‘மௌனத்தின் சாவிகள்’ என்னும் புத்தகம் நண்பர் செ. வினோத் பரமானந்தன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘வாருங்கள் படிப்போம்’, ‘வாருங்கள் படைப்போம்’ குழுவின் மூலமாக அறிமுகமான நண்பர்.இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். ஓரிரு முறை நேரில் சந்தித்தோம், பேசினோம். அவர் ஓர் இராணுவ வீரர் இராணுவத்தில் இருந்து கொண்டு அங்கிருந்தே சில நேரங்களில்
இணையத்தின் வழியாக இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவர். “நண்பர் வினோத் பரமானந்தன் இராணுவ வீரர், கவிஞர் என்று இரு துடுப்புகளால் ஓர்
அழகிய ஓடத்தைச் செலுத்தித் தனது வாழ்க்கை
பயணத்தை அழகாக்குகிறார். சவாலான இராணுவ சூழலில் சிந்தனை மற்றும் செயல்களை இலகுவாக்கும் கவிதைகளைப் படைத்து பலருக்கும் ஒரு வழிகாட்டியாக முன்னுதாரமாகத் திகழ்கிறார்” என அன்புத்தம்பி எழுத்தாளர் ஆலடி எழில்வாணன்
இந்த நூலுக்கு வாழ்த்துரை
வழங்கி இருக்கிறார்.இந்த நூலுக்குக்
கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி ,எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் அணிந்துரை
அளித்துள்ளனர்.’மெளனம் திறக்கும் தேடல் ‘ என்னும் தலைப்பில் கவிஞர் செ.வினோத் பரமானந்தன் என்னுரையை எழுதியுள்ளார்.அழகியலோடு
மனதின் எண்ணங்களைக் கவிதைகளாக்கி நண்பர் வினோத் பரமானந்தன் இந்தக் கவிதைத் தொகுப்பைக்
கொடுத்துள்ளார்.அதில் உள்ள ஒரு கவிதையின் ஒரு பகுதி
நினைவில்
காடுள்ள பறவை
காடும்..
கூடும் ..
பெருந்தேடலானதால்
பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள
பறவைக்கு…
எப்போதாவது
விரிக்கும்
சிறகுகளிலும்
சிலுவையில்
அறைந்ததைப்
போல வலிகள்….
நாடில்லா
காட்டில்
நன்றாய்த்தானிருந்தது
பறவை…
காடில்லா
நாட்டில்
வாழ்வதே
கடினம்…
இப்படி ஒரு சில
கவிதைகளில் மட்டும் துன்பச்சுவை இருக்கிறது.மற்றவை எல்லாம் இயல்பான கவிதைகள்.
நண்பரின் கவிதைத்
தொகுப்பைப் படித்துமுடித்தவுடன் ஒரு சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன்.அது மதுரையில்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இரவலாக எடுத்தது.’கண்காணிப்புக் கோபுரம் ‘ என்னும்
சிறுகதைத் தொகுப்பு.எனக்குப் பிடித்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான பாவண்ணன் எழுதிய
9 சிறுகதைகளின் தொகுப்பு நூல் அது.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு தளத்தில்,வெவ்வேறு
களத்தில்.நல்ல வாசிப்பு அனுபவங்களைக் கொடுக்கும் கதைகள்.அதில் சிறுகதைத்தொகுப்பின்
தலைப்பாக இருக்கும் ‘கண்காணிப்புக் கோபுரம்,தொகுப்பின் முதல் சிறுகதை.ஒரு இராணுவ
வீர்ர் பற்றிய சிறுகதை.
கண்காணிப்புக்
கோபுரத்தைக் கண்காணிக்கும் இராணுவ வீரன் அஜய்சிங்காவைப் பற்றிய கதை.’சிலிகுரி
ராணுவ முகாமில் வேலை செய்து கொண்டிருந்தவனை அவன் மேல் அதிகாரி தன்னுடைய காலணியைத் துடைக்கச்சொன்ன
வேலையைச் செய்ய மறுத்த ஒரே காரணத்துக்காக,கீழ்ப்படிய மறுத்தவன் எனக் குற்றம் சுமத்தி,இந்தக்
குன்றிலிருந்த முகாமுக்கு மறு நாளே மாற்றி விட்டதாகச் சொன்னான்.வந்து மூன்று
ஆண்டுகள் கடந்து விட்டன.இங்கே இருக்கும் அதிகாரிகள் மட்டுமல்ல,சக ஊழியர்களும் மோசமானவர்களாக
இருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டான்.கசப்பான புன்னகை ஒரு கணம் அவன்
உதடுகளில் நெளிந்து மறைந்தது.ஊருக்குச் செல்ல விடுப்பு தர மறுப்பதாகவும் மாற்றல் கோரும்
விண்ணப்பங்களை வாங்கிக் கொள்ளாமலேயே ஒவ்வொரு முறையும் நிராகரிப்பதாகவும் வருத்தத்துடன்
சொன்னான்’ என்று அஜய்சிங்காவின் துன்பத்தை விவரித்துக்கொண்டே செல்கிறார் இந்தக்
கதையில் கதாசிரியர்.
உலகம் முழுவதும்
ஒரே நாடாகிவிட்டால்,ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவம் தேவையில்லை அல்லவா? என்னும் ஆசை
எழுகிறது.அது ஓர் உடோப்பியன் கருத்து என்று அறிவு இடித்துரைக்கிறது.ஆனாலும் இராணவத்திலிருந்து
நிறையப் படைப்பாளிகள் வந்தால் இவையெல்லாம் மாறும் என்ற எண்ணம் பிறக்கிறது.
வா.நேரு,
07.10.2025




6 comments:
அருமை..... அண்ணன் நேரு அவர்கள் தொடர்ந்து இந்த சிறப்பான பணியை செய்து வருகிறார்
ஒரு படைப்பாளிக்கு இதைத் தவிர வேறு எது ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்க முடியும்?.
நன்றிங்க அண்ணே...
வணக்கம். மிக்க மகிழ்ச்சி. கண்காணிப்பு கோபுரம் பற்றி நீண்ட காலம் கழித்து வெளிவரும் ஒரு மதிப்புரையைப் படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.
நன்றிங்க சார்
கவிதை சிறுகதை வாசிப்பு அனுபவம் மிகவும் அருமை அய்யா
மிக்க நன்றி.பெயர் வரவில்லை...கமெண்ட் முடிவில் தங்கள் பெயரை இணைக்கலாம். இனிமேல்....
Post a Comment