Monday, 24 November 2025

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)...தீபிகா சுரேஷ்

 

அண்மையில் படித்த புத்தகம் : சிவராமு 1ம் தெரு (கவிதைகள்)

ஆசிரியர் : தீபிகா சுரேஷ்

பதிப்பகம் : படைப்பு,கடலூர் -2 பேச : 7338897788 /7338847788

பக்கங்கள் : 130, விலை ரூ 200 முதல் பதிப்பு 2025

வாருங்கள் படிப்போம் குழுவின் மூலம் அறிமுகமான தோழர் தீபிகா சுரேஷ் அவர்களின் நாலாவது படைப்பு.தலைப்பு ‘சிவராமு 1-ம்தெரு வார்டு எண் 28 ‘. தன்னுடைய இளமைக்காலம்,உறவுகள் பற்றிய நினைவுகளைக் கவிதைகளாக வடித்துக் கொடுத்திருக்கிறார். எளிய சொற்களில் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை மட்டுமல்ல வாசிப்பவர்களின் இளைமைக்காலத்திற்கும் அழைத்துச்செல்லும் வல்லமை உடையதாக இக்கவிதைத் தொகுப்பு இருக்கிறது.

‘திண்ணைகள் இருந்தவரை

தெருக்கள் உயிரோடு இருந்தன

சில உறவுகளும்’

என்று சொல்கிறார்.உண்மைதானே,கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம் பெயர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு மூடப்பட்டே இருக்கும்  எதிர் வீட்டுக் கதவுகள் பழக்கமாகி விட்டிருக்கின்றன. நாமும் அப்படித்தான் கதவை மூடியே இருக்கப் பழகியிருக்கின்றோம்இப்போது கிராமங்களும் கூட திண்ணைகள் இல்லாமல் அப்படி மாறிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டுவதுபோல் உள்ளது இக்கவிதை.

‘ . . . எண்ணெய் தேய்த்து குளிப்பதும்

     சிணுக்கோலி வைத்து

     முடி உலர்த்துவதும்

      . . . 

      அப்பத்தா அப்பத்தாதான்’  

இந்தக் கவிதையைப் படித்தபோது 102 வயதில் மறைந்த எனது அப்பத்தா சாப்டூர் சின்னக்குட்டி அவ்வா நினைவுக்கு வந்தார்.கடைசிவரை தானே சமைத்தார். தானே எண்ணெய் தேய்த்துக் குளித்தார். எனது அம்மா(அவருக்கு அம்மாவைப் பெத்த அம்மா) எனது அப்பத்தாவை ‘என்ன குமரி, எண்ணெய் தேய்த்துக் குளிச்சிட்டு சிக்கெடுக்க ஆரம்பிச்சிட்ட போல ‘ என்று கேலி செய்யும்போது ‘ போடி ‘ என்று அவர் செல்லமாகத் தன் பேத்தியைத் திட்டுவதுவரை என் மனதுக்குள் ஓடியது.நம் இளமைப்பருவ நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து காண்பிக்கும் கவிதை மிகச்சிறந்த கவிதை இல்லாமல் வேறன்ன?




ஒரு முரணை ஒரு கவிதையில் நன்றாகச் சொல்கிறார்

‘ஊருணிக்கருகே

மூக்கடைத்து

நடந்த போதும்

ஊரணி மீன் குழம்பு

ருசிக்கவே செய்தது’ என.

தன்னுடைய எழுத்துப்பயணம் எப்படித் தொடங்கியது எனத் தோழர் தீபிகா சுரேஷ் குறிப்பிடுகிறார். இக்கவிதையைப் படித்து முடித்தவுடன் வாய்விட்டுச் சிரித்தேன்…

‘பத்தாம் வகுப்பில்

ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து

தோழிக்கு வந்த

காதல் கடிதத்திற்கு

பதில் எழுதியதில்

தொடங்கியது

இந்த எழுத்துப் பயணம்….

அந்தக் காதல் என்ன ஆனதென

சத்தியமாய் தெரியாது…’

தான் சோர்ந்துபோகும்போது தனக்கு ஊக்கமளிப்பவர்கள் யார் என்பதை ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்..

‘எப்போதாவது விடுமுறை நாட்களில்

வயலுக்குப் போய் வருகையில்

வெறும் காலோடு

தலையில் புல்லுக்கட்டோ

விறகு கட்டோ தூக்கி

ஓடுவதா நடப்பதா எனத் தெரியாமல்

முன்னேறிப் போகும்

அன்னை மார்களையும்

அக்கா மார்களையும்

மனதில் நிறுத்திக் கொள்கிறேன்

அவ்வப்போது அலுவலகத்தில்

சோர்ந்து போகையில்…

‘நினைவு ஒரு ஆவணம் ‘ என ஆரம்பித்து ஓர் அழகிய அணிந்துரையை எழுத்தாளர் ரவி சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். ‘கவிதைகளுக்கும் எனக்குமான தூரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆன தூரம் என்றாலும் …’ என ஆரம்பித்து தலைமையாசிரியர் திருமதி ரோசாலி சேவியர் தான் வாழ்ந்த தெருவைப் பாடிய கவிஞர் தீபிகா சுரேஷை மனதாரப் பாராட்டி மகிழ்ந்து வாழ்த்துரை அளித்திருக்கிறார்.




இந்தக் கவிதைத் தொகுப்பில் பழமையைப் போற்றும் சில கவிதைகளும் இருக்கின்றன. எனக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டெனினும் தன்னுடைய கிராமத்து வாழ்க்கையை,அப்பாவை,அப்பத்தாவை,தாத்தாவை,கிராமத்துப் பெண்களை, உறவுகளை மிக இயல்பான சொற்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர்களுக்கு மிகவும் இத்தொகுப்பு பிடிக்கும்.நகரத்தில் பிறந்தவர்களும் கிராமத்தைப் புரிந்துகொள்ள இக்கவிதைத் தொகுப்பு உதவும்.வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழர் கவிஞர் தீபிகா சுரேசு அவர்களுக்கு…தொடரட்டும் அவரின் படைப்புப் பணி…

தோழமையுடன்

வா.நேரு, 25.11.2025


 

2 comments:

எழுத்தாளர் தீபிகா சுரேஷ் said...

ஆழ்ந்த வாசிப்பு அழகான புரிதல் அன்பின் நன்றிகள் சார்...
வாட்சப்-பில்...

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க ...