Sunday, 16 September 2018

எங்க ஆத்தக் காணோம்.......

எங்க ஆத்தக்  காணோம்.......
                வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றைக் காணவில்லை,கண்டு பிடித்துக்கொடுங்கள்  என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நகைச்சுவை புகழ்பெற்றது. அதனைப் போல பார்ப்பனர்கள் தங்களுடைய ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் 'சரஸ்வதி ' ஆற்றைக் காணவில்லை என்று ரொம்ப காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையத்தில சொல்லிட்டாக,ஐரோப்பாவில் இருக்கிற அறிவியல் அறிஞர் எல்லாம் சொல்லிட்டாக,இப்படி ஒரு நதி இந்தியாவிலே இருந்துச்சு,ஓடுச்சுன்னு சொல்லிட்டாக, ஆனா அந்த 'சரஸ்வதி ' ஆற்றைக் காணலையே, அந்த 'சரஸ்வதி ஆற்றைக்காணலியேன்னு சொல்லிப் பார்ப்பனர்கள் புலம்பியது மட்டும் இல்லாமல், 2014-ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் 'நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சுட்டோம், நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சிட்டோம்'ன்னு சொன்னாங்க. அந்த சரஸ்வதியைக் காணாம்ன்னு தேடியதைப்பற்றி ஒரு 20 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று  நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்திருக்கிறது.(21.07.2018) - தமிழ் இந்து பத்திரிக்கையில் ந. வினோத் குமார் என்பவர் எழுதியிருந்த 'எங்கே போனாள் சரஸ்வதி' என்னும் கட்டுரையைப் படித்தவுடன் அந்த இணைய தளத்திற்குச்சென்று பார்த்தேன். 

               நம் விடுதலை இணையதளமான viduthalai.in என்னும் இணையதளத்திற்குள் சென்றாலே, periyar.tv என்னும் இணையதளமும் வரும். அதில் உள்ளே சென்றால் நமது கழக நிகழ்வுகளை, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையின் வீடியோவைப் பார்க்கலாம். அப்படி newyork times என்னும் இணையதளத்திற்குள் சென்றால் op docs என்னும் இணையதளம் வருகின்றது.அந்த இணையதளத்திற்குள் சென்றால் நூற்றக்கணக்கான ஆவணப்படங்கள் இருக்கின்றன.உலகம் முழுவதும் இருப்பவர்கள் அனுப்பக்கூடிய ஆவணப்படங்களைப் பார்த்து , அதில் வெளியிடத்தக்கது என்று நினைக்கும் ஆவணப்படங்களை அப்பத்திரிக்கையின் இணையதள இணைப்பில் வெளியிடுகின்றார்கள்.அதற்கான விண்ணப்ப படிவம் அந்த இணையதளத்திலேயே இருக்கின்றது. அந்த இணைப்பின் நோக்கமே ஆவணப்படத்தின் மூலமாக நேர்மறையான விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'Searching for Saraswati 'என்னும் ஆவணப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். சிர்லி ஆபிரகாம்,அமித் மாதேசியா ஆகியோர் இந்தக் ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.

             ஹரியானாவில் 2015-ஆம் ஆண்டு 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்ததாக அந்த மாநிலத்தின் அரசாங்கமே அறிவித்தது நமக்கு நினைவிருக்கும். அந்த ஆற்றுக்காக உடனடியாக 50 கோடி ஒதுக்கினார்கள். கண்டு பிடித்த நதி இப்போது ஓடுகின்றதா? எனும் கேள்வி கேட்பார் இன்று யாருமில்லை. எதற்காக அந்த 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்தார்கள்,அவர்களின் நோக்கமென்ன, மூட நம்பிக்கையை ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விளக்குவதுதான் இந்த 'சரஸ்வதியைத் தேடி ' என்னும் ஆவணப்படம். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் இத்தனை நாட்கள் குடிக்காத பிள்ளையார், இப்போ எப்படி திடீரென்று பால் குடிக்கிறார் என்னும் கேள்வி கேட்கும் ஞானமின்றி, பிள்ளையாருக்கு பால் கொடுக்க பக்தர்கள் பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் , சென்னையில் தமுக்கு அடித்து பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று வீதிக்கு வந்து நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் தொண்டர்களாகிய என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இப்படம் பார்த்த அனுபவம் இருந்தது. 

            பழங்கால சரஸ்வதியைத் தேடும் பயணம் முடிவில் ஹரியானாவில் முடிந்தது என்றுதான் இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.இது ஒரு அதிசயம்(miracle). நீங்கள் படித்த சரஸ்வதி நதி உங்கள் கண்முன்னால் இருக்கின்றது.பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்த நதித்தேடலை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. ஹரியானா மாநிலம் இதற்கென 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.முகாவலி என்னும் கிராமத்தில் சரஸ்வதி நதியைத் தோண்டும் பணி ஆரம்பித்திருக்கின்றது. எனும் டைட்டிலோடு ஆரம்பிக்கின்றது. இந்துத்துவப் பார்ப்பனர்களின் சூதுவினை அறியாத சகிராம் காசியப் என்னும் விவசாயி,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சரஸ்வதி தன்னுடைய வயலில் தோன்றப்போவதாக நம்புகின்றார். சரஸ்வதி நதி மீண்டும் தோன்றும்வரை கிணற்றுக்குப்பக்கத்திலேயே பூசை செய்யப்போவதாக அறிவிக்கின்றார். 

           அங்கே கோபல தாஸ் என்னும் பார்ப்பன பூசாரி வருகின்றார். நான் இந்து. அதனால் சரஸ்வதி நதி தோன்றப்போகும் இடத்தை வணங்க வந்திருக்கின்றேன் என்று சொல்கின்றார்.அரசாங்கம் இங்கு சரஸ்வதி நதி ஓடப்போவதாக அறிவித்திருக்கின்றது.நம் பகுதியில் இதற்காக நாம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சொல்லும் கோபாலதாஸ் என்னும் பார்ப்பனர் அதற்கான திட்டங்களைச்சொல்கின்றார்.ஊர் மக்களைத் திரட்டுகின்றார். புனிதமான சரஸ்வதி நதி மீண்டும் தோன்றுவது நாம் செய்த பாக்கியம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகத்திற்கு தலைமையாக ஆக்குவேன் என்று சொல்கின்றார், நாம் கங்கை-யமுனை, சரஸ்வதி நதிகளின் மூலமாக இந்தியாவை உலகத்தின் தலைமையாக ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றார்.தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து பாட்டிலில் எடுக்கப்பட்ட தண்ணீரை சரஸ்வதி நதியின் தண்ணீர் என்று மக்கள் மேல் தெளிக்கின்றார்கள்.மக்கள் மண்பானைகளில் தெய்வத்தின் தண்ணீர் என்று பூக்களைச்சூட்டி வங்குகின்றார்கள். சரஸ்வதி, கங்கை, யமுனை என்று மூன்று பெண்களை வேடமிட வைத்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.பண வசூல் செய்கின்றார்கள். மக்கள் பணத்தை தட்டுகளில் வந்து கொட்டுகின்றார்கள்.சரஸ்வதி நதியின் தண்ணீர் தீராத நோயை எல்லாம் தீர்க்கிறது,இருதய நோய், தொழு நோய் எல்லாம் இந்தத் தண்ணீரைக் குடித்ததால் சரியாகி விடுகின்றது,ஒரு பெண் வந்தார், அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. இந்தத் தண்ணீரைக் கொடுத்தேன். இதய ஓட்டை சரியாகி விட்டது. மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படிப்பட்ட மருந்து  என்று சொல்வதைக் காட்டிவிட்டு , அடுத்து அந்த நீரில் தவளை மற்றும் பல பூச்சிகள் செத்துக்கிடப்பதைக் காட்டுகின்றார்கள்.அந்த இடத்தில் உணவு தயாரித்து பலருக்கும் கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு ஜர்னல்சிங் என்னும் விவசாயி மற்றும் பி.பி கபூர் எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இருவரும் வருகிறார்கள்

           அவர்களிடம் இந்த இடத்தில் சரஸ்வதி நதி தண்ணீர் வருவதாக சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இங்கு வரும் தண்ணீரை விட பக்கத்தில் இருக்கும் கிணற்று ஊற்றில் நிறையத் தண்ணீர் வருகின்றது. ஆனால் சரஸ்வதி நதியினை ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுதான் சரஸ்வதி நதி நீர் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள். ஜர்னல்சிங் எங்கே அந்த அறிக்கை இருக்கிறது  என்று கேட்கின்றார். அவர்கள் தங்களிடம் அறிக்கை இல்லை என்று சொல்கின்றார்கள்.புனித நூலில் இருக்கிறது. உயர்ஜாதி பிராமணர்களாகிய நாங்கள் இதனை நம்புகின்றோம் என்று பதில் சொல்கின்றார்கள்.இல்லை, இது சரஸ்வதி நதியின் நீர் இல்லை என்று அழுத்தமாக ஜர்னல்சிங்க் சொல்கின்றார். கபூர் இஸ்ரோ உட்பட பல நிறுவனங்களுக்கு 10 முதல் 15 கிலோ வரை கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அனுப்பியுள்ள பதில்களில் அப்படி ஒரு நதி இல்லை என்றே வந்திருப்பதாகவும் சான்றுகளுடன் காட்டுகின்றார்.கற்பனையான சரஸ்வதி நதியை அரசாங்கம் கொண்டுவந்தால், அடுத்து கற்பனையான இராமன், இராவணனை எல்லாம் அரசாங்கம் உயிரோடு கொண்டுவருமா ? என்று ஜர்னல்சிங் கேட்கின்றார். அதற்கு அந்த கோபாலதாஸ் எனும் பார்ப்பனபூசாரி கடவுள் தன் ரகசியங்களை அறிய அனுமதிப்பதில்லை எனக்கூறி கல்பனா சாவ்லா இறந்ததை உதாரணம் காட்டுகிறார், கடவுளின் ரகசியங்களை அறிந்து வந்த கல்பனா சாவ்லா பூமிக்கு வரும்முன் இறக்கும் படி கடவுள் செய்து விட்டாராம். இவர்களெல்லாம் சரஸ்வதி வந்து விட்டால் உலகின் முதன்மை விண்வெளி நிறுவனமாக உள்ள நாசாவை,அமெரிக்காவை முந்தி விடுவார்களாம்.

               அரசு அதிகாரிகள் ஒன்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் பேசுகின்றார்கள்.சரஸ்வதியின் கதை அறிவியலின் கதை என்று பிரச்சாரப்பயணம் போகின்றார்கள்.மனிதர்களால் நதியை உருவாக்க முடியுமா? என்று கேட்கின்றார்கள் .ஆனால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சரஸ்வதி நதிக்கரையில் பூசைகள் நடைபெறும் என்று அறிவிக்கின்றார்கள். உணமையாக நடந்த பல நிகழ்வுகளை, பேட்டிகளை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள். அரசு அதிகாரிகள், தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு நன்றாக சிரிக்கலாம், அப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.கடைசியில் ஜர்னல்சிங், சகிராம் காசியப்பிடம் கேள்விகளாகக் கேட்கின்றார். நோயெல்லாம் இந்த நீர் தீர்த்துவிடுமென்றால், இந்த நீரை அப்படியே மருத்துவமனையில் வைத்து எல்லா நோயையும் தீர்த்து விடலாமே, எதற்கு மருந்தும் அறுவை சிகிச்சையும் எனக் கேட்கின்றார்.

              சென்னை முதல் சேலத்திற்கு எட்டு வழிச்சாலை என்று இன்று தமிழகத்தில் விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துதல் போல ஹரியானா அரசாங்கம் 10 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்த நிலங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆறுபோல வெட்டி அதில் மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை எடுத்து , சரஸ்வதி என்னும் பெயரில் இருக்கும் ஓடையில் விடுகின்றார்கள். இதனால் அந்தப் பத்து கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் கீழே போயிருக்கின்றது. விவசாயம் செய்ய முடியவில்லை அவர்களால் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றார்கள்.

             தொல்பொருள் துறையோ மற்ற துறைகளோ சொல்லாத நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு நதியைத் தோண்டுவதாக சொல்வதற்கு நோக்கம் இருக்கின்றது. வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில்கள் இல்லை,உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. இதனை மறக்கச்செய்வதற்கு இப்படிப்பட்ட செயல்களை, பொய்மைகளை இந்துத்துவாவாதிகள் செய்கின்றார்கள் என்பதனை கடைசியில் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றார்கள். அரசாங்கம், அரசு அதிகாரிகள் பொன்றவர்களைப் பயன்படுத்தி  இந்துவத்தைப் பரப்புவதற்கான ஒரு திட்டமாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த சரஸ்வதி நதி தோன்றியதாக எப்படி அறிவித்தார்கள்  எப்படியெல்லாம் பொய்களால் பரப்பினார்கள், எப்படி பரப்புகின்றார்கள் என்பதனை நறுக்கென்று சொல்லும் ஆவணப்படம் இப்படம். யூ டியூப்பில் சென்று 'Searching for Saraswati " என்று  டைப் செய்து படத்தைப் பாருங்கள்...தமிழில் நல்ல ஆவணப்படம் எடுக்கும் தோழர்கள், தோழியர்கள் இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.

               

           

Sunday, 19 August 2018

.மனித நேயம் வளர்ப்போம்......



.மனித நேயம் வளர்ப்போம்
( முனைவர்.வா.நேரு)
மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு.  உயிர் அழிப்பு பொருள் அழிப்பு,உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே  மானுடத்துயர்தான்.அந்த மானிடத்துயர் இயற்கைச்சீற்றங்களால்,சாதி, மதச்சண்டைகளால்,நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். எந்தவிதமான குற்றமும் இழைக்காத இலட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள்.அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கின்றார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட துயரங்களை  தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள்.காயம் பட்டு குருதி வழிந்து  கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத்தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா,எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனிதஉயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும்,தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள். அவர்களை நினைவு கூறும்  நாள்தான் மனிதநேய  நாள் ஆகஸ்டு 19 ஆகும். 

2003ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19ம்நாள் ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்  நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி திரு.  செர்சியோவெய்ரா டீமெல்லோ(SérgioVieira deMello ) என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்டனர். செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில்    நாட்டைச்சார்ந்தவர்.வங்காளம்,சூடான்,மொசம்பியா,பெரு,கம்போடியா,யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச்சென்று  30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர்  நீக்கியவர்.. அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் ஆகஸ்டு 19, 2003 அன்று கொல்லப்பட்டார். அவரை சிறப்பிப்பதற்காக  இறப்பிற்கு பின்பு அவருக்கு மனித நேய விருது ஐ.நா.சபையால் அளிக்கப்பட்டது.

 விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோ அவர்களின் குடும்பத்தினர் அவரது பெயரால் ஒரு அறக்கட்டளையை(Sergio Vieira de Mello Foundation) நிறுவினர்.குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை,துடைப்பவர்களை  நினைவுகூறும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கவேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ஆம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் செய்தனர். 2008-ஆம் ஆண்டு மெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர்.அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு,சுவிட்சர்லாந்து,ஜப்பான்,பிரேசில்  போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்துநாடு ஐக்கியநாடுகள் சபையில் A/63/L.49 என்ற தீர்மானத்தைக்  கொண்டுவந்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கியநாடுகள் சபை டிசம்பர்-11,2008-ஆம்ஆண்டு , ஆகஸ்டு 19-ந்தேதியினை உலக மனிதநேயநாளாக அறிவித்தது.. 

உலகம் முழுவதும் இருக்கும் ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் ஆகஸ்டு 19-அன்று மனித நேயநாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த  நாளில்  கலவர பூமிகளில் பணியாற்றும் மனிதநேயர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர். 2003-ல் மெல்லோ அவர்கள் கொல்லப்பட்டதிற்கு பின்பு இந்த நாள்வரை 4076- மனிதநேயர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் நினைவை,செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும்.
இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம்" பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ". போராளிகளோ, அரசாங்கமோ போரிடும்போது 'பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ' என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம்..2010-ல் " நாங்கள் மனிதநேய வேலைக்காரர்கள் " என்னும் முழக்கம், 2011-ஆம்ஆண்டு " உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் ?" என்னும் முழக்கத்தினை வைத்தனர். உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் என்னும் கேள்விக்கு, அன்பு,கருணை,சுகாதாரம்,உணவு,சகிப்புத்தன்மை எனப்பல விடைகளை பார்வையாளர்கள் அளித்தனர். இதன் மூலம் உலகம் அமைதிப்பூங்காவாக மாறுவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதனைப் பட்டியலிட்டனர். இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர். 
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ' என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கல்கத்தா நகரின் தெருக்களிலே தொழு நோயால் படுத்துக்கிடந்த மனிதர்களை தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனித நேயப்பணியாளர்கள். " தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்;தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்;தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே " என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை  நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம்.இன்று ஆகஸ்டு 19 உலக மனித நேய நாள்
.


நன்றி : தினத்தந்தி 19.08.2018

.
.


Tuesday, 14 August 2018

வாட்சப்பால் மன நோயா ?.......

நடு இரவில்
தொடர்ச்சியாக
அனுப்பப்பட்ட
வாட்சப் செய்திகள்.......
காலையில் பார்த்தவுடன்
அயர்ச்சிதான்....

ஓய்வுபெற்று
ஓய்வில் இருக்கும் அவரின்
நடு நிசிச்செய்திகளாக
நிறைய வாட்சப் செய்திகள்

இத்தனை செய்திகளை
நடு இரவில்
அனுப்பியிருக்கிறீர்களே!
அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததாக
எதுவும் இல்லையே ? என்றேன்

எவன் படித்தான்....
எவன் பார்த்தான்....
நூற்றுக்கணக்கில் வரும்
வாட்சப் செய்திகளில்
ஏதேனும் பத்தை
பத்து பேருக்காவது
அனுப்பிவைத்துக்கொண்டே
இருக்கிறேன் ....என்றார்

அர்த்தமும் இல்லாமல்
பொருத்தமும் இல்லாமல்
அர்த்த ராத்திரியில்
தூங்காமல்.......

இது ஒருவகை
மன நோயோ?
வாட்சப்பால் மன நோயா ?
மன நோயால் வாட்சப்பா ?

                                                                        வா.நேரு,14.08.2018


                                   

Tuesday, 7 August 2018

பெரியாரியத்தின் வெடிப்பு ........

எழுதுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே..
பேசுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே ...எங்கள் கலைஞரே...
உழைப்பதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே....



சட்டசபையில் நான்
நாலாம்சாதியென்றாய்
வாழ்நாளெல்லாம் மனுதர்மத்தால்
நாலாம் சாதியாய்
ஐந்தாம் சாதியாய் ஆக்கப்பட்ட
மக்களுக்காகத்தான்
அதற்கும் கீழ் வரிசையில்
வைக்கப்பட்ட பெண்களுக்கும்
சேர்த்துத்தான்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா ....அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே....

பாராட்டிப்போற்றி வந்த
பழமை லோகம் ஈரோட்டுப்
பூகம்பத்தால் இடிகுது பார்
எனக் கவிதை உரைத்தாய்
பழமைலோகத்தை இடிப்பதற்காய்
ஆட்சியில் இருந்தபோதினும்
எதிர்க்கட்சியில் இருந்தபோதினும்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா...அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே
எங்கள் கலைஞரே .....

எந்தக் கல்லூரியில் படித்தார்
உங்கள் கடவுள் ராமர் ?
எனக் கேள்வி கேட்கும் துணிவு
அனைத்து அரசியலையும் கடந்து
அடி மனதில் குவித்து வைத்த
பெரியாரியத்தின் வெடிப்பு அது ?

ஆண்களுக்கு மட்டும் என்னடா
சொத்துரிமை ? ஏனில்லை பெண்ணுக்கு
எனக் கேட்ட அய்யாவின் வார்த்தைகளை
ஆழ் மனதில் சேர்த்து வைத்த நினைவால்தானே
அரசுக் கட்டிலைப் பயன்படுத்தி
பெண்களுக்கும் சொத்துரிமை கொடுத்தாய்.....


உனக்கு அஞ்சலி செலுத்துவதென்பது
வெறும் மாலைகள் வைப்பது அல்ல!
உன்னிடத்தில் இருந்த
போர்க்குணத்தை மனதில் வைப்பது....
உன்னிடத்தில் இருந்த
உழைப்பை நினைவில் வைப்பது

ஒவ்வொரு நிலையிலும்
நீ வரலாறாக மாறியிருக்கிறாய்!
எவராலும் மறைக்க இயலாத
சரித்திரமாயிருக்கின்றாய் ....

மறு வாசிப்பு செய்யப்போகிறோம்
தலைவரே! எங்கள் கலைஞரே!
நீ கொடுத்த இலக்கியங்களை
நீ கொடுத்த புத்தகங்களை
மீண்டும் மீண்டும் வாசிக்கப்போகின்றோம்
உனது பதிவு செய்யப்பட்ட
பேச்சுக்களை மீண்டும் மீண்டும்
கேட்கப்போகின்றோம் தலைவரே
எங்கள் கலைஞரே.......அதுதான்
உங்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி

கண்ணீரால் விடை தந்தோம்....
தலைவரே..எங்கள் கலைஞரே
இயற்கை எய்தினாய் ஆனால்
என்றும் தமிழர்கள் மனதில் நிற்பாய் !
உனது புகழ் வாழி! வாழி !

                                                         வா.நேரு,
                                               தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
                                               07.08.2018      இரவு 7 மணி



..

Saturday, 28 July 2018

கடந்துபோன காலங்கள்(17)

   கடந்துபோன காலங்கள்(17).....

எனது படங்கள்
எத்தனை எத்தனை
ஒளிப்படங்களாய்
என் மகனின்
கணினி சேமிப்பில்.....

எப்படி எப்படியோ
எடுத்து வைத்திருக்கின்றான்
எனது படங்களை....
உட்கார்ந்த வண்ணம்....
ஓடிய வண்ணம்...
கைகூப்பிய வண்ணம்....
கையைக் கட்டிய வண்ணம்
எனது இணையரோடு
ஒருவரோடு ஒருவர்
சாய்ந்த வண்ணம்
எத்தனையோ படங்களை
எடுத்து வைத்திருக்கிறான்

சென்ற இடங்களின்
நினைவுகள் எல்லாம்
சேமிக்கப்பட்ட
வண்ணப்படங்களாய்
அடைத்துக்கிடக்கின்றன
அவனது கணினி
நினைவுகளில்.....

புத்தகத்தில் போட வேண்டுமா?
முக நூலில் போடவேண்டுமா?
கேட்டுவிட்டால் போதும்
படங்களாய் கொண்டுவந்து
கொட்டுகிறான்
கணினித்திரையில்......
எது வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள் .
எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்கிறான்....
எல்லார் கைகளிலும் செல்பேசி..
செல்பேசிக்குள் நிழற்படம்
எடுக்கும் கருவியென
அனைத்தையும் சாத்தியமாக்கிய அறிவியல்....

எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித்திரையில்
பார்க்க ஆசை !
எனது ஏழு வயதில் இறந்துபோன
அப்பாவின் முகம்
நிழலாகக் கூட நினைவில் இல்லை....
அப்பாவின் புகைப்படம்
இறந்த பின்பு யாரோ ஒருவரால்
வரையப்பட்ட படம் ....
அதில் உயிரோட்டம் இல்லை...
அதனால் உணர்வோட்டமும் இல்லை....

அப்பாவின் மாணவர்கள்....
அப்பாவின் நண்பர்கள்....
அப்பாவின் கைப்பந்து
விளையாட்டின் தோழர்கள்.....
எல்லோரிடமும் கேட்டு
கேட்டுப்பார்க்கின்றேன்.....

சாப்டூர் வாலகுரு ஆசிரியர்
ஆண்டவர் வாத்தியார் என
அன்புடன் அழைக்கப்பட்டவர்
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குமுன்
ஆயிரத்து தொழாயிரத்து
எழுபத்து ஒன்றில் திடீரென
இருதய நோயால் மறைந்து போனவர்....
எங்கேணும் அவரது புகைப்படம்
உங்கள் வீட்டில் இருந்தால்
தனிப்படமோ....இல்லை
குழுப்படமோ இருந்தால்
கொடுங்கள் எனக் கேட்டுக்
கொண்டே இருக்கின்றேன்,,,,,,
எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித் திரையில்
பார்க்க ஆசை !....

                                               வா.நேரு......29.07.2018

Thursday, 26 July 2018

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' ..

அன்புடையீர்,
            வணக்கம். எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ' நெருப்பினுள் துஞ்சல்' -சென்னை எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வெளிவந்துள்ளது. சிறிய அளவிலான ஒரு வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும். எம்ரால்டு பதிப்பகம், மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களில் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கலாம். அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்துக்கொடுத்த, தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆயிரம் வேலைகளுக்கும் நடுவிலும் அருமையான கற்பனைத் திறனோடும், கைவண்ணத்தோடும் அமைத்துக்கொடுத்த அவருக்கு நன்றி,நன்றி.. கதைகளை ஒன்றுபடுத்தி அச்சிட்டுக்கொடுத்த அன்புத்தோழர், எழுத்தாளர் உடுமலை வடிவேலு அவர்களுக்கும் நன்றி.
தொகுப்பைப் படித்துப்பார்த்து தங்கள் கருத்துக்களை, விமர்சனங்களைத்  தெரிவிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அடுத்தடுத்து எழுதுவதற்கு உறுதுணையாகவும்  அமையும்




Wednesday, 18 July 2018

விழும் அடி எதுவென...

விழும் அடி எதுவென...

கல் ஒன்றுதான்...
உளி ஒன்றுதான்....
உடைப்பதற்காக
விழும் உளி அடியை
படைப்பதற்காக
விழும் உளி அடியை
உள்வாங்க இயலாது
கல்லினால்.......

வளர்ந்த குழந்தை அறியும்
தன்னைச்செதுக்க
விழும் அடி எது....
தன்னை அடிப்பவரின்
மனச்சிதைவால்
விழும் அடி எதுவென.....
   
                   வா.நேரு...18.07.2018

Tuesday, 17 July 2018

ஓடிப்போன நாள்.....


                        ஓடிப்போன நாள்.....


குறிக்கோள் ஒன்று
விருப்பமாய் மனதிற்குள்
இருந்திடின் மனம்
விடியலை விரும்பும்
இருக்கும் பொழுதெல்லாம்
விரைந்து ஓடும்..
விடிந்ததும்...
நாள் முடிந்ததும்...
இவ்வளவு விரைவாகவா
அடடே....
வியப்பாய் தோன்றும்...

                                    வா.நேரு,
                                    17.07.2018 இரவு 10மணி


           

Sunday, 15 July 2018

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!.....

காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி!


பெரியார் என்ற ஜீவ நதியின்


நீர்ப்பாசனத்தால் விளைந்த விளைச்சல்


தமிழர் தலைவர் புகழாரம்



காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில்  அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்! காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி! பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப் பாசனத்தால் விளைந்த விளைச்சல் என இன்று (15.7.2018) அவரது 116ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் புகழ்ந்துரைத்துள்ளார். அவர் அறிக்கை வருமாறு:

"பச்சைத்தமிழர்" என்று அறிவு ஆசான் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, அவர் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த காமராசரை - அவர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றால்தான் இத்தகைய திருப்பத்தை உருவாக்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன், டாக்டர் ப. வரதராஜலு நாயுடு அவர்களின் இல்லத்தில் கூடி, கலந்துபேசி, ஒப்புக் கொள்ளத் தயங்கிய காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்!

இது, 1953-1954இல் நடைபெற்ற நிகழ்வு. தமிழ்நாட்டு அரசியலின் மிகப் பெரிய சரித்திரத் திருப்பம்!

அதன்பிறகு காமராசர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோது அடுக்கடுக்காக  இடையூறுகள் தோன்றின.   இன எதிரிகள் ஆச்சாரியார் தொடங்கி, அவரிடம் பதவி எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் எதிர்ப்பு உட்பட அத்தனையையும் தூளாக்கிய வாளும் கேடயமுமாக திராவிடர் இயக்கம் - குறிப்பாக திராவிடர் கழகம் இயங்கியது.

காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்

காமராசர் ஆட்சியின் சாதனைகளை நாடெலாம், வீடெலாம் பரப்பி, பலமான பார்ப்பன பத்திரிக்கை உலகின் எதிர்ப்பையும் முறியடித்தது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற ஆசான் தலைவர் தந்தை பெரியாரும்.  மட்டுமா?

டில்லியில், காமராசர் அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க,  கே. பிளான் (காமராசர் திட்டம்) என்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து டில்லிக்குப் புறப்பட்டபோது, அது சரியான முடிவல்ல; அது தற்கொலைக் கொப்பானது என்று ஒரு தந்தை நிலையில் நின்று அறிவுரை வழங்கியவர் தந்தை பெரியார். (பிறகு அய்யா சொன்னதை நான் ஏற்காதது தவறுதான்  என்று மனம் வருந்தி அருகில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதைச் சிலரே அறிவர்).

காமராசர் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று தந்தை பெரியார் கூறியதையெல்லாம் நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவர்.

அதற்கு முன்னே அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகம், காமராசருக்கு காந்தியாரால் - பார்ப்பன நயவஞ்சகத்தால் ஏற்பட்ட அவமானத்தைப்  போக்கிடவும், அவரிடம் ஆச்சாரியார் தலைமையில் ஒரு கூட்டம் தேசியம் பேசிக் கொண்டே மோதி, அதில் காந்தியார் நடுநிலை தவறி, காமராசர் 'அதிகார பூர்வ தலைவர்' என்ற நிலையையும் மறந்து, "ஒரு விஷமக் கும்பல்" (க்ளிக் - நீறீவீஹீuமீ) என்று கூறி மனம் புண்பட வைத்தது தேசியத்திற்குள் வெடித்த ஆரிய - திராவிடப் போரின் வெளிப்பாடு என்பதை அன்று (6.1.1946) "திராவிட நாடு" இதழில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா தனது தேன் தமிழில் "கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது" என்ற தலைப்பிட்டு ஒரு விரிவான அரசியல் - திராவிட - ஆரிய  திரைமறைவுப் போரினை மிக அருமையாக விளக்கினார்.

காமராசர் - ஆச்சாரியார் அணிகள் தங்களது நிலைப்பாட்டினை விளக்கிட, நிலை நிறுத்த சேலம் மாவட்ட திருச்செங்கோட்டிலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் கூடிய பிறகு, ஆகஸ்ட் போராட்டத்தில் (கல்கத்தா)  எதிராகப் பேசிய ஆச்சாரியார்மீது கட்டுப்பாட்டை ஒட்டிய விமர்சனம் செய்த காமராசரை பலமிழக்கச் செய்ததை விளக்கினார்.

ஆரிய - திராவிட இனப் போராட்டம்

அது மட்டுமல்ல, தொடர்ச்சியாக 17.2.1946இல் '"காமராசர் சிந்தும்  கண்ணீர்" என்ற தலைப்பில் ஒரு அற்புதமான  - அரசியல் போராட்டங்கள் ஆரிய - திராவிட இனப் போராட்டம் - காமராசர் - ஆச்சாரியார் அரசியல் மோதல் என்பதை விளக்கியதோடு, காமராஜரின் கண்ணீரைத் துடைக்க  காத்திருக்கிறது கடமையாற்றும் கருஞ்சட்டைப்படை என்று எழுதினார்!

தேசியத்தில் பூத்த மலர் காமராசர்; ஆனால் திராவிடத்தால் கனிந்த கனி என்பதைப் புல்லர்களுக்குக்கூட புரிய வைக்கும் பழைய வரலாற்றிலிருந்து, படித்துக் கொள்ள வேண்டிய திராவிடப் பாசறை தீந்தமிழில் தீட்டிய அரசியல் அழகோவியம்!

அதில் ஒரு பகுதி இதோ - 72 ஆண்டுகளுக்கு முந்தையதானாலும் என்றும் வரலாற்றில் நிலைத்த முன்னோட்டம்

" ஆனால், காமராஜர், காங்கிரசைவிட்டு விலகுவார் என்று நாம் நம்புகிறோமா? இல்லை! நம்பவுமில்லை! அவருக்கு அந்த யோசனையைக் கூறவுமில்லை, திராவிடர் கழகம், நெருக்கடியான நேரத்தில் கண்ணீர் வடித்துக்கொண்டு, வேறு வழி இல்லையே என்று கூறும், "பக்தர்களை" அழைக்கவில்லை,  தேவையில்லாததால்! காமராஜர்கள், அங்கேயே இருக்கட்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பட்டும், அவர்கள் படும் அல்லலை, அவர்கள் அங்கு ஆரியத்தால் அடக்கப்படுவதை, அவர்களின் ஆண்மை மங்குவதை, திராவிடர் கழகம் கவனித்துவருகிறது. ஆரியத்துடன் அக்கழகம் நடத்தும் போரிலே அவர்கள் சார்பாகவும், நிச்சயமாகத் திராவிடர் கழகம் பேசும்! காமராஜரின் கண்ணீரை திராவிடர் கழகம், கருப்புச் சட்டைப்படை, துடைக்கும். அவர் அடைந்த கதியால், தமிழனுக்கு ஏற்பட்ட தாழ்நிலையை, நிச்சயமாகத் திராவிடர் கழகம் போக்கும். வீழ்ச்சியுற்ற இனத்திலே, இதுபோல விழியில் நீருடன் வீரர்கள் இருப்பதுண்டு. ஆனால் எழுச்சி பெற்றதும், அந்த இனத்திலே தோன்றும் வீரர்கள் முன்னவர் சிந்திய கண்ணீரைக் கவனத்திலிருத்தி மாற்றான் மண்டியிடும் அளவு வெற்றிபெற்று அந்த வெற்றிநாளன்று, வீழ்ந்துகிடக்கும் மாற்றானைநோக்கி, 'மமதை கொண்டவனே! உன்மயக்க மொழியிலே சிக்கிய மறத்தமிழனைச் சீரழித்தாயே அன்று! உன்னால் அடைந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விழியில் நீர்பெருக்கினானே! அந்தக் கண்ணீர், இந்தக்கூர்வாளாயிற்று" என்று கூறுவர். காமராஜரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள கருப்புச்சட்டைப் படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியே, அந்தக் கருப்புச் சட்டைப்படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்."

அதற்குப்பின் அரை நூற்றாண்டு கால அரசியல் திரைக்குப்பின் நடைபெற்ற "தேவாசுரப் போர்" - ஆரிய - திராவிடப் போரில் தந்தை பெரியாரும்,  திராவிடர் கழகமும் துணை நின்ற நிகழ்வுகள் நீண்ட வரலாறு.

இதோ இரண்டொரு துளிகள்:

(1) "கறுப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள்" என்ற ஆச்சாரியாரின் நிதானம் இழந்த பேச்சுக்கு நாடு தழுவிய கழகக் கண்டன கூட்டங்கள் நடத்தியது திராவிடர் கழகம்.

2) டில்லியில் காமராசர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டில் பட்டப் பகலில்  தீ வைத்து, கொலை செய்ய முயற்சித்த ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தின் பசுவதை தடுப்பு போர்வையில் - சமதர்மத்தைக் காத்த காமராசரை ஒழித்துக் கட்ட முயன்றபோது அதை அம்பலப்படுத்தியது திராவிடர் இயக்க வீரர்களே!

'காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'  நூலை வெளியிட்டு, மதவெறியர்களின் முகமூடியைக் கிழித்திட்டது திராவிடர் கழகமே!

இப்போது புரிகிறதா காமராசர் தேசியத்தில் பூத்து, திராவிடத்தால் காய்த்து, கனிந்த கனி என்பது!

அவரைப் பயன்படுத்தும் காவிகளிடம் எச்சரிக்கை தேவை! மானமிகு கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய சட்டம்தான் இன்று பள்ளிகள் காமராசரின் பிறந்த நாளை கல்வி விழாவாகக் கொண்டாடுவதற்கு அடிப்படை.

இப்போது புரிகிறதா காமராசர் திராவிடத்தில் காய்த்த கனி, பெரியார் என்ற ஜீவ நதியின், நீர்ப் பாசனத்தால் கிடைத்த விளைச்சல் என்பது!

வாழ்க காமராசர்!

வருக  அவர் விரும்பிய

சமதர்ம, மதச்சார்பற்ற நாடு!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.7.2018

நன்றி : விடுதலை 15.7.2018

Wednesday, 27 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

பாராட்டப்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்:
                                          ஆந்திர மாநிலம் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம (நாயுடு) அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்தப்படவேண்டியவர்.மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசுகின்ற நமது நாட்டில் ,அந்த முடை நாற்றத்தை தனது ஓட்டு வங்கியாக மாற்றுவது எப்படி எனும் கலை பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அகற்ற நினைப்பது இந்த மூட நம்பிக்கை முடை நாற்றத்தை அகற்றுவதைத்தான். அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகளான கணினி,செல்பேசி பொன்றவற்றைப் பயன்படுத்தி அரண்டு போய் இருக்கும் மக்களை மேலும் மேலும் அரள வைக்கும் வகையில் பேய்,பிசாசு மூட நம்பிக்கை கதைகள் திட்டமிட்டுப்பரப்படுகின்றன. ஒலி,ஒளிபரப்பபடுகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் செயல்பட்ட நிம்மல ராம(நாயுடு) அவர்களைப் பாராட்டுவோம்.

பேய்', பிசாசுகள்' பயத்தைப் போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ

அமராவதி, ஜூன் 26 ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பால கோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன் தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

அந்தசுடுகாடுகடந்தபல ஆண்டுகளாக யாரும் பயன் படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புனரமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

திட்டம் இழுபறியாககிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., ராமநாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப் பட்டுச்சென்றார்.அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

இதனால்,மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு' பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துவசதிகளும்கொண்ட நவீன சுடுகாடாக இது மாற் றப்படும். எனக் கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என  தெரிவித்துள்ளார்.

நன்றி : விடுதலை 26.06.2018

Saturday, 9 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....மதுரை நிகில் பவுண்டேசன்....





மதுரை நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று எனது ஊரான சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 12 மாணவ மாணவிகளுக்காக நடைபெற்றது. மொத்தம் சுமார் 120 மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். நிகில் பவுண்டேசன் நிறுவனர் மரியாதைக்குரிய மதுரை திரு.சோம.நாகலிங்கம் ஐ.ஆர்.எஸ். அவர்கள் நிகிழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு நான்(வா.நேரு) தலைமை தாங்கினேன். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.சாப்டூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.வணங்காமுடி,பொறியாளர் சு.இரா.மணிமாறன்,பொறியாளர் லட்சுமிகாந்த்,கணினி ஆசிரியர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பயிற்சியாளர்களாக மதுரை திரு.குமரகுருபரன் சார்,இராஜபாளையம் கண்மருத்துவர் பால்ராஜ் சார்,மதுரையினைச்சார்ந்த திரு தயாளன் சார் ஆகியோர் மிகச்சிறந்த பயிற்சியினை அளித்தனர். சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருமதி சுகந்தி அவர்களும் முருகேஸ்வரி அவர்களும் விடுமுறை நாளில் காலையிலிருந்து மாலைவரை பயிற்சி நடக்கும் இடத்தில் இருந்ததோடு, மாணவ,மாணவிகளை ஒழுங்குபடுத்தி வகுப்பில் அமரவைத்து மிகப்பெரிய உதவியைச்செய்தார்கள். மதியம் உணவினை,காலையில் தேநீரை அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார்கள்.

                            மதுரையிலிருந்து விருந்தினர்களை அழைத்துச்சென்று, எனது மகன் அன்புமணியும் , நானும் நிகழ்வில் கலந்துகொண்டோம். மிகப்பெரிய மன நிறைவினைக் கொடுத்த நாளாக இந்த நாள்(09.06.2018) அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் கொடுத்த நிகழ்வு மதிப்பீடு மனம் நெகிழும் அளவிற்கு அமைந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனி ஆண்டவர் பெண்கள் கல்லூரியில் மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக நான்,திரு.இரா.சீனிவாசன், பேரா.சேகர்,பேரா.ஆண்டியப்பன் சார் போன்றவர்கள் கலந்துகொண்டு கொடுத்த ஒரு நாள் பயிற்சி முடிவில் ஒரு மாணவி  நிகழ்வு மதிப்பீடு சொல்லும்போது 'எனது வாழ்க்கையை இந்த பயிற்சிக்கு முன்/இந்த பயிற்சிக்குப் பின்  என்று பிரித்துக்கொள்ளலாம். அவ்வளவு செய்திகள் இன்று கற்றிருக்கின்றேன். இதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து வெற்றி பெறுவேன் 'என்றார். அதனைப் போல இன்றைக்கு சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளி +2 மாணவி தன்னுடைய வாழ்க்கையில் இலக்கினை முடிவு செய்ய இந்த நாள் உதவியிருக்கிறது. நான் தெளிவாக இந்தப்பயிற்சி உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி என்றார். மனம் மகிழ்வாக இருந்தது.  நிகில் பவுண்டேசன் வெளியீடான, திரு.சோம. நாகலிங்கம் அவர்கள் கருக்கொண்டு வடிவமைத்த 'வல்லமை காணீர் ' என்னும் புத்தகம் அனைவருக்கும்  வழங்கப்பட்டது.  


                               இது ஒரு நல்ல தொடக்கம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான வேலைகளை அக்னி சிறகுகள் அறக்கட்டளையும், ஊரில் உள்ள பெரிய மனிதர்களும்  வெளியூரில் உள்ள பெரிய மனதுக்காரர்களும் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். அங்கங்கு இருக்கும் நல்ல உள்ளங்கள் தங்கள் கரங்களின் மூலமும் உள்ளங்களின் மூலமும் உதவத்தொடங்கியிருக்கின்றார்கள். திருப்பூரில் இருக்கும் அருமை நண்பர்கள் க.சுப்பிரமணியமும்,ஜொ.இராஜேந்திரனும் இணைந்து ரூ 2000 இந்த நிகழ்வுக்கு உதவியிருக்கின்றார்கள். மிக்க நன்றியும் பாராட்டுகளும் அவர்களுக்கு. சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச்சேர்த்த பெற்றோர்களுக்கு அக்னி அறக்கட்டளை சார்பாக பாரட்டு விழாவினை இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதயம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு....

                  இணைவோம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான
நல்லதை செய்வோம் .....   அதன் மூலம் மன நிறைவு கொள்வோம்

Sunday, 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......



Wednesday, 30 May 2018

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

           

சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு என்றார் பெரியார்
வாயால் கூறுபவர்களைவிட
ஒருபடி மேலே நின்று
வாழ்ந்து பார்த்து சொல்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு......

சாதிச்சகதியில்
எந்நாளும் மாட்டியதில்லை
சக மனிதனை எந்த நாளும்
சாதிக்கண் கண்டு நோக்கியதில்லை
பார்ப்பன நண்பரைக் கூட
அளவு கடந்து  நேசிக்கவைக்கும்
அய்யாவின் மனித நேயம்
மண்டைக்குள் புகுந்ததால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

இடையூறுகள் ஏதும் என்றால்
சிலர் சோதிடர்களை
நோக்கி ஓடுகின்றார்...
எதை எதையோ நாடுகின்றார்..
அறிவு கொண்டு இடையூறு
நீக்கும் அய்யாவின் வழி ஏற்றதால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்...

இல்லாத கடவுளுக்காக
எந்த நாளும் காசைச்செலவழித்ததில்லை...
கடவுளுக்கென எவர் கேட்டு வந்தாலும்
இந்த நாள் வரை ஒரு ரூபாய் கொடுத்ததில்லை
விடுதலை இதழின் வளர்ச்சி நிதி
முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம்
படிப்போர்க்கு உதவி எனத்தான்
கரங்கள் நீண்டிருக்கின்றன.......
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

வரவுக்குள்தான் செலவு
கஞ்சியோ கூழோ குடிப்போம்
கடன் வாங்கி பகட்டு வேண்டாம்,,,
எவ்வளவு பெரிய பணக்காரரோடு
பதவிக்காரரோடு பழகினாலும்
நம் நிலையில் நாம் இருப்போம்
நம்மால் முடிந்ததை
தொண்டாய்க் கொடுப்போம் எனும்
பொருளாதார நடைமுறையால்
எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்

மற்றவர்கள் உனக்கு மரியாதை
காட்ட வேண்டும் என நினைத்தால்
அவர்களுக்கு மரியாதை காட்டு
எனும் தந்தை பெரியாரின் தத்துவம்
மனதில் பதிந்த காரணத்தால்
கடிந்து சொல்ல மனம் வருவதில்லை
எவர் மனதையும் நோகவைக்கும்
எண்ணம் எப்போதும் இல்லை
அதற்காக எந்த நிலையிலும்
எனது கொள்கையை விட்டுக்கொடுத்தலும்
இல்லை எனும் எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

ஒழுக்கம் என்பது உனக்கு
கொடுத்த பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றுதல்
என அடித்துச்சொன்னார் அய்யா பெரியார்...
இயக்கப்பொறுப்போ குடும்பப்பொறுப்போ
அலுவலகப்பொறுப்போ
ஒழுக்கமே உயிர் எனக்கொள்வதால்
எந்த நாளும் தளர்ச்சி இல்லை
வாழ்வில் வளர்ச்சிதான் எனும்
வாழ்க்கை முறையால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

தந்தை பெரியாரின்
தலைமைக் கொள்கை மகன்
அய்யா ஆசிரியரின் வழிகாட்டல்
நாளும் 'விடுதலையில்' அவர் ஊட்டும்
வாழ்வியல் சிந்தனைகளை
வாழ்வின் கைத்தடிகளாய்ப்
பற்றிக்கொண்டதால்
வளமாய் நலமாய் வாழ்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு...

இன்று மே முப்பத்தி ஒன்று....
அய்ம்பத்து ஐந்தாம் ஆண்டு
பிறந்த நாளை எளிமையாகக்
கொண்டாடும் இந்த நாளில்
உங்களுக்கு வலிமையாகவே
பரிந்துரைக்கின்றேன்.....
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு....

                                       

                         வா.நேரு ....31.05.2018

               

Monday, 30 April 2018

எங்களது கனவில் ஒரு மேதின நாள் ....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உலகம் முழுதும் இருக்கும்
உழைக்கும் மக்கள் எல்லாம்
இன்புற்று இருக்கும் நாள்....

உழைத்து உழைத்து உருக்குலைந்து
உண்ணும் உணவிற்காக அலைந்தலைந்து
அல்லல்படும் இந்த நாள் போல் அல்லாது
அந்த நாளில்
எல்லோரும் உழைப்பதுவும்
உழைக்கும் அனைவருக்கும் உணவு
உறுதிபடுத்தப்படுவதுமான நாளாக
அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உண்டு கொழுக்கச் சிலரும்
உணவின்றி உழைத்து சாகப் பலருமாய்
இருக்கும் இந்த நாள் போலல்லாது
அந்த நாளில்
அவரவரால் முடிந்த உழைப்பு
ஆனால் அனைவருக்கும்
தேவையான அவரவர் உணவு
அவரவர் தட்டில் வந்து
நிரம்பி வழியும் நாளாய் அந்த நாள்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

கடவுளின் நெற்றியில் இருந்து
பிறந்தவர்கள் நாங்கள் என்னும்
உளறல்கள் எல்லாம் ஒழிந்து
உலகில் பிறக்கும் அத்தனை
குழந்தைகளும் பேதமில்லாமல்
கறுப்பென்றும் சிவப்பென்றும்
வேற்றுமைகள் காட்டாது
உயர்வென்றும் தாழ்வென்றும்
பிறக்கும்போதே சாதி ஏற்றத்தாழ்வு
ஏணிப்படிகளில் பொருத்தாது
பிறக்கும் குழந்தைகள் எல்லாம்
மனிதக் குழந்தைகளாய்
பிறக்கும்  நாளாய்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

சாதியா ? அப்படியென்றால்.....என்னது ?
மதமா ? அப்படியென்றால் ....தெரியாது ?
கடவுளா ? நன்றாக வாழத் தேவையா அது ?
என்னும் கேள்விகளோடு
இனிவரும் ஓரிரு தலைமுறைகளில்
எங்களது பிள்ளைகளின் பிள்ளைகள்
பிரசவிக்கும் பிள்ளைகள் எழுப்பும்
கேள்விகளால் நிரப்பப்படும் நாளது .....

உலகம் ழுழுவதும் இருக்கும்
செல்வமெல்லாம் ஓரிருவர் கையில்
இருக்க அல்ல! அல்லடா அல்ல !
என ஆர்ப்பரித்து உழைக்கும் கூட்டம்
உலகச்சொத்துக்களையெல்லாம்
பொதுவாக்கும் காலமது .....
தனியுடமை அழிந்து
பொது உடமை செழித்து
தந்தை பெரியார் காணவிரும்பிய
பொது உரிமையோடு மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க வாழும் காலம் அது.....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
அந்த நாளை நோக்கி நகர்வதற்காக
தந்தை பெரியாரின் கைத்தடி இருக்கிறது..
அண்ணல் அம்பேத்கரின் சுட்டும் விரல் இருக்கிறது....
ஓங்கிய கைகளோடு புரட்சியாளர் லெனின்
போட்டுத்தந்த முழக்கங்கள் இருக்கிறது ....
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
தோழர் லெனினும் போட்டுத்தந்த
பாதை தெளிவாகவே எங்கள்
இளைஞர்களின் கண்களில் தெரிகிறது....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
ஆணும் பெண்ணும் சமமாய்
வர்க்கப்பேதம் ஒழிந்து
வர்ணபேதம் அழிந்து
மனித நேயம் தழைத்து
உலகமெல்லாம் ஒரு நாடாய்
உழைக்கும் மக்களெல்லாம் ஒரு வீடாய்
செழித்துக்குலுங்கும் அந்த நாள்...
அந்த நாள் ! அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது!

                                                               வா.நேரு ....
                                                மேதின  வாழ்த்துகள் அனைவர்க்கும்


Sunday, 1 April 2018

தந்தை பெரியாரும் கோராவும்.........உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்......


'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம் " 29,30.03.2018 தேதிகளில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ' தந்தை பெரியாரும் கோராவும் ' என்னும் தலைப்பில் 30.03.2018 அன்று காலை உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரின் போராட்டம், அவரின் வாழ்வியல் போன்ற பலவற்றை வாசிக்கும் வாய்ப்பு இந்தக் கருத்தரங்கத்திற்கு தயாரித்ததன்  வாயிலாகக் கிட்டியது. பிறப்பால் பார்ப்பனராக பிறந்த கோரா அவர்கள் 22 வயதில் பூணூலைக் கழட்டிப்போட்டுவிட்டு மறுபடியும் பூணூலை போட மறுத்தவர். வாழ் நாளெல்லாம் பூணூல் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர். வாதாடியவர். பூணூல் போடாவிட்டால் வீட்டில் இருக்காதே,வீட்டை விட்டு வெளியில் போ என்று சொன்னவுடன் தனது மனைவி சரஸ்வதி கோரா அவர்களோடும் தனது மூத்த மகன் 3 மாதப்பிள்ளையான இலவணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியவர். அக்கிரகாரத்திலிருந்து வெளியேறி, சேரியில் போய் குடியேறியவர். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைய்வராக இருந்த அவர் எப்படி நாத்திகவாதியாக மாறினார். நாத்தியவாதியாக மாறியதால் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கை,துணிச்சல் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாத்திகத்தை தனது வாழ் நாள் முழுவதும் பரப்பியவர் போன்ற பல செய்திகளை அரங்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.(விரிவான கட்டுரை புத்தகத்தில் வருகின்றது.) பெரியார் சிந்தனை உயராய்வு  மய்யத்தின் பேராசிரியர்கள் முனைவர்.க.அன்பழகன், முனைவர்.த.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்தோர் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர். ஒவ்வொரு கருத்தாளரும் மிக நுட்பமாக நன்றாக தயாரித்து வந்திருந்த கட்டுரைகளை அரங்கத்தில் வாசித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய கோணத்தில் தந்தை பெரியாரின் தத்துவத்தை உழைப்பை மற்ற தலைவர்களோடு,அறிஞர்களோடு ஒப்பிட்டு கருத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றி, சான்றிதழ்களை வழங்கி,இந்த நிகழ்வுக்கு உழைத்தோர்க்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். அய்யா ஆசிரியரின் அவர்களின் உரை, தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் தண்டித்த நீதிபதியே சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த நேரத்தில், பெரியாரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், தண்டித்த நீதிபதியே தலைமை ஏற்று அய்யா அவர்களை வரவேற்று, மேல் நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு தந்தை பெரியார் அவர்களை பாராட்டியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். உணவு,இருப்பிடம், விருந்தோம்பல்,நல்ல நிறைவான கருத்துப் பரிமாற்றம், புதிய நோக்கில் அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துவைத்த விதம் என ஒவ்வொன்றும் மிகவும் ஈர்ப்பாக அமைந்த கருத்தரங்கமாக அமைந்தது. எனது அறையில் உடன் தங்கிய தோழர்கள் எழுத்தாளர் உடுமலை வடிவேல், எழுத்தாளர், பேச்சாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களோடு இயக்க நிகழ்வுகள் பரிமாற்றம் என குறிப்பிடத்தக்க நாளாக 30.03.2018 அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் தந்த நிகழ்வு,பங்கேற்பு.





'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்' என்னும் தலைப்பில் விடுதலை நாளிதழ் தீட்டிய 30.03.2018 தலையங்கம்

"வல்லம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் - அதன் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பல்கலைக் கழக அய்ன்ஸ்டின் மன்றத்தில் மார்ச்சு 29,30 ஆகிய இரு நாட்களில் "உலகப் பெரியாரும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களும் - ஓர் ஒப்பிடு" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் அளிக்கும் கருத்தரங்கம் நேர்த்தியாக நடைபெறுவது - அறிவியல் துறையில் ஓர் அத்தியாயம் என்றே கூற வேண்டும்.

மனித குல வரலாற்றில் சமுதாய வளர்ச்சி என்பது - மனிதனின் அறிவு வளர்ச்சியைச் சார்ந்ததே. காட்டு விலங் காண்டிக் காலந் தொடங்கி அறிவியல் வளர்ச்சியால் மானுடம் அடைந்திருக்கும் எல்லா வகையிலுமான வசதிகளும், வாய்ப்புகளும், மனிதனின் அறிவு வளர்ச்சி விளைச்சலைச் சார்ந்ததேயாகும்.

கடவுள், மதம் தொடர்பான நம்பிக்கைகள் மானுட வளர்ச்சியின் கால்களை ஒரு பக்கம் கீழே இழுத்தாலும் அவற்றை யெல்லாம் கடந்து மானுட சமுதாயம், வளர்ச்சி நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுதான் வருகிறது.

"கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பி இருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்" என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் ('குடிஅரசு' 11.8.1929).

அஞ்ஞான குப்பைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத்தான் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.

மத்திய அமைச்சராக - அதுவும் கல்வித் துறையின் (மனிதவள மேம்பாட்டுத் துறையின்) இணை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே 'டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கூற்றுத் தவறானது' என்று கூறியதோடு நிற்கவில்லை. "விஞ்ஞானம் என்றும் பொய்யானது, மெய்ஞ்ஞானமே உண்மை" என்று கூறியிருப்பது - நம் நாட்டின் வெறும் படிப்பறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்புவதைவிட ஒரு மனிதனின் மத நம்பிக்கை மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவின் வேர்களை அழிக்கும் வேர்ப் புழுக்களாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களி டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலி யுறுத்துகிறது. (51கி-லீ)

ஏட்டுச் சர்க்கரையாக இருந்து பயன் என்ன? மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவரே அஞ்ஞானத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலையில் உள்ளார். பிரதமராக இருக்கக் கூடியவரே "சிவபெருமான் யானை தலையை வெட்டி ஒரு முண்டத்தின் கழுத்தில் பொருந்துமாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்" என்று கூறுகிறார் என்றால், இந்த நிலையை என்னவென்று சொல்லி பரிகசிப்பது!

இந்த நிலையில் சிந்தனையாளர்களின் அரிய வழிகாட்டும் பகுத்தறிவுச் சிந்தனைகள், உயர் எண்ணங்கள் மானுட வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக - சிறப்பாக தந்தை பெரியார் அவர் களின் சுய சிந்தனைகள் மானுட வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி விஞ்ஞானிகள்கூட நினைத்துப் பார்க் காத ஒரு கால கட்டத்தில்  தந்தை பெரியார் (1938இல்) சொல்லி யிருப்பது சாதாரணமானதா?

அதனால்தான் அய்.நா.வின் "யுனெஸ்கோ" அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் புதிய "உலகின் தொலைநோக்காளர் (Prophet of the New age)"
என்று குறிப்பிட்டுள்ளது. (27.6.1970).

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையும், தொண்டும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடந்திருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய தனித்தன்மை மிக்க சிந்தனைகள், உலக மானுடத்திற்கே தேவையானவையே! அவர் அளித்த கொள்கைகள் வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு நெறி முறையாகும். (A way of Life).

கடவுள், மதம், மத நூல்கள், ஜாதி போன்றவைகளால் மனிதன் அறிவையும், தன்னம்பிக்கைகளையும், பொரு ளையும், காலத்தையும் விரயமாக்குவது பற்றி கவலை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கொடூரமான சிறையிலிருந்து அவனின் பகுத்தறிவை விடுதலை செய்வ தற்குக் கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார். அதன் விளைச்சலைத்தான் இன்றைக்குத் தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

"இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட் சியைச் செய்தார் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்"

- பேராசிரியர் ஜான்ரைலி ('ஆனந்தவிகடன்' 16.7.1972)

இத்தகு தலைவரின் கருத்துக்கள் உலகெங்கும் பரவச் செய்வதற்கு வல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கும் பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

பன்னாட்டுச் சிந்தனையாளர்களை, இந்திய அள விலான சிந்தனையாளர்களை தந்தை பெரியாரோடு ஒப் பிட்டுக் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை  வல்லம் கருத்தரங்கில் வழங்கியுள்ளனர்; அது சிறப்பான நூலாக வெளிவரவிருக்கிறது என்பது அறிவு விருந்துக்கான ஏற்பாடாகும்.

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் ஒரு துறையான பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரியார் சிந்தனைப்பற்றி 'டிப்ளோமா' வகுப்புகளை நடத்தி வருகிறது. அஞ்சல் வழியாக நடத்தப்படும் இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்பது பெரும் பயன் தரக் கூடியதாகும். வாழ்வை வளப் படுத்திக் கொள்ள வளமான சிந்தனைகளை வாரி வழங்கக் கூடிய தத்துவத்திற்குச் சொந்தமானவர் தந்தை பெரியார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வீர்களாக!"