்படி உணர்ச்சி வசப்படாது..நல்ல எண்ணத்தோடு கேள்.நல்ல உள்ளத்தோடு தேடு. உண்மை கிடைக்குமென்று சொல்கின்றார். உண்மையை ..எங்கே தேடுறது.?...இயற்கையில்தான் தேடவேண்டும். இயற்கை மட்டும்தான் உண்மை.நீ சாக்கு சாக்காக வைத்திருப்பது எல்லாம் பொய். முரண்களால் ஆக்கப்பட்ட புழுகு மூட்டைகள்..இயற்கையை கண்ணுக்கு முன்னால் பார்க்கிற..அதில் உண்மையைத்தேடு.எழுது வைத்திருக்கிற எழுத்துக்கள் எல்லாம் மாறும் .இயற்கை இருந்தது...இயற்கை இருக்கிறது. இயற்கை இருக்கும்.இதைப் படித்தவுடன் அய்யா சொன்ன கருத்துக்கள்  ஞாபகம் வந்தது. நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே, சிந்தி, ஒப்பிட்டுப் பார், உண்மை என்று உணர்ந்து கொண்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டு விடு என்றார். அப்படி அந்தக் குடிசையில் இருப்பர் சொல்கின்றார். பண்டிதர் . கண்ட உண்மையை அனைவரிடமும் கூறலாமா ? என்று கேட்க நன்மக்களிடம் கூறலாம் என்று சொல்கின்றார். பண்டிதர் வியந்து போகின்றார்

 எல்லாமே வேதத்தில் இருக்கிறது, ஆனால் அது அந்தணர்களுக்கு மட்டும்தான், அடுத்தவர்களுக்கு சொல்லமாட்டோம் என்று சொல்லும் அந்தத் தலைமை அந்தணர் அவ்வளவு செல்வாக்காக, மன்னரை விட அதிக அதிகாரம் படைத்தவராக இருக்கின்றார்கள். நீ அறிவில் அற்புதமாக இருக்கிறாய் ? நீ ஏன் இப்படி காட்டிற்குள் இருக்கின்றாய் என்று கேட்டபோது அந்தக் குடிசை வீட்டில் இருக்கும் பறையன் தன் வரலாறை சொல்ல ஆரம்பிக்கின்றார். நீ சொன்ன அந்த அந்தணர்கள் மிகத்தந்திரமாக சில ஏற்பாட்டை செய்துகொண்டார்கள். அவர்கள் பிரம்மா என்னும் கடவுளின் தலையில் இருந்து பிறந்ததாகவும், நாங்கள் எல்லாம் காலில் இருந்து பிறந்ததாகவும் எழுதி வைத்துக்கொண்டார்கள்.பின்பு எங்களைக் கடவுளின் பேரைச்சொல்லி ஒதுக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல பிரம்மா என்னும் கடவுள் ஒரு தடவை உணவு கேட்டபோது மனித சதையைகடவுளுக்கு நாங்கள் படைத்ததாக சொன்னார்கள். பொய்யை திருப்பித்திருப்பி சொல்ல, சமூகம் அதனை நம்ப ஆரம்பித்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் நான் இயற்கையோடு நடந்தேன். நகரத்தை விட்டு வெகுதூரம் வந்து இங்கு வந்து வசிக்கின்றேன். நாங்கள் இன்பமாக நிம்மதியாக இருக்கின்றோம். என்று சொல்ல இந்தப் பெண் என்று பண்டிதர் கேட்கின்றார்.

            எங்களை பகலில் பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்ததால் இரவில் மட்டும் வெளியே வந்தேன். எனக்கு நகரத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அப்படி ஒருமுறை நகரத்திற்கு சென்று அரண்மனைக்குச்சென்றேன். அங்கு மாட மாளிகை, கூட கோபுரம் இருக்கிறது. ஆனால் அங்கு இருக்கும் அரசனுக்கோ மக்களுக்கோ நிம்மதி இல்லை. என்னை அறிந்துகொண்டு எனக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆதலால் சுடுகாட்டில் தங்கினேன். பிணத்திற்கு வைக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டு அங்கு வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு,மூன்று இரவுகளில் இந்தப்பெண் மட்டும் தனியாக வந்து அழுதுகொண்டிருப்பதைப்பார்த்தேன். இந்தப்பெண் பார்ப்பணப்பெண். இவளது கணவன் இறந்துவிட்டான். அந்தக் கணவனின் இறந்த உடலோடு இந்தப்பெண்ணையும் சேர்த்து எரிக்க இருந்தார்கள். ஆதலால் சாகப்போவதை எண்ணி, ஏற்கனவே தனது அப்பாவின் சிதையோடு உயிரோடு எரிக்கப்பட்ட அம்மாவின் சாம்பலைப் பார்த்து, பார்த்து இந்தப்பெண் அழுதுகொண்டிருந்தாள். நான் இவரிடம் என்னோடு நீ வந்தால் உயிரோடு வாழலாம், இன்பமாக வாழலாம் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சரி என சம்மதித்தார். இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து வெகுதூரம் வந்து இங்கு அடர்ந்த காட்டிற்குள் இன்பமாக ஒரு குழந்தையோடு வாழ்கின்றோம் என்று தெரிவிக்கின்றார். அந்த இன்பமான சூழலைப் பார்த்து பண்டிதர் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றார். அந்தக் குடிசைவாசி, அவனது மனைவி, அவர்களின் குழந்தை, ஒரு நாய், ஒரு பூனை அருகருகில் என மகிழ்ச்சி பொங்கும் இல்லமாக அந்தக் குடிசை இருப்பதை பண்டிதர் காணுகின்றார்.

 தன்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை கிடைத்ததால் குடிசைவாசிக்கு ஏதாவது பரிசு கொடுக்க பண்டிதர் விரும்புகின்றார். எதையும் வாங்குவதற்கு மறுக்கும் குடிசைவாசி, புகைக்குடி குழாயை மட்டும் பெற்றுக்கொள்கின்றார். பிரிய முடியாமல் பிரியும் மன நிலையில் பண்டிதர் அந்த இந்தியக் குடிசையை விட்டு வெளியே வருகின்றார்.ஜெகந்னாத்து கோவிலில் இருக்கும் அந்த அந்தணரைவிட ஆயிரம் மடங்கு இன்பம் உள்ளவனாக, அறிவு உள்ளவனாக நீ இருக்கிறாய் . நீ துன்பத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று சொல்கின்றாய். கேள்விகளுக்கு விடை சொன்னாய்...உலகம் முழுவதும் தேடினேன்...உன்னிடம்தான் எனக்கு பதில் கிடைத்தது என்று மகிழ்ந்து குடிசைவாசியை கட்டித்தழுவி விடைபெறுகின்றார். அவரது நாட்டிற்கு சென்று இந்த பதில்களை ஆங்கில எழுத்தாளர் சங்கத்தில் சமர்ப்பிக்கின்றார். தன்னிடம் வருபவர்களுக்கு, குடிசைவாசி சொன்ன பதில்களையே அறிவுரையாகச்சொல்கின்றார்.

        மிகச்சின்ன புத்தகம். ஆனால் ஏகப்பட்ட விசயம் உள்ளே இருக்கு. படிக்க, படிக்க நமக்கே வியப்பாகவும், உண்மையை தெரிஞ்சுக்கிற வாய்ப்பாகவும் இருக்கு " என்று அ.முருகானந்தம் ஏறத்தாழ 35 நிமிடங்கள் இந்தப்  புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.


 68 பக்கங்களே உள்ள இந்தப் புதினத்தைப் பற்றி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூடப்பேச இயலும். ஒரு தாழ்த்தப்பட்டவரும், பார்ப்பனப்பெண்ணும் இணைந்து எவ்வளவு இன்பமாக,வாழ்கின்றார்கள் என்பதனை ஒரு 220,230 ஆண்டுகளுக்கு முன்னால் கதையாகச்சொன்ன புத்தகம் மிக மிக முக்கியமான புத்தகம். பார்ப்பனர்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் புத்தகம்.திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற,அம்பேத்காரிய பொதுவுடமைத் தோழர்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள்.
 மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.

Friday, 19 October 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....





'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....


5.8.2018 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் மதுரை முனைவர் வா. நேரு அவர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 240 பக்கங்கள் கொண்ட 'காக்கைச் சோறு' என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை - எனக்கு வழங்கினார்.

படித்தேன் - சுவைத்தேன் - கவிக்கோவின் இலக்கியச் செறிவும், தமிழ்அறிவும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகங்கள். காலம் அவரை 'இயற்கையின் கோணல்' புத்தி காரணமாக பறித்துக் கொண்டது என்பது கொடுமையோ கொடுமை!

நல்ல பேராசிரியராக அவர் இருந்து அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் - கவிஞர்கள் - எழுத்தாளர்கள் ஒளி வீசுகிறார்கள்.

கவிக்கோவின் முதல் கட்டுரையே இன்றைய தமிழ்ப் பாட புத்தகங்களில் உள்ள குறைபாட்டினைச் சுட்டி 'கடிதோச்சி மெல் எறிதலை'ச் செய்வதாக உள்ளது!

பள்ளிகளில் நம்மில் பெரும்பாலோருக்குப் பாடமாக அமைந்ததையே ஆசிரியர் அப்துல் ரகுமான் அக்கட்டுரையில் சுட்டி, நெற்றியடிக் கேள்வியை நேர்மையுடன் கேட்கிறார்.

புத்தாக்கச் சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு வர, பாட புத்தகங்கள் அறிவை, விரிவு செய்து, தூண்டத் துணை நிற்க வேண்டும்.

இன்று...? அப்படி இல்லையே! இதோ சில எடுத்துக்காட்டுகள்.

எடுத்துக்காட்டு ஒன்று (பக்கம் 12)

'பூதகியின் பால்' என்ற முதல் கட்டுரையின் முதல் பகுதி இன்று (நாளை மறுபகுதியைப் பார்க்கலாம்).

"கஸபியான்கா கதையை ஒரு நாள் வகுப்பில் சொன்னேன்.

கஸபியான்கா ஒரு மாலுமியின் மகன். அவனுக்குக் கப்பலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவன் தந்தை ஒருநாள் அவனை அழைத்துச் சென்று கப்பலைச் சுற்றிக் காட்டினார்.

அப்போது திடீரென்று கீழ்த் தட்டிலிருந்து "தீ... தீ..." என்று கூக்குரல் எழுந்தது. கஸபியான்கா வின் தந்தை அவனை மேல் தட்டில் ஓரிடத்தில் நிற்க வைத்து, "ஏதோ தீ விபத்துப் போலிருக்கிறது. நான் கீழே சென்று பார்த்து வரும் வரை இங்கேயே நில். இங்கிருந்து அசையாதே" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.

போனவர் திரும்பி வரவில்லை. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். தீ மேலே பரவி கஸபியான்காவைச் சூழ்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் "சீக்கிரம் நீரில் குதி. அப்போதுதான் தப்பிக்க முடியும்" என்று அவனைப் பார்த்துக் கத்தினர். அவனோ "உயிர் போனாலும் பரவாயில்லை. தந்தை சொல்லைத் தட்டக் கூடாது" என்று அங்கேயே நின்றான். அதனால் அவனும் தீயில் சிக்கி உயிரிழந்தான். 'தந்தை சொல்லைத் தட்டாத தனயன்' என்று எல்லோரும் அவனைப் பாராட் டினார்கள்.

நான் இந்தக் கதையைக் கூறிவிட்டு "இந்தக் கதையின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான்: "தந்தை சொல் கேட்டால் ஆபத்துத்தான்" மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த மாணவன் சொன்னதில் தவறேதுமில்லை. ஒரு பரிசோதனையாகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலைத்தான் மாணவன் சொன்னான்.

இது கதை கூட அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தந்தை வாக்கை மீறக் கூடாது என்று தன் உயிரையும் தியாகம் செய்த கஸபியான்காவின் உறுதி பலரை மனம் உருகச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்தச் சம்பவம் பல நாடுகளுக்கும் பரவி நம் நாட்டிலும் பாடப் புத்தகங்களில் இது தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் ஓர் எதிர்மறையான விளைவை  ஏற்படுத்தும் சாத்தியம் இதில் இருப்பதை உணரலாம்.

மனிதன் எதையும் அதன் பலனைக் கொண்டுதான் மதிப்பான்.

இந்தச் சம்பவம் எதை உணர்த்துகிறது?

தந்தை சொல் தட்டாத தனயனின் தியாகத்தை மட்டுமா? தந்தை சொல் கேட்டதால் அல்லவா அவன் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது? இப்படியும் எண்ண இடம் இருக்கிறதல்லவா?

ஏற்கெனவே தந்தை சொல் கேட்காத தனயர்கள் பெருகி வரும் இக்காலத்தில் இத்தகைய கதைகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடாதா?

தந்தை சொல் கேட்டதால் ஒருவன் ஆபத்திலிருந்து தப்பினான் என்பதாகக் கதை அமைந்திருந்தால் அல்லவா படிப்பவனுக்கும் தந்தை சொல் கேட்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படும்? எதிர்மறையான அல்லது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் பல கதைகளைப் பாடங்கள் என்ற பேரில் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கெ()டுத்துக் கொண்டிருக்கிறோம்".

நமது பாடத் திட்டங்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், சமயோசிதமாக நடந்து கொள்ளும் முறையில் இன்று பெரிதும் சொல்லிக் கொடுக்கப்படு கின்றனவா? இல்லையே; அவர் கேட்கும் கேள்விப்படி அறிவை, தன்னம்பிக்கையுடன் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் கெடுத்துக் கொண்டும் - தடுத்துக் கொண்டும் தானே உள்ளது!

பழைய காக்கை - நரிக் கதையை....

(நாளை பார்ப்போம்)

நன்றி : வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்....விடுதலை 20.10.2018(வெளியூர்)

Sunday, 14 October 2018

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

ஆசிரியர்கள்               : சி.லட்சுமணன் &கோ.ரகுபதி..

வெளியீடு                 : புலம், திருவல்லிக்கேணி, சென்னை-5 98406033499

முதல்பதிப்பு              : ஜூன் 2016, மொத்த பக்கங்கள் 120 , விலை ரூ 100....


அண்ணல் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.அந்தச் சாதிய  மனநிலை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா...இல்லை,இல்லை, இடை நிலைச்சாதியினர் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை கூற இயலும். அந்த சாதிய மனநிலை ஒடுக்கப்படுகிற மக்களாகிய பட்டியல் இனத்தவரிடம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் தரும் புத்தகமாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதுதான் 'தீண்டாமைக்குள் தீண்டாமை : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் " என்னும் புத்தகம்.



அண்மையில் வெளிவந்துள்ள புத்தகங்களுள் மிக முககியமானது என நான் நினைக்கின்றேன்.கள ஆய்வுகளாக பல்வேறு ஊர்களில் வசிக்கும் புதிரை வண்ணார் சாதியில் பிறந்தவர்களின் பேட்டியும் மனக்குமுறலும் நடைமுறையில் உள்ள சாதியக்கொடுமை விவரிப்பும்...எழுத்தாளர் இமையம் அணிந்துரையில்  சொல்வதைப்போல " தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ள " புத்தகம் இது..சாதி ஒழிப்பில் விருப்பம் உள்ள அனைவரும் படிக்கவேண்டிய ,மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.

"இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் அதெல்லாம் ஒரு காலத்தில்தான் இருந்தது' என்று ஒருவர் சொன்னால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.பள்ளர், பறையர், அருந்ததியர் எங்கே குடியிருக்கவேண்டும் , எந்தப்பாதையில் நடக்கவேண்டும் , எந்தப்பாதையின் வழியாகப்பிணத்தை எடுத்துச்செல்லவேண்டும், எந்தத்தெருவில் தேரை ஓட்டவேண்டும் , எங்கே நின்று சாமி கும்பிடவேண்டும் , எங்கே பிணத்தைப்புதைக்க வேண்டும், எங்கே தண்ணீர் எடுக்கவேண்டும் , எந்தப்பள்ளியில் படிக்கவேண்டும் , எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்கவேண்டும்  என்பதெல்லாம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த வரையறையின்படிதான் சமூகம் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.உயர் வகுப்பினரும் இடைநிலை.வகுப்பினரும் பறையர், பள்ளர், அருந்ததியர்களுக்கு என்னென்ன விதமான சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுக்கவிதிகளை , வரையறைகளை வகுத்துள்ளனரோ, எவற்றையெல்லாம் பின்பற்றக் கட்டாயப்படுத்தப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் அப்படியே புதிரை வண்ணார் சமூகத்தினர் பின்பற்றவேண்டும் என்று பறையர், பள்ளர், அருந்ததியர் சமுகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்...தாழ்த்தப்பட்டவர்கள்கூட , பிறப்பின் அடிப்படையிலான நிரந்தரமான அவமானத்தைச் சந்திக்கிறவர்கள்கூட , மற்றவர்களைப் பிறப்பின் அடிப்படையில் அவமானப்படுத்துவதில் , இழிவு செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை...ஒடுக்குவது,சுரண்டுவது,இழிவு செய்வது இதுதான் சாதிக்குரிய பெருமைகளாக,அடையாளங்களாக இருக்கின்றன  " என இமையம் தொடர்ந்து எழுதுகின்றார். மிகவும் கவனித்தில் கொள்ள வேண்டிய அணிந்துரை இமையத்தின் அணிந்துரை.மிக விரிவாக அணிந்துரை அளித்திருக்கின்றார்.

இந்த நூலின் முன்னுரையில் ஆய்வுகளை எதன் அடிப்படையில் மேற்கொண்டோம் என்பதனை நூல் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். முதல் அத்தியாயம் " அதிகாரமற்றோரின் படிநிலை- 'அதிகார நிலைப்பாடு' என்னும் தலைப்பில் உள்ளது. இதில் புதிரை வண்ணார் என்ற சாதியின் படிநிலை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும்,அடிமை போன்ற வாழ்க்கை பற்றியும் -'குடும்ப ஒழுங்கு,ஊர் ஒழுங்கு, அடிப்படை உடமைகள், கொத்தும் ஊர்ச்சோறும், அடிமை முறைக்கு ஒப்பான இணைப்பு என்னும் தலைப்புகளின் கீழ் மிக விரிவாக ஆய்வாளர்கள் நேர்முகப்பேட்டிகளோடு கொடுத்துள்ளனர்.

அடுத்த அத்தியாயம் ' தீண்டாமையும் ஒடுக்குமுறையும் சேரியும் வண்ணாக்குடியும் ' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,புதிரை வண்ணார்கள் நடமாட்டமே தடை செய்யப்பட்ட வெளிக்குள் இருந்தது,பண்பாட்டு ஒடுக்குமுறை,தண்ணீரும் தீண்டவண்ணாரும்(புதிரை வண்ணார்),பொருட்களைத் தொட்டாலும் தீட்டு,மரியாதையின்றி அழைத்தல்,பாலியல் ஒடுக்குமுறை,சொத்துரிமை மறுப்பு போன்ற தலைப்புகளில் வரும் செய்திகள் புதிய செய்திகள் மட்டுமல்ல ,சாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்பதனை புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

மூன்றாவது அத்தியாயமாக இருப்பது ' இயக்கமும் போராட்டமும் ' என்னும் தலைப்பில் இருக்கிறது. புதிரை வண்ணார்களுக்கென ஒரு சங்கம் 1940-களில் தொடங்கப்பட்டது என்னும் செய்தி தொடங்கி சாதிச்சான்று பெறுவதற்கு இன்றும் கூட அந்த புதிரை வண்ணார் சாதியைச்சார்ந்தவர்கள் படும் துன்பங்கள் விரிவாக, கள ஆய்வுகளோடு தரப்பட்டிருக்கின்றன.சாதிச்சான்று தருவதற்கு வருவாய்த்துறையைச்சார்ந்த அதிகாரிகள் " உன் வீட்டில் வெள்ளாவி இல்லை, கழுதை இல்லை, துணிகள் இல்லை, நீ வண்ணான் என்று கூறினால் நாங்கள் எப்படி நம்புவது ? " (பக்கம் 66) என்று கேட்டார்கள் என்பதுவும் அதனைத் தொடர்ந்து குலத்தொழில் செய்பவர்களுக்கு மட்டும்தான் புதிரை வண்ணார் என்னும் சாதிச்சான்றிதழ் தருவோம் என்று சொல்வதையும் ஆதாரங்களோடு புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றார்கள். " ஒருவர் சாதிச்சான்று பெறுவதற்கு அடிப்படையான தகுதி அந்தச்சாதியில் பிறந்திருப்பதா? அல்லது தன்னுடைய பாரம்பரியத் தொழிலைச்செய்வதா ? " பக்கம் 72 என்னும் கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார்கள். " சான்றிதழ் பெறுவது என்பது அவர்களின் சாதி அடையாளத்தை மீட்கும் செயல் அல்ல.மாறாக அது ,உயிர் வாழ்வதற்கான போராட்டம் " எனக்குறிப்பிடுகின்றார்கள்.

தொடர்ந்து மதமாற்றம்,இடம் பெயர்வு, வெளி மாநிலம் சென்று பிழைத்தல், வெளி நாடு சென்று பிழைத்தல் போன்றவைகள் மூலமாக எப்படி அவர்கள் அந்தச்சாதி இழிவிலிருந்து மாறிவிட நினைக்கின்றார்கள், அது எவ்வளவு தூரம் சாத்தியமாயிருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடு கொடுத்துள்ளார்கள்.மறைமுகப்போராட்டம்,நிலரிமைப்போராட்டம்,அரசியல் பங்கேற்பு,உற்பத்தி மாற்றம் ஏற்படுத்திய தாக்கம் போன்ற பலவித தலைப்புகளில் கொடுத்துள்ள தகவல்கள் சாதியின் தாக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடிகின்றது.

காந்தியார் " நாமே துவைக்க வேண்டும், நாமே முடி திருத்திக்கொள்ள வேண்டும் :" போன்று சொன்னபோது தந்தை பெரியார் அனைத்திற்கும் எந்திரங்கள் வரவேண்டுமென்றார். வாசிங்மெசின் என்னும் இயந்திரம்  பல வீடுகளில் வந்தபிறகு புதிரை வண்ணார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணத்தக்கவை. மேல் ஜாதிக்கு வெளுக்கும் வண்ணார்கள் ஆற்றில் மேல்பகுதியில் துவைக்கவேண்டும், அவர்கள் துவைக்கும் பகுதியிலிருந்து வரும் தண்ணீரில்தான் தீண்டவண்ணார் துவைக்க போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன என்பதெல்லாம் நான் அறியாத செய்திகள். இப்படி நிறைய செய்திகள் இந்த நூலில் உள்ளன.

முடிவாக ஒரு கருத்தை அழுத்தமாக சொல்கின்றார்கள். சாதி இந்துக்கள் தாங்கள் செய்யும் சாதியை அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு இந்த மாதிரியான புத்தகங்களை பயன்படுத்த பார்ப்பார்கள். அவர்களுக்கு " படிநிலை வர்ணாசிரம முறையில் இருக்கின்ற ஒடுக்குமுறையும் (அல்லது தலித் அல்லாத பிற சாதிய அமைப்புகளிடம் உள்ள படி நிலை ஒடுக்குமுறையும் ) தலித் இனக்குழுவில் உள்ள ஏற்றத்தாழ்வும் சமமானதல்ல.அப்படிச்சமமாகப் பார்க்கவும் கூடாது,பார்க்கவும் முடியாது.ஏனெனில் தலித்துகள் மீது தலித் அல்லாதவர்கள் கொண்டுள்ள ஆதிக்கமும்,ஒடுக்குதலின் தன்மையும் வீரியமும் மிகக் கொடுமையானது " பக்கம்(104) எனக்குறிப்பிடுகின்றனர். உண்மைதான் இந்தப்புத்தகம் சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக சாதி அமைப்பை, அதன் படி நிலைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உதவும் புத்தகம்.

பின் இணைப்பாக ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்கள் எழுதிய 'சவ ஊர்வலம் ' என்னும் சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலின் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கு அந்தச்சிறுகதை உதவுகிறது. மிகுந்த துயரத்தோடுதான் கதையை வாசித்து முடிக்க நேர்கிறது. இதுதான் எதார்த்தமான நிலை. இந்தச்சாதி என்னும் இழிவை நமது மக்கள் எப்போது முழுமையாக புரிந்துகொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறிதான் என்றாலும் அந்தக் கேள்விக்குறிகளுக்கு பதில் இது மாதிரியான புத்தகங்களே எனச்சொல்லலாம். 

பார்ப்பனர்களுக்கு பிறப்பிலேயே உயர்வைத்தரும் இந்த சாதி அமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என குருமூர்த்தி போன்ற அய்யர்கள் தவிக்கிறார்கள்.ஆயிரம் உண்டிங்கு சாதி என பம்மாத்தாய் எழுதுகிறார்கள்.இழித்தவாயனாய் கிடைக்கும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்கள் சிலரை வைத்து சாதி வேண்டும் எனச் சொல்லவைக்கின்றார்கள்.எந்த நிலையிலும் மக்கள் தொகையில் 80,90 சதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என மிகக் கவனமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் " ஒடுக்குமுறையை மட்டுமே மேற்கொள்கிற ஒரே சாதி பார்ப்பனர்கள்தான் " என்பதனைப் புரிந்துகொள்ளவும் "ஆதிக்கத்திற்குள்ளாகின்ற சாதியே மற்றொரு புறத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும் இருக்கிறது " என்பதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைவதற்கான புரிதலையும் இதைப் போன்ற புத்தகங்கள் கொடுக்கின்றன.படிக்க வேண்டிய புத்தகம்.

Sunday, 7 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்...சுப.வீரபாண்டியன்

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்
ஆசிரியர்                                          : சுப.வீரபாண்டியன்
வெளியீடு                  : வானவில் புத்தகலாயம்,சென்னை-17. 044-24342771
முதல்பதிப்பு                                  : 2004 ஐந்தாம் பதிப்பு  : 2014
மொத்த பக்கங்கள்                      : 40 விலை ரூ 30

                            உருவத்தால் மிகச்சிறிய புத்தகம் ஆனால் உள்ளடக்கத்தால் மிகக் கனமான புத்தகம். முதல் பதிப்பின் பதிப்புரையை தமிழ் முழக்கம் செ.சாகுல் அமீது அவர்களும் 4-ஆம் பதிப்பின் பதிப்புரையை சுப.புகழேந்தியும் எழுதியிருக்கின்றார்கள்.முதல் பதிப்புக்கான முன்னுரையையும் 4-ஆம் பதிப்புக்கான முன்னுரையையும் நூலின் ஆசிரியர் அய்யா சுப.வீ. எழுதியிருக்கின்றார். 'என்ன காரணத்தினாலோ இச்சிறு நூலை மட்டும் நான்கு முறை எழுத நேர்ந்தது, இப்பொழுதும் இதனை ஒரு விவாத மேடையில்தான் வைக்க விரும்புகிறேன் " என்று முன்னுரையில் அய்யா சுப.வீ  எழுதுகின்றார். உண்மைதான் ஒரு விவாதத்தின் தொடக்கமாகத்தான் இந்த நூல் அமைந்திருக்கிறது, அதனால் தான் நூலே கேள்வி பதில் அமைப்பில் உள்ளது எனலாம். 

              " அரசியலையும் குடும்பத்தையும் பிரிக்க முடியாது;பிரிக்கவும் கூடாது " என்று முதல் பக்கத்து  பதிலிலேயே நூல் ஆசிரியர் கூறி விடுகின்றார். குடும்பத்து உறுப்பினர்கள் அரசியலற்று இருந்தால் அவர்களை நாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்னும் கேள்விக்கு " அரசியலற்று இருப்பதே ஒரு விதமான அரசியல்தான். " என்று விளக்கம் கொடுக்கின்றார். நம் அரசியல் எது? எனும் வினாவிற்கு "தமிழின உணர்வு,சாதி மறுப்பு,மதவெறி எதிர்ப்பு,பொருளியல் சமத்துவம்,பகுத்தறிவு,பெண் விடுதலை ஆகியனவற்றை முன்னிறுத்தித் தொண்டாற்றுவதே நம் அரசியல் .சுருங்கக் கூறின் 'மானமும் அறிவும் 'கொண்ட மக்களாய்த் தமிழின மக்களை ஆக்குவதே நம் நோக்கம் " என நறுக்குத் தெரித்தாற்போல் பதில் இருக்கிறது. 

                 ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சின் சாரமாக பக்கம் 12-ல் " வீட்டைத் திருத்திய பின்பே வெளியில் வந்து பேசவேண்டும் என்னும் அறிவுரை நியாயமானதுதான்.ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றது...அரசியலில் உள்ள சுதந்திரம் ,சமூகக் கருத்தியலிலும் உண்டுதானே " என்று குறிப்பிடுகின்றார். அடுத்த கேள்வியில் " வீட்டைத் திருத்தி முடித்தபின் தான் நாட்டைத் திருத்த முயற்சிக்க வேண்டும் என்னும் வாதம் மட்டுமே இங்கு  மறுக்கப்படுகின்றது " என்று குறிப்பிடுகின்றார். இருப்பதிலேயே குடும்பம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. எனது உடன் பிறந்த தம்பி மிகத்தீவிர பக்தன் .என்னை விட 4 வய்து இளையவன். இருபதுகளில் அவனைத் திருத்த முயற்சித்துவிட்டு பின்பு விட்டுவிட்டேன். கால் நூற்றாண்டிற்கு மேல் ஓடிவிட்டது.  அவனைத் திருத்திவிட்டுத்தான், மாற்றி விட்டுத்தான் நான் நாத்திகம் பேசுவேன் என்று முடிவெடுத்திருந்தால்  வாழ் நாள் முழுக்க நான்  நாத்திகமே பேசியிருக்க முடியாது. இதனை ஆத்திகர்கள் மிகக் கவனமாகச்செய்கின்றார்கள், உனது வீட்டிலேயே பக்தன் இருக்கிறான், நீ நாத்திகம் பேசுகிறேயே என்று கேள்வி கேட்கும்போது தடுமாறத்தேவையில்லை, ஆமாம் அவன் வேறு, நான் வேறு என்று சொல்வது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள்,ஒரே குடும்பத்தில்  இருக்கின்றார்கள், அவர்களை யாரும் கேட்பதில்லை, ஆனால் சமூகக் கருத்தியலில் இருப்பவர்களை நோக்கி இப்படிச்சொல்வது அவர்களைச்செயல்பட விடாமல் ஆக்குவதற்கான ஒரு தந்திரம் என்பதனைக் குறிப்பிடுகின்றார் எனக்கொள்ளலாம். " Every body is unique " ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதுதான் உளவியலின் அடிப்படை. 

               " குடும்பம் ,சமூகம் ஆகிய இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதே நம் எண்ணம். ஒன்று முடித்து இன்னொன்று என்பது நடைமுறைக்கு உகந்ததன்று. இன்னொன்றையும் நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் குடும்பம் என்பதும் சமூகத்தின் ஓர் அங்கம்தான்.எனவே சமூக அளவில் நம் அரசியல் மேலோங்கும்போது ,குடும்பத்திற்குள்ளும் அது ஏற்கப்படும்." எனக் குறிப்பிட்டு விளக்குவது ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

               " போராட்டம்தான் வாழ்க்கை. தொடர்ந்து வீட்டிலும்,வெளியிலும் போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒரு போராட்டத்தில் தோற்று விட்டதால் ,இனி நாம் எந்தப்போருக்கும் தகுதியற்றவர்கள் என்று ஏன் கருத வேண்டும் " என்னும் கேள்வியும்(பக்கம் 16)  அதற்கு முன்னதாக தோழர் வாழ்வில் ஏற்பட்ட உறுத்தலும்,விலகலும் அதனை மாற்றுவதற்கான ஆசிரியரின் விவாதங்களும் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கவை...." குறைகளைச்சுட்டிக் காட்டித் திருத்த முயல்வது ஒரு வகை விமர்சனம். குறைகளைப் பெரிதுபடுத்தி ,கொள்கையிலிருந்தே விரட்டியடிப்பது இன்னொரு வகை. " என விமர்சனங்களை விவரிப்பது மனதில் கொள்ளத்தக்க விமர்சனம். 

                  அரசியல் பணியை எப்படித்தொடங்க வேண்டும்?,செயல்பாடுகளின் தொடக்கம் எப்படி அமைய வேண்டும்?, பெயர் மாற்றம், தமிழில் கையெழுத்திடுவது, சாதி ஒழிப்பு,தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது சாதி அரசியல் ஆகாதா? போன்ற கேள்விகளுக்குப் பதில்களை மிக நேர்மறையானதாகக் கொடுத்திருக்கின்றார். "சமூக அரசியல் கொள்கைகள் தங்கள் மனைவி /கணவனுக்கு உடன்பாடில்லை என்றால் ,குடும்ப நிகழ்வுகளை எந்த அரசியலின் அடிப்படையில் நடத்திச்செல்வது ? " என்னும் கேள்வியும் அதற்கான பதிலும் மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டும் . ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்ட  வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொண்ட இணையர்கள் கூட விவாகரத்து பெற்றுக்கொள்வதை நாம் அறிவோம். இதில் சிக்கல் எங்கே நிகழ்கிறது? வெவ்வேறு கொள்கை உடையவர்கள் கணவன், மனைவியாக வாழ்வதில் உள்ள பிரச்சனைகள், அன்பு செலுத்துதல் , தேயாத கற்களாய் இருந்தால் என்ன செய்வது போன்றவற்றை ஆசிரியரின் பார்வையில் கொடுத்திருக்கின்றார். இன்னும் விரிவாக, பெண்கள் நிறையப் பேர் கலந்துகொண்டு விவாதிக்கும் விவாதக் களமாக இந்தத் தலைப்புகள் மாறவேண்டும். 

                 "நம் பெற்றோர்களிடமும், நம் பிள்ளைகளிடமும் நம் அரசியலைக் கொண்டு செல்வது எப்படி? " என்னும் கேள்வி கேட்டு அதற்கான விடையை விரிவாகவே கொடுத்திருக்கின்றார். பிள்ளைகள் நம் அரசியலுக்கு வருவதில் மிக முக்கியமான பண்பாக நமது நேர்மையும், நமது கொள்கை பிடிப்பும் அமையும் என்பது எனது கருத்தாகும். " மதிக்கப்படும்,நேசிக்கப்படும்,நம்பப்படும் இளைஞர்களே முதிர்ச்சியும் ,பொறுப்பும் மிக்க குடிமக்களாக உருவெடுப்பார்கள் .அத்தகைய பிள்ளைகளோடு ,நம் கொள்கைகள் குறித்து பேசுவதும், அவர்களிடம் கொள்கைப் பிடிப்பை உருவாக்குவதும் எளிய செயலாக இருக்கும் " எனக்குறிப்பிடுகின்றார்.

                 " ஒத்த அரசியல் கருத்துடைய குடும்பத்தினர்,ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் நல்ல பயன்களைத் தர வாய்ப்புண்டா ? " என்னும் கேள்விக்கு " மிக நல்ல பயன்களை விளைவிக்கும் " எனக் குறிப்பிட்டு பல்வேறு செயல்பாட்டு திட்டங்களைக் குறிப்பிடுகின்றார். திராவிடர் கழகத்தால் நடத்தப்படும் குடும்ப விழாக்கள் தரும் பலன்கள் மிக அதிக அளவிலானவை. " எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் பள்ளி நாட்களில் நான் என உறவினர் வீடுகளுக்குச்சென்று வந்ததை விட ,திராவிடர் கழகக் குடும்பங்களுக்குச்சென்று வந்ததுதான் மிகுதி " எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். அதனால் விளைந்த பலன்களைக் குறிப்பிடுகின்றார்.இன்றைய நிலைமையை அது மாற்றும் என்பதையும் குறிப்பிடுகின்றார். 

முடிவாக 
              " குடும்பங்களில் நம் அரசியல் வளரட்டும் !
                இயக்கங்களே நம் குடும்பம் ஆகட்டும் " எனப் புத்தகத்தை முடிக்கின்றார்.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டுதான் சமூகப்பணி ஆற்றுகின்றோம். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு கொடுக்கும் சான்றிதழ் என்பது இன்றியமையாதது.செலுத்திய அன்பு மட்டுமே நற்சான்றிதழுக்கு அச்சாரமாக அமையும்.  குடும்பத்திற்குள் நேர்மறையான விவாதங்களும், வெளிப்படைத் தன்மையான பண நிர்வாகமும்,ஒருவருக்கொருவர் கொடுக்கும் சக மரியாதையும், ஒழுக்கமும் நம் சமூகப்பணி தொய்வின்றி தொடர உதவும் " குடும்பமும் அரசியலும் " என்னும் இந்தப்புத்தகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நூலின் ஆசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருப்பதும்,அந்த எடுத்துக்காட்டுகளை விரிவாக விளக்குவதும் படிப்பவரை அடுத்த கட்ட சமூகப்பணிக்கு ஆயுத்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அமைந்திருக்கிறது. " சாதியும் நானும் " என்னும் தலைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல்வேறு அனுபவக் கட்டுரைகளை வாங்கி இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கியிருப்பதுபோல , 'எனது குடும்பமும் எனது அரசியலும் ' என்னும் தலைப்பில் தோழர்களிடம் கட்டுரைகளை வாங்கி ஒரு புத்தகமாக ஆக்கலாம். அந்தப் புத்தகம் வெவ்வேறு அனுபவங்களை,எதார்த்தமாக  கூறுகின்றபோது இந்தத் தலைப்பு இன்னும் செழுமையாகும் என்ற எண்ணம் இந்த நூலை வாசித்து முடித்தவுடன்  எனக்குத் தோன்றியது.

  

Sunday, 30 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை
ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.



                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..

   

    

Tuesday, 25 September 2018

அண்மையில் படித்த பிடித்த கட்டுரை ...புத்தகங்களின் காட்டில் முகத்தைத் தொலைத்தேன் ....ப..திருமாவேலன்



ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் ‘நான் விரும்பும் தலைவர்' என்ற கட்டுரை கேட்கப்பட்டு இருந்தது. நான் விரும்பும் தலைவராக தந்தை பெரியார் பற்றி எழுதினேன். அதன் தொடக்கம் இப்படி அமைந்திருந்தது.

"யாராலும் அப்படி வாழ முடியாது! வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தமிழகத்தின் நீண்ட வாழ்க்கையை உடைய தலைவர்.

வரலாற்று நிகழ்ச்சியாகவே நிரம்பியவர். வரலாறுகள் யாவும் போராட்டங்களாகவே கண்டவர். அறிவா... அது நாட்டுக்காக! உழைப்பா... அது மக்கள் முன்னேற்றத்துக்காக என்றிருந்தவர்.

கிழடு பட்டாலும் தளராத வலிய நெஞ்சு! கால் தளர்ந்தாலும் தளராத கருத்துத் தெளிவு! தாடி தான் நரைத்தது, சிந்தனை நரைத்ததில்லை. மருத்துவர்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகளே இல்லாதும் நீண்ட ஆயுள்! தளராத உடல்! தமிழகத்தின் உந்து சக்தி!

பரம்பரை அடிமைகளின் பாசமுள்ள தலைவன்! ஏழைகளின் காசில்லாத வக்கீல்!

நீதிமன்றங்கள் அவருக்கு விவாத மேடைகள்! குற்றவாளிக் கூண்டுகளோ அவருக்குக் ‘குளு குளு அறைகள்!' சிறைச்சாலைகள் அவருக்கு மருத்துவமனைகள்! மேடைகள் அவருடைய நூல் நிலையங்கள்! ஊர் சுற்றும் உழைப்பே அவருக்கு உற்சாகம்!

போராடுவதுதான் இந்த அரசரின் பொழுது போக்கு! சாதி என்பதே அவருக்குத் தையல் கிழியாத செருப்பு! தன்மானமே அவருக்குக் கைத்தடி! கடவுள் எதிர்ப்பே அவரின் கருப்புக் சட்டை! பண்பாடு அவரின் வெண் தாடி!

அவருடைய புன்சிரிப்பு எதிரிகளுக்குப் புகையும் எரிமலை! அறிவா.. அதற்குக் கூர்மையா... அதை அவரின் ஒளிமயமான கண்களில் அல்லவா காண வேண்டும்!

வீரமா... 'வெங்காயம்' என்று அவர் வெகுண்டு திட்டும்போது வெளிப்படும் நெருப்பல்லவா? இப்படி எழுதிக் கொண்டே போகலாம்! அதனால் தான் அவர் நான் விரும்பும் தலைவர்! - என்று எழுதி இருந்தேன். பதினான்கு வயதில் தந்தை பெரியார் குறித்த ஆழமான புரிதலுடன் நான் எழுதி இருக்கிறேன் என நினைத்து விடா தீர்கள். "அதனால்தான் அவர் நான் விரும்பும் தலைவர்' என்பது மட்டும்தான் எனக்குச் சொந்தமானது. மற்ற அனைத்து வரிகளுக்கும் சொந்தமானவர் பேராசிரியர் அ. அறிவொளி!

நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை, முகத்தில் தாடி, உடல் முழுக்க காவி வேட்டி என்ற உருவம் தான் அ.அறிவொளி என்றால் நினைவுக்கு வரும். பட்டிமன்றப் பேச்சாளராக உள்ளே நுழைந்து, ஆன்மிக சொற்பொழிவா ளராக மறைந்துபோன அவர், தனது தொடக்க காலத்தில் எழுதிய நூல்; 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்!''

அன்பரசி வெளியீட்டகம், வடக்குத் தெரு, பொருள்வை, சிக்கல் என்ற முகவரியில் இருந்து 1979ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் அதன் பிறகு மறுபதிப்பு கண்டதாக நான் அறியவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக அறிவொளி அப்போது இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நிர்வாகத்துடன் அவர் நடத்திய உரிமைப் போராட்டத்தின் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனது தந்தையாருக்கு நல்ல நண்பர். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆண்டு விழாவில் ஆண்டுதோறும் பங்கெடுக்கும் முகங்களில் அறிவொளியும் ஒருவர். அந்த வகையில் அப்பா மூலமாக என் கைக்கு இந்தப் புத்தகம் வந்து சேர்ந்தது.

இந்தப் புத்தகத்தை நான் படித்தது எனது ஒன்பதாம் வகுப்பில். எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, திருச்சியில் இருந்து ஒரு மாணவன் புதிதாக வந்து எங்கள் இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளியில் சேர்ந்தான். அவன் பெயர்: கா.திருமாவளவன். 'திருமா'க்கள் பெயர் ஒற்றுமையால் ஒன்று சேர்ந்தார்கள். திருச்சி பேராசிரியர் க.நெடுஞ்செழியன் - சக்குபாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர் இவர். திராவிடர் கழகக் குடும்பம். திருச்சி அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கும் நெருக்கமான வர்கள். திருமாவளவன் மூலமாக மூன்று புத்தகங்களைப் பெற்றேன். கடவுளர் கதைகள், சங்கராச்சாரி யார்?, இன்னொரு புத்தகம். இம்மூன்றும் தான் என்னுள் ஒரு விதமான திராவிட ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி யவை. அதுவும் 'கடவுளர் கதைகள்' என்ற நூல் புராண ஆபாசங்களை அம்பலப் படுத்தியது. சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பற்றாளர், தமிழுக்கு விரோதி என்பது மட்டுமே அன்றைய எனது எதிர்ப்பின் புரிதல். இந்த அடித்தளத்தில் இருந்த எனக்கு, அறிவொளியின், 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்' நூல் ஈர்ப்பானதாக இருந்தது. ஈர்ப்பின் முதல் காரணம், தலைப்பு.



அந்த வயதில் அதில் இருந்த பல விமர்சனங்கள், சொற்கள், தர்க்கங்கள் புரியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் அழகான மொழிநடை, வர்ணனை ஆகியவை பிடித்திருந்தன. பெரியாரை விமர்சிக்கிறது இந்நூல், ஆனால் அழகாக. பெரியாரை சில இடங்களில் நிராகரிக்கிறது இந்நூல், ஆனால் மரியாதையாக. அதனால் தான் இது பிடித்தமானதாக இருந்தது.

பெரியாரை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக அன்று நான் நினைத்திருந்த காலம் அது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வராக நான் இன்று நினைக்கவில்லை. பெரியார் மட்டுமல்ல, எவரும் விமர் சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படிக் கொண்டுபோய் இருத்தி விடுவது அவர்களுக்கே பெருமை சேர்க்காது. இன்னும் சொன்னால் அந்த மகுடத்தை அவர்களே விரும்பமாட்டார்கள்.

மார்க்ஸ், ‘அயோத்திதாசர், ம.வெ.சிங்கார வேலர், அம்பேத்கர், பெரியார் என்ற சிந்தனையாளர்கள் நேரடியாய் எழுதியதை, பேசியதைவிட மற்றவர்களுக்கு மறுப்பாய், எதிர்வினையாய் எழுதியது, பேசியது தான் அதிகம். அந்த வகையில் இந்த நூல் அன்று (1980களில்) பிடிக்காமல் இருந்தது. பின்னர் (2000ஆம் ஆண்டுகளில்) பிடித்தது. எது பிடித்தது, எது பிடிக்காமல் போகிறது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபாடு இருக்கும். பெரியாரின் செயல்பாடுகளுக்கு மனோ தத்துவ இயல் அடிப்படையிலும், ராசி அடிப்படையிலும் செய்யப்பட்ட விமர்சனங் களை மட்டும் புறக்கணித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

பெரியார் சராசரி மனிதர் அல்ல. சராசரி தலைவரும் அல்ல. சராசரி தத்துவவாதியும் அல்ல. அதை அறிவொளி ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருந்துள்ளார். அதனால்தான் பெரியாரைப் பார்த்துப் பிரமித்துப் போய் நிற்கிறார். "பெரியார் சுயநலவாதியாகவோ, சூழ்ச்சி வஞ்சகம் உடையவராகவோ இளமை முதல் இருந்ததற்கான சாட்சி யங்கள் எங்குமே கிடைக்கவில்லை. இத னால் அவரிடம் பகைவரையும் மதிக்கும் பண்பாடு மிகுதியாக இருந்தது.

மேடையும் எழுது கோலும் அவருடைய உண்மையான இதயத்தைப் படம் பிடித்து விடவில்லை. அவரின் உண்மையான இதயம் அப்பழுக்கற்ற பண்பானது. (பக்.19)

உண்மைதான்! பெரியாரின் பேச்சுக்களின் மூலமாக அவர் எழுதிய கட்டுரைகளின் மூலமாக மட்டுமே பெரியாரை இனம் கண்டுவிட முடியாது. பேச்சும், எழுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வடிவங்களே. செயலும், நடத்தையுமே பரிபூரணமானது. வரிவானது. அத்தகைய செயல்கள், நடத் தைகள் கொண்ட பெரியாரின் பரிபூரண வாழ்க்கை வரலாறு இன்னமும் எழுதப்பட வில்லை . தானே எழுதிய சுயசரிதையில் சில நிகழ்வுகளைப் பெரியார் குறிப்பிடுவார். அதேபோல் ஏன் காங்கிரசை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்குவார், தன்னை நோக்கி அழைத்தது யார் என்று விவரிப்பார், 'மாட்டுக் கொட்டகையில் நடந்த மகத்தான விருந்து' என்றொரு கட்டுரை, தனது தாயாரைப்பற்றி எழுதியது, மனைவி நாகம்மாள் பற்றி எழுதியது - இது போன்ற தரவுகள் மூலமாகத்தான் பெரியாரின் உண்மையான இதயத்தை உணர முடியும். இது புரியாமல் எழுத்தில், பேச்சில் சில சொற்களை முன்னும் பின்னும் வெட்டி எடுத்துக் கொண்டு கட்டுரையாக்கும் விமர்சனப் புலிகள் மலிந்து போன இந்தக் காலத்தில் அறிவொளி வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

தேர்தல் அரசியலில் இருந்து பெரியார் விலகி இருந்ததைத் தான் அவர் செய்த பெரும் தவறு என்கிறார் அறிவொளி. 29 பதவிகளை வகித்தவர் பெரியார். காந்தியாரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 29 பதவிகளையும் தூக்கி எறிந்தவர். இரண்டு முறை கவர்னர்கள் சந்தித்து, சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றபோது பெரியார் மறுத்தார்.

பதவிக்குப் போனவன் மனதில் பட்டதை பேச முடி யாது, வாக்கு, வாங்குவதற்காக மக்களுக்கு பிடித்ததைத் தான் பேச வேண்டும் என்ற பெரியார், பதவிக்குப் போனவர்கள் யோக்கியர்களாக இருக்க முடியாது என்றும் சொன்னார். உச்சகட்டமாக, 'நானோ, அம்பேத்கரோ கூட பதவிக்குப் போய் விட்டால் யோக்கியமாக இருக்க முடியாது' என்றார். அரசியலை பணநாயகம் என்றும் விமர்சித்தார். ஆனால் பெரியாரைப் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங் கியதால் தான் அரசியல் பணமயமானது என்று திருப்பிப் போடுகிறார் அறிவாளி.

''கை சுத்தமானவர்களே ஆளமுடியு மென்ற காலத்தில் இவர் ஆட்சி செய்திருந்தால் அரசியல் சாக்கடைகள் சந்தனச் சந்தையாகியிருக்கக் கூடுமே?

இவரைப் போல் தியாகமே தலை மைக்குத் தேவையானதென்றால் முட்டாள் களும் படிப்பை விலைபேசும் பச்சோந்தி களும் போட்டியிடாமல் அரசியலை விட்டே விலகியிருப்பார்களே! நம்மி டையே ஒரு லெனின் பிறந்திருந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்கத் தவறியதால் 'பெரியார்' என்ற பெயரோடு முடிந்து போய்விட்டார்..." (பக். 73-76) என்கிறார் அறிவொளி. தேசிய விடுதலை அரசியலில் இருந்த காங்கிரஸ் தியாகிகளுக்கு இரட்டை யாட்சி முறை ஆட்சி அதிகாரத்தை சுவைக்க ஏற்பட்ட தவிப்பும் சமூக விடுதலை அரசியலில் இருந்த நீதிக் கட்சிப் பெரிய மனிதர்களில் சிலர் பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த சுயநலமும்தான் தேர்தல் அரசியலை பெரியார் புறக் கணிக்கக் காரணம். அதிகாரத்தில் இருந்து செய்ய முடிந்ததைவிட வெளியில் இருந்து மிரட்டிச் செய்ய வைப்பதே சரியானது, போதுமானது என்று பெரியார் நினைத்தி ருக்கிறார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அவரது இறுதிச் சாதனைச் சட்டமாக ஆக்கப் பட்டதும் தேர்தலில் நிற்காமலேயே பதவியில் உட்காராமலேயே பெரியார் நிகழ்த்திய சாதனைகள்.

பெரியாரின் போராட்டங்களைப் 1979 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் இது. நான் படித்தது 1984-85ஆம் ஆண்டு களில் இன்றளவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக  பார்த்துத் தான் அறிவொளி அதிகம் மலைத்திருப்பார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

காற்றினால் சுழற்றப்படும் காற்றாடி, காற்றையே எதிர்க்கிறது. எதிர்ப்பதனா லேயே மதிக்கப்படுகிறது.

அப்படித்தான் ஒரு போராட்டத்தாலே தலைவரான இவர் பல போராட்டங் களைச் செய்தார். அது தான் அவரின் இயல்பாகி விட்டது. (பக். 115) என்பார். அறிவொளி. பெரியாரை அன்று பலரும் எதிர்க்கவும், மதிக்கவும், இன்று பலரும் எதிர்க்கவும் மதிக்கவும் அவரது போர்க் குணமே காரணம். அதனால்தான் இறுதியில் அறிவொளி...

"அவரை யார் வேண்டுமானாலும் குறை கூறலாம்!

அவரை யார் வேண்டுமானாலும் திறனாய்வு செய்யலாம்.

ஆனால் அவரை அவமதிப்பதை மட்டும் யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏன்! அவரை மதிக்காமல் இருப்பது கூடத் தவறல்லவா? (பக். 124)இருக்கக் காரணம் கருத்தில் தெளிவும் அதன் மொழிநடையும். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நமக்கு எதிரான கருத்துகளையும், 'சரிதானே' என்று மயக்கிவிடும் சொற்கோவைகள்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் பெரியார் குறித்த எத்தனையோ புத்தகங்களைப் வாசித்தாலும், பெரியாரின் எழுத்து களை புத்தகங்களாக படித்திருந்தாலும், குடி அரசு மற்றும் விடுதலை இதழ்களில் அவரது படைப்புகளை நேரடியாக வாசித்திருந் தாலும் முதலில் படித்த 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும் 'நூல் இன்று வரை நினைவில் இருந்து நிழலாடுவதாக இருக்கிறது. இப்படித் தரப்பட்ட தன்மை ஒரு சில நூல்களுக்குத் தான் இருக்கும்'.

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதை யாருக்குப் படைத்துள்ளார் தெரியுமா? இராஜாஜிக்கு!

பெரியார் இராஜாஜியை 'அன்பான எதிரி' என்பார். அறிவொளியும் அப்படித் தான்!

- நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’ செப். 2018, ப. 24-27)
நன்றி: விடுதலை ஞாயிறு மலர் 22.09.2018

Sunday, 23 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம்..சுப்ரபாரதி மணியன்

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம் (குறு நாவல்கள் தொகுப்பு )
நூலின் ஆசிரியர்             : சுப்ரபாரதி மணியன்
வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98.
முதல் பதிப்பு                : டிசம்பர் 2011, 208 பக்கங்கள், விலை ரூ 125 /-
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 215669



                           
                            தமிழில் சிறுகதைத் தொகுப்புகள் உண்டு,நாவல் உண்டு ஆனால் இந்த நூல் குறு நாவல்கள் தொகுப்பு என இருந்தது. ஒவ்வொரு குறு நாவலும் சுமார் 35, 40 பக்கங்களில் ஏழு தலைப்புகளில் இருக்கும் நூல். கடைசிக் கதையான மரபு சிறுகதை வடிவில்தான் உள்ளது. ஒவ்வொரு குறு நாவலும் வெவ்வேறு களங்களை, தளங்களை தன்னகத்தே கொண்டு தனித்தன்மையாக விளங்குகின்ற தொகுப்பாக இந்த நூல் இருக்கின்றது.
.
                           தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தான் நம்முடைய கட்சி வாக்குகள் பெற முடியும், செல்வாக்கு பெறமுடியும் என்று கருதி , சில தறுதலைகள் தலைவர்கள் என்னும் பெயரில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், முதல் கதையான 'நகரம்'90 ' தனித்துவம் பெறுகின்றது. எளிய மனிதர்களின் வாழ்வில் மதக்கலவரம் எவ்வளவு துயரங்களைக் கொண்டுவரும் என்பதனைத் தனது அனுபவத்தின் மூலமாகவே உணர்ந்த காரணத்தால் துயரம் தோய்ந்த எழுத்துகளால் இந்தக் கதையை எழுதியுள்ளார் போலும்.ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழும் மல்லேஸ், அவளின் மகள் சாந்தா,அவரின் மகன் பிரகாஷ்,அவரின் மனைவி சரஸ்வதி என செகந்தராபாத்தில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை நமது கண் முன்னால் கொண்டுவரும் கதையாசிரியர் அடுத்தடுத்து பழைய நகரத்திலும் புதிய நகரத்திலும் மதக் கலவரம் பரவும் விதத்தை விவரிக்கின்றார். இரண்டு மதத்தவரும் கொன்று குவித்த மனிதர்கள். எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் தாங்கள் பிறந்த மதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட மனிதர்கள் என அவர் விவரிக்கும் விதம் கொடுமையாக இருக்கின்றது.

" கும்பலா வர்றாங்களாம்வீட்டுக்குள்ள புகுந்து கொழந்தைக,பெரியவங்க வித்யாசம் பாக்காமே குத்துறாங்களாம்.ஒரு குத்துன்னு இல்லை, சாகுறவரைக்கும் ..பேப்பர்ல போடறான் பாருங்க,கோரம் "
ரத்தத்தில் மிதக்கும் பிணங்கள்.மொத்தமாய் பிணக்குவியலாய் வீடுகளில் கிடந்தவர்கள்.தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வீடுகள்..யாரின் வேலை? எந்த மிருகம் தன் விசுபரூபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது ? " பக்கம் 9.....கடைசியில் மல்லேஸ் வீட்டிலும் கத்திக்குத்து விழுகின்றது. "சரஸ்வதிக்கு வயிற்றில் குத்து. பிரகாஷ்க்கு தலையில் வெட்டு .மல்லேஸ்ஸேன் வலது கை சதை தொங்கிக்கொண்டிருந்தது. சாந்தாவுக்குப் பின்புறத்தில் குத்து,குப்புற ரத்தத்தில் இருந்தாள். அஜ்மத் அலி அசைவற்றிருந்தான் " என அனைவருக்கும் நிகழ்ந்த கொடுமைகளை விவரிக்கும் கதை ஆசிரியர், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கலவரம் அடங்கியதைக் குறிப்பிடுகின்றார். மருத்துவமனையில் படுத்திருக்கும் மல்லேஸ் உள்ளிட்ட நோயாளிகளைப் பார்க்க புது முதலமைச்சர் வருகின்றார். " இத்தனை பலி எதுக்குடா? உனக்கு நாற்காலி வேணுமுன்னுதானா? ? " உரத்துக்கேட்க வேண்டும் என நினைத்தார் மல்லேஸ்(பக்கம் 38 ) ......நிகழ்காலத்தில் சமூகப் பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கதை இது. மத வெறி அமைப்புகளை, எந்த மதமாக இருந்தாலும் ஊக்குவிப்பது என்பது நல்ல பாம்பை வீட்டிற்குள் வரவைப்பது போன்றது என்பதனை இக்கதையை வாசிப்பவர்கள் உணரலாம். 



                    சாகப்போகும் சீனிவாசன், தன் நிலையிலிருந்து மாறி சாகப்போகும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் நிகழ்வைச்சொல்லும் குறு நாவல் 'வாழ்வின் தீர்வு'. எளிமையான மனிதர்கள், ' சீனிவாசா...சீனிவாசா .." " கடவுளைக் கூப்பிடுகிறாயா ..." இல்லை, அவன் செத்தே பல நூற்றாண்டுகள் ஆகின்றன. என் பெயர்தான் சீனிவாசன்.என பெயரை நானே சொல்லிக்கொள்கிறேன்.இதில்தான் எத்தனை சந்தோஷம் " (பக்கம் 45) ....நிறைய உரையாடல்கள் தனக்குள்ளும் சுற்றி இருப்பவர்களுடனும் சீனிவாசன் நிகழ்த்துகின்றான். அதில் கேலி,கிண்டல்,தத்துவம், ஞானம் என அனைத்தும் கலந்ததாக இருக்கின்றது. 

                   "இருள் இசை" என்னும் தலைப்பே இருண்மையைக் குறிப்பிடுவது போல கதையும் எதிர் விளைவைச்சொல்லும் கதைதான். புல்லாங்குழல் வாசிப்பையும், பாடல் பாடுவதையும் தொழிலாகக்கொண்ட ஜெகன் , தான் பிறந்த ஊரில் தனக்கென யாரும் இல்லாத நிலையில் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போவதும் அங்கு பழைய நினைவுகளையும் இன்றைய எதார்த்தையும் இணைத்து பார்ப்பதையும் கதையாக ஆக்கியிருக்கின்றர் சுப்ரபாரதி மணியன்.கால் நூற்றாண்டாக சொந்த ஊருக்குப் போகாமல் இருப்பது என்பதே தனிமைப்பட்டு போவதுதான்.கிராமத்தில் நிலவும் சாதி, அதன் அடுக்குமுறை, அதில் தன்னை சாதிப்படிக்கட்டில் ஒரு இடத்தில் நிறுத்திப் பார்க்கும் உடன் படித்தவர்கள் என விவரிக்கின்றார். வித்தியாசமான கற்பனையும் எதார்த்தமும் கலந்து படைக்கப்பட்ட குறு நாவல் 'இருள் இசை'.

                   பண்ணையாரின் ஆசை நாயகி என்று பெயர் எடுத்த பெண்ணைப் பற்றியும் அவளின் வாழ்க்கை பற்றியும் கடைசியில் பஞ்சம் வந்தபோது பண்ணையார் அனுப்பி வைத்த நெல் மூட்டையை அவிழ்த்துக்கூடப்பார்க்காமல், பண்ணையாரின் மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய கதை 'கவுண்டர் கிளப்' .

                  சிக்கல்களாக இருக்கும் வாழ்க்கை, சின்னச்சின்ன விசயங்களில் கூட ஏற்படும் மனத்தாங்கல்களை ,கோபத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள இயலாமல், கோபத்தை விழுங்கி வாழும் வாழ்க்கையில் தீர்வாக குடிப்பதும் ,புகை பிடிப்பதும் ஆகிவிடுமா என்னும் கேள்விக்கு விடையாக விவரிக்கும் குறு நாவலாக ,இந்த நூலின் தலைப்பான 'வேறிடம் ' என்னும் அமைந்திருக்கின்றது.

                  அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களாக வளரும் அடியாட்கள், அவர்களின் அடிதடிகள், அதில் ஒரு ஓவியக்காரனின் மனதில் பதிந்த நிகழ்வு, அந்த நிகழ்வினை வரைந்த ஓவியக்காரன், அதனால் ஏற்படும் இன்னல்கள் என விவரிக்கும் கதை 'வர்ணங்களில் ' என்னும் கதை.

                  கலவரம், கலவரத்திற்கு காவலாக வரும் ஒரு போலிஸ்காரனிடம் அநியாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சுகந்தி, அவளுக்கு துணையாக நியாயம் கேட்க துணை நிற்கும் அவளின் கணவன் என விவரிக்கும் கதை 'இன்னொரு நாளை '.

                   "முன்பெல்லாம் நூலுக்கு பற்றாக்குறை இல்லாமல் கைத்தறி துணிகளுக்கு கிராக்கியும் இருந்த போது இப்படி அந்தத் தெருவில் நடந்து போகிறபோது  தெருமுழுதும் பாடுகிற மண் புழுதியும் ,தூசியும், கற்களும் மொத்தமாய் தெருவும் சடக் சடக் என்கிற நெய்கிற தறிகளின் சப்தத்தை எதிரொலிக்கும்.ஆனால் அந்தச்சத்தம் நின்று போயிருந்தது முழுவதுமாய் " என நெசவையும் , நெய்யும் மனிதர்களைப் பற்றியும் விவரிக்கும் கதை 'மரபு '.இந்தக் கால்தா, இந்தக் கைதா என்னும் குரலினைக் கேட்கும் நடேசு அழுவதை நூலாசிரியர் விவரிப்பதை வாசிக்கும்போது " கை வீசம்மா, கை வீசு, மிட்டாய் வாங்கலாம் கை வீசு " எனப் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அழுதுகொண்டே பாடுவதைக் கேட்பது போல இருந்தது.

                மொத்தத்தில் இந்தத் தொகுதியில் உள்ள கதைகள், உற்சாகமூட்டும் கதைகள் இல்லை, ஆனால் உண்மையைச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அலங்கார வார்த்தைகள் இல்லை, ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகள் உள்ளன. பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் துணைக்கோட்டப்பொறியாளராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் சுப்ரமாரதி மணியன் இதுவரை 7  நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு பயண அனுபவக்கட்டுரைகள் என 35 புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பது பாரட்டிற்குரியது.

             நூலின் ஆரம்பித்தில் உல்ள 'சுப்ரபாரதி மணியன் : சில விமர்சனக்குறிப்புகள் " என்னும் பகுதி, பல்வேறு இதழ்கள், எழுத்தாளர்கள் பார்வையில் சுப்ரமணிய பாரதி- எனும் எழுத்தாளரைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. மிக அருமையான குறிப்புகள் இவை. முதன் முதலில் சுப்ரமணிய பாரதி என்னும் எழுத்தாளரை வாசிப்பவருக்கு அவரைப் பற்றிய ஒரு புரிதலை இந்தப் பகுதி தரும்.

           பதிப்பகத்தார் தங்கள் பதிப்புரையில் " கதைகளில் வரும் ஒவ்வொரு வரியிலும் மனித உணர்வுகளை உயிரோட்டமாகப் பின்னிக் காட்டுகிறார் நூலாசிரியர்.இவை போன்ற கதைகள் மனித இதய வாசலைத் திறந்து காட்டி ,மனித நேயம் என்கிற வாசனையை வீசச்செய்யும் என்று நம்பலாம். மனித வாழ்க்கையின் கூர்மையை சுய நலக்காரர்கள் மழுங்கடித்துக்கொண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் தங்கள் பேனா முனையால் கூர் தீட்டவே முனைத்து நிற்கிறார்கள் " என்று குறிப்பிடுகின்றார்கள்.உண்மைதான். சில கதைகளில் விவிரிப்பு கொஞ்சம் கூடுதலாகவே  இருந்தாலும், சுப்ரபாரதி மணியன் தன்னுடைய பேனா முனையால் மனித நேயத்தை கூர் தீட்டவே இக்கதைகளை எழுதியிருக்கின்றார் எனலாம்.