Sunday 8 March 2020

அண்மையில் படித்த புத்தகம் : அப்பாவின் பாஸ்வேர்ட்(சிறுகதைத் தொகுப்பு)...ஆத்மார்த்தி



அண்மையில் படித்த புத்தகம் : அப்பாவின் பாஸ்வேர்ட்(சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்                   :  ஆத்மார்த்தி
வெளியீடு                  : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்.,சென்னை-98
முதல் பதிப்பு            : ஜீலை 2018...
மொத்த பக்கங்கள்  : 126 விலை ரூ 100

                              இந்த சிறுகதைத்தொகுப்பு மொத்தம் 11 சிறுகதைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான கதைகள்...ஒட்டுமொத்தக் கதைகளும் இதனை நோக்கி என்று சொல்ல இயலாவண்ணம் கலவைகளாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.'அப்பாவின் பாஸ்வேர்ட்'எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி.சிறுகதை என்பதன் வடிவ சுதந்திரம் புதிய கதைகளை எழுதிப்பார்க்கத்தூண்டுகிறது 'என்று முன்னுரையில் நூல் ஆசிரியர் ஆத்மார்த்தி குறிப்பிடுகின்றார்.புதிய கதைகள்தான் ஒவ்வொன்றும்...

                       தொகுப்பிலேயே எனக்கு பிடித்த கதையாக 'தாட்டியம் 'என்னும் கதை. தன் அப்பாவைக் கொலை செய்தவனை அவனை அறியாமலேயே அலைக்கழிக்க வைக்கும் கதை.சொன்னவிதம் அருமை. ஏதோ வேறுமாதிரியாக நடக்கப்போகிறது என்பதனை ஒன்றிரண்டு இடங்களில் சுட்டிக்காட்டி விறுவிறுப்பாக செல்ல வைத்து முடிவாக சொல்லும் கதை. நன்று.

                      சில கதைகள் நின்று வாசிப்பவனோடு எள்ளலும் நக்கலுமாய் உரையாடுகின்றன. அதில் 'அர்சியல் பேசாதீர் ' என்னும் கதை தற்கால அரசியலை,சுய நலம் மட்டுமே கொண்ட சமூகவிரோதிகள் எப்படி அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள்,மாற்ற வைக்கப்படுகிறார்கள் என்னும் கதை. நல்ல நையாண்டித்தனமும் எதார்த்தமும் சேர்ந்த கதை.புகுந்து நின்று களத்தில் கபடி ஆடியிருக்கிறார் ஆசிரியர். 

                    கணவனும் மனைவியும் விவாரத்து செய்து கொள்கிறார்கள். மனைவிக்காக நீதிமன்றத்தில் வாதாடி,வெற்றி பெற்ற பெண் வழக்கறிஞரும், கணவனும் சில மாதங்கள் கழித்து விமானப்பயணத்தில் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து பயணிக்க நேருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவுடன் எழும் உணர்வுகளும் ...எண்ண ஓட்டங்களும் அப்புறம் பேச ஆரம்பித்தவுடன் கணவன் தனது தரப்பு நியாயங்களை,எழுத்தாளராக இருக்கும் தன்னைப்பற்றிய விவரங்களோடு வழக்கறிஞருக்கு தெளிவுபடுத்தும் கதை.'என் எழுத்துக்கள்தான் நான் அப்டின்னு நம்புறவங்களுக்கு நான் ஒருத்தானா இருக்கேன்.என் எழுத்துக்கள் தெரியாதவங்களுக்கு நான் எப்படித்தெரியுறேன்ற கவலையே என் கிட்டே இல்லை ..என்னைக் கேட்டா என் வாழ்க்கையோட வினோதம்னு சொல்றதுக்கு நிறைய இருக்கு ' எனக் கணவன் விவரிக்கும்போது நாமும் கூட கதாபாத்திரத்தின் வாயிலாக எழுத்தாளனைப் புரிந்து கொள்ள முடிகிறது.  முதல் கதையான நீலயாணியே ஈர்ப்பான கதைதான்.

                   நண்பர்களின் கூடல், கேலி..கிண்டல்,உரிமை என நட்பைக்கொண்டாடும் 'டூப்ளி' கதை.மூர்த்தி டூப்ளியானதும் ,டுபெக்கென்று ஒரு நாள் இறந்து போவதும்,டூப்ளியின் பொய்களுக்குள்ளே உறைந்திருந்த உண்மை வெளிப்படுத்துவதும் கதை. 

ஒரு பிரபல நடிகனின் மறுபக்கத்தைக் காட்டும் 'ஒயிலா 'கதை.எவ்வளவு புகழ்வாயந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அடைக்கலம் தேடும் மனதைப்  பற்றிய கதை.''சொல்லிக்க முடியாத ஒரு சொந்தத்தின் 'இழப்பு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய வெறுப்பை ஒருவனுக்கு விதைக்கிறது என்பதனை கவித்துவமாய் சொல்லும் கதை.

அப்பாவின் பாஸ்வேர்டு கதையின் பாதிக்கதை பெரும்பாலான கதைகளில் வரும் கதை..ஆனால் முடிவும் அதற்கு முந்தைய விவரிப்புகளும் அருமை."சாதியை மறுத்துத்திருமணம் செய்துகிட்டோம்.சாதியால் கொல்லப்பட்டார் என் கணவர்.இந்த உலகத்துல நல்ல சாதி கெட்ட சாதின்னு எதுவும் இல்லை ஸ்ரீராம்.கோவம் வராத வரைக்கும் எல்லா சாதியும் அமைதியாகத்தான் இருக்கும்.எங்கெல்லாம் எப்பலெல்லாம் சாதிக்குக் கோபம் வருதோ அப்பெல்லாம் அது ரத்தம் குடிக்காம அடங்காது.....இதை விபத்துன்னோ விதின்னோ எடுத்துக்கவே முடியலை...அந்தக் கூட்டத்துக்கும் என் கணவருக்கும் என்ன சம்பந்தம் ...? தங்களோடு வாழ்க்கையில் முதல்முறையா சந்திக்கிற ஒருத்தனை எப்படி அவ்ளோ வெறியா தாக்கிக்கொல்ல முடிஞ்சது அவங்களால?எந்தக் கலவரத்தில் நாம் யாராயிருந்தா உயிரோடு இருப்போம் அல்லது சாவோம்னு தெரியாம ரத்தம் குடிக்கிற மண்ணுல இன்னும் எத்தனை பேர் ரத்தத்தைச்சாதி குடிக்கப்போவுதுன்னு எங்களுக்குத் தெரியலை ' என்று அப்பாவின் நண்பரின் மனைவியான சரஸ்வதி விவரிக்கும் இடம் .சாதியின் பெயரால் நடந்திருக்கும் இந்தக் கொடுமையைப் படிக்கும்போது கண்ணுக்கு முன்னால் சில நாட்களுக்கு முன் டில்லியில் கொல்லப்பட்ட உயிர்கள்,இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்பட்ட அந்த மனிதரும் நினைவுக்குள் வருகிறார்கள்.சாதியின் ,மதத்தின் பெயரால் நடக்கும் இந்தக் கொடுமைகளைத் தடுக்க இயலவில்லையே என்னும் இயலாமையும் சேர்ந்தே மனதிற்குள் ஓடுகின்றது. 

திரைப்பட இயக்குனருக்கும் துணை இயக்குனர்களுக்குமான மோதல்களை, ஒரு துப்பறியும் கதை போல நகர்த்திச்செல்லும் 'டாம் அண்ட் ஜெர்ரி' ..நன்றாக உள்ளது. சிறுகதைக்கே உரிய தொடக்கம்,முடிவென வித்தியாசமாக நகர்கிறது.இரண்டு முடிவுகளை சொல்லி,வாசகரே,உங்களுக்கு எது வேண்டுமோ அதனை எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லும் மாயா,'நீங்க சொல்லுங்க,சரிதாவைக் கூப்பிடலாமா? வேண்டாமா? ' என வாசிப்பவனிடம் விடை கேட்கும் முடிவாக அமைந்திருக்கும் 'கூட்டத்தில் ஒருத்தி ' போன்ற கதைகளை விறுவிறுப்பாக வாசிக்க முடிகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள 'வியாழன்'கதை இராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போல எழுத முயற்சித்த கதை போலிருக்கிறது...வெற்றி பெற்றிருக்கிறார்.....

நல்ல மட்டன் பிரியாணி சாப்பிட்டபின்பு பல் இடுக்குக்குள் மாட்டிக்கொண்டு இம்சிக்கும் கறித்துண்டு போல இந்தத் தொகுப்பிற்குள் இந்தக்கதை இருந்திருக்க வேண்டாமே எனக் 'கோமதிராசனின் கதை' தெரிந்தது..பேய்,பூதக்கதை எழுதிப் பிழைக்கும் பல எழுத்தாளர்கள் மதுரைக்குள் இருக்கிறார்கள்...பிழைப்பதைப் பற்றிக்கவலை கொள்ளாமல் எதார்த்ததையும் வாழ்வியலையும் வலிமையாக எழுதும் இந்த முழு நேர எழுத்தாளர் இந்த மாதிரிக்கதைக்குள் போகவேண்டியதில்லை என்பது என் கருத்து....

நிறைய எதார்த்தமான,வலிமையான கதைகளைக் கொண்டிருக்கும் 'அப்பாவின் பாஸ்வேர்ட்' சிறுகதைத் தொகுப்பினை நீங்களும் வாசிக்கலாம்.'சிறுகதை என்பதன் வடிவ சுதந்திரம் புதிய கதைகளை எழுதிப்பார்க்கத்தூண்டுகிறது. ...ஒரு தொடர்ந்த உரையாடலுக்கான சின்ன ஒளிப்பொறியைத் தன்னகத்தே கொண்டிருக்கிற கதைகள் யதார்த்த உலகின் நிரந்தரத் தேவைகளாகின்றன..அந்த வகையில் என் கதைகளும் அவற்றின் கதாமாந்தர்களும் உடன்பட்டும் முரண்பட்டும் வாசிக்கிறவர்களுடன் உரையாடுவதைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவே இக்கதைகளை எழுதினேன்' என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம்,அந்த வகையில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.இந்த நூல் திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.அவர்களுக்கு எனக்குறிப்பிட்டிருக்கிறார்.எழுத்தில் தான் வெற்றி பெற்றது மட்டும் அல்லாமல்  தன்னைச்சுற்றி இருக்கும் நட்பு வட்டங்களும் எழுத்தில் வெற்றி அடைவதற்காக முன் ஏராக கற்பிக்கும் ஆசிரியர் அவர். நன்றியோடு குறிப்பிட்டிருக்கிறார் இந்த நூல் ஆசிரியர். வாழ்த்துகள்.இதனை வாசிக்கும் நீங்களும் ஒருமுறை இந்த நூலை வாசித்துப்பாருங்கள்..உங்களையும் வசப்படுத்தும் கதைகள் இவை...    

                       




4 comments:

முனைவர். வா.நேரு said...

அருமையான,நேர்மையான விமர்சனம்.நன்றி சார்....வாட்சப்பில்...நூல் ஆசிரியர் கவிஞர் ஆத்மார்த்தி

முனைவர். வா.நேரு said...

நன்றி...

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தங்களது வலைப்பதிவை நாம் அவதானித்துள்ளோம். தொடர்ந்து எழுதுங்கள். எமது வலைத்திரட்டியுடனும் இணைந்திருங்கள். விரைவில் தங்கள் தளமும் எமது திரட்டியில் இணைக்கப்படும்.

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...எழுதுகிறேன்....