Friday, 17 October 2025

அண்மையில் படித்த புத்தகம்: மெளனித்திருக்கும் மூங்கில் வனம்...கலையரசி பாலசூரியன்

 

அண்மையில் படித்த புத்தகம்: மெளனித்திருக்கும் மூங்கில் வனம்

 ஆசிரியர்                   : கலையரசி பாலசூரியன்

முதல்பதிப்பு 2024, பக்கம் 90 ,விலை ரூ 180

வெளியீடு : எழிலினி பதிப்பகம்,எழும்பூர், சென்னை -8

 

மெளனித்திருக்கும் மூங்கில் வனம் ஒரு கவிதைத் தொகுப்பு.இந்த நூல் ஆசிரியர் கலையரசி பாலசூரியன் என்ற கலைபாலாவின் முதல் நூல்.முதலில் முதல் நூலை அச்சில் கொண்டுவந்திருக்கும் தங்கை கலைபாலவுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

வாருங்கள் படைப்போம்’,’வாருங்கள் படிப்போம்குழுவில் ஒரு முக்கிய பங்களிப்பாளர் கலைபாலா அவர்கள்.ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்வுகளில் தொடர்ச்சியான பங்களிப்பை அளிப்பவர்.அவரின் ஆக்கத்தில் வந்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.



அருமையான அணிந்துரையை தோழர் அ.குமரேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்.அதைப்போல கவிஞர் சினேகன்,அண்ணன் குழலிசை குமரன் ஆகியோர் வாழ்த்துரை, அண்ணன் டாக்டர் கோ.ஒளிவண்ணன் அவர்களின் பதிப்புரை என்று நூலுக்குள் நுழைவதற்கு முன்பே நூலைப் பற்றிய  அறிமுகம் கிடைத்துவிடுகிறது.

காதலில் தான் தொடங்குகிறது

கவிதையின் பயணம்

இல்லையில்லை..

கவிதையில்தான் தொடங்குகிறது

காதலின் பயணம்என்று தன் கவிதையின் மூலமாகவே என்னுரையை

ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறார் கவிதை பாலா இல்லையில்லை கலை பாலா. 

எளிமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பெரும்பாலும் அக மனம் சார்ந்த பாடல்கள்.

உன் மீதான நேசம்

உனக்காய் மலர்வதில்

மட்டுமல்ல..

உன்னை நினைத்து

உலர்வதிலும்

தான்என்று தொகுப்பின் முதல் கவிதையை ஆரம்பித்திருக்கிறார்.இது சங்கப் பாடலின் தொடர்ச்சி.அகம் சார்ந்து, அகம் நாடுபவனின் நினைவு சார்ந்து எழுந்த கவிதை.

உறங்கும் விழிகளுக்கு

என்னவோ

இரவின் நீளம் குறைவுதான்

விழித்திருக்கும்

விழிகளுக்குத்தான்

வெகுதொலைவு …’ என்கிறார்பிரியத்தின் பெருவெளிஎன்னும் கவிதையில். அருமையான ஒப்பீடு..உணர்ந்து விழுந்த சொற்களாக இருக்கின்றன.

கனவுகள் /அன்பின் மொழிபெயர்ப்புஎன்கிறார் ஒரு கவிதையில்.சில நேரங்களில் பயமுறுத்தும் கனவுகளும் வந்து தொலைக்கின்றன.அதை எதன் மொழிபெயர்ப்பு எனச்சொல்லலாம்?.

கற்பென்ற ஒன்று

கடவுள் போல்

கற்பனையோ..

கற்பென்ற

சொல்லொன்று

பெண்ணிடம்

மட்டும் விற்பனையோஎன்று கற்பு என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை வடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக இத்தொகுப்பில் இக்கவிதை.’பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும்  நூலில் தந்தை பெரியார்கற்புஎன்ற தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையும் நினைவுக்கு வந்தது இக்கவிதையைப் படிக்கையில்.துணிச்சலாக கேள்விகளைக் கேட்டிருக்கும் கவிஞருக்கு பாராட்டுகள்.இந்தக் கவிதை போலவேஏவாளின் அடுப்பங்கரைஎன்னும் கவிதையும் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது.

அல்லுமேது,பகலுமேதுஎன்றுஆத்தாவின் வாசம்கவிதையில் சுட்டுகின்றார்.வட்டாரச்சொற்கள் அருமையாக அமர்ந்து பொருள் தருகின்றன இக்கவிதையில்.

அகம் தொட்டவர்களின்

அலட்சியங்கள்

என்னைச் சிதைத்துப்

போனதுண்டு

சில நேரங்களில்’ ..என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.பல பெண்களைப் பல நேரங்களில் மன ரீதியாகத் துன்பறுத்தும் காரணமாய் அமைவது அலட்சியம்.அதுவும் நாம் நேசிப்பவர்களின் அலட்சியம் என்ன பாடுபடுத்தும் என்பதை எழுதியிருக்கிறார்.

இன்னும் நிறையக் கவிதைகளைச் சுட்டிக் காட்டலாம். நூல் விமர்சனத்தைச் சுருக்கமாக எழுதுங்கள் அப்பா, என்று என் மகன் சொ.நே.அன்புமணி எப்போதும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறான்.சரியான சுட்டிக்காட்டலை, நம் பிள்ளைகள் சொன்னாலும் ஏற்றுக்கொள்வதுதானே சரியான நடைமுறை.



தங்கை கலைபாலா என்னும் கலையரசி பாலசூரியன் இன்னும் நிறைய எழுதவேண்டும்.சமூகம் சார்ந்து நிறையக் கவிதைகளைத் தரவேண்டும் எனவும்,அடுத்தடுத்த நூல்களுக்களுக்கான படைப்புப் பணிகளிலும் ஈடுபடவேண்டும் என்னும் எனது விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.. படைப்பாளராக மாறியிருக்கும் தங்கை கலைபாலாவிற்கு மீண்டும் வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்.

 

                                                    தோழமையுடன்

                                                 வா.நேரு, 17.10.2025

 

2 comments:

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி அண்ணா..

முனைவர். வா.நேரு said...

நன்றி் கலை...