Saturday, 22 November 2025

கவிதை பாடிக்கொண்டிருந்த வானம்பாடி

 




ஈரோட்டு வானில் கவிதை பாடிக்கொண்டிருந்த வானம்பாடி ஒன்று இன்று விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கவிதை புனைவதே தன் வாழ்க்கை என்று தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துப் பாடிக்கொண்டிருந்த பறவை அது.

ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !

ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?

வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?

எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !

தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !

எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !


                        வா. நேரு -

நன்றி : எழுத்து.காம்- 18.2.2014

11 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை. அய்யா தன்னுடைய 92-ஆம் வயதில் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்திருக்கின்றார் .நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வீரவணக்கத்தை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் தெரிவிக்கிறேன். தனது கவிதைகளால் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் என்றென்றும் வாழ்வார். தமிழ் இலக்கிய உலகம் இருக்கும்வரை அவரது புகழ் வாழும்.அவர் பெற்ற பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும், தோழர் அகன் போன்ற அவரது கவிதை வழி வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தtத்தைத் தெரிவிக்கிறேன்.

முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

Thursday, 20 November 2025

எங்களுக்கும் வலிக்கிறது ...

 

ஊடகத்துக்காரன் காட்டும்

கடவுள் வெளிச்சமெல்லாம்

உண்மை வெளிச்சமென…

விட்டில் பூச்சி போய்

டியூப்லைட் வெளிச்சத்தில்

மோதி விழுந்து சாவதுபோல்

கூட்டத்துக்குள் சிக்கி

அய்யகோ எங்கள் உறவுகள்

திக்கித் திணறுகிறார்களே!

மூச்சுத் திண்றிச் சாகின்றார்களே…





சொர்க்கம் கிடைக்குமென

மெக்காவிற்குப் போய்

பேருந்து தீப்பிடித்து

‘அய்யோ கடவுளே !

காப்பாற்று எங்களை

எனக் கதறி அழுதபோதும்’

குழந்தைகளைக் கூடக்

காப்பாற்றவில்லையே கடவுள்…!

 

எங்கள் உடன்பிறப்புகளின்

இறப்பு..துன்பம்...

எங்களுக்கும் வலிக்கிறது ..

எனினும் இல்லாத கடவுளை

நோக்கி எங்கெங்கோ

பயணம் செய்தாலும்

உதவ மாட்டார் கடவுள்

என்னும் உண்மையைச்

சொல்ல வேண்டியிருக்கிறது…

ஏனெனில் கடவுள் இல்லை..

கடவுள் இல்லை!

கடவுள் இல்லவே இல்லை!

                              வா.நேரு, 20.11.2025

Monday, 17 November 2025

பச்சைப் பொய் 'டீப் பேக்' ...வா.நேரு

 




நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 16-11-2025 - 30-11-2025



பசுமை நிறைந்த நினவுகளின் பகிர்வாய் ஒரு சந்திப்பு...

 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1981 முதல் 1984 வரை பிஎஸ்சி வேதியியல் படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு திருச்செந்தூர் அருகில் உள்ள பியர்ல் ஹோட்டலில் 9 11 2025 காலையில் நடைபெற்றது மொத்தம் படித்தவர்கள் 38 பேர் அதில் மூன்று பேர் இறந்து விட்டார்கள் மீதி இருக்கக்கூடிய 35 பேரில் வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் வர இயலாது எனத் தெரிவித்தவர்கள்  தவிர்த்து 20 பேர் வருவார்கள் என்று நண்பர்கள் சொல்லி இருந்தார்கள் ஆனால் 11 பேர் தான் வந்திருந்தோம். ஒரு வித்தியாசமான அனுபவமாக காலை 11 மணி போல ஆரம்பித்த அரட்டை சிரிப்பு உற்சாகம் மாலை ஐந்து மணி வரை நீடித்தது.

 

  1984 க்கு பிறகு இவர்களில்  பல பேரை நான் நேரில் சந்திக்கவில்லை. 1984க்கு பிறகு தாங்கள் என்னென்ன செய்தோம் என்பதை, எப்படி இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்பதை தங்கள் சொற்களாலேயே நண்பர்கள் சொன்னார்கள் 1984 முதல் 2025 வரையிலான  தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சிரிப்போடும் உற்சாகத்தோடும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.



மதிவாணன்,தன்ராஜ்,சித்தர்சிங்,செல்வகணேசு,பாலகிருஷ்ணன்,துளசிராமன்,நான்(வா.நேரு),பத்ரகாளிமுத்து,வின்ஸ்டன்
 

சித்தர் சிங் நெல்லை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து எப்படி எம் எஸ் சி வேதியியல் அலிகார் யூனிவர்சிட்டியில் சென்று படித்தேன் என்பதை,அதற்கு வந்த அனுமதி கடிதத்தை,கையில் அம்மா வைத்திருந்த சிலுவாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு முதன் முதலாக சென்னை முதல் டில்லி வரை விமானத்தில் சென்றதை,அங்கு சேர்ந்ததை ஒரு சிறுகதையைப் போலச் சொன்னான். அதற்கு பின்பு வடநாட்டில் சில இடங்களில் வேலை பார்த்தது அதற்கு பின்பு வளைகுடா நாட்டிற்கு சென்று பணியாற்றியது மிகவும் இயல்பாகச் சொன்னான். கிரீன் கார்டு கிடைத்தது என்று கனடாவிற்கு தானும் தன் மனைவியும் தன் குழந்தையும் சென்ற கதையை அங்கு சென்று ஒரு ஆறு மாதம் வேலை இல்லாமல் அவதிப்பட்டது கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து  நிற்கதியாக நிற்கப் போகும் நிலையில் தனக்கு வேலை கிடைத்தது, அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சம்பாதித்தது பற்றிச் சொன்னான்.

. இப்போது அமெரிக்க நாட்டில் வாழ்வதையும், பல மருந்து வேதியியல் கம்பெனிகளுக்கு ப்ராஜெக்ட் கைடாக இருப்பதையும் அமெரிக்காவில் வீடு, சொந்த ஊரில் வீடு என்று வசதியாக இருப்பதையும் இந்தியா வந்திருக்கும் இந்த நிலையில் உங்களை எல்லாம் சந்திப்பது பெரும் மகிழ்ச்சி என்று அதே கனத்த குரலில் கனமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டதை ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பின்னால் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.



மதிவாணன்,தன்ராஜ்,சித்தர்சிங்,செல்வகணேசு,பாலகிருஷ்ணன்,துளசிராமன்,நான்(வா.நேரு),சித்திரைராஜா,வின்ஸ்டன்

 

 அதைப்போல சுகாதாரத் துறையில் பணியாற்றிய மதுரையில் இருக்கும் துளசிராமன், அருகில் தான் பல ஆண்டுகளாக நாங்கள் இருந்திருக்கிறோம் ஆனால் தொடர்பில்லை. அவர் தனது கதையைச் சொன்னார்.படிக்கும்போதே ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலைக்கு அழைப்பு வந்ததை,நன்றாகப் படிக்கிறாய் தொடர்ந்து படி என்று எங்கள் பிரின்ஸ்பால் டிசி கொடுக்க மறுத்ததை,பின்பு டி.சி. வாங்கிப் பணியில் சேர்ந்ததை சொன்னார். பல ஊர்களில் நேர்மையாகப் பணியாற்றி ,கீழே இருக்கும் ஊழியர்களிடம்,அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற்று ஓய்வு பெற்றது,ஓய்வு பெறும் நிலையில் நல்ல போஸ்டில் இருந்ததை,தனது பிள்ளைகள் நன்றாகப் படித்து வெளி நாட்டில் இருப்பதை,இப்போது அமைதியாக இணையரோடு இருப்பதைச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

 கோயம்புத்தூரில் இருக்கும் மதிவாணன் பல தனியார் கம்பெனிகளில் பணியாற்றிய அனுபங்களை, தனக்கு கிடைத்த பாராட்டை,அதே நேரத்தில் ஒரு முரணால் வேலையை விட்டு வெளியே வந்து இப்போது தனியாக பிசினஸ் செய்வதை விளக்கமாக,மதிக்கே உரித்தான மொழியில் சொன்னார். நீண்ட வருடங்களுக்குப் பிறகும் NCC Naval C சர்ட்டிபிகேட் கோல்டரின் கமாண்டிங்கான குரலில்  அனுபவத்தைப் பெற முடிந்தது

திருச்செந்தூருக்கு அருகில் ஆசிரியராக,தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கும் வின்ஸ்டன் , கல்லூரி முடித்தவுடன் வேலை கிடைக்காமல் இருந்ததை,எம்.எஸ்.ஸி போவதற்கு முயன்றதைப் பின்பு பி.எட் சேர்ந்து பட்டம் பெற்றதைச் சொன்னார். பின்பு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தது,3 பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டது,இப்போது மகனோடும், மனைவியோடும் வீட்டில் ஓய்வில் இருப்பது என்று தன் கதையை கலகலப்பாக எதார்த்தமாகச் சொன்னார். .

 பின்பு அந்த ஹோட்டலில் மதிய விருந்து. பிரியாணி, சிக்கன் என்று ஒரு பிடி பிடித்தோம் எல்லோரும். அங்கும் அரட்டை.பின்பு முடித்து மீண்டும் அரட்டை, வாழ்க்கை அனுபவப் பகிர்வு என்று தொடர்ந்தது.

  சென்னையில் இருக்கும் போஸ்டல் டிபார்ட்மெண்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் தன்ராஜ், எப்படித் தான் படிக்கும்போதே வேலை கிடைத்துவிட்டது என்று போய் ஏமாந்த கதையை, பின்பு பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததை,பின்பு போஸ்டல் துறைக்கு மனுப்போட்டு வேலையில் சேர்ந்த்தைச் சொன்னார்.இப்போது பணி ஓய்விற்குப் பின் சென்னையில் இருப்பதைச் சொன்னார்.

  மின்சாரத் துறையில் பணியாற்றி தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி நண்பன் பாலகிருஷ்ணன் அவனுக்கே உரிய இயல்பான பாணியில் தன் வரலாறைச் சொன்னான்.

 வேலை கிடைக்காமல் இருந்தது,பின்பு மின்சாரத்துறையில் வேலை கிடைத்தது,வேலை அனுபவம்,தொழிற்சங்க அனுபவம், காங்கிரசு கட்சியில் இருந்த அனுபவம் எனக் கலக்கினார்.எப்படி உயர் அதிகாரிகள் செய்த தவற்றை எல்லாம் தட்டிக்கேட்க முடிந்தது தொழிற்சங்கத்தில் இருந்த காரணத்தால் என்பதை எடுத்துக்காட்டுகளோடு பாலகிருஷ்ணன் சொல்லி, தன் பெண் குழந்தைகள் மிக உயர்ந்த படிப்புகள் படித்து வேலைகளில் இருப்பதைச் சொன்னான்..


 மும்பையில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் செல்வகணேசு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள செட்டிகுளத்தில் இருந்து எப்படி திருச்செந்தூருக்குப் படிக்க வந்தேன்,பின்பு பட்டப்படிப்பை முடித்தபிறகு  இங்கு வேலை கிடைக்காமல் எப்படி மும்பை போனேன், அங்கு இருந்த பள்ளியில் எப்படி ஆசிரியராகச் சேர்ந்தேன் என்பதைச்சொன்னார். எப்படி அங்கு பணியாற்றி விருதுகள் பெற்றேன் இப்போது ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் மும்பைக்கும் செட்டிகுளத்திற்கும் மாறி மாறி சென்று கொண்டிருப்பதை இயல்பாகச் சொன்னார்.

என் அருகில் தாமதமாக வந்து எங்களோடு இணைந்த நண்பர் சந்திரபோஸ்


 

உடன்குடியைச் சார்ந்த சந்திரபோஸ், பி.எட். முடித்ததை,வேலைக்கு முயற்சிகள் செய்ததை, பின்பு கிடைக்காமல் கடை வைத்ததை .கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் தானாக வேலை கிடைத்ததை,ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பதைச்சொன்னார்.. சந்திரபோஸ் மிகத் தாமதமாக தனக்கு வேலை வந்தது, தாமதமாக மணம் முடித்ததையும் இயல்பாகச் சொன்னார்.தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

  இப்போது திமுகவின் பொறுப்பாளராக இருக்கும் நண்பர் பத்திரகாளி முத்து வகுப்பில் எம் ஆர் ராதா குரலில் பேசுவார். எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார், சிந்திக்கவும் வைப்பார். அதே குரலில் 42 ஆண்டுகளுக்குப் பின்பு பேசி அசத்தினார். எப்படித் தன்னால் பொதுமக்களுக்கு உதவ முடிகிறது என்பதையும் ,தான் எதுவும் சம்பாதிக்கவில்லை என்றாலும் ,தி.மு.க.வில் இருக்கும் முக்கியமான ஆளுமைகளிடம் தனக்கு இருக்கும் மரியாதையைச் சுட்டிக்காட்டினார்.பொதுப்பணி செய்யும் வாய்ப்புகளை,செய்த்தைச் சொன்னார். இவர் இந்த நிகழ்வுக்கு வேட்டியோடு வந்திருந்தார்.


நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்த நண்பர் சித்திரைராஜவும், பாலகிருஷ்ணனும்...

 அதைப்போல இந்த ஏற்பாடுகளை நண்பர் பாலகிருஷ்ணனோடு சேர்ந்து செய்த சித்திரை ராஜா திருச்செந்தூரில் இருக்கிறார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். அவர் எப்படி,எத்தனை அரியர்ஸ்ல் இருந்தது என்பதை, அதை எப்படி ஒரே முறையில் பாஸ் செய்தேன் என்பதைக் களிப்பும் சிரிப்புமாய் எடுத்து வைத்தார். தமிழ்நாடு அரசுத் துறையில் எப்படி தனக்கு  வேலை கிடைத்தது என்பதையும் மிக ஈர்ப்பாகச் சொன்னார். நிறையப் பொதுப்பணி செய்யக்கூடிய சித்திரைராஜா படிக்கும் காலத்தில்.படிப்பில் நிறைய அலட்டிக் கொள்ளமாட்டார்.ஆனால் அவர்தான் இப்போது பழைய மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்.

  

 நானும் 1984-ப் பிந்தைய என் கதையைச் சொன்னேன்.1984 இல் எனக்கும் ,நண்பர் சீனிவாசனுக்கும் தொலைபேசித் துறையில் திண்டுக்கல்லில்  வேலை கிடைத்தது.வெவ்வேறு ஊர்களில்  வேலை பார்த்தது ,பின்பு திருமணம் முடித்தது. பி.எஸ்.ஸி படிப்பை முடிக்க  பிரின்ஸ்பால் திரு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் ஆலோசனை வழங்கி உதவியது.தொலைபேசித்துறையில் விருது வாங்கியது .எம்.ஏ படித்தது, பி.எச்.டி படித்தது மற்றும் பல பட்டங்களை வாங்கியது. பின்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றது. இந்த 2020 இல் விருப்ப ஓய்வு பெற்றது. நான் எழுதிய ஏழு புத்தகங்கள் வெளியாகி இருப்பது என்று கூறி என்னுடைய தொழிற்சங்க அனுபவம், தொலைபேசித் துறை அனுபவம், இலக்கிய அனுபவம், இயக்க அனுபவம் என்று பல அனுபவங்கள் இருக்கிறது என்று நண்பர்களுக்குச் சொன்னேன்.

 வளைகுடா நாட்டில் பணியில் இருக்கும் நண்பன் பாலசிங், சென்னையில் வசித்து வரும் நண்பர்கள் காயாமொழி ராதாகிருஷ்ணன்,ஆறுமுகநேரி செல்வன், ஜெபராஜ் மகிழதாஸ்,பாலசுப்பிரமணியன், நடராஜன், திருச்செந்தூர் நாட் என்ற இராமனாதன் மற்றும் தூத்துக்குடியில் இருக்கும் ஜோன்ஸ், சாத்தான் குளம் அய்யாதுரை ஆகியோர்களும் தங்கள் வரவியலாமையைத் தெரிவித்ததோடு பிரிதொரு நாளில் சந்திப்போம் என உறுதியாகக் கூறினார்கள்.தே கல்லுபட்டி சீனிவாசன் மற்றும் டில்லியில் வசிக்கும் சாந்தகுமார் செல்வினும், தங்கள் பணியின் காரணமாக தங்கள் வரவியலாமை பற்றிமுன்பே தெரிவித்து விடடனர்.

 .கத்தாரில் இருக்கும் நண்பன் அருள் சாம்ராஜ் தான் வரவியலாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அனைவருடனும் அளவளாவி சிறப்பித்தார்.

மொத்தத்தில் கல்லூரிக் காலத்தில் இருந்த உற்சாகத்தோடு,அதே சிரிப்போடும் விளையாட்டோடும் நடந்த சந்திப்பு உண்மையிலேயே மிகப்பெரிய டானிக்காக உள்ளத்திற்கு அமைந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

 

 

Tuesday, 11 November 2025

ஒரு சொட்டு மழைத்தண்ணீர்...

 

மழை வரும்போல்

இருக்கிறது வானம்…

ஒரு சொட்டு மழைத்தண்ணீர்

தன் உடலில் விழுவதற்குமுன்

வீட்டிற்குள் சென்று

அடைந்துவிட வேண்டுமென்று…

இருசக்கர வாகனத்தை

விரட்டிக்கொண்டு

பறக்கிறார்கள் மனிதர்கள்..


மின்  வயரில்

அமர்ந்திருக்கும்

பறவை ஆற அமர

எதையோ  இசைத்துக்

கொண்டிருக்கிறது…

மழைத்துளியில்  

நனைந்துகொண்டே

பாடும் ஆசையிருக்குமோ அதற்கு!

வருமுன்னர்க் காக்கும்

ஆசைதான் அத்தனை

அவதிகளுக்கும் காரணமோ நமக்கு?...

                        வா.நேரு, 11.11.2025

Monday, 10 November 2025

தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை..சுமித்ரா சத்தியமூர்த்தி

 

அண்மையில் படித்த புத்தகம் : தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை

நூல் ஆசிரியர்               : சுமித்ரா சத்தியமூர்த்தி

பதிப்பகம் : சந்தியா  முதல் பதிப்பு : 2023

மொத்த பக்கங்கள் 101           விலை ரூ 120




 

இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்பு நூல்.மொத்தமாக 88 கவிதைகள் சிறிதும் ,பெரிதுமாக 101 பக்கங்களுக்குள் இருக்கின்றன.

இந்த நூலில் எனக்கு முதலில்  பிடித்தது ..மொழி,கவிதை மொழி...கணினி ஆசிரியராகப் பட்டுக்கோட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றும் தோழர் சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்களுக்கு கவித்துமான சொற்கள் இயல்பாக வருகிறது.அதனால் இந்தக் கவிதைப் புத்தகத்தின் அடர்த்தியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.கனமான சொற்களால் கருத்தை மிக நன்றாகக் கடத்துகிறார்.

இந்த நூலில்  இரண்டாவதாக எனக்குப் பிடித்தது,தனக்குத்  தோன்றுவதை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார்,எந்தவிதமான தயக்கமும் இல்லாமல். இதைப் பற்றி எழுதினால்,அதைப் பற்றி எழுதினால் இவர் என்ன சொல்வாரோ,அவர் என்ன சொல்வாரோ என்னும் தயக்கங்கள் எல்லாம் இல்லாமல் எழுதியிருக்கிறார்.சங்க காலத்தில் பெண் பாற்புலவர்கள் எழுதாத காதல், காமத் தன்னுணர்வுக் கவிதைகளா?..இடையில் மறந்து போனதை, இன்றைய பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.காதலும் இருக்கிறது, கவித்துவமும் இருக்கிறது. பின் என்ன கவிதையை சுவைப்பதில் தயக்கம்? ‘அரசவால் ஈபிடிப்பானை’ பெயர் மாற்றவேண்டுமென கவிதை 73-ல் எழுதியிருக்கிறார். இந்தப் பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.புதிய செய்தி எனக்கு

இன்னொருத்தி என்னும் தலைப்பிட்டு.

மல்பெரி இலைகளாய்

நின் நினைவுகளை

தின்று செரித்து

பட்டிழையால் கூடு பின்னி

பாழும் இவ்வுடல்

மறைத்து வைக்கிறேன் !

அள்ளிக் கொதிநீரிலிட்டு

அவளுக்கேனுமொரு

ஆடையாய் தரித்துக்கொடு !..

இன்னொருத்தியை நாடி இருக்கிறாய். அவளுக்காவது உண்மையாக இரு என்பதை அறிவியலோடு இணைத்துக்கொடுத்திருக்கிறார்.

‘மரம் போல வளர்ந்திருக்கிறாய் ‘ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.அருமையாக உள்ளது.மரம் பற்றிய கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதையும் மனதுக்குள் வந்தது இதை வாசிக்கும்போது…

சான்றிதழ் கொடுக்க மறுத்த ஒருவருக்கு பதில் எழுதுவதாக இருக்கும் ஒரு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“சாணிக் கரைசலோடுதான்

நாளைத் தொடங்கினாள்

சாவித்திரி பாய் புலே

வள்ளியம்மையை மட்டும்

வெள்ளித்தட்டு வைத்தா

அழைத்திருக்கும் வீதி

உடன் கட்டைக்கு ஒன்றாமல்

ஆட்சிக் கட்டிலில்

அமர்ந்தவள்தானே

மங்கம்மாள்

முத்துலெட்சுமியின்

முன்னமர்ந்து கேட்டால்

மூச்சு முட்டச்சொல்வாள்

முட்டிக் கொண்ட கதைகளை

நீர் கொடுக்கும் சான்றிதழை

நீரே வைத்துக்கொள்ளும்

காலைக் கடன் முடித்து

துடைத்துக்கொள்ளலாம்

தண்ணீர் மிச்சம் !...”

 

முன்னர் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதை 5 வரிகளுக்குள் முடித்து கடந்து செல்கிறார் இப்படி எழுதி…

“பாடுகள் பழகிப்போன

பழங்காலப் பொழுதுகளில்

பச்சைப் பெல்ட்ட்டிகள்

பாக்கியதையாகவே

பகிரப்பட்டன !!..”




தன்னுடைய உணர்வை,தவிப்பை,தனக்கு முன் வாழ்ந்த பெண்களின் பரிதாபத்தை சுருக்கமான சொற்களால் நறுக்கென வாசிப்பவருக்குத் தைக்கும்வண்ணம் கவிதைகளாக எழுதி நமக்குக் கொடுத்துள்ளார்.

 ‘ உண்மையென்று எதையும்

 உரத்துச் சொல்லிவிடாதே

பொய்யென்றே போதும்

பாழும் இச்ஜென்ம

பாவங்கள் தீர்க்க !! ‘ என்று ஒரு கவிதையில் எழுதியிருக்கிறார். இந்த ஜென்மம்,போன ஜென்மம் போன்ற சொல்லாடல்களைத் தவிர்க்கலாம்..பாவம் செய்ததால் பெண்ணாகப் பிறந்திருக்கிறாள் என்று சொல்லும் மதத் தத்துவங்களுக்கு நாமும் வலு சேர்ப்பதுபோல் இந்த மாதிரியான சொல்லாடல்கள் அமைந்துவிடும் என்பது எனது கருத்து.

மொத்தத்தில் ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி கொடுத்திருக்கிறார். இன்னும் பல படைப்புகளை கொடுக்க வாழ்த்துகள்.  

தோழமையுடன்

வா.நேரு, 10.11.2025   

 

 

 

Friday, 7 November 2025

தூக்கி எறிய மனமில்லாமல்

 

தயாரிக்கப்பட்ட உரையொன்று

கண்ணில் தென்பட்டது…

கூட்டம் நடைபெறுமென்று

எண்ணி எழுதித் தொகுத்த

எண்ணங்களின் குவியலது…

 

நெடுநாளைக்கு முன்னால்

மழையால் நிறுத்தப்பட்ட கூட்டம்

மீண்டும் நடைபெறவேயில்லை…

 

கிழித்து தூக்கி எறியலாமா?..

எனத் தோன்றியது..

பின்பு இருக்கட்டும்..இன்னொரு நாள்

பயன்படக்கூடும் என எடுத்துப்

பத்திரப் படுத்தி வைத்தேன்…

 

நடைபெறாத கூட்டத்திற்கு

தொகுக்கப்பட்ட உரைபோலவே

மூளைக்குள்ளும் நிறைய

நினைவுகள் கிடக்கின்றன…

தூக்கி எறிய மனமில்லாமல்

                                வா.நேரு ,07.11.2025

Wednesday, 5 November 2025

'வோட் சோரி'களை விரட்ட...

 



வேற்று மொழிச்சொற்கள்

என்றாலும் சில சொற்கள்

மனதிற்குள் புகுந்து

வாசம் செய்கின்றன...

அப்படித்தான்

இந்தி  மொழிச்சொல்லாம்

'இன்குலாப் ஜிந்தாபாத்' 

நீண்ட ஆண்டுகளாய்

மனதிற்குள் ...

 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு

இரு சொல் மனதிற்குள்

ஆழமாகப் பதிந்து இரண்டு 

பேரைக் கைகாட்டி நிற்கிறது..

அது 'வோட் சோரி...'

இந்த 'வோட் சோரி'களை

விரட்ட மக்கள்

ஒன்று சேர்ந்து போட

வேண்டிய முழக்கம்

'இன்குலாப் ஜிந்தாபாத்'

'அரசியலமைப்புச் சட்டம் ஜிந்தாபாத்'

                                                                                                                 வா.நேரு, 05.11.2025