Friday, 19 December 2025

இயற்கையைப் படிப்பது. – முனைவர் வா.நேரு

 நவம்பர் 23, 2025இல் எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி

(Hayli Gubbi) எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது, இது சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்திய வான்பரப்பை அடைந்த சாம்பல் மேகங்களால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, குறிப்பாகச் சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.


உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் சூழல் மாற்றம், அந்தப் பகுதியை மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. “நவம்பர் 23, 2025இல் எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது, இது சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்திய வான்பரப்பை அடைந்த சாம்பல் மேகங்களால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, குறிப்பாகச் சென்னையில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.” இந்த எரிமலை வெடிப்புடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றியும், அதன் தாக்கங்கள் பற்றியும் செய்திகள்  நிறைய வெளியாகின.


எனவே, உலகில் நிகழும் நிகழ்வுகளை அறிவியல் அறிவு கொண்டு உற்று நோக்கி பல்வேறு செய்திகளை அறிவியல் அறிஞர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால், நகருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய செய்திகள் அடிபடுகின்றன.


அண்டார்டிகா கண்டம் என்பது மனிதர்கள் வாழமுடியாத பகுதி. பனிப்பாதுகாப்பு உடைகளைப் போட்டுக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அவ்வப்போது சென்று வரக்கூடிய இடமாக அண்டார்டிகா கண்டம் இருக்கிறது. மனிதர்களால் இன்னும் கண்டுபிடிக்கமுடியாத பல ஆச்சரியங்களைக் கொண்ட கண்டமாக அண்டார்டிகா கண்டம் இருக்கிறது.

அண்டார்டிகா கண்டத்தில் நிறையப் பனிப்பாறைகள் காணப்படுகின்றன. ஏ23ஏ என்று அறியப்படும் பனிப்பாறைதான் இப்போது நகர ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பனிப்பாறை 35 ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பகுதியில் இருந்த பனிப்படலத்திலிருந்து உடைந்து மிதந்து நகர்ந்தது. தெற்குப் பெருங்கடலில் மிகப்பல ஆண்டுகளாக அமைதியாக நகராமல் நின்றிருந்தது. இந்த ஏ23ஏ மீண்டும் 2020ஆம் ஆண்டில் நகரத்தொடங்கியது. அண்டார்டிகா பகுதியில்தான் மிகப்பெரும் பனிப்பாறைகள் இருக்கின்றன. பனிப்பாறைகள் கடலில் மிதந்தாலும், முழுக்க முழுக்க நன்னீரைக் கொண்டது ஆகும். மிகப்பெரிய பனிக்கட்டியே பனிப்பாறை என்று அழைக்கப்படுகின்றது.


நாம் அனைவரும் டைட்டானிக் கப்பல் சினிமாப்படம் பார்த்திருக்கிறோம். கப்பல் ஒன்றில் மோதியதால்தான் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தது என்றால், அதுதான் இல்லை. அது எதில் மோதியது என்றால் பனிப்பாறையில்தான் மோதியது. டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறையைப் போல் பல இலட்சக்கணக்கான மடங்கு பெரியது இந்த ஏ23ஏ பனிப்பாறை என்று குறிப்பிடுகின்றனர்.


உலகத்தின் இப்போது இருக்கும் பனிக்கட்டிகளில் மிகப்பெரியது இந்த ஏ23ஏ பனிப்பாறை. இதன் எடை ஒரு ட்ரில்லியன் டன்.சென்னையின் பரப்பளவு போல் மூன்று மடங்கு பெரியது ஏ23ஏ பனிப்பாறை தோராயமாக 3,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சதுரமாக வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட ஏ23ஏ பனிப்பாறை இரு திசைகளிலும் நீளவாக்கில் 60 கிலோ மீட்டர் வரை நீண்டுள்ளது தோராயமாக 280 முதல் 300 மீட்டர் தடிமன் கொண்ட இந்தப் பனிப்பாறையின் 10 விழுக்காடுதான் நீரின் மேற்பரப்பிற்கு மேலே தெரிகிறது. அதன் சுமார் 90 விழுக்காடு பகுதி நீருக்குள் மூழ்கியுள்ளது எனக் குறிப்பிடுகின்றனர்.


“பழையவைகளை-ஏற்ற அளவுக்கும்  நற்பயன் தரவேண்டிய அளவுக்கும், உபயோகித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்க மாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு, புதியவற்றைக் கண்டுபிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (‘இன்வென்ஷன்’, ’ப்ராக்ரஸ்’) சுலபத்தில் சாத்தியமாகலாம்’’ என்றார் தந்தை பெரியார்.(தந்தை பெரியார், இனி வரும் உலகம்)


புதியவற்றிலே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருந்தால் இயற்கையைப் படிக்கமுடியும் என்று சொல்கின்றார் தந்தை பெரியார்.பனிப்பாறை என்பது இயற்கை. இயற்கையாக உருவாகி, கடலில் மிதந்து செல்லக்கூடிய ஒன்று. ஆனால், இயற்கையான பனிப்பாறைகளைப் பற்றிய ஆராய்ச்சி புதிய புதிய செய்திகளை உலகத்திற்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. 


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 16-31,2025







Thursday, 18 December 2025

இந்த நாள்..இந்த நாள்...

 

இந்த நாள்..இந்த நாள்

இத்தனை ஆண்டுகள் எனது

உழைப்பிற்குப் பின்பும்

உங்களையெல்லாம்

சூத்திரர்களாகவிட்டுச்

செல்கின்றேனே எனப்

பெரும்கருணையோடு நம்மைப்

பார்த்து அவர் கடைசியாகப்

பேசிய நாள்!


உள்ளத்தின் உண்ர்வுக்குமுன்

உடல் என்ன செய்யும்?

நோய் என்ன செய்யும் என்று

உலகிற்கு எடுத்துக்காட்டிய நாள்!

தந்தை பெரியாரின்

இறுதிப்பேருரையைப்

படித்திருக்கிறீர்களா நண்பர்களே!

இணையத்தில் கிடைக்கிறது..

சிறுவெளியீடாய் இருக்கிறது..

எடுத்துப் படிக்கும் நாள்

இதுவெனப் படியுங்கள் நண்பர்களே!

 

பார்ப்பனியம் ஆட்சிக்கட்டிலில்

அமர்ந்துகொண்டு அழிச்சாட்டும்

செய்யும் இந்த நாளில்

கடவுள்களின் பெயரால் நடக்கும்

கயமைகளை எண்ணிடவே…

 

ஆடுகளும் மாடுகளும் நாங்கள்

நல்ல நாய்கள் என வாலைக்

குழைத்துப் பார்ப்பனியத்திற்கு

துணைபோகும் இந்த நாளில்

ஏன் நமக்கு இந்த இழிநிலை

என்பதை உணர அவரின்

இறுதி முழுக்கத்தைக் கேளுங்கள்!

அவரின் இறுதிப் பேருரையைப்

படியுங்கள்!




எள்ளலும் துள்ள்ளுமாய்

அவரின் பேச்சு! இடையிடையே

உடல் நோயினால் வரும்

அம்மா’ ‘அம்மாஎன

வரும் சத்தம்அடுத்த

சில நிமிடங்களில் ஆரியத்திற்கு

எதிராய் சம்மட்டியாய்

அவர் எடுத்து அடிக்கும் அடி!

இன்றைக்கும் அவர் பெயரைக் கேட்டால்

ஆரியம் அலறும் அலறலுக்கு

விடையெல்லாம் இந்த உரையில்..

எது தீர்வு என்பதைத் தெளிவாய்ச்

சொல்லும் ‘மரணசாசனத்தை’

அய்யாவின் இறுதிப்பேருரையைப்

படியுங்கள்! பரப்புங்கள் நண்பர்களே

                                       வா.நேரு,

                                        19.12.2025

Wednesday, 17 December 2025

உளமாற வாழ்த்துகிறேன்…

 

              

எப்போதும் நண்பர்கள்

புடைசூழ..

நகைச்சுவைகள் தெறிக்க..

போடா,வாடா எனும்

உரிமைச்சொற்கள் ஒலிக்க

நடைப்பயணம் செய்வார்

அதிகாலை…




 

நல்லதோ கெட்டதோ

உறவும் நட்பும்

எப்போதும் உரிமையாய்

அழைக்கும் செல்பேசி

இவரின் செல்பேசி…

அழைத்த குரலுக்கு

ஓடோடி வந்து உதவும்

கரங்களுக்குச் சொந்தக்காரர்…

 

கற்பதற்கு என்ன வயது?

எனக் கங்கணம் கட்டி

மரபுக் கவிதை கற்று

சொல் புதிதாய் பெரியாரின்

கருத்தைச் சொல்லும்

மரபுக் கவிதைகளை

யாத்துத் தருகிறார் நாளும் !

 

வாராது வந்த மாமணியாம்

ஆசிரியரின் ‘வாழ்வியலை’

வெண்பாவில் வடித்தார்…

அதனால் உலகெங்கும்

வாழும் தமிழர்கள் மனதில்

இடம் பிடித்தார்!...

 

‘இடும்பைக்கு இடும்பை’

கொடுக்கும் மனதுக்காரர்…

எத்தனை இடர்கள் வரினும்

அதனை எட்டி உதைத்து

முன்னேறும் மனசுக்காரர்..

அடடே! அகவை அறுபத்துஐந்தைத்

தொட்டதே இந்த நாள்!

நூறாவது பிறந்த நாளை

உவகையுடன் கொண்டாட

உளமாற வாழ்த்துகிறேன்

எங்கள் பகுத்தறிவு எழுத்தாளர்

மன்ற மாநிலச்செயலாளர்

அண்ணன் சுப.முருகானந்தத்தை..

நீங்கள் எட்டும் உயரம்

இன்னும் நிறைய இருக்கிறது..

அதைக் கண்டு கைதட்டி

மகிழும் நாளும் இருக்கிறது…

இந்நாள் போல் எந்நாளும்

வாழ்க!வாழ்க! மகிழ்வுடன்…

 

                             அன்புடன்

                              வா.நேரு, 18.12.2025

 

 

 

 

Monday, 1 December 2025

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்...

 

எண்பத்து மூன்று ஆண்டுகளாய்

பொதுவாழ்வு!

கிட்டப்போவது திட்டும்

வசவும்தான் எனத் தெரிந்து

பத்துவயதில் தானே

தேர்ந்தெடுத்த பொதுவாழ்வு!

பொதுவாழ்வுக்குத் தன்னை

அழைத்துவந்த திராவிடமணியும்

உடன் பிறந்த அண்ணனும்

அண்ணாவோடு போய்விட

அண்ணனால் அடிக்கப்பட்டபோதும்

விடாது தந்தை பெரியாரின்

தொண்டராய்த் தொடர்ந்தவர் இவர் !

உடன் இருந்தவர்கள் எல்லாம்

அமைச்சராக வலம் வந்தபோதும்

அய்யா.அம்மாவின் தொண்டராகவே

தொடர்ந்தவர் இவர் !

எத்தனை முறை இவரது

உயிருக்கு குறிவைத்து

எதிரிகளின் தாக்குதல் !

எத்தனை முறை நோய்கள்

இவரைத் தீண்டித் தீண்டிப்

பரிசோதனை செய்தன…

அத்தனையையும் தாண்டி

அய்யா பெரியார் பணிமுடிக்க

விரைகிறார்!பேசுகிறார்!

எழுதுகிறார்!பேட்டி அளிக்கிறார்!

உலகில் வரும் அறிவியல்

புதுமைகள் மூலம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை

கொண்டு சேர்ப்பது எங்ஙனம் என்றே

நாளும் சிந்திக்கிறார்…உடன் இருக்கும்

தோழர்களைத் தூண்டுகிறார்!

தந்தை பெரியாரை நான்

நேரடியாகப் பார்த்ததில்லை!

தந்தை பெரியாரும் நீங்களும் ஒன்று

என்றால் கோபம் வரும் உங்களுக்கு..

ஆனால்  நான் தந்தை பெரியாரின்

கொள்கைகளை ஏற்றதற்கு

அதை வாழ்நாளெல்லாம்

கடைப்பிடிப்பதற்கு

தந்தை பெரியாரின் கொள்கைகளை

அப்படியே பிரதிபலிக்கும்

கண்ணாடியாய் தங்களைக்

கண்டதால்தான் நாங்களும்

தொடர்கிறோம் தந்தை பெரியார்

போட்டுக்கொடுத்த வாழ்வியல் பாதையில்..

வளமாய்த்தான் வாழ்கிறோம்!

எவனுக்கு வாழ்வில் எதில்

குறைந்தோம் நாங்கள்?..



நாளை 93 வயதைத் தொடும் எங்கள்

அய்யாவே! அய்யா ஆசிரியர்

கி.வீரமணி அவர்களே! எங்கள்

குடும்பத்தினர் அனைவரும் இணைந்து

வாழ்த்துகிறோம் தங்களை!

வாழ்க அய்யா !வாழ்க! வாழ்க!

                               முனைவர் வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் .                                                01.12.2025

Sunday, 30 November 2025

சாப்டூரில் நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

 

எனது சொந்த ஊர் சாப்டூர்.அங்கிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் 6ம் வகுப்பு பின்பு எட்டாம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன்.இடையில் ஏழாவது மட்டும் எம்.கல்லுப்பட்டியில்.கடந்த 26.11.2025 அன்று சாப்டூரில்  உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, நிகில் பவுண்டேசன் பயிற்சியாளர்கள் மூலமாக நிகழ்த்துவதற்கு அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் திரு .சுந்தரராஜ் உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்து நடத்தலாம்,மிகவும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்



.நிகில் பவுண்டேசன்,பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.  26.11.2025,புதன்கிழமை இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு  நிகில் பவுண்டேசன் நிறுவனர் திரு.சோம. நாகலிங்கம் IRS(Rtd) அவர்கள் ஒத்துக்கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது.கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று இந்த நிகழ்வு காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது...

மிகவும் நமக்கு பிடித்த ஒருவரின் திடீர் இழப்பை எப்படி சரி செயவது என்பதற்கு திரு சோம.நாகலிங்கம் அவர்களின் செயல்பாடு மிகப்பெரிய உதாரணமாகும். கல்லூரிக்குச்சென்ற தனது மகன் நிகில் திடீரென விபத்தில் இறந்துவிட, சில  நாட்கள்(21 நாட்கள்) துக்கத்திலேயே இருந்துவிட்டு,இனியும் இப்படி இருப்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு உகந்தது அல்ல எனத் தீர்மானித்து,துயரத்தில் இருந்த தனது இணையரிடமும் பேசி ,இறந்த தனது மகன் அடிக்கடி குறிப்பிடும் அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நட்த்துங்கள்எனும் கோரிக்கையை ஏற்று ,இந்த நிகழ்வினை நடத்த ஆரம்பித்தவர் திரு.சோம. நாகலிங்கம் அவர்கள்

திரு சோம நாகலிங்கம் சார் அவர்கள் உரையாற்றுகிறார்.அருகில் தலைமை ஆசிரியர்,நான்,சொ.நே.அன்புமணி மற்றும் பயிற்சியாளர்கள்.


அப்போது அவர் மத்திய அரசுப்பணியில் உயர்பொறுப்பில் இருந்தார்.அவரது இணையரும் அப்படியே.இருவரும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடத்த ஆரம்பித்தனர்.இன்றைக்கு அவரது இணையரும் இல்லாத நிலையில்.தனது பணி ஓய்வுக்குப் பின் தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை திரு சோம. நாகலிங்கம் சார் அவர்கள் செய்துவருகின்றார்.என்னைப் பொறுத்த அளவில் ”கல்விக்காகப் பணி செய்பவர்களே மிகப்பெரும் மனிதர்கள் “இந்த அறக்கட்டளை பற்றி அறிந்துகொள்ள https://www.nikhilfoundation.co.in/index.php

இந்த அறக்கட்டளை பற்றி மேலே குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று பார்த்தால் முழுமையாக அந்த அறக்கட்டளை பற்றிப் புரிந்துகொள்ளமுடியும்.மிகப்பெரும் பணி,போற்றவேண்டிய பணி.

26.11.2025 புதன்கிழமை சாப்டூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் ,மாலையில் மிக மகிழ்ச்சியாக பின்னோட்டம் அளித்தனர்.அவர்களின் உற்சாகம் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.

முழு நாளும் சாப்டூர் அரசுப்பள்ளியில் இருந்தது மிக மகிழ்வான நாளாக இந்த நாள் எனக்கு அமைந்தது.என்னோடு எனது மகன்  சிறப்பு பி.எட். முடித்திருக்கும் சொ.நே.அன்புமணியும் வந்து கலந்து கொண்ட்து மேலும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது.

சிறப்பு பயிற்சியாளராக  திரு இராமூர்த்தி அவர்கள் நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்தார்.,மற்றும் பயிற்சி கொடுப்பவர்களாக திரு எஸ்.பி.குமரகுருபரன், திரு வேல்முருகன்,திரு மாரீஸ்வரன், திரு ப்ரீத்தா,திரு சுகுமாறன்,திரு நந்தினி மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்தார்கள்.


உற்சாகமாக பின்னோட்டம் கொடுத்த ஒரு மாணவிக்கு நூல் பரிசு 

...


சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு க.சுந்தரராஜ் M.Sc,M.Phill.,B.Ed அவர்களும் உதவித் தலைமையாசிரியர் திரு சு.தமிழிரசன் M.Sc.,B.Ed அவர்களும் மற்றும் அத்தனை ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியினை திரு சோம்.நாகலிங்கம் அவர்கள் நகைச்சுவையோடும் வாழ்வியல் எதார்த்த நிகழ்வுகளோடும் இணைத்து அருமையாக நட்த்தினார். இன்னும் இந்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுக்க நான் முயற்சிகள் எடுக்கவேண்டும்.தலைமை ஆசிரியரும்,தமிழாசிரியரும் நூலகத்தைக் காண்பித்தனர்.அருமையான புத்தகங்களை தமிழ்நாடு அரசு அளித்திருக்கிறது.அதைப் பள்ளிக் குழந்தைகள் நன்றாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மகிழ்ச்சி அளித்தது.

 

Monday, 24 November 2025

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)...தீபிகா சுரேஷ்

 

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)

ஆசிரியர் : தீபிகா சுரேஷ்

பதிப்பகம் : படைப்பு,கடலூர் -2 பேச : 7338897788 /7338847788

பக்கங்கள் : 130, விலை ரூ 200 முதல் பதிப்பு 2025

வாருங்கள் படிப்போம் குழுவின் மூலம் அறிமுகமான தோழர் தீபிகா சுரேஷ் அவர்களின் நாலாவது படைப்பு.தலைப்பு ‘சிவராமு 1-ம்தெரு வார்டு எண் 28 ‘. தன்னுடைய இளமைக்காலம்,உறவுகள் பற்றிய நினைவுகளைக் கவிதைகளாக வடித்துக் கொடுத்திருக்கிறார். எளிய சொற்களில் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை மட்டுமல்ல வாசிப்பவர்களின் இளைமைக்காலத்திற்கும் அழைத்துச்செல்லும் வல்லமை உடையதாக இக்கவிதைத் தொகுப்பு இருக்கிறது.

‘திண்ணைகள் இருந்தவரை

தெருக்கள் உயிரோடு இருந்தன

சில உறவுகளும்’

என்று சொல்கிறார்.உண்மைதானே,கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம் பெயர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு மூடப்பட்டே இருக்கும்  எதிர் வீட்டுக் கதவுகள் பழக்கமாகி விட்டிருக்கின்றன. நாமும் அப்படித்தான் கதவை மூடியே இருக்கப் பழகியிருக்கின்றோம்இப்போது கிராமங்களும் கூட திண்ணைகள் இல்லாமல் அப்படி மாறிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டுவதுபோல் உள்ளது இக்கவிதை.

‘ . . . எண்ணெய் தேய்த்து குளிப்பதும்

     சிணுக்கோலி வைத்து

     முடி உலர்த்துவதும்

      . . . 

      அப்பத்தா அப்பத்தாதான்’  

இந்தக் கவிதையைப் படித்தபோது 102 வயதில் மறைந்த எனது அப்பத்தா சாப்டூர் சின்னக்குட்டி அவ்வா நினைவுக்கு வந்தார்.கடைசிவரை தானே சமைத்தார். தானே எண்ணெய் தேய்த்துக் குளித்தார். எனது அம்மா(அவருக்கு அம்மாவைப் பெத்த அம்மா) எனது அப்பத்தாவை ‘என்ன குமரி, எண்ணெய் தேய்த்துக் குளிச்சிட்டு சிக்கெடுக்க ஆரம்பிச்சிட்ட போல ‘ என்று கேலி செய்யும்போது ‘ போடி ‘ என்று அவர் செல்லமாகத் தன் பேத்தியைத் திட்டுவதுவரை என் மனதுக்குள் ஓடியது.நம் இளமைப்பருவ நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து காண்பிக்கும் கவிதை மிகச்சிறந்த கவிதை இல்லாமல் வேறன்ன?




ஒரு முரணை ஒரு கவிதையில் நன்றாகச் சொல்கிறார்

‘ஊருணிக்கருகே

மூக்கடைத்து

நடந்த போதும்

ஊரணி மீன் குழம்பு

ருசிக்கவே செய்தது’ என.

தன்னுடைய எழுத்துப்பயணம் எப்படித் தொடங்கியது எனத் தோழர் தீபிகா சுரேஷ் குறிப்பிடுகிறார். இக்கவிதையைப் படித்து முடித்தவுடன் வாய்விட்டுச் சிரித்தேன்…

‘பத்தாம் வகுப்பில்

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து

தோழிக்கு வந்த

காதல் கடிதத்திற்கு

பதில் எழுதியதில்

தொடங்கியது

இந்த எழுத்துப் பயணம்….

அந்தக் காதல் என்ன ஆனதென

சத்தியமாய் தெரியாது…’

தான் சோர்ந்துபோகும்போது தனக்கு ஊக்கமளிப்பவர்கள் யார் என்பதை ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்..

‘எப்போதாவது விடுமுறை நாட்களில்

வயலுக்குப் போய் வருகையில்

வெறும் காலோடு

தலையில் புல்லுக்கட்டோ

விறகு கட்டோ தூக்கி

ஓடுவதா நடப்பதா எனத் தெரியாமல்

முன்னேறிப் போகும்

அன்னை மார்களையும்

அக்கா மார்களையும்

மனதில் நிறுத்திக் கொள்கிறேன்

அவ்வப்போது அலுவலகத்தில்

சோர்ந்து போகையில்…

‘நினைவு ஒரு ஆவணம் ‘ என ஆரம்பித்து ஓர் அழகிய அணிந்துரையை எழுத்தாளர் ரவி சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். ‘கவிதைகளுக்கும் எனக்குமான தூரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன தூரம் என்றாலும் …’ என ஆரம்பித்து தலைமையாசிரியர் திருமதி ரோசாலி சேவியர் தான் வாழ்ந்த தெருவைப் பாடிய கவிஞர் தீபிகா சுரேஷை மனதாரப் பாராட்டி மகிழ்ந்து வாழ்த்துரை அளித்திருக்கிறார்.




இந்தக் கவிதைத் தொகுப்பில் பழமையைப் போற்றும் சில கவிதைகளும் இருக்கின்றன. எனக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டெனினும் தன்னுடைய கிராமத்து வாழ்க்கையை,அப்பாவை,அப்பத்தாவை,தாத்தாவை,கிராமத்துப் பெண்களை, உறவுகளை மிக இயல்பான சொற்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர்களுக்கு மிகவும் இத்தொகுப்பு பிடிக்கும்.நகரத்தில் பிறந்தவர்களும் கிராமத்தைப் புரிந்துகொள்ள இக்கவிதைத் தொகுப்பு உதவும்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர் கவிஞர் தீபிகா சுரேசு அவர்களுக்கு…தொடரட்டும் அவரின் படைப்புப் பணி…

தோழமையுடன்

வா.நேரு, 25.11.2025