Friday 27 March 2020

அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சு வண்ணம் தெரு...தோப்பில் முஹம்மது மீரான்

அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சு வண்ணம் தெரு
நூல்  ஆசிரியர் : தோப்பில் முஹம்மது மீரான்
வெளியீடு      : காலச்சுவடு பதிப்பகம்,முதல் பதிப்பு ஆகஸ்ட் 2019
முதல் பதிப்பு   : 2008
மொத்த பக்கங்கள் : 279, விலை ரூ 300

                     அன்பிற்கினிய நண்பர் ,மதுரை புத்தகத்தோழன் பா.சடகோபன் அவர்கள் எனது விருப்ப ஓய்வு நாளன்று(31.01.2020) பரிசாகக் கொடுத்த புத்தகம்.அட்டையே பிரிக்காமல் இருந்து  நேற்றைக்கு முந்தைய நாள்  பிரித்து படிக்க ஆரம்பித்த புத்தகம். முதல் 4,5 அத்தியாயங்கள் படிக்கும்வரை நாவல் பிடிபடாமலேயே இருந்தது.ஆனால் அதற்குப் பிறகு தொடர்ச்சியாக வாசிக்கத்தூண்டிய நாவல். நேரமும் கிடைக்க ஓரிரு  நாளில் படிக்க முடிந்த நாவல்.

                     இந்த நாவலைப் படித்து முடித்த பொழுது ,கலகக்காரர் தோப்பில் முஹம்மது மீரான் என்று எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.நேரடியாக சில விசயங்களைச்சொல்லாமல், அற்புதமான கதைச்சொல்லாடலில்,வட்டார வழக்கில் ,அவரது மொழியில் அவரது மதத்தையே எள்ளி நகையாடும் கதையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. தான் பிறந்த சாதியில் அல்லது மதத்தில் இருக்கும் குறைபாடுகளை நகையாடுவதற்கு உள்ளத்தில் உறுதியும் ,தெளிந்த உலகப்பார்வையும் இருக்கவேண்டும்.இந்த நாவலைப் பொறுத்தவரையில் அது நிறையவே நூல் ஆசிரியரிடம் இருக்கிறது. 

அடக்கம் செய்யப்பட்ட தாயின் வரலாறிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. பெண் கேட்ட மன்னனிடம் இருந்து தப்பிக்க 8 ஆண்பிள்ளைகளையும் ஊரை விட்டு போகச்சொல்லிவிட்டு, அழகான தன் பெண்ணை உயிரோடு புதைக்கும் தகப்பன்.புதைத்து விட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் தகப்பன் என்று தாயின் வரலாறு கூறப்படுகிறது.இந்து மதத்தின் சிறு பெண் தெய்வங்கள் போல, இறந்த போன அந்தப்பெண்ணே அந்த அஞ்சு வண்ணம் தெருவைக் காப்பதாக அந்தத் தெருவில் வாழும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.." வெளிச்சம் நுழையாத அஞ்சுவண்ணம் தெருவில் வாழும் மக்கள். அவர்களுடைய மனங்களில் பதியவைத்த விசயங்களை,நம்பிக்கைகளை எளிதில் மாற்றிவிட முடியாது ...தெருச்சனங்களிடத்தில் சொல்லிப்புரியவைக்க முடியாதபடி ஒரு மூட நம்பிக்கை அந்த வீட்டைச்சுற்றி விழுதுகள் இறக்கியது.பிடுங்கி எறிய முடியாதபடி விழுதுகள் ஆழ்ந்து இறங்கியாதலேயே ..." ..ஆம்..பிடிங்கி எறிய முடியாதபடி ஆழ்ந்து இறங்கி நிற்கும் அந்த நம்பிக்கைகளை, அந்தக் கள்ளமில்லா மனிதர்களின் மனங்களிலே வேர் பொட்டு பதிந்திருக்கும் அந்த மூட நம்பிக்கைகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். 
.
சில பாத்திரப்படைப்புகளை வாசிப்பவர்கள் மறக்க இயலா வண்ணம் நாவாலாசிரியர் படைத்திருக்கிறார்.இந்த நாவலின் முக்கியமான பாத்திரம். மைதீன் பிச்சை மோதின்.பலருடைய பழைய வரலாற்றை தெரிந்தவர். தைக்கா பள்ளிவாசல்தான் அவர் உலகம். ஐந்து நேரமும் தொழுகைக்காக பாங்கு ஓதுபவர். யாரும் தொழுகைக்கு வரவில்லை என்றாலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தைக்கா பள்ளிவாசலில் பாங்கு ஓதுபவர். தைக்கா பள்ளிவாசல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்த போது அதனை சரி செய்ய முயன்று கொண்டேயிருக்கிறார்.இல்லற வாழ்வில் இருக்கிறவர் என்றாலும் அவரது மனைவி பற்றியும் அவரது இல்லற வாழ்க்கையும் சில பக்கங்களில் மட்டும் ஆனால் நாவல் முழுக்க அவர் வருகின்றார். அவர் பாங்கு ஓதும் தைக்கா பள்ளிவாசலும் வருகிறது.கடைசியில் பாம்பு கடித்து அவர் இறக்கின்றார். அவரைப் பற்றி வாப்பாவின் மதிப்பீடு இப்படி "மைதீன் பிச்சை மோதினுடைய ஆழமான நம்பிக்கையை வாப்பா கேள்வி கேட்கவில்லை. பாவம்,உலகம் தெரியாத அப்பாவி ஜன்மம். இது போன்றவர்களுடையை கட்டுப்பாட்டில்தான் எல்லாப்பள்ளிவாசல்களும் சமூகமும் " பக்கம் 115....ஆழமான நம்பிக்கை உள்ள, வாழத்தெரியாத,அப்பாவியான பாத்திரப்படைப்பாக மைதீன் பிச்சை மோதினைப் படைத்து போகிற போக்கில் 'இது போன்றவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் எல்லாப்பள்ளிவாசல்களும் சமூகமும் 'என்று சொல்கின்றார்.


மைதீன் பிச்சை மோதின் போலவே நாவல் முழுக்க வரும் இன்னொரு பாத்திரம் 'மம்மதும்மா '.அஞ்சுவண்ணம் தெருவையே தனது வாய்ப்பேச்சாலும் துடுக்குத்தனமான அஞ்சாமையாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தெருவில் சோறாக்கி,தெருவில் உண்டு, ஒரு வீட்டுத்திண்ணையில் படுத்து உறங்கும் மூன்று பிள்ளைகளின் தாய். அவள் எப்பேர்ப்பட்ட வீரப்பரம்பரையைச்சார்ந்தவள் என்பதனை நாவலின் நடுப்பகுதியில் மைதீன் பிச்சை மோதின் வழியாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நாவலாசிரியர்.தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கும் ஒரு ஸொல்  பார்ட்டியை அவள் இருட்டில் வரவைத்து  கவனிக்கும் விதம், ஒரு சிவாஜிகணேசன்  படத்தில் இந்தா வறுத்த கறி, அவிச்ச முட்டை என்று  மனோரமா எம்.ஆர்.ஆர்.வாசுவை மொத்தும் காட்சிகளை நினைவூட்டுகிறது.அஞ்சுவண்ணம் தெரு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் நிலையில் அவள் படும் பாட்டை, ஒற்றுமையாக இருந்த தெருவை இப்படி மதம் பேசி மதம் பிடிக்கவைத்து விட்டார்களே என்னும் ஆற்றாமை, அதனால் அவள் அமைதியாகும் தன்மை என நெஞ்சில் நிற்கும் பாத்திரமாக மம்மதும்மா நாவல் முழுக்க வருகின்றார். ஒரு நாவலின் வெற்றிக்கு பாத்திரப்படைப்பின் வலிமை எவ்வளவு அவசியம் என்பதனை நாவல் எழுத விரும்புகிறவர்கள் புரிந்துகொள்வதற்கான விளக்கம் போல இந்த நாவலில் பாத்திரப்படைப்புகள்..

அதே போல தைக்கா பள்ளிவாசலை விட உயரமாக இருக்கும் வீட்டை தனது மகள் தாத்தாவுக்கு வாங்கித்தரும் வாப்பா. மூட நம்பிக்கையால் தனது மகளும் மருமகனும் தைக்கா பள்ளிவாசலுக்கு இரண்டு மினார்கள் கட்டிக்கொடுத்தால்தான் தங்கள் வீடு பள்ளிவாசலை வீடு தாழும்,அப்போதுதான் தங்கள் வாழ்வு நன்றாகும் என்று மாற்றி மாற்றி சொல்வதைக் காதில் வாங்கிக்கொண்டு ஆனால் அதனைச்செய்யாமல் விட்டுவிடும் வாப்பா. நாவலின் முடிவில் தாத்தாவின் பிள்ளைகள் மிக உயர்ந்த நிலைக்கு வருவதைக் காட்டி ,அப்படியெல்லாம் மூட நம்பிக்கை கொள்ளத்தேவையில்லை என்பதனை கதையின் மூலமாகச்சொல்லிச்செல்லும் தன்மை.

" வாப்பா பதிலேதும் பேசவில்லை.அறிவிலிகளோடு பேசி வெல்லமுடியாது என்பது வாப்பாவுக்குத் தெரியும். சமாதியைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருப்போனிடம் அறிவுரை செய்யப்போனால் தாமே முட்டாளாகிவிடுவோம் என்றுணர்ந்து வாப்பா பேச்சின் திசையைத் திருப்ப முயன்றார். ..பக்கீர் பாவா சாகிப் கட்டவிழ்த்துவிட்ட ஆதி வரலாறு வாப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.நம்ப முடியாததாகப் பட்டது.ஆனால்/ சனம் நம்புகிறது. சனங்களை நம்பச்செய்யும்படியாகக் கட்டமைக்கப்பட்ட கதைகள் எத்தனையோ உள்ளவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.உண்மையானதாகவும் இருக்கலாம்.ஒரு கோட்பாட்டை நிலை நாட்டுவதற்காக ஒரு பெண்ணை உயிரோடு புதைத்த கொடிய செயலை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் ?இறைவனுக்கு உவப்பான செயலா இந்தப் பெண் கொலை? அரும்கொலை செய்யப்பட்டவள் புனிதவதியாக கொண்டாடப்படுகிறாள் !" பக்கம் 118. இது ஆதியிலிருந்து அந்தத் தெருவில் வாழும் இஸ்லாமிய மக்களைப் பற்றிய வாப்பாவின் மதிப்பீடு.

தோப்பில் முகமது மீரான் மறைந்தபொழுது அவரைப் பற்றி பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன் "இஸ்லாமியக் கலாச்சரம் அதன் உண்மையான வடிவத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவானது மிகக் குறைவு. அந்தக் கலாச்சாரத்தை பொதுவெளிக்கு சிறப்பாக முன்வைத்தவர் தோப்பில். இஸ்லாம் குறித்து எழுதுவதில் இருந்த மனத் தடையை அவர்தான் முதன் முதலில் உடைத்தார். இஸ்லாம் சார்ந்த வாழ்வை அவர் தன் எழுத்தில் விமர்சன பூர்வமாக அணுகினார்." உண்மை. இந்த நாவல் படிக்க,படிக்க நாஞ்சில் நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களின் கலாச்சாரத்தை அணு,அணுவாக புரிந்துகொள்ள முடிகிறது.கலாச்சாரத்தை எப்படியெல்லாம் மீறுகிறார்கள் என்பதனை மம்மதும்மா போடும் சணடைகள் மூலமும் விளக்குகின்றார். அந்தக் கலாச்சாரத்தில் நேர்மறையான நடைமுறைகள், எதிர்மறையான நடைமுறைகள் இரண்டையும் உள்ளது உள்ளபடியாக பதியும் போக்காக இந்த நாவல் அமைந்திருக்கிறது. 

எழுத்தாளனின் மனம் மனித நேயத்தால் நிரம்பி வழிகிறபோது , அவனது எழுத்துக்களிலும் அதுதான் வெளிப்படும்.மனித நேயத்திற்கு எதிராக அறியாமைதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகள் பற்றிய அறியாமை,மதங்களைப் பற்றிய அறியாமை,சமூகவியல் பற்றிய அறியாமை,அநீதியாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலாத அறியாமை  என அறியாமைகளால் நிரம்பியிருக்கும் மக்கள் அவதிப்படும்போது , மனித நேயமிக்க எழுத்தாளனின் எழுதுகோல் ,அந்த அறியாமைகளை எப்படியாவது நீக்கிவிட நமது எழுதுகோல் துணைபுரியாதா என்னும் ஏக்கத்தில்தான் பக்கங்களை நிரப்பும்.கும்பல் கும்பலாக மனிதர்கள் சேர்ந்து , சக மனிதனை மாட்டின் பேரால் அடித்துக்கொள்ளும் இந்த நாட்டில் அறியாமை நீக்கிட எழுதும் எழுதுகோல்கள் போற்றப்படவேண்டியவை. ஆனால் தோப்பிலைப் பொறுத்தவரை இந்த நாவலில் ஏதேனும் ஒரு பக்கம் நின்றுகொண்டு,பிரச்சாரமாய் ஏதும் செய்யவில்லை...ஆனால் அவர் எழுதிச்செல்லும் எழுத்தினை வாசிக்கும் எவருக்கும் அவரது மனித நேய நோக்கம் எளிதில் பிடிபடும். 

கடந்த 10,20 ஆண்டுகளில் தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்கிறார்கள். அந்த பிரிந்து நிற்கும் இரண்டு பிரிவுகள் என்ன, ஏன் அப்படி பிரிந்து நிற்கிறார்கள் என்பதனை தனது நாவல் மூலம் இஸ்லாத்தைப் பற்றியே அறியாத வாசகனும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நாவலில் எழுதியிருக்கிறார்.பழைய பிரிவாக நிற்கும் மைதீன் பிச்சை மோதின்,வேம்படிப் பள்ளி சொற்பொழிவு மேடையில் நின்று வெள்ளிக்கிழமை குத்பா(சொற்பொழிவு) ஓதும் குவாஜா அப்துல் லத்தீப் ஹஸ்ரத்,அவர்களோடு சேர்ந்த பல துணைப்பாத்திரங்கள் என ஒரு பிரிவாக சுன்னத் ஜமா அத்தார்கள்...தர்காவை வணங்குதல், சீறாப்புராணம் போன்ற காப்பியங்களை போற்றிப்புகழுதல் என விரிவாக இந்தப் பிரிவினர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறையை, நம்பிக்கையை எழுதியிருக்கிறார்.

அஞ்சு வண்ணம் தெருவில் இதற்கு மாற்றாக வரும் இன்னொரு பிரிவினரை ஆரம்பித்து வைப்பராக சீக்கா வீட்டிலுள்ள சாவல் என்னும் பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.இரண்டு வருடம் சவூதி அரேபியாவில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் சாவல் ,தாடியோடு ஊருக்கு வருகிறார். எல்லோரும் தொப்பி போட்டு தொழும்போது, அவர் தொப்பியில்லாமல் தொழுகின்றார்.ஏன் தொப்பி போடவில்லை என்று கேட்டபோது ஏன் தொப்பியில்லாமல் தொழக்கூடாது? எனக் கேள்வி கேட்கிறார்.தனது பெயரான சாகுல் ஹமீது என்னும் பெயரை அப்துல் ஜலீல் என்று மாற்றியதாக குறிப்பிடுகிறார்." "நான் இப்பம் சுத்த தவ்ஹீத்வாதி..அவுலியாக்களுடைய பேரை வைக்கக்கூடாது..கபர்களை ஒப்படைக்கணும்.மல்லூது ஓதக்கூடாது.சீறாப்புராணம்,மெஹராஜ் மாலை,மஸ்தான் பாடல் எல்லாத்தையும் தீ வைக்கணும் " என்று அப்துல் ஜலீல் சொல்வதாகக் கூறி தவ்ஹீத் என்னும் இஸ்லாமிய அமைப்பின்  நோக்கங்களை மிகத்தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

அபூ ஜலீல் அவன் வீட்டில் இருந்த மஸ்தான் பாடலை எடுத்து வெண்ணீர் அடுப்பில் போட்டு எரிக்கிறான்.அப்படி அவன் செய்தபோது " பயலுக்குப் பைத்தியம் பிடிச்சுப்போச்சோனு அவன் அம்மா அழுது வடிச்சாள்.நாட்கள் நகர நகர தாய் தந்தையருக்கும் தெரு சனங்களுக்கும் புரிஞ்சு போச்சு,பயலுக்குப் பைத்தியமில்லை,சவூதி அரேபியாவிலிருந்த் கொண்டு வந்த 'புதிய கொள்கை 'என்று." பக்கம் 156...

சுன்னத் ஜமா அத்தார்களுக்கும், தவ்ஹீத்வாதிகளுக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்களில் ஆரம்பித்து, குத்து,வெட்டு என்று இரத்தக்களரி ஆகும்வரைக்குமான கதையாடல்கள் வெறும் கதையாக இல்லை. இரத்தமும்,சதையுமாக ஒன்றுக்குள் ஒன்றாய் ஒற்றுமையாய் இருந்தவர்கள் அஞ்சுவண்ணத்தெருவில் இருந்தவர்கள்... பிளவுபடுவதும் ,ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ளும் மனநிலையில் அலைவதையும், அப்பாவி ஒருவன் அநியாயமாகச்சாக அவன் தன் தரப்பைச்சார்ந்தவன் என இரு பிரிவும் இரங்கல் போஸ்டர் அடிப்பதும் என வாசிக்கும் நம்மைப் போன்றவர்களுக்கே வலிக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் வாசிக்கும்போது இன்னும் அதிகமாகவே மனசாட்சி உள்ளவர்களுக்குச்சுடும்.அஞ்சுவண்ணம் தெருவில் நடந்த சண்டையைத் தொடர்ந்து நாவலாசிரியர் இப்படி எழுதுகிறார்.

" அஞ்சுவண்ணம் தெருவில் நடந்த அடிதடிச்செய்தியை வளைகுடாவுக்கு அஞ்சுவண்ணம் அந்தி மேகம் கொண்டு சென்றது.தவ்ஹீத் பள்ளி கட்டணும்.வளைகுடாவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் அள்ளிக்கொடுப்பதாகச்சொன்ன  வாக்குறுதியை ,வளைகுடாவிலிருந்து புறப்பட்ட பாலைவன மேகம் அஞ்சுவண்ணம் தெருவிற்கு வடபகுதியிலுள்ள  மேற்குத்தொடர்ச்சி மலையின்  முகட்டில் வந்து நின்ற தம்பியில்லாக் கம்பி வழியாக அபூஜலீன் காதில் சொன்னது. அந்நேரமே அவன் எடுத்த முடிவு.இனி சவூதிக்குப் போகவேண்டாம்.இங்கேயே சம்பாதிப்பதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது.முதலில் தவ்ஹீத் பள்ளி! இரண்டாவதாக தனி கபர்ஸ்தான்.அதற்காக ஒரு வளைகுடா வசூல்....அபூஜலீல் தீவிரமாகச்செயல்பட்டான்..."

அபுஜலீலின் நோக்கத்தைச்சொல்வதோடு தன் கருத்தையும் பதிக்கின்றார் இப்படி " கொடி கட்டுவதைத் தடுத்து  ஒரு குழப்பம் உண்டாக்கினால் பல இலாபங்கள் உள்ளன.அரசியலுக்குள் மதத்தையும் சாதியையும் புகுத்தினால் அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் பல உள்ளன.அதுபோன்று மதத்தை அரசியலாக்கினால் போலி மதவாதிகளுக்கு அதனால் பல நன்மைகள் உள்ளன.மதத்தைப் பற்றி எதுவும் தெரியாத வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் மதவெறியை ஊட்டி அது வழியாகப் பொருளாதார நன்மைகள் அடையலாம் "பக்கம் 159...மிகத் தெளிவாக வரையறுத்துக்கூறுகின்றார்.
மனுஷ்ய புத்திரன் தன்னுடைய பி.பி.சி.பேட்டியில் " இஸ்லாம் மதத்தில் உள்ள அடிப்படை வாதத்தை,மதத்தின் பேரால் மக்களை ஒடுக்குவதை அவர்(தோப்பில் முஹம்மது மீரான்) எழுதினார்.அந்த வாழ்வில் உள்ள இருள் மிகுந்த பக்கங்களைச்சுட்டிக் காட்டினார்" என்று குறிப்பிடுவதை இந்த இடத்தில் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.நன்றாகவே தோப்பில் எழுதியிருக்கிறார்..பின்வரும் பத்தியைப் பாருங்கள்...

" அணிகளாகப் பிர்ந்து நிற்போருக்கே எதற்கென்று தெரியாது. மக்களுக்கிடையே இருக்கும் மத நம்பிக்கையை அறுவடை செய்து களத்தில் நெல்லைக்குவித்து மூடிப்போட்டுக்கொண்டிருக்கும் பிழைக்கத் தெரிந்த தந்திரசாலிகளான விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
விரல் ஆட்டுவதா ? வேண்டாமா?,,,தல்கீன் ஓதுவதா? வேண்டாமா/ தொப்பி போடுவதா ? வேண்டாமா ?...
சமுதாயத்திற்குள் ஊடுருவிச்சென்று சமுதாயத்தின் மனசை வாசித்த பிறகுதான் சில தெளிவுகள் கிடைத்தன.நகரப்பகுதிகளில் வானளவு உயர்ந்த கட்டிடங்களில் வாழ்பவர்களில்ல,சமுதாயத்தின் அசல் முகத்தைக் காட்டும் கண்ணாடி..சேரிகளில் கிராமப்புறங்களில் ஒட்டிய வயிற்றுடன் கீறத்துணி கொண்டு மானம் மறைத்துத் திரியும் மக்களின் முகங்களில் இந்தச்சமுதாயத்தின் நிஜ நிலையைத் தரிசிக்கலாம்.செல்வந்தர்களாலும் மத புரோகிதர்களாலும் சூறையாடப்பட்ட சமுதாயமாகப் போய்விட்டது.
இந்தச்சூறையாடல் பேர்வழிகளான மத புரோகிதர்களை வாப்பா வீட்டு நடையில் ஏறவிடமாட்டார். மத அறிஞர்களுக்கும் மத புரோகிதர்களுக்குமிடையே அரபிக்கடல் அளவு அகலம் கிடக்கிறதென்பார். புதுப்புது மத இயக்கங்கள் உருவாகி நம்பிக்கையாளர்களிடம் மனச்சஞ்சலங்களை ஏற்படுத்தி வருவதில் மாமூல் புரோகிதர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு ..மறுக்க முடியாத முக்கிய பங்கு " பக்கம் 174.

அஞ்சுவண்ணம் தெருவில் தவ்ஹீத் இயக்கத்தை ஆரம்பித்து வைத்த சீக்கா சாவலுடைய தம்பி விக்கன் எக்கியாவுக்குத் திருமணம். நபிவழித் திருமணம்.இந்தத் திருமண நிகழ்வை நன்றாக பகடியாக எழுதிச்செல்கின்றார் நாவலாசிரியர். திருமணத்தில் பேசவந்த சிறப்புப்பேச்சாளர் " இதற்கு முன்பு நடந்த அனைத்துத்திருமணங்களும் இஸ்லாம் காட்டிய நேர் மார்க்கப்படி நடைபெறவில்லை. எல்லாம் ஹரமான(தீய) முறையில் நடந்த திருமணங்கள் " என்று பேச நாற்காலிகள் பறக்கிறது. சிறப்புப்பேச்சாளர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்.ஊரே ரண களமாகிறது.

அதற்கு பின்பு நடைபெறும் புதிய மசூதி கட்டுதல். அதன்பின் சுன்னத் ஜமா அத்தார்களுக்கும் தவ்ஹீத் பிரிவினருக்கும் நடக்கும் சண்டை. மசூதி யாருக்கு என்பதற்காக பாராளுமன்றத்தேர்தல் போல நிறைய செலவில் நடக்கும் தேர்தல். தேர்தலில் தோல்வி பெற்ற பின்பு ,அதனைச்செல்லாது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்துக்கு போகும் ஒரு பிரிவினர். நீதிமன்றத்திற்கு போனவுடன் இரண்டு பேருக்கும் இல்லை, பொதுவான ரிசீவரால் மசூதி நிர்வகிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு. ரிசீவராக நியமிக்கப்படும்  ஒரு ஆர்.எஸ்.எஸ்.வக்கீல் கதிரேசன்ஜி...எல்லா மசூதிச்செலவுகளுக்கும் கதிரேசன்ஜி கருணையை எதிர் நோக்கும் மசூதி பணியாளர்கள்...தொடர்ந்து எழுதும் நாவலாசிரியர் இப்படி எழுதுகிறார்.." மாபாவிகளே ,சீறும் விஷப்பாம்புக்கு ஊர்ந்து விளையாட புல்வெளி கொடுத்துவிட்டேளே " .

கோவையில் கடவுள் இல்லை என்று சொன்னதற்காக கொடுமையாக தோழர் பாரூக் தன்னுடைய மதத்தைச்சார்ந்தவர்களாலேயே கொல்லப்பட்டார்.மத புரோகிதர்களுக்கும், மத அறிஞர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருப்பதை இஸ்லாமிய மக்களுக்கு உணர்த்த தோப்பில் நினைத்திருக்கிறார்.உண்மையை நேரிடையாகக் கூறினால் ,தன் மதத்தைச்சார்ந்தவர்கள் தன்னைக் கொல்லவும் செய்வார்கள் என்று தோப்பில் முகமது மீரான் நினைத்திருக்கலாம்.அதே நேரத்தில் உண்மையை சொல்லாமல் இருக்கவும் கூடாது என்ற நிலையில் ஒரு மாய மொழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.மதத்தின் பிடிப்பு இல்லாத பாத்திரப்படைப்பு எதுவும் இல்லை.ஆனால் அந்தப் பிடிப்பின் அடிப்படையில் மதத்தின் பேரால் நடைபெறும் முரண்பாடுகள் அத்தனையையும் சொல்லியிருக்கின்றார். அவருடைய மொழி ஆளுகை அப்படி ஒரு வசீகரத்தைத் தருகிறது  களந்தை பீர்முகமது அவர்கள் சொல்வது போல "உருவரும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு.இதற்கு இணையாகவே பழமையும் புதுமையான கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடருக்கின்றன.அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப் போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார்". உண்மைதான்..விலகி விலகிச்சென்று உண்மையை  அற்புதமாக சொல்லியிருக்கின்றார். 

" சனங்களுடைய அறியாமையைப் பற்றி அடிக்கடி சிந்திப்பார். பணமும்,அழகும்,சொத்து சுகமும் இருந்தால் மட்டும் போதாது.'அகல்' வேண்டும் என்பார்.எதை நம்ப வேண்டும்,எதை நம்பக்கூடாது என்ற பிரித்தறிவு.இந்தப் பிரித்தறிவுதான் மிருகத்திலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக்காட்டும் அம்சம்" பக்கம் 114..கவனமாக பகுத்தறிவு என்று சொல்லவில்லை, பிரித்தறிவு என்று சொல்கின்றார்.பிரித்தறிய கற்றுக்கொடுக்கும் அழகியல் அத்தனையும் கொண்ட அற்புதப்படைப்பு அஞ்சுவண்ணம் தெரு...." இஸ்லாமிய வாழ்வைப் பற்றி எழுதும்போது ஒன்று புனிதப் படுத்துகிறார்கள். அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், அப்படியே எழுதியவர் தோப்பில்....ஆனாலும் தோப்பில் முகமது மீரான் முன்வைத்தது, வெறும் இஸ்லாம் சார்ந்த வாழ்க்கையை மட்டுமல்ல. தான் வாழ்ந்த நிலப்பரப்பு குறித்தும் ஒரு கவனம் அவருக்கு இருந்தது. அந்த மண் சார்ந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை மிக நுணுக்கமாக அவர் எழுதினார். தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. " என்று சொல்கின்றார் மனுஷ்யபுத்திரன். உண்மைதான் நாமே அஞ்சுவண்ணம் தெருவில் வாழ்ந்து முடித்த ஒரு உணர்வு தோன்றுகிறது இந்த நாவலைப் படித்து முடித்தவுடன்..அப்படிப்பட்ட ஒரு நேர்முகச்சித்தரிப்பு.வாழ்க தோப்பில் முஹம்மது மீரான் !


   




  


                  

6 comments:

ஸ்ரீமலையப்பன் said...

அருமையான விமர்சனம்... ஆனால் இவ்வளவு பெரிதாக தேவையா?

முனைவர். வா.நேரு said...

எனது வலைத்தளத்திற்கு தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...புத்தக விமர்சனம் கொஞ்சம் நீண்டு விட்டது...உண்மைதான். அவரது மொழி ஆளுகை மிகவும் வித்தியாசமாகவும் ஈர்ப்பாகவும் இருந்தது.அதற்காக அப்படியே சில வாக்கியங்களைப் பதிவிட்டேன்.
தங்கள் வலைத்தளங்களில் தாங்கள் எழுதியிருக்கும் புத்தக விமர்சனங்களைப் பார்த்தேன்.மிக்க நன்று. அதைப்போல தங்களின் ஆங்கிலம் கற்பிக்கும் வலைத்தளத்தையும் பார்த்தேன்.(PATHBREAKERS) அருமை. வலைத்தளம் வழியாகக் கற்பிக்கும் கரங்களுக்கு வணக்கங்கள்.கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் உங்களை அடிக்கடி பெருமையாகக் குறிப்பிடுவார்.மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் படிப்போம்.பகிர்வோம்.. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

// தான் பிறந்த சாதியில் அல்லது மதத்தில் இருக்கும் குறைபாடுகளை நகையாடுவதற்கு உள்ளத்தில் உறுதியும், தெளிந்த உலகப்பார்வையும் இருக்கவேண்டும். //

நூலின் சிறப்பு புரிகிறது...

முனைவர். வா.நேரு said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்..அப்படி எழுதுவது கத்தியின் மேல் நடப்பது போன்றது. அதனை சிறப்பாக செய்திருக்கிறார்...படித்துப்பாருங்கள்....

kowsy said...

எழுத்தாளனின் மனித நேயம் அவன் எழுத்துக்களில் பிரதிபலிக்கும். இஸ்லாமிய கலாசாரத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் நாவல் என்று கூறியிருக்கின்றீர்கள். பொதுவாகவே இலக்கியமே மக்கள் வாழ்க்கையைத் தெளிவாகப் படம் பிடிக்கும். அந்த வகையில் இந்நாவல் அமைந்திருப்பதை உங்கள் விமர்சனமே காட்டுகின்றது. ஒரு விமர்சகனுக்கு அந்த நூல் எந்த அளவுக்குப் பிடித்திருக்கின்றது என்பதை அவர் தருகின்ற விமர்சனப் போக்கில் இருந்து அறிந்து கொள்ளலாம். உங்கள் விமர்சனமும் அவ்வாறே உங்கள் மனதில் எப்படி இந்நாவல் இடம் பிடித்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது

முனைவர். வா.நேரு said...

"எழுத்தாளனின் மனித நேயம் அவன் எழுத்துக்களில் பிரதிபலிக்கும். இஸ்லாமிய கலாசாரத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் நாவல் என்று கூறியிருக்கின்றீர்கள்."நன்று..விமர்சனத்தின் சுருக்கத்தை அருமையாகக் கொடுத்திருக்கின்றீர்கள். நன்றி,வலைத்தள வருகைக்கும் தங்கள் மதிப்பு வாய்ந்த கருத்துக்களுக்கும்....