Monday 30 March 2020

உலகை மாற்றிய கொரனா.....வா.நேரு

உலகின் நிகழ்வுகளை
தலைகீழாக மாற்றியிருக்கிறது கொரனா...
நாம் நினைத்துக்கூட பார்க்க
இயலாதவை எல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன...

போப்பாண்டவர் தன்னந்தனியாக
நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்...
மசூதிக்குள் சென்று தொழுகை செய்தவர்களை
கர்நாடக போலிசார் லத்தியால்
அடித்து விரட்டுகிறார்கள்....
கோவிலுக்குள் சென்று கும்பிட்டுக்
கொண்டிருந்தவர்களை அழைத்து அடித்து
அடித்து விரட்டுகிறார்கள் ..
இன்னொரு மாநிலத்து காவலர்கள்..

கரனோ வியாதியைக் கர்த்தர்
தீர்ப்பார் எனச்சொல்பவரை
விரட்டி  அடிக்கிறார்கள் ஊட்டியில்
தலையிலிருந்து பிறந்த ஜாதி நான்
என்று ஜம்பம் அடிக்கும் நண்பர்
அனைத்துக்கடவுள்களையும் திட்டி
அவரின் கடவுள் உட்பட திட்டி
வாட்சப்பில் பதிந்திருக்கிறார்...

எனது கடவுள்தான் பெரிது...
உனது கடவுள்ளெல்லாம் சும்மா
என்றவர்கள் எல்லாம் இப்போது
பேச்சுக்கு அழைத்தால் பம்முகிறார்கள்..
நாத்திகர்கள் உங்களுக்கு ரொம்பவும்
சாதகமாகப் போய்விட்டது...
இப்படி இந்த நேரத்தில்
நாத்திக பிரச்சாரம்..நியாயமா
எனக் கேட்கிறார்கள்.....

எப்போதும் போலவே
இப்போதும் சொல்கிறோம்...
உங்களைச்சங்கடப்படுத்துவது
எங்கள் நோக்கமல்ல...
ஆனால் உங்களுக்கு உண்மையும்
தெரிதல் வேண்டும் என்பதே
எங்கள் விருப்பம்....

எந்தக் கடவுளும் எங்களுக்கு நண்பர்களில்லை
அதைப்போல எந்தக் கடவுளும்
எங்களுக்கு எதிரிகள் இல்லை...
எத்தனையோ கற்பனைக் கதைகள்
இயற்றப்பட்டது போல
எல்லாக் கடவுள்களும்
மனிதனால் படைக்கப்பட்ட கற்பனைகளே
என்பதை இப்போதாவது
உணரச்சொல்கிறோம்..அவ்வளவுதான்


என்னய்யா உங்க 21-ஆம் நூற்றாண்டில்
மகத்தான அறிவியல் முன்னேற்றம்?
இந்த இம்பூட்டுண்டு வைரஸ் உலகையே
கண்ணில் விரலை விட்டு ஆட்டுது...
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டோம்
சூரியனுக்கு ராக்கெட்டுல பக்கத்துல போயிட்டோம்...
அட போங்கப்பா, செத்து விழும்
மனிதர்களை காப்பாத்த முடியலையே....
அறிவியலும் அப்படித்தானே
என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது...

நீங்கள் கேட்பது உண்மைதான்..
அறிவியலும் கூட இன்று
கையைப் பிசைந்துகொண்டுதான் நிற்கிறது...
ஆனால்
மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அறிவியல்
முடியாதது ஒரு நாள் முடியும்
என நம்புவது அறிவியல்...
முடியும் எனும் திசை நோக்கி
முன்னேறிக்கொண்டே இருப்பது அறிவியல்
உறுதியாகச்சொல்கிறோம் இன்னும்
சில நாட்களில் கொரனாவை
உலகிலிருந்து விரட்டிவிடும் அறிவியல்....

மாறுதலுக்கு உட்பட்டு
மாற்றங்களை ஏற்றுக்கொண்டு
மகத்தான மனித நேய நோக்கில்
தொடர்ந்து கொண்டிருப்பது அறிவியல்...
ஆன்மிகம் போல அறிவியல்
அவரவர் மதக்குளத்திற்குள்
தேங்கிக் கிடக்கும் நீரல்ல மாற்றாக
ஓடிக்கொண்டே இருக்கும் நதி.....

இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...
இப்போதைய தேவை
நமக்குள்ளான சண்டைகளல்ல...
இணைந்து நிற்கும் நேரமிது.....
நீ எந்த மதம்
நான் எந்த மதம்
எவர் உயர்ந்தவர் எவர் தாழ்ந்தவர்
எனும் கேள்விகளை நீக்கி
கொரானாவிற்கு அனைவரும் ஒன்றே
என்பதை கொரனா நிருபித்திருக்கிறது....

இப்போதைய தேவை
உதவும் கரங்கள்தான்..
உபதேசிக்கும் உதடுகளல்ல..
மனிதர்களாய் இணைவோம்...
மானுடம் போற்றுவோம்

                     வா.நேரு....30.03.2020








3 comments:

முனைவர். வா.நேரு said...

அருமையான பதிவு.ஏற்கெனவே கோவூரார் அழைத்த போது ஓடி ஒழிந்த கூட்டம் இப்போது கொக்கரிக்கின்றவேலையில் சரியான பதிவு.


மு.சுந்தரம் அவர்கள்...முக நூலில்....

தருமி said...

//அறிவியல்
அவரவர் மதக்குளத்திற்குள்
தேங்கிக் கிடக்கும் நீரல்ல மாற்றாக
ஓடிக்கொண்டே இருக்கும் நதி.....// ... பிடித்த உண்மையான் பொருளுள்ள வரிகள்.

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றி பேராசிரியர் சார்...தீவிர நம்பிக்கையாளராக இருந்து, கிறித்துவ மதத்திலிருந்து 50 வயதிற்குப்பின் வெளியேவந்து, அனைத்து மதங்களையும் அக்குவேறாக ,ஆணிவேராக பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும், விளைவுகளைப் பற்றிக்கவலைப்படாது துணிந்து தொடர்ந்து எழுதும் பேராசிரியர் தருமியின் பின்னோட்டம் மகிழ்வைத் தருகிறது. மகிழ்ச்சி.