Tuesday 18 May 2021

எங்கள் கி.ரா.வே....

 எத்தனை 

எழுத்து விளைச்சல்கள்...

எத்தனை 

எழுத்து உழவர்கள்....

கரிசல் காட்டு மண்ணில்...


கடலை மிட்டாய்க்குப் 

பெயர் பெற்ற

கோவில்பட்டி வட்டாரம்

கதை சொல்லலுக்கும்

பேர் பெற்றது உன்னால் அன்றோ....

உனது பரம்பரையாய்

தொடர்ந்திட்ட கரிசல் மண்

கதை சொல்லிகளால் அன்றோ...


முன்னெத்தி ஏராய்

முதல் எழுத்து உழுவராய்

ஆழ உழுது விளைவிக்கும்

அற்புத உழவன் போல

உள்மனது உணர்வுகளை

எழுத்து உழவால்

எடுத்து இயம்பிய

இடைச்செவல் 

கிராமத்துப் பெருசே....

.

சிக்மண்ட் பிராய்டைப்

பின்னர்தான் அறிந்தேன்...

முதலில் உன் கதைகள்தான்

பாலியல் உணர்வுகளும்

பசிதான் என உணர்த்தின...


..மழைக்குத்தான் நான்

பள்ளிக்குள் ஒதுங்கினேன்

ஆனாலும் நான் 

மழையைப் பார்த்து

அதிசயத்து நின்றதால்

பள்ளிக்கூடத்தைப்  பார்க்கவில்லை என்றாய்


நீ பள்ளிக்கூடத்தைப் 

பார்க்கவில்லை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்கள் எல்லாம்

தங்கள் பாடங்களின் வழியே

உன்னைப் பார்த்தது...


ஏழாம் வகுப்பு மட்டுமே

படித்த உனக்கு

உனது படைப்பு 

பேராசிரியர் பதவியை

வாங்கித்தந்தது....

எத்தனை படைப்பாளிக்கு 

கிடைத்தது இந்த அங்கீகாரம்?


இரண்டு மாநிலங்கள் தரும்

அரசு மரியாதையோடு

இறுதி மரியாதை 

நிகழவிருக்கும் படைப்பாளியே!

எங்கள் கி.ரா.வே....

இன்னும் ஓர் ஆண்டில்

உன்னோடு உனது

நூற்றாண்டைக் கொண்டாடுவோம்

என நினைத்தோம்.....

நினைவுகளோடு 

கொண்டாடிக்கொள் என

நீத்தாராய் ஆகிக்கொண்டாய்....


சரி...உன் நினைவுகள்

எல்லாம் உனது

படைப்புகள்தானே!

உடல் நீங்கும்...

நிலைத்து நிற்கும்

உணர்வாய் உனது 

படைப்புகள் நிற்கும் என்றும்....


                         வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,18.05.2021



.

.


3 comments:

anandam said...

வீரவணக்கம் செலுத்துவோம் தமிழ் மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர் அய்யா அவர்களுக்கு...

நா.முத்து நிலவன் said...

வீர வணக்கம்
அவரின் வாரி சாய் உருவாகட்டும் இளைஞர் கூட்டம்

கரந்தை ஜெயக்குமார் said...

கி. ரா
தன் எழுத்துக்களால் என்றென்றும் வாழ்வார்