Saturday, 17 February 2024

பழனியில் 'பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? 'நூல் ஆய்வுக் கூட்டம்…

 

நிகழ்வும் நினைப்பும் 2024-2

 பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? நூல் ஆய்வுக் கூட்டம்…

 

 நேற்று(16.02.2024)  பழனியில் இருக்கும், என்னோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்த  தொழிற்சங்கத்  தோழர்  பழனிக்குமார் அவர்கள் இனிய நண்பர்.பழகுவதில் நகைச்சுவையும் உற்சாகமுமாய்ப் பழகும் தோழர்.30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிந்தவர்.அவரது இணையர் பஞ்சவர்ணம் அவர்களும் எங்கள் துறை சார்ந்தவர்.எங்களைப் போலவே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சில நாட்களுக்கு முன்னால், தான்  பழனிக்கிளையின்  தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருப்பதாகவும்,  தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதிய பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? என்ற நூலின் விமர்சனம்,சிறப்புரையாகத் தாங்கள் வந்து பழனியில் பேசவேண்டும் என்று கேட்டிருந்தார். சரி என்று சொல்லித் தயார் செய்திருந்தேன்.

 

 15.02.2024 அன்று ஓர் இறப்பு செய்தி.எனது இணையரின் அக்கா திருமதி சந்திரா முருகையா அவர்கள்,மிக அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவர். செங்கோட்டையில் இறந்து விட்டார் என்று தகவல் வர, நானும் எனது இணையரும் 15-ந்தேதி மாலை கிளம்பி செங்கோட்டை சென்றோம்.அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு ,துக்கம் விசாரித்துவிட்டு அங்கேயே எனது இணையரை இருக்கச்சொல்லிவிட்டு அதிகாலையில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு வந்து பின்பு தயாராகிப் பழனிக்கு கிளம்பினேன்.நிகழ்ச்சிக்கு எப்படியும் சென்று விடவேண்டும்,தேதியைக் கொடுத்துவிட்டு வரமுடியவில்லை என்று சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.

 

  நேற்று மதியம் ஒரு இரண்டு மணி அளவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நானும் தோழர் சோழ.நாகராஜன் அவர்களும்  இணைந்து பேருந்தில் பழனிக்குக் கிளம்பினோம் மிக எளிமையான தோழராக ஆனால் அதே நேரத்தில் தந்தை பெரியாரை மார்க்சியத்தை மிக நன்றாகப் புரிந்து இருக்கும் ஒரு தோழராக எனக்கு இவர் தென்பட்டார் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை என்னோடு பேருந்தில் பகிர்ந்து கொண்டு வந்தார் தன்னுடைய தந்தை வங்கிப் பணியாளராகப் பணியாற்றியது, வங்கித் தொழிற்சங்கத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தது இயல்பான ஒரு தொழிற்சங்கத் தலைவராக தன்னுடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுத்த ஜனநாயகம் அதன் விளைவாக வீட்டில் கிடைத்த ஒரு சுதந்திரம் என்பதைப் பற்றியும் தன்னுடைய அம்மா எவ்வளவு தூரம் வாசிக்கக் கூடியவராக இருந்தார் என்பதையும் கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் உடனடியாக வாசிக்கக் கூடிய ஒரு அம்மாவாக அவர் இருந்தார் என்பதைத் தோழர்  பகிர்ந்து கொண்ட போது  நெகிழ்வாக இருந்தது. என்னுடைய தாயார் திருமதி முத்துகிருஷ்ணம்மாள்  அவர்களும் கூட அப்படித்தான் என்று நானும் என்னுடைய நினைவுகளைச் சொன்னேன். ஆசிரியர் பணி,மாடுகளைப் பார்ப்பது,பிள்ளைகளுக்குச் சோறு ஆக்குவது, பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய பணி என்று தொடர்ச்சியாக வேலை இருந்த நேரத்திலும் கிடைத்த சிறுசிறு மணித் துளிகளை வாசிப்பதற்காக எனது அம்மா செலவிட்டதுதான் எனக்கு வாசிப்பின் மீதான ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் என்ற எனது கருத்தையும் சொன்னேன்


 

அதற்குப் பிறகு தோழர் சோழ. நாகராஜன் அவர்கள்  தன்னுடைய தந்தையார் ஊர் ஊராக வங்கிப் பணிக்காக மாற்றலாகி கொண்டே போனதையும், தான் பழகிய நண்பர்கள் எல்லாம் விட்டு பிரிந்து பிரிந்து போனதையும் எண்ணி அழுத நேரங்களை எல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார் இரண்டு வருடத்திற்கு ஒரு மாறுதல் பழகிய நண்பர்கள் பிரிவு ,மீண்டும் புதிய நண்பர்கள் என்று மாறிக்கொண்டே இருந்தேன் இந்த வாழ்க்கை என்பது எனக்கு மிகத் துன்பமாக இருந்தது அதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது அப்பாவுக்கு மாறுதல் வந்த போது என்னைத் திருச்சியிலேயே விடுதியில் சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன் என்று சொன்னார். உடனே வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் விடுதி  என்றாலே ஏதோ ஒரு ஜெயில் என்பதைப் போலப் பார்த்து வேண்டாம் என்று சொன்னதையும் தான் பிடிவாதமாக இல்லை நான் திருச்சியிலேயே படிக்கிறேன் என்று பள்ளியின் விடுதியில் தங்கிய அனுபவங்களையும் சொன்னார் பள்ளியின் விடுதியில் நடந்த பல சம்பவங்களை மிகவும் சுவைபட … தான் அசைவம் சாப்பிடப் பழகிய தருணங்களை எல்லாம் நினைவில் கொண்டு வந்து சொன்னார்.

 

ஒரு பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தான் பூணூல் போடாமல், இருந்ததை,  தன்னுடைய தந்தையார் இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் வற்புறுத்தலினால் அணிந்து விட்டு பின்பு  அதைக் கழற்றி எரிந்ததையும் சொல்லிக் கொண்டே வந்தார். அதைப் போல எழுத ஆரம்பித்தது, 1986ல்  தனது முதல் புத்தகம் வெளிவந்தது என்று சொல்லிவிட்டுத் திருப்பங்குன்றத்தில் இருந்த தமிழ்க்கூத்தன் அவர்களைத்  தெரியுமா என்று கேட்டார் மிக நன்றாகத்  தெரியும் என்பதையும் ,தமிழ்க் கூத்தன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பில் இருந்ததையும், அவர் இறப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் திராவிடர் கழகத்தில்  இணைந்து பணியாற்றிய தோழர் அவர்   என்பதையும் சொன்னேன். தமிழ்க்கூத்தன் அவர்கள் சொன்னது இப்போது  எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பொதுவுடமை இயக்கங்களில் மாறி மாறி இருந்ததற்குப் பதிலாகத் திராவிடர் கழகத்திலேயே இருந்து பணியாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று என்னிடம் நேரடியாக ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது .அது மட்டுமல்ல மிகத்  தீவிரமான ஒரு கொள்கைவாதி அவர்.மிக எளிமையானவர் .தோழர் தமிழ்க்கூத்தன்  அவர்கள்  ஒரு முறை இரயிலில் பதிவுசெய்யப்படாத பெட்டியில்   வந்தேன் என்று சொன்னார். “ஒரே கூட்டமாக இருக்குமே ,எப்படி வந்தீர்கள்? “ என்று நான் கேட்டேன். “இல்லை தோழரே, நான் இரயிலில் எப்போதும் பதிவு செய்யப்படாத (Unreserved)  பெட்டியில்தான் வருவேன் “ என்று சொன்னார் வியப்பாக இருந்தது மேலும் “ நான் எப்பொழுதும் ரயில் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து எல்லாம் செய்து கொண்டு போவதில்லை மக்களோடு மக்களாக அந்தப் பதிவு செய்யப்படாத வண்டியில் சென்று தான் எனக்குப் பழக்கம்” என்று தமிழ் கூத்தன் அவர்கள் சொன்னது என் நினைவுக்கு வருகிறது திருப்பரங்குன்றம் அண்ணன் மறைந்த திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அழகர்சாமி அவர்கள் மூலமாக எனக்கு அறிமுகமானவர் .திருக்குறள் பற்றிக் குறிப்பாகப் பரிமேழகர் உரையைப் பற்றி காட்டமாக,மிக விளக்கமாகப் புத்தகங்கள் போட்டிருக்கிறார் என்று அவரைப் பற்றிச்சொன்னேன்.

 

தோழர் சோழ. நாகராசன் அவர்கள், நான்,இன்றைய பாரளுமன்ற உறுப்பினர்  தோழர் சு.வெங்கடேசன் எல்லாம் அவரால் இலக்கியரீதியாக உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டு தோழர் தமிழ்க்கூத்தன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். திருப்பரங்குன்றத்தில் ஒரு மிகப்பெரிய குழு இருந்தது என்பதையும் இலக்கிய ரீதியாக அந்தத்  தோழர்கள் எழுதியது, அதை அவர்கள் எழுதக்கூடிய கதைகளை, கவிதைகளை எல்லாம் வாசிப்பதற்கான ஒரு தளமாக திருப்பரங்குன்றத்தை மாற்றியது என்று தோழர் தமிழ்க்கூத்தனின் செயல்பாடு என்பது மிகத் தொடர்ச்சியாக இருந்தது என்று தோழர் சோழ.நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.



 

 பழனியிலே இறங்கி தோழர் பழனிக்குமார் அவர்களையும் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் பாரதி புத்தகலாயத்தில் இருந்த தோழர்களையும் சந்தித்துப்பேசினோம். அங்கிருந்து பேராசிரியர் மோகனா அவர்களை அவருடைய இல்லத்தில் சென்று சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது

படத்தில் தோழர் சோழ.நாகராஜன்,நான் ,தோழர்.பேரா.மோகனா அவர்கள்.


 

பேராசிரியர் மோகனா அவர்கள் தான் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கொடுத்தார்கள் அதில் ஒன்று அவருடைய தன் வரலாறு. கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று எடுத்து வைத்திருக்கிறேன் விரைவில் படிக்க வேண்டும்.135 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்றார்.வியப்பாக இருந்தது.

 

அங்கிருந்து கூட்டம் நடக்கும் மண்டபத்திற்குச்சென்றொம். திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் அருண்குமார் அவர்களையும்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைச்செயலாளர் தோழர் தமிழ் ஓவியா அவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு அய்யா பேரா. இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் பேரா.அயோத்தி அவர்களையும் அவரது இணையர் பேரா.வாசுகி அவர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு நிறையப் புது முகங்கள், அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் என்று   இந்தக் கூட்டம் அமைந்தது.

 

‘பெரியார் பிராமணர்களின் எதிரியா? ‘ என்னும் இந்தப் புத்தகத்தை பற்றி 40,45 நிமிடம் நான் பேசினேன்.மிக அருமையான புத்தகம்.ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம்.தொடர்நது  தோழர் சோழ. நாகராஜன் அவர்கள் ஏற்புரையாக ஒரு 15 நிமிடம் உரையாற்றினார்.(முழுமையாக நூல் விமர்சனம் எனது உரையோடு பதிவிடுகிறேன் விரைவில்). கூட்டத்தை முடித்து  அதற்குப் பிறகு இரவு உணவு முடித்துவிட்டுப் பழனியில்  இருந்து பத்தரை மணிக்கு புறப்பட்டு வீட்டுக்கு வந்தபொழுது இரவு ஒன்று முப்பது. செங்கோட்டையில் இருந்து திரும்பி,தூக்கத்தில் இருந்த எனது இணையரை எழுப்பி வீட்டைத் திறக்கச்சொல்லி பின்பு உறங்கச்சென்றேன். இரண்டு நாளும் தொடர்ச்சியாக பேருந்தில் மதுரை-செங்கோட்டை,செங்கோட்டை-மதுரை,மதுரை-பழனி,பழனி-மதுரை என்று  இரவு வந்த பொழுது உடல் களைப்பாக இருந்தாலும் புதிய தோழர்களை சந்தித்தது, புதிய புத்தகங்களைப் பெற்றுக் கொண்டது என்று உற்சாகமாகத்தான் அமைந்தது.



 

பேருந்தில் வரும்போதும்  நானும்  தோழர் சோழ.நாகராஜன்  அவர்களும் உரையாடிக் கொண்டே வந்தோம்.  பல்வேறு தகவல்களை எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவருடைய மகனுக்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணம், அது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றி எல்லாம் மிகச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தார். நான் சொன்னேன்,” தோழர் நீங்கள் என்னிடம் சொன்ன சில தகவல்களே மிகச் சிறப்பாக இருக்கிறது .ஏன் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பங்களை இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கக்கூடாது ?”  என்று. ஏற்கனவே மற்ற தலைப்புகளில் 7 புத்தகங்கள் வந்திருக்கிறது ,எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார்.

 

சுய ஜாதிப் பற்றை உதறவுதே ஒரு மேன்மையான நிலை. சுய ஜாதிகள் மற்றவர்களுக்கு செய்த,செய்கிற கொடுமைகளைச்சொல்வது,எழுத்தில் கொண்டு வருவது இன்னும் மேன்மையான நிலை.அப்படித்தான் இந்த நூலைத்  தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்.தோழர் அருள்மொழி அவர்கள், தன்னுடைய அணிந்துரையில் மிகச்சிறப்பாக இந்த நூலில் அதைத்தான் எழுதியிருக்கிறார். இன்னும் நிறையப் புத்தகங்களைப் படைப்பார் என்று நினைக்கிறேன் நல்ல படைப்பாளி. தந்தை பெரியாரை ஆழமாகப் புரிந்து கொண்டு ,தந்தை பெரியாரைப் பார்ப்பனர்களும்,மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் மிகச்சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார்,தன்னுடைய சொந்த வாழ்வில்  மகனுக்கும்,மகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை  நடத்தி/நடத்த இருக்கிறார்.

 ‘பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’ இந்தப் புத்தகத்தை இன்னும் வாங்கிப் படிக்கவில்லையா? வாங்கிப்  படியுங்கள்.வாங்கிப் படித்து விட்டீர்களா? இந்தப் புத்தகத்தைப்  பற்றிப் பேசுங்கள்,எழுதுங்கள்.

 

Saturday, 10 February 2024

நிகழ்வும் நினைப்பும்-2024 -1

 

 நிகழ்வும் நினைப்பும்-2024 -1

நேற்று வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்.மகள் சொ.நே.அறிவுமதி  

திருநெல்வேலி தனித் தமிழ் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட பேரா.ஆறு.அழகப்பன் அவர்களின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். கட்டுரைப் போட்டி,பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசளிப்பு விழா நேற்று((10.02.2024) பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நானும்,என் இணையர் சொர்ணமும், என மகள் சொ.நே.அறிவுமதியோடு கலந்து கொண்டோம்.பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் இருக்கும் என் இணையரின் தங்கை பிரியா பெருமாள்,அவரது இணையர் தம்பி பெருமாள்,அவர்களது மகள் சுவேதா,தம்பி பெருமாளின் அப்பா தொண்டர் ஜவஹர் என உறவுகளும் கலந்து கொண்ட விழாவாக இந்த விழா அமைந்தது.

1993-ஆம் நடந்த எங்கள் திருமணத்தில் எனது அருகில்  திரு.பாப்பையா சார் அவர்கள்..அவரோடு கோட்டப்பொறியாளர்கள் திரு.அய்யனார்,திரு.வேலப்ப தேசிகர் அவர்கள்.இருவருக்கும் நடுவில் இருக்கும் தோழர் பெயர் மறந்துவிட்டது.


அறிவுமதியின் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரிக்கு வெள்ளிச்சுழற்கோப்பையும்,அறிவுமதிக்கு ஒரு பவுன் தங்கத்தில் பதக்கமும் அளித்துப் பாராட்டினார்கள்.நிகழ்வில் கலந்து கொண்டபோது இனிய அதிர்ச்சியாக எங்களது தொலைத்தொடர்புத்துறையில் மதுரையில் கோட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற திரு.பாப்பையா சார் அவர்கள் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ,அவர் காலத்தில் நான் மனமகிழ் மன்றப் பொறுப்பாளராக இருந்து நடத்திய இலக்கியப்போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டு அதில் இணைந்து பணியாற்றினோம் என்றார். ஆமாம்,1992-1994 காலக் கட்டம்,மதுரை கீழமாசி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட சுவைமிகுந்த அனுபங்கள் நினைவுக்கு வந்தன.அவர்தான் இந்த வருடம் புரவலர் .ஏறத்தாழ ரூ 60000  நன்கொடையாக இந்தத் தங்கப்பதக்கத்திற்கும் ,பரிசுகளுக்கும் அவர் கொடுத்திருக்கிறார் என வரவேற்புரையில்  குறிப்பிட்டார்கள்.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எனக்குத் திருமணம் நடைபெற்றபொழுது,வந்து வாழ்த்தி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர் திரு.பாப்பையா சார் அவர்கள்.எனது திருமணப்பத்திரிக்கையை அவரிடம் கொடுத்தபொழுது,என்னிடம் பெற்றுக்கொண்டு அவர் பாராட்டியது எல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.அவரிடம் என் மகள் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்த்து.அவரும் உரையில் பாராட்டி மகிழ்ந்தார்.

எனக்கும் மகளுக்கும் நடுவில் திரு.பாப்பையா சார் அவர்கள்.

எங்களோடு நண்பர் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் லீ.சுரேசு அவர்களும் கலந்து கொண்டார்.அய்யா தமிழ் அறிஞர் பேரா.வளன் அரசு அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள்.அய்யா ஆறு.அழகப்பன் அவர்களைப் பற்றிய பல்வேறு சிறப்புகளைக் குறிப்பிட்டார்கள்.உண்மையிலேயே மனதிற்கு மிக இன்பம் பயத்த நிகழ்வு.தொடர்ச்சியாக 1937-ல் இருந்த இந்தப் போட்டிகளும் தங்கப்பதக்கம் அளிக்கும் பரிசுகளும் தொடர்கின்றன என்று குறிப்பிட்டார்கள்.இதில் வெற்றி பெற்றவர்கள் வலம்புரி ஜான்,இளம்பிறை மணிமாறன் போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் பேரா.யா.மணிகண்டன் போன்ற கட்டுரையாளர்கள் எல்லாம் பல்வேறு ஊர்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்று தனது உரையில் நன்றி உரையாற்றிய முனைவர் திருக்குறள் இரா.முருகன் அவர்கள் குறிப்பிட்டார்.வரவேற்புரையாற்றிய  நல்லாசிரியர் திரு.க.ஞா.சாண்பீற்றர் அவர்கள்         இந்தப்போட்டிகளின் பல்வேறு சிறப்புகளைப் பற்றியும் அய்யா வளன் அரசு அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.ஏற்கனவே கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரைப் போட்டியில் மகள் அறிவுமதி 2020-ஆம் ஆண்டுக் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கினார்.இது இரண்டாவது முறை என்றாலும் ‘தன் மகனை/ மகளைச் சான்றோர் ‘ எனக் கேட்டு மகிழ்வது இனிது,இனிதிலும் இனிதாய் இனித்த்து.



தமிழில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் ,இதைப்போன்ற ஆய்வுக்கட்டுரைப் போட்டிகள்,பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு எங்கள் மகள் அறிவுமதி வெற்றிப் பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் அறிவுமதி படிக்கும் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி.அதன் தமிழ்த்துறைத் தலைவர் அம்மா பேரா.கவிதாராணி அவர்களும் அத்துறைப் பேராசிரியர்களும் மிகச்சரியாக அறிவுமதிக்கு வழி காட்டுகிறார்கள்.பயிற்சி கொடுக்கிறார்கள்.ஊக்கப்படுத்துகிறார்கள்.இன்னொரு பெற்றோராய் அவர்கள் காட்டும் அன்பும் ஊக்குவிப்பும் அறிவுமதிக்கு மிகப்பெரும் உற்சாகப்பானம்.அந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கும் தமிழ்த்துறைக்கும்,அதன் தலைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் இந்த நேரத்தில்…

அறிவுமதி,தன்னுடைய அம்மாவைப் பெற்ற பாட்டி,திருமதி கமலவேணி சங்கரலிங்கம் அவர்களிடம்  தான் பெற்ற கோப்பையை,பதக்கத்தைக் காட்டி மகிழ்ந்த நேரம்.

Sunday, 4 February 2024

தமிழ்நாடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்– முனைவர் வா.நேரு


தமிழ்நாடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்

                                                 – முனைவர் வா.நேரு

ஆர்வம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை. ஆர்வம் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றது. ஆர்வம் தான் புதிய புதிய பாதைகளைக் காட்டுகிறது. ஆர்வத்தின் அடிப்படையில்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஆர்வம், திராவிட மாடல் அரசின் ஆர்வம் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. இருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து அனைவரையும் உயர்த்துவது என்னும் உயர்ந்த நோக்கம் கொண்டது.

புத்தொழில் முனையும் (ஸ்டார்ட் அப்) செயல்பாட்டுத் திறனில் சிறந்த மாநிலங்கள் அய்ந்தில் ஒரு மாநிலமாகத் தமிழ்நாட்டை இந்திய ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரவரிசையை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் வளர்ச்சி நிலையைப் பாராட்டி இருக்கிறது ஒன்றிய அரசு. இந்தத் தரவரிசை 2018 பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தரவரிசையில் கீழ்நிலையில் இருந்த தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் வளர்ச்சி 2021 – புதிய அமைச்சரவை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்தபிறகு வளர்ச்சி பெற்று, இப்போது இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.




ஜாதி ஒழிப்பும்,பெண்ணடிமை ஒழிப்பும்தான் தந்தை பெரியாரின் இரு கண்களான கொள்கைகள். பெண்கள் மற்றும், பட்டியலின ,பழங்குடி வகுப்பினைச் சார்ந்தவர்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட் அப்- நிறுவனங்களுக்குச் சிறப்பான பங்களிப்பைத் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகச் செய்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது நிறுவனங்களுக்கு ஆதரவு,நிதி ஆதரவு அளித்தல், செயல்படுத்துபவர்களின் திறனை வளர்ப்பது என்னும் மூன்று செயல்பாடுகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் மிசன்(Tamil Nadu Start up and Innovation Mission) அதிகப் பட்ச மதிப்பான 100 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்றும் ஒன்றிய அரசின் சான்றிதழ் குறிப்பிடுகிறது. உண்மை வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசிற்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஸ்டார்ட் அப் என்றால் என்ன? 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல வசதிகள் அறிவியலால் இப்போது உலகத்தில் ஏற்பட்டுள்ளன.செயற்கை நுண்ணறிவு, இணையம், இணைய வழி சூம் போன்ற பல செயல்பாட்டுத் தளங்கள், இயந்திர மனிதர்கள் எனப்படும் ரோபோட்டிக்ஸ் போன்ற பல கண்டுபிடிப்புகள் உலகத்தின் போக்கை மாற்றிப்போட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தித் தொழில்கள் ஆரம்பிப்பதை ஸ்டார்ட் அப் என்று சொல்கிறார்கள்.

இன்று நாம் பயன்படுத்தும் பல கணினிச் செயலிகள் ஸ்டார்ட் அப்-களாக ஆரம்பிக்கப்பட்டவையே.உலகத்தில் உள்ள அத்தனை தகவல்களையும் ஓர் இடத்தில் இருந்துகொண்டு பெற முடியுமா என்ற எண்ணத்தின் விளைவும், அந்த ஆர்வமுமே இன்றைக்குக் கூகுள் என்னும் ஜீபூம்பாவை நமக்கு அளித்துள்ளது. எந்தத் தகவலைக் கேட்டாலும் உடனே கிடைக்கிறது. பறவையைக் கண்ட மனிதன் பறப்பதற்காக ஓர் இயந்திரத்தைச் சிந்தித்து வடிவமைத்து நமக்கு அளித்தான். அந்த விமானம் மனிதர்கள் இன்று உலகம் முழுவதும் பறப்பதற்கு உதவுகிறது. அதைப்போல ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய நோக்கு ஒரு மனிதனுக்குத் தோன்றினால் அதனை வடிவமைப்பதற்கு இன்றைக்கு இருக்கிற அதி நவீன தொழில் நுட்பம் உதவுகிறது. அந்தத் தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது,அதற்கு எப்படிப்பட்ட அணுகுமுறை வேண்டும்? சின்னச்சின்ன யோசனைகளைக் கூட எப்படிப் பெரிய பெரிய முதலீடாக மாற்றுவது, மனதில் தோன்றிய ஒரு புதிய தொழில் ஆரம்பித்தால் அதனை உலக அளவில் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதற்கு வழிகாட்டும் அரசாகத் தமிழ்நாடு அரசு மாறி இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.

வாய்ப்பு உள்ளவர்கள் https://startuptn.in/about/ என்னும் இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். பல செய்திகள், விளக்கங்கள் இந்த ஸ்டார்ட் அப் என்பதைப் பற்றி உள்ளன. இன்றைக்குத் தமிழ்நாட்டின் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கு மேல்.இந்தக் கல்வியை,மனித வளத்தைத் தொழில் வளமாக மாற்றுவதற்கான திட்டமே இந்த ஸ்டார்ட் அப் திட்டம் எனலாம்.

ஒரு புதிய தொழில் திட்டத்தைத் தொடங்கவேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்தி ஒரு புதிய பங்களிப்பைக் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறபோது, அந்தத் தொழிலை ஏற்கனவே செய்து கொண்டு இருப்பவர்களின் அனுபவம் தேவைப்படுகிறது.கிராமத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள், ‘பலசரக்குக் கடை வைக்கவேண்டுமானால், சில ஆண்டுகள் பலசரக்குக் கடையில் வேலையாளாக இரு ‘ என்று.இன்றைக்கு அந்த அவசியம் இல்லாத அளவிற்குப் பலர் தங்கள் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள்.

அவர்கள் வழிகாட்டிகள்(Mentor) என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி முன்வருபவர்களின் பட்டியல் தனியாக இந்த இணையதளத்தில் இருக்கிறது.அவர்களின் அனுபவப் பதிவும் எழுத்தாகவும் குரலாகவும் இருக்கிறது. மற்றும் இணையவழியாகச் சந்தித்துத் தங்கள் கேள்விகளைக் கேட்கவும், அய்யங்களைத் தீர்த்துக்கொள்ளவும் இந்த அமைப்பே வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்கள்.

பல குடும்பங்கள் புதிதாகத் தொழில் தொடங்க தன் குடும்பத்து உறுப்பினர்களை ஊக்குவிப்பதில்லை.தொழில் தொடங்குதல் என்றாலே ஒரு தயக்கம் இருக்கிறது. ஒரு தொழிலைத் தொடங்கிச் செய்து கொண்டிருப்பவர்களே தங்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ தொழிலுக்குள் உள்ளே வருவதற்கு ஊக்குவிக்கிறார்கள்.இந்த ஸ்டார்ட் அப் அமைப்பு ‘தொழில் முனைவோர்களுக்குச் சமூக ஆதரவை விரிவாக்குதல் என்னும் நோக்கத்தையும் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்..

புதிய தொழில் நுட்பங்கள் ஓர் உலகலாவிய அணுகுமுறையை அளிக்கிறது. இணையத்தின் வழியாக எளிதாக நாம் இன்று வெளி நாட்டில் இருப்பவர்களோடு பேச முடிகிறது. உங்கள் ஊரில் பொருட்களின் விலை என்ன, இங்கு உள்ள ரூபாய்க்கு அங்கு எவ்வளவு மதிப்பு என்று இயல்பாகப் பலரும் பேசுவதைக் கேட்க முடிகிறது.வெளி நாட்டில் வாழும் மனிதர்களுக்கு என்ன தேவை என்பதை ,இங்கிருந்து போய் வெளி நாட்டில் வசிக்கும் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பகிர்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்களை, தொழில்நுட்பத்தைத் தயாரிக்கும் பணியை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செய்கின்றன.வெளி நாட்டவர்களும், வெளிநாட்டுக் குடி உரிமை பெற்றவர்களும் நம் நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்குதாரர்களாக ஆவதற்கான தமிழ் ஏஞ்சல்கள் என்னும் அமைப்பையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதன் மூலம் உலக அளவிலான இணைப்புகளும், கூட்டாண்மைகளும் ஏற்படும் பெரும் வாய்ப்புக் கிட்டுகிறது.

தமிழ்நாட்டில் 7500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் இருப்பதாக அந்த இணையதளம் குறிப்பிடுகிறது. அவற்றில் 2250 ஸ்டார்ட் அப்கள் 2022ஆம் ஆண்டில் பரிசீலிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டவை என்று குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில்துறைச் செயலாளர் வி.அருண்ராய் அவர்கள், “சென்னைக்கு வெளியே உள்ள இடங்களில் ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்தியது தமிழ்நாட்டிற்கு உதவியது.நாங்கள் புறப்பகுதிகளிலும் வளர்ச்சியை விரும்பினோம். ஆகையால் மதுரை,ஈரோடு போன்ற இடங்களிலும் மய்யங்களைத் தொடங்கினோம்.சமூக நீதி எங்களுக்கு உதவிட்ட மற்றொரு அம்சமாகும்.பட்டியலின, பழங்குடி(SC/ST) களுக்காக நிதி உள்ள வேறு எந்த மாநிலமும் இந்தியாவில் இல்லை.இது எங்களைத் தனித்து நிற்கவைத்தது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். (தி ஹிந்து ஆங்கில நாளிதழ்- 17.01.2024 ,சங்கீதா கந்தவேல் அவர்களின் கட்டுரை)

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியைப் பற்றி உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்” கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது மட்டுமல்ல

தொழிலில் சிறந்த தமிழ்நாடு” என்னும் நிலையை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.உண்மைதான்.தந்தை பெரியாராலும் திராவிட இயக்கத்தாலும் பண்படுத்தப்பட்டுள்ள மண் இந்தத் தமிழ்நாடு மண்.வேறு வேறு மத நம்பிக்கைகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்து உறவு கொண்டாடி மகிழும் மண் இந்தத் தமிழ் நாட்டுமண்.

ஸ்டார்ட் அப் என்றால் என்ன? அதன் மூலமாக எப்படித் தொழில் முனைவோர் ஆவது? அதற்கான பயிற்சி பெறுவது எப்படி? அதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளுவது போன்ற பல்வேறு செய்திகள் தமிழ் நாட்டு மாணவர்களுக்குச் சென்று சேரவேண்டும்.ஒவ்வொரு கல்லூரியிலும், மேல்நிலைப்பள்ளியிலும் இதற்கான கருத்தரங்குகள் நடைபெறவேண்டும்.இது ஓர் இயக்கமாக நடைபெறவேண்டும். இன்னும் கேட்டால் தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலம் நம் முன்னேற்றத்திற்கு வேண்டும்,வீட்டில் கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னதைப் போல ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றிப் பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடம், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் இன்னும் விரிவாக இந்த நிறுவன்ங்கள் பற்றிய செய்திகள் போய்ச் சேரவேண்டும்.இன்னும் கேட்டால் திராவிட இயக்கங்கள் நடத்துகின்ற அரசியல் மேடைகளில் கூட ஓர் அய்ந்து நிமிடம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி உரையாற்றவேண்டும்.

ஏனெனில், உலக அளவில் எதிர்காலம் என்பது இந்த ஸ்டார்ட் அப் நிறுவன்ங்கள் கையில்தான் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் பற்றி எடுத்திருக்கும் அத்தனை

நல் முயற்சிகளையும் மக்களிடத்தில், மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்போம்

நன்றி :  உண்மை பிப்ரவரி 01-15, 2024


Monday, 29 January 2024

எளிதில் அடையாளம் காணஇயலா....

 

காந்தியைக் கொன்றவர்கள்

கலர் கலராய் வருகிறார்கள்

எளிதில் அடையாளம் காணஇயலா

மாறு மாறு  வேடங்களில் வருகிறார்கள்...

 

கடையனுக்கும் கடைத்தேற்றம்

பேசியவர் காந்தி...

அதானி,அம்பானியின் தேற்றமே

தேசச்தின் தேற்றமென

தினவெடுத்து வருகிறார்கள்...

 

சத்தியமே வெல்லும்

என்றார் காந்தி...

காந்தி படம் போட்ட நோட்டுகளால்

எவரையும் விலைக்கு வாங்கிடுவோம்...

விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்திடுவோம்

எனும் இறுமாப்பில் வருகிறார்கள்...

 

அகிம்சையே எனக்கு கிடைத்த

ஆயுதம் என்றார் காந்தி..

ஹிட்லர் கையில் எடுத்த

ஹிம்சையே எங்கள் ஆயுதமென

கண்ணுக்குத் தெரியா வதைமுகாம்களை

நாடு முழுக்க விதைத்தவண்ணம்

காந்தி போல வேடமிட்டு வருகிறார்கள்...

 

அண்ணல் அம்பேத்கர் அழகாய்ச்சொன்னார்

அவர்கள்  நாக்கில்  ராமனை உச்சரிப்பார்கள்

ஆனால் கக்கத்தில் கொடுவாளை வைத்திருப்பார்கள்

துறவிகளைப் போல பேசுவார்கள்

ஆனால் கசாப்புக்கடைக்காரர்கள் போல

நடந்து கொள்வார்கள் என...

அப்படியே பொருந்துகிறது இந்நாளில்..


 

காந்தி வேடம் போட்டிருக்கும்

பசுந்தோல் போர்த்திய விலங்குகளை

எதிர்ப்பதற்கு காந்தி கொடுத்த

ஆயுதம்தான் கைவசம்...

மக்களிடம் செல்லுதல்...

மக்களிடம் சொல்லுதல்...

மக்களைத் திரட்டுதல்..

அநீதிக்கு எதிராக

சாகத்துணிவு கொள்ளுதல்...

ஒன்று கூடி எதிர்த்து நிற்றல்...

 

காந்தி நினைவு நாளில்

இதை நினைவில் கொள்வோம்...

குண்டுகள் துளைத்து

குருதியில் நனைந்த

அண்ணல் காந்தியை நினைவு கூர்வோம்!

வேற்றுமை மறந்து ஒன்று கூடுவோம்!

கொடுங்கோலர்கள் ஆட்சியை அகற்றுவோம்!

 

                                வா.நேரு,

                                 30.01.2024


Sunday, 21 January 2024

கலங்கி அழும் கண்களோடு நாங்கள்...

 


இடிமழையாய் எதிரிகளுக்கு

பதில் அளித்த பகுத்தறிவாளர்

எங்கள் கொள்கைத்  தங்கம்

அய்யா அறிவுக்கரசு மறைந்தாரே!

 

அதிகாலையில் புலனத்தில்

செய்தியைப் பார்த்தவுடன்

பொங்கி வந்த அழுகையை

அழுது தீர்த்தபின்பும் உள்ளம்

ஆறுதல் அடையவில்லை!

 

கால் நூற்றாண்டாய் எனக்கு

ஆறுதல் தந்த தோள்கள் அவரின் தோள்கள்..

தோழமையோடு நான் செய்யும்

தவறுகளை இடித்துத் திருத்தியவர் அவர்…

இயக்கத்தில் குடும்பத்தில்

நான் எதைச்சொன்னாலும் சரியான

திசை நோக்கி வழிகாட்டியவர் அவர்..




 

 

பொங்கும் கோபத்தைப் போனில்…

நேரில் கொட்டித் தீர்ப்பார்…

பின்பு துள்ளி வரும் குழந்தையை

அள்ளி அணைப்பது போல்

பாசத்தைக் கொட்டித் தீர்ப்பார்..

அவரின் கோபத்தில் …

திருத்தும் நோக்கமன்றி

வேறு ஏதும் கண்டதில்லை…

 

தைத்திங்கள் முதல் நாளில்

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச்சொன்னேன்..

எனது 35வது நூல் வெளியிடப்படுகிறது

சென்னை புத்தகத்திருவிழாவில் ..

அய்யா ஆசிரியர் வீரமணி 

தலைமையில் என்றார்…

 

எனது எல்லாப்புத்தகங்களும்

தந்தை பெரியார் கொள்கையை மட்டும்

சொல்லும் புத்தகங்களே!

என் வாழ்வில் வேறு எதையும்

எழுதவில்லை என்றார்…

 

கடல் அலைபோல அவரோடு

பேசிய பேச்செல்லாம்

உள்ளத்தில் எழுந்து

எழுந்து மறைகிறது…

 

நினைவுகள்தான் வாழ்க்கை!

அய்யா,உங்கள் நினைவு என்றும் மங்காது!

எங்கள் வாழ்வில் என்றும் மறையாது !

முன் அறிகுறி ஏதுமின்றி

திடீரென்று விடை பெற்றுக்கொண்டீர்கள்…

கலங்கி அழும் கண்களோடு நாங்கள்

வீரவணக்கம் செலுத்துவதைத் தவிர

வேறு வழியில்லை அய்யா!

வீரவணக்கம்! வீரவணக்கம்!

 

                வா.நேரு,22.01.2024

 

 

 

 

Monday, 15 January 2024

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் சிறப்பு பாட்டரங்கம் 2024.

அறிவுச்சுடர் வலைக்காட்சியின் ஏற்பாட்டில் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் சிறப்பு பாட்டரங்கம் இணையவழியாக நடைபெற்றது.கவிஞர்கள் நிறைமதி,ம.கவிதா,மாரி.கருணாநிதி மற்றும் பாவலர்கள் செல்வ.மீனாட்சி சுந்தரம்,சுப.முருகானந்தம் கவிதைகள் பாடினர்.

 

முழுமையாகக் கேட்டு மகிழ ,இணைப்புக் கீழே

https://youtu.be/3E-nlw8RDpo?si=TWPBlH70l7b7CFhf 

Monday, 8 January 2024

பழுப்பு நிறமடைந்தவுடன்…

 

பழுப்பு நிறமடைந்தவுடன்…

 

அவருடன் பேசும்போது

எப்போதும் ஒரு தெம்பு வரும்

எதையும் செய்யும் தைரியம் வரும்..

அநீதிகளை எதிர்க்கவேண்டும் எனும்

உந்துதல் வரும்…


70-வயதைத் தாண்டிய  அவரை

அண்மையில் சந்தித்தபோது

போதும் வாழ்க்கை …

என்பதுபோலப் பேசினார்..


ஓடியாடி நடக்கும்வரைதான்

வாழ்க்கை நம் கையில் …

அப்படி இல்லையெனில் விரைவில்

முடிந்து போகவேண்டும் என்றார்…


மருத்துவச்செலவுகள் இலட்சக்கணக்கில்…

பிள்ளைகள் செலவழிப்பார்கள் என்றாலும்

அவர்களுக்கு எதற்கு வீண் செலவு

வைக்கவேண்டும்?…என்றார்..


ஒரு மரத்திலிருக்கும் பச்சை இலை

பழுப்பு நிறமடைந்தவுடன்

தானே உதிர்ந்து விழுந்து

மண்ணில் மக்கி விடுவதுபோல

மக்கிப்போக விரும்புகிறேன் என்றார்…


“வாழ விரும்புகிறேன் ஆனால்

ஏதும் செலவுகள் வைக்காமல்…

குறைந்த செலவில் இருக்கும்

மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டு

தொடரும் வரை தொடரட்டும்

வாழ்க்கை என்று” என்றார்…


மருத்துவம் எல்லாம் தனியார் கையில்..

அரசு மருத்துவமனையில்

அவலங்கள் அதிகம்…

முதியோர்கள் மருத்துவம்

வாழ்க்கைத்தேரின்

அச்சைக் கழட்டும் நிலையில்..

அவரின் சொற்களால்

மனம் கனத்தது என்றாலும்

இதுதான் இன்றைய

எதார்த்தம் என்பது புரிந்தது.

 

                           வா.நேரு,

                            09.01.2024

 

 

Thursday, 4 January 2024

அறிவியல் தரும் வாய்ப்புகள்...முனைவர் வா.நேரு

 



“இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை

எல்லாம் -அந்நாட்டவர் பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக் கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வம் கொண்டு நடுநிலை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்டவை ஆகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன. ஆகவே இதை உணர்ந்தவர்கள்தாம் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம். அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்ட முடியும்” என்றார் தந்தை பெரியார்.(இனிவரும் உலகம்).

புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய மனிதர்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்து மின்சாரமும், இணையமும் இணைந்திருக்கின்றன. உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு இன்றைக்கு மின்சாரமும் இணையமும் தேவைப்படுகின்றது.

உலகத்தில் 70 சதவிகிதப் பரப்பு கடல். இன்றைய புதிய அறிவியல் மூலமாக உலகத்தில் கடல் என்பது மீன் பிடிக்க மட்டுமல்ல; பயணம் செய்வதற்கு மட்டுமல்ல; நவீன தொழில் நுட்பத்திற்கான சாலையாகவும் மாற்றப்படுகிறது..கடலுக்கு மேலே பாலம் கட்டுவது தெரியும். ஆனால் கடலுக்கு அடியில், அடி ஆழததில் கேபிள்கள் பதிக்கப்படுகின்றன.

தந்தி சாதனம் உபயோகப்படுத்த ஆரம்பித்த 1850-ஆம் ஆண்டுகளில் இருந்து கடலின் வழியாக தகவல் தொடர்புக்கான கேபிள்கள் பதிப்பது ஆரம்பமாகியது என்று இணையச் செய்திகள் கூறுகின்றன. 1989-முதல் இணையத்திற்கான இணைப்பை அளிக்கும் பைபர் கேபிள்கள் கடலின் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.
இணைய இணைப்புகள் காற்றின் வழியாகவும், செயற்கைக்கோள்கள் வழியாகவும், நேரடியான பைபர் கேபிள்கள் இணைப்பின் வழியாகவும் கொடுக்கப்படுகின்றன. காற்றின் வழியாக இணைக்கப்படும் இணைய இணைப்பை விட கேபிள்கள் வழியாக இணைக்கப்படும் இணைய இணைப்பு உறுதியாகவும், நிலையாகவும், வேகமாகவும் இருக்கும்.ஒரு நாட்டிற்குள், நிலப்பரப்பில் கேபிள் இணைப்புகளைப் பதிப்பது எளிது.ஆனால், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் கடல் இருந்தால் என்ன செய்வது ? என்ற கேள்வி வருகின்றபோதுதான் கடலின் வழியாகச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் என்னும் கேபிள்கள் வருகின்றது. இவை கடலுக்கு அடியில் அதன் அடித்தளத்தில் செல்லும் கேபிள்கள்.பல ஆயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தக் கேபிள்கள் செல்கின்றன.

“கடல்களுக்கடியில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் உள்ளன. பூமி முழுதும், 10 லட்சம் கிமீ.நீளத்துக்கும் அதிகமான கேபிள்கள் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், மற்றும் உலகளாவிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனமான டெல்க்சியஸ் ஆகியவை இணைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் 5,000 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மரியா நீர்மூழ்கிக் கப்பல் கேபிளை நிறுவி முடித்தன. இது அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா கடற்கரையை ஸ்பெயினில் உள்ள பில்பாவோவுடன் இணைக்கிறது.

அமெரிக்கத் தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனமான டெலிஜியோகிராஃபி, ‘நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் மேப் போர்ட்டல் என்ற வரைபடத்தை உருவாக்கியது. இது கூகுள், ஃபேஸ்புக், அமேசான், வெரிசான், அல்லது கிஜி&ஜி போன்ற நிறுவனங்களின் தரவுகளுடன் உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து நீர்மூழ்கிக் கேபிள்களின் ஊடாடும் வரைபடமாகும்.



உலகம் முழுவதும் 13 லட்சம் கி.மீ. தூரம் நீண்டிருக்கும் 400க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கேபிள்கள் உள்ளன.” என்று பி.பி.சி. தமிழ் செய்தி கூறுகிறது.
தொலைபேசி, இணைய இணைப்புகளுக்காக கடலுக்கு அடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது போல, அண்மையில் கடலின் வழியாக மின்சார கேபிள்கள் கொண்டு செல்லும் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவை வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. டென்மார்க் நாட்டிலிருந்து பிரிட்டன்வரை ஏறத்தாழ 765 கி.மீ. தூரத்திற்கு கடலுக்குள் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. நீர் மூழ்கிக் கப்பல்கள் மூலம் கடலின் அடியில் இந்தக் கடல் மின் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘வைகிங் லிங்க்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.கடலின் வழியாக மின்சாரத்தைக் கடத்துவது மனித குல வரலாற்றில் மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் ,மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. சூரிய ஒளியின் மூலமாக மின்சாரம், காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரித்தல் போன்றவை நடைபெறுகின்றன. பிரிட்டன் நாட்டிலும் ,டென்மார்க் நாட்டிலும் நிறைய காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி நடக்கிறது. இந்த மின்சாரத்தை இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மின்சாரக் கேபிள்கள் ‘வடகடல்’ வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
“இதன் கட்டுமானம் 2019-இல் தொடங்கியது. இதன் திட்டமிடல், கட்டுமானம், மற்றும் வேலைகளுக்காக 30 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செலவிடப்பட்டுள்ளது. இந்த மின் கேபிள் செப்பு, எஃகு, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் ஆனது. கடலின் அடிப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான செலவு இந்திய மதிப்பில் சுமார் 19,000 கோடி ரூபாய்.” இவ்வளவு செலவு செய்து மனித குலத்தின் ஒரு புதுப்பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது.
இதைப் போல இந்தியாவிலும் கடல் வழியாக மின் இணைப்பு தரலாம்.

உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் நேர வேறுபாடும் சேமிக்க முடியாத மின்சாரத்தை பயன்படுத்த உதவும் என்று குறிப்பிடுகிறார்கள். இப்போது கணினி பயன்படுத்துவதைப்போல, அமெரிக்காவில் இரவு என்றால் தமிழ் நாட்டில் பகல் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் தாங்கள் தூங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் வழியாக வேலையைக் கொடுத்துவிட்டு, அவர்கள் தூங்கி எழுந்தவுடன் முடிந்த வேலையைப் பெற்றுக்
கொள்வதுபோல, அதிகமாகத் தேவைப்படும் நேரங்களில் கடலின் வழியாக இணைக்கப்படும் இந்த மின்சாரப் பயன்பாட்டை அந்தந்த நாடுகள் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகின்றனர்.

உலகத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்னொரு பக்கம் மழையில்லாமல்,குடிக்கத்தண்ணீர் இல்லாமல் மக்கள் துன்பப்படுகின்றனர்.மனித சக்தி மகத்தானது. வெள்ளத்தில் வரும் அதிகமான நீரை ,நீர் கிடைக்காத மற்ற பகுதிக்குக் கொண்டு செல்லத் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.ஒரு பக்கம் செழிப்பும் இன்னொரு பக்கம் ஏழ்மையும் வறுமையும் கொண்ட நாடுகளாக உலகில் பல நாடுகள் திகழ்கின்றன. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் திராவிடத்தத்துவம் உலக அளவில் உண்மையாகவேண்டும். எல்லா நாட்டிலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளோடு, மின்சாரம், இணையம் போன்றவை கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் உலக நாடுகள் செய்யவேண்டும். தங்களிடம் அதிகமாக உள்ள தங்கள் வளத்தை,ஆற்றலை மற்ற நாடுகளோடு பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.அதற்கான திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

உலகில் உள்ள வளங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து, பெற்று பயன்படுத்துவதுபோல, உலக மக்களின் இடர்கள்_ துன்பங்களில், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் மூலம் தீர்வு காணலாம். அதைத்தான் பெரியா£ 60 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். ♦

நன்றி உண்மை மாதம் இருமுறை இதழ் ஜனவரி 01-15,2024