Sunday 15 March 2020

வாழ்க மதுரை டாக்டர் வி.என்.ஆர். அவர்கள் புகழ்.......

மதுரையின் புகழ்பெற்ற மருத்துவர்,மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்தவர்,அன்பிற்குரிய டாக்டர் வி.என்.ஆர். என்று அழைக்கப்படும் வி.என்.இராஜசேகரன் அவர்கள் நேற்று(14.03.2020) இய்றகை எய்திருக்கிறார்.ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றியவர், ஆயிரக்கணக்கான நோயாளிகள் நலமாக வாழ்வதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர் வி.என்.ஆர்.அவர்களின் மறைவு மிகப்பெரிய வருத்தத்தையும் துயரத்தையும் தருகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு 1996-ல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எனது தாயார் திருமதி சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்கள் சிகிச்சை பெற்று நலமுற்றது முதல் 2013-ல் அவர்கள் மறையும்வரை தொடர்ச்சியாக டாக்டர் வி.என்.ஆர். அவர்களிடம் மருத்துவம் பார்த்தோம். நான், எனது குடும்ப உறுப்பினர்கள்,எனது அண்ணன்,தம்பி,தங்கை,மாமா என அனைவரும் மருத்துவம் பார்த்த டாக்டர். நோயைச்சரியாகக் கணிப்பதில் அப்படி ஒரு வல்லமை உடையவர். கொடுக்கும் மருந்தும் சரியாக குணமாக்கும். கொஞ்ச நாட்கள் பழகியபிறகு வெகு இயல்பாகவும் என்னோடு பேசக்கூடியவர்.அப்படி பேசியபோது தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்த கதையைச்சொன்னார்.

விருதுநகரில் 1954-55 களில் பி.யூ.சி.முடித்துவிட்டு, மெடிக்கல் சீட் எதிர்பார்த்த நிலையில் டாக்டர் வி.என்.ஆர்.அவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. அப்போது இந்தப்பாழாய்ப்போன நீட் போன்ற தேர்வுகள் எல்லாம் இல்லை. கொஞ்சம் மதிப்பெண் குறைந்த நிலையில் , டாக்டர் வி.என்.ஆர். அவர்கள், அவர் மட்டும் சென்னைக்குப் போயிருக்கிறார். சென்னைக்குச்சென்று அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராசர் இல்லத்திற்குச்சென்றிருக்கிறார். அவரை நேராக எளிதாகச்சந்தித்திருக்கின்றார்.(இன்றைக்குப் போய் அப்படி பார்க்கமுடியமா என்றார் ..சில ஆண்டுகளுக்கு முன்பு).  பெருந்தலைவரிடம் தான் விருதுநகரில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன், பெருந்தலைவர் யார் வீட்டுப்பையன் என்று கேட்டிருக்கிறார். இவர் சொன்னவுடன்,என்ன விசயம் என்று கேட்டிருக்கிறார். நான் மருத்துவம் படிக்கவேண்டும், அதற்காகவே உங்களிடம் கேட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல, மதிப்பெண்ணைக்கேட்டு, இந்த மதிப்பெண்ணிற்கு சாதாரண சீட் கிடைக்காது,கூடுதலாக பணம் கட்டி படிக்கவேண்டிய சீட்டிற்கு உனக்கு சிபாரிசு செய்கிறேன் என்று சொல்லி டாக்டர் வி.என்.ஆர். அவர்களுக்கு டாக்டர் படிப்பு படிக்க பெருந்தலைவர் காமராசர் வழி செய்திருக்கிறார்.


இதனைச்சொல்லி சொல்லி பூரிப்பார் டாக்டர் வி.என்.ஆர். அவர்கள்.பொது அமைப்புகளில் பங்கு பெற்று தனது பங்கினைச்செலுத்தி வந்தார். எனது தாயார் மறைந்த நேரத்தில் படத்திறப்பிற்கு அழைப்பிதழைக் கொடுத்துவந்தேன். நிகழ்வுக்கு வந்து தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அய்யா ஆசிரியர் அவர்கள் நமது வரியியல் வல்லுநர் அய்யா இராஜரத்தினம் அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர் டாக்டர் வி.என்.ஆர். அவர்கள், நேரு ,உங்களுக்குத் தெரியுமா என்றார். 



மிகப்பெரிய மருத்துவசேவையை மதுரை மக்களுக்கு அளித்தவர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சிட்டி ஆஸ்பத்திரி ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தவர். அவரின் மறைவிற்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு , அவரின் நினைவாக ஏதேனும் அறக்கட்டளையை நிறுவி, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு உதவும் வண்ணம் ஏதேனும் செய்யவேண்டும் என்னும் விருப்பத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க டாக்டர் வி.என்.ஆர். அவர்கள் புகழ் ! வாழ்க அவரின் மருத்துவத்தொண்டு !

1 comment:

முனைவர். வா.நேரு said...

அன்பின் நிறைந்த மருத்துவரும், பாசம் பொழியும் குடும்பமும் ! இது தான் உண்மைத் தமிழகம் !
பெரியார் பன்னாட்டு மையம் இயக்குநர் டாக்டர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் முகநூலில்