Thursday, 8 April 2021

நமக்கு என்ன குறை நிகழும்?

                 

ஊக்கமூட்டும் 

ஒரு வார்த்தை 

ஒரு மைல்தூரம்

எளிதாகக் கடக்க

நெம்புகோல் போல

உதவுகிறது....


படைத்த நூலை

பக்கம் பக்கமாகப் 

படித்து

அதில் குறிப்புகளை

எழுதி

எழுதி வைத்த பாராட்டைச்

சொல்வதை விட..

மனதில் எழுந்த 

வினாக்களை ஐயங்களை

எழுத்தாளனிடம்

கேட்பதை விட

மிக உயர்ந்த பரிசு

நூலைப் படைத்தவனுக்கு

வேறு என்ன 

கிடைத்து விடப்போகிறது...?


எழுதுகிறவன் 

எதை நோக்கி எழுதுகிறான்?

தங்கப் பேனா பரிசாகக்

கிடைக்கும் என்றா

வெறும் பேனாவில்

எழுதுகிறான்.?


அன்றாடம் காணும்

அவலங்களை

சொற்களால் விளையும்

கொலைகளை

குவிப்புகளால் விளையும்

குமுறல்களை

ஏதோ ஒரு வகையில்

தவிர்க்கவேண்டும்

எனும் எண்ணோடத்தில்தானே

எழுதுகிறான்/எழுதுகிறாள்....


எழுதும் சொல் ஏதேனும்

ஒன்றிரண்டு

படிப்பவர் மனதில்

தைக்கவேண்டும்...

அதனால் ஒரு 

மாற்றம் நிகழல் வேண்டும்.

என்றுதானே எழுதுகிறான்..


படைக்கும் அவசரத்தில்

அடுத்தவர் புத்தகம்

எதனையும் படிக்கும் நேரம்

எனக்கு இல்லை 

என்றார் ஒருவர்....

உங்கள் படைப்பும்

குறைப்பிரசவப் 

படைப்பாகவே இருக்கும்

என்றேன் நான்....


எவரையும் படிக்காமல்

எனது புத்தகத்தை

எல்லோரும் படிக்கவேண்டும்

எனும் விருப்பம் சரிதானா?


எழுதும் நேரம் போலவே

மற்றவர் படைப்பைப்

படிக்கும் நேரத்திற்கும்

நேரம் ஒதுக்குவோம்...


குப்பையாகக் கருதும்

எழுத்தை

மாற்றி மாற்றிச் சொரிதல்

தேவையில்லை

எனினும்

உண்மையான எழுத்து

என உணரும் நேரம்

ஓரிரண்டு சொற்களால்

படைத்தவனை

வாழ்த்துவதில் 

நமக்கு என்ன குறை நிகழும்?..


                         வா. நேரு, 09.04.2021


பற்ற வைக்கும் வல்லமை......

           

எதைப் பற்றி எழுதுவது

என நினைக்கையில்

எழுதுவதைப் பற்றி

எழுதுவது என முடிவு....


எவர் எவரோ எழுதியிருக்கிறார்

குன்றென தமிழ்க்கவிதைகள்

குவிந்து கிடக்கிறது இணையத்தில்

இன்னும் ஒரு கவிதை

எழுதுதல் தேவைதானா?

எனும் உனது குரல் 

எனக்கும்  கேட்கிறது...


அவர் அதை எழுத

இவர் இதை எழுத

நான் எதை எழுத

என யோசித்துக்கொண்டே இராதே!

எழுது தம்பி எழுது...


வானில் பறந்து கிடக்கும்

நட்சத்திரங்களில்

எந்த நட்சத்திரம் நல்ல

ஒளியைத் தரும் என்பதை

எப்படி உணர்ந்து கொள்வது?

ஆயிரக் கணக்கில் வரும்

கவிதைகளில் எந்தக் 

கவிதையை ஈர்ப்புக் கவிதை

என ஏற்றுக்கொள்வது?


எது ஈர்ப்பு என்பதனை

முடிவு செய்பவன் வாசிப்பவன்..

முடிவை வாசிப்பவனிடம் விடு...

பாடல் படைக்கும் தொழிலை

தொடர்ந்து கொண்டே இரு....


ஒற்றை வரி 

உலகில் தீப்பிடிக்க

வைக்கக் கூடும்..

ஒற்றை வரி

உலகில் பொதுமையைக் 

கொண்டு வரக்கூடும்...

ஒற்றை வரி ..

வீட்டிற்குள் அடைக்கப்படும்

பெண்களின் சிறைகளை

உடைக்கக்கூடும்

ஒற்றை வரி

மனித நேயத்தை உலகில்

வளர வைக்கக் கூடும்...


அந்த ஒற்றை வரி

எது என்பது 

உனக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது...

எந்த மொழியில் 

எழுதக் கூடும் எனத் தெரியாது..

ஆனாலும் அந்த ஒற்றை வரி

கவிதை வரியாகத்தான்

இருக்கக் கூடும்....

ஏனெனில் பற்றவைக்கும்

வல்லமை கவிதை

வரிகளுக்கு மட்டுமே உண்டு...

எழுது...தம்பி...எழுது.. எழுது.

                           வா.நேரு,08.04.2021






Tuesday, 6 April 2021

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்....

 

அவள் இருதலைக் 

கொள்ளி எறும்பு

போலத் திணறுகிறாள்..

எது சரி என

முடிவெடுக்க முடியாமல்

திணறுகிறாள்...


நடக்கப்பழகிய 

காலம் முதலே 

அவள் மனதில்

கடவுள் நம்பிக்கையை

புகுத்திய பெற்றோர்.....


இதிகாசப் புராணக் 

கதைகள் எல்லாம்

உண்மையென்றே நம்பி

கேட்டு வளர்ந்த பெண் அவள்..


தும்மும்போதும்

கதவில் இடிக்கும்போதும்

இடியோசை கேட்கும்போதும்

இறைவனை அழைத்தே

பழக்கப்பட்டவள் அவள்....


எத்தனை முறை 

அழைத்திருக்கிறாய் கடவுளை...

எப்போதாவது வந்திருக்கிறாரா?...

என ஒரு கேலிப்புன்னகையோடு

கேள்விகளாகக் கேட்கிறான்

காதல் கணவன்...


'சாதலும் வாழ்தலும் அற்ற

இடமாய்' 

காதல் களிப்பினில்

கட்டிலில் திளைத்திருக்கும்

வேளையில்

எல்லா இடத்திலும் 

இருக்கும் கடவுள்

இப்போதும் பார்த்துக்

கொண்டிருக்கிறாரா? 

எனக் கேட்கிறான்....

காது ஓரத்தில்

முத்தங்களைக் கொடுத்தபடி...


அன்பு மழையில் 

நனைக்கும் கணவனின்

அன்பினில் எக்குறையும்

இல்லை இல்லறத்தில்...


நம்பிக்கைகள் மேல்

கேலி கிண்டல்களின்

வழியாக வந்து விழும்

அடியால்

உண்மை எது?பொய் எது?

என முடிவெடுக்க முடியாமல்

திக்கித் திணறி

இல்லறத்திற்குள் 

நுழைந்தவுடனேயே

முடிவெடுக்க முடியாமல்

திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்,,,


                           வா.நேரு,07.04.2021

Monday, 29 March 2021

தேர்தல் பாதை வேண்டாம் என்றவர்களும்...

தேர்தல் பாதை 

வேண்டாம் என்றவர்களும்

களத்தில் ஆதரவாக

நிற்கின்றார்கள்....


தமிழகம் ஒருமுகமாக

நிற்கின்றது...

வேண்டாம் இவர்கள் என

மேலும் கீழும ஆள்பவர்களை

அடிமனது வெறுப்போடு

ஒதுக்கி வைத்து நிற்கிறது...


ஆள்பவர்களின் ஆட்கள்

வீடு வீடாக 

வருகிறார்கள்...

எத்தனை ஓட்டு 

உங்கள் வீட்டில் எனக்

கணக்கெடுத்து போகிறார்கள்...

எதற்கு எனக் கேட்டால்

வெகுளியாகச் சிரிப்பதுபோல

சிரிக்கிறார்கள்.....


கொடுத்தால் வாங்கிக்

கொள்ளுங்கள் ...

மறுக்காதீர்கள்...ஆனால்

மறக்காமல் எங்களுக்கு 

ஓட்டுப்போட்டு விடுங்கள்

என ஒருவர்

பேசி இருக்கிறார்....


இதில் எனக்கு 

உடன்பாடு இல்லை...

உழைப்பவர்கள் உண்மையிலேயே

ஒன்றும் அறியாதவர்கள்...

கையில் பணத்தைப் 

பெற்று விட்டால்

கொடுத்தவனுக்குத்தான் ஓட்டுப்

போடல் வேண்டும் 

எனும் மனநிலையில் உள்ளவர்கள்..


வெட்கமாகத்தான் இருக்கிறது..

இந்த ஜனநாயகம் என்னும்

பணநாயகத்தை நினைக்கையில்...

அடித்து வைத்த பணத்தில்

ஒவ்வொரு ஓட்டுக்கும்

ஐந்தாயிரம் எனப் பெரும்போக்கு

காட்டுகிறதாம் பெரும்புள்ளி ஒன்று


தெருவுக்குத் தெரு

எதிர்க்கட்சிகள் நில்லுங்கள்...

பணம் கொண்டுவருபவனை

அப்படியே அமுக்குங்கள்...

பணம் தருவதற்கு 

பதுக்கி வைக்கும் இடத்தைக் 

கண்டு பிடியுங்கள்...

விதவிதமாய் யோசித்து 

பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள்..

வைக்கோல் படப்புக்குள்

ஒரு கோடி ரூபாய் புதுக்கோட்டையில்....


தேர்தல் என்பது 

பரப்புரை மட்டுமல்ல....

எதிரி பதுக்கி வைத்திருக்கும்

பணத்தை

செல்லாத பணமாக்குவதில்தான்

வெற்றி இருக்கிறது....


என்னவும் செய்வோம்

இறுதியில் பணத்தைக் 

கொடுத்து வெல்வோம் 

எனும் இறுமாப்பை உடைத்திட

இளைஞர்களே ஒன்று சேருங்கள்...


உங்கள் தெருக்களைக் கண்காணியுங்கள்...

உள்ளே வருபவர்களை 

உற்று நோக்குங்கள்.....

மே இரண்டை வெற்றி நாளாக

ஆக்குங்கள் உடன் பிறப்புகளே..

                                                                      வா.நேரு,29.03.2021

  

Saturday, 27 March 2021

நூல் மதிப்புரை : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...




நூல் : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

நூல் ஆசிரியர் :இளவரசி சங்கர்

வெளியீடு : சாதரசி சங்கர் பதிப்பகம்,புதுச்சேரி-605 005

முதற்பதிப்பு : ஜனவரி 2021

மொத்த பக்கங்கள் :180  விலை ரூ 180.


நூல் ஆசிரியரின்  முதல் புதினம்'மாண்புமிகு மதிவாணன்'. இந்தப் புதினத்தின் முதல் பகுதியில் நூல் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழ் இலக்கியம்,ஆங்கில இலக்கியம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் நிலை சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றுபவர்.நாடகத்தில் நடிப்பவர்.பறை இசை அடிப்பவர், கரகாட்டம் ஆடுபவர்,பட்டிமன்றம்,பாட்டரங்குகளில் சொற்பொழிவு ஆற்றுபவர்,மொழி பெயர்ப்பவர்,வானொலி,தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்பவர்.தான் இறந்த பிறகு தனது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு அளிக்கப்படவேண்டும் என உடல்கொடையை எழுதிக்கொடுத்துள்ளவர் என இவரைப் பற்றிய பல குறிப்புகள்… இவரின் பன்முக ஆற்றலை  உணர்த்துகிறது.


“இன்றைக்குப் புதினம் என்பது அரிதாகவே படைப்பாளர்களால் படைக்கப்படுகிறது. எப்படி கவிஞர்கள் காப்பியத்தின் பக்கம் செல்லாமல் தவிர்க்கிறார்களோ அப்படிப் பிற படைப்பாளிகள் இன்று புதினத்தை விருப்பத்துடன் ஈடுபட்டுப் படைப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்..”என்று முனைவர் அ.உசேன் அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. எழுத வருகிறவர்கள் எல்லோராலும் புதினம் படைக்க இயலுவதில்லை. ஆனால் அப்படி புதினம் எழுதி வெற்றி பெற்ற பல எழுத்தாளர்களைக் கொண்ட்து தமிழ் இலக்கியம். இன்றைய பெண் புதினப்படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால்கூட பாமா,திலகவதி,சிவகாமி,அம்பை,மலர்வதி எனப்பலர் உணடு.அவர்களில் ஒருவராக,புதிதாக  இளவரசி சங்கர் இணைந்திருக்கிறார்.


முனைவர் சுந்தரமுருகன் அவர்களின் மகிழ்வுரை,முனைவர் அ.உசேன் அவர்களின் அணிந்துரை , அரிமதி இளம்பரிதி அவர்களின் அன்புரை,  பாவலர் ஆறு செல்வன் அவர்களின் கருத்துரை,புதுவை யுகபாரதி அவர்களின் வாழ்த்துப்பா எனப் புதுச்சேரியின் புகழ் மிக்க  தமிழ் இலக்கிய ஆளுமைகளால்  நூலின் முதல் 30 பக்கங்கள் கருத்துகளால் நிரம்பி நிற்கிறது.


“ஒரு மனிதனின் நற்பண்புகளையும்,அதீத திறமைகளையும்,சிறப்புத்தன்மைகளையும்,அறிவாற்றலையும்,புத்திக்கூர்மையையும்,தொண்டுள்ளத்தையும்,உழைப்பையும்,வெற்றிகளையும் அவர் வாழும் காலத்திலேயே மெச்சவேண்டும்,போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்ட்துதான் இந்த ‘மாண்புமிகு மதிவாணன் “ என்னும் புதினம் “ என்று என்னுரையில் குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் இளவரசி சங்கர்  மேலும் ‘இந்தப் புதினம் என்னுடைய முதல் முயற்சி.சோதனைகளும் சாதனைகளும்  நிறைந்த மதிவாணன் அண்ணனின் வாழ்க்கையைச் சிறிது புனைவுகளுடன் படைப்பாக்கம் செய்துள்ளேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வாழும் மனிதரின் கதை,சில புனைவுகளோடு என்று நாம் புரிந்துகொள்கிறோம்.


இந்தப் புதினத்தின் இரண்டாம்பக்கமே, இந்தப் புதினத்தின் நாயகன் இறந்து விட்டதாகப் பரப்பப்படும் ஒரு பொய்யான செய்தி..அதன் மூலமாகத்தான் கதை நகர்கிறது.`போகும் வழியில் ஒரு மனிதன் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கு முன்பாகவே மனிதர்கள் இந்தச்செய்தியைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள் என்ற வேதனையோடு …


`இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ` ஆகிவிட்டது என எனக்குள் ஏதோதோ புலம்பிக்கொண்டே என் இருக்கையை வந்தடைந்தேன் …` என விவரிக்கும் நூல் ஆசிரியர் ..`யார் இந்த மதிவாணன் ? `என்னும் கேள்வியைப் புதினத்திலேயே கேட்கிறார். பின்பு அவரைப் பற்றிய செய்திகளை கதையாகச்சொல்லிச் செல்கிறார்.


புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் முதலில் தான் வசிக்கும் புதுச்சேரியின் பெருமைகளை,சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்கின்றார்.`ஓயாமல் அலையோசை கேட்டுக்கொண்டிருக்கும் வங்கக் கரையோரம் அமைந்துள்ளது அழகிய புதுச்சேரி ` என்று ஆரம்பித்து புதுச்சேரியை வர்ணிப்பது ஒரு கவிதை போல செல்கிறது.முடிவில் இத்தனை சிறப்புகளையும் கொண்ட புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது `ஜிப்மர் `மருத்துவமனை ` என்று முடிக்கும்போது ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் சுற்றுப்புற அழகையெல்லாம் காட்டி முடிவில் காட்ட வேண்டிய காட்சியை பெரிதாகக் காட்டுவது போல  சிறப்பாக உள்ளது.அந்த ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் எனக் காட்டுகிறார். புதினம் முழுவதுமே இப்படி ஒரு செய்தியைச் சொல்வதை அழகியலோடும் ,விறுவிறுப்பாகவும் சொல்லிச்செல்வதே இந்த நூலின் வெற்றி எனலாம்.


மதிவாணன் தனக்கு அறிமுகம் ஆன விதம், அவர் தனக்கு உடன் பிறவா அண்ணனாகச்செய்த உதவிகள், அவருடைய சொந்த ஊர் என விவரித்துச்சொல்லிச்செல்லும்  நூல் ஆசிரியர்,மதிவாணனே தன்னை அழைத்து, தனக்கு மலக்குடல் புற்று நோய் வந்திருப்பதை சொன்ன நிகழ்வை,அதனால் தான் கலங்கியதை,பின்பு அவரே தனக்கு ஆறுதல் சொன்னதை எல்லாம் நம் கண் முன்னே அப்படியே காட்சிப் படிமமாக நிறுத்தியிருக்கிறார்.அப்படி புற்று  நோயால் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் இருக்கும்போதுதான் அவர் இறந்துவிட்ட்தாக சிலர் பரப்பிய செய்தியை எழுதியிருக்கிறார்.பின்பு அவர் அந்த நோயை வென்ற விதம்,தனக்கு ஏற்பட்ட இன்னலைப் பொறுத்துக்கொண்டே மற்றவர்களுக்கு உதவிய விதம் என்று புதினத்தின்  நாயகன் மதிவாணனைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கதையாகச்சொல்லிக்கொண்டே செல்கிறார் நூல் ஆசிரியர்.


வாழ்க்கையின் அனுபவங்களை பல்வேறு இடங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. சுடுகாடு காட்டும் படிப்பினை தனித்தன்மையானது. ஆனால் நோய் வாய்ப்பட்டு,மருத்துவமனையில் நோயாளியாக படுத்துக்கிடக்கும்போது கிடைக்கும் படிப்பினை அனைத்திலும் மேலானது. மருத்துவமனை,உயிர் காக்கும் மருத்துவர்கள், நோயாளிகளைக் குழந்தைகளைப் போலக் கவனிக்கும் செவிலியர்கள் என அந்த உலகம் தரும் அனுபவம் மற்ற எந்த இடமும் தராத மேன்மையான் அனுபவம்.அதிலும் உயிர்க்கொல்லி நோயாக அறியப்பட்டிருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது கிடைக்கும் அனுபவத்தையும்,அதனை மன அடிப்படையில்,மருத்துவ அடிப்படையில் வென்ற கதையை இந்தப்புதினம் பேசுகிறது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு வரும் நோயைப் பற்றிய விழிப்புணர்வு  இன்றைய தேவை.அதனை இந்தப் புதினத்தின் வாயிலாக நூல் ஆசிரியர் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.


கன்னடத்தில் பி.வி.பாரதி அவர்கள் எழுதியதை தமிழில் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் தலைப்பில் கே.நல்லதம்பி அவர்கள் மொழி பெயர்த்த நூல் கூட அண்மையில் வாசித்தேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தக் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் நூல் ' ஒரு அனுபவக்கதை' என்று தலைப்போடு சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. மார்பகப் புற்று நோய் வந்த ஒரு பெண் அதனை எதிர்கொண்டு ,சிகிச்சை எடுத்து வெற்றி பெற்ற அனுபவக்கதை அது. அது போல மதிவாணன் அவர்கள் மலக்குடல் புற்று நோயில் இருந்து சிகிச்சையால் குணமடைந்ததை சொல்லும் அனுபவக் கதையாக இந்த நூலினை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அந்த நோய், தன் தாய்க்கு வந்த போது அதனை எதிர்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைய இந்த அனுபவம் எப்படி ஊக்கம் கொடுத்தது என்பதையும் நூல் ஆசிரியர்  புதினத்தின் மூன்றாம் பாகமாக சுட்டிச்செல்கிறார். மதிவாணன் புற்று நோயிலிருந்து விடுபட்டது மட்டுமல்லாமல் ,அவரின்  நேர்மை,பணி புரியும் இடத்தில் சிறப்பான சேவை புரியும் தன்மை, அவர் பிறந்த ஊரின் சிறப்பு, நூல் ஆசிரியர் பிறந்த ஊரின் சிறப்பு என்று பல தகவல்களை எடுத்துக்கொண்டு அவற்றை இணைத்து,கற்பனையான விருதான 'மாண்புமிகு மதிவாணன்' என்னும் விருது அளிப்பு நிகழ்வு  பற்றியும்  வாசிப்பவருக்கு அலுப்பு தட்டாமல் ,விறுவிறுப்பாக அமைந்துள்ள புதினமாக இந்த நூல் உள்ளது.


இந்தப் புதினத்தில் எதிர்மறை சிந்தனை உள்ள கதாபாத்திரங்களே இல்லை. பொதுவாக  புதினம் என்பது சிக்கல்கள் பின்பு சிக்கல்களைத் தீர்த்து வெற்றியாகவோ அல்லது சிக்கல்களைத் தீர்க்க இயலாத தோல்வியாகவோ அமையும். இந்தப் புதினம் இந்த இரண்டு தன்மையும் இல்லாமல் ஒரு வேறுபட்ட நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது.

மதிவாணன் என்னும் கதாபாத்திரத்தின் இலக்கியப் படைப்புகளையும் இந்தப் புதினத்தில் அறிமுகப்படுத்துகிறார்.'புழுதி மண்' என்னும் சிறுகதைத் தொகுப்பு,நோய்வாய்ப்பட்ட நேரத்திலும்கூட அந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எப்படி உருவாகின என்பதனை விளக்கும் 'கதைகளின் கதை' என்னும் குறிப்புகள்,'நிலா முற்றத்தில் கவிதைகள்'என்னும் கவிதைத் தொகுப்பு,விருது அளிக்கும் விழாவில் 'புற்று நோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுத்தூதர்' என்னும் மதிப்புறு பணி,ஏற்புரையாக மதிவாணன் ஆற்றுவதாக வரும் உரை...அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அவரே சொல்வதாக விவரிப்பது போன்றவை  நூலில் மிக நன்றாக அமைந்துள்ளது.


உலகம் முழுவதும் இருக்கும் பெண் எழுத்து ஆளுமைகள் பங்கு பெறும் ,வாசிக்கும் 'வல்லினச்சிறகுகள்' இதழில், புதினம் எழுத விரும்புகிறவர்கள் இப்படியும் கூட் எழுதலாம் என்று ஒரு புதிய பாதையை, தன்-பிறர்  வரலாறையே புதினமாக எழுதும் பாதையைக் காட்டியிருக்கும் நூலாக இந்த  'மாண்புமிகு மதிவாணன்'நூலைப் பார்க்கிறேன்.'இந்த நூல் ஆகச்சிறந்த புதிய முயற்சி.நானறிந்தவரையில் தமிழுலகம் அறியாத புது முயற்சி' என அன்புரையில் அரிமதி இளம்பரிதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல புது முயற்சி இது. நீங்களும் கூட இந்த நூலை ஒருமுறை வாசித்துப்பார்க்கலாம்.இதனைப் போல நமக்கு நன்றாகத் தெரிந்த  மேன்மையானவர்களை புதினமாக எழுதலாமா எனச் சிந்திக்கலாம்.


நன்றி : வல்லினச்சிறகுகள் மார்ச்-2021




Tuesday, 16 March 2021

தரவுகளே இன்றைய சொத்து....

தரவுகளே இன்றைய சொத்து

(முனைவர் வா.நேரு)


25 ஆண்டுகளுக்கு முன்னால் ,மதுரைக்கு வந்த புதிதில், நான் மதுரைக்கு புதியவன்.நிறைய அறிமுகமில்லை. ஒரு வாடகை புத்தக நிலையத்தில் இணைந்து புத்தகங்கள் எடுத்துவந்தேன்.ஒரு 25 புத்தகங்கள் எடுத்த நிலையில், ஒரு நாள் அந்தப் புத்தக கடைக்குச்சென்றேன். புதிதாக உட்கார்ந்திருந்த ஒருவர் என்னோடு கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்றார் "நீங்கள் யார்?" என்றேன்." நான் இந்தக் கடையின் உரிமையாளர்..எப்போதும் இருக்கும் பணியாள் இன்று வரவில்லை." என்றவர் "நீங்கள் எடுத்தப் படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்தேன். அதனால் உங்களோடு பேசவேண்டும் என்று நினைத்தேன்" என்றார். பேசினோம்.நண்பர்கள் ஆனோம்.


நான் எடுத்துப்படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்து ஒருவருக்கு என்னைப்பற்றி ஒரு முடிவு செய்ய முடிந்திருக்கிறது..இவரோடு நட்பு பாராட்டலாம் என்று நினைக்கத் தோன்றியிருக்கிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய முக நூல் என்னும் சமூக ஊடகத்தை நினைத்துப்பாருங்கள். அனைத்தையும் நாம் அதில் பதிவிடுகிறோம். நாம் என்ன படிக்கிறோம்,பார்க்கிறோம்,கேட்கிறோம், யாரோடு நாம் நட்பாக இருக்கிறோம். யாருடைய கருத்திற்கு எதிராக இருக்கிறோம். நமக்கு பிடித்த உணவு என்ன,நமக்குப் பிடிக்காத உணவு என்ன, எந்த விசயங்களில் நாம் பலவீனமாக இருக்கிறோம் அல்லது சில விசயங்களை கண்டு கொள்ளாமல் செல்கிறோம் என்று அனைத்தும் ,புத்தகக் கடைக்காரர் நோட்டில் பதிந்து வைத்துள்ள பட்டியல்போல முக நூல் பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.முக நூல் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் நம்மைப் பற்றிய அத்தனை செய்திகளையும் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கிறது.


முக நூலை நாம் பயன்படுத்துகிறோம். அதற்கு கட்டணமில்லை,இலவசமாகப் பயன்படுத்துகிறோம். பின்பு எதற்கு நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் சேர்த்து வைக்கிறார்கள். நமக்கு இலவசமாக அவர்கள் கொடுக்கிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் கட்டணமா? என்றால் ஆம்,நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் என்ன படிக்கிறோம், என்ன பார்க்கிறோம், என்ன விரும்புகிறோம், என்ன சாப்பிடுகிறோம்,எங்கு இருந்து எங்கு போகிறோம்? என நம்மைப் பற்றி நாம் கொடுக்கும் நமது தரவுகள்தான் அவர்களுக்கு கட்டணம். அதனை அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு விற்கின்றார்கள்.அந்த நிறுவனங்கள் நமக்கு இணையதளம் மூலமாக விளம்பரத்தைக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் முக நூல் நிறுவனமும், வியாபார நிறுவனங்களும் பயன் பெறுகின்றன..


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 2016-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவர் உறுதியாக தோல்வியடைவார் என்றுதான் உலகம் எதிர்பார்த்தது.ஆனால் அவர் வெற்றி பெற்றார்.எப்படி? 2016 அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஸ் அனலிடிகா என்னும் நிறுவனம் முக நூல் பயனாளிகள் 5 கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அமெரிக்க நாட்டின் குடிமக்கள் பயன்படுத்திய முக நூல் பயன்பாட்டை வைத்து அந்த நாட்டின் தேர்தல் முடிவையே மாற்றுவதற்கு முக நூல் விவரங்கள் பயன்பட்டிருக்கிறது.இப்போது புரிந்திருக்கும் முக நூலின் வலிமை...


2018-ல் மித்ரன் என்னும் இயக்குநர் இயக்கிய 'இரும்புத்திரை' என்னும் திரைப்படம் வெளிவந்தது.அதில் மனிதர்களின் அந்தரங்க தகவல்களை சேகரிப்பதன் மூலம் எப்படி எல்லாம் குற்றங்களைச்செய்ய முடியும் என்பதனை விரிவாக விளக்கியிருப்பார். சாதாரண மக்கள் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களால் எப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் வரலாம் என்பதனை அந்தப் படம் விவரிக்கும். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இன்று தேவை மனிதர்களைப் பற்றிய விவரங்களே(தரவுகளே) என்று அந்தப் படத்தில் வில்லன் வசனம் பேசுவார்.ஆம் தரவுகளே இன்றைய சொத்து.


வாட்சப் முக நூல் போன்று அல்ல. அதனை ஆரம்பிக்கும்போதே ,இருவருக்கு இடையிலான உரையாடல்களை நாங்கள் கண்காணிக்க மாட்டோம்,சேகரிக்க மாட்டோம்,சேமிக்க மாட்டோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று தான் ஆரம்பித்தார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள்.வாட்சப் செயலி நன்றாக அனைவருக்கும் அறிமுகமாகி, புகழ் அடைந்தவுடன், அதனை முக நூல் நிறுவனம் விலைக்கு வாங்கியது.ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய்க்கு அல்ல ,1900 கோடிக்கு வாட்சப் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முக நூல் நிறுவனம்.


இப்போது வாட்சப், தன்னைப் பயன்படுத்துவோரின் தரவுகளை எல்லாம் முக நூலுக்கு கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.முக நூலுக்கு மட்டுமல்ல மற்ற மூன்றாம் நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். " நீ உன்னைப் பற்றி என்னென்ன சொல்கிறாயோ, அதையெல்லாம் அடுத்தவர்கள்கிட்ட நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். உனக்கு விருப்பமுன்னா சொல்லிக்கிட்டே இரு, இல்லையின்னா போ" என்று ஒருவன் அடுத்தவனிடம் சொல்வதை நினைத்துப்பாருங்கள். அப்படித்தான் இப்போது வாட்சப் சொல்கிறது. உன்னைப் பத்திய எல்லா விவரத்தையும் அடுத்தவங்க கிட்ட நான் கொடுப்பேன்..விருப்பமுன்னா வாட்சப்ல இரு, இல்லையென்னா போ...


என்னதான் நடக்கிறது?...வாட்சப் இல்லாமல் இருக்கும்போது நிறைய குறுஞ்செய்திகள்(SMS) பயன்படுத்தினோம்.வாட்சப் வந்தபிறகு குறுஞ்செய்திகள் அனுப்புவது நின்றது. குறுஞ்செய்திகள் பயன்படுத்தியதுபோலவே மின்னஞ்சலும் நிறையப் பயன்படுத்தினோம் வாட்சப்,முக நூல் வருவதற்கு முன்னால்.இப்போது அதுவும் குறைந்து போனது.நம்மை வாட்சப்பிற்கும் முக நூலுக்கும் நன்றாகப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.காலையில் எழுந்தவுடன் வாட்சப் செயலியைப் பயன்படுத்துவதுதான் முதல் வேலையாக இருக்கிறது. கழிப்பறைக்கு செல்வது கூட அடுத்துத்தான்..அவ்வளவு தூரம் அந்தச்செயலிகளுக்கு நாம் பழக்கமாகிவிட்டோம்..இப்போது 'இருந்தா இரு,இல்லைன்னா போ " என்று சொல்கிறார்கள்...என்ன செய்வது என்று பல பேருக்கு குழப்பம்.பலர்,வாட்சப் நமக்கு வேண்டாம்,நாம் சிக்னல், டெல்கிராம் என்னும் செயலிகளுக்கு மாறிவிடுவோமா? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சிக்னல் செயலியும் வாட்சப் போலத்தான்.வாட்சப் ஆரம்பிக்கும்போது சொன்னதுபோல சிக்னல் இப்போது சொல்கிறார்கள்.நாளைக்கு அவர்களும் வாட்சப் போல மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன அடிப்படை? அப்போ எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவோமா? செல்பேசியைத் தூக்கி எறிந்து விடுவோமா? வேண்டாம் என்று மறுத்து விடுவோமா?இல்லை,அப்படி எல்லாம் முடிவு செய்ய இயலாது....


" ஒவ்வொன்றுக்கும் 'ஏன்' என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது.மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கின்றோம் " என்றார் தந்தை பெரியார்.முக நூல், வாட்சப் போன்றவை நமது கையில் இருக்கும் கத்தி போன்றவை. கையில் இருக்கும் கத்தியை வைத்து,காய்கறியை நறுக்கி,சுவையான உணவைச்சமைத்தும் பரிமாறலாம். அடுத்தவருக்கு காயம் ஏற்படுத்துவதற்கும் கத்தியைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்டதுதான் இந்த முக நூல்,வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள்.இந்தச்செயலியைப் பயன்படுத்துபவர்களில் நல்லதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,கெட்டதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.


ஒரு செய்தி படித்தேன்."வாட்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி ,2020ல் மதுரை அருகில் உள்ள அலங்கா நல்லூரில் கஞ்சா விற்பனை செய்வதற்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட வாட்சப் குழுவில் இணைந்து, வாடிக்கையாளர் போல் நடித்து அந்தக் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை, அவருக்கு உதவிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது பற்றிய செய்தி படித்தேன்.இதைப் போன்ற ஆயிரக்கணக்கான சமூக விரோத செயல்களுக்கு இந்த வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன.


அதனைப் போல அற்புதமான பல நல்ல செயல்களுக்கு வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன. எத்தனையோ பேருக்கு படிக்க,மருத்துவ செலவிற்கு உதவிகளை இந்தக் குழுக்கள் செய்கின்றன.பழைய நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும், பல புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் என முகநூல், வாட்சப் குழுக்களின் பயனைப் பல நூறு பக்கங்கள் எழுதலாம்.


சரி,முக நூல்,வாட்சப் போன்றவை கத்தி போல.நல்லதிற்கு பெரும்பாலும் பயன்படுகிறது. தீமைக்கும் பயன்படுகிறது. சரி, இந்தக் கத்தி போன்ற முக நூல், வாட்சப்,கூகுள் போன்ற செயலிகளை உருவாக்குபவர்களின் நோக்கம் என்ன? பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது என்பதாக இருக்கிறது.அவர்களைப் பயன்படுத்துபவர்கள் ஆட்சியிலிருப்பவர்களாக இருக்கிறார்கள். 


அறிவியலையும் உளவியலையும் இணைத்து, சமூக ஊடகங்கள் மூலமாக சிலர் மட்டும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறார்கள்.சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் உழைப்பதற்கு அடிமைகள் தேவைப்பட்டார்கள் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டுவதற்கு. இன்றைக்கு சமூக ஊடக அடிமைகள் தேவைப்படுகிறார்கள்,முதலாளிகள் பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு. முதலாளிகள் கோடி கோடியாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளை லாபம் அடிப்பத்ற்கு வழிவகுக்கிறார்கள்.இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொடங்கியவுடன்,முழுவதுமாக இலவசமாக பேசவும்,டேட்டாவும் கொடுத்ததை நினைத்துப்பாருங்கள்.இந்தியாவில் அதானியும் அம்பானியும் ஆட்சியாளர்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். 


கணினி மூலமாக பெரும் பணக்காரர் ஆகலாம் என்பதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் பில்கேட்ஸ்தான்.தன்னுடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் உலகின் முதல் பணக்காரராக பல ஆண்டுகள் இருந்தவர். லினக்ஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்(OS) உருவாக்கியவர் அதனை இலவசமாக அறிவித்தார். யார் வேண்டும் என்றாலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் எம்.எஸ்.டாஸ்,எம்.எஸ்.வின்டோஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்களை உருவாக்கிய பில்கேட்ஸ் அதனை விற்பனை செய்தார்.ஒரிஜினில் இல்லாமல் நகல் எடுத்து பயன்படுத்தியவர்கள் மீது அந்த நிறுவனம் வழக்கு தொடுத்தது. பயந்து போய் அனைவரும் அந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து வாங்கினார்கள்.உலகின் முதல் பணக்காரர் ஆனார்.கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள்.


உலகின் இரண்டாவது பணக்காரர் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ்(Jeff Bezos),உலகின் மூன்றாவது பணக்காரர் மைக்ரோஜாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ்,உலகின் 5-வது பணக்காரர் பேஸ் புக் நிறுவனத்தின் மார்க் ஜீக்கர்பெர்க்( Mark Zuckerberg),உலகின் ஏழாவது பணக்காரர் கூகுள் நிறுவன பங்குதாரர் லேரி பேஸ் Larry Page....பட்டியலை மீண்டும் பாருங்கள் எல்லாமே கணினி,இணைய,சமூக ஊடகங்கள் அடிப்படையில் அமைந்த நிறுவனங்கள். உலகத்தின் சொத்துகள் அனைத்தும் இவர்கள் கையில் உள்ளது.இந்தியா அம்பானி,அதானி கைகளில் இருப்பது போல, உலகம் இந்த அமேசான்,பேஸ் புக்,மைக்ரோ ஜாப்ட்,கூகுள் நிறுவன அதிபர்களின் கைகளில் இருக்கிறது.ம்னித இனம் முழுவதுமாக வறுமை இல்லாமல் ஆவதற்கு இவர்கள் நினைத்தால் செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தோன்றுமே தவிர, எல்லோரும் ஒன்று போல் வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது. ஆனால் நாம் அவர்களை அப்படி நினைக்க வைக்கவேண்டும்.


" நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் இயக்கம் உலக இயக்கம்.உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான்;இவர்கள் இங்கிருந்து கொண்டுதானே பேசுகின்றார்கள் என்று.முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும்.அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச்சாதனங்கள் இல்லை..." என்றார் தந்தை பெரியார்.உலகத்தை வாட்சப்,முக நூல் போன்ற சமூக ஊடகங்கள் ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறது.ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற வெளி நாட்டில் இருப்பவர்களோடு பேசுவதற்கு நிறையப் பணம் செலவழித்து,பலமணி நேரம் காத்திருந்து பேசவேண்டியிருந்தது.ஆனால் இன்றைக்கு எளிதாக நினைத்தவுடன் பேசமுடிகிறது.தொடர்பு கொள்ள முடிகிறது.இதனைப் போன்ற பல முன்னேற்றம் இவைகளால் ஏற்பட்டிருக்கிறது.உலகத்தினை உணர்வதற்கு அற்புதமான சாதனங்களாக வாட்சப்,முக நூல் போன்ற செயலிகள் உள்ளன.


."எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரியமும் ஏற்படத்தான் போகின்றது;ஏற்பட்டே ஆகவேண்டும்.நாம் நமது சில்லரை எண்ணங்களை மாற்றிக்கொண்டு,உலகம் எல்லாம் ஒன்றாக வேண்டும் என்பதற்கும் ஏற்ப நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.மக்கள் எல்லாம் ஒன்றாக ஆக,பேதங்களை ஒழிக்க வேண்டும்; பேதம் இனி நிலைக்கவும் முடியாது,பொருளாதார பேதமும்,சாதி பேதத் தன்மையும் ஒழிக்கப்பட்டு விடுமானால், மற்றுள்ள பேதங்கள் எல்லாம் நிலைக்கமாட்டா; உலகம் ஒன்று என்ற தன்மைக்குத்தான் வந்துவிடும்".('விடுதலை' 14-11-1972) என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதைப் போல எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரிகயமும் ஏற்பட சமூக ஊடகங்கள் பயன்படல் வேண்டும்.


.வாட்சப்,முக நூல் போன்றவை தேவையா?தேவையில்லையா என்று இன்று நாம் பேசமுடியாது. முக நூல்,வாட்சப் போன்றவை தவிர்க்க இயலாதவை.ஆனால் லாப வெறிகொண்டு தனி மனித அந்தரங்கங்களை மதிக்கமாட்டோம் என்று சொன்னால் அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வாட்சப் நிறுவனம் ஐரோப்பா நாடுகளுக்கு கொடுத்துள்ளதுபோல இந்தியாவிற்கும் தனிப்பட்ட விதிகளை உருவாக்க கேட்க வேண்டும்.


"மக்கள் மன்றம் அனைத்தையும் விட மேலானது" என்பார் திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.ஆம், .மக்கள் மன்றத்தில் இந்த செயலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயன் படுத்துபவர்கள் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அறிவுக்கு முன்னுரிமை கொடுத்துப்  பயன்படுத்தவேண்டும்.மனிதம் மேம்படவும், மனித இனம் மேம்படவும் இந்தச்செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் வாட்சப், முக நூல் போன்ற செயலிகள் " நல்லவனுக்கு நல்லவன் ' மட்டுமல்ல 'கெட்டவனுக்கும் நல்லவன்''.என்பதப் புரிந்து கொள்வீராக...


நன்றி :உண்மை மார்ச் 16-31,2021



















Sunday, 7 March 2021

மார்ச் 8ல்.......

 பெண்களால்

பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட

பெருந்தகையே!

உலக மகளிர்

தினம் என்றவுடன்

உன் நினைவுதான்

எங்கள் முன்னால்



ஆனால் சிலர்

மகளிர் நாள்

எனச்சொல்லி

மார்ச் 8ல்

கோலப்போட்டி

நடத்திக்

கொண்டிருக்கிறார்கள்



நல்ல

பட்டுப்புடவை

ஒன்றுபோல் எடுத்து

பெண்கள் எல்லாம்

மார்ச் 8ல்

அலுவலகத்திற்கு

கட்டிவர வேண்டுமாம்

சில மாமிகள்

அலுவலகத்தில்

ஆணையிட்டுக்

கொண்டிருக்கிறார்கள்



சிலர் கோயில்

பிரசாதங்கள்

வழங்க

பட்டியல்

தயாரிக்கின்றார்கள்

மகளிர் தினத்தை

முன்னிட்டு

எந்த நாளையும்

மாமிகள்

விடுவதாயில்லை

இந்துமத

வளையத்துக்குள்

கொண்டு வருவதிலேயே

குறியாய் இருக்கிறார்கள்



பெண்ணுரிமை

எனும் பேச்சு

வரும் இடமெல்லாம்

பெரியார் எனும்

பெயர் நினைவில் வரும்

நம் எதிரிகளுக்கும்



ஆதலால்

என்ன செய்யலாம்

இந்நாளில்

பெரியார் பெயர்

வராமல் இருக்க ?

யோசித்து யோசித்து

பாரதியை

முன்னிறுத்துகின்றார்



எங்கள்

ஈரோட்டுச்சூரியனே

தன்னிகர் இல்லா

பெண் விடுதலைக்

கருத்துகளை

தரணியில் எவரும்

சிந்திக்கா நிலையில்

கனலாய் கக்கிய

எரிமலையே!

மண்ணில்

ஆணுக்கு

என்னென்ன

உரிமை உண்டோ

அத்தனையும்

பெண்ணுக்கு

வேண்டுமெனக்

கேட்டவர் நீ !


மதம்

தோற்றுவிக்கப்பட்டதே

பெண்களை

அடிமைப்படுத்த என்றாய்

கடவுள் எனும்

வார்த்தையே

பெண்விடுதலை

எனும் சொல்லுக்கு

எதிர்ப்பதம் என்றாய்!


கற்பு என்ற

சொல்லே பெண்ணை

வீட்டுக்குள்ளே

பூட்டிவைக்க சிலர்

சொல்லிவைத்த

வார்த்தை என்றாய்

கர்ப்பப்பையை

கழற்றி எறி என்றாய்


எனக்கு தாலி என்றால்

உனக்கு என்னடா

அடையாளம்?

எனக்

கேட்கச் சொன்னாய்

பெண்ணை விதவை என்றால்

விதவன் எனப்பெயர் ஏன்

ஆணுக்கு இல்லை?

வினவச் சொன்னாய்


ஆரியப் பார்ப்பான்

மனுவைச் சொல்லி

அடங்கிப் போ என்றான்

கல்வியை

ஆயுதமாக்கு!

துணிச்சலை

துணையாகக் கொள்!

மனு தர்மத்தை

பொசுக்கு என்றாய்

நடுங்கித்தான் போனது

பார்ப்பனியம்



பெண் ஏன்

அடிமையானாள்?

எண்பது ஆண்டுகளுக்கு

முன்னால் நீ

சொல்லிய வார்த்தைகளை

திருப்பிச் சொல்வதற்கே

பயம்

நிறைய முற்போக்குகளுக்கு

இன்றைக்கும்



எங்கள் முன்னால்

எனது தங்கையும்

எனது துணையும்

நன்றியோடு

உனை நினைத்து

புகழ்கிறார்கள்!

மண்ணில் மகளிர்

சுயம்ரியாதையாய்

வாழ வழிகாட்டியவர்

நீங்கள் என்பதால் ...


                வா.நேரு....

எனது 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்' என்னும் கவிதை நூல் தொகுப்பில் இருந்து 


Saturday, 6 March 2021

ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

                                                   ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

                                                           (முனைவர் வா.நேரு)


மார்ச் 8 -சர்வதேசப் பெண்கள் தினம். இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களால்,பார்ப்பனக் கருத்தாக்கம் கொண்டவர்களால் இது ஒரு கொண்டாட்ட நாள் என்பது போல கட்டமைக்கப்படுகிறது. கோலப்போட்டி நடத்துவது,சமைக்கும் போட்டி நடத்துவது என்று பெண்களை வைத்தே சர்வதேசப்பெண்கள் தினத்தை கொச்சைபடுத்தும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ,சர்வதேசப்பெண்கள் தினம் என்பது ஒரு போராட்ட நாள். பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வோம்,வெற்றிபெறுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் நாள்.உலக அளவில் இருக்கும் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான பிரச்சனைகள்,அதற்கான  தீர்வுகள் பற்றி பேசும் நாளாக இந்த மார்ச்-8க் கருதுகிறார்கள். நாமும் அப்படித்தான் கருதுகிறோம்.


பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்.பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது பல ஆண்கள் அந்தக் கருத்துக்கு எதிராக இருப்பது போல பல பெண்களும் இருக்கிறார்கள்."மக்கள் மனதிலும் 'இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரட்சணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் " என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும்.அந்த உணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்குப் பெரிதும் முதலில் மாறவேண்டியதாக இருக்கின்றது.ஏனெனில் ,அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும் ,ஏதாவது ஓர் ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது.ஆதலால் அது முதலில் மாறவேண்டியது அவசியமாகின்றது " என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


தந்தை பெரியார் நமக்கு வியப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவரது எழுத்துகளை வாசிக்க,வாசிக்க..திரும்பத் திரும்ப படிக்க,படிக்க அந்த வியப்புக் கூடுகிறது.'பெண் விடுதலை' என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளும் எழுத்துகளும்( கால வரிசைப்படி) தொகுக்கப்பட்டு திராவிடர் கழக(இயக்க) வெளியீடாக,பெரியார் திடலில் இருந்து 2019-ல் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு நூல் வியப்பிலும் வியப்பைத் தருகிறது.எப்படி இவ்வளவு முன்னோக்குத் தன்மையில்,பல ஆண்டுகளுக்குப் பின்னால்  வரும் பெண் விடுதலையை முன் நோக்கி அய்யா பெரியார் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பே. இதற்கு என்ன காரணம்?.இந்த நூலின் தொகுப்பாசிரியரின் பதிப்புரை என்னும் பகுதியில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அதற்கான விடையைச்சொல்லுகிறார்.


" தந்தை பெரியார் அவர்கள் மனித குலத்தையே ஒட்டு மொத்த பார்வையால் அளந்தவர்- அறிந்த பிறகு மருத்துவம் பார்ப்பது போல்,தீர்வுகளை எளிமையாகச்சொன்னவர்...மனித குலத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள்,பயன்பாடற்ற 'பண்டங்களைப்" போல்- மனித ஜீவன்களாகவே மதிக்கப்படாமலும்,சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படாவிட்டால் எவ்வளவு கேடு சமூகத்திற்கும்-ஏன் மனித குலத்திற்குமே பயனற்றுப்போகிறதே என்று பெரிதும் கவலைப்பட்டார்.

கல்வியை உலகத்தவர் -அண்மைக்காலமாக "மனித வள மேம்பாட்டுத்துறை "என்று அழைக்கின்றனர்.மக்கள் அனைவரும் -சரி பகுதியான பெண்கள் உட்பட மனித வளம் ஆகவேண்டுமென்றும்,அவர்கள் முழு விடுதலை பெற்றும்,மானமும் அறிவும் பெற்றவர்களாக,ஆண்களைப் போலவே சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்றால்தானே முடியும் என்று கேட்டார் தந்தை பெரியார்.வெறும் எழுத்து பேச்சுகளுடன் நின்று விடாமல் அதற்காகப்போராடி பல களங்களிலும் வெற்றி பெற்று பெண்களை மேலே உயர்த்தியவர்.அதனையே தனது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு ,இறுதிவரை தனது இலட்சியப்பயணத்தை வீறு கொண்டு தொடர்ந்தார்;வெற்றியும் பெற்றார் " என்று குறிப்பிட்டு, " வெளி நாட்டு பெண் உரிமைப் போருக்கும் ,நம் நாட்டுப்பெண் விடுதலைப் போருக்கும் ஓர் முக்கிய அடிப்படை வேறுபாடு உண்டு " என்பதனை சுட்டிக்காட்டி வர்ணாசிரம அடிப்படையில் சாதியின் அடித்தட்டில் பெண்கள் எப்படி நிறுத்தப்பட்டனர் என்பதனை அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்..


பரம்பரைப் போர் இன்றும் தொடர்கிறது.ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான பரம்பரைப் போரில் 'பெண் ' குறித்த பார்வை மிக முக்கியமானது. ஆரியம் அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் 'அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கு மட்டுமே "என்று கருதுகிறது. அதனை மனு(அ)தர்மம் போன்ற நூல்களில் எழுதிவைத்திருக்கிறது..எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏன் பார்ப்பனப்பெண்ணாக இருந்தாலும் அவரை சூத்திர ஜாதியாகத்தான் ஆரியம் கருதுகிறது.கோட்பாடுகளை வகுத்து வைத்திருக்கிறது.இந்த ஆரியத்திற்கு எதிரான கருத்துப்போரை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இன்றும் அந்தப்போர் தொடர்கிறது.அந்தக் கருத்துப்போரின் இன்றைய தளபதியாம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தப் 'பெண் விடுதலை " என்னும்  தொகுப்பினை ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். கருத்துப்போரில் பங்கு பெறும் நம்மைப் போன்றவர்களுக்கு ,ஒரு மிகப்பெரிய கேடயமாக  இந்தப் 'பெண் விடுதலை " என்னும் நூல் எனக்குத் தென்படுகிறது.


மொத்தம் 336 தலைப்புகளையும்,பெரியார் பேருரையாளர் அய்யா பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் எழுதிய 'பெரியாரும் பெண்ணினமும் 'என்னும் ஆய்வுக்கட்டுரையை பின் இணைப்பாகவும் கொண்டு மொத்தம் 752 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் இது. பெரிய நூல் என்பது உருவத்தால் மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள உள்ளடக்கத்தாலும் மிகப்பெரிய நூலே இது.


சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடும் நமக்கு நமது பெண்களின் சென்ற நூற்றாண்டு வாழ்வு தெரியவேண்டும். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் விதவைகளின் கணக்கினைப் படிக்கும்போது கண்ணீர் வருகிறது. ஆரியத்தின் அட்டூழியத்தால் தங்கள் வாழ்வை,இருந்தும் இறந்துபோனது போன்ற வாழ்க்கை வாழ்ந்த விதவைகளின் வரலாற்றை இந்த நூல் சொல்கிறது.'துன்பத்தில் துயருறும் பெண்களே வீட்டை விட்டு வெளியேறுங்கள் ' என்று தந்தை பெரியார் 1929களில் சொன்ன செய்தி இந்த நூலில் உள்ளது.கர்ப்பத்தடை ஏன் வேண்டும் என்று தந்தை பெரியார் பேசியதையும்,"அடிமைத் திருமணம் ஆனந்தம் தருமா?" என்று தந்தை பெரியார் கேட்டதையும் இந்த நூல் விவரிக்கிறது.'சொந்தக் காலில் நில்லுங்கள் ' என்று பெண்களுக்கு அய்யா அறிவுறுத்தியதை,'பெண்ணடிமை நீக்குவதே நமது குறி' என்று பெண்ணடிமை ஒழிப்பையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தந்தை பெரியாரின் அன்றைய பேச்சுகள் அத்தனையையும் படிக்கும்போது பெண்கள் தினத்தின் பெருமையும்,அதன் முக்கியத்துவமும்,அதில் நமது கடமையும் தெளிவாகத் தெரிகிறது.


தந்தை பெரியாரின் உழைப்பால், திராவிட இயக்கங்களின் ஆட்சியால் தமிழகத்தில் பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளன.விதவை மறுமணம்,விவாகரத்து,விவாகரத்துக்குப்பின் மறுமணம் போன்றவை மிக இயல்பானவைகளாக  மாறியிருக்கின்றன, பெண் கல்வி,பெண்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது.'பெண் ஏன் அடிமையானாள் " என்னும் தந்தை பெரியாரின் புத்தகம் பல இலட்சம் விற்பனை ஆகியுள்ளது.பல இலட்சம் பேர் அந்த நூலைப் படித்துள்ளனர். இன்றைய நவீன கணினி,இணையை வசதிகளைப் பயன்படுத்தி "பெண் ஏன் அடிமையானாள்" என்னும் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் இந்த நூல் வெளியாகி விற்பனையிலும் விளக்கத்திலும் சாதனை படைத்துக்கொண்டுள்ளது. அந்த நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் மேல் பாகம் என்றால் ,இந்தப் பெண் விடுதலை என்னும் நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் அடிப்பாகம் எனலாம்.பெண் விடுதலை ஏன் வேண்டும், எப்படி நிகழ வேண்டும், எதுவெல்லாம் பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது? என்று வெகு விளக்கமாக விவரிக்கும் நூலாக இந்தப் பெண் விடுதலை என்னும் நூல் இருக்கிறது.


பெண் விடுதலை என்று பேசும் பெண்கள், முற்போக்கு இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்று தங்களைச்சொல்லிக் கொள்பவர்கள் கட்டாயம் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும்..நமது இயக்கத் தோழர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் இந்தப் 'பெண் விடுதலை ' என்னும் தொகுப்பு நூலை வாங்கி வைத்துக்கொண்டு, ஒரே நாளில் படிக்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பாகப் படித்தால் மிகப்பெரிய பயனைத்தரும்.இன்றைக்குக் கூட அய்யா சொல்லும் சில செய்திகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது.இதனை அய்யா 70,80 ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருக்கிறார்.மக்களிடத்திலே பேசியிருக்கிறார்.பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் பெண்களிடம் இருக்கும் மனப்பான்மையை உடைத்து நொறுக்கும் வல்லமை கொண்டதாக இந்தப் "பெண் விடுதலை " என்னும் தொகுப்பு நூல் இருக்கிறது. சர்வதேசப்பெண்கள்  தினத்தில் ஈரோட்டுக் கண்ணாடியின் துணையோடு  'பெண் விடுதலை'யைப் புரிந்து கொள்வது எளிது. புரிந்து கொள்வோம். பகிர்ந்து கொள்வோம். அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள். 


நன்றி : உண்மை இதழ் மார்ச்(1-15,2021)

Thursday, 25 February 2021

நூல் : காட்டுக்குட்டி(புதினம்).....மலர்வதி

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...

https://tinyurl.com/3rzzc2ez

நூல்  : காட்டுக்குட்டி(புதினம்)

நூல் ஆசிரியர் : மலர்வதி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம் சென்னை-14 பேச:044-42009603

முதல் பதிப்பு : 2017

மொத்த பக்கங்கள் : 240 விலை ரூ 200

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனையோ வழிகளில் நடைபெறுகிறது.அதில் மிக முக்கியமான போராட்டம் எழுத்து வழியாக நடைபெறும் போராட்டம். அநீதி கண்டு மனதளவில் வெகுண்டெழுந்து தனக்குத் தெரிந்த மொழியில் அதனை அப்படியே எழுத்து வடிவில் கொட்டி,எழுத்தையே நெருப்பாக மாற்றும் வல்லமை சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு.அவர்கள் எதற்காகவும் எழுதுபவர்கள் அல்ல. சக மனிதரின் அவலத்தைப் போக்க வேண்டும் என்னும் உந்துதலில் மட்டுமே எழுதுகோலைப் பிடிப்பவர்கள். உள்ளதை உள்ளபடி எழுதும் அத்தகைய எழுத்தாளர்களே இன்றைய உலகிற்குத்  தேவையான எழுத்தாளர்கள்..அந்த வகையில் தன்னுடைய ‘தூப்புக்காரி’ என்னும் புதினத்தின் வழியாக கவனம் பெற்றவர் எழுத்தாளர் மலர்வதி ஆவார்.’தூப்புக்காரி ‘ புதினத்திற்காக இளம் படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்விச்சாலையில் பயின்ற மலர்வதி தனது எழுத்தால் தனித்துத் தெரிகிறார். .2008-லிருந்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் மலர்வதியின் அண்மை நூல்களில்  ஒன்று 'காட்டுக்குட்டி' என்னும் புதினம் ஆகும்.


பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண். அவளைப் பற்றிக் கவலைப்பட, இந்த உலகத்திற்கு என்ன இருக்கிறது?.ஏன் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். உடல் கொழுப்பில் உடம்பை விற்கிறாள்...இப்படித்தான் சமூகத்தில் இருக்கும் ஆண்களின் கருத்தாக இருக்கிறது,ஏன் பல பெண்களின் கருத்தாகக் கூட இருக்கிறது. அப்படி ஒரு கருத்து உடையவர்கள் இந்த நாவலைப் படித்தால்,படித்து முடித்த பின், வேறொரு கருத்திற்கு வருவார்கள்.

தொடர்ந்து படிக்க இயலாமல், கண்ணில் நீர் கோர்க்க,நிறுத்தி நிறுத்தி மீண்டும் மீண்டும் இந்தப் புதினத்தைப் படிப்பார்கள்.எவ்வளவு கொடுமையான உலகம் இது. மனதளவில் எத்தனை பேர் மாந்தர்களாக இருக்கிறார்கள் என்பதை எப்படி அறிவது அல்லது எதிரில் இருக்கும் உருவம் மனிதனா? அல்லது  மிருகமா என்பதனை ஒரு பெண் எப்படிக் கண்டு பிடிப்பது? ...மனிதனாக இருப்பவன் காம வெறி பிடித்த மிருகமாக எப்போது மாறுகிறான் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது ?நாங்க பெண் உடம்போடு பிறந்திட்டோம். பிறப்பு முதல் இறப்பு வரை எங்கே போனாலும் இந்தப் பெண் உடம்பைப் பாதுகாப்பதே எங்கள் பாடாக இருக்கிறதே....இதைத் தன் மொழியில், கோப மொழியில் ஒரு பெண்ணாக கொட்டித் தீர்த்திருக்கிறார் மலர்வதி...


திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள்.அந்த நிலையில் கூடுதல்  இருவருக்கும் இன்பம் தருகிறது. 15 வயதில் அப்படி ஒரு ஆணின் இன்பத்திற்கு பலியாகிறாள் இந்தப் புதினனத்தின் கதாநாயகி ரமணி.என்ன நிகழ்ந்தது,நிகழ்கிறது என்று அறியாத வயதில் 6 மாதம் ஓடிப்போகிறது.கருவில் இருக்கும் சிசுவை அழிக்க இயலாது,பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்னும் நிலையில், தன்னை அம்மாவாக ஆக்கியவனின் வீட்டில் போய் , என் பிள்ளைக்கு அப்பா நான்தான் என்று ஒத்துக்கொள் என்று கேட்கிறாள்.ஆண் மறுக்கிறான். யாரென்றே ரமணியைத் தெரியாது என்று சொல்கிறான்..ரமணிக்கு ஒரே ஆதரவாக இருந்த அம்மா,ரமணியின் நிலையை நினைத்து,நினைத்துச் செத்துப்போகிறாள். தன்னந்தனியாக ஒரு பெண்ணை பெத்து எடுக்கிறாள் ரமணி. அப்பா யார் என்று உலகிற்கு தெரியாமல் பிறந்த குழந்தை ஆனதால் அக்குழந்தை 'காட்டுக்குட்டி 'என்று ஆயிற்று.யாராவது தன்னுடைய குழந்தைக்கு அப்பாவென்று பொறுப்பேற்க கிடைப்பார்களா? என்னும் தேடுதலோடு, தன்னை நெருங்கும் ஆணோடு இணங்குகிறாள் ரமணி. எவனும் பொறுப்பேற்கவில்லை. சில காலம் உடன் இருந்து ,இன்பத்தைத் துய்த்துவிட்டு, துய்த்துவிட்டுப் பறக்கிறார்கள்.கால ஓட்டத்தில் பாலியல் தொழில் செய்பவளாக மாறுகிறாள் ரமணி. ஆனால் தன்னுடைய மகள் குட்டிமணி ,ஒரு குடும்பத்துப்பெண்ணாக, திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகிறாள்,முயற்சி செய்கிறாள்..துயர் அடைகிறாள்...அவள் முயற்சியில் வெற்றி பெற்றாளா என்பதுதான் கதை.


பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகதான் முதலில்  ரமணியை அறிமுகப்படுத்துகிறார்  நூலாசிரியர் "எனக்க கதை சபையேறாக் கதை...இந்த ஒலகம் பூரா எழுதினாலும் தீராத கதை...பலரும் சீ ண்ணு துப்பி தள்ளிய கதைதான் வேசயிக்க கதை.இந்த வேச மட்டும் இல்லாட்டா ஒன்னைப் போல் உள்ள பலருக்கு யோக்கியமும் நல்லா தெரியும் " என்று கோபம் கொண்டு பொறுமும் ரமணி, ஒரு டீக்காக பணம் கொடுத்தும் அவளுக்கு டீ கொடுக்க மறுக்கும் கடைக்காரனின்  மனித நேயமற்ற செயலில் தொடங்கி அவளுக்கு நிகழும் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும்போது 'இந்த உலகம் இவ்வளவு கொடூரமானதா? ' எனத் தோன்றுகிறது..


"கிராமம் குறித்து ஓர் அழகிய மனச்சித்திரத்தை  நாமெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.'காட்டுக்குட்டி' அந்தக் கனவைத் தகர்ப்பதோடு அசலான கிராமத்தை ரத்தமும் சதையுமாக நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.அந்தக் கிராமம் அச்சமூட்டுவதாக இருக்கிறது.சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை,பாலியல் சுரண்டல்,சமூக ஏற்றத்தாழ்வு,பிற்போக்குத்தனம் ஆகிய வேட்டை விலங்குகள் உலவும் இருண்ட காடாக உள்ளது. " என்று நூலின் பின் அட்டையில் இந்த நூலின் உள்ளடகத்தை சில வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இந்த நூலின் உள்ளடக்கம் உண்மைகளால் நிறைந்து கிடக்கிறது. புனைவு ஏதும் இல்லை..


" அப்பு என்பவன் அந்த ஊரில் தலைமுடி வெட்டி,இறந்தவர்களைப் புதைக்கும் தொழிலையும் செய்து வருபவன்.அவனது அப்பா இவனது அம்மா பவளத்தை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் காதிலித்து இழுத்துக்கொண்டு ஓடிப்போய் கல்யாணம் செய்திருக்கிறார்.நாடாத்தியான இவனது அம்மா முடி வெட்டும் காவதியை கல்யாணம் செய்துவிட்ட காரணத்தால் அவன் குடும்பத்தில் பலரும் புறக்கணிப்பைக் கொடுத்தாலும் பவளத்தின் சொந்த அண்ணன் தங்கையைச்சேர்த்துக்கொண்டார்..." என்றுதான் புதினம் ஆரம்பிக்கிறது.அப்பு என்னும் கதாபாத்திரம், கிராமத்தில் வாழும் ஒரு ஒடுக்கப்பட்டவரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது....

தன் தாயின் தலையில் பேன் கிடப்பதை சொல்லி அதனால் தன்னுடைய மனைவி தன்னைத் திட்டுவதைச்சொல்பவனைப் பற்றி அப்பு "எந்த ஒரு படிப்பும் இல்லாம,அது சார்ந்த தொழிலும் இல்லாம,கையெழுத்து கூடப் போடத்தெரியாத ஒரு பாமரத்தியா இருந்தவர்.தனக்க நாலு மக்களையும் தன் உழைப்புல ஆளாக்கியிருக்கியா,அவா தலையில இப்ப பேனு வந்திருக்காம்.அது அருவெருப்பா ஒனக்கு " என்று அப்புவின் மன ஓட்டத்தைச்சொல்வது போலவே நூல் முழுக்க முதியவர்களுக்கு,பெண்களுக்கு,சாதி அடித்தட்டில் இருப்பவர்களுக்கு  ஏற்படும் அவமரியாதைகளை கொட்டிக்கொண்டே போகிறார் மலர்வதி.வர்ணாசிரமப் படிக்கட்டில் கீழ் நிலையில் இருக்கும் ஒரு தொழிலாளிக்கு இந்தச்சமூகம் என்ன மரியாதை அளிக்கிறது? வர்ணாசிரம கீழ்த்தட்டோடு உடல் வலிமையும் இல்லாதவனாக ஒருவன் இருந்துவிட்டால் அவனது நிலைமை?அப்படிப்பட்ட மனிதனுக்குள் இருக்கும் காதல்.....


சமூகத்தை சகட்டுமேனிக்கு வறுத்து எடுக்கிறார் மலர்வதி.உண்மையை உண்மையாக எழுதுவதால், மனச்சாட்சியோடு வாசிக்கும் எவனுக்கும் சுருக்கென்று தைக்கும்.அமெரிக்காவில் 'காட்டிக்குட்டி'யோடு ஒரு பெண்  வாழ்வதில் எந்தத் துன்பமும் இல்லை. அந்த நாட்டின் சமூகம்  குழந்தையின் அப்பா பெயர் தெரிந்தால்தான் குழந்தையும்,அவளது தாயும் மரியாதையோடு வாழமுடியும் என்று நிர்ப்பந்திப்பதில்லை. திருமணத்திற்கு முன் ஓர் ஆணும்,பெண்ணும் கூடியிருக்கிறார்கள். ஆணுக்கு கர்ப்பப்பை இல்லை,அதனால் அவன் செய்த தவறு வெளியில் தெரிவதில்லை. பெண்ணுக்குத் தெரிகிறது.சரி,அவள் பெற்று,அவள் வளர்த்துவிட்டுப்போகிறாள்.அது அவள் விருப்பம் என்று விட்டுவிடுகிறார்கள்.இந்தியாவில்,திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகும் பெண்கள் குடும்பத்தினராலேயே கொலை செய்யப்படும் நிகழ்வுகள் நிறைய. பெண் கொல்லக்கூடப் படுகிறாள், அல்லது ரமணி போல வாழ்க்கை முழுவதும் துன்பப்படுகிறாள்...ஆனால் இப்படி இவர்களை ஆக்கியவர்கள்...குடும்பம்,குட்டியுமாக மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்கள்...சே..என்ன உலகம் இது? ஆணுக்கு ஒரு நீதி...பெண்ணுக்கு ஒரு நீதி ...

'ஆணுக்கு கர்ப்ப பாத்திரமுண்ணு ஒண்ணு இல்லாம போனதுனால அவனவன் தப்பியிட்டு இருக்கியான்.அது மட்டும் இல்லாட்டி நானும் தப்பியிருப்பேன்'.என்று ரமணி சொல்லுமிடத்தில் தந்தை பெரியார் 'கர்ப்பப்பையை வெட்டி எறியுங்கள்" என்று பெண்களைப் பார்த்துச்சொன்னது நினைவுக்கு வந்தது.ஆணுக்கு இல்லாத பழி,இழிவு,ஏச்சு,பேச்சு,உயிரிழப்பு,துன்பம்,துயரம் எல்லாம் பெண்ணுக்கு மட்டும் ஏன்?...."கர்ப்பப்பாத்திரம்' பெண்ணுக்கு இருப்பதால்தானா? என்னும் கேள்வி வாசிப்பவருக்கு இயல்பாக எழும்..


"இந்தக் காட்டுக்குட்டிகள் பெறந்து வருவதற்குக் காரணமான எந்த ஆணையும் இந்த ஒலகம் தேடாது.அவனை வேசையன் என்று சொல்லவும் செய்யாது "ரமணி கூறிக்கொண்டே போக குட்டிமணிக்கு முகம் வியர்த்தது. பாலியல் செய்யும் பெண்ணின் மகள்தானே நீ என்று தன்னை இழுக்கும் சமூகத்திற்கு எதிரான குட்டிமணியின் போராட்டமும், மனக்குமுறலும்,வேதனையும் விரிவாகவே கண் முன்னே விரிகிறது.இந்தப் புதினம் ரமணி மற்றும் அப்பு என்னும் விளிம்பு நிலை மாந்தர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான விவரிப்பு என்றாலும்,புதினம் கொடுக்கும் வலி ,வாசித்து முடித்தபின்பும் பல நாட்கள் இருக்கும் என்றாலும், வீரியமாகச்சொல்லி,இதற்கு விடிவு என்ன என்னும் கேள்வி எழுப்புவதே இந்தப் புதினத்தின் நோக்கம் எனில், அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கிறது எனலாம்.

Saturday, 13 February 2021

உலகின் இயற்கை....

                                          உலகின் இயற்கை....


பறவைகள் கூட

அழகாய் கூடிக்கூடி

கொஞ்சும்..குலாவும்..

குவலாயம் ஒன்றெனப் 

பாடி மகிழும்

காதல் அடைதல்

உலகின் இயற்கை....


ம்னிதன் செயற்கையாய்

செதுக்கிக்கொண்ட

சாதி மதக்கூடுகள்

இயற்கை உணர்வாம்

காதலுக்கு 

கல்லறைகளாய்

வெகு காலமாய்....


உடைத்து நொறுக்கி

முட்டையை விட்டு

வெளிவரும் 

பிள்ளைப் பறவைகளாய்

ஜாதி மதக்கூடுகளை

உடைத்து நொறுக்கி

காதலால் 

வெளியேவரும்

இணையர்களுக்கு 

அடைக்கலமாய் 

என்றும் தந்தை பெரியாரும்

அவர் தந்த கொள்கைகளும்,,,,


ஆண் பெண் இணைப்பு

எனும் அன்பாலே

பெருகிப் பல்கிய

மனித இனம்......

யாயும் ஞாயும் 

ஆராகியரோ ....

என அன்புடை நெஞ்சத்தால்

தாம் கலந்து

பல்கிப் பெருக்கிய

மனித இனம்..


உலகில் உள்ள

மனித இனம் 

உருப்பெற்றது எல்லாம் 

ஓரிரு பெண்கள் வழியே

என மரபியல்அறிவியல் 

அடித்துச்சொல்லும் 

இந்த நூற்றாண்டில்


அறிவிலிகள் சிலர்

கடவுள் எங்களை

தனது முகத்தில் இருந்து

படைத்தார் எனப் 

பிதற்றித் தெரியும்

இந்த நாட்களில் 


உச்ச நீதிமன்றத்தின்

அண்மையத் தீர்ப்பும் கூட

காதலுக்கு ஆதரவாகத்தான்...

ஜாதியை ஒழிக்கும்வழி

ஜாதி மறுத்து  நடக்கும்

திருமணமே.....


காதலுக்கு என்றும் 

வரவேற்பு அளிப்போம்...

அண்டை வீட்டில் மட்டுமல்ல

நமது வீட்டிலும் 

உவந்து காதலுக்கு  

மதிப்பு அளிப்போம்...

இணைத்து வைப்போம்...

காதலர்கள் வாழ்ந்தால்

மட்டும்தானே உலகில்

'காதல் வாழும் '

                  வா.நேரு,14.02.2021.

Monday, 18 January 2021

திருவள்ளுவர் நாள் சிந்தனை

                                திருவள்ளுவர் நாள் சிந்தனை                                                                                                                முனைவர் வா.நேரு


உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு,பொங்கல் திருநாள்,திருவள்ளுவர் தின வாழ்த்துகள். உலகமெங்கும் இருக்கும் திராவிடர்கள் மனமகிழ்ந்து,தங்களின் சாதி,மதங்களை மறந்து கொண்டாடும் தமிழர்திருநாளைக் கொண்டாடும் அதே வேளையில் ஜனவரி-15 ஐ திருவள்ளுவர் நாளெனக் கொண்டாடுகிறோம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, 1971-ஆம் ஆண்டு முதன் முதலாக திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை ஒட்டி,திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் நாம் ,இன்று திருக்குறளை நமது பரம்பரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவேண்டிய காலத்தில் இருக்கிறோம்.


திருவள்ளுவர் திடீரென்று தமிழ் நாடு அரசு நடத்தும் கல்வி சேனலில் காவி நிறத்தில் தோன்றுகின்றார். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி,திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கண்டனத்திற்குப் பிறகு அது நீக்கப்படுகிறது.சென்ற ஆண்டு திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய துணைகுடியரசுத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தனது வாழ்த்துச்செய்தியோடு வெளியிட்ட படத்தில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார்.பின்பு நீக்கினார். சில இந்து மதவெறி அமைப்பினைச் சார்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு விபூதியைப் பூசினர்.திருவள்ளுவர் இந்துதான் என்று சில வலதுசாரி ஊடகவியல்காரர்கள் ,பிகாரைப் பிறப்பிடமாகக் கொண்ட ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள்,திருக்குறளில் இருக்கும் சில சொற்களைச்சுட்டி  தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கிறார்கள்...இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைச்சொல்கிறார்,இவையெல்லாம் தவறா என்றால் இல்லை,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சொல்லியிருக்கிறார்.டாக்டர் அப்துல்கலாம் உள்ளிட்ட இந்தியக் குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள் மிகச்சிறப்பாக திருக்குறளைப் பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் சொன்னதிற்கும் இன்றைய பிரதமர்,நிதியமைச்சர் ஆகியோர் திருக்குறளைச்சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.இவர்களின் நோக்கம் வேறு. இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரே,காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தினப் பதிவு செய்வது ஒன்றே போதும் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக அறிவதற்கு...

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அள்ளி அள்ளிக்கொடுக்கிறது.செம்மொழித் தமிழ் நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைத்து அழிக்கப்பார்க்கிறது..அப்படிப்பட்டவர்கள் திருக்குறளை கையில் எடுப்பதற்கு என்ன காரணம்?


திருக்குறள் என்பது திராவிட இயக்கத்திற்கு மட்டும் சொந்தமானதா? நாங்கள் சொல்லக்கூடாதா  என்று ஒருவர் தொலைக்காட்சி விவாதித்தில் சீறுகிறார்.திருக்குறள் எந்த இயக்கத்திற்கும்,எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல ஆனால் .200 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயரால் சூட்டப்பட்ட 'இந்து மதம்' என்ற பெயரைக் கொண்ட ஒரு மதத்திற்கு சொந்தமானது என்று ஆக்குவதற்காக  சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்....ஆரியர்களின் நரித்தனத்தை அம்பலப்படுத்துகிறோம்.உங்கள் நோக்கத்தில் பிழை இருக்கிறது என்பதனைச்சுட்டுகிறோம்.


திருக்குறளை முதன்முதலில் படிப்பவர்கள் திகைப்பார்கள்.அரிய கருத்து பொற்குவியலைக் கண்டுபிடித்த பெருமை அடைவார்கள்.படித்து அதன் கருத்தினை சுவைத்து அறிந்தவர்கள் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைக் கொண்டு செல்வார்கள்.அதன் பொருளை, பொருத்தப்பாட்டை,வாழ்வியலை சொல்லி சொல்லி மகிழ்வார்கள்.தமிழ் அறியாத பலரும், வெளி நாட்டைச்சார்ந்தவர்கள் பல மதத்தினைச்சார்ந்தவர்கள்,மதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என அனைவருக்கும் பொதுவான நிலையில் இருக்கும் ஒரு நூல் திருக்குறள்.இப்படிப்பட்ட தனித்தன்மையான நூல், உலகத்தில் வேறு எந்த நூலும் இல்லை.ஒரு மதத்திற்கு உரிய நூலை அந்த மதத்தைச்சார்ந்தவர்கள் போற்றுவார்கள்.அடுத்த மதத்தினைச்சார்ந்தவர்கள் அந்த நூலைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.ஆனால் திருக்குறள் நூலினை எவர் படித்தாலும் தனக்கான நூலாக உணர்கிறார்கள்.தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உன்னதமான நீதி நூல் என்று போற்றுகிறார்கள்.இப்படிப்பெருமைக்கு உரிய திருக்குறளை ஒரு கூட்டம் நம்மிடமிருந்து களவாண்டு, தங்களுக்கு உரியது என்று முத்திரை இடப்பார்க்கிறது.அப்படிச்செய்வதன் மூலமாக,ஒரு மதத்திற்கு உரியதாக ஆக்கி.கொஞ்ச நாளில் மறக்கடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.


நாகசாமி என்று ஒருவர்.அவருக்கு பத்ம பூசன் விருதினை இந்திய அரசு கொடுக்கிறது.யார் இவர்?திருக்குறள் என்பது வடமொழியான சமஸ்கிருத நூல்கள்,மனுதர்மம் போன்ற நூல்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தது என்னும் ஒரு அபத்தமான நூலை (Thirukkural- Am Abridgement of Shaatras) எழுதியவர்.பேட்டி கொடுக்கும்போது கூட,இணையத்தில்பேசும்போது கூட சட்டை அணியாமல்,பூணூலோடு பேட்டி கொடுப்பவர்.தினமணி நாளிதழ்-திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று ஒரு கட்டுரை வெளியிடுகிறது.மனுநீதி நூலைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதைப் போன்ற நூலான திருக்குறளைத் தடை செய்ய வேண்டுமென எழுதுகிறார் அதை.வாசிக்கும் நம்மைப் போன்றவர்களின் இரத்தம் கொதிக்கிறது. திருக்குறளும் மனு நீதியும் ஒன்றா?..

'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் " எனக்கூறும் திருவள்ளுவரின் கருத்து எங்கே?.."பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும்,பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும்,மற்ற எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான்(மனு.த.சாத்.அத்.1.சுலோகம் 100) என்றும்,"சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் ,அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால்,அவனது நாக்கை அறுக்க வேண்டும்."(மனு.த.சாத்.அத்.8,சுலோகம்.270)என்றும்,"பிராமணனுக்கு மங்கலத்தையும் ,சத்திரியனுக்கு வலுவையும்,வைசியனுக்குப் பொருளையும்,சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை சூட்டவேண்டும்."(மனு.த.சாத்.அத்.2.சுலோகம் 31)--(திருக்குறள் நாவலர் உரை..பக்கம் 24) என மனிதர்களைக் கூறுபோட்ட மனு(அ) நீதி எங்கே?நாவலர் அவர்கள் மிகச்சிறப்பாக திருக்குறளுக்கும் மனு நீதிக்கும் உள்ள 14 வேறுபாடுகளை மிக அழகாக சுட்டிக்காட்டுவார். பரிமேலழகர் தொடங்கி இன்றைய நாகசாமிகள்,நடராஜன்கள் வரை திருக்குறளைப் போற்றுவது போல் போற்றி,தங்கள் ஆரியக் கருத்துக்களை திணிக்கிறார்களே ஏன்?

ஆரியர்களின் வர்ணக் கோட்பாட்டை தகர்த்தெறியும் கருத்து அணுகுண்டு திருக்குறள். அணு அளவில் சிறியது என்றாலும் அதில் உள்ளே இருக்கும் ஆற்றல் எவ்வளவு பெரியது.அதனைப் போலத் திருக்குறளின் கருத்துகள் ஆரியத்தை அடியோடு வேரறுக்கும் தன்மை கொண்டது.அதனால் அணைத்து அளிப்பது போல திருக்குறளைப் போற்றி ,அதன் கருத்துகளை சிதைத்து அழிக்க விரும்புகிறார்கள்.தமிழர்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, பூமிப்பந்தின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தங்கள் கடவுச்சீட்டை(விசா) கொண்டு போவது போலவே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவம் கொண்ட ஒப்பற்ற இலக்கியமான திருக்குறளையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.செல்கிறார்கள்.அவர்களில் பலர் தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.பல மதத்தினைச்சார்ந்தவர்கள்.தமிழர்களாகிய அவர்களின் உள்ளங்களிலே திருவள்ளுவர் தனது உயர்ந்த கருத்துகளால் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.உலகில் எங்கு சென்றாலும் தாங்கள் படிப்பது மட்டுமல்ல, தங்கள் அடுத்தடுத்த தலைமுறை படிக்க திருக்குறளைப் பல வடிவங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிகோகா டாக்டர் சரோஜா இளங்கோவன் திருக்குறளைக் கதைகளின் வழியே ஆங்கிலத்தில் எழுதுகிறார்.புதுச்சேரிக்கு அருகில் ஒரு உணவு விடுதிக்காரர் 200 குறளுக்கு மேல் ஒப்புவித்தால் ,அருமையான அசைவ உணவு பரிசாக சாப்பிட்டுச்செல்லலாம் என்கிறார்.மதுரையைச்சார்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் க.ச.அகமுடை நம்பி வருடந்தோறும் தன் கைப்பணம் செலவழித்து திருக்குறள் கருத்தரங்குகளை நடத்தி, அதில்வரும் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடுகின்றார்.இப்படி உலகெங்கும் உள்ள தமிழர்கள் திருக்குறள் நூலின்பால் செலுத்தும் கவனமும்,பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அளவிடற்கரியது.இதனை ஆரியர்களால் தாங்க இயலவில்லை.பகவத் கீதை என்னும் தங்கள் நூலை விட ,கடவுளைக் கும்பிடுகிறவர்கள் கூடத் திருக்குறளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது.ஆதலால், அதுவும் இந்து மத நூலே என்னும் பொய்யை இட்டுக்கட்டி,அரசு அதிகாரத்தின் மூலம் மெய்ப்படுத்தி,அதன் உண்மையான கருத்தினை சிதைத்து , மற்றவர்கள் அதனை நாடாத ஒரு நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

படித்தவர்களின் பரணியிலே இருந்த திருக்குறளைப் பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் தந்தை பெரியார். கொண்டு சேர்த்தது திராவிடர் இயக்கம்.கிராமங்கள் தோறும் மகாபாரதத்தை அந்தக் காலத்தில் சாவடிகளில் உட்கார்ந்து வாசித்தார்களே, ஏன் திருக்குறளை வாசிக்கவில்லை?.திருக்குறளுக்கு என முதன் முதலாக திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தானே,குறைந்த விலையில் திருக்குறளைத் தெருத்தேருவாக விற்றது தந்தை பெரியார்தானே,அவரது இயக்கம்தானே...   திராவிட இயக்கம் வந்த பின்பு, திராவிட இயக்க படிப்பகங்கள்,பத்திரிக்கைகள்,சொற்பொழிவுகள் வாயிலாகத்தானே திருக்குறள் பரவியது,திராவிட இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்புதானே,கடந்த 50 ஆண்டுகளில் பட்டி தொட்டி எங்கும் திருக்குறள் பரவியது.பாடத்திட்டத்தில் திருக்குறள்,பேருந்துகளில் திருக்குறள்,குமரியில் திருவள்ளுவருக்கு சிலை,சென்னையில் வள்ளுவர் கோட்டம் எனத் திருவள்ளுவரை,திருக்குறளை உள்ளத்தில் ஏந்தி செயல்பட்டது திராவிட இயக்க ஆட்சியில்தானே...

"குறளுக்குள் கடவுள்,மதம்,ஜாதி,மோட்சம்,முன் ஜென்மம் என்பன போன்ற சொற்கள் இல்லை.","ஆரியத்தை -மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கிறது ","திராவிடர்களுக்கு நீத் நூல்,ஒன்றே ஒன்றேதான் உண்டு.அது திருக்குறள் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு,ஆரிய மத புராண இதிகாச நூல்களாகிய ராமாயணம்-கீதை-பாரதம்-புராணம் ஆகிய வைணவ சைவ மத நூல்கள் ஆகியவைகளை அறவே ஒழித்து விடவேண்டும்...",'ஆரியப் பித்தலாட்டத்திற்கு சரியான மருந்து,சரியான மறுப்பு திருக்குறள்தான்"," என்ன மதத்தினர் என்று கேட்டால் "வள்ளுவர் மதம் " என்று சொல்லுங்கல்.உங்கள் நெறியென்னவென்றால் 'குறள் நெறி" என்று சொல்லுங்கள்.குறள் நெறி என்று சொல்வீராயின் ,உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும் ,எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடி விடுவான்.குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது.அவ்வளவு இயற்கைக்கும் ,அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது.எனவே குறளைப் படியுங்கள்.அதன் வழிப்படி நடவுங்கள்.அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள்.உங்களுக்கு மனந்தூய்மை ஏற்படும்.முன்னேற்ற அறிவில் ஆசையும்,நம்பிக்கையும் ஏற்படும்.(தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்-கி.வீரமணி ..பக்கம் 113-115) என்று தந்தை பெரியார் கூறியிருப்பதை உள்வாங்கிக் கொண்டு இன்றைய பார்ப்பனர்களின் செயல்பாட்டைப் பார்த்தால் எப்படி திருக்குறளை அரவணைத்து அழிக்கப்பார்க்கின்றார்கள் என்பது புரியும்.

திருக்குறள் மீது வெறுப்பு என்பது அவாளின் அடிப்படை.  "தீக்குறளை சென்று ஓதோம் " என்னும் ஆண்டாளின் பாடலிற்கு 'திருக்குறளை ஓதவேண்டாம் " என்று பொய்யுரை சொன்னவர்தானே மூத்த சங்கராச்சாரியார்.மிகப்பெரிய மனது பண்ணி, திருக்குறளின் முதல் 10 குறள்களை மட்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதித்த்வர்தானே 'பெயில்','ஜெயில்' புகழ் ஜெயந்திரே சங்கராச்சாரி.எனவே அவாளின் வெறுப்பு நாம் அறிந்ததே. ஆனால் திருக்குறள் மீது விருப்பு என்பது திராவிடர்களின் ,தமிழர்களின் அடிப்படை.  அந்த வகையில் நமது மிகப்பெரிய இலக்கியச்சொத்தான திருக்குறளை,அதன் உண்மையான வடிவத்திலேயே நிலைத்திருப்பதற்கு, நீடிப்பதற்கு நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். திருக்குறள் தின வாழ்த்துகள் அனைவர்க்கும் மீண்டும்.திராவிடம் வெல்லும்...அதனைத் திருக்குறள் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் சொல்லும்..

நன்றி : உண்மை இதழ் ஜனவரி 16-31



 


Friday, 15 January 2021

வள்ளுவரே ! உன்னோடு உரையாட....வா.நேரு

   


வள்ளுவரே ! உனது நாளில்

உனக்கு என் வணக்கம்!                       

உன்னோடு உரையாட

இந்த நாளில் எனக்கு விருப்பம்..


உலகம் பழித்ததை

ஒழிக்காத

கார்பரேட் சாமியார்கள்

நீளமான தாடியோடு

மழித்தல் வேண்டாம்

எனும் உனது 

அறிவுரையைப் 

பின்பற்றுகிறார்கள்....


'கூத்தாட்டு அவைக்குழத்து

அற்றாய்'

கொரானாவில் 

மடிந்து போயினர் மக்கள்..

'அல்லவை செய்து ஒழுகும்'

அரசால் 

நடந்து நடந்து 

மடிந்து போயினர் 

புலம் பெயர் தொழிலாளிகள்..


'உழுவார் உலகத்தார்க்கு

ஆணி ' என்றாய்

'உழுதுண்டு வாழ்வாரெல்லாம்'

ஓர் அணியாய் நிற்கின்றார்

கொட்டும் பனியில்

மாதக்கணக்காய்

தில்லி முகப்பில்...

'தீவினையார் அஞ்சார்'

திரும்பிப் பார்க்க மறுக்கிறார்.


எதிலும் உன் அறிவுரையை

ஏற்காத ஒரு கூட்டம்

எங்களுக்கு உரித்தானவர் 

வள்ளுவர் என உன்னை உரிமை

கொண்டாடப்பார்க்கிறது..


உனது சிலைக்கு

காவிக்கலர் பூசுகிறது...

உனது சிலைக்கு

விபூதிப்பட்டை அடிக்கிறது...

அதிகாரம் இருக்கும் திமிரில்

'கொலை மேற்கொண் டாரின் 

கொடிதாய்' ஆட்டம் போடுகிறது...

'காலம் பார்த்து

உள்வேர்த்து' காத்திருக்கிறோம் நாங்கள்..


நீ எழுதிய திருக்குறளுக்கு

பொருந்தா உரை

பலவற்றை வலிந்து

எழுதுகிறார் சிலர்....

நாகமென விசம் கக்கும் 

சாமிகளுக்கு 

விருது அளித்து

உன்னை நிந்தனை 

செய்கிறது மய்ய அரசு..


ஒரு குலத்துக்கு ஒரு நீதி

சொல்லும் மனு(அ) நீதியும்

நீ எழுதிய குறளும் ஒன்றாம்

அதனைத் தடைசெய்தால்

குறளையும் தடை 

செய்தல் வேண்டுமாம்..

தமிழ் வேடம் போட்டு 

நரி ஒன்று நாளிதழில்

இடம் கொடுக்கிறது எழுத...


'கண் 'என்றாய் கல்வியை...

கற்றால்தான் உனக்கு 

இருப்பது கண்கள்..

இல்லையெனில் 

வெறும் புண்கள் என்றாய்.

கற்பவை கற்கச்சொன்னாய்

கசடறக் கற்கச்சொன்னாய்

'கேடில் விழுச்செல்வம்

கல்வி 'என்றாய் வள்ளுவ.


அய்யகோ! சூத்திரனா 

வில்வித்தை கற்றான் என

ஏகலைவன் கட்டைவிரலை

காவு வாங்கிய

கயவர் கூட்டம்

நாங்கள் படிப்பதைப் 

பல நூற்றாண்டாய்

தடை செய்த கூட்டம்

இரண்டும் ஒன்று என

இறுமாப்பாய் பேசுகிறது..


ஆரியக் கருத்துகளை

அடியோடு எடுத்து எறி

என்பதையே

இரண்டு இரண்டு வரியாய்

அழகிய உவமைகள் ததும்ப

வாழ்வியலாய் எடுத்துச்

சொன்னாய் நீ! 


குஜராத்தில் பிறந்த

உத்தமராம் காந்திக்கு

இருசியாவில் பிறந்த

டால்ஸ்டாய் உணர்த்திட்ட...

இன்னா செய்தார்க்கும்

இனியவை செய்யச்சொல்லும்...

உன்னதக் கருத்துகளை

உரைத்துச்சென்றாய் நீ !


மதத்தால் பிரிந்தவர்களை

இனத்தால் பிரிந்தவர்களை

நாட்டால் பிரிந்தவர்களை

மொழியால் பிரிந்தவர்களை

உன் கருத்தின் 

ஈர்ப்பால்

இணைக்கின்றாய் !

தமிழ் பேசும் எங்களை

தமிழ்நாட்டார் எங்களை

தலை நிமிர்ந்து 

நிற்கச்செய்கிறாய் !


உன்னை அறிந்ததால்

மேலும் மனிதர்களானோம்

நாங்கள்...

உலகப்பொதுமறை தந்த

உன்னை 

ஒரு மதக்கூண்டுக்குள்

அடைக்கப்பார்க்கிறார் சிலர்...


உனது நாளில் 

சூளுரைக்கிறோம் நாங்கள்!

'மனத்தது மாசாக'

வஞ்சகம் செய்யும்

பொய்மைகளைத் தோலுரிப்போம்!

இன்னும் இரண்டு ஆயிரம்

ஆண்டுகள் ஆனாலும்

அழியாத நீ எழுதிய

குறளின்  பெருமைகளை

உள்ளது உள்ளபடி

உலகிற்குக் கொண்டு சேர்ப்போம்..


                         வா.நேரு, 15.01.2021










 








Sunday, 10 January 2021

நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு ...ஓவியா

 

வல்லினச்சிறகுகள் 2021 ஜனவரி இதழ் மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது. வண்ண வண்ணப்புகைப்படங்கள், அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களின் விரிவான பேட்டி,நான் எழுதிய நூல் அறிமுகம்அமெரிக்கப் பெண் கவிஞர் பற்றி புதுக்கோட்டைக் கவிஞர் மு.கீதா அவர்களின் கட்டுரை,கவிதைகள்,நேர்முகம்,கட்டுரைகள் எனப் பன்முகம் கொண்ட பெண் ஆளுமைகளின் பங்களிப்போடு வெளிவந்திருக்கும் இதழை முழுமையாக வாசிக்க இந்தச்சுட்டியை சுட்டுக.

https://tinyurl.com/yy6v9vou


சங்கப்பலகை

         நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு  ...ஓவியா

                     முனைவர் வா.நேரு

நூல்  : பெண்ணும் ஆணும் ஒண்ணு

நூல் ஆசிரியர் : ஓவியா

வெளியீடு : நிகர் மொழி பதிப்பகம் சென்னை-73 பேச:8428477477

மொத்த பக்கங்கள் : 152 விலை ரூ 110

பெண்ணிய சிந்தனையாளர்,பெரியாரிய செயல்பாட்டாளர் ஓவியா அவர்களின் 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இந்தக் கட்டுரைகள் ‘தமிழ் இந்து ‘நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்தவை.” இந்தக் கட்டுரைகள் ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமைவரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதனுடைய போலித்தனம் ,சூழ்ச்சி,அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கும் வண்ணம் சொல்லவேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை “ என்று என்னுரையில் ஓவியா குறிப்பிடுகிறார்.உண்மைதான்.

‘வல்லினச்சிறகுகள்’ என்னும் இந்த இதழில் உலகம் முழுவதும் இருக்கிற தமிழ்ப்பெண்கள் ஆசிரியர் குழுவில், இதழின் பங்களிப்பில், வாசிப்பில் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் நாட்டில் பிறந்து,வளர்ந்து வெளி நாட்டிற்குச்சென்று வாழ்பவர்கள். அவர்களுக்கு மேல் நாடுகளில் இருக்கும்,மேல் நாட்டு பெண்களின் வாழ்க்கைக்கும் ,தமிழகத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கைக்குமான வேறுபாடு மிக எளிதாகப்புரியும். அம்மா டாக்டர்.சரோஜா இளங்கோவன் போன்றவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.பொதுத்தொண்டினை தனது இணையர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களோடு இணைந்து செய்யக்கூடியவர்கள்.அப்படிப்பட்ட, வல்லினச்சிறகுகளில் இருக்கும் பெண் ஆளுமைகளின் தொடர் கருத்து உரையாடலுக்கு அடிப்படையாக இந்த நூல் அமையும் என்ற நோக்கில் இந்த ‘பெண்ணும் ஆணும் ஒண்ணு’ என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்த நினைத்தேன். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன்.

மொத்தம் 31 கட்டுரைகள். அனைத்துமே ஆழ்ந்த பெண்ணியப்புரிதல் நோக்கில் எழுதப்பட்டவை.சமூக ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,தோழர் காரல்மார்க்ஸ்,ஏங்கல்ஸ் ஆகியோரை நினைவுபடுத்தியே முதல்கட்டுரை தொடங்குகிறது.ஏற்றத்தாழ்வுகள் வேண்டும் என்று வாதிட்ட நீட்சே,ஹிட்லர் போன்றவர்களையும் இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது. நாம் எல்லாம் பெண்ணும் ஆணும் ஒண்ணு என்று சொல்லும்போது இல்லை,ஆண்களுக்காகவே பெண்கள் படைக்கப்பட்டவர்கள் என்று இன்றும் மதவாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் மனு நீதி போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் “’சம்மாக ‘இருப்பதற்கு ‘ஒரே மாதிரியாக’ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் வேறுபாடுகள் உள்ளவர்களாக ,வேறுபட்டவர்களாக இருக்கலாம்.ஆனால் சமமானவார்கள் .” என்பதனைச்சுட்டும் ஓவியா நூல் முழுக்க பெண் எப்படியெல்லாம் சமம் இல்லாமல் நட்த்தப்படுகிறாள் என்பதனை  விவரிக்கின்றார்.

“பாலின சமத்துவ்த்தின் முதல் சவால் அதன்மீதான பொது மனிதரின் நம்பிக்கையின்மை.”ஆணுக்கு எப்படி பெண் சம்மாக முடியும் ? என்ற கேள்வி தவிர்க்கவே இயலாமல் அனைவர் மனதிலும் படிந்து கிடக்கிறது”. என்பதனைச்சுட்டும் ஓவியா “கல்வி,அறிவியல்,அறிவு இவற்றியெல்லாம் மீறி பெண்ணின் பிறப்பு என்பது அந்தப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவேண்டிய ஒரு சம்பவமாக ஏன் இன்னும் தொடர்கிறது என்கின்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்கவேண்டும் “. என்று கேள்வி எழுப்பச்சொல்கிறார். கள்ளிப்பால் கொடுமை இன்னும் நடந்துகொண்டுதானே இருக்கிறது பல வடிவங்களில்.”கறுத்த மாப்பிள்ளையும் சிவத்த பொண்ணைத் தேடும் நாடு இது “ என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் “நிறப்பாகுபாட்டின் கொடுமையைப் பேசாமல் பெண் விடுதலையைப் பேச முடியாது “ என்பதனை அடித்துச்சொல்கிறார்.”எல்லோருடைய உடலும் அழகானததுதான் என்பதைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்த “டோட்டாசான் “ புத்தகத்தின் தலைமையாசிரியரை சுட்டிக்காட்டி  நீச்சல் உடை உள்ளிட்ட ஆண்,பெண் உடை வேறுபாடுகளைச்சுட்டுகிறார்.அது மட்டுமல்ல ஆடைகள் தேர்வில் நமது மனதுக்குள் இருப்பதை வெளிப்படுத்தி “ஆசை கொள்ள வைக்கும் சிறுமியர்க்கான உடைகள்தான் அவர்களை ஒடுக்கும் முதல் ஆயுதம் என்பதை உணர்த்துவது உண்மையிலேயே சவாலான பணிதான்” என்று சொல்கின்றார்.இக்கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நமது ஆழ்மனது அழுக்குகளை நாமே அறிந்து துயரப்படலாம்.

தமிழ் எழுத்துலகம் பெண் குழந்தைகளுக்கென தனித்துக்கண்ட முதல் பாட்டான புரட்சிக்கவிஞரின் “ஆராரோ ஆரிரோ “ பற்றி விவரிப்பத்தைப்போன்ற இலக்கிய வரலாறு இந்த நூலில் இருக்கிறது.பல திரைப்படங்கள்,சிறுகதைகளோடு ஒப்பிட்டு பெண்களின் துன்பத்திற்கான காரணங்களை மனதில் பதிய வைக்கிறது.”உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வராவிட்டால் உன் கதி என்ன? என்ற கேள்வி அவள் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது.அவள் காலை பாவடை தடுக்கிறது .மனதை தாயின் வார்த்தைகளே தடுக்கின்றன” என்று தாயே மகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை இந்த நூல் பேசுகிறது.

கேலியோடு இணைந்த விவரிப்பும் இந்த நூலில் வெளிப்படுகிறது.தாய் வீட்டிலிருக்கும் காலம் ,பெண்ணுக்கு என்ன காலம்? காத்திருப்பு காலம்? எதற்காக்க் காத்திருப்பு ? ஓவியாவின் மொழியிலேயே பார்ப்போம்.”தன்னைக் காப்பாற்ற ,தான் பணிவிடை செய்ய வேண்டிய அந்த இராஜகுமாரனின் குதிரைக் குளம்பொலி சத்த்துக்காகக் காத்திருக்கும் காலமே அவர்கள் தாய் வீட்டிலிருக்கும் காலமாக இருக்கிறது.” வரலாற்று அடிப்படையில் ஆண் கடவுள்கள் எப்படி பெண் கடவுள்களின் இட்த்தைக் கைப்பற்றினார்கள்? என்பதையும் பெண்கள் ஏன் கடவுள் மறுப்பைக் கைக்கொள்ள வேண்டும் என்பதற்கு “ வாழ்க்கை முழுவதும் கடவுள் மீதான ஆராதனை என்பது உண்மையில் சமுதாயத்தில் ஆண் தலைமை மீதான ஆராதனையாகவே தொடர்கிறது “ என்னும் உண்மையை எடுத்துப்போட்டு உடைக்கிறார் நூல் ஆசிரியர்.

பாட்த்திட்ட மாற்றங்கள் ஏன் தேவை? எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதனை,பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலைமை -அதனால் பெண் குழந்தைகள் படும் பாடு,பெண்ணின் மூளைக்கு போடப்படும் முதல் விலங்காய் அமையும் வீட்டு வேலைகள்,பெண் குழந்தைகள் சாமியாடுவது…,மாதவிடாய்-அதனால் ஏற்படும் அக-புற வேதனைகள் பற்றிக்கூறி “எந்த ஒரு காரணத்தை வைத்தும் என்னைப் புனிதமற்றவள்,தீட்டானவள் என்று சொல்கின்ற உரிமை இந்த சமுதாயத்துக்குக் கிடையாது என்று பெண் நினைக்கவேண்டும்.அந்தத் தன்மானம்தான் பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை “ என்று தெளிவாக்க் குறிப்பிடுகின்றார்.

திருமணத்துக்கு முன்பு பாலுறவு அல்ல பாலுணர்வே தவறு என்று கருதுகிற சமுதாயத்தில் வாழ்கிறோம் என்னும் எதார்த்த நிலைமையை சுட்டிக்காட்டி பாலியல் அறிவு பற்றி,குழந்தைத் திருமணங்கள் இன்னும் நின்றுவிடவில்லை என்பதைப் பற்றி,காதல் பற்றி,பெண்களுக்கு சம வாய்ப்பும் ,சம ஊதியமும் பற்றிப் பேசும் ஓவியா எழுப்பும் கேள்விகள்,அதற்கான பதில்களை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன.

திருமணம் என்னும் விசித்திரமான சந்தையை விளக்கமாகவே விவரித்து கேள்வி எழுப்புகிறார்.வாழ்நாள் முழுக்க இறுக்கும் சங்கிலியாய் வரதட்சணை இருப்பதைக் குறிப்பிட்டு என்ன தீர்வு என்பதனை நம்மைச்சிந்திக்க சொல்கிறார்.புகுந்த வீட்டின் மீதான வெறுப்பு,தனிக்குடித்தனம்,பெரியார் முன்வைத்த ‘வீட்டுக்கொரு அடுப்படி என்பதை ஒழிக்கவேண்டும் ‘என்னும் தீர்வு,இணையர்களைப் பாடாய்ப்படுத்தும் ‘சந்தேக நோய்’,திருமண உறவுக்குள் பாலுறவு நிர்ப்பந்தம்,பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்குரல்கள்,பெண்களுக்கு இன்னும் கிடைக்காத பொருளாதாரச்சுதந்திரம்,மணமுறிவு,விதவைத்தன்மை,மறுமணம்,எனப்பேசும் இந்த நூல் முடிவாக ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று தீர்வுகளை முன்வைக்கிறது.

இந்த நூலின் 31-வது கட்டுரை ‘தமிழ் இந்து’வில் வராமல் இணைத்தது என்று நினைக்கிறேன்.தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து தனது கருத்துக்களை ஓவியா தொகுத்துத் தருகின்றார்.

நூலின் பதிப்புரையை நூலைப் பதிப்பித்த நிகர்மொழி  பதிப்பகத்தின் பிரபாகரன் அழகர்சாமி,ஜோன்சன் ஜெய்சிங் கொடுத்துள்ளனர்.முதல் வெளியீடாக இந்த நூலைக்கொண்டு வந்துள்ள அவர்கள் “சமத்துவ சிந்தனையையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கக்கூடிய வெளியீடுகளை வெகுமக்களிடம் பரவலாக்க் கொண்டு சேர்க்கவேண்டும் “ என்பதே தமது பதிப்பகத்தின் முதன்மையான நோக்கம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.வளர நமது வாழ்த்துகள்.

நூலாசிரியர் அறிமுகம் சிறப்பாக உள்ளது.’வரலாற்றின் புது வரவு’ எனப்பேராசிரியர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் நட்புரை கொடுத்துள்ளார்.” இந்நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது ,பல செய்திகளைப் புதிதாய் அறிந்து கொண்ட மாணவனைப் போல மகிழ்ச்சியும் ஊக்கமும் பெற்றேன்,நன்றி ஓவியா “என்று குறிப்பிட்டுள்ளார்.அணிந்துரைகளை மூத்த பத்திரிக்கையாளர் இரா.ஜவஹர்,சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சரசுவதி ,பத்திரிக்கையாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் மிகச்சிறப்பாக கொடுத்துள்ளனர்.

“தன் கருத்தோடு உடன்படுகிறவர்களை மட்டுமல்ல,மாற்றுக்கருத்து சொல்கிறவர்களையும் ஒருங்கிணைத்துப்பயணப்பட நினைக்கிற மிகச்சிலரில் ஓவியாவும் ஒருவர்…’’பெண்ணியம் ‘என்பதே மிகச்சிக்கலானதாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில் பெண்களைப் பிணைத்திருக்கும் அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிவது சவால் நிறைந்தது.அதிலும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே விரும்பிப் பூட்டிக்கொண்டிருக்கும் விலங்குகள் ஏராளம். அவை அடிமைத்தளைகள் என்பதைப் புரியவைக்கப் பொறுமையும் அனுபவமும் அவசியம்.இவை இரண்டும் கைவரப்பெற்றிருக்கிறார் ஓவியா “ என்று பிருந்தா சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.உண்மைதான்.தன்னுடைய வாழ்க்கை முழுவதும் சந்தித்த பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவது மட்டுமல்லாது,அதற்கான தீர்வுகளை பெண்ணிய நோக்கில்,முழுமையான பெரியாரியல் புரிதலோடு முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் படிக்க வேண்டிய நூல்.உள்ளடக்கக் கருத்துக்களைப் பற்றி  பெரிய அளவில் விவாதிக்கப்படவேண்டிய நூல்.


நன்றி : வல்லினச்சிறகுகள்  ...ஜனவரி 2021



 


 


 


 


 


 


Saturday, 9 January 2021

அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)...பி.வி. பாரதி

 அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)

நூல் ஆசிரியர் கன்னடத்தில்  :  பி.வி. பாரதி

மொழி பெயர்ப்பு தமிழில்     :  கே.நல்லதம்பி

வெளியீடு                   :  நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ்(பி) லிமிடேட்,சென்னை-98

முதல் பதிப்பு                : ஜீலை 2015,மொத்த பக்கங்கள் 121, விலை ரு 100

கற்பனைகளை விட உண்மை நிகழ்வுகள் எப்போதும் உற்சாகம் தரும். அதுவும் மரணம் தனக்கு வரப்போகிறது என்று நினைத்து பயந்த நேரத்தில்,சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் மரணத்தை வென்ற கதை என்றால் ,எவருக்கும் படிக்கும் ஆசை வரும்.அதுவும் இந்தக் கொரனா நேரம்,மனிதர்கள் பலர் பயந்து போய் இருக்கும் நேரம்.நிலையாமையை ஒவ்வொருவரும் உணரும் நேரம். ஆனால் மனித குல வரலாற்றை அறிந்தவர்கள் இதனைப்போல ஆயிரக்கணக்கான கொள்ளை நோய்களைக் கண்டு,கடந்துதான் மனித இனம் இன்று நிலைத்து இருக்கிறது,நாளையும் நிலைத்து நிற்கும் என்பதனை அறிவார்கள்.

மொத்தம் 121 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த நூல் ஒரு தன் அனுபவப் பகிர்வு நூல். உண்மையை அப்படியே சொல்லிச்செல்வதால் வலிமையான நூலாக இந்த நூல் விளங்குகிறது.

சமர்ப்பணம் என்று "புற்று நோய் போராளிகளுக்கும், அவர்களின் போராட்டங்களுக்கும்,உறுதுணையான டாக்டர்களுக்கும்,எல்லா வகையான மருத்துவ உதவியாளர்களுக்கும் " என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்தவுடனேயே இது ஒரு வேறுபட்ட நூல் எனத்தோன்றியது.உண்மைதான்,மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்து சிகிச்சையின் மூலம் வெற்றி பெற்ற பி.வி.பாரதியே இந்த நூலின் ஆசிரியர். ஆதலால் தனது அனுபவத்தை, தனது வேதனையை, தன்னைச்சுற்றி இருந்தவர்கள் செலுத்திய அன்பை,மருண்டு ஓடியவர்களின் பயத்தை,ஆறுதலாய் தாய் மடியாய் ஆதரித்த தோழி ஜோதியை எனத் தனக்கு ஏற்பட்ட 2 வருட கடுமையான,கொடுமையான அனுபவத்தை விவரிக்கும் நூலே இந்த நூல்,


" வாழ்வின் படிப்பினைகளைப் பெற பலரும் பல இடங்களைச்சுட்டுவர். சிறைச்சாலையை அனுபவமளிக்கும் ஆசான் என்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட வாழ்வைச்செதுக்குமிடம் மருத்துவமனைகள்தாம்....வாழ்வை எழுதலாம். ஆனால் மரணத்தை எழுதுதல்  இயலாது. 'கடுகு வாங்கி வந்தவள்' மரண வாயிலின் நுனியை உணர்த்தும் சாகசம்" எனத் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகப்பேராசிரியர் இரா.காமராசு குறிப்பிடுகிறார்.மருத்துவமனை கொடுக்கும் வாழ்வின் படிப்பினைகள் பல.தனக்கு மட்டுமே ஒரு நோய் வந்ததாகக் கருதிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தபின்பு, தன்னைப்போன்ற பலரைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வை பாரதி அழகாக சித்தரித்துள்ளார். தனக்கு வந்த நோயை மிக இலகுவாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாகக் கடந்து செல்லும் மனிதர்களை முதன்முதலாகப் பார்த்தபொழுது ஏற்பட்ட அதிர்ச்சியை பதிவு செய்திருக்கிறார்.


தனித்தனி அத்தியாயங்கள் இல்லை. நிறைய வர்ணனைகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இயல்பான ஆனால் மனதில் நம்பிக்கை ஊட்டும் மனப்பான்மையோடு இரண்டாவது கட்டத்தில் இருந்த புற்று நோயை வென்ற கதை. புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக தான்  8 முறை எடுத்துக்கொண்ட கிமோ சிகிச்சை அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வலிகள்,வேதனை போன்றவற்றை நகைச்சுவையோடும் எதார்த்தத்தோடும் விவரித்திருக்கின்றார்.தனது கணவர்,தனது அப்பா,அம்மா,மகன் என அனைவரும் அன்போடும் அதே நேரத்தில் மாற்றங்களோடும் தன்னைக் கவனித்துக்கொண்டதை நன்றாகவே விவரித்திருக்கின்றார்.நோயால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் தான் சினிமா,டிராமா எனக் கலந்து கொண்டதை எழுதியுள்ளார்.


நோய் வாய்ப்பட்டதற்காக ஒரு சமையல்கார அம்மாவை பணியில் அமர்த்த,சமைக்கவே பழகாத அந்த அம்மாவின் சமையலைப் பற்றிய விவரிப்பும், தனது கணவர் அதற்குப் பின்பு பெண்கள் மீதிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் பகுதி நல்ல நகைச்சுவையோடு அமைந்த பகுதி.தான் ஒரு ஆரியர் வீட்டுப்பெண் என்பதனைக் குறிப்பிடும் அவர் " இது போலான நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், மேல்பார்வைக்கு சிரிப்பாக தெரிந்தாலும் ,உள்ளுக்குள்ளே 'நான் ஹிந்து மதத்தவளாக இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்? என்னும் விஷயம் வருத்தப்படச்செய்தது.நாம் மனிதர்களை,சாதி,மத அடிப்படையில் அளக்கிறோமே,அப்போது அவர்களுக்கு உள்ளுக்குள்ளே எவ்வளவு வலிக்கும் என்று யோசித்தபோது கவிஞர் நிஸார் அகமத் அவர்களின் 'உங்களோடு இருந்தும் உங்களைப் போலாகாமல் ; என்ற கவிதை நினைவுக்கு வந்து ஏனோ மனது கலங்கியது "(பக்கம் 84)  என்றும் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.


தான் சந்தித்த சில கொடுரமான மனிதர்களைப் பற்றியும் பி.வி.பாரதி எழுதியுள்ளார், " உண்மையாகவும் மனிதருக்குள் இத்தனை கொடூரம் இருக்கும் என்று நான் அறிந்து கொண்ட தருணம் அது. "கேன்சர் வந்தவர்கள் எல்லாம் இறந்துவிடுவார்கள் என்று நினைத்தால், நீங்கள் இந்த நோயைப் பற்றி இன்னும் அப்டேட் ஆகவில்லை.இப்போது விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட்டது " என்றேன் " என்று குறிப்பிடுவதைப் போல ,பலர் வேண்டுமென்றே சுட்டிக் காட்டி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலப் பேசியதைப் பதிவு செய்கிறார்.பின்பு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். " ஒரு கேன்சர் நோயாளிக்குத் தன் நோயைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருப்பதால்,எங்கயோ பார்த்த,கேட்ட அர்த்தமற்ற பேச்சுகளைச்சொல்லியே ஆகவேண்டும் என்கின்ற பிடிவாதம் வேண்டாம்.நீங்கள் அங்கே இங்கே கேட்டதை எல்லாம் நாங்கள் சுயமாக அனுபவித்து முடித்திருப்போம்.அதனால் எங்களுக்கு உங்களை விடவும் அதிகமாகவே தெரியும்.ஏன் என்றால் இது உங்களுக்கு வெட்டிக்கதை.எங்களுக்கோ வாழ்வு-சாவின் பிரச்சனை.எங்களை எங்கள் தைரியத்துடன் வாழவிடுங்கள்.தயவுசெய்து எங்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.நாங்கள் மென்மையானவர்கள் "என்று சொல்லி முடிக்கின்றார். மொழி பெயர்ப்பினைச்செய்த திரு.கே.நல்லதம்பி அவர்களைப் பாராட்டவேண்டும்.புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்த நான், முடித்த பின்புதான் புத்தகத்தை வைத்தேன். அந்த அளவிற்கு நீரோட்டமாக ஓடிய நடை.  


விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்த நான் இரண்டு ஆளுமைகள் இந்த நூல் பற்றிய எழுதிய மதிப்புரையைப் படித்தேன்.ஆதலால் சுருக்கமாக எழுதிவிட்டு அவர்களின் கட்டுரையையும் இணைத்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதனையும் படிக்கலாம்.

http://writerpaavannan.blogspot.com/2016/11/blog-post.html


https://www.hindutamil.in/news/supplements/penn-indru/55848-.html

Friday, 8 January 2021

புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்- முனைவர் நா.நளினிதேவி

 

வண்ணத்தில் ,இதழிலேயே படித்திட பக்கம் 28 முதல் 32 வரை

இணைப்பு :https://tinyurl.com/yy6m8ryn

சங்கப்பலகை

               புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்.

                        நூல் மதிப்புரை

                        முனைவர் வா.நேரு



                            ஆராய்ச்சிக்கும் எழுத்திற்கும் ஓய்வு வயது என ஒன்று உண்டா? இல்லை என்பதனை தன் எழுத்துக்களால் ,ஆராய்ச்சிகளால் மெய்ப்பிக்கும் முனைவர். நா,நளினிதேவி நம்மை உற்சாகப்படுத்துகிறார் ஓய்வு பெற்ற பேராசிரியரான நா.நளினிதேவி தனது .75 வயதில். 20களில் 30களில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல 70,80 களில் இருக்கும் பெண்களையும் எழுதுவதற்கு வழிகாட்டுகிறார்.அவரால் எழுதப்பட்ட '  புற நானூறு-தமிழரின் பேரிலக்கியம்' என்னும் இந்த நூல் ஓர் ஆய்வு நூலாகும். புற நானூற்றை ஆழமாக ஒவ்வொரு பாடலையும்  படித்து, பாடலின் கருத்தினை உள்வாங்கி, உள்வாங்கிய கருத்தினை இன்றைய நடைமுறையோடு ஒப்பிட்டு புற நானூறு எப்படி தமிழரின் பேரிலக்கியம் என்பதனை நிறுவுகின்ற ஒரு நூலாக இந்த நூல் இருக்கிறது.திருக்குறளில் படித்து ஆராய்ந்து அதன் ஒவ்வொரு குறளுக்கும் பொருள் கூறும் தமிழ் அறிஞர்களை நான் அறிந்திருக்கிறேன்,பழகியிருக்கிறேன். 


நூல்                 : புற நானூறு -தமிழரின் பேரிலக்கியம் - 

நூலின் ஆசிரியர்     : முனைவர் நா.நளினிதேவி

வெளியீடு           : புதுப்புனல்,சென்னை--5 பேச : 9884427997

மொத்த பக்கங்கள்    : 342  விலை ரூ 360 /-


ஆனால் புற நானூறு முழுவதையும் ஆய்ந்து கூறும் ஒருவரை நேரிடையாக அறிவது இதுவே முதல்முறையாகும். தனது ந்ன்றியுரையில் 'ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் என்னுள்ளத்தே நடமாடி என்னை உயிர்ப்பிக்கும் வகையில் உரையாடி உறவாடும் பழந்தமிழ்ப் புலவர்கட்கு என்னென்று நன்றி நவில்வது ' என்று கூறியிருக்கிறார். உண்மைதான் இவர் உள்ளத்தே நடமாடி,உரையாடிய புலவர்களின் புலமையை,வலிமையை இன்றைய நாளுக்கு ஏற்ற வகையில் எடுத்து எழுதியிருப்பதே இந்த நூலின் சிறப்பு.


பதிப்புரையில் 'புதுப்புனல்' பதிப்பாசிரியர் இர.இரவிச்சந்திரன் 'இந்நூலை வாசிப்பதன்மூலம் பல்வேறு ஆய்வு மாணவர்கள் பயன்பெறுவர் என்பது நிச்சயம் " எனக்குறிப்பிடுகிறார்.உண்மைதான்." நான் இந்துவல்ல.நான் தமிழன் என்ற உணர்வு ஏற்பட்ட காலத்தில் கம்பராமாயணம் தமிழர்களின் பேரிலக்கியமாக இருக்க முடியாது.அப்படியானால் தமிழரின் தமிழருக்கான பேரிலக்கியம் என்று எதைச்சொல்வது என்ற தேடலின் விளைவாகவே புறநானூறுதான் தமிழரின் பேரிலக்கியம் என்ற கருத்து என்னுள் எழுந்தது " என்று குறிப்பிடும் கோவைஞானி 'அறத்தின் உய்ர்துடிப்பு ! 'என்னும் தலைப்பில் அணிந்துரையை  கொடுத்துள்ளார்." புற நானூற்றை அங்குல அங்குலமாய் ஆராய்ந்து ,அதன் சிறப்பியல்புகளை இந்த ஆய்வு நூலில் ஆசை ஆசையாகக் கொண்டாடியிருக்கிறார் நளினிதேவி " என்று 'இலக்கியப்பெட்டகம்' என்னும் தலைப்பில் முன்னுரையை ஆருர் தமிழ் நாடன் கொடுத்திருக்கிறார்.அடுத்து என்னுரை என்னும் தலைப்பில் நூலின் ஆசிரியர் நா.நளினிதேவி தனது கருத்துக்களைக் கொடுத்துள்ளார்.


அடுத்ததாக உள்ளடக்கத்தில் 8 தலைப்புகளில் இயல்கள் உள்ளன. புற நானூறே தமிழின் பேரிலக்கியம்','அரசியல் இலக்கியம்',போர் இலக்கியம்'.'நட்பிலக்கியம்','மகளிர் இலக்கியம்',வாழ்வியல் சமுதாய இலக்கியம்,'படைப்பிலக்கியம்','புதுமை இலக்கியம் ' எனும் தலைப்புகளில் உள்ள ஒவ்வொரு இயலும் விரிவாக விரித்துரைக்கத்தக்கன.இவை பக்கம் 24 முதல் பக்கம் 236 வரை இடம் பெற்றுள்ளன.புற நானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் நூல் ஆசிரியரே படைத்திட்ட கதைகளும் நாடகங்களும் 237 பக்கம் முதல் 276 வரை. இந்தக் கதைகளும் நாடகங்களும் வாசிக்கும்போதே நமக்குக் களிப்பூட்டுகின்றன, புன்னகை வரவைக்கின்றன.முழுப்பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஓர் எடுத்துக்காட்டு '(பறம்பு மலை) நான் பேசுகிறேன்' என்னும் தலைப்பில் உள்ளதில் ஒரு பகுதி " புலவர்கள் தமக்குள் மன்னன் பாரியை வஞ்சப் புகழ்ச்சியுடன் பாடிக்களிப்பர்..ஒருவர் ,பாரியைப்போல உலகில் வாரி வழங்குவோர் யாருமில்லை என்று வேண்டுமென்றே தொடங்குவார். மற்றொருவர் இவ்வாறுதான் உலகம் முழுக்கச்சொல்கின்றது.ஆனால் பாரியைப் போல மாரியும் இங்கு உள்ளதே என்பார்.இன்னொரு புலவர்,மாரி சிலபோது பெய்யாமல் போவதுண்டு. ஆனால் பாரி ஒரு போதும் இல்லை என்று கூறாமல் வழங்குபவன் என்பதை அறீவீரா எனத்தொடர்வார் இன்னொருவர் ,இது மட்டுமில்லை.மழை பெய்யாமல் வாடி நின்ற முல்லைக்குத் தன் தேரையே தந்தவன் என்பார்.இப்படியே அவர்கள் பாரியைப் புகழ்வதைத் தமது மனதுக்கு நிறைவாகக் கொள்வதை நான் கண்டும் கேட்டும் எனக்குள் சிரித்துச்சிலிர்ப்பேன் " மலை பேசுவதாகச்சொல்லும் இந்தப் பகுதி கற்பனையையும், புற நானாற்றுப்பாடலையும்  கலந்து நூலாசிரியர் கொடுத்திருப்பது.பிற்சேர்க்கை என்று 277 முதல் 336 வரை பல புற நானூற்றுப்பாடல்களுக்கான விளக்கவுரையை நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் கொடுத்திருக்கிறார். நிறைவாக நூலாசிரியரின் 4 பக்க நிறைவுரையோடு இந்தப்புத்தகம் முடிவு பெறுகிறது.


புற நானூறே தமிழின் பேரிலக்கியம் என்னும் முதல் இயல் நூலாசிரியரின் தனித்துவமான பார்வையைப் புலப்படுத்துகிறது ."சிலப்பதிகாரம், கம்பராமாயணம் காப்பியங்கள் என்று சொல்லப்படுகின்றன. கம்பராமாயணம் என்பது வடமொழி நூலின் தழுவல் நூல். எனவே அதனை தமிழ்க்காப்பியமாக எடுத்துக்கொள்ள முடியாது. முதல் தமிழ்க்காப்பியம் புற நானூறே என்று கூறும் நூலின் ஆசிரியர் " தமிழின் மூல நூல் என்ற முறையிலும் ,வரலாறு என்பது மன்னர்கள் பற்றியது அன்று மக்களைப் பற்றியது என்ற இன்றைய பார்வையிலும் வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குரிய வழிகாட்டுவதே இலக்கியத்தின் பயன் எனும் இக்காலத்தேவையிலும் தமிழ் இலக்கியங்களை மீள்பார்வைக்குட்படுத்திவோமாயின் இத்தகுதிகளை முழுமையாகப் பெற்றுள்ள புற நானூறே  தமிழின் பேரிலக்கியமாகிறது' பக்கம் 28."ஒருவரே பாடியுள்ள பிற பேரிலக்கியம் ஒவ்வொன்றும் ஒரே ஒரு கனியின் சாறு போன்றது என்றால் ,புற நானூறு பல சுவை மிகு கனிகளிலிருந்து பிழிந்தெடுத்த சாறு எனக்கொள்ளலாம் ' எனச்சொல்கின்றார்.வாழ்ந்து மறைந்த வாழும் மக்களின் இன்ப துன்பங்கள் ,இவற்றுக்கான காரணங்கள்,அக,புறச்சிக்கல்கள்,இவற்றோடு வாழ்க்கையின் வெற்றி தோல்விகளையும் அவர்களின் போராட்டங்களையும் முயற்சிகளையும் கூறுவதே மக்கள் இலக்கியம் " பக் 33."புற நானூறு எந்த வகையிலும் மக்கள் துன்பம் தீர்க்கும் வழியாகக் கடவுளைக்காட்டவில்லை. மனிதன் முயன்றால் தம் துன்பங்களுக்கான காரணங்களைக் களைந்து அவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றது. நன்னம்பிக்கை ,எந்தக் குறைபாடுகளையும் தீர்க்க வல்லது.மனிதனின் துன்பத்துக்கு மனிதன்தான் காரணம்,மனிதனால் தீர்க்கமுடியும் என்று மனித ஆற்றலை முன்னிறுத்துகின்றது." என்று குறிப்பிடும் நூலாசிரியரின் ஆய்வுத்திறனை நூல் முழுக்கக்  காண முடிகின்றது.


புற நானூறு அரசியல் இலக்கியம் என்னும் தலைப்பில் நூலாசிரியர் புற நானூற்றுக்கால அரசர்கள் பற்றியும் அவர்களைப் பாடிய புலவர்கள் பற்றியும், அன்றைய அரசியல் நிலைமைக்கும் இன்றைய அரசியல் நிலைமைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரிசைப்படுத்தியும் வகைப்படுத்தியும் கொடுத்துள்ளார்.' ஆட்சியின் அடிப்படையும் நோக்கமும் மக்கள் நலனே என்று கொண்டதால் மன்னர்களைப் போற்றிப்பாடும் பாடல்கள் பெரும்பான்மையும் மக்கள் சார்புடையவனாக விளங்குகின்றன....இன்றைய உலகில் மலிந்து காணப்படும் அரசியல் சீர்கேடுகளுக்கும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கும் உரிய ஆற்றல் வாய்ந்த இயற்கை சார்ந்த கற்பனை கலவாத,கடவுள் இடம் பெறாத தீர்வுகள் கூறும் திறம் புற நானூற்றுக்குரிய தனிச்சிறப்பாகும். காப்பியங்கள் அல்லது பேரிலக்கியங்களின் மையக்கூறு அரசர்களும் ஆட்சி பொறுப்புகளுமே என்ற வகையில் புற நானூறு அரசியல் இலக்கியமாகின்றது என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.இதனைப்போலவே மற்ற இயல்களும் புற நானூறை உணர்ந்து தெளியும் வகையில் அமைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.


நிறைவாக நிறைவுரையில் " புற நானூற்றுப்பாடல் அனைத்தும் எட்டு ஒன்பது வகையான கோணங்களில் கூர்ந்து அணுகப்பெற்று அது தமிழரின் பேரிலக்கியம் என்பதற்கான வலுவான சான்றுகளையும் விளக்கங்களையும் இவ்வாய்வு நூல் உள்ளடக்கியுள்ளது. புற நானூறே தமிழின் முதல் மூலப்பேரிலக்கியமாகும் எனும் புதிய கருத்து தமிழுலகில் அறிமுகமாகிப் பரவி நிலைபெற வேண்டும்.

 இதுவே, இந்நூல் ஆய்வின் அளப்பரிய பயன் ஆகும் " என்று நூலாசிரியர் தனது ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார். 'கரும்பு தந்த தீஞ்சாறே ' என்பார் புரட்சிக்கவிஞர் தமிழைப்..புற நானூறு தரும் கரும்புச்சாற்றைப் பிழிந்து நமது கரங்களில் புத்தகமாய் கொடுத்திருக்கிறார் ,,பேரா.நா.நளினிதேவி.அவரது உழைப்பும் ஆய்வும் போற்றத்தக்கது. புற நானூற்றைப் பருக ,இந்த 'புற நானூறு தமிழரின் பேரிலக்கியம் ;என்னும் நூலைப் படித்திடுவீர்.


நன்றி : வல்லினச்சிறகுகள் -நவம்பர் 2020 இதழ்