Friday, 24 May 2024

அண்மையில் படித்த புத்தகம்: தொலைபேசி நாட்கள்..விட்டல்ராவ்

 

அண்மையில் படித்த புத்தகம்: தொலைபேசி நாட்கள்

ஆசிரியர் : விட்டல்ராவ்

பதிப்பகம் :  அம்ருதா பதிப்பகம்

மொத்த பக்கங்கள் :286 முதல் பதிப்பு 2024 விலை ரூபாய் 250

 

நமது வாழ்க்கையோடு இயைந்த ஒன்றை எழுத்தில் காணும்போது அனிச்சையாகவே அந்த எழுத்தில் நாம் ஒன்றிவிடுகிறோம்.1984-பிப்ரவரி 15-ல் தொடங்கி 2020 ஜனவரி 31 வரை தொலைபேசி இலாக்காவில் வேலை பார்த்த எனக்கு அப்படித்தான் விட்டல்ராவ் அவர்களின் ‘தொலைபேசி நாட்கள்’ என்னும் நூலும் அமைந்தது.வாழ்க்கைக்கும்,வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு ஒரு காரணமாகவும் அமைந்த தொலைபேசித்துறையில் வேலை பார்த்த நாட்களை மீண்டும்  அசை போடுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த நூல் அமைந்தது.

 

“இந்தியத் தொலைபேசியின் இலட்சக்கணக்கான பணியாளர்களில் ஒருவனாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு அதை  ஓரளவுக்கு ஆவணப்படுத்தும் ஆர்வம் இருந்தது.” என்று இந்த நூலின் என்னுரையில் எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்கள் எழுதியிருக்கிறார்.ஓரளவுக்கு அல்ல பெருமளவுக்குத் தன் பணிக்காலத்தை,பணிக்காலத்தில் தொலைபேசித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களை இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்.1963-ஆம் ஆண்டுத் தொலைபேசித்துறையில் ,சென்னையில் பணியில் சேர்ந்திருக்கிறார்.35 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இந்தக்காலத்தைக் கட்டுரைகளாகக் கொடுத்திருக்கிறார்.  “ இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை, எரிச்சல், எதிர்ப்பு, உவகை ,சாகசம், வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன. அவை வாசகர்களுக்கு உவப்பளிக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு” என்றும் என்னுரையில் திரு.விட்டல்ராவ் அவர்கள் எழுதியிருக்கிறார்.

 

மொத்தம் 25 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன .முதல் கட்டுரையின் தலைப்பு ‘தொலைபேசிநாட்கள்’. அதுவே நூலின் தலைப்பாக மாறி இருக்கிறது. இந்த நூலில் தொலைபேசி எந்த ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது 1876 இல் தோன்றிய தொலைபேசி 1881 லேயே சென்னைக்கு வந்துவிட்டது என்னும் குறிப்பும் இருக்கிறது. தொலைபேசியைப் பற்றிய வரலாறு, அதில் சென்னை தொலைபேசி வளர்ந்த விதம் ,அதனுடைய வரலாறு என்று மிக நுணுக்கமான விவரங்களை இந்த நூல் கொடுக்கிறது.இதில் ரெவின்யூ ஸ்டாம்ப் என்று ஓர் அத்தியாயம்  இருக்கிறது. எத்தனை இளைஞர்களுக்கு இந்த அத்தியாயம்  புரியும் என்பது தெரியவில்லை ஆனால் மிக நுட்பமாக அந்த ரெவென்யு ஸ்டாம்ப் என்பது எவ்வளவு முக்கியமானது எப்படி அதற்குப் பற்றாக்குறை ஏற்படும், சம்பளம் வாங்குவதற்கு அது எவ்வளவு முக்கியத்துவமானது என்பதைக் கதையாகவும் நிகழ்வுகளின் வழியே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் எழுதியிருக்கிறார். இப்போதெல்லாம் சம்பளம் வங்கி கணக்கில் வந்து விழுந்து விடுகிறது நாம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிறோம் ஆனால் மாஸ்டர் ரோலில் ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கிய  காலத்தை மிகப் பசுமையாக நினைவுபடுத்துகிறார்...

 

 கடன்கார சொசைட்டி என்று ஒரு கட்டுரை இருக்கிறது மிக ரசித்துப் படித்தேன் சம்பளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்குச் சொசைட்டி முக்கியம் ,சொசைட்டி தந்த கடன் முக்கியம் என்பதை நகைச்சுவையோடு எழுதியிருக்கிறார் தடை செய்யப்பட்ட இடம் எப்படிப் பிற்காலத்தில் தாராளமாகப் புழங்கும் இடமாக மாறியது என்பதையும் எப்படி இருந்து எஸ்டிடி ஐஎஸ்டி போன்ற வசதிகள் வந்தன அதனால் பாரம்பரியமான தொலைபேசி ஆபரேட்டர்கள் எப்படித் தங்கள் வேலையை இழந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார் எல்லாத் தொலைபேசி நிலையத்திலும் வட்டிக்குக் கொடுப்பவர் ஒருவர் இருந்தார், இருக்கின்றார் என்பதுதான் எதார்த்தம் .அதைப் பென்னிஸ் என்பவர்  மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி வசூல் செய்வார்கள் என்பதை எல்லாம்..அவர்களின் கொடு மனதை  அம்பலப்படுத்தி எழுதி இருக்கிறார்.

 

 தொழிற்சங்கங்களைப் பற்றியும் 1968 போராட்டத்தில் முன்னணியில் இருந்து தான் போராட்டத்தில்  கலந்து கொண்டதையும் அன்று அரசின் கெடுபிடிகளையும் அதையெல்லாம் தாண்டி தொழிலாளர்கள் ஒன்று திரண்டதையும் அனுபவத்தோடு எழுதியிருக்கிறார் 1968இல் எனக்கு வயது  நான்கு. 60 போராட்டம் 68 போராட்டம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்வார்கள் ஆனால் அதில் பங்கு கொண்டவர் அதனை எழுத்தாக வடிக்கும்பொழுது அதை வாசிப்பது உணர்ச்சிவசப்பட வைக்கிறது .



 

சில தலைப்புகள் சிரிப்பு வர வைக்கின்றன. ஐயா இந்த டயல் சுத்தினா அப்படியே  நிக்கி…என்பது அப்படிப்பட்ட ஒரு தலைப்பு. இந்த நிக்கி என்னும் சொல்லாடல் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிக்கே உரித்தான ஒன்று. அங்கிருந்து சென்னைக்கு வந்திருக்கக்கூடிய ஒரு கடைக்காரரின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நிகழ்வை சொல்லும் விதமாக அந்த டயல் என்று சொல்லக்கூடியது ,எப்படி எல்லாம் மாறியது காலப்போக்கில் மாறியது என்னும் வரலாற்றையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார்.

 

பல விதமான மனிதர்களைச் சந்திக்கின்ற ஓர் இடம்தான் தொலைபேசி நிலையம். சென்னை மதுரை போன்ற நகரங்களில் வேலை பார்த்து ஆயிரக்கணக்கான தோழர்கள் கூட, நபர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு தொலைபேசி துறையில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதுவும் தொழிற்சங்கவாதியாக இருந்தால் இன்னும் கூடுதலாக மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனை எல்லாம் மிக எதார்த்தமாக எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்கள் பதிந்து இருக்கிறார். இந்த நூலைப் பொறுத்த அளவில் 1960 இல் இருந்து ஒரு 35, 40 ஆண்டுக் காலத் தொலைபேசி வரலாற்றை அறிந்து கொள்ளலாம் எப்படி பழைய தானியங்கி தொலைபேசி நிலையங்கள் எலக்ட்ரானிக் எக்சேஞ்ச்சுகளாக மாறின, பின்பு அவை எப்படி RLU,RSU  தொலைபேசி நிலையங்களாக  மாறின என்பதை எல்லாம் விவரித்திருக்கிறார். அப்படி மாறியதால் விரிந்த பரப்பில் இருந்த தொலைபேசி நிலையங்கள் எப்படிச் சின்னச் சின்ன வீடுகளுக்குள் அமைந்தன, அதற்குத் தொழில்நுட்பம் எப்படி எல்லாம் வழி வகுத்தது என்பதை  ஒரு கதையாகக் கொடுத்திருக்கிறார்.

 

ஆனால் திரும்பி பார்க்கின்ற பொழுது 90களில் நிகழ்ந்த நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன்னால் நிறுத்தி இருக்கிறார் ஒரு தொலைபேசிக்காக 4 ஆண்டுகள் 5 ஆண்டுகள் காத்திருந்தது, OYT  என்று சொல்லக்கூடிய,அதிகப் பணம் கட்டி  முன்னுரிமை விண்ணப்பங்கள் கூட ஓராண்டுக்கு மேல் காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைக்கு ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தெருத்தெருவாக  எங்கள் சிம்கார்டை  வாங்குங்கள் என்று கூவிக்கொண்டு இருக்கக்கூடிய நிலையில், தொலைபேசிக்காக வருடக் கணக்கில் காத்திருந்தார்கள் என்ற வரலாறு எல்லாம் இன்றைய தலைமுறைக்கு வியப்பாகக் கூடத் தோன்றலாம் ஆனால் அதுதான் நிகழ்ந்தது

 

1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தொலைபேசித்துறை என்பது வேறு. 2010 க்கு பின்பு ஆண்டிராய்டு செல்பேசிகள் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் ,இணையம் வந்த பிறகு  ஏற்பட்ட மாற்றங்கள்,இன்று பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்கக்கூடிய நிலைமைக்கு யார் காரணம், இவற்றையெல்லாம் இந்த நூலினுடைய தொடர்ச்சியாக எழுதலாம்..

 

 இந்த நூல் எனக்கு ஒரு  நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த நூல். தொலைபேசித்துறையில் வேலை பார்த்தவன் என்ற வகையில் தொலைபேசி வரலாற்றை அறிந்து கொள்வதோடு, என் வாழ்வில் என் துறையில் நடந்த பல நிகழ்வுகளை இந்த நூலின் வழியாக மீண்டும் ஒருமுறை நினைவு கொள்ளக் கூடிய வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் திரு.சந்தியா நடராசன் அவர்கள் “ விட்டல்ராவின் தொலைபேசி நாட்கள்’ தொலைபேசித் துறையின் வரலாறாகவும் ,நேற்றைய சென்னையின் காட்சிகளாகவும் கலை,இலக்கியக் குறிப்புகளாகவும் மூன்று பரிணாமங்களில் ஒன்றை ஒன்று விலகாமல் உருப்பெற்றிருக்கிறது.தொலைபேசித்துறை சார்ந்தவர்கள் கட்டாயமாகவும்,மற்றவர்கள் சந்தோஷமாகவும் படிக்கலாம்;படிக்கவேண்டும் “ என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான்.தொலைபேசித்துறையில் வேலைபார்க்காத ஒருவரும் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப் படிக்கமுடியும்.

புத்தகம் பேசுது என்னும் இதழில் இந்த நூலைப்பற்றி எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் எழுதிஇருந்தார் விட்டல்ராவ் அவர்களைப் பேட்டி எடுத்து எழுதி இருந்தார். தொலைபேசித் துறையில் கோட்டப் பொறியாளராகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு பாவண்ணன் அவர்கள்.ஏறத்தாழ நூறு  நூல்களை எழுதியவர்.தொடர்ந்து இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர். பணி நிமித்தமாக்க் கர்நாடகாவிற்குச் சென்று கன்னட மொழியைக் கற்றுக் கொண்டு கன்னடத்தில் இருந்து தமிழுக்குப் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்தவர்.

https://vaanehru.blogspot.com/2015/05/blog-post.html,

https://vaanehru.blogspot.com/2014/02/blog-post_11.html

https://vaanehru.blogspot.com/2016/12/blog-post_13.html

https://vaanehru.blogspot.com/2019/04/blog-post.html

https://vaanehru.blogspot.com/2014/01/blog-post_12.html

பல படைப்புகளைக் கொடுத்தவர்.மேலே இருக்கும் சுட்டிகள் எல்லாம் அவருடைய நூல்கள் பற்றி எனது வலைத்தளத்தில் நான் எழுதியவை.பாவண்ணன் அவர்கள் தனது வலைத்தளத்திலும் இந்த ‘தொலைபேசி நாட்கள் ‘ நூலைப் பற்றி எழுதியிருக்கிறார்.திரு. விட்டல்ராவ் அவர்களின் நண்பர் பெங்களூரில் இருந்து மறைந்த சந்திரசேகர் அவர்களைப் பற்றிய விவரிப்பு நம் நெஞ்சைத் தொடுகிறது

 

“ தொலைபேசி ஊழியர்கள் எல்லோரும் பழையனவற்றை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடாத நாளே இல்லை. பெருமூச்சு விடாத தொலைபேசி ஊழியர்களே கிடையாது.” என்று குறிப்பிடும் திரு.விட்டல்ராவ் அவர்கள் “ ஒரு கனவாக- கதையாக- கற்பனையாக, ஓரியண்டல் டெலிஃபோன் கம்பெனியாகப் பிரிட்டிஷ் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, அரசுடமையாகி தபால் தந்தி இலாக்கா என்றானது. பிறகு அதில் தபாலையும் தந்தியையும்  விட்டு விட்டு தொலைபேசி தனியாகப் பிரிக்கப்பட்டுத் தொலைத்தொடர்பு இலாகா  என்றானது அதுவும் இறுதியில் பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) லிமிடெட் என்றானது” என்று இந்த நூலின் இறுதியில்  நூல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

" டெலிபோன் எக்சேஞ்சிலே வேலைக்குச்சேரும் பெண்களைப்பார்த்திருக்கிறேன். முதலில் வரும்போது உடையில் நடையில் சாதாரணமாகத் தெரிவார்கள். முதல் மாதச்சம்பளத்தில் உடை மாறும். இரண்டாவது மாதச்சம்பளத்தில் நடை மாறும். போகப்போக அவர்களின் உடை,நடை,பாவனை அனைத்திலும் உயர்ந்த நாகரிகம் மின்னி மின்னிப் பிரகாசிக்கும்.கற்ற கல்வியால் வந்த செருக்கு, கையில் கிடைக்கும் சம்பளத்தின் மாட்சி, தன் காலிலே நிற்கிறோம் என்ற துணிவு இவையனைத்தும் வர அவர்கள் முகத்திலே ஒரு பிரகாசம். ஒரு பெண்ணுக்கு இவை கிடைத்தாலே போதும். அதற்கடுத்துத்தான் வாழ்க்கை. அதுவும் அவர்களுக்கு எளிதில் கைகூடுவதைப்பார்க்கிறேன் " என்றார் செல்லத்துரை என்று (https://vaanehru.blogspot.com/2015/02/blog-post.html ) ஒரு பாத்திரப்படைப்பு வழியாக  உரப்புளி நா.ஜெயராமன்(தொலைபேசித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்) பேசுவார்.

 

பெண்கள் மட்டுமல்ல,19,20 வயதில் கையில் கிடைத்த சம்பளம்.அதனால் ஏற்பட்ட மனமகிழ்ச்சி.வாழ்க்கையில் முன்னேற்றம் என தொலைபேசித்துறையில் வேலைபார்த்த ஒவ்வொரு ஆணின் மாற்றத்தையும் உரப்புளி நா.ஜெயராமன் அவர்கள் பாணியில் குறிப்பிடலாம்.எத்தனை பேருக்கு வேலை கொடுத்த நிறுவனம்,இட ஒதுக்கீட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த நிறுவனம் ,இலட்சக்கணக்கான ஆண்களின்,பெண்களின் ,அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்கு சூரிய ஒளியாய் நின்ற நிறுவனம் இன்றைக்குக் களையிழந்து போய் நிற்கிறது.மீண்டும் அது புதுப்பொலிவைப் பெறவேண்டும் என்பதே தொலைபேசித்துறையில் வேலை பார்த்த ஒவ்வொருவரின் ஆசையும் விருப்பமும்.அதனை நூலின் கடைசிப்பகுதியில் எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.



 

இந்த நூலை வாசித்து முடித்துவிட்டு 80வயதைக் கடந்து பெங்களூரில் வசிக்கும் திரு.விட்டல்ராவ் அவர்களோடு அலைபேசியில் பேசினேன்.உற்சாகமாகப் பேசினார்.மதுரையில் தான் 3 மாதம் வேறு ஒரு துறையில் வேலைபார்த்த(1963-ல்) அனுபவத்தைச்சொன்னார்.அப்படியே மதுரையின் பல பகுதிகளை விவரித்தார்.அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்,மதுரையை ஓவியங்களால் வரைந்த மனோகர் தேவதாஸ் அவர்களை நான் குறிப்பிட்டபோது,அவரைப் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.ஓவியத்தின் மீது தனக்கு ஏற்பட்ட விருப்பதைக் குறிப்பிட்டார். தான் ஒரு மார்க்சிஸ்ட் என்றும் பிறப்பால் அனைவரும் சம்மே என்றும்  குறிப்பிட்டார்.ஏறத்தாழ ஒரு 30 நிமிடங்கள் அவரோடு உரையாற்றியதும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அவரின் எண் கொடுத்து உதவிய,இந்த நூலை தன் பேட்டியின் வழியாக அறிமுகப்படுத்திய எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும் நன்றி. வாசித்துப்பாருங்கள். மகிழ்ச்சியடைவீர்கள்...தொலைபேசி வரலாறும் அறிவீர்கள்..

 

 

 

 

Sunday, 19 May 2024

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் அவரின் தேடுதலும்... முனைவர் வா.நேரு

 உலகம் போகிற போக்கில் போகாமல் அதனை எதிர்த்து ஒரு இலட்சிய நோக்கத்திற்காகப் போராடுகிறவர்கள், எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள்தான் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலத்திற்குப் பின்பும் நினைக்கப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள். அப்படி உலகம் முழுவதும் நினைக்கப்படும் ஒரு பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். உலக அளவில் அறியப்பட்ட பகுத்தறிவாளர் அவர்.அவரின் பிறந்த நாள் மே 18.அவர் 1872 ஆம் ஆண்டுப் பிறந்தார், 1970 ஆம் ஆண்டு இறந்தார். ஏறத்தாழ 98 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நாத்திகர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். கிறித்துவ மதத்தில்தான் பிறந்தார் அவர். ஆனால், அவருக்கு விவரம் தெரிந்த நாள் முதலாக அவர் ஒரு கிறித்துவராக வாழ்ந்தவரில்லை. ஏன் பிறக்கும்போதே அவர் நாத்திகர்தான். ஏனெனில், அவருடைய தந்தை ஒரு நாத்திகர். ரஸ்ஸல் நான்கு வயது உடையவராக இருந்தபோதே அவருடைய தந்தை இறந்துவிட்டாலும் கூடத் தன் பிள்ளைகளை நாத்திகர்களாக மட்டுமே வளர்க்கவேண்டும் என்று எழுதிவைத்து மறைந்த பெருமைக்குரிய தந்தை . பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பெரிய பாரம்பரியம் மிக்க பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தை, தாய், தாத்தா ஆகியோரை இழந்த அவரை அவருடைய பாட்டிதான் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.



தந்தை பெரியாரோடு ஒப்பிட்டு நோக்கும்போது இருவருக்குமான பொதுப்பண்புகள் ஏராளம். இருவருமே செல்வக் குடும்பத்திலே பிறந்தவர்கள். தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்தார்,ரஸ்ஸல் 98 ஆண்டுகள் வாழ்ந்தார்.தந்தை பெரியார் தன்னுடைய இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததைப் போலவே, தான் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்வரை எழுதிக்கொண்டு இருந்தவர் ரஸ்ஸல்.தந்தை பெரியார் எவராக இருந்தாலும் கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து விமர்சனம் செய்தது போலவே விமர்சனங்கள் செய்தவர்.அதனால் பல இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்தவர் என்றாலும் கொண்ட கொள்கையில் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காதவர்.குடும்பக் கட்டுப்பாட்டை,கருத்தடையை 1920 காலகட்டங்களிலேயே ஆதரித்துப் பேசியிருக்கிறார்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பன்முக ஆற்றலாளராக இருந்திருக்கிறார்.கணிதத்தில் உண்மையான பகுப்பாய்வு(Real Analysis) என்பது இன்று வளர்ந்து நிற்கும் பெரும் துறை.அதனைப் போலவே ‘செட் தியரி’ எனப்படும் கணித தர்க்கப் பிரிவும் பெரும் துறையாகும். இந்த இரண்டிற்குமான அடிப்படைக் கோட்பாடுகளை அளித்தவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். இன்று இராக்கெட் விடுவதற்கும், ஏவுகணைகளை ஏவுவதற்கும் அடிப்படையான கோட்பாடுகளைக் கொண்டது உண்மையான பகுப்பாய்வும் செட் தியரியுமாகும். மதத்தை அவர் தர்க்கத்தின் அடிப்படையில் தகர்த்து எறிந்ததற்கும் கூட அவரது கணிதவியல் தர்க்கம் காரணமாக இருக்கலாம்.அதனைப் போலத் தத்துவப் படிப்பைப் படித்தவர் அவர். அதிலும் தத்துவத் தர்க்கம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்..

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இயற்பியலையும் தத்துவத்தையும் ஒப்பிட்டு ஒரு நூல் எழுதியிருக்கிறார்.மூளையைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் இன்றைக்கு நிறைய வருகின்றன. ஆனால், மூளையைப் பற்றிய பகுப்பாய்வு (The Analysis of Mind) என்னும் தலைப்பில் நூல் எழுதியவர் ரஸ்ஸல். இந்த உலகத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு இயற்பியலையும் தத்துவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றவர். மறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிர்களை இயற்பியல் வழியாகத்தான் விளக்கினார்.

இதற்கு ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.மனம் பற்றிப் பேசுவது தத்துவம்,பொருள் பற்றிப் பேசுவது இயற்பியல்.இரண்டையும் இணைத்து மக்கள் நல்வாழ்வு வாழ வழி காணவேண்டும் என்று எழுதியவர் ரஸ்ஸல்.,  கல்வி பற்றிய அவரின் நூல், (On Education:Especially in Early Childhood) குழந்தைகளுக் குக் கொடுக்கப்படும் கல்வி பற்றி நிறைய  விவாதிக்கிறது. இளம் வயதில் குழந்தைகளுக் குக் கொடுக்கப்படும் கல்வியில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது. மத வழிக் கல்வியை மறுத்தவர்  பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். பெற்றோர்கள் தங்கள்குழந்தைகளின் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்ட  வேண்டும் என்றவர். ஆரம்பகாலக் கல்வியால்   மட்டுமே ஒரு மனிதரின் குணாதிசயங்கள் தீர்மானிக்கப்படுகிறது. தந்தை பெரியார் போலவே  கல்வியின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியவர்.

அதற்கான விடைகளைச் சொன்னவர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்கள். தானே ஒரு பள்ளியை உருவாக்கி அதற்குத் தலைமை ஆசிரியராக இருந்து தான் சொன்னதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். அய்யாவின் அடிச்சுவட்டில் என்று திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று எழுதி வெளியிட்டுக்கொண்டு இருப்பதைப் போலவே பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களும் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மூன்று பாகங்களாக – சுயசரிதையாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதன் முன்னுரையில் தன்னுடைய இளம்வயதில் தற்கொலைக்கு முயன்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு வாழ்வதற்கு தன்னை உந்திய காரணங்கள் என்று மூன்று காரணங்களைச் சொல்கின்றார்.

1. அன்புக்கான ஏக்கம்:

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். அன்புக்காக ஏங்கியது தன்னை உந்தியது என்று சொல்கிறார்.

2. அறிவுக்கான தேடல் :

மெய்ப்பொருள் காணும் அறிவுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார். உண்மையை நோக்கியே தன் வாசிப்பை, பேச்சை, எழுத்தை அமைத்திருக்கிறார். தான் உண்மையைக் கூறியதற்காக ஏற்பட்ட
இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று இருக்கிறார். தொடர்ந்து பயணித்திருக்கிறார்.

3. மனித குலம் ஏன் இப்படித் துன்பப்படு
கிறது என்னும் பரிதாப உணர்ச்சி.

நான் அன்பைத்தான் முதலில் தேடினேன். என் மீது அன்பு செலுத்துபவர்களுக்காக நிறைய நேரம் செலவழிக்கத் தயாராக இருந்தேன்.செலவழித்தேன். அன்புதான் என்னைத் தனிமையில் இருந்து விடுவித்தது. அன்புதான் மண்ணில் இருக்கும் சொர்க்கத்தை எனக்குக் காட்டியது.

அதே அளவு ஆர்வத்தோடு நான் அறிவைத் தேடினேன். மனிதர்களின் இதயங்களைப் புரிந்து கொள்ள நான் அறிவைத் தேடினேன். வானத்தில் இருக்கும் விண்மீன்கள் ஏன் ஒளிர்கின்றன என்று அறிய ஆசைப்பட்டேன்… என்று அறிவின் தேடலைச் சொல்கின்றார்.
அன்புத் தேடலும் அறிவுத்தேடலும் என்னை வானத்தை நோக்கி இழுத்துச் சென்றன. ஆனால், பரிதாப உணர்ச்சி என்னை இந்தப் பூமிக்குக் கொண்டு வந்தது. உலகில் வலியால் அழுபவர்களின் அழுகையொலி என் இதயத்தில் எதிரொலிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
மனிதகுலம் இப்படித் துன்பப்படுவதற்கான காரணமே மதமும் போர்களும்தான். போர் இல்லாத மனித நேய உலகம் அமையவேண்டும் என்று கனவு கண்டார். அதற்காக உழைத்திருக்கிறார்.வியட்நாம் போரில் அமெரிக்கா ஈடுபட்டபோது, அதனைக் கண்டித்திருக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் போது உலகில் ஏற்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பதைத்திருக்கிறார். அதனைப் போல கடவுள்,மதம் பேரினால் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதைத்து அவை வேண்டாம் என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் போதித்திருக்கிறார்.

இணையத்தில் அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அவர் பெற்ற நோபல் பரிசு உள்ளிட்ட பரிசுகளைப் பற்றியும் நிறையச் செய்திகள் கிடைக்கின்றன. இன்றைய இளைஞர்கள் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் வாழ்க்கையைப்
படிப்பதன் மூலமும், அவரின் படைப்புகளைப் படிப்பதன் மூலமும் அவரின் அன்புத் தேடலை,
அறிவுத் தேடலை, மனித குலத்தின் துன்பத்தை
ஒழிக்க அவர் எடுத்த முயற்சிகளை உணரமுடியும்.

நம்மால் முடிந்த வகையில் அதைத் தீர்ப்பதற்கான உழைப்பினைத் தர உறுதி ஏற்கமுடியும். 

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மே 16-31,2024

Friday, 17 May 2024

திராவிடப்பொழில் இதழ் ஆய்வரங்கம்...

 இன்று(18.05.2024) மாலை 7.30 மணிக்கு திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ் இணைய வழி ஆய்வரங்கம். வாருங்கள் தோழர்களே,வாருங்கள் ஆய்வாளர்களே,வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.



அண்மையில் படித்த புத்தகம் : முட்டிக்குறிச்சி – நாவல்

 

அண்மையில் படித்த புத்தகம் : முட்டிக்குறிச்சி –  நாவல்

ஆசிரியர் : சோலச்சி

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்,(ஸீரோ டிகிரி- ஒரு பிரிவு) சென்னை-40

முதல் பதிப்பு : அக்டோபர் 2023

மொத்த பக்கங்கள் : 260 ,விலை ரூ 320

கதை சொல்வது என்பது எளிதான காரியம் அல்ல ஆனால் கதையை,  நெடுங்கதையை எழுத்தின் வழியாகச் சொல்லத் தெரிந்தவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள். கதைகளின் மூலம் நம்மோடு உறவாடுகிறார்கள், பேசுகிறார்கள்., சிரிக்க வைக்கிறார்கள்,.அழுக வைக்கிறார்கள்,சமூகத்தின் அவலங்களை உணர வைக்கிறார்கள். ஏன் இந்த உலகம் இப்படி இருக்கிறது ? என்பதை நமக்கு நாமே கேள்வி கேட்பதற்கான உந்து சக்தியாக இருக்கிறார்கள். எனவே கதை சொல்லுதல் என்பது அறிய கலை என்றாலும் கூட ஒருவரைக் காலம் கடந்து நிற்க வைக்கும், பேச வைக்கும் ,எழுத வைக்கும் கலை.  அந்த வகையில் தன்னுடைய முதல் நாவலான முட்டி குறிச்சி என்னும் நாவலின் மூலமாகக் காலம் கடந்து நிற்கப் போகும் எழுத்தாளர் நான் என்பதை நமக்கு மிக அழகாக உணர்த்தி இருக்கிறார் சோலச்சி அவர்கள் .



 இந்த நாவலில் எழுத்தாளர் சோலச்சி  அவர்கள் “ யார் மேல் தொடக்கூடாது, யாருடன் பழகக் கூடாது என்று புறம் தள்ளி ஒதுக்கி ஒடுக்கி வைத்திருந்தீர்களோ அவர்கள் மீது அன்பு கொண்டு எல்லோரும் மனிதர்கள் தான் என்ற நிலையை உருவாக்கி உங்களுக்குள் ஒரு சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, சமூக நீதியை நிச்சயமாக உருவாக்கலாம்”  என்று குறிப்பிட்டு மேலும் “ எதை எழுத வேண்டும் என எண்ணுகிறேனோ அதை எனக்கான நேரம் கிடைக்கும் பொழுது எழுதி வருகின்றேன். அதை வாசித்து உங்கள் இதயக் கரங்களில் ஏந்திக் கொண்டாடுவதும் கொட்டி கீழே தள்ளுவதும் உங்கள் கைகளில் தான் “ என்று என்னுரையில் எழுதி இருக்கிறார். இதை வாசித்து முடித்தவுடன் இதயக் கரங்களில் ஏந்திக் கொண்டாடத்தான் தோன்றியது எழுத்தின் வலிமையை  ஆழமாகப் புரிந்து கொண்டவன் என்ற அடிப்படையில் மகத்தான எழுத்து இது என்று கொண்டாடத் தோன்றுகிறது

நாவலின் உள்ளே நுழைவதற்கு முன்பே : தன்னுடைய வருவாயில் பெரும்பகுதியை ஏழை,எளிய மாணவச்செல்வங்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி தாயாக வாழ்ந்துகொண்டிருக்கும் பணி நிறைவு பெற்ற தமிழ் விரிவுரையாளர் எங்கள் அம்மா நா.விஜயலெட்சுமி அவர்களுக்கு இந்நூல்” என்னும் வரவேற்பே இந்த நூலாசிரியரின் மனப்போக்கைக் காட்டிவிடுகிறது. அதைப்போல கொரனாக் காலத்தில் தானும் நண்பர்களும் இணைந்து  உணவு வழங்கிய பணியைக் குறிப்பிடுகிறபோது,  நூலாசிரியரின் களப்பணியும் நம்மை ஈர்க்கிறது.

இது ஒரு வாழ்வியல் நாவல்.மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாக அமைத்து எழுதப்பட்ட நாவல்.ஏன் நமக்குக் கல்வி மறுக்கப்பட்ட்து?, ஏன் இப்படிப்பட்ட  வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்? என்பதைப் பற்றிய புரிதல் இல்லாத தலைமுறையைப் பற்றிய நாவல். ஆனால் அவர்களிடம் இருந்த,இருக்கும் மருத்துவத்தை,மனிதநேயத்தை,கடும் உழைப்பை,,கண்ணியமிக்க வாழ்க்கையை,சின்னச்சின்ன உரசல்களோடு முடிந்துவிடும் கோபத்தை அழகியலோடு எடுத்துவைக்கிறது.

மொத்தம் 28 அத்தியாயங்கள் உள்ள இந்த நாவல் காதலைப் பேசுகிறது.இயற்கை மருத்துவம் பேசுகிறது.இந்த மண்ணின் மைந்தர்களான ஆதிக்குடிகளிடம் இருக்கும் பெருந்தன்மையை, பெரும்போக்கைப் பேசுகிறது.உயர்ஜாதி எனப்படுவோரின்  நயவஞ்சகத்தைப் பேசுகிறது.அவர்கள் அபகரித்துக்கொண்ட மண்ணைப் பேசுகிறது. எனக்கு இந்த நாவலைப் படித்தபொழுது ‘ இந்தியக் குடிசை ‘என்னும் பிரஞ்சுப் புதினம் நினைவுக்கு வந்தது.( https://vaanehru.blogspot.com/2018/10/blog-post.html)

நாவல் முழுக்க இயற்கையோடு இணைந்த வருணனைகள் கொட்டிக் கிடக்கின்றன.. நாவலின் முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பாரா, “ வெள்ளி மறைந்து வெகு நேரமாயிருந்தது.விடியலை கீழ்வானம் உதித்துக்கொண்டிருந்தது.கூரையிலிருந்து குதித்து ஓடிய சேவல்…” எனத்தொடரும் வருணனைகள் நமக்கு அந்தச்சூழலை அப்படியே ஓவியமாய்ப் படம் பிடித்துக்காட்டுகின்றன. பாலாயி, நாரங்கி,பொன்னழகி,அழகப்பன் என்னும் கதாபாத்திரங்கள்,நாவலை முழுக்க நகர்த்திச்செல்பவர்கள் முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றனர் அவரவர் இயல்புகளோடு.. தீத்தான்,பிரமையன்,கண்டவனார் என்னும் பாத்திரப்படைப்புகளும் மனதில் நிற்கின்றார்கள்.மாட்டுக்கறியின் வாசனை நாவல் முழுவதும் நம்மைச் சுண்டி இழுக்கிறது.

எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர் கீதா இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘மாதவிடாய்’ என்று ஒரு குறும்படம் எடுத்து தமிழ்நாடு முழுவதும் அவரும் அவருடைய இணையர் திரு இளங்கோவன் அவர்களும் அந்தக் குறும்படத்தினை ஒளிபரப்பி  மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைக்கப்படும் பெண்களின் அவல நிலையை எடுத்துக்காட்டினார்கள். அதேபோல முட்டி குறிச்சி என்றால் என்ன என்பதை இந்த நாவலை படிக்கும் பொழுது உணர முடிந்தது.

சீன நாட்டில் கூட ஒருவர் வீட்டில் இறந்தவிட்டால், குழந்தைபிறப்பின்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பிள்ளைப்பெறவேண்டும் என்னும் மூட நம்பிக்கையால்  ஒரு பெண் இறப்பதைக் குடும்பம் என்னும் மொழிபெயர்ப்பு நாவல் பேசும்.( https://vaanehru.blogspot.com/2014/01/blog-post_23.html)  முட்டிக்குறிச்சி என்னும் அந்த  அநீதிக்கு எதிராக ஒரு சூழ்ச்சியைச் செய்துதான் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த நாவலின் நாயகி அதை அமல்படுத்தும்போது படிப்பவர்களுக்கு இது சரியான செயல்தான், கைதட்டிப் பாராட்ட வேண்டிய செயல்தான் என்பதைத் தனது எழுத்தின் மூலமாக இயல்பாக நகர்த்திச் செல்கிறார் சோலச்சி.

காடுகளை,மலைகளை,மலைக்குள்ளும் காடுகளுக்குள்ளும் இருக்கும் மூலிகைகளை, அந்த மூலிகையைப் பறித்து மக்களின் நோயைப்போக்கும் இயற்கை வைத்தியர்களை,விஷப்பாம்பு கடித்தால் கூட அதை முறிக்கும் வல்லமையை, மருத்துவத்தைக் கையில் கொண்டிருக்கும் மக்கள், சாதிப்பாம்பு தீண்டும்போது அதனை  முறியடிக்கும் வழி தெரியாமல் திக்கித் திணறுவதை இந்த நாவல் அருமையாகச் சுட்டிக் காட்டுகிறது. எதுவுமே மிகை இல்லை, ஒரு சார்பு இல்லை. ஏன் ஓங்கி ஒலிக்கும் குரலாகக் கூட இல்லை. மிக இயல்பாக மனச்சாட்சி உள்ள மனிதர்களோடு, அவர்களின் மனங்களோடு பேசும் இயல்பான நடையை இந்த நாவல் பெற்றிருக்கிறது

நான் கதைக்குள்ளே நிறையப் போகவில்லை.இதனை வாசிக்கும் நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. மொத்தப் பக்கங்களையும் ஒரு பத்து,இருபது வரிகளில்  கதைச்சுருக்கமாகச்  சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் இந்தக் கொரோனா காலகட்டத்தில் தன் மனதில் தோன்றிய மனிதநேயத்தை, செயல் வடிவமாக்க தனக்குக் கிடைத்த நட்போடு இந்தக் கதையைப் பகிர்ந்து கொண்ட போது ஏன் இதை ஒரு நூலாக நீங்கள் வெளியிடக்கூடாது என்று அவர் கேட்டதாக எழுதி இருக்கிறார்.அந்த நண்பர் பி.தாமோதரன் அவர்களுக்கும் நன்றி.

இந்த நாவலின்  ஒவ்வொரு பக்கத்திலும் வர்ணனை நிரம்பி இருக்கிறது. வாழ்க்கை நிரம்பி இருக்கிறது.ஜாதிய அடுக்கில் -கீழடுக்கில் வலிந்து திணிக்கப்பட்ட  மக்களின் உயர்வான எண்ணங்கள் நிரம்பி இருக்கிறது. ஜாதி அடுக்கில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணம் கொண்ட சில மனிதர்களின் கீழான செயல்களும் சில பக்கங்களை நிரப்பி இருக்கின்றன.அந்த அடுக்கில் இருந்தாலும் மனிதநேயம் கொண்டு உதவும் மனிதர்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். கீழான செயல்களைச்செய்தவர்கள் கடைசியில் மாட்டிக்கொள்வதும் தண்டனை பெறுவதும் இந்த நாவலில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

வர்ணாசிரம அடுக்கில் எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி இல்லை, எந்த ஜாதியும் கீழான ஜாதி இல்லை பிரித்து வைத்தவர்களின் மனதில் இருந்த சூழ்ச்சி,கொடுமை அது. உழைக்கும் மனிதர்களின் உழைப்பைச்சுரண்ட அவர்கள் செய்த நயவஞ்சகத்தின் நச்சு விளைவு அது.  அந்த  நஞ்சை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டு இருக்க வேண்டுமா? என்னும் கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது அறிவியல் இன்றைக்கு இமையமாய் வளர்ந்து நிற்கிறது. மரபணு ஆராய்ச்சி உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் ஓரிரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான், அவர்களின் வழித்தோன்றல் தான் என்னும் உண்மையை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.இந்த அறிவியல் யுகத்தில்தான் நாங்கள் முகத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று சிலர் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.குடிக்கும் குடிநீரில் கூட மலத்தைக் கலக்கும் கொடுமையும், ஆணும் பெண்ணும் மனமொப்பிக் காதலித்துத் திருமணம் செய்தால் அகங்காரம் கொண்டு ஆணவக் கொலை செய்யும் அக்கிரமமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மனித நேயத்தைச் சொல்லும் இந்த மாதிரியான கதைகள் என்பது இன்றைய தேவை, அதைச் சிறப்பாகவே சோலச்சி சொல்லியிருக்கிறார்.

எந்த இடத்திலும் கதை ஓட்டத்தைத் தொய்வில்லாமல் ,அதே நேரத்தில் கதையை மிக நுட்பமாக உரையாடல்களால், கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களால் நகர்த்திச் சென்று இருக்கும் இந்தக் கதை சொல்லும் பாங்கு முதல் நாவலுக்கான  எழுத்தாக இல்லாமல் ஏதோ ஒரு 100 நாவல் எழுதிவிட்டு 101 வது நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் போல இயல்பான நடையாக இருக்கிறது. இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.தமிழ் நாவல் இலக்கிய உலகிற்கு ஓர் அற்புதமான புதிய  படைப்பாளி கிடைத்துள்ளார் என்று. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இமையம், பெருமாள்முருகன் ,அழகியபெரியவன், ,அகிலா எனப் புகழ்பெற்ற ஆளுமைகளோடு வைத்துக் கொண்டாடத்தக்க வகையில் இவரின் முதல் நாவலே அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் தோழர். அடுத்து அடுத்து  உங்கள் நாவல்கள் வரட்டும்.தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்,தோழர் காரல்மார்க்சும் கனவு கண்ட புதிய உலகம் அமைய ,சாதியற்ற-சமத்துவ மனித நேயச் சமுதாயம் அமைவதற்கு உங்கள் எழுத்து உறுதுணையாக  அமையட்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.



 

முனைவர் வா.நேரு,

தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

17.05.2024

 

 

Thursday, 16 May 2024

பிடித்தவைகளால் வாழ்வோம்...

                                         

தனித்திருப்பது

பிடித்திருக்கிறது

சில நேரம்…

யாரும் இல்லா அறையில்

மனதிற்குப் பிடித்த

புத்தகங்களை வாசிக்கும்

இந்த இனிமை

நிரம்பவே பிடித்திருக்கிறது…

 

‘நெஞ்சமுண்டு  நேர்மையுண்டு’..

பழைய பாடல்களைக்

கேட்பது நிரம்பவே பிடித்திருக்கிறது…

 

ஏனோ சில பாடல்கள்

வாழ்வில் கசப்பதில்லை…

மீண்டும் மீண்டும்

நாள்தோறும் கேட்டாலும்

மீண்டும் மீண்டும்

கேட்கவே தோன்றுகிறது…

 

அந்தக் காலத்துப் பாடல்களை

அலுப்பில்லாமல் எப்படி

மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்

எனும் கேள்விக்கு எனக்கு

விடை தெரியவில்லை எனினும்

கேட்பது பிடித்திருக்கிறது…

 

பிடித்த சிலவற்றால்

வாழ்க்கை இனிக்கிறது…

எவரையும் தொந்தரவு செய்யாத

அந்தச் சிலவற்றால்தான்

புத்துணர்ச்சியும் புதுமகிழ்ச்சியும்

மனதில் ஏற்படுகிறது…

 

எவர் சொன்னால் என்ன?

போடு பழைய பாட்டை

மீண்டும் மீண்டும் கேட்க..

எவர் சொன்னால் என்ன?

எடு பிடித்த புத்தகத்தை

மீண்டும் மீண்டும் வாசிக்க..

 

போனமாதம் பொசுக்கென்று

செத்துப்போனான் என் தம்பி..

பிடித்தவைகளால் வாழ்வோம்

செத்துப்போவதற்கு முன்பு

 

                           வா.நேரு

                           16.05.2024

 

 

 

Monday, 6 May 2024

மதம் படிக்காதே என்கிறது - திராவிட இயக்கம் எல்லோரும் படிக்க வேண்டும் என்கிறது...

https://www.viduthalai.page/2022/01/blog-post_279.html

இணையத்தில் வேறு ஒன்றைத் தேடியபோது , நான் பேசிய பழைய உரையின் எழுத்து வடிவம் கிடைத்தது. பதிவு செய்திருக்கிறேன். படித்துப்பாருங்கள். நன்றி.

வா.நேரு
06.05.2024

Monday, 29 April 2024

உலகத் தமிழ்நாள்

 

 உலகத் தமிழ்நாள்

 

உலகத் தமிழரெல்லாம்

ஒன்றாய்க் கூடுவோம்..

உலகத் தமிழ் நாளாம்

ஏப்ரல் இருபத்து ஒன்பதை

எழுச்சியாய்க் கொண்டாடுவோம்..

 

எந்தக் கவிஞர் தமிழில்

புரட்சிக் கவிஞருக்கு இணையாய்?

உலகில் எந்தக் கவிஞர் பாடினார்?

புரட்சிக்கவிஞர்போல் தம் தாய்மொழியை..

எங்கள் வளமும் எங்கள் வாழ்வும்

மங்காத தமிழ் என்று

சங்கை முழங்கிய பிற கவிஞர் யார்?

 

எக்கவிஞரை நினைக்கையிலே

உள்ளத்தில் உணர்ச்சி கூடுகிறது?

எவர் கவிதையைப் படிக்கையிலே

அநீதிக்கு எதிராய்

அணிதிரளும் படையில் நாமும்

இணையவேண்டும் எனும்

எண்ணம் உதிக்கிறது?


அடுக்கடுக்காய் ஆசிரியர் பணியில்

தண்டனைகள் கொடுத்தபோதும்

அஞ்சாமல் கண் துஞ்சாமல்

களப்பணியில் நின்று

பாரதிதாசன் போல் பணியாற்றிய

பிற கவிஞர் எவர் தமிழ்நாட்டில் ?

 

சங்க காலத்திற்குப் பின்னே

இயற்கையின் எழிலை தமிழில்

இவர் போல் எடுத்து இயம்பியவர் யார்?

 

‘சுயமரியாதை உலகைச்’ சமைக்க

உந்துதல் தரும் கவிதை எவரின் கவிதை?

சாதி மத இருட்டறையில் உள்ள

உலகத்தின் செவிட்டில்

கவிதைகளால் அறை கொடுத்த

வேறு கவிஞர் யார் உலகில்?

 

‘பாரடா உனது மானுடப்பரப்பை’

என உலக மக்களெல்லாம் ஒன்று

என உணர்த்தும் கவிதை எவரின் கவிதை?

பேத உலகினைப் பெயர்க்கும் கடப்பாரையாய்

வந்த கவிதைகள் எவரின் கவிதைகள்?

 

இளையோர் காதலை எழுதிக் குவித்த

கவிஞர்கள் உலகமெலாம் உண்டு..

முதியோர் காதலைக் கவிதையில்

கொண்டு வைத்த பிற கவிஞர் எவர் உலகில்?

 

நாற்பதானாயிரம் வரிகள் கவிதைகளாய்..

எளிய தமிழில்   புரியும் வகையில்

இத்தனை பா வகையில்

பாடிய பிற  கவிஞர் யார்?



 

உரக்கச்சொல்வோம்..

உணர்ச்சியோடு சொல்வோம்..

உலகத் தமிழர் எல்லோரும்

ஒன்றாய் இணைந்து சொல்வோம்..

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பிறந்திட்ட ‘ஏப்ரல் இருபத்து ஒன்பதே’

உலகத் தமிழ் நாள்…

                       முனைவர் வா.நேரு

                        29.04.2024

 

 

 

 

 

 

 

 

 

Saturday, 20 April 2024

புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா- இலக்கிய அரங்கம்


நாள் - 2: *இலக்கியரங்கம்*

*கிழக்கு நேரம்* - ஏப்ரல் 22, 2024 இரவு 9:00 மணி

*தமிழ்நாடு நேரம்* - ஏப்ரல் 23, 2024 காலை 6:30 மணி

*புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா* கொண்டாட்டத்தின் *ஏப்ரல் 21 முதல் 29* வரையிலான *9 நாள் தொடர்* நிகழ்வுகளில் *2ஆம் நாள்* நிகழ்வு. 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு ,அவரின் நினைவு நாளான ஏப்ரல் 21 முதல் அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 29வரை தொடர்ச்சியான இலக்கிய நிகழ்ச்சிகளை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றம் ,டெலிவர்,அமெரிக்கா- புரட்சிக்கவிஞருக்கு பெருவிழா என்னும் தலைப்பில்  எடுக்கின்றது.அதன் ஒரு பகுதியாக நடைபெறும் 'இலக்கிய அரங்கத்தில்'  ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு (தமிழ் நாடு நேரம் )\,'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகின் பெருவேந்தர் பாரதிதாசன் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.தோழர்  ம.வீ.கனிமொழி,பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்,அமெரிக்கா அவர்கள் 'உயிர் நேயத்தில் இலக்கிய நயம் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.நிகழ்வின் தொடக்கத்தில் திருமிகு.தென்மொழிப்பண்ணன் ஈகவரசன் அவர்கள் பாரதிதாசன் பாடல்களைப் பாடுகின்றார்.அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் தலைவர் திருமிகு ரூபன் ஜெகநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.திருமிகு கல்யாணசுப்பு ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அவர்கள் நெறியாள்கை செய்கிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றத்தின் அமைப்பாளர் திருமிகு.துரைக்கண்ணன் துரைஎழில்விழியன் அவர்கள் இந்த 9 நாள் நிகழ்வுகளையும் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்துகிறார். பாராட்டுக்குரிய பணி.வாருங்கள் நண்பர்களே,தோழர்களே,உறவுகளே,நிகழ்வுக்கு வாருங்கள்.

 

Friday, 19 April 2024

மொழி பெயர்ப்புப் பணியில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ! – முனைவர்.வா.நேரு

 இன்றைய யுகம் என்பது செயற்கை நுண்ணறிவு யுகம். கணினி யுகம், இணைய உலகம் எல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவு உலகமாக இன்றைய உலகம் மாறியிருக்கிறது. 1955ஆம் ஆண்டில் ஜான் மெக்காதே என்பவர்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்திய இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப்படுகிறார். 1955இல் முதன்முதல் இது பற்றி விளக்கிய அறிவியல் கருத்தரங்கத்திலேயே செயற்கை நுண்ணறிவின் நோக்கங்களில் ஒன்றாக ‘இயந்திரங்களை மொழியைப் பயன்படுத்தச்செய்வது’ என்பதைக் குறிப்பிடுகின்றார்.

2024, மார்ச் 31 அன்று இணையம் வழியாக நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ்’ என்னும் சிறப்புரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மக்கள் சிந்தனையாளர்’ தோழர் ஆழி.செந்தில்நாதன் அவர்கள் அச்சிறப்புரையை அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவின் தலைவர் அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட தமிழ் மொழி மீதும் அறிவியல் மீதும் ஆர்வம் உள்ள பலர் உலகின் பல பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி என்ன செய்யும் என்பதைப் பற்றிய விளக்கத்தை ஆழி.செந்தில்நாதன் அவர்கள் கொடுத்தார். இனிமேல் எந்த மொழியும் மிக உயர்ந்த மொழி என்று சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு நாட்டிற்கு இணைப்பு மொழி இது, அல்லது உலகத்திற்கே இந்த மொழிதான் இணைப்பு மொழி என்பது எல்லாம் இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காணாமல் போய்விடும். செயற்கை நுண்ணறிவுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான்” என்றார்.

மொழி பெயர்ப்பு முயற்சிகளை எல்லாம் தேவையற்றதாக செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் ஆக்கப் போகின்றன. ஆமாம் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் 1330 திருக்குறளையும், சில நிமிடங்களில் மொழி பெயர்ப்புகளை, செயற்கை நுண்ணறிவு இயந்திரம் செய்து முடித்துவிடும்.

நாம் மார்க்சிம் கார்க்கியின் நாவலை – இரஷ்ய மொழியில் இருக்கும் ‘தாய்’ நாவலைத் தமிழ் மொழியின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் வழி படிக்க முடியும். அதில் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பைப் பற்றி நாம் தமிழ் மொழியில் விளக்கம் கேட்டால், இரஷ்ய மொழிக்காரர் இரஷ்ய மொழியில் சொல்லும் பதிலை மொழி பெயர்த்து அந்த இயந்திரம் நமக்குத் தமிழில் சொல்லும். உலகில் இனி நாம் தமிழ் மொழியில் பேசி எந்த மொழிக்காரரோடும் பேசமுடியும்.அதாவது நாம் டெல்லி தெருக்களில் போய் தமிழ் மொழியில் கேள்வி கேட்டால் அதனை அந்த இந்திக்காரருக்கு இந்தி மொழியில் அந்தக் கருவி சொல்லும். அவர் இந்தியில் சொல்லும் பதிலைத் தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி சொல்லும்.

நாம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் மூலம் ‘ஜிபே’ (GPay) போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புகிறோம்.இரயில் டிக்கட் பதிவு செய்கிறோம். எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதனைப் போல இந்த செயற்கை நுண்ணறிவு மூலமாக நம் கைகளில் இருக்கப்போகும் ஒரு கருவி மூலமாக மொழிகளைக் கடந்து நாம் பேசுவோம்.மொழிகளைக் கடந்து நாம் இலக்கியங்களைப் படிப்போம். நாம் எழுதும் இலக்கியப் படைப்புகளும் இப்படி உலக மொழிகள் அனைத்திற்கும் போய்ச் சேரும். உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் போய்ச் சேரும்.’

நாத்திகம் பற்றி உலகில் இருந்த – இருக்கும் எழுத்தாளர்கள் யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்களோ, அதைத் தமிழில் கொடு என்று கேட்டால், உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இருக்கும் ‘நாத்திகம் ‘பற்றிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என அத்தனையையும் அந்தந்த மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நமக்குச் சில நிமிடங்களில் கொடுத்துவிடும். இப்பொழுது கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் இருக்கும் ‘நாத்திகம்’ சம்பந்தப்பட்ட படைப்புகளை எடுக்க முடியும்.அந்தந்த மொழிகளைக் கொடுத்து அந்தந்தப் படைப்புகளை எடுக்கமுடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலமாக எந்த மொழியில் இருந்தாலும் அதனை எடுத்து மொழி மாற்றி நமக்குத் தமிழில் கொடுக்கும்,அல்லது எந்த மொழியில் கேட்கிறோமோ அந்த மொழியில் கொடுக்கும்.

“நம் நாடு அமெரிக்காபோல், அய்ரோப்பா போல், ரஷ்யா போல், ஜப்பான் போல் ஆக வேண்டும். ஒருவருக்கு 18 மொழிகள் தெரியும் என்று சொல்வதைவிட, நம் நாட்டு மொழியும், உலக மொழியும் தெரிந்திருந்தாலே போதுமானது என்று நான் கூறுவேன். 18 மொழிகள் பயின்ற பெருமையினால் மக்களுக்கு லாபம் என்ன? அஷ்டாவதனம்,சதாவதானம் போல் – படித்தவனுக்குப் பெருமையே தவிர, யாருக்கு லாபம்? சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் இலாபம் என்ன? அதைக் கவனித்தே நாம் மொழி விவகாரங்களில் கவனம் செலுத்தவேண்டும்” என்ற தந்தை பெரியார் அவர்கள் ‘மொழி என்பது ஒரு கருவி’ என்றார்.அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு யுகம் ஒரு புதுப்பாதையைக் காட்டியிருக்கிறது.
அறிவு என்பது பொதுச்சொத்து. அந்த அறிவின் மூலமாகக் கிடைக்கும் பலன்கள், வாய்ப்புகள், வசதிகள் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்கவேண்டும். கணினி உலகில் முதன்முதலில் பயனுக்கு வந்தபோது அதனைப் பயன்படுத்துவதில் இந்திய மொழிகளில் முந்திக் கொண்டது தமிழ்தான். 1973ஆம் ஆண்டிலேயே அதற்கான முன்னேற்பாட்டைத் திராவிட இயக்க அரசுகள் முன்னெடுத்தன. டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கணினிக் கல்விக்கு மிக முன்னுரிமை கொடுத்தார்.1990களில் அதனை விரிவுபடுத்தி பலரும் கணினி கற்க வசதிகள் செய்தார். அதனைப் பயின்றவர்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் உயர் வருவாய் பெறும் பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்.

அதனைப் போல செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தமிழர்களும், தமிழும் முந்திக் கொள்வதற்கான பல்வேறு செயல்பாடுகளைத் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசும், உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களும் செய்து கொண்டுள்ளனர். திரு.ஆழி.செந்தில்நாதன் செயற்கை நுண்ணறிவின் மூலமாகச் செய்யப்படும் பன்மொழி பெயர்ப்புக்கான மென்பொருள் நிறுவனத்தை அய்லசா(Ailaysa) என்னும் பெயரில் ஆரம்பித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் மூலமாக எழுதுதல், மொழி பெயர்த்தல், குரல் வழி எழுதுதல் – செயற்கை நுண்ணறிவு வழிப் படங்கள் உருவாக்குதல் போன்ற பல வேலைகளைச்செய்யும் ஒரு பொதுத்தளமாக, தமிழுக்கு இது உருவாக்கப்பட்டிருக்கிறது என இதன் அறிமுகத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் பல ஆயிரம் நூற்றாண்டுகள் பழமையுடையன. செம்மொழி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ் மொழி. இந்தச் செம்மொழி இலக்கியங்களை உலகத்தில் உள்ள எந்த மொழிக்காரரும் தமிழ்மொழி அறியாமலேயே படிக்கமுடியும். அதற்கு நிறைய தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த தரவுகளைக் கணினியில் ஏற்றவேண்டும். அதனைத்தான் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் பயன்படுத்தும்.ஆங்கில மொழிச்சொற்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. ஆதலால் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்த்தாலும் அது எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிடும். தமிழுக்கும் அதுபோல ஏராளமான சொற்களை நாம் இணையத்தில் தரவுகளாக ஏற்றவேண்டும். அதனைத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் செய்திட முன்வரவேண்டும் எனத் திரு.ஆழி.செந்தில் நாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை எப்படி உலகமெல்லாம் கொண்டு செல்வது என்ற அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி, இந்திய ஒன்றியத்திலே அமைய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய 91 வயதிலும் தொடர் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள். இந்தியப் பொதுத்தேர்தல்,அமெரிக்கத் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் இருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்கத்தின் நோக்கத்தை அடைய உழைத்திடுவோம். 

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 16-30


Sunday, 7 April 2024

கவிதை கவிதையாக இருக்குமா?

 

மொழி பெயர்ப்புக் கவிதை

வாசிக்கும் தருணங்களில்

ஏதோ ஒன்று குறைவது

போலவே தோன்றுகிறது…

 

அயல் நாட்டுக் கவிஞரின்

வரிகளை அப்படியே தருவதா?

அவரின் கருத்துகளை உள்வாங்கி

நம் சொற்களில் சொல்வதா?

எனும் குழப்பம் மூலக்கவிஞனின்

கவிதையைக் கொன்று விடுகிறதோ?

 

ஒரு கவிதை  எப்போதும்

எனக்கு ஒரு சித்திரம் …..

முழுமையாகப் பார்த்தபின்பு

எனக்குள் நானே என்னை

வரைந்து கொள்ள

உரிமை அளிக்கும்

சித்திரமாக கவிதை எனக்கு..

…

எனக்கான உணர்வுகளோ

இணைப்பதற்கு  ஏதும்

இல்லாத 

வெறும்

சொற்களாய் சில

மொழி பெயர்ப்புக் கவிதைகள்…

 

செயற்கை நுண்ணறவு

யுகத்தில்

எல்லாக் கவிதைகளையும்

இயந்திரங்களே

மொழி பெயர்க்கும்

எனச்சொல்கிறார்கள்…

 

ஒற்றைச்சொடுக்கில்

ஒரு நூறு மொழிகளில்

மொழி பெயர்ப்பாகிவிடும்

ஒரு கவிதை என்கிறார்கள்

 

மனிதர்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளிலேயே

சாரமற்று

சொற்களின் மொழிபெயர்ப்புகளாய்

சுருங்கி விடும் இக்காலத்திற்கு

மாற்றாய்

இனிவரும் காலங்களில்

இயந்திரங்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளில்

உயிர் இருக்குமா?

உள்மனது இருக்குமா?

கவிதை கவிதையாக இருக்குமா?

 

                             வா.நேரு,07.04.2024