Friday, 29 September 2023

தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களின் முதல் நூல் ‘உயிர்வலி ‘

 

 தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களின் முதல்  நூல் ‘உயிர்வலி ‘ வெளிவந்திருக்கிறது. முதலில் இதனை மிக அழகான வடிவமைப்பில் தரமாக வெளியிட்டிருக்கும் ‘கீழடி வெளியீட்டகத்திற்கு ‘ மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். உயிரோட்டமாய் அட்டைப்படத்தை வடிவமைத்த ல.மு.அகிலாராசனுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். வடிவமைப்பால் ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் எடுக்கத்தோன்ற வேண்டும் என்பார்கள்.அப்படி ஒரு நேர்த்தியான வடிவமைப்பில் வந்திருக்கிறது. உள்ளடக்கத்தால் பரவலாகக் கவனம் பெறும் நூலாக இந்த நூல் மாறியிருக்கிறது.திராவிடர் கழகத்தின் களப்பணியாளரகப் பணியாற்றும் தோழர் ந.தேன்மொழியின் கட்டுரைத்தொகுப்பான இந்த நூலை திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வெளியிட்டு ,சென்னை பெரியார் திடலில் சிறப்புரையாற்றினார்.புத்தகத்தைக் கையில் ஏந்தி வெளியீட்டு விழாவில் உரையாற்றிய (படத்தில் இருக்கும்) அத்தனை ஆளுமைகளின் உரைகளின் தொகுப்பும் விடுதலை நாளிதழிலில் வந்தது. அருமைக்குரிய பெரியாரியத் தோழர்களே, ஒரு எழுத்தாளருக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு,அவரின் நூலைப் படிப்பது,உள் வாங்குவது, விமர்சனம் செய்வது என்பதாகும்.அந்த வகையில் நம் தோழர்கள் இந்த ‘உயிர்வலி ‘ நூலைப் படியுங்கள்,பரப்புங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த நூலுக்கு நான் கொடுத்திருக்கும் வாழ்த்துரையையும் இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி.



       


          வாழ்த்துரை
     முனைவர் வா
.நேரு,
     தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,பெரியார் திடல் ,சென்னை-7.


"
உயிர்வலி  "என்னும் இந்த நூல்  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசிக்கும் திராவிடர் கழக மண்டல மகளிரணிச் செயலாளர் தோழர் ந.தேன்மொழி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு .தந்தை பெரியாரின் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கும் தோழர் தேன்மொழி அவர்கள் இன்றைய நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான சிக்கல்களை பெரியாரியல் பார்வையில் எழுதியிருக்கும் கட்டுரைகள் இவை..

கடந்த காலம் பற்றிய வரலாறு, நிகழ்காலத்தில் பெண்களுக்கு நிகழும் சிக்கல்கள்,தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள்,எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று மூன்று காலச்சிந்தனைகளையும் உள்ளடக்கிய 34 கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல்.திராவிட இயக்கத்தின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும் அன்னை நாகம்மையார் பற்றியும்,அன்னை மணியம்மையார் பற்றியுமான கடந்த கால வரலாறு பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கட்டுரைத் தலைப்புகளே எழுச்சி ஊட்டக்கூடிய விதத்தில் இருக்கின்றன.'திராவிடம் என்றால் தீட்டா?','அறிவு இருக்கா?',''மானங்கெட்டவர்களா நாம்?","நறுக்கடா உறுப்பை","ஜாதிக்கு வராதா சாவு?","நட்டகல்லா நாம் ?" போன்ற தலைப்புகளே அவரின் உணர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்குள் போனால் தகவல்களும்,விவரங்களும்,நியாயமான கேள்விகளுமாக உணர்ச்சிப் பிழம்பால் உருவான எழுத்துகளால் கட்டப்பட்ட  இந்த நூல் கருத்துகளால் வலுவாக  இருக்கிறது.

பெண்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த 'மனு நூல் 'பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.'மனுவா? மானுடமா? ' என்னும் கேள்வியைக் கேட்டு மனு நூல் எப்படி எல்லாம் மானுடத்திற்கு எதிராகவும் மகளிருக்கு எதிராகவும் இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியிருக்கிறார். தொலைக்காட்சி சின்னத்திரைகள் எப்படி எல்லாம் நமது இல்லத்தில் இருக்கும் பெண்களின் உள்ளத்தைப் பாழ்படுத்துகிறது என்பதனை ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார். "நெடுந்தொடர் என்ற பெயரில் மனிதரின் மூளைக்கு விலங்கு போடப்பட்டுள்ளது. எந்த நேரமும் ஓவென்ற அலறலும் அழுகை ஒலியும் வீட்டினுள்ளே " என்று சின்னத்திரைகளில் ஓடும் தொடர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றிலே நடந்த  தாலி பற்றிய சொற்போர் அரங்கம் பற்றி எழுதியிருக்கிறார். அன்றைக்கு என்ன நடந்தது என்பது பலரும் அறிந்திராத நிகழ்வு. மிகத்தெளிவாக 'பெண்ணெனும் பேராளுமை' என்னும் கட்டுரையில் ."உரக்கச் சொல்லுங்கள் உரக்கச் சொல்லுங்கள் என்று சொற்போர் செய்ய வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலே போய்விட்டது. நிகழ்ச்சி வாய்மூடி போனது எதனால்?காலம் காலமாக பெண்கள் கழுத்திலே ஆண்களால் கட்டப்பட்ட ஒரு அடிமை குறியீட்டை பற்றிய சொற்களம் அது. தாலி என்பது பெண்ணுக்கு சீர்மை செய்கிறதா இல்லை சிறுமையைச் சேர்க்கிறதா’என்பதுதான் அது. தாலி - இதைப்பற்றி ஆய்வு செய்ய கூடாதா? ஏன் செய்யக் கூடாது? ஒளிபரப்பு செய்யக் கூடாதா? ஒளிபரப்பு செய்யக் கூடாத அளவு அங்கே என்ன தான் நடந்தது? உண்மையில் அருமையான சொற்போர் நிகழ்ச்சி காலம் காலமாக உருவாக்கப்பட்ட, பெண்கள் மீது திணிக்கப்பட்ட, ஒரு அடிமை எண்ணத்தின் முகத்திரையை, கிழிக்கும் நிகழ்ச்சிதான் அங்கே நடந்தது." என்று குறிப்பிட்டு விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.இந்தச்செய்தி இந்தக் கட்டுரையின் வாயிலாக அனைவருக்கும் இந்த நூலின் மூலமாகச்சென்று அடைய வேண்டும்.

ஆண் பெண் பாகுபாடு மனதளவில் எப்படி எல்லாம் வேலை செய்கிறது.ஒரே செய்தியை ஓர் ஆண் எழுதினால் முக நூலில் இருக்கும் ஆண்கள் எப்படிப்பார்க்கிறார்கள்..அதையே ஒரு பெண் எழுதினால் ஆண்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்ற வேறுபாட்டை தனது சொந்த அனுபவத்தின் மூலமாகவே பதிவு செய்திருக்கிறார்.

மூட நம்பிக்கை எப்படிப் பரப்பப்படுகிறது என்பதனை களத்தில் நின்று முறியடித்த ஒரு நிகழ்வை கட்டுரையாக வடித்துள்ளார்.குடியாத்தம் நகருக்கு அருகில் இருக்கும் ஒரு சிற்றூரில் திடீரென்று வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்று கூடிய கூட்டம் பற்றியும் ,அதற்கான விளக்கத்தை அறிவியல் அடிப்படையில் விளக்கியதையும் விவரித்துள்ளார்..


பெண் விடுதலை என்று சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் தந்தை பெரியார்.'பெண் ஏன் அடிமையானாள் ' என்பதை ஒரு 80,90 ஆண்டுகளுக்கு முன்னாள் காரண காரியத்தோடு விளக்கியவர் தந்தை பெரியார்.பெண்கள் கல்வி பெறவேண்டும்.பெண்கள் வேலைக்குச்செல்ல வேண்டும்.பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திச்சொன்னவர் பெரியார். ஆனால் இன்றைக்கு கற்ற பெண்கள்,பொருளீட்டும் பெண்கள் விடுதலை பெற்று இருக்கிறார்களா?இன்னும் ஆண்களின் அடிமையாகத்தான் இருக்கிறார்களா? என்னும் கேள்வி எழுப்பினால்  இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.இதனை " பொருளியலைத் தேடும் உரிமையைப் பெற்று உள்ளார்கள் என்பதைவிடப் பொருளியல் தேடித்தரும் பொறியாக உள்ளார்கள் என்பதுதான் துயர் தரும் செய்தி.ஏனெனில் செலவழிக்கும் உரிமை பெண்களிடம் இல்லை " என்று தோழர் தேன்மொழி குறிப்பிடுகின்றார்.உண்மைதானே.இன்றைக்கு வேலைக்குச்செல்லும் பெரும்பாலான பெண்களின் வங்கி ஏடிஎம் கார்டு அவர்களின் கைகளில் இல்லையே. ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்துவிட்டு ,பேருந்தில் போய்வரப் பணம் கொடுங்கள் என்று கையேந்தும் நிலைமைதானே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது.

"
ஒவ்வொரு பெண்ணின் புன்னகைக்குப் பின்னால் ஓராயிரம் துன்பங்கள் உள்ளது.பெண்கள் உணர்வுகளுக்காக வெகுவாகப் போராட வேண்டியுள்ளது " என்பதனைத் தன் கட்டுரையில் குறிப்பிடும் தோழர் தேன்மொழி ' பெண் மூலமாகப் பிறந்து பெண்ணொடு வாழ்ந்து பெண் குழந்தையை உருவாக்கி பெண்மையைச்சிதைக்கிறாய் சொற்களால்,நயண்மையா? ' எனக் கேள்வி கேட்கிறார். ஆபாசமாக திரைப்படப் பாடல்கள் எழுதிக் குவிக்கும் கவிஞர்களைப் பார்த்து தோழர் கேட்கும் கேள்விகள் நறுக்கென உள்ளது.

ஒட்டுமொத்த பார்ப்பனியத்தைப் புறந்தள்ளி,ஆரிய மாயையிலிருந்து விடுபட்டு,ஆரியப்பண்பாடுகளை களையெடுத்து ,எப்போது முழுமையான தமிழராக நாம் வாழப்போகிறோம் " என்னும் ஆதங்கத்தை தோழர் தேன்மொழி தன் கட்டுரையில் எழுப்பியிருக்கிறார்.

பச்சிளம் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடக்கிறதே,வயது முதிர்ந்த பாட்டிகளுக்கு பாலியல் கொடுமை நடக்கிறதே,இதற்கெல்லாம் காரணம் பெண்கள் உடையா? என்ற கேள்வியை எழுப்பும் இந்த நூலின் ஆசிரியர் "மாற வேண்டியது பெண்களோ? பெண்களின் ஆடைகளோ அல்ல...ஆண்களின் பார்வையே " என்று தீர்வையும் கொடுக்கிறார்.

கொடுமைகளை எரிதழல் கொண்டு எரிக்கவேண்டும் என்னும் அறச்சீற்றத்தோடு சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆணும் பெண்ணுமாய் வாழும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது,ஏன் இத்தனை பிரச்சனைகள் என்று பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு ,பிரச்சனைகளைத் தவிர்த்து உண்மையான காதலோடு இல்லற வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளைக் காட்டுகின்ற சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.

சில கட்டுரைகளில் உளவியல் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகி அதற்கான தீர்வுகளையும் குறிப்பிடுகின்றார்.தாழ்வு மனப்பான்மை ஒருவரை,அவர் நினைப்பதை மட்டுமே செயல்படுத்த முனையும் என்பதனைக் குறிப்பிட்டு அதனால் இல்லற வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,அதனைத் தீர்ப்பதற்கான வழிகளையும் குறிப்பிடுகின்றார்.

மானுட நேயத்தை வலியுறுத்தும் இக்கட்டுரைகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. நம்மைக் கோபம் கொள்ளச்செய்கின்றன.இதற்கு என்னதான் தீர்வு என்று சிந்திக்க வைக்கின்றன.பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. பல பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக எழுதக்கூடியவராக தோழர் ந.தேன்மொழி அவர்கள் இருந்தாலும், இந்த நூல்தான் அவரின் முதல் நூல்.அந்த வகையில் ஒரு பெண்ணுரிமைப் போராளியின்,பகுத்தறிவுச்சிந்தனைவாதியின் முதல் நூல் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி.இதைப்போல இன்னும் பல நூல்களைப் படைக்கவேண்டும்.அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும்.பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
    
                                                      

                                                                                                                      தோழமையுடன்
                                                                                                                                 
வா.நேரு

Wednesday, 27 September 2023

எனைப் பார்த்து ஏளனமாகச்சிரித்தது…

 கவிஞர் ‘சமயவேலின்’

கவிதையைப் படித்த  நேரம்

எனக்கும் கூட

ஒரு பால்ய நண்பன்

நினைவில் வந்து வந்து போகின்றான்…

 

ஒன்றாம் வகுப்பு முதல்

12-ஆம் வகுப்பு வரை

உடன் படித்தவன்…

 

+1 புதிதாகச்சேர்ந்த

காந்தி நிகேதனில்

சார் என்று சொல்லக்கூடாது...

அய்யா என்றுதான் சொல்லவேண்டும்

என்பது விதி…

அவன் மனதிற்குள் அது

போகவே இல்லை…

"அய்யா என்று சொல்" என்று

அய்யா பால்ராஜ் அடித்தபோது

அடியை வாங்கிக்கொண்டே

‘இனிமேல் அய்யா என்று

சொல்லி விடுகிறேன் சார்’ என்றான்..

அடித்துக்கொண்டிருந்த அய்யாவும்

சிரித்துவிட்டார்..

 

கல்லுப்பட்டியில் நான்

தங்கிப் படித்தபோது

சளைக்காமல் எனக்காக

ஐந்து அடுக்கு டிபன் பாக்ஸில்

சோறு சுமந்தவன்

சாப்டூரிலிருந்து கல்லுப்பட்டிக்கு…

 

அவனது சிரித்த முகம்

எப்போதும் என் நினைவில்...

கருத்தாகப் படித்தான்

கல்லூரிக்குச்சென்றான்

வேலைக்குச்சென்ற சில நாட்களில்

விபத்தில் மாண்டான்..

 

ஊருக்கெல்லாம் பிரசவம்பார்த்து

உயிர்களைக் காப்பாற்றிய

அவனது தாய் நடுரோட்டில்

எனைப் பார்த்து

‘கண்ணன் போயிட்டானே சாமி’

என்று கதறிய கதறல்

என்னை விட்டுப்போக

இன்னும் மறுக்கிறது….

 

ஒன்றாம் வகுப்பிலிருந்து

பணிரெண்டாம் வகுப்புவரை

என்னுடன் படித்த நண்பன்

நவநீதகிருஷ்ணன் என்னும் கண்ணன்

ஒரு நாளும் என்னை வாடா போடா

என்று அழைத்ததில்லை..

எல்லோரும் வாடா போடா என்றழைக்க

இவன் மட்டும் ஏன் நம்மை

‘அய்யா ‘ என்று அழைக்கிறான்

என்பது  குற்ற உணர்ச்சியாய்

அன்றைக்கு உரைக்கவில்லை…

 

முடிவெட்டும் அவனது அண்ணன்

வாங்க போங்க

என்றழைத்தபோது

‘என்னடா எப்போது வந்தே

என்று கேளுங்கள் ‘என்று சொன்னபோது

முடிவெட்டுவதை நிறுத்திவிட்டு

மேலும் கீழும் எனைப் பார்த்த அவர்

‘ஏன் நான் இந்த ஊர்ல

ஒழுங்காகப் பிழைக்க வேண்டாமா?’

என்று கேட்டபோது

கிராமத்து வீதிகளில்

உயிரோடு இருக்கும் ஜாதி

பால்ய நண்பனின்

நினைவுகளையும் தாண்டி

எனைப் பார்த்து

ஏளனமாகச்சிரித்தது…

 

                  வா.நேரு

                  28.09.2023

Sunday, 24 September 2023

சிறந்த நூல் விமர்சனம் என்று படைப்பு குழுமம் அறிவிப்பு...

 

சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது. எனக்கென்று ஒரு வலைப்பூவை http://vaanehru.blogspot.com/ ஏற்படுத்திக்கொண்டபிறகு , நான் வாசிக்கும் புத்தகங்களில் மிக ஈர்ப்பாக இருக்கும் புத்தகங்கள் பற்றி புத்தக விமர்சனங்களைத் தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகின்றேன்.அப்படி ஜூன் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தைச்சார்ந்த ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள் எழுதிய பனையோலை என்னும் நாவல் பற்றி எழுதிய புத்தக விமர்சனத்தை எனது வலைத்தளத்திலும் படைப்பு முக நூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். முக நூலில் ஜூன் மாதம் நூல் விமர்சனம் பகுதியில் படைப்பு குழுமம் சிறந்த படைப்பு என்று தேர்ந்தெடுத்து அறிவித்து இருக்கின்றார்கள்.மகிழ்ச்சி.பல ஆயிரம் படைப்பாளிகளை இணைக்கும் ஒரு தளமாக படைப்பு முக நூல் தளம் இருக்கிறது. நிறையப்படைப்பாளிகளுக்கு சிறப்பு சேர்க்கும்வண்ணம் செப்டம்பர் 30 சென்னையில் நேரடியான நிகழ்ச்சியைத் திருவிழா போல படைப்பாளிகளை வைத்து நடத்துகின்றார்கள்.பாராட்டுகளும் வாழ்த்துகளும்…


 

Wednesday, 20 September 2023

நமக்கு நாமே சொல்லிப்பழகுவோம்

 

தனித்து படுத்திருக்கும்

கிழவிக்கு

நாக்கு முழுக்க கொடுக்குகள்..

 

எவரைச்சொல்கிறோம்

ஏன் சொல்கிறோம் எனும்

புரிதல் இல்லாமல்

பொக்கை வாய் திறந்து

அனலாய்க் கக்குகிறார் சொற்களை...

 

இளம் வயதில் கணவனால்

பட்ட துன்பங்களோ

முதும்வயதில் தனியாக

இருக்கும் துயரமோ

அருகில் வருபவர்களிடம்

அள்ளிக்கொட்டுகிறார் வெறுப்பை..

 

ஊதியம் பெற்று வந்தாலும்

அருகில் இருப்பவரிடம்

காட்டும் அன்பே

இந்த நேரத்து நிம்மதி என்று

யார் விளக்குவார் அவரிடம்?...

 

முதுவயது ஆகும்போது

அன்பே முதன்மை என்பதை

நமக்கு நாமே சொல்லிப்பழகுவோம்

நாமும் ஒருநாள்

அந்த நிலை எட்டும் வாய்ப்புக்கிட்டினால்

அருகில் இருப்பவரே உறவினர்...

நமக்குப் பணிவிடை செய்பவரே

நம் உறவுகள் எனும்

உணர்வினை வளர்ப்போம் .

 

                            வா.நேரு

                            20.09.2023

Saturday, 9 September 2023

ராணியே என்றாலும்...

 

 

 

கருவறைக்குள்ளே

இருந்த அர்ச்சகன்

காஞ்சிபுரம் தேவநாதன்

செய்த செயல்

நாடறியும் ஊரறியும்...

பிறப்பால் அவன் பார்ப்பான்

கருவறைக்குள் நுழைவதில்

எந்தத் தடையும் இல்லை..

.

அரசகுடும்பத்தைச்சார்ந்த

இராணி அவர்...

மத்தியப்பிரதேசம் பன்னாவின்

ராணி ஜிதேஸ்வரி...

கருவறையில் காட்டப்படும்

தீபத்தை கும்பிட முனையும்போது

அர்ச்சகரால் தள்ளிவிடப்பட்டு

கீழே விழுகிறார்...

தரதரவென இழுத்துச்செல்லப்படுகிறார்..

வழக்குப் பதிவு...

வன்மமான பதிவுகள்...

 

சனாதனம் தர்மம் அல்ல...அதர்மம்

அது எதிர்க்கப்படவேண்டியது இல்லை...

ஒழிக்கப்படவேண்டியது என

தம்பி உதயநிதி சொல்லியதற்காக

துள்ளிக்குதித்த சனாதனவாதிகளே!

இதற்கு எங்கே உங்கள் பதில்...

 

இராணி குடித்திருந்தாராம்..

ஆதலால் உள்ளே விடவில்லையாம்

பொய் சொன்னாலும்

பொருந்தச்சொல்லுங்கடா

போக்கத்த பசங்களா...

வெள்ளை உடை

உடுத்தியிருக்கிறார் ராணி..

அவர் ராணியே என்றாலும்

பெண் என்றால்

சனாதனம் கருவறைக்குள்ளே

அனுமதிக்காது...

அதுவும்

கணவனை இழந்த பெண் என்றால்

அனுமதிக்கவே அனுமதியாது...

 

21-ஆம் நூற்றாண்டிலும்

இதுதான் நிலைமை...

சந்திரனுக்கு விண்கலம்

அனுப்பி என்ன பயன்?

வீணாய்ப் போன

சனாதனத்தை கையில்

வைத்துக்கொண்டு...

https://twitter.com/Gobhiji3/status/1700143039514288199?s=20

 

ஓங்கி உரக்கச்சொல்வாம்

சனாதனம் ஒழிக!

ஒழிப்போம் சனாதனத்தை...

ஒழியட்டும் சனாதனம்..

 

                        வா.நேரு ,

                           09.09.2023.

 

 

 

 

 

 

 

Wednesday, 6 September 2023

ஸனாதானம் சாகட்டும் …

 

                 ஸனாதானம் சாகட்டும் …

ஒற்றைச் செங்கல் காட்டி

எங்கே எய்ம்ஸ்..?

எனக்கேட்ட குரல்

தமிழ்நாடு முழுக்க

எதிரொலித்தது…

 

எதிர்க்க வேண்டியதல்ல…

ஒழிக்கப்படவேண்டியது

ஸனாதானம் என்னும் குரல்

இந்தியா முழுக்க ஒலிக்கிறது…

 

ஒடுக்கப்பட்டோர் எல்லாம்

ஓரணியில் திரண்டு

சனாதனத்தின் பெயரால்

சாதியின் பெயரால்

இந்த இந்தக் கொடுமை எல்லாம்

எங்களுக்கு நிகழ்கிறது

என ஏதோ ஒரு மொழியில்

பேட்டியினைக் கொடுக்க...

சில மணி நேரங்களில்

அந்தப் பேட்டி இந்தியாவின்

அனைத்து மொழிகளிலும்

ஒளிபரப்பாகிறது…

 

பல மொழி நண்பர்கள்

அவரவர் மொழிகளில்

பாராட்டப்படும் தம்பி உதயநிதியின்

யூ டியுப்பை நமக்கு

அனுப்பி மகிழ்கின்றார்கள்…

எங்கள் வாழ்த்தை,பாராட்டை

உங்கள் மூலம் சொல்லி

மகிழ்கின்றோம் என்கிறார்கள்..

 

இந்துக்களைக் கொல்லச்சொல்கிறார்

என அநியாயமாய்ப் பொய்

பரப்பியவர்கள் அடிவயிறு கலங்குகிறது…

தமிழ்நாட்டைப் போல

பார்ப்பனர் அல்லாதோர்

ஓரணியில் திரண்டுவிடுவார்களோ

ஸனாதானம் என்பது அவாளுக்கு

அதிகாரம் தரும் ஏற்பாடு

என்பதை இந்தியா

முழுவதும் அறிந்து கொள்வார்களோ

எனப் பதறுகிறது பார்ப்பனிய ஜனதா…

 

ஸனாதானம் ஒழிக

என்னும் குரல் இந்தியா

முழுக்க ஒலிக்கட்டும்…

ஆயிரமாயிரம் ஜாதி

அடுக்குமுறை

குப்பைக்கூடைக்குள்

தூக்கி எறியப்படட்டும்..

ஸனாதானம் சாகட்டும் ...

சமத்துவம் மலரட்டும்!...

 

                              வா.நேரு,

                               06.09.2023

 

Tuesday, 5 September 2023

கட்டுகளைத் தகர்த்து கால்பந்தில் சாதிப்பீர்!....முனைவர் வா.நேரு

 உலக மகளிர் கால்பந்துப் போட்டி 2023, ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்திருக்கிறது. உலக கால்பந்து சம்மேளனம் (திமிதிகி) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. அதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா நாடும், நியூசிலாந்து நாடும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டி உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் கால்பந்துப் போட்டியின் வெற்றிக் கோப்பையை ஸ்பெயின் நாடு பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து இரசிகர்களால் கொண்டாட்டத்துடன் பார்க்கப்பட்ட இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 32 நாட்டு அணிகள் பங்கு பெற்றன. உலகம் முழுவதும் உள்ள மகளிர் கால்பந்துப் போட்டி அணிகளின் தரப்பட்டியலில் முதல் 32 இடங்களைப் பெற்ற 32 நாட்டு அணிகள் இந்தப் போட்டியில் பங்கு பெற்று விளையாடினர்.




உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைக் கண்டு இரசித்தனர். அதில் எத்தனை பேருக்கு உலகத்தின் பல நாடுகளில் பெண்கள் கால்பந்து விளையாடத் தடை இருந்தது என்பதும், மகளிர் கால்பந்துப் போட்டிகளை நடத்தக்கூடாது என்ற தடை இருந்தது என்பதும் தெரியவில்லை.

“பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், மூன்று காரியங்கள் உடனே செய்யப்படவேண்டும்.முதலில், அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். இரண்டாவது, நகைப் பேயை அவர்களிடமிருந்து விரட்ட-வேண்டும். மூன்றாவது, இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டு துண்டாக நறுக்கிவிடவேண்டும். இவ்வளவுக்கும் அடிப்படையாயிருப்பவை கல்வியும், சொத்துரிமையும்.இவ்விரண்டையும் பெற்ற பெண்கள் அவர்களுக்குப் பிரியமான உத்தியோகங்களை ஏற்பதற்குத் தடையில்லாமல் செய்யவேண்டும். இந்த உதவியைத்தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் செய்யவேண்டும். பெண்கள் எந்த வேலைக்காவது தகுதியற்றவர்கள் என்று கூறப்படுவதை உலக அனுபவமுடைய எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றார் தந்தை பெரியார்.. பெண்கள் கால்பந்து விளையாடத் தகுதி அற்றவர்கள் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் இருந்த பல ஆண்களிடம் சென்ற நூற்றாண்டில் இருந்திருக்கிறது.

பிபா(Federation of International Football Association (FIFA) என்னும் அமைப்புதான் உலகக் கால்பந்து போட்டிகளை ஆடவர்க்கும், மகளிர்க்கும் நடத்துகிறது 1904-இல் தொடங்கப்பட்டது இந்த ஃபிஃபா அமைப்பு ஆகும். 1930 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த அமைப்பு ஆடவர்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை உருகுவே நாட்டில் நடத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடவர்க்கான உலகக் கால்பந்துப் போட்டியை இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது, நடத்துகிறது.

ஆனால் 1991-இல் தான் முதன்முதலில் மகளிர்க்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. ஏனெனில், .20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் பெண்கள் கால்பந்து விளையாடத் தடை இருந்திருக்கிறது என்பதுவும், உலக மகளிர் கால்பந்துப் போட்டியை நடத்தமாட்டோம் என்று, ஃபிஃபா அமைப்பு அறிவித்திருந்தது என்பதுவும் வரலாறு.



பெல்ஜியம் நாடு மருத்துவக் காரணங்-களுக்காக பெண்கள் கால்பந்து விளையாடக்-கூடாது என்று 1920-ஆம் ஆண்டு தடை விதித்திருக்கிறது. 1970-களின் பிற்பகுதியில்தான் தடை நீக்கப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் மகளிர் கால்பந்து விளையாடுவதற்கு எதிரான மிகப்பெரியப் பிரச்சாரமே நடைபெற்றிருக்கிறது.ஏற்கனவே இருந்த மகளிர் கால்பந்து அணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு 1945 முதல் 1978வரை மகளிர் கால்பந்து விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்திருக்கிறது.’ பெண்களின் இயல்பு நிலைக்கு மாறான விளையாட்டு கால்பந்து விளையாட்டு’ என பிரேசில் நாட்டு அரசாங்கமே அந்தக் காலகட்டத்தில் அறிவித்து இருந்திருக்கிறது.

1919 ஆம் ஆண்டிலேயே பிரஞ்சு நாட்டின் கால்பந்துக் கூட்டமைப்பு பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து இருந்திருக்கிறார்கள். இந்தத் தடை 1970 வரை இருந்திருக்கிறது.

ஜெர்மன் நாட்டிலும் மகளிர் கால்பந்து போட்டியைத் தடை செய்திருக்கிறார்கள். மேற்கு ஜெர்மனியில், ஜெர்மன் கால்பந்து சங்கம் 1955இல் பெண்கள் கால்பந்துப் போட்டிக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இந்தத் தடையை நியாயப்படுத்த கால்பந்து விளையாட்டு மிகக் கடினமானது என்றும், அதனால் பெண்கள் கருவுறுதல் மற்றும் ஆரோக்கியத்தை இது பாதிக்கும் என்றும், பந்துக்கான சண்டையில் பெண்களுக்கே உரித்தான கருணை மறைந்துவிடும் என்றும் சொல்லி தடைவிதித்தார்களாம். வேடிக்கையாக இருக்கிறது!

இன்னும் பல நாடுகள் மகளிர் கால்பந்து விளையாடுவதற்கும் ,மகளிர் கால்பந்து போட்டி நடத்துவதற்கும் தடை விதித்திருக்கின்றன. ஏன், இந்த ஆண்டு மகளிர் கால்பந்து போட்டியில் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் நாட்டிலேயே தடை இருந்திருக்கிறது. இன்றைக்கும் ஆப்கானிஸ்தான் போன்ற மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் நாடுகளில் தடை இருக்கிறது. ஆனால் இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி மகளிர் கால்பந்து விளையாட்டுகளில் மகளிர் ‘புகுந்து விளையாடுகிறார்கள்’, சாதனை புரிகிறார்கள்; சரித்திரம் படைக்கிறார்கள்.

இந்த ஆண்டு (2023) நடந்த மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளவே இல்லை. இந்திய அணி இந்தத் தர வரிசையில் 60-ஆம் இடத்தில் இருப்பதால் மகளிர் உலகக் கோப்பை விளையாட்டில் விளையாட அனுமதியே கிடைக்கவில்லை.

உலக மக்கள் தொகையில் சீன நாட்டினைப் பின் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறிக்கொண்டு இருக்கும் நாடு இந்தியா.இதன் மக்கள் தொகை 140 கோடிக்கு மேல். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்றைத் தாண்டி உள்ளே போகமுடியாத நிலை இருப்பது வெட்கப்பட வைக்கிறது. இந்திய மகளிர் அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வது எல்லாம் கனவாகத்தான் இருக்குமா? நம்முடைய பெண்கள் எந்த வகையில் குறைந்தவர்கள், ஏன் முடியவில்லை என்னும் கேள்வி எழுகிறது.

எதிர்காலத்தில் மகளிர் உலகக் கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி வெல்லும் என்பதற்கான நம்பிக்கையை பஞ்சாப் மாநிலமும்,தமிழ்நாடும் நமக்கு அளிக்கின்றன. பிபிசி நிறுவனம் பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்து ரூர்தக்கா கிராமத்து இளம்பெண்கள், கால்பந்து போட்டிகளில் அசத்திவரும் பெண்களைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர். தேசிய, சர்வதேச அளவியான பல போட்டிகளில் பங்குபெறும் பல கால்பந்து வீராங்கனைகள் இருக்கும் ஊராக இந்த ஊர் இருப்பதை அந்தப் பேட்டி சுட்டிக்காட்டுகிறது.

அதில் ஒரு வீராங்கனை(கரீனா) தான் 11 வயதில் தற்செயலாக கால்பந்து விளையாட ஆரம்பித்ததையும்,ஒரு பெண்ணாக இந்திய சமூகத்தில் கால்பந்து விளையாட இருக்கும் பல்வேறு தடைகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.அதில் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று தங்களைச்சுற்றி இருக்கும் மனிதர்களும் குடும்பமும் தடை போட்டதை _ தடை போடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.கால்பந்து மைதானத்திற்கும் தனது வீட்டிற்கும் இருக்கும் தூரத்தைச் சுட்டிக் காட்டி சிலர் ‘இவள் தனியாகப் போகிறாள், தாமதமாக வருகிறாள் என்றும், சில நேரங்களில் சில ஆண்கள் மிக இழிவாகவும் பேசுவார்கள்’’ என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார். இரண்டு தேசியப்போட்டிகளில் கலந்துகொண்ட பின்புதான் குடும்பத்தினர் தடை சொல்லவில்லை,கால்பந்து விளையாடுவது நல்லது என்று, நினைக்கிறார்கள் என்றும், நான் விளையாடப் போவதால் என் பகுதியில் இருக்கும் இளம்பெண்களும் விளையாட வருகின்றார்கள், நமது அக்கா விளையாடுகின்றார், நாமும் விளையாடலாம் என்று நினைக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு வீராங்கனையின்(சந்தீப் கவுர்) பேட்டி இந்திய சமூகம் பெண்களைப் பொறுத்த அளவில் இன்னும் எவ்வளவு பழமையில் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. நீ விளையாடப்-போகவேண்டாம் என்று குடும்பத்தினரே தடுத்ததையும், +2 முடித்தவுடன் தனக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் நினைத்து இருந்ததைச் சொல்லி சிரித்த அவள், “இந்த விளையாட்டு விளையாட ஆரம்பித்த பின் தனக்குத் தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது’’ எனக்கூறியஅவரின் பேட்டி பல செய்திகளைச் சொல்கிறது..

கால்பந்தாட்ட மைதானத்தில் மட்டு-மல்ல, சமூகத்திலும் தங்களுக்கு கால்பந்து விளையாடுவதற்கு எத்தகைய அறைகூவல்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு உள்ளார்கள். அவர்களின் பேட்டி, வறுமையையும் பிணியையும் தாண்டி ,கால்பந்து விளையாட்டில் தாங்கள் சாதிப்பதையும் அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.(கால்பந்தாட்டத்தில் அசத்தும் பஞ்சாப் கிராமத்து இளம்பெண்கள். பி.பி.சி, ஆகஸ்ட் 22,2023- ஒலி வடிவம்).

அதைபோல தமிழ்நாட்டின் மகளிரும் கால்பந்து விளையாட்டில் அசத்துகின்றனர்.இந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது. அது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. தமிழ்நாடு அணியும் ,அரியானா அணியும் மோதிய இறுதி ஆட்டத்தில் தமிழ்நாட்டு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பிர்யதர்ஷினி, இந்துமதி கார்த்தீசன் ஆகியோர் அடித்த இரண்டு கோல்களால் 2-க்கு 1 என்ற கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடைசியாக 2017-18ல் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளனர் என்று பத்திரிகைகள் பாராட்டுகின்றன.

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையோடு வந்தவர்களை தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாராட்டி வரவேற்று இருக்கிறார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ,தமிழ்நாடு கால்பந்து அணியைப் பாராட்டி ரூபாய் 60 இலட்சம் பரிசுத்தொகை அளித்துப் பாராட்டி இருக்கிறார்.நம் தமிழ் நாட்டு கால்பந்து அணியை உளமாரவாழ்த்துகிறோம்.

பெரியாரியல் நோக்கில் பார்க்கும்போது, மகளிர் கால்பந்துப் போட்டிக்கு இந்திய ஒன்றிய அரசு நிறைய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. நம்மைப் பொறுத்த அளவில் மகளிர் கால்பந்து என்பது ‘ஆண்மை’ என்னும் பதம் அழிவதற்கான வழிகளில் ஒன்று. எனவே தனித்தன்மையாக முத்திரை பதித்துவரும் திராவிட மாடல் அரசு ,மகளிர் கால்பந்து விளையாட்டிற்கு இன்னும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மாவட்டங்கள் தோறும், பள்ளிகள் தோறும் மகளிர் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஊக்கப்படுத்தவேண்டும் ♦

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் 1-15,2023